செவ்வாய், 30 ஜூலை, 2013

நிஜந்தன்- நாவல் -நான்-நிழல் குறித்த கட்டுரை


நான்-நிழல் –நிஜந்தன் நாவல் குறித்து.

 

புகையின் நிழலும்- நெருப்பின் அச்சமும்..- இளஞ்சேரல்

         

 

               புதிய புதிய நிலவியல் கண்டுபிடிப்புகளும் கடல் வழி வாணிபங்களும் மனித நாகரீகத்தை வளர்க்க உதவியது. நாகரீகங்கள் வளரத் துவங்கியதும் அவன் தனக்கான மொழிகளையும் குறிப்புகளையும் எழுத ஆரம்பித்தான். அவன் முதலில் வரைபடங்களை வரையத் துவங்கும் போது மொழிக்கான குறிகளையும் தன் எதிர்மனிதனுக்குப் புரியவைக்கவும் சில குறிப்புகளால் எழுதிப் புரிய வைக்கத் துவங்கினான். அவன் இழப்புகள் உறுதியென அறிந்தபிறகு அவன் வாழ்ந்த காலத்தையும் தனது இருப்பு குறித்த பதிவுகளையும் தன் முன்னோர்களின் இருப்பையும் அவன் பதிவு செய்யத்துவங்கியதே இலக்கியப் பிரதிகளின் மூலம் எனலாம். பத்தாம் நூற்றாண்டில் மொழி ஒருவாராக வடிவத்தை அடைந்தது.

நமக்கு நாவல் வடிவம் மேற்கத்திய உலகிலிருந்து கொடையாகப் பெற்றது. ஆங்கிலேய ஆட்சிக்குப்பிறகு இந்திய சமஸ்தானங்களும் அதன் மொழிகளும் கலாச்சாரச்சின்னங்களின் அழிவுக்குப் பிறகு மனிதன் தனது அடையாளங்களை நிலை நிறுத்தக் கல்வெட்டுகளில் தனது முக்கியக் குறிப்புகளை எழுதினான். அவன் வெற்றிகளை அவன் இழப்புகளை கொஞ்சமாகவும் உற்சாகத்தை சிலைகளாகவும் இழந்த நிலங்களில் அவன் கண்டெடுக்கப்பட்டதை வைத்து நாம் அவனின் இழப்பையும் வெற்றிகளையும் அறிந்து வருகிறோம். இந்த நாவலில் நிஜந்தன் மனித உடற்கூறுகளில் உள்ள நோய்மையால் அல்லல் அடையும் வாழ்வை எழுதிச் செல்கிறார்.

        இவ்வுலகின் இயக்கமும் மனித வாழக்கையின் தன்மையும் பிற உயிர்களின் வாழ்க்கை முறையும் காலத்தின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்டவை. மனித மனதின் உள்ளுணர்வுகளில் காலமும் அதன் செயல்பாடுகளும் உறைந்து கிடக்கின்றன. காலம் குறித்த சிந்தனை இந்திய மரபில் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது. “கால“ என்கிற சொல் ரிக்வேத்த்தில் மதச்சடங்குகளுடன் (தன்னுடையது என்று இருக்கும் அனைத்தையும் விட்டுவிடும் காலம்) இணைக்கப்பெற்றுள்ளது. அதனால் அது பொருத்தமான காலம் என்ற பொருளாக அறியப்பட்டது. பிறகு சமஸ்கிருதப் படைப்புகளில் “காலம்“ என்பது பரந்து பட்ட ஒரு பொதுப்பொருளிலேயே அழைக்கப்பட்டது.. ஜி.ஜே.விட்ரோவின் ஆய்வின்படி வேதகாலத்தில் காலம் என்பது செறிவானதாகவும் சுருக்கமானதாகவும் அதே நேரத்தில் இந்த அண்டத்தின் அடிப்படையான கொள்கையாகவும் உருவாகியது. மேலும் அது தெய்வங்களுடன் இணைக்கப்பட்டும் நிலையாமையை விளக்குவதற்கும் அடைப்படையானதாய் அமைந்திருக்கிறது என்கிறார். அதுமட்டுமின்றி அனித்திதா பல்சுலவ் எனும் திறனாய்வாளர் தமது ஆய்வின் முடிவில் பக்தமீமாம்சப் பள்ளியைச்  சேர்ந்தவர்களுக்கும் நியாய வைசேடிகா பள்ளியைச் சேர்ந்தவர்களுக்கும் நடந்த காலம் பற்றிய விவாதங்களை அவர் மிக நுணுக்கமாக ஆராய்ந்து கூறுகிறார். பக்த-மீமாம்சகர்கள் காலம் என்பது புலன்களால் உணரக்கூடியது  ஆனல் நியாய வைசோடிகர்களோ காலத்தை மனத்தால் உய்த்துணர்ந்துதான் அறிய முடியும் புலன்களால் அறியக் கூடிய நிறமோ,வடிவமோ அதற்கு இல்லை என்று கூறுகிறார்கள். அதற்கு பக்த மீமாம்சகர்கள் காலத்தைச் சோதனைக் கருவிகளின மூலம் அளந்து காண்பத என்பது முடியாத ஒன்றுதான் ஆனால் சில நிகழ்ச்சிகள் வேகமாகவோ மெதுவாக்வோ நடப்பதாக நாம் உணருகிறோம். இது காலத்தின் மீதான நம் நேரடியான அனுபவம்தான். அதனால் நாம் அதை உணரமுடியும் என்கிறார்கள். நியாய வைசோடிகர்களொ காலம் பற்றிய மெய்ப்பொருள் த்த்துவ விளக்க ஆராய்ச்சிகளின் மூலம் அதனை விளக்கி காலத்தை நேரடி உணர்வினால அறிய முடியாது மனதால் மட்டுமே உணர முடியும் என்கிறார்கள். நிஜந்தனின் நான்-நிழல் நாவலை வாசிக்கும் போது இந்த படிநிலைகள் ஞாபகம் வருவதைத்தவிர்க்க முடியவில்லை. நாவலின் காலங்கள் கருப்பு வெள்ளை ஈஸ்மெண்ட் கலரில், காலம் வந்து போகிறது. புகைப்படங்களில் இப்போது எல்லாம் சிதிலமடைந்த புகைப்படங்களைக் கொண்டு தந்தால் அழகாக வண்ணப்படங்களாக மாற்றித்தருகிறார்கள். அதுபோல நம்முடைய கருப்பு வெள்ளை வாழ்க்கைச சம்பவங்களை நாம் வண்ணச்சித்திரங்களாக மாற்றி நம் மனதுள்ளே கற்பனை செய்து பார்க்கிற உணர்வுகளை நிஜந்தன் தருகிறார். விவேகானந்தரின் காலம் பற்றிய கருத்துக்களை ப்ரதோவ் எனும் ஆய்வாளர் ஒரு வரைபடத்தின் மூலமாகக் காட்டுகிறார்.

அ. முழுமை (தி.அப்சொல்யுட்)

ஆ. காலம் (டைம்- இடம்- (ஸ்பெஸ்) காரண காரியம் (காசேசன்) ஆ.அண்டம் ( த யுனிவர்ஸ்) விவேகானந்தர் காலம்,இடம்,காரணகாரியம் என்கிற மூன்றும் அண்டத்தைக் காட்டும் கண்ணாடி என்பார். பகவத்கீதையில் ஒரு சுலோகம். இந்த நாவலில் பகவத்கீதையின் சுலோகங்கள் நிறையப் பயண்படுத்தப் பட்டிருக்கிறது. நாவலுக்கு அவசியமான தகுதியான இடங்களில் ராமானுஜனின் தந்தையின் வாயிலாகப் பெறப்படும் சுலோகங்கள் அற்புதமானவை. கீதை பேசுகிறது. “எந்தப பொருளிலிருந்து எல்லாப் பொருளும் தோன்றினவோ எந்த் பொருளால் அவையாவும் நிலைநிறுத்தப்படுகின்றனவோ அதுவே இறுதிப் பரம்பொருள்“ என்பதை நமக்கு நிஜந்தன் நாவல் மூலம் விளக்குகிறார். அதாவது நாம் மாற்றி நினைக்கலாம். எந்த சம்பவத்திலிருந்து எல்லா சம்பவங்களும் தோன்றினவோ எந்த சம்பவங்களா அவையாவும் நிலைநிறுத்தப் படுகின்றனவோ அதுவே இறுதி சம்பவங்கள் எனலாம். மனித நாகரீகங்களும்,தத்துவங்களும் முதலில் தோன்றி வளர்ந்த்து கிரேக்க த்தில் தான்.கிரேக்கர்களின் த்த்துவக் கோட்பாடுகள் இதர மேலை நாட்டுத்த்த்துவக் கோட்பாடுகளுக்கு ஊற்றாக இருந்திருக்கிறது. அவர்கள் வெளியை(ஸ்பேஸ்) பற்றி அதிகமாகசிந்தித்தனர். புகழ்பெற்ற ஒர கூற்று “ஓடுகிற ஆற்று நிரின் ஒரே பகுதியில் இரு முறை கால் வைக்க முடியாதுஎன்றார் எராக்லிடசுவின். காலத்தின் முன்னோக்கி செல்லும் தன்மையையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ந்து முடிந்த ஒன்றை மீண்டும் நிகழ்த்தவே முடியாது என்பதையும் விளக்குகிறது.

அவனுடைய புகைப்பட அரங்கில் உள்ள நாயகனின் உருவப்படங்களின் வாயிலாக ஒவ்வொரு புகைப் படங்களுக்குப் பின்னணியில் உள்ள கதைகள் கதைமாந்தர்களின் பின்னணி அவர்களுடைய உறவுப் பெண்கள்,ஆண்கள்,மாமா,அத்தை சித்தப்பா, அத்தை என்ற உறவுகளின் வாழும் சாதரண ராமானுஜனின் தினசரி நடவடிக்கைகளும் நோய்மையால் அவன் அடைந்த இழப்புகளை வாசகனுடன் அல்லது வெளியுலகத்திற்கு வாய்மொழிப் பிரமாணமாக சொல்வது மிகச்சிறப்பாகப் பதிவாகியுள்ளது. மனைவி தன்னைப்பிரிந்தது. காதலி வீணா தன்னைப் பிரிந்தது. ஏற்கெனவே திருமணமான பெண்ணுடன் மறுபடியும் காதல் சமயம் அவளும் இடுப்புக்கட்டியை அகற்றப்பட்டுவிட்டதாக எனக் கேட்பது

 அனைத்து இலக்கியங்களுக்கும் காலப்பின்னணி அமைய வேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்தியவர் தொல்காப்பியர் “முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்  இயல்பு என மொழிய இயல்புணர்ந்தோரே..“ என்கிறார். மேற்கத்திய நாவல்களில் தங்கள் சமூக சூழல்களுக்கேற்ப காலத்தை இணைத்து பல்வேறு நாவல்களைப படைத்துள்ளனர். இத்தகைய நாவல்கள் உத்தி முறையில் வெற்றி பெற்றனவாக எண்ணப் படுகின்றன. காலம் பற்றிய உணர்வுநிலை (கான்சியஸ்னெஸ் ஆப் டைம்) மேலை நாட்டினரிடம் மிகப் பரவலாக்க் காணப்படுவதால் காலத்தின் ஆளுமையை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். டேவிட் லியான் ஹிக்டன் எழுதிய காலமும் ஆங்கிலப்புனைகதைகளும்“ முக்கியமான நாவல் ஆய்வு நூல். நாவல்களில் காலப்பின்னணியை பல ஆய்வு முறைகளில் நான்கு வகைகளாகப் பகுத்துள்ளார். அ.வளர்நிலை காலம்(பிராசஸ் டைம்)- பின்னோக்கி நிலைக்காலம் (ரெஸ்ட்ரோபெக்டிவ் டைம்)- தடையற்ற காலம் (பாரியர் டைம்)-கலவை நிலைக்காலம் (பாலிடெம்ப் ரோரல் டைம்) அந்தக் காலங்களின் வழியாக நிஜந்தன் தன் நாவலை நகர்த்தியிருக்கிறார். அது போலவே. சுலோமித் ரிம்மான் கேன்னின் முக்கியமான நூல் எடுத்துரை புனைகதைகள்-சமகால கவிதையியல் (நேரெடிவ் பிக்சன்-காண்டம்பர்ரி பொயடிக்ஸ்) என்ற நூலில் நாவலில் வரும் கால ஆய்வு பற்றி பற்றி சில விளக்கங்களைத் தருவதை கவனிக்கலாம். அ. கால நிரல் (ஆர்டர்) ஆ. காலவரையறை (டியுரேசன்) இ. கால அடுக்கு (பிரிக்கிவன்சி) இந்த அளவிலும் நாவல் பயணிக்கிறது.

கதையின் நாயகன் ராமானுஜனுக்கு இடுப்பில் கட்டி இருக்கிறது. அந்தக் கட்டி அவனுக்கு கட்டி உடைகிறபோதெல்லாம் மகிழ்ச்சியாகிறான். கட்டி உடையாமல் இருக்கிறபோதெல்லாம் அவனுக்குப் பிரச்சனைகள் வருகிறது. நாவலின் மையம் முழுக்கவும் சிதைவுகளைப் பேசுகிறது. உறவுகளின் மனப்பிறழ்வுகளின் காரணங்களை அலசுகிறது. வக்கிரம் நிறைந்த மனிதனுக்கு இயல்பாகப் பிறந்து விட்ட நோய்மையை பலவிகித்ததில் ஆராய்கிறது. அவர் கலை நோய் தமிழ்ச் சமூகத்தின் பெருநகரவாழ்வியலில் பரவலாகிப் போன நடைமுறையைப் பேசுகிறது.

நாவலில் ஒரு இடத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி-ஜி.என்.பாலசுப்பிரமணியம் இருவருக்குமான உறவு குறித்துப் பேசுகிறது. அது போலவே நாயகனின் அம்மாவிற்கும் சித்தப்பாவிற்குமுள்ள உறவுகள். இதை அறிந்தே வாழ்கிற பிராமணத் தந்தையின் மனபோராட்டம். அவர் அதை வழிமொழிந்தவாறு கிருஷ்ணா உபதேசம் கேட்பது. பகவத்கிதையின் சுலோகங்களில் பக்தி இயக்கங்களில் ஆர்வம் காட்டுவது. விவரிக்கப் படுகிறது. ஏறக்குறைய இந்திய முஸ்லீம் குடும்பங்களின் வாழ்வும் பிராமணக் குடும்பங்களின் வாழ்வும் சரிசமவிகிதத்தில் தான் இருப்பதாக அவர் நாவலில் வடித்திருப்பதை இந்த நாவலின் அசாத்தியமான கட்டம். துணிவு என்று சொல்லலாம். சமீபத்தில் ஷரியத் நீதிமன்றங்களுக்கு இந்திய அரசு அனுமதித்திருப்தை நாம் நினைவு கொள்ளலாம். இந்திய மரபில் மட்டுமல்ல தமிழ்க் குடும்ப முறைகளின் பால் அவநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் தங்கள் இணைகளுக்கு வெளியே பழக்கத்தி லிருக்கும் ஆண்களை பெண்களும் பெண்களை ஆண்களும் விரும்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதாக நாவல் பேசுகிறது.

          தமிழ் நாவல்கள் தம் தொடக்க்கால அமைப்பு முறையின்ன்று எவ்வளவோ மாறி புதிய அமைப்பு முறையை அடைந்திருக்கிறது. நமது மரபுவழி நாவல்களில் தமிழ்க்காப்பியங்களும் புராணங்களும் ஒரு மரபை உருவாக்கியிருந்தன இலக்கிய அறத்தைத் தோற்றத்திலிருந்து ஆரம்பித்து அடுத்து வளர்ச்சி, அதன் பின் உச்சநிலை, இறுதியாக முடிவு என்ற அமைப்பைத்தான் பெரும்பாலும் பின்பற்றின.சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், மகாபாரதம், புராணங்கள் யாவும் இந்த மரபைப்பின் பற்றின.  இந்திய சமூக அமைப்பில் குடும்ப அமைப்பில் முற்பட்ட வகுப்பு அல்லது அல்லது வேத வைதீக மரபுகளில் பின்பற்றப் படும் அமைப்பியலை மிகவும் விமர்சனம் செய்கிறது நாவல். மனச்சிதைவுகளை ஒரு புகைப்பட ஸ்டுடியோ வழியாக எல்லாவற்றையும் காண்கிற வடிவத்தில் நாவல் நகருவதைப் புதுமையான உத்தி என்று சொல்லலாம். நாம் நம் வாழ்வில் அறிமுகமான ஸ்டுடியோக்களை ஞாபகம் ஊட்டுகிறது. ஸ்டுடியோக்களுக்கு வருகிற முகங்களை அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை அவர்கள் பெண்களை எதிர்கொள்கிற விதம். குறிப்பாக பெண்களின் அந்தரங்கம் சிலாகிக்கப் படுகிறது. அந்தப்புகைப்படங்களில் படிந்திருக்கிற முகபாவத்தின் பின்னணியின் சம்பவங்களை சுவராசியமாகப் பேசுகிறது. நாவலை வாசிக்கத் தூண்டுவதாக இருக்கிறது.  நமது வாழ்வின் நிகழ்வுகளுக்கு நாமே முதன்மையான பார்வையாளனாக உள்ளோம். தமிழ் நாவல்களின் வளர்ச்சியை நாம் ஒரு முறை நினைவுட்டிப்பார்த்தால் நீண்ட நெடிய பரிமாணத்தை அடைந்திருக்கிறோம். போதாமைகள் நம்மிடம் இருந்தாலும் கலைவடிவம் சார்ந்த நாவல்களில் நாம் குறித்த இடத்தை அடைந்திருக்கிறோம். விவசாயம்,நெசவு,அதிகார விரிவாக்கம்,புதிய தொழில்களின் வரவு,பாரம்பரிய கலைகளின் வீழ்ச்சி பற்றியும் பேசியிருக்கிறோம். சைவ-வைதீக வேளாளர் மரபை மீறாமல் மரபுக்களம் அமைத்து எழுதிய பண்புகளும் வந்தது. மேற்கண்ட வழிகளில் தங்கள் உறவுகளை கட்டமைப்புகளைக் கொண்ட வாழ்வை எழுதினார்கள். பல நாவலாசிரியர்களுக்கு சினிமா எனும் வடிவம் அச்சுறுத்திக் கொண்டிருந்த்து. சினிமா பாணியில் சித்தாந்த மரபுகளை அடிமைத்தனத்தை எதிர்த்த படைப்புகளையும் எழுதினார்கள். பொதுவாக பொதுவுடைமை சித்தாந்தத்தை எல்லாப்படைப்புகளையும் எழுதினார்கள். அப்படியாக எழுதப்பட்ட படைப்புகளுக்குத்தான் மரியாதை கிடைதது. தொ.மு.சி, கு.சின்ப்ப பாரதி, கே.முத்தையா, டி.செல்வராஜ் பிரபஞ்சன்,ராஜம் கிருஷ்ணன், சுந்தர்ராமசாமி, அசோக மித்ரன், ஜெயகாந்தன்.நாஞ்சில் நாடன். சுப்ரபாரதிமணியன், அகிலன்.நா.பார்த்தசாரதி ஆகியோருக்கு நிறைய வாசகர்கள் கிடைத்தனர். இருந்தார்கள் என்பது பெருமைப் படவேண்டியவை.

           தற்காலத்தில் நாவல்களுக்குக் குறைந்த அளவிலேயே வாசகர்கள் இருக்கிறார்கள். பழைய வாசகர்களுக்கு வயதாகியிருக்கிறது. அந்த வாசகர்கள் ஓரு வேளை இப்போது ஓய்வுபெறும் வயதை அடைந்திருப்பார்கள் என நினைக்கிறோம்.எஸ்.ராமகிருஷ்ணன்,இமையம், சிவகாமி, ஜோ.டி.குருஸ்,ஜெயமோகன், சு.வெங்கடேசன்,பூமணியின் நாவல்களை 60-70-80 களின் வாசகர்களின் தரம் இன்றைய இளையதலை முறையினர் வாசிக்கிறார்களா எனநாம் யோசிக்கிறோம். நிஜந்தன் நாவலில் நாம பயணம் செய்யும் போது நமக்கு பிரமிப்பாகவே இருக்கிறது.

இந்த நாவல் வடிவத்தில் ஒருவகை நனவோடை நாவலாகவும் இந்த நாவல் இருப்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்த உத்தியை சிறப்பாகப் பயண்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் டோரதி ரிச்சர்ட்சன், ஜேம்ஸ்ஜாய்ஸ், வெர்ஜினியா வுஃபுல்ப், வில்லியம் பக்னர், குஸ்டவ் ஃப்ளொபோட், முக்கியமானவர்கள். இதில் ஆங்கிலத்தில் ஜேம்ஸ்ஜாய்ஸ், மார்ஷல்ஃபிரஸ்ட் (பிரஞ்ச்) ஃபிரான்ஸ் காப்கா(ஜெர்மனி) ஆகிய மூவரும் நனவோடை உத்தியை நவீன முறையில் அமைத்து உலக நாவல் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினர். ரெக்ஸ் ஸ்டவுட்டி எழுதிய ஹவ் லைக் எ காட் என்கிற நாவல் முக்கியமானது படிக்கட்டுகளில் ஏறும்வரையிலான கால அளவில் தனது வாழ்வை நினைத்துப் பார்க்கி மாதிரியான உத்தியைப பயண்படுத்தியிருப்பார். ஷேக்ஸ்பியர் தனது “திடெம்பஸ்ட்நாடகத்தில் பிராஸ்பெரோ என்ற பாத்திரம் கடந்த கால நிகழ்ச்சிகளையெல்லாம் கூறுவது போல அமைந்திருக்கிறது. எட்வர்டு டுஜார்டின் “தி லாரல்ஸ் ஹேவ் கீன் கட்அளவில சிறியதாக இருந்தாலும் முக்கியமான நனவோடை நாவல்.

        தமிழில் நனவோடை உத்தி பற்றி மூத்த ஆளுமை சி.சு செல்லப்பா சொல்வதை கவனிப்போம், “அநேகமா மணிக்கொடிக் கதைக்கார்ர்கள் எல்லோருமே ரிப்ளக்டிவ் என்கிறோமே, சிந்திக்கிற,  முன்னும பின்னுமாக மனதை ஓடவிடுகிற மாடு அசைபோடுவது போல மனதின் சிக்கலான, கலப்பான, ஆழமான உணர்வுகளை ஆழத்திலிருந்து மேல் தளத்திற்குக கொணர்ந்து திரும்பத்திரும்ப உரைத்துப் பார்க்கிற விதமான எழுத்துப் போக்கு.என்கிறார். நனவோடை எழுத்து பற்றி.

      உதாரணமாக சில நாவல்கள். சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம், நீல.பத்மநாபனின் பள்ளி கொண்டபுரம், லா.ச.ராமாமிருத்த்தின் அபிதா காவேரியின் ஆத்துக்குப் போகணும் என் ஆர் தாசனின் “இங்கிருப்பதும் அதுதான் “ நாவல்களின் பயண்படுத்தப் பட்ட உத்தி வரவேற்கப்பட்டது. வீணா .மகேஸ்வரி கதாபாத்திரங்களின் வழியாக நிகழ்த்தப் படும் உரையாடல்கள்

பாலசந்தர்,மகேந்திரன்,ஸ்ரீதர் காலத்தின் படங்களை நாம் பார்ப்பதைப் போன்ற நினைவுகள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த நாவல் வாசித்த பிறகு நாமும் நம் புகைப்படங்களைப் பார்க்கிறோம். நமது பள்ளிப்பருவப் புகைப்படங்கள்,வேலை வாய்ப்பிற்காக எடுத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.திருமணப்புகைப்படம், நண்பர்களுடன். கூடபணிபுரியும் நண்பர்களுடன் எடுத்த புகைப்படம். இந்தப்புகைப்படங்களின் பின்புலத்தில் நமக்கு காட்சிகளாக விரியும். இவை அனைத்தும் ஒரு வகையில் யோசிக்கும் போது சம்பவங்கள் யாவும நிரலின்றி (நான் லீனியர்) வடிவிலும் சில அத்தியாயங்கள் இருக்கிறது. ஒரு கதாபாத்திரத்திலிருந்து அவை சந்திக்கும் இணை கதாபாத்திரத்தின் வாழ்வின் சில சம்பவங்கள் என விரிந்து சென்று நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி பிறகு முந்தைய சம்பவங்களை நினைவுட்ட வைக்கிறது.ரிச்சர்ட் ஆடம்ஸின் நாவலான “வார்டர்சிப்  டவுன்ஜான் பௌலசின் தி பிரெஞ்ச் லிட்டினன்ட் விமன் சாமுவேல் பக்கெட்டின்“வாட்“ ஜோசஃப் ஹெல்லர்ஸ் என்பவரின் கேட்ச்-22“ நாவல்கள் நான் லினியரில் முக்கியமானவை. நிஜந்தன் நாவல் போலவே பாக்னரின் “அப்சலாம்..அப்சலாம்“நாவலும் முக்கியமானவை. வங்கமொழியில் இரவீந்திரநாத் தாகூரின் க்ரே பாயிரே (1916) என்ற நாவலில் வங்க் பிரிவினையை விவரிக்கும வித்த்தில் பல பாத்திரங்கள்  தங்கள் எண்ணங்களை வெளியிடுகிறார்கள். ஸதிதாத்தின் பாதுரியின் ஜாகரி என்ற வங்க நாவல் ஒரு பயங்கர இரவின் முடிவை நோக்கி இருக்கிற நான்கு கதாபாத்திரங்களின் நான்கு விநோதமான குரல்களாக நாவல் இருக்கிறது. தமிழ் நாவல்களில் நீல பத்மநாபனின் “யாத்திரை“யில் ஒருவனின் இறப்பு குறித்து நான்கு பேர் நான்கு விதங்களில் ஒரு கால கட்டத்தில் இறப்புக்கு முன் நடந்த  நிகழ்ச்சிகளை நினைவு கூர்கிறார்கள்.அசோகமித்திரனின் “கரைந்த நிழல்கள்ஆதவனின் காகிதமலர்கள்“ காசியபனின் “அசடுநகுலனின் “நவினன் டைரிசுந்தர்ராமசாமியின் “ஜே ஜே.சில குறிப்புகள் தமிழவனின் “ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்போன்ற நாவல்கள் முக்கியமானவை. நிஜந்தனின் நாவலான நான்-நிழல்- படைப்பில் மையம் கொண்டிருக்கும் மனித இயல்புகளின் குற்றங்களின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் அவ நம்பிக்கையையும் பேசுகிறது. தவறுகளை யார் புரிந்தாலும் உறவுகளுக்குள்ளாக தவறுகளை இழைத்துக் கொள்கிறபோது மன்னிப்பை வழங்குகிற நீதிமானாக யார் இருக்கப் போகிறார்கள். நாவலின் முதன்மையான மனிதனான ராமானுஜனுக்குத் தனது தாய் தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்பைக் கோருகிற சம்பவங்கள் எளிய உறவுச்சிக்கல்கள் கொண்ட குடும்பங்களில் அன்றாடம் நடக்கிறவைதான் என்றாலும் அதன் மூலமாக தனது கவச குண்டலம் போன்றிருந்த கட்டி இருந்த சுவடே அல்லது அதுபோன்ற ஒரு கட்டி தனது இடுப்பில் இருக்கவேயில்லை என்கிற உணர்வு வருவதை நிஜந்தன் புரியவைக்கும் போது மகத்தான படைப்பாக மாறுகிறது. அவருடைய பிற நாவல்களும்,நாடகங்கள்,சிறுகதைகள் கூட இந்த ஆன்மாவையே பேசுவதாக அறிகிறேன். கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலான எழுத்தியக்கத்தை நிகழ்த்தும் நிஜந்தனின் படைப்புலகம் முன்செல்லட்டும். அவருடைய சிந்தனையில் உறங்கிக் கொண்டிருக்கும் மேலும் பல அப்பழுக்கற்ற ஆன்மாக்களின் கதைகள் வரட்டும் என வாழ்த்துகிறோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக