கோவை இலக்கியச் சந்திப்பு- ஞாயிறு-29.9.2013
முப்பத்தி நான்காம் நிகழ்வின் பதிவுகள்
அது போன்ற பரகாசூர ஆடுகளை நான்
பார்த்ததே இல்லை. தமிழிலக்கியத்திலும் வாசித்த மாதிரி தெரியவில்லை. எருமைக் கிடாவை
அது போலப் பார்த்திருக்கிறேன். ஆநிரை கவர்தல் குறித்த சிந்தைகளிலும் இல்லை.
ஆட்டுக்கார அலமேலு படத்தில் வந்த பிறகு அந்த ஆடுகள் புகழ்பெறத்துவங்கியது. சாண்டோ
சின்னப்பாத்தேவரும் ராம நாராயணனும் மேனகா காந்தியும் புண்ணியமிக்க காரியங்கள்
செய்திருக்கிறார்கள். பார்த்திருக்கிறேன். பிறகு ஈரோடு அந்தியுர் பகுதியில்
மலைவரையாடுகளைப் பார்த்திருக்கிறேன். நவீன இலக்கியத்தில் ஆடுகள் பற்றிய
பதிவுகளிலும் அந்த ஆடுகளை நான் பார்த்ததில்லை.
நிகழ்வு துவங்கும் போதிலிருந்து
வரிசையாக அந்த மைதானத்தில் கட்டிவைக்கப்பட்டு தீவனமிடப்பட்டது. அவ்வப்பொழுது
முப்பது நாற்பது ஆடுகள் கொண்டு வந்து மைதானத்தில் கட்டிவைத்து மேய வைத்தார்கள். ஒவ்வொரு
ஆட்டையும அழைத்துப் போகிற இளைஞர்களும் ஆடுகளுக்குத்தகுந்த பயிற்சி வீரர்கள்
போலிருக்கிறார்கள் ஆட்டின் நீண்டு
விரிந்து வளைந்த கொம்புகளை முகமும் உருண்டு திரண்ட கண்களுமாக விட்டால் அவை
ஒன்றையொன்று போரிட ஏதுவாகவும் இருக்கிறது. வலிமையான துப்பாக்கிக் குண்டுகள்
துளைக்காத வண்ணம் அதன் தோல். இது போன்ற ராட்சத எருமைக் கொம்புகளை நான் காங்கயம்
காளைகளில் கண்டிருக்கிறேன். வளைந்த கொம்புகளில் துளையிட்டு அதன்வழயாக இரும்பு
வளையம் போட்டு அதில் இரு கொம்புகளிலும் கயிறுகள் கட்டி அதைவிடவும் கட்டுமஸ்தான
இசுலாமிய இளைஞர்கள் பிடித்து அழைத்துப் போனார்கள் நிகழ்வு முடிந்த பிறகு பள்ளி
அலுவலரைக் கேட்டோம். பக்ரீத் அன்று இந்த ஆடுகள் ஏலம் விடப்பட்டு எடுக்கப்பட்டு
அனைவருக்கும் உணவு படைக்கப்படுவதற்காக வளர்க்கிறார்கள். என்றார் பிறகு இது போன்ற
ஆடுகள் எப்படிக் கிடைக்கிறது என்றபோது சாதாரண வெள்ளாடுகளும் வரையாடுகளின் கலப்பு.
வெள்ளாடுவகைகளைச்சாராது என்றார். அது முட்டினால் சீனப் பெருஞ்சுவரும்பெர்லின்
சுவரும் சாய்ந்து விடும்போலிருந்தது. நாங்கள் முதலில் அந்த மைதானத்தின்
ஒருபுறத்தில் வெட்டுவதற்காகத்தான் கொண்டு போகிறார்கள் என்று பேசிக்கொண்டோம்.
இளங்கோ கிருஷ்ணன் வெட்டுவதற் காகவே கொண்டு போகிறார்கள் என்றார். அதுபோன்றுதான்
இருந்தது சூழல். ஆடுகள் குளிப்பாட்டி நுரை மணக்க வலம் போனது. அனைவரும் ஆமோதித்தார்கள். அந்த மைதானத்தின் மறைவாக இடத்தைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. அந்த
ஆடுகள் நிச்சயமாக முப்பதிலிருந்து நாற்பது கிலோ தேறும். அப்படிப்பட்ட ஆடுகளின்
வதைக் கூடம் எப்படியிருக்கும். இருந்தால் நிகழ்வு முழுக்க ஆடுகள் மீதே இருந்தது.
நிகழ்வுகள் துவங்கும் வரையிலும்
மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் இளைஞர்கள் காலைப்பயிற்சி கைப்பந்து
ஆட்டத்திலிருந்த வீர ர்களின் ஆரவாரக்கூச்சல்களை இலக்கியச் சந்திப்பிற்காக
குறைத்துக் கொள்கிறார்கள் சில இளைஞர்கள் கிளம்புகிறார்கள். ஞாயிற்றுக் கிழமை
விளையாட்டுமைதானத்தில் பல நூறு விளையாட்டுப்பயிற்சியாளர்களுடன் இலக்கிய
நிகழ்வுகளையும் நடத்துகிற வாய்ப்பும் கோவை இலக்கியச் சந்திப்பு பெற்றிருக்கிறது.
நிகழ்வு முடிந்து ஆடுகள்
வெட்டப்படாமல் போனது மகிழ்ச்சியாகவே இருந்தது. கோவை மாநகரில் அது போன்ற ஆடுகள்
வளர்க்கப்படுகிறது என்பது வாழ்நாள் சாதனை விருது நிகழ்வு. அதற்கான மைதானமும்
இடமும் எங்கிருக்கிறது. அது சாப்பிடுகிற அளவு தாவரங்கள் செடிகொடிகள் அருகிப்
போயிருக்கிறது. ஒரு வேளை அந்த ஆடுகள் மாட்டுக் கறி சாப்பிடுகிறதோ என்னவோ. அதன் மிரட்சியுட்டும் கொம்புகளை நாம் பொக்லைன்
இயந்திரத் திற்னான பற்களாக உபயோகப்படுத்தலாம். அதிலுள்ள வரிகள் யாவும் வெடித்து
வளவளப்பு ஆன் பாறைக் குளம்புபோன்று உள்ளது. ஆடுகள் வீட்டு விலங்குகள் என்கிற வகைமை
மாறிவிட்டது. கொல்லப்படும் விலங்குகள் என்கிற வகைமையைச் சார்ந்து விட்டது. கடல்
மீன்கள் போல. இலங்கையால் கொல்லப்படும் மீனவர்கள்போல. அல்லது இலங்கைத் தமிழ்
அரசியல் போலவே.
இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப்
பிறகு இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சியில்
அமர்கிறது. இலங்கை உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும் முதல்வர்
வேட்பாளருமான சி.வி விக்னேஸ்வரன் கூறியதாவது. ஜனநாயகம் தழைக்க மக்கள்
வாக்களித்துள்ளனர். அதை இலங்கை அரசு எங்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும்.
தமிழர்களின் தன்னாட்சிக்காக மக்கள் வாக்களித்துள்ளனர் வடக்கு மாகாணத்தில் உள்ள ராணுவத்தை
அகற்ற முக்கியத்துவம் அளிக்கப்படும் இலங்கையைப் பிரிக்காமல் கூட்டாட்சித் தத்துவத்தின்
கீழ் தமிழர்களுக்கென தன்னாட்சி கோரப்படும் என்கிறார். தமிழகத்தில் உள்ள இலங்கை
ஆதரவு எதிர்ப்பு கருத்தாளர்கள் உடனடியாக எதற்கும் இருக்கட்டும் என்று
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம் அவர்கள் பாராளுமன்றத் தேர்தலைக்கவனிப்பார்களா
இந்தத்தேர்தலைக் கவனிப்பார்களா மோடி வித்தையில் லயித்துப் போய்க்கிறங்குகிறார்கள்
புரட்சி அடைமொழி கொண்டவர்கள். மஸ்தான் வித்தைக்கு ஆடலாமா பாடலாமா அள்ளையில்
பம்மலாமா என்று யோசிக்கிறார்கள்.
ஆனாலும் வெளிப்படையாக சி.கே. வாசன் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த்
மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று பேசியதை தமிழருவி மணியன் வரவேற்று
இருக்கிறார். இலங்கையில் கலவரம் நடந்த பொழுது ஒரு வார்டு உறுப்பினர் கூட
இலங்கைக்கு எதிராகப் பதவி விலகாத போது தனது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியை
விட்டு விலகியவரான அவர் சொல்வதற்கு உரிமை உள்ளது. இது பற்றி நாராயணசாமியைக்
கேட்டால் தெளிவான பதில் தர வாய்ப்பிருக்கிறது.
திருவாளர் மத்தியஸ்தன்
திருவாளர் நடுநிலையும் என் வீட்டின் தொலைக்காட்சிப்பெட்டியின் சேனலைத்திருப்பினார்கள். அவர்கள்
எப்பொழுதும் என்னுடன் வாதாடுவதற்காக வந்துவிடுவார்கள். குறிப்பாக இலக்கியச்
சந்திப்பின் நிகழ்வுகளுக்குச் செல்லும்போதுதான் ஞானோதயம் தோன்றும். தென்னிந்திய சினிமாவின் நூறாண்டு நிகழ்ச்சியைப்
பார்த்தான். திராவிடம் தழைத் தோங்கியிருக்கிறது. அடடா என்னவொரு ஒற்றுமை. அண்ணா
இப்பொழுது இருந்து தரிசித்திருக்கவேண்டும். திராவிட நாடு திராவிடருக்கே என்று
மறுபடியும் துவக்கியிருப்பார். ரஜினியும் கமலும் பின்வரிசையிலும் பகவதியம்மா
கோயில் புசாரிகள் முன்வரிசையிலும் அமர்ந்திருந்த காட்சி மெய்சிலிர்க்கிறது. சினிமா
நூற்றாண்டையொட்டி மக்கள் முன்னிலையில் திரைப்படங்கள் திரையிடுகிற முயற்சியை
தமுஎகசங்கம் ஏற்பாடு செய்வதையும் இந்தக் கோலாகலத்தையும் நினைத்துப் பார்த்தேன்.
இது மோடி சீசன் என்பதால் அவர்
செய்தியில்லாமல் கட்டுரை அமைந்தால் தேச துரோகச் செயல். டாம்பா (அமெரிக்கா)வில்
வெளிநாடு வாழ் அமெரிக்க பாஜக வின் நண்பர்கள் அமைப்பு புளோரிடாவில் நடத்திய இரண்டு
நாள் மாநாட்டில் நிறைவில் காணொளி மூலமாகப் பேசிய மோடி“ செயலற்ற மத்திய அரசைக்
காப்பாற்றத் துடிக்கும் சுயநல கும்பல்கள் என்று. பேசியிருக்கிறார்கள். காங்கிரஸ்
எப்படியும் சில நூறு எம்பிக்களைப் பெறப் போகிறது. அப்படியானால் வாக்களித்தவர்கள்
எல்லாரும் சுயநலகும்பல்களா எனத்தெரியவில்லை. இந்த செய்திக்குப் பிறகு வந்த
செய்தியை மத்தியஸ்தன் கவனிக்கச் சொன்னார். கடந்த பத்தாண்டுகளில் வகுப்புக்
கலவரங்களில் இரண்டாயிரத்து ஐநூறு பேர் மரணமடைந்ததாகச் சொன்னார்கள்.
ஜெர்மனியில் பிரதமர்
தேர்தலுக்கான வாக்குப்பதிவு போன வாரம் நடந்தது. மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க
ஆளும் கிறிஸ்டியன் டெமாக்டிக் யுனியன் கட்சியில் தலைவரும் தற்போதையை பிரதமருமான
எஞ்சலா மெர்கலுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கருத்துகள் தெரிவிக்கிறது. ஐரோப்பாக்
கண்டத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதும் ஜெர்மனியில் அதன் பாதிப்பு இல்லாமல்
மெர்கல் திறமையாக ஆட்சி நடத்தியது அந்நாட்டுமக்களிடையே பெரும் மதிப்பை
பெற்றுத்தந்துள்ளது. மெலும் ஜெர்மனியை வலிமையான பொருளாதார நாடாக உருவாக்கியத
மற்றும் வேலையின்மையை குறித்த நடவடிக்கைகளால் அவர் மூன்றாவது முறையாகப் பிரதமராக
வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் பட்ஜெட் நிறைவேற்றப்படாமல்
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி. எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒபாமாவின்
வேண்டுகோளை நிராகரித்துள்ளார்கள். அரசு அலுவலகங்கள் ஸ்தம்பிக்கிறது. அமெரிக்க
வீதிகளைக் காட்டுகிறார்கள்.மக்கள் சோகத்துடன் அலைகிறார்கள். வெள்ளை மாளிகையில்
பேசிய ஒபாமா நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற எதிர்க்கட்சிகள் உதவ்வேண்டும்
என்கிறார். ஒரு நிலையில் வீட்டோ பவரைப் பயண்படுத்தி அவர் நெருக்கடியிலிருந்து
மீட்பார் என்கிறார் ஒருவர். ஒவ்வொரு முறையும் அமெரிக்கா நெருக்கடி என்று நாடகமாடி
கிழக்காசிய நாடுகளின் நாணயமதிப்பை இறக்குவதற்கும் சுரண்டுவதற்கும் முயற்சிக்கிறது.
இதுபற்றி ஒருவரும் எழுதுவதில்லை. அமெரிக்கா திவால் ஆனால் கவலைப்பட ஒரு உள்ளம்
உள்ளது அது சிதம்பரம். அவருக்கு மன்மோகனும் ஒபாமாதான் ஒபாமாவும் மன்மோகன்தான்.
மத்தியஸ்தன் இது ஜெர்மனியில் என்றான். மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ்
கட்சியை பொருத்திப் பார்க்க கூடாது என்றார். நான் இலக்கியச் சந்திப்புக்கு
நேரமாச்சு என்று புறப்பட்டேன். என்னைக் கடுப்பேற்று வதறக்காகவே இனியொரு செய்தியை
வாசித்துவிட்டுப்போ என்றான். ஊழல் வழக்கில் சீன கம்யுனிஸ்ட் தலைவர் போ ஜிலாஜிக்கு
ஆயுள் தண்டனை எனும் செய்தி. ஊழல் தொகையைக் கேள்விப்பட்டபோது வெறும் இருபத்தி
இரண்டு கோடிதான். சிறிய தொகைக்கு ஆயுள்தண்டனையா. சரிதான். ஊழல்கள் லட்சம் கோடிகளைத்தாண்டும்
போது இந்த அளவில் சிறியதாகச் செய்ததற்கு தண்டனை சரிதான். கவுண்டமணி
செந்திலைப்பார்த்துக் கேட்பார் “என்ன பண்ணிட்டு ஜெயிலுக்கு வந்த..“ செந்தில்
“சில்லறைத் தட்டுபாடுண்ணே.. எட்டணா நாணயம் அடிச்சென்“ எந்த ஊர்ரா என்பார்
“கோயமுத்தூர்” என்றதும் அறைவார். “கோயமுத்தூர் பேரையெ கெடுத்துட்டு
வந்திருக்கே.“என்பார். அந்த மாதிரி அவர் ஊழலின் மரியாதையை கெடுத்திருக்கிறார்.
நெடுநாளாக
இழுத்துக் கொண்டிருந்த நீலாம்புர்-அன்னூர்- மேட்டுப்பாளையம்
புறவழிச்சாலைத்திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு விட்டது. பல்லாயிரக்கணக்கில் விவசாய
நிலமும் நீர்வளமும் பாதிக்கப்படும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடியது
வீண்போகவில்லை. கோவை எம்பி தோழர் பி.ஆர்.நடராஜன் எடுத்த முயற்சிகள் வெற்றிபெற்றிருக்கிறது
அவருக்குப் பாராட்டுவிழா நடந்தது. அவர் பேசுகையில் மக்களின் ஒட்டுமொத்தப்
போராட்டம் இந்தத்திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டிய நிலைக்குச் சென்றது என்றார்.
தனது பதவிக்காலத்தில் எளிமையாகவும் எளிதில் மக்கள் சந்திக்கும் எம்பியாக அவர்
இருந்துள்ளார். அவர் மக்களின் போராட்ட களத்திற்குச் செல்கிற வாதாடுகிற மக்களவை
உறுப்பினராகவும் இருந்துள்ளார். வரும் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பு அமையுமா
தெரியவில்லை. இந்த நிலம் பற்றிய கவிதை ஒன்று நான் எழுதியிருந்தேன்.
அவ்விடத்தில் மகாகவி பாரதியின் நிலம் இருப்பதாகவும் பாரதியிடம் நிலம் பறிபோகும்
மக்கள் மன்றாடுவதாகவும் பொருள் கொண்ட கவிதை. அந்தக் கவிதையை பாரதியின் பிறந்த நாளில்
வாசித்தோம். . இப்பொழுது நிலத்தை மீட்ட பாரதியின் முகமாக பி.ஆர் நடராஜன்
இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்..
நிகழ்வுக்கு
நேரமானது. வண்டியைக் கிளப்பினேன். நடுநிலை, மத்தியஸ்தன் இருவரையும் ரயில்
நிலையத்திலும் ஆம்னி பஸ் ஸ்டெண்டிலும் இறக்கிவிட்டேன். நிகழ்வுக்கு வருகிறேன்
என்றவர்களை இன்று உலக இருதய தினம் தயவு செய்து எங்கும் நீங்கள் சுற்றாமல் வீடு
போங்கள்
இன்றைய நிகழ்விற்கு இனிப்பும் காபியும் அளிக்கலாம் பங்கேற்பாளர்களுக்கு
என்று யோசித்தபோது பாதுஷா சரியான இனிப்பு. மற்ற இனிப்பு வகைபோன்ற தித்திப்பு இருக்காது.
சரியான அளவிலும் இருக்கும். கைகளில் சர்க்கரைப் பாகு ஒட்டவும் செய்யாது. பாதுஷாக்களின்
ஆட்சிக் காலத்தில் அவர்கள் நம்மை சாப்பிட்டார்கள். நாம் சமகாலத்தில் பாதுஷாவை சாப்பிடலாம்
என்று வாங்கினீர்களா என்றார்கள் சில நண்பர்கள்
பேராசிரியர் சி.மா.இரவிச்சந்திரன் பேசும் பொழுது
விருது பெற்றவர்கள் நாம் வாழும் காலத்திலேயேப் பாராட்டப்படுவதும் விருதுகள்
பெறுவதும் மகிழ்ச்சி தருகிறது. இயல் விருது பெற்ற ஞானி அவர்கள் நாற்பது
ஆண்டுகளுக்கும் மேலாகத் தனித்தன்மையுடன் இயங்குபவர். அவருடைய தமிழ் இதழியல்
பணியென்பது மகத்தானது. அது போலவே மொழிபெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா அவர்கள்.
தாஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் அசடன் போன்ற நாவல்கள் மட்டுமல்ல ஏராளமான
மொழிபெயப்புகளைச் செய்திட்டவர். அரிய பல நூல்களை கட்டுரைகளை மொழிபெயர்த்தவர். இளம்
ஆய்வாளர் விருது பெற்ற சவகர் திணைவியல் கோட்பாடுகளை நன்கு ஆய்ந்து திணையியல்
சார்ந்த ஆய்வுகள் தமிழுக்கு அவசியம் என்பதை கவனப்படுத் தியிருக்கிறார். இளம் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக
அவருடைய பணி சிறப்பு பெற்றிருக்கிறது. நம்முடைய நாஞ்சில் நாடன் அவர்கள் பல
விருதுகளைப் பெற்றுக்கொண்டு வருகிறார். அவருடைய எழுத்தில் கோபமும் சீற்றமும்
இருக்கும். படைப்பிலக்கியத்தில் கடந்த நாற்பதாண்டுகளாக நாவல் சிறுகதை கட்டுரை
கவிதை என்று பயணம் தொடர்கிறது. அவர் பெறும் இயல் விருது நமக்கும்
பெருமையளிப்பதாகிறது. மற்றும் இங்கு வந்திருக்கிற பல ஆளுமைகள் அனைவரும்
தமிழுக்கும் படைப்பிலக்கியத்திற்கும் பங்காற்றி வருபவர்கள் இந்த முயற்சி வரவேற்கப்
படவேண்டியதாக உள்ளது. அதே நேரத்தில் வெறும் பாராட்டுவிழாவாக அல்லாமல் இன்றைய
சூழலில் படைப்பாளர்கள் திறனாய்வாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்த கட்டுரைகள்
வாசிக்க இருக்கிறவர்களுக்கும் என் வாழ்த்துகளையும் நன்றியும் தெரிவித்து
விடைபெறுகிறேன் என்றார்.
விருது பெற்ற ஆளுமைகள்
பற்றிய அறிமுகத்தை முனைவர் கு.முத்துக்குமார் செய்தார். தமிழ்ப் பேராய நடுவர்கள்
குழுவால் எழுதப்பட்டு விருதுப் பட்டயத்தில் பொதிக்கப்பட்டிருந்த வாழ்நாள்
சாதனைக்குறிப்புகளை வாசித்தார். ஞானி.,சவகர், எம்.ஏ.சுசீலா. நாஞ்சில் நாடன் ஆளுமைகளின் வாழ்நாள் குறிப்புகளை
வாசித்தார். நான்கு ஆளுமைகளும் செய்த தமிழ்ப்பணிகள், செய்து கொண்டிருக்கும்
பணிகள். தமிழ்ச் சூழலுக்குத் தேவையான மாற்றங்கள் குறித்த அக்கறையையும்
குறிப்பிட்டிருந்தது அவருடைய குறிப்புகள். பங்கேற்பாளர்களுக்கு பல புதிய செய்திகள்
கிடைத்தது
சவகர் ஏற்புரையாற்றும்
பொழுது தன்னுடைய ஆய்வுக்கான பின்புலத்தை விவரித்தார். சங்க காலத்தின் வாழ்க்கை
முறைகள் எல்லாம் திணையியல் கோட்பாடு சார்ந்து இயங்கி வந்த காலத்தைத் தொகுக்க
முனைந்தேன். தற்காலத்தின் இலக்கியக் கோட்பாடுகளையும் நாம் திணையியல்
கோட்பாடுகளாகத் தொகுப்பது அவசியம் என்று கருதினேன். பழந்தமிழ் இலக்கியங்கள் வாழ்ந்த
காலத்தின் இயற்கை, உணவு, வாழ்வு, பாசனம், உள்ளிட்ட ஆதாரங்களைப் பின்புலமாக கொண்டு
கோட்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளதை அறிவோம். அந்த முயற்சிக்கு விருது கிடைத்திருப்பது
மகிழ்ச்சியே.நான் மதித்து வணங்கும் எனது ஆசான் ஞானி அவர்களுடன் விருது பெற்றதை
பெரும் பாக்கியமாக கருதுகிறேன். வாழ்த்திய உங்களுக்கு என் நன்றிகள்..
மொழிபெயர்ப்பாளர் விருது
பெற்ற எம்.ஏ.சுசீலா ஏற்புரையில் தனக்கு வாழ்நாள் சாதனைக்காக
கௌவரவித்திருக்கிறார்கள்.மிகச்சிறந்த நூல்களை மொழிபெயர்ப்பிற்கு உதவியவர்களுக்கு
எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஞானி அவர்களுடன் விருது பெற்றது
மகிழ்ச்சியை தருகிறது. உலகப் பெற்ற படைப்புகளை நம் தமிழிலும் மக்கள் வாசிக்க
வேண்டுமென்று மொழியாக்கம் செய்கிறோம். வாசகர்களும் தொகையைப் பொருட்படுத்தாமல்
வாங்கிப் பயண்பெறவேண்டும். மொழிபெயர்ப்பில் உள்ள பிரச்சனைகளைத் தன் வாசிப்பின்
அனுபவம் மூலமாக கடந்து வருவதாகக் கூறினார். வெகு இயல்பாகவும் எளிமையாகவும்
உரையாற்றியார்.
தன் ஏற்புரையில் ஐயா ஞானி
தன்னால் அதிக நேரம் பேச முடியாது. பாராட்டுவிழா வேண்டாம் என்று சொன்னேன்
இருந்தாலும் என்னை அதிகமாகவே புகழ்ந்துவிட்டார்கள். நான் ஏற்புரைக்கு ஒரு கட்டுரை
வாசிக்க நினைத்தேன். நேரத்தின் அருமை கருதி அனைவருக்கும் என் நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுரை அடுத்த சந்திப்பில் வாசித்துக் கொள்ளலாம்.
என்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டு
உரையாற்றியது நண்பர்களுக்கு நெகிழ்ச்சியைத் தருகிறது.
இயல் விருது பெற்ற நாஞ்சில்
நாடன் பேசும் போது விருதுகள் அறிவிக்கப்படும் பொழுது நிலவும் பரபரப்பு பற்றிய
உண்மைகளை எடுத்துரைத்தார். அமைப்பு சார்ந்தவர்களுக்கு விருதுகள் செல்வதும் அமைப்பு
சாராத எழுத்தாளர்களுக்கு அவமதிப்பும் தொடரவே செய்கிறது. இயல் விருது எனக்கும் ஞானி
அவர்களுக்குத் தருவதை விடவும் கண்மணி குணசேகரன் போன்ற படைப்பாளர்களுக்குத்
தந்தமைதான் மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது. தான் இப்பொழுது சிற்றிலக்கியங்கள்
குறித்த நூல் ஒன்று வெளிவருகிறது. நாஞ்சில் நாட்டு உணவு குறித்து ஒரு நூல்
வருகிறது. தான் இன்னும் பத்து ஆண்டுகளில் படைப்பிலக்கியத்தில் மேலும் சில நூல்கள்
எழுதவேண்டி யிருக்கிறது. தமிழ் மொழியில் பண்பாட்டில் எழுதப்படவேண்டிய வை ஏராளமாக
இருக்கிறது. ஒரு படைப்பிலக்கியவாதியாக என்னுடைய எழுத்து தொடரும். விருதுகள் ஒரு
நம்பிக்கைதான். அதையே நாம் பிடித்துக் கொண்டு இருக்கமுடியாது. நாம் தொடர்ந்து
பயணித்துக் கொண்டே செல்லவேண்டியதுதான். சாகித்ய அகாதமியின் யுவபுரஸ்கார்
விருதுக்கு லஷ்மி சரவணக்குமார், சந்திரா ஆகியோரை நாங்கள் பரிந்துரை செய்தோம்.
ஆனால் வேறொருவருக்கு தந்தார்கள். நிராகரிக்கப்படுகிற எழுத்தாளர்களுக்கு சாகித்ய
அகாடமி தரும் பதில் என்ன என்றார். கோபத்துடன்தான் நாம் இதோ என் படைப்பு என்ன
சொல்கிறீர்கள் எனக் கேட்க வேண்டியிருக்கிறது என்றார்.
சாகித்ய அகாடமி
ஒருங்கிணைப்பாளர் கி.நாச்சிமுத்து பேசும் போது விருதுகளுக்கு மிகச்சிறந்த
இளைஞர்களின் படைப்பும் பலவீனமான எழுத்துடன் மூத்த ஆளுமைகளின் படைப்பும் வருகிறது
தேர்வில் மிகவும் சிக்கல் ஏற்படுகிறது. இருப்பினும் முடிந்தவரை நல்ல
படைப்புகளுக்கு விருது தருவதற்கு முயற்சி செய்கிறோம். எம்.ஏ.சுசீலா அவர்கள் நல்ல
சிறுகதையாளரும் கூட. படைப்பிலக்கியத்திலும் நன்கு செயல்படுபவர். அவருடைய நூல்கள்
கல்லூரிப்பாடத்திட்டத்திலும் உள்ளது. நாஞ்சில் நாடன் காவிய நடையில் தனது
படைப்புகளை எழுதுபவர். சவகர் போன்ற இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுவது நல்ல
முன்னேற்றம். அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் நன்றிகளும்.
பாவலர் இரணியன் நிகழ்வுகளை
நெறிப்படுத்தினார். இன்று தமிழ் எழுத்துகள் ஐந்து எழுதக் கூடத் தெரியாத தலைமுறை
உருவாகிக் கொண்டிருக்கிறது. அனைவரும் பள்ளி இறுதி வகுப்பு வரை தேர்வு என்கிற
அடைப்படையில் தமிழ் மொழி சிதைவுக்குள்ளாகிறது என்றார். சு,வேணுகோபால் பேசும் போது
ஒரு வகையில் நாஞ்சில் நாடன் அவர்களுடன் போட்டியாகத்தானும் கம்பன் பற்றிய நூல்
ஒன்று எழுதுவேன் என்றார். கர்நாடகாவில் ஒரு இலக்கிய விழாவில் சிவராம கரந்த,
கிரிஷ்கர்ணாட். யு.ஆர் அனந்த மூர்த்தி போன்றவர்களின் புகைப்படங்கள்
வைக்கப்பட்டிருந்தது. அதே தமிழகத்தில் விழா நடந்தால் இருக்கக்கூடியப்
புகைப்படங்கள் அண்ணா. கலைஞர்.எம்.ஜி.ஆர். அம்மா ஆகியோரின் புகைப்படங்கள்தான்
இருக்கும். இங்கு படைப்பாளிகளுக்கு மரியாதை கிடைப்பதில்லை என்றார் தன்னுடைய
நூல்களும் நான்கு வெளிவருகிறது.
எம்.கோபால கிருஷ்ணன்
பேசுகையில் நாஞ்சில் நாடன் தன்னுரையில் தாம் பேச நினைத்தவற்றை அவர்
சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது அத்தனையும் உண்மை. அமைப்பு சாராத மகத்தான
படைப்பாளர்களுக்கு ஏற்படும் நிராகரிப்பு தவிர்க்கப் படவேண்டும். அவர்களும் தங்கள்
உன்னதமான படைப்புகளால் தமிழுக்கு வளம் சேர்த்து வருகிறார்கள். திறனாய்வுகளும்
விமர்சனங்களும் சரியாக முன்வைக்கப்படுமானால் படைப்புகளில் மேலும் வளம் ஏற்படும்
என்றார்
கவிஞர் சக்திசெல்வி தன்னுடைய
கட்டுரையில் சமகாலத்தில் படைப்பாளர்கள் திறனாய்வாளர்களின் பங்கு குறித்து விரிவாக
எழுதியிருந்தார். வெகு சன எழுத்துகளில் கவரப்படுகிற வாசகர்களை இலக்கியப்
படைப்புகளை வாசிக்கவைக்க முயற்சி செய்யவேண்டியிருக்கிறது. தமிழ்ச் சூழலில் வகை
வகையான எழுத்துகள் தொடர்கிறது. துறைசாந்த எழுத்துகள் மலினமாக உருவாகியிருக்கிறது.
நவீனப் படைப்புகளும் தொடர்ந்து சிறப்பாக வெளிவருகிறது. இன்றும் வெகுமக்கள்
சாதாரணமான படைப்புகளை வாசிக்கிறவர்களாவே இருக்கிறார்கள். நவீன இலக்கியத்தில் மிக
முக்கியமான படைப்பாளர்கள் சிறப்பாக கவனம் பெற்றுவருகிறார்கள். தனக்கு மிகவும்
பாதித்த எழுத்தாளராக கண்மணி குணசேகரன் ஆவார். சமீபத்தில் அவரைச் சந்தித்து
உரையாடியது மறக்கமுடியாத நிகழ்வு. அவருடைய எல்லா நூல்களையும் வாசித்து
இருக்கிறேன். எளிமையான மனிதர். அவருடைய படைப்புகளிலும் அவரைப் போன்ற எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பதிவு
செய்கிறவராக உள்ளார். திறனாய்வாளர்கள் நல்ல படைப்புகள் வெளியானதும் அவர்களுடைய
எழுத்தை வாசித்து வரவேற்கவேண்டும் என்றார். ஊக்கப்படுத்த வும் வேண்டியிருக்கிறது.
என்றார் அவருடைய மிகவிரிவான கட்டுரை சமகாலத்தின் இலக்கியப் படைப்புகள்,படைப்பாளர்கள்
விமர்சன முறைகள் குறித்து விரிவாக எழுதப்பட்டிருந்தது. அனைவரின் பாராட்டுதலையும்
பெற்றதாகவே இருந்தது கட்டுரை.
அடுத்து கவிஞர் அகிலா கட்டுரை
வாசித்தார். மிகவும் ஆழமாகவும் நுட்பமாகவும் எழுதப்பட்ட கட்டுரை. இந்த சந்திப்பில்
முக்கியமானதாக அறியப்பட்ட கட்டுரை வடிவங்களாக சக்திசெல்வியும் அகிலா அவர்களும்
எழுதி அனைவரையும் ஆச்சர்யத்திலாழ்த்தினார்கள். ஆய்வு மனோபாவம் அன்றி படைப்பு
மனோபாவத்துடன் எழுதப்பட்ட கட்டுரைகளாக இருந்தது. ஞானி அக்கட்டுரைகளைப் பெற்று
வெளியிட ஏற்பாடு செய்யுங்கள் என்றார். அகிலா கட்டுரையில் தமிழ்ப் படைப்புகளின்
ஆரம்பம் முதல் இன்று வரை நிகழ்ந்த பரிணாம முயற்சிகளைக் கவனப்படுத்தியிருந்தார்.
சரித்திரப்படைப்புகள் முதல் விஞ்ஞானப் புனைகதைகள் சிறுவர் கதைகள். வெகுசன
எழுத்துகள் மாத நாவல்கள் என்ற அளவு கொண்டிருக்கும் படைப்புலகம் நவீனத் தமிழ்ப்
படைப்புகளில் மேன்மையுடன் திகழ்கிறது. கடல் சார்ந்த மக்கள் படைப்புகள் தலித்
படைப்புகள், பெண்ணிய எழுத்துகள் சிறப்பாக வெளிப்படுகிறது. திறனாய்வுகளிலும் பல
ஆளுமைகள் தங்கள் கட்டுரைகளின் வாயிலாக தமிழுக்கு அணி செய்கிறார்கள் என்றார்.
திறனாய்வுகள் சரியான முறையில் நடக்கும் பொழுது அடுத்தடுத்த படைப்புகளில்
படைப்பாளர் தன் எழுத்தில் மாற்றம் செய்வார். அவருடைய கட்டுரையில் மார்க்சீயத்
திறனாய்வு, கோட்பாடுகளின் திறனாய்வு, தத்துவ நோக்கிலான திறனாய்வுகளை அதன் அவசியம்
குறித்து எழுதியிருந்தார். நீண்ட முக்கியமான கட்டுரையாக அமைந்தது. இறுதியாக
உரையாற்றிய எச்.பீர் முகமது பேசுகையில் ஞானி அவர்களின் எழுத்தியக்கம் திறனாய்வு
அவர் நடத்திய இதழ்கள் வெளியிட்ட படைப்புகள் குறித்துப் பேசினார்.
மார்க்சிய திறனாய்வில்
கா.சிவத்தம்பி, அ.மார்க்ஸ்,எஸ்.வி.ராஜதுரை, எஸ்.என்.நாகராசன் போன்றவருக்கும் இணையாக
சில சமயங்களில் அவர்களுடைய சிந்தனைகளுக்கும் மேலாக
எழுதியிருக்கிறார்.வானம்பாடிகளில் துவங்கிய அவருடைய இலக்கியப்பணி தொய்வின்றி
வளர்ந்து வந்திருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டில் ஒரு கருத்தரங்கில் ஞானியைச் சந்தித்துப்
பேசிய போது என் சிந்தனைகளைப் பாராட்டி என் வயதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டார். பிறகு
நான் அவருடன் தொலைபேசியில் உரையாடுவதுண்டு. ஏற்கெனவே என்னுடைய நூல்களா குர்திஷ் இலக்கியம் மற்றும் கீழைச்
சிந்தனையாளர்கள் வரிசை குறித்து ஞானி அவர்கள் உரையாற்றியது மறக்க முடியாத ஒன்று. அவருக்கு
அந்த நூல் மிகவும் பிடித்திருந்தது. நம் சமூகத்தில் அறிவுலகம் அதுவரையிலும்
மேற்கத்திய சிந்தனையாளர்களையே ஐரோப்பிய இலக்கியங்களையே போற்றிக்கொண்டிருந்தது.
இந்த நூல்தான் கீழைத்தேய சிந்தனையாளர்கள் அளித்த கொடையை நினைவுபடுத்தும் விதமாக
இருந்தது. எட்வர் சயீத் போன்றவர்களின் பங்கு அளப்பரியது. தற்காலச் சூழலில்
எழுத்தாளர்கள் கீழைத்தேய மரபையும் பின்பற்ற வேண்டும். மீண்டும் நாம அடிமைச் சமூக
சிந்தனை மரபுகளைப் பின்பற்றுவது போன்ற எழுத்துகள் வருகிறது. இது பற்றிய
உரையாடல்களை தற்பொழுது எழுதுகிற படைப்பாளர்களிடம் விவாதத்தை வைத்தபோது அவர்களிடம்
பதிலில்லை. ஞானி அவர்கள் தத்துவம் சார்நத கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறார். எஸ்.
என்.நாகராசன் போன்றவரகளுடன் இணைந்து பல முயற்சிகளைச் செய்திருக்கிறார். அவருடைய
நிகழ்,பரிமாணம்,தமிழ்நேயம், புதிய தலைமுறை போன்ற இதழ்களின் வாயிலாக அவர் செய்த
பணிகள் பதிப்புகள் மிகவும் முக்கியமானவை. நவீன சிந்தனை மரபு சாராமல் அதே சமயம்
அடிமைச் சமூகமாகவே மாறிக் கொண்டிருக்கிற நம் சமூகத்திற்கு விரிவான திறனாய்வு
முறைகளும் கோட்பாடுகளும் அவசியம். இப்பொழுது அது போன்ற விமர்சகர்களும் இல்லை.
விமர்சனமும் செய்வதுமில்லை. அவையாவும் ஒரு மாதிரியாகவே சென்றுகொண்டிருக்கிறது.
ஞானி தன்வாழ்நாளில் தான் வாசித்த படைப்புகள் குறித்த பதிவுகளையும்
விமர்சனங்களையும் எழுதிவிடுகிறவராக இருந்திருக்கிறார். அவர் கொடுத்த உழைப்பு
என்றென்றும் தமிழ்ச்சூழலில் போற்றப்படுவதாக உள்ளது.
சுப்ரபாரதி மணியன் தனது
கட்டுரை வாசித்தார். சூழலியல் சார்ந்த கட்டுரையாகவும் இருந்தது. மாறிவருகிற
உலகத்தின் தேவைகளுக்கு ஏற்ப படைப்பாளர்களும் படைப்புகளும் இருக்க வேண்டும். அவை
போதாமையுடன்தான் உள்ளது என்றார். எழுத வேண்டிய விவாதிக்க வேண்டிய விசயங்கள் படைப்புகள்
நிறைய உள்ளது. திறனாய்வுகளும் அதுபோன்றே விரிவாக்கப்படவேண்டியிருக்கிறது. ஒவ்வொரு
படைப்புகளும் சார்புத்தன்மையுடன் பார்க்கப்படுகிறவையாகவும் உள்ளது. தொடர்ச்சியான
படைப்பியக்கம் இந்தச் சூழலை மாற்றுவதற்கு தூண்டுகோலாக அமையும். நாம் அதில்
தொடர்ந்து பயணிக்கவேண்டிய கட்டாயத்திலும் உள்ளோம் என்றார்.
தமிழ்ப் பேராயம் சார்பில் ஐயா கோவை ஞானி அவர்களுக்கு “பரிதிமாற்கலைஞர் விருது” வழங்கப்பட்டிருக்கிறது
என்றும் செய்தியை நண்பர் கவிஞர் பா.தியாகு அலைபேசியில் தெரிவித்தபோது மகிழ்வை மற்ற
நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டோம். சில நிமிடங்களுக்குள்ளாக வாணியம் பாடியிலிருந்து
எச்.பீர் முகமதும் தொடர்பில் வந்து பேசினார். செய்திகளும் வாழ்த்துகளுமாக ஐயா ஞானி
அவர்களுக்கு குவியத்துவங்குகிறது. அவர் மிகப்பெரிய ஆலமரம். சொல்வதும் பேசுவதும்
இயங்குவதுமாக சிந்தை முழுக்கவும் தமிழ்ச்சமூகம் குறித்தும் படைப்பியலக்கியம்
திறனாய்வு இதழியல் குறித்தும் யோசித்துக் கொண்டேயிருப்பவர். எழுதுகிறவர்.
தினசரிவாழ்வின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனிப்பவர். அரசியல் பொருளாதாரம், புதிய
புதிய படைப்புகள் இதழ்கள், தற்கால சமூகம் பற்றியும் தொடர்ந்து தனது கருத்துகளையும்
விமர்சனங்களையும் முன்வைப்பவராகவும் இருக்கிறார்.
அவருக்கு அளிக்கப்பட்ட விருதுக்காக அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப்
பரிமாறிக் கொள்வதற்காக நானும் இளவேனிலும் சந்தித்த போது மிகவும் மகிழ்வாக
இருந்தார். தனக்கு விருதுகள் பாராட்டுகள் எதிலும் நம்பிக்கையில்லாவிடினும்
பரிதிமாற்கலைஞர் பெயரில் தனக்கு விருது வழங்கப்படுவதில் மகிழ்ச்சிதான் என்றார். பிற்பாடு
தன் உடல் நலக்குறைவை பொருட்படுத்தாமல் வா.செ.குழந்தைசாமியின் நூல்
வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டார். விழாவின் இறுதிவரையிருந்து நிகழ்வுகளைக்
கவனித்தார். விழாவிற்கு வந்திருந்தவர்கள் ஞானியின் வருகையை அறிந்து அவரிடம் நலம்
விசாரித்தபடியே இலக்கியம் வரலாறு சமூகம் குறித்த தனது மதிப்பீடுகளை முன்வைத்தார்.
அவருக்குப் பாராட்டுவிழாவை நண்பர்கள் ஏற்பாடு செய்ய இருக்கிறோம் என்ற பொழுது அவர்
மறுத்தார். எனினும் நாங்களும் நண்பர்களும் கேட்டுக் கொண்ட பொழுது
பாராட்டுவிழாவிற்குப் பதிலாக சிறப்புக் கருத்தரங்காக நடத்தலாம். தற்காலப்
படைப்பிலக்கியம், திறனாய்வாளர்களின் பணிகள் குறித்த அரங்காக இருக்கட்டும் என்றார்.
நண்பர்களிடமிருந்து கட்டுரைகள் பெற்று வாசித்து அதன் மீதாக விருது பெற்ற
எங்கள் உரையும் இடம்பெறட்டும். புதிய ஆர்வமுள்ள பலருக்கும் குறிப்பாகக்
கல்லூரிகளில் பயிலும் மாணவர் மாணவியர் பேராசிரியர் மட்டத்திலிருந்து கட்டுரைகள்
பெறுங்கள் என்றார். நிகழ்வுகள் ஏற்பாடாகியது.
நிகழ்விற்கான அழைப்பிதழ்களை
சிறப்பாக அச்சிட்டுத்தந்தார் மயுரா ரத்தினசாமி. பணிகள் தொய்வின்றி நடந்தது.
சென்ற வாரம் இதே பள்ளியில் கவிஞர் புவியரசு அவர்களின் மொழிபெயர்ப்பு நூலான
“கரமசோவ் சகோதரர்கள்“ குறித்த அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றிருந்த நேரம்.
மறுவாரமான இன்றும் விழா. இப்படியாக கோவை மாநகரில் தொடர்ச்சியாகவும்
இடைவிடாலும் இலக்கிய நிகழ்வுகள் நடநது கொண்டிருப்பது மகிழ்ச்சியாகவும்
உத்வேகமாகவும்இருக்கிறது. இலக்கிய அமைப்புகளையும் இலக்கிய நிகழ்ச்சிகளையும்
பெருமளவிற்கு முடுக்கி விட்ட காரியத்தைச் செய்ததில் இலக்கியச் சந்திப்பு
நிகழ்வுகளுக்குப் பெரும் பங்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழ்
நிலத்தின் பல்வேறு திசைகளிலிருந்து பெறப்படும் செய்திகளிலிருந்து ஒரு மாதம் கூட
இடைவெளி விடாமல் சற்றும் தரம் குறையாமல் மென்மேலும் இலக்கிய நிகழ்வுகளுக்கு
பங்கேற்பாளர்களை அதிகப்படுத்தியும் நூல்கள் அறிமுகப்படுத்தியதிலும் கோவை இலக்கியச்
சந்திப்பு முந்தைய எல்லாப்பதிவுகளையும் விடவும் நேர்த்தியாக நடத்தி
வந்திருக்கிறது. இந்தச் சந்திப்புகளின் தாக்கமாகவே பல் வேறு நகர்களில் பல்வேறு
கல்லூரிகளில் நிகழ்வுகளை இலக்கிய செயல்பாட்டாளர்கள் முடுக்கிவிட்டிருக்கிறார்கள்
என்றும் சொல்லவேண்டும். இலக்கிய வளர்ச்சிக்குத்தேவையாகவும் இருக்கிறது.
குழுசார்பு, தன் முனைப்பு, பதிப்பகக்குழு விரோதம் புறக்கணிப்பு. இது போன்ற மறைமுக
மிரட்டல்களைத் தாண்டி சுயேட்சையான இலக்கியச் சந்திப்புகளாக நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. கோவை மாநகரில் நடைபெறுகிற மிக பிரமாண்டமான ஏராளமான பொருட்செலவில்
நடத்தப்படுகிற கலை இலக்கிய நிகழ்வுகளின் தரத்திற்கும் மேலாகவே நிகழ்வுகளைத் தந்து
நடத்தித் தந்து கொண்டிருக்கிறார்கள் பங்கேற்பவர்களும் பங்கேற்பாளர்களும்.
ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்கிற
படைப்பாளர்கள் எழுத்தாளர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் பாரம்பரியம் மிக்க இலக்கிய
அமைப்புகள் தங்களால் இயன்ற உதவிகளையும் ஆதரவுகளையும் நல்கியதால் ஏற்பட்ட மாறுதல்
என்று சொல்வதில் தயக்கம் இல்லை. ஊர் கூடித் தேர் இழுத்தல் போன்றதுதான். சமூக
வளர்ச்சிக்கும் தேச வளர்ச்சிக்கும் சாதி மத இனவேறுபாடுகளின்றி உழைப்பது போன்றுதான்
தமிழ்ப் பண்பாடும் கலாச்சாரமும் படைப்பிலக்கியம் நவீன பின் நவீனப் படைப்பிலக்கிய
வளர்ச்சிக்கு எந்தப் பிரதிபலனுமின்றி பாடுபடுகிறப் படைப்பாளர்களை கோவை
கொண்டிருக்கிறது. சக படைப்பாளர்களையும் வரவேற்கிறது என்றும் சொல்லவேண்டும்.
நிகழ்வில் பங்கு கொண்டு சிறப்பித்தவர்கள் ஆட்டணத்தி, மருத்துவர் கோவி,
மு.திருக்குமரன், கிருஷ்ணமூர்த்தி,ஜே.மஞ்சுளாதேவி, சி.ஆர்.
இரவிந்திரன்,க.வை.பழனிச்சாமி, நாசிர் அலி,வேனில் கிருஷ்ணமூர்த்தி,
பொ.செந்திலரசு,கனகராஜன். இரா.புபாலன், க.சீ சௌந்தரராஜன், ஜெ.வீர நாதன்,
சு.இராஜகோபாலன்,பழமன் சு.பழனிச்சாமி, பொன் சந்திரன், ச.க..சோம சுந்தரம்.
சோ.இரவீந்திரன். கே.பெருமாள், பா.சிவக்குமார்,செந்தமிழ்த் தேனீ, வே.சுகுமாரன்,
நறுமுகை தேவி,இளங்கோ கிருஷ்ணன், என்.கார்த்திகேயன், பொ. பிரகாஷ் இரா நளினி,
அன்புசிவா கா. ஜெயராமன். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
தலைமையேற்று நடத்திய பாவலர் இரணியன் நனறி கூறினார். நிகழ்விற்கான ஒருங்கிணப்பை
முனைவர் கு.முத்துக்குமார் பொன் இளவேனில் சோ.இரவீந்திரன். அக்னி சிவகுமார்,
மேற்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக