புதன், 20 பிப்ரவரி, 2013

சி.மோகன் இரண்டாவது கவிதை நூல் ”எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை” குறித்து


நண்பர்களின் அறையும் சி.மோகனின் குடிலும்.

 

எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை

சி.மோகன் இரண்டாவது கவிதை நூல் மற்றும் அவருடைய 12 வது நூல் குறித்து..

 

இளஞ்சேரல்

 

காப்பிய காலம் முதலாக நவீன செவ்வியல் பிரதிகள் வழியாகவும் இணைய நுலறிதல் வாயிலாகவும் உடலியற் காமத்தைக் கொண்டாடும் பேரிலக்கிய வடிவங்களையும் புராதன தோற் செவ்வியல் வடிவங்களைக் கூட நாம் சிற்றிலக்கியம் என்று தான் பேசுவதுண்டு.

      பிற்பாடு அச்சு சமய உயர்வு காலத்தின் உரை நடைகளிலும் பத்திகளிலும் காமத்தின் உயர்வுகளை எழுதப்பட்டது. ஊருக்கு நல்லது என்று உயர்த்தி உயர்த்திக் கட்டப்பட்ட கோபுரங்களின் பிரகாரங்களிலும் தூண்களிலும் சுவர்களிலும் காமத்தின் அவசியம் அழகு நுட்பம் பற்றியெல்லாம் தொடர்ச்சியாக மனிதன் தன் சமூகத்திற்குக் கற்றுக் கொடுத்தான். உயர்சாதி மற்றும் உயர் குடி அரசியல் நிலவுடைமைதார்களுக்குத் தான் காமம் அவசியம் என்று நிறுவிய வழக்காறுகளையும் மனிதன் இந்தக் காரியங்கள் மூலமாக காமத்தை விரிவாகப் பரவச் செய்தான். இலக்கியத்தினூடாகவும் எழுதவும் மறைமுகமாக இருந்த விசயங்களை தற்காலத்தின் ஆளுமைகளான கரிச்சான் குஞ்சுவும், தி.ஜானகி ராமனும், நாட்டார் வழக்காற்றியலில் கி.ராஜநாரா யணன் காமத்தின் நுட்பங்களைப் பற்றிப் பேசியிருக் கிறார்கள்.

         நவீன படைப்புகளில் காமத்தைப் பற்றிப் பேசுவதோ எழுதுவதோ கூட புனைவிலக்கியமாகத் தான் இணைத்துக் கொள்கிறார்கள். சி.மோகன் கவிதைத்  தொகுப்பு கற் சிற்பங்கள் பேசும் வார்த்தை களையும் மௌனங்களையும் மொழி பெயர்ப்பது போன்ற தொனியில் எழுதியி ருக்கிறார். உலகியற் பொழுதுகளிலும் காலத்தின் நிலையற்ற பறத்தலையும் பேசும் தத்ருபமான கவிதைகளை இவரிடம் நான் எதிர்பார்க் கவில்லை. தன்னுடைய அருபது வயதைக் கடந்த ஒரு ஆத்மாவின் உடல் வெப்பம் பற்றிய கவிதை ஆறு கண்டங்களின் உயிரினங்களின் உயிர்விருத்தி பற்றிய காப்பியமாக இருக்கிறது.

காம வண்ணங்கள்

பேச்சில் படர் பச்சை

எழுத்தில் சுடர் மஞ்சள்

காட்சியில் ஒளிர் நீலம்

படுக்கையில் கனல் சிவப்பு

அங்கீகார உறவில் வெள்ளை

மறுக்கப்பட்ட உறவில் கருப்பு

வகை வகையாய்

வகுக்கிறது சமூகம்

வண்ண வண்ணமாய்

வாழ்கிறது காமம்..

 

       மலிரினும் மெல்லியது காமம் என உணர்ந்தும் வாசித்துமிருக்கிறேன். அது ஒரு வண்ணம் என்கிற மோகன் கவிதை காமத்தின் அழியாப் புனிதத்தை அவர் கட்டமைக்கிறார். இயற்கையில் அவர் ஓவியராகவும் சிற்ப வடிப்பு அறிந்தவராகவும் இருந்ததால் தான் இக்கவிதை சாத்தியமாயிருக்கிறது எனலாம். காளமேகப்புலவர் இயற்றிய பல கொச்சையான ஆபாசமான பாடல்களை விடவும் இந்தக் கவிதையின் சித்திரம் உவப்பானதாகிறது. உடலின் இயல் வெப்பம் பற்றி எழுதாத கவியும் சொல்லும் உண்டோ. அறம் பொருள் இன்பம் எனப் பேசும் கூற்றுகளில் முக்கியப் படுத்துவது ஒரு நிலைக்காமம் குறித்த சொலவடைகளே. கம்பனிடம் சில உயர்வு நவிற்சியான சித்திரங்களை நாம் வாசித்திருக்கிறோம்.

 

ஏற்ற வளை வரி சிலையோன்

இயம்பா முன் இகல் அரக்கி

சேற்ற வளை தன் கணவன் அருகு

இருப்ப சினம் திருகி

சூல் தவளை நீர் உழக்கு துறை

கெழுநீர் வள நாட!

மாற்றவளைக் கண்டக்கால்

அழலாதோ மனம் என்றாள்!“

       ஒர். நீர்த்துறை.அங்கே ஒரு ஆண் தவளை. கருமுற்றிய நிலையில் ஒரு பெண் தவளையும் இருக்கிறது. இதைப் பார்த்த பெண் தவளைக்கு கோபம்.தனக்குப் போட்டியாக கணவனுடன் சங்கு இணைய வந்திருப்பதாக நினைத்துக் கொண்டு அந்த நீர்த்துறையைக் கலக்குகிறது. கரு முற்றிய  நிலை என்பதால் ஆண் தவளையுடன் கூட முடியாத ஆற்றாமை பெண் தவளைக்கு? இதை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சங்கு சேர்ந்து விட்டால்?சங்கு தன் இனம் சார்ந்ததல்ல என்பது தவளைக்குத் தெரியும் இருந்தாலும்  தன் கணவன் அருகில் சங்கு இருப்பதைக் காண பெண் தவளைக்குப் பொறுக்க இயலவில்லையாம். அதனால் நீர்த்துறையில் கலகம் செய்து கலக்குகிறதாம். இது போன்ற சம்பவங்கள் நிகழக் கூடிய நாட்டைச் சேர்ந்தவனே இராமா ஆற்றலறிவு இல்லாத உயிர்களுக்கே இத்தைகய இயல்பு இருக்கிறது என்பது உன் தம்பிக்குத் தெரியாதா என்று சூர்ப்பனகை கேட்பதாக வரும் இக்கவிதையை சி.மோகன் காமம் கவிதை நினைவுட்டுகிறது.

         இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில்

காமக்கூட்டம்..,       களவி1

      எனத்தொல்காப்பியர் களவியல் முதல் சூத்திரமாகச் முன்வைக்கிறார்.நவீன கவிதைகளின் வாயிலாக மட்டுமின்றி உலகியப் போக்கில் காமத்தினுடைய இயல்புகள் பற்றிய புதினங்களும் காட்சிகளும் மலினப் படுத்தப்பட்டுவிட்டதின் விளைவே இங்கணம் நாட்டில் சீரழிந்து வரும் பாலியல் கொடுமைகளும் வழக்குகளையும் நாம் கண்டும் காணாததமுமாக வாழ்கிறோம். அரசியல் திறம் எப்படித் தனித்த ஒரு வகை அவை சில மேட்டுக்குடிகளின் இன்ப நுகரலுக்கான வழிவகை என சில குடிமக்கள் கருதி அவ்விடத்து நுழையாமல் இருக்கிறதாலேயே அம் மேட்டுக்குடிகள் அரசியலை துவம்சம் செய்து அரசுப்பரிபாலனைகளை கட்டளைகளை யெல்லாம் தங்கள் விருப்பத்திற்கு இயற்றியும் சட்ட நிருமங்களையும் செய்து வைத்து விட்டனர். தற்போது ஒரு குடிமகன் எளிதி்ல் ஒரு காரியம் ஈட்ட முடியாது. அவனை அவன் நிருவிக்கொள்வதற்கு குறைந்த பட்சம் ஒரு குறு நிலப் போரோ சிலுவைப்போரோ செய்துதான் ஆகவேண்டும்.

       இது போன்றே காமத்தையும் சமூகத்தின் உளப்பாங்கிலிருந்து விடுவித்து அவை கூட மேட்டு சமூகத்தின் இன்பத்திற்கானது.அவை பாட்டாளி வர்க்கத்தின் இன்புறைக்கானது அல்ல.உன் பணி பாடுபடுவது பின் குடிப்பதும் வீழ்ந்து சாவதும் தான் உனக்குப் புணர்வதற்கான வாய்ப்பு இல்லை.ஆக உன் குடி யுயர குடி..உன் குடிகளை பெண்டாளை நாம் கவனித்துக் கொள்வோம் என்பதான திட்டமே தான் இம்மதுக்கடைகளின் ஆதிக்கம்.

       சி.மோகன் கொண்டாடும் விதம் அற்புதமானது. அவரைப் போலவே கம்பனும் பாடியதும் நினைவுக்கு வருகிறது.

 

நேர்இறை முன்கைபற்றிச்

சூர் அறமகளிரொடு உற்றசூளே..

“இம்மை மாறி மறுமை எய்தினும்

நீயா கியர் எங்கணவனை

யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே...

 

       உச்சகட்ட உச்சாடனம் எனும் தலைப்பிலான கவிதையில் சி.மோகனின் அசாத்தியமான மொழிப் பிரவாகமும் மையலின் ஆதிபரவசம் கொள்ளும் உச்சம் பதிந்த சொற்கள்.

எக்களிப்பின் உச்சகட்டத்தில்

உலகமீட்சிக்கான உச்சாடனமாக

தன் பரவசத்தை

ஓங்காரமாய் அறிவித்துவிட்டு

பிறிதோர் கனவுப் பிரதேசத்தின்

அழப்பினை ஏற்று

குதிரை மீது தாவியேறி

அதைக் கட்டியணைத்துப் பறக்கிறாள்

அலாதியாய் அவன்

 

என் கனவுப் பிரதேசத்தில்

திளைத்தும் களைத்தும்

மறையும் குளம்பொலியை

ஏக்கத்துடன் கேட்டபடியே

அயர்ந்திருக்கிறேன் நான்-   பக்-63

 

          2007 ல் வெளியான தண்ணீர் சிற்பம்கவிதை நூலுக்கு மிகச்சிறந்த வரவேற்பும் தமிழ்க் கவிதைக்கு முக்கியமான பங்களிப்பையும் செய்திருந்த சி.மோகன் தம்முடைய இரண்டாவது தொகுப்பை இப்போது தான் வெளியிடுகிறார். சக படைப்பாளர்கள் மற்றும் கவிதை விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்கள் கிடைத்திருந்தும் தமது கவிதை நூலை சற்றேறக்குறைய ஐந்தாண்டுகள் இடைவெளியெடுத்துக் கொண்டு வெளியிட்டிருப்பது

அவர் கவிதையின் மீது வைத்துள்ள ஆழ்ந்த ஈடுபாடு இத் தொகுப்பின் கவிதைகளினூடே நிகழ்த்திக் கொள்ளும் பயணத்தின் போது அறிந்து கொள்ள முடிகிறது.அருபது வயதைக் கடந்த மனிதனின் எளிய உணர்வுகள் குழந்தமைமிக்கவை யாகவே இருக்கும் என அறிந்திருக்கிறோம். ஒவ் வொரு வயதின் பதின்பருவங்களிலும் மனித எண்ணங்களின் குணாதிசயங்கள் நிலத்திற்கு நிலம் மனதிற்கு மனம் மாறுபடுகின்றன. எனினும் கவிஞனின் குணாதிசயம் குழந்தைமையிலிருந்து மேலும் குழந்தைமைக்குப் போகும் என்பதை வாழ்வின் ஈடு இழப்புகளை சந்தித்து முக்கால் தலைமுறையைக் கடக்கும் கவிஞனின் வாழ்வில் பார்க்கலாம். செழுமை மிக்க வளம் மிக்க மண் தானே செழித்தோங்கும்.அதற்கு யார் தயவும் தேவையில்லை. நாம் போய் அதற்கு உதவுகிறேன் பேர்வழி என்று எதுவும் செய்யாமல் இருந்தால் சரி.

       ஒரு வகையில் மண்வளம் மாதிரிதான் ஒரு வாழ்ந்து கெடுகிற குடும்பத்தின் கலாச்சார வளமும். சில தாத்பரியமிக்க சொற்களை வைத்திருக்கும் கவிஞனின் மொழி வளம் அவனைத் தொடர்ந்து வரும் கவி சந்ததிகளுக்கும் கவிச்சக்கரவர்த்திகளுக்குமாக ஊற்றையும் பாலையும் வார்த்துத் தருவதாகி வருகிறது. சைவ வைணவ இலக்கியங்கள், சித்தர் பாடல்கள்,சிவனடியார்கள், தமிழ் மருத்துவக்குறிப்புப்பாடல்கள், சோதிடக் குறிப்புகள், வானியல் சாசுத்தரக் குறிப்புகளில் எல்லாவற்றிலும் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது யாவும் உடலுய்வதும் எல்லா வற்றிலும்  தம்மை அற்றுக் கொண்டு போய் ஏதோ ஒரு கூட்டின் கர்ப்பக் கிரகத்திற்குள் வைத்துக் கொள்ள விழைவதுதான். எளிய பற்றின் மீது எவ்வித பற்றும் இல்லா திருப்பதுதான் இறை நம்பிக் கைக்கும் முக்கியமாகிறது. மோகன் ஏற்கெனவே சிற்பங்கள் பற்றி துல்லியமாக அறிந்த கவிஞன் என்பதால் என்னவோ அவருடைய கவிதைகளில் சிற்பங்கள் பேசுகிறது. நம்மால் பேசுகிற சிற்பங்களைத் தவிர்த்தோ நாம் அழிந்தாலும் அழியாமல் பல நூற்றாண்டு களுக்கு வாழவிருக்கிற சிற்பங்களை நாம் பார்த்து வருகிறோம். அவைகள் ஒவ்வொன்றும் ஊரும் உலகமும் சயனத்தில் மிதக்கும் போது சர்வ நிச்சயமாக உறவாடியும் உரையாடியும் கொள்ளும் என்பதை ஒரு சிற்பி நிச்சயம் அறிவான்.அதுவும் கவிஞனுக்கு அவர்கள் உரையாடும் மொழியையும் அறிவான்.மோகன் சிற்பம் உயிர்ப்பவர். தண்ணீர் சிற்பம் வடித்தவர்.

 

காலாதீதமாய் புனையப்பட்ட

என் வேட்கையின் உருவென

பொலிவுற்றிருந்தது சிற்பம்

 

குருதியோடி நீர் விலக

உயிர்த்தது சிற்பம்

உயிர்ப்புற்றது வேட்கையின் மொழி

உயிர்த்தெழுந்தது மொழியின் வேட்கை

 

தனிமையின் மாயப்பிரதேசத்தில்

என் வேட்கையின் கோவில் நிர்மாணிக்கப்பட்டு

வீற்றிருக்கிறது சிற்பம்

மொழியின் குருதியால் வழிபட்டு

வியாபித்திருக்கிறேன் நான்-      பக்-45

 

        கவிஞனுக்கும் மாயத்திற்குமான உறவு இறுக்கமானது. அது போன்றே கடவுளுடான உறவும் அப்படியே. இன்மையின் மீது எப்போதும் காலமும் துரோகமும் பரம்பரையாக வரும் நம்பிக்கையின்மை யும் இப்படியாக பின் ஒட்டாக வரும் காமத்தின் ஊடுபாவும் எழுத்தாக மாறுகிறது. பாறையில் வெட்டி வெட்டி கீறிக் கீறி எழுதிய சித்திரங்களிலும் எங்காவது கொஞ்சமாவது ஓரத்தில் காமத்தின் ஈரம் நிச்சயம் இருக்கும். அரவிந்தர் தன் இளமைப் பருவத்தில் பாலபருவத்தில் காமம் பற்றி எழுதியது நினைவுக்கு வருகிறது.

Kamadeva

What is the heart of the valleys and hid by the roses

The sweet love lies

Has he wings to rise to his heavens or in the closes

Lives and dies?

 

On the peaks of the radiant mountains of we should meet him

        Proud and free

Will he not frown on the valleys? Would it befit him

        Chained to be?

 

Will you then spark of the one as a slave and a wanton

             The other too bare?

But god is the only slave and the only monarch

              We declare

 

It is god who is love and a boy and slave for our passion

             He was made to serve;

It is god who is free and proud and the limitless tyrant

             Our souls deserve.

    தொகுப்பில் மற்ற கவிதைகளின் நறுமணம் களைத்துக் கரையொதுங்கிய உடலின் அயற்சி.

வாழ்வினூடாக இன்பமொப்பியதால் சிதைவுறு

கிற இறந்த காலத்தின் வாய்மொழியாகவும் பதிவாகியிருக்கிறது.பெருநகரங்களின் தார்ச் சாலைகளை நாம் பற்றிக்கொள்வதும் அதனூடாக நம்மை உட்செலுத்தி இறுக்கங்

களில் சமைந்து பின் நம்மை நாமே தின்று அருந்தி உயிர்வாழக் கடவாயிருப்பதை மோகன் தன் அபாரமான கவித்திறத்தில் பேசுகிறார்.

பிரமிளின் பறவைகள் ஞாபகத்தில் வந்தாலும் இவருடைய கவிதையில் பறவையின் றெக்கை விசிர்ப்புக் காதில் விழுகிறது. நீங்கள் ஒரு முறை வாசியுங்கள்..

 

பெருநகரத் தார்ச்சாலையில்

சட்டென வீழ்ந்து

சல்லென நீந்தி

நீண்டதோர் கட்டிடத்தில் மோதி

சிறு விபத்துமின்றி மறைந்தது

ஒரு பறவையின் நிழல்   –பக்- 94

          கொத்து கொத்தாக உறவின் அடிப்படையின்றி உரசி நகர்ந்து தன் உயிரின் பிடியை இறுகப்பற்றியபடியே முகச்சலனமின்றி தன் கூடு நோக்கிப் போகிற பறக்கிற மனிதர்கள் ஞாபகம் வருகிறார்கள். கவிதையினுள் பாறைச் சிற்பமாக உருவாகும் இடமே நெருக்கமும் அதீத நெருக்கடியும்தான்.

        

அப்படியாகவே மேலும் ஒரு கவிதை

 

காற்றில் விழுந்த இலை

               சருகானது

குளத்தில் விழுந்த இலை

                 மீனானது

காற்றில் மிதந்த இலை

             பறவையானது-பக்-94

          காற்றில் மிதக்கும் வாழ்வை மனிதர்கள் அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. எனினும் மிதப்பதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் தருணங்கள் மாய வேட்டை என்றே சொல்லலாம். கவிஞனுக்கு தோன்றும் கற்பனையின் வெளியை அதிருபமாக வாசகன் கண்டடைய முயலும் போது கிடைப்பதென்னவோ ஏமாற்றம் தான். பல கவிதைகளில் சுயத்தின் அழகு மிளிர்வதை உணர முடியும். பல் துறைகளில் அனுபவமிக்க கலைஞனால் ரசிக்கப்படும் சித்திரங்களும் ஒப்பனைகளும் சொற்களாகும் போது அவை தருகிற ரசனையின்பமே தனி.சி.மோகன் தன் கவிதைகள் கொண்டு சிற்பங்களை வடித்தபடி யே நகர்கிறார். அனுபவமும் வயதும் சொற்களுக்கு வலிமையும் தருபவை. அவருடைய கவிதையொன்றை வைத்தே இக் கட்டுரையை முடிக்க நினைக்கிறேன். சுமார்  எழுபதுக்கும் மேற்பட்ட கவிதைகளில் மூழ்கும் போது நமக்கு வாய்க்கும் ரசனை முழுவதும் சிற்பங்களையும் ஒவியங்களையும் தரிசிப்பதாக வே அமைந்திருப்பது தான் மோகனின் கவித்துவம்.

 

மாயக் கவித்துவம்

 

மலைப்பிரதேசக் கனவுக்குடிலொன்றின்

வெளியில் கிடக்கும் கட்டிலின் மீது

அமர்ந்திருக்கும் என்னை நோக்கி

மரத்தடியில் நிற்கும் நீ

ஒரு கவிதை சொல்கிறாய்

ஒவ்வொரு வரி முடிந்த பின்னும்

உன்னைப் பார்க்காது

மரம் பார்த்திருக்கும்

என் அலட்சியத்திற்காக ஆதங்கப்படுகிறாய்

 

நானோ

உன் ஒவ்வாரு வரிக்கும்

மரக்கிளையின் ஒரு கொப் (ம்)பு

அசைந்தாடும் அற்புதத்தை

அதிசயமாகய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

 

             நாமும் அவருடைய கவிதைகளின் அற்புதத்தை வாசித்துப் பார்த்து உணர்ந்து கொண்டிருக்கலாம்.

வெளியீடு

நற்றிணைப் பதிப்பகம்

ப.எண் 123 ஏ. பு.எண்.243 ஏ

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை

திருவல்லிக்கேணி

சென்னை-600005

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வியாழன், 14 பிப்ரவரி, 2013

கனக தூரிகாவின் நாவல் ”கால் புழுதி” குறித்து


கனக தூரிகாவின் இரண்டாவது நாவல் “கால் புழுதி

 

முன்னம் காலத்தில் கைகளாக

இருந்த கால்களின் புழுதி....

 

இளஞ்சேரல்

 

        காவல் கோட்டம் நாவல் வெளிவந்த போது தமிழ் நாவல்ச்சூழலி்ல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எஸ்.ராமகிருஷணனும் ஜெயமோகன் முக்கியமான விவாத்தைத் துவக்கி வைத்தார்கள். சு.வெங்கடேசனின் ஒன்பதாண்டுகளின் கடுமையான உழைப்பின் காரணமாக வெளிவந்த அந்த நாவல் வெறும் தகவல்கள் மற்றும் வரலாற்றுக்குறிப்புகள் தான் இடம்பெற்றுள்ளது. நாவலுக்குரிய எந்த அம்சமும் நுட்பமும் விவரணையும் இல்லை என்பது எஸ்.ரா வின் வாதம்.பிற்பாடு ஜெயமோகன் அந்த நாவல் முழுமையடைந்த நாவல் என்றார். காரணம் அந்த நாவலில் வரும் மனிதர்கள் உபயோகப்படுத்திய போர் உத்திகளும் அவர்களின் புலன் அறிதல் நுட்பமும் தாக்குவதற்கு முன்பாக அவர்கள் எடுத்துக் கொள்ளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை வெறும் தகவல்கள் என்று கொள்ள முடியாது என்றார். பிறகு வழக்கம் போல விவாத மேடை சார்பில் நாவலுக்கு தகவல்கள் அவசியமா அவசியமில்லையா. என்பது பல மூத்த தலைமுறையினர்களின் நாவலை வைத்து விமர்சனம் செய்யப்பட்டது. பிற்பாடு இருவரும் உறுதியாக தத்தம் கருத்துக்களில் இருந்தார்கள். பிற்பாடு சாகித்ய அகாடமி விருது சு.வெங்கடேசனுக்கு வழங்கப்பட்டதும் அமைதியான சூழல் ஏற்பட்டது. நடுவர் குழுவில் இருந்த தமிழ்நாடன்.சு.செல்லப்பன்,குறிஞ்சிவேலன் ஆகியோர் இந்த நாவலின் பிரமாண்டமான தன்மையைப்போற்றாமலோ கொண்டாடமலோ இருக்க முடியாது என்றார்கள்.

 அது போலவே இருபத்தியோரம் நூற்றாண்டின் தமிழ் நாவல்களின் பெரும்பரப்பில் பெண்கள் எழுதிய நாவல்கள் ஏற்படுத்திய பாதிப்பு மிக அதிகம். குறிப்பாக சிறுபான்மை சமூகத்திடமிருந்து வந்த நாவல்கள் மற்றும் தலித் படைப்பாளர்களின் நாவல்கள்,கடலோர மக்களின் வாழ்க்கை,அரசியல் சமூக மேம்பாட்டு நாவல்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் அதிகம்.

     மேற்கத்திய நாடுகளிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட அரிய கலை வடிவம் நாவல். மனித சமூக கலாச்சார வாழ்வின் ஒரு சாரத்தின் தொகுப்பு.நிலம் வாழ்வு உயிர் தேய்ந்த கழிந்த காலத்தின் ஈரமான அனுபவங்களைத் திரும்பத் திரும்ப நினைவுகளில் திளைத்துக் கொள்கிற அனுபவங்கள் ஒரு மெலடியான மெல்லிசைப் பாடல் ஒரு நாள் முழுக்க நம்மை கொஞ்சம் அசை போட வைக்கிறது எனில் பத்தாண்டுகளின் நாட்குறிப்புகள் எத்தனை உணர்வுகளைத்தரும் அதுவே நாவலாகிறது.

         நாவல் வடிவம் இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் தோன்றியது. கருத்து சுதந்திரம் நெருக்கடியில் இருந்த பொழுது மறைமுகமாக நாட்குறிப்புகள் எழுதப்பட்டது. பெருநாவல் வடிவத்தில் எழுதப்பட்ட அனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்புகள் பிற்பாடு பிரபஞ்னால் வானம் வசப்படும் என்னும் அற்புதமான நாவல் ஆனது.

       நம் வாழ்வில் தினசரியும் அனுபவிக்கும் இன்பங்களையும் துன்பங்களையும் அகர வரிசையோ ஆரோகணம் அவுரோகணமாகவோ எழுதி வைத்தால் அதுவே பிற்காலத்தின் நினைவோலையாகிறது. புதிய தொடர்பு,இழப்பு,வருவாய், கை நழுவிப் போனைவை எல்லாவற்றையும் பதிவாக்கி நாட்குறிப்புகளை எழுதி வந்தால் அவ்வெழுத்தின் வழியாக நாம் அனுபவித்த சித்திரங்களின் நீட்சியை  நீர்க்குமிழிகளை சில வருடங்கள் கழித்து வாசித்தால் கிடைக்கும் பேரனுபவமே நாவல் என்பதாகிறது. கழிந்த வாழ்வின் திரும்பப் பெற முடியாத நேரத்தையும் காலத்தையும் நம் எழுத்தின் மூலமாகவே

திரும்பவும் நினைத்துநினைத்து இன்புறமுடியும் வாய்ப்பை நாவல் தருகிறது. அந்த வகையில் கனக தூரிகாவின் நாவல் சில காட்சிகளை நம் முன் நிறுத்துகிறது.

        கசப்புகளை பதிவு செய்வதற்கு யாரும் விரும்பு வதில்லை. அந்த மறக்கக் கூடிய நினைவுகளை மறுபடியும் உரு போட்டுப் பார்ப்பதின் ஆக்கமே நாவலுமாகிறது. சுவராசியமான தமிழ் நாவல் வடிவங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வைத்தவர்களில் முக்கிய மானவர்களாக கல்கி, நா. பார்த்த சாரதி,அகிலன், ஜெயகாந்தன், ஏற்படுத்திய பாதிப்பு அதிகம். பெண் எழுத்தின் புரட்சியாக எழுதியவர்களில் ராஜம் கிருஷ்ணன்,திலகவதி, சிவகாமி, சல்மா ஆகியோர் ஒவ்வொரு காலகட்டத்தின் வளர்ச்சிப் போக்குகளின் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை அனுபவங்களை எழுதி னார்கள்.  நாவல் உருவாவதின் களங்கள் யாவும் நில மதிப்பீடுகளால் உயர்ந்த மனித உணர்வுகளும் அவை தத்தம் ரத்த உறவுகளுடன் சொத்துத் தகராறு நிலத்தகராறு செய்து கொள்ளும் சச்சரவுகளே நாவலாகப் பேசப்பட்டது.

அதன் இழப்புகளுமே அதிகமாக திரும்பத்திரும்ப வெகு சன பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்யப்பட்டது. நடுத்தரமக்கள் இப்படியாக சொத்து சேர்ப்பதில் தான் குறியாக இருப்பார்கள் என்று மனச் சித்திரத்தை உருவாக்கினார்கள்.

கனக தூரிகா இயல்பிலேயே அந்த மாயைகளிலிருந்து இரண்டு நாவல்களிலிருந்தும் விடுபட்டுள்ளார்.

      இந்தியாவின் கலாச்சார அரசியல் அதிகார நெருக்கடிகள் மூலமாக சரிந்த பல தலைமுறைக் குடும்பங்களின் சிதைவுகள் குறித்து நாவல்கள் பேசிய களத்தையே கனகாவும் தேர்ந்தெடுக்கிறார்.

       பொருள் தேடியும் பொருளை விளைவிக்கவும் சந்தைப் படுத்தவும் மனிதன் அலைந்தலைந்தான். கலை நுட்பமற்ற பொருள்கள் காலத்தால் இயல்பாகவே காலாவதியாகிப் போனதை கனக துரிகா குறிப்பிடுகிறார். மனிதன் தன் தேடலின் விதி கட்டளைப்படியாக புதிய புதிய கலாச்சாரங்களை சட்டதிட்டங்களை அவன் உருவாக்கினான். ஒன்றுக்கு ஒன்று நேரெதிர் என்னும் சார்பியல் கொள்கையின் படி மனிதனை இயக்கும் அறிவு வெளி அது போலவே புதிய அணுகுமுறையும் நெருக்கடிகளும் ரத்த சம்பத்துடன் ஏற்பட்டது அவனுக்கு.

         கனக தூரிகாவின் நாவலில் குண்டு வெடிப்பின் மையம் பற்றிய நாட் சித்திரங்கள்  வந்து போகிறது.

இந்திய மதசார்பின்மை மற்றும் சகிப்புதன்மை கலாச்சாரத்திற்கு ஊறு விளைந்ததோ அல்லது நல்லது விளைந்ததோ தெரியாது. பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு நிகழ்ந்த வன்முறைகள் சொல்லொணாத் துன்பங்களை ஏற்படுத்தியதை யாரும் மறக்க முடியாது. சிறுபான் மையினர் வாழ்வும் குடும்பச் சிதைவுகளும் 90 களுக்குப் பிறகு முக்கியமான தவிர்க்க முடியாத சம்பவங்கள். இந்தக் காலங்களில் தான் நாடும் உலகம் முழுவதும் குண்டு வெடிப்புகளும் நிகழ்ந்தது. தமிழகமும் கோவையும் அமைதி பூமி பூங்கா என்றெல்லாம் பேசியது காற்றில் கரைந்து இங்கும் நிகழ்ந்தது வன்முறை.

        துயரமான நடந்திருக்க வேண்டிய அவசியமே இல்லாத சம்பவங்களில் பாதிக்கப் பட்டவர்கள் அப்பாவிகள். அவர்களில் குழந்தைகள் பெண்கள் அதிகம். சாதாரண கூலி தொழிலாளர்கள். சம்பவங்களுக்குப் பிறகு இசுலாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் நிரந்தரப் பிரிவினை ஆனது. பணிகளிலிருந்தும் இணக்கமான உறவுகளிலிருந்து இரு மதத்தவர்களும் தம்மைத் தவிர்க்கத் துவங்கினார்கள்.

கோவையில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக இசுலாமியர்களின் வர்த்தகம் தடைபட்டது. கேரளத்து டனான வியாபாரம் விழுந்தது. இந்தப்பின்னணியில் தான் தமிழ்,மலையாளம்,கன்னடம், தெலுங்கு மொழிகளில் பெரும்பாலான படைப்புகள் மத நல்லிணக்கத்தை வலியுறு த்தி எழுதினார்கள். பாதிக்கப்பட்டவர்களின் சார்பிலும் ஆதிக்கவாதிகளின் எண்ணம் நிறைவேறாதவர்கள் சார்பிலும் எண்ணம் நிறைவேறியவர்கள் சார்பிலும் படைப்பிலக்கியம் வளர்ந்தது. கனக தூரிகாவும் தனது நாவலில் நினைவுட்டுகிறார்.

          100 சதவிகிதம் மத சார்பின்மையை வலியுறுத்தியும் சிறுபாண்மையினரின் கோபமும் தார்மீக அடிப்படையில் நியாயம்தான் என்றும் எழுதப்பட்டது.

         கனக தூரிகா அதே சம்பவத்தை வைத்து 15 வருடங்களுக்குப் பிறகு “கால் புழுதிநாவலை எழுதியிருக்கிறார். கீரை விற்கும் பாட்டிகளை நான் இப்போதும் தினமும் ஐந்தாறு பேரைச் சந்திக்கிறேன். ஆண்களும் விற்கிறார்கள். சமூகத்தின் இளப்பமான சொலவடை அது. கீரை விக்கத்தான் போகணும் என்பார்க்ள. தன் நிலைமையைச் சொல்லும் போது உபயோகிக்கும் சொலவடை அது. அந்தவ் வார்த்தையையே நாவலின் பின் களமாகத் தேர்வு செய்தது

அற்புதமான விசயம் எனக் குறிப்பிடத் தோன்றுகிறது.

  காலத்தின் மறக்க முடியாத பதிவுகள் ஊடாக வந்து போகிறது. ராஜா காலத்துக் கீரை. கண்ணிக்கானம் என்னும் வரிகட்டித்தான் விளைவிக்க வேண்டும். இன்று ஏழு ரூபாய்க்கு ஒரு கத்தை கிடைக்கிறது. அதில் பேரம் பேசாமல் வாங்க வேண்டும்.

        அபார்ட்மெண்ட்டில் வாழ்வு, நிறுவனங்களின் பணி சார்ந்த மக்கள் சந்திப்புகள், பயணங்கள்,உயர்வு பிரச்சனைகளும் சந்தித்து ஒரு பெண் உயரத்திற்குச் செல் வதோ அல்லது வாழ்வை வெற்றி கொள்வதோ சாதாரண மானது அல்ல. நாவலில் கீரை என்பதின் குறியீடு இவ்விடம் மனித வாழ்வின் ஏற்ற இறக்கத்தைப் பதிவு செய்கிற படிவமாக இருக்கிறது. வரி கட்டி விளைவித்த கீரை இங்கு தெருவெல்லாம் கூவி விற்கக் கிடைப்பது போலவே பல சுதந்திரங்களை நாம் பெற்றிருக்கிறோம்.

        சிறுமியின் தன் வாழ்வில் அதிசயித்துப் பார்க்கும் முதல் திருமண நிகழ்ச்சியின் சித்திரங்கள் அனுபவித்து எழுதப்பட்டிருக்கிறது. தன்னுடைய உறவுகளின் குணாதி சயங்கள், மனப் போராட்டங்கள் என்று ஒவ்வொரு அத்தி யாயங்களாக செல்லும் காட்சிகளில் மனிதர்களின் இயல்பான குணத்தை அப்படியே பதிவு செய்திருக்கிறார்.

        குண்டு வெடிப்பிற்குப் பிறகு தங்க நகைப் பட்டறைகளில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அந்த சமயத்தைப் பயண்படுத்தி நிகழ்ந்த கொள்ளை. ஆபரணங்கள் செய்வதற்கு பெறப்பட்ட தங்கத்தை குண்டு வெடிப்பு சம்பவத்தைப் பயண்படுத்திக் கொண்டு போய்விடுதல் போன்ற தவறுகளையும் அவர் குறிப்பிடாமல் இல்லை.

       தமிழ்க்குடும்பங்கள் ஒவ்வொன்றும் தேசம் தழுவிய பிரச்சனைகளில் சிக்குண்டு பிற்பாடு தாக்குப்பிடித்து எப்படியெல்லாம் மேல் நோக்கி எழுந்து வருகிறது என்பதை சிறு சிறு அத்தியாயங்கள் மூலமாகவும் சம்பவங்கள் மூலமாகவும் உணர்த்தியிருக்கிறார்.

         நாவலை விமர்சனமோ அறிமுகமோ செய்திடும்போது நாம் முழு அளவிலான கதையின் மையத்தையோ, அந்நாவலின் முக்கிய இடங்களையோ முழுவதும் தெரிவித்து விட முடியாது.

       நாவல்களில் இந்தியத் தன்மை வாய்ந்த நாவல்களை எழுதியவர்களாக அறியப்படுபவர்களும் அதுபோலவே அவர்களின் போற்றப் படும் படைப்புகளும் முக்கியமானவை. அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, பி.ஏ.கிருஷ்ணன், சா.கந்தசாமி,நாஞ்சில் நாடன்,சுப்ரபாரதி மணியன், போன்ற முக்கியமான ஆளுமைகளின் நாவல்கள் பதிவு செய்யும் இடங்களை கனக தூரிகாவின் நாவலும் செய்கிறது.

      சமீபத்தில் இளையதலைமுறை நாவலாசிரியர்கள் குறைவாகவே வெளிப்படுகிறார்கள். கனக தூரிகா அந்த இடத்தை தேர்வு செய்ததிற்குப் பாராட்டலாம்.2000 த்திற்குப் பிறகான தமிழ்நாவல்களின் வளர்ச்சி அபாரமான இடத்தை அடைந்திருக்கிறது. தமிழின் எல்லா திசைகளிலிருந்தும் நாவல்கள் வந்துவிட்டது. கடலோர மாவட்டங்களின் வாழ்வு பற்றிய நாவல்கள் வந்திருக்கிறது. வேளாண்குடி மக்கள் வாழ்வின் பின்னணியைப் பேசுகின்ற நாவல்கள் வந்திருக்கிறது. வரலாற்றின் அழுத்தங்களை பதிவு செய்யும் நாவல்கள். குறிப்பாக மிக கனமான தொகுப்புகளாகவும் நாவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

       கனக தூரிகாவின் இந்த நாவல் முக்கியமாக தங்க நகைப் பட்டறைகளின் பின்னணியையும் எழுபது ஆண்டுகால வாழ்வுப்பின்னணி கொண்ட குடும்பத்தின் ஏற்றத்தாழ்வுகளை அலசுகிற நாவலாகவும் இருக்கிறது.

தங்க நகைப் பட்டறைத்தொழில்கள் நசிவதற்கும் அதன் முக்கியத்துவங்கள் இழந்ததை முன்னிட்டு மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல ஏற்பாடுகளை செய்து வந்தது. அப்படியான திட்டம் ஒன்று தான் “கிளஸ்டர்“எனப்படும் கூட்டுறவு முறை. அதாவது ஏற்கெனவே நடைமுறையிலிருக்கும் கூட்டுறவு சங்க உற்பத்தி முறைமையை அடியொற்றும் அந்த அமைப்பின் மூலமாக வேலைவாய்ப்பு,பணி உறுதி,காப்பீடு.அவர்களின் குழந்தைகளின் கல்வி, குடியிருப்பு, சுகாதாரம்,சுலபமான வங்கிக் கடன் போன்றவற்றை உறுதி செய்யும் விதமாக பல்வேறு திட்டங்களை உள்ளடக்கியதுதான் கிளஸ்டர் முறை. இந்தத்திட்டத்தை ஏற்றுக் கொள்கிற அளவில் சில தங்க நகைப்பட்டறை தொழிலாளர் சங்கங்களும் ஏற்க முடியாது என்கிற அளவில் சில சங்கங்களும் செயல்படுவதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

        தங்க நகைப் பட்டறைத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் போது இது பற்றிய பேச்சு வார்த்தையை இரு சாரர்களும் துவக்குவார்கள் பிறகு அது ஒருமாதம் இருமாதம் போய்க் கொண்டிருக்கும்.பிறகு வேறொரு பெரிய பிரச்சனை வெடிக்கும். பிற்பாடு அரசியல் மாற்றம் வரும் கிளஸ்டர் திட்டத்தை அப்படியே குப்பைக் கூடையில்  போட்டு விட்டு போய்விடுவார்கள்.

       நாவலில் பாதிக்கப்பட்ட அல்லது கதாபாத்தி ரங்களின் இரண்டு குடும்பங்களைப் போன்ற குடும்பங்களை கோவையில் வாழ்ந்த யாரும் அறிவார்கள்.

எல்லாமே பரிச்சயமான மனிதர்களாக இருக்கிறார்கள்.

நான் அறிந்த குடும்பம் ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மூன்று குழந்தைகள் அதில் இரண்டு பெண்குழந்தைகள்.கடைசியாகப் பிறந்த குழந்தை தங்க விக்ரம் மாதிரியான ஆண்குழந்தை. எந்த நெருக்கடியும் தராத வாழ்வு.நல்ல நகைப் பொன் கலைஞன் அவர். ஒரு சமயம் தான் நகை செய்வதற்காக வாங்கி வைத்த நகை எப்படியோ தொலைந்து போய்விடுகிறது. அதிர்ச்சி தாள முடியவில்லை. மனமெல்லாம் அச்சம். பதற்றம். ஒரு வித அவமானம்.நாளை எப்படி நகை செய்யக் கொடுத்த கடை முதலாளியின் முகத்தில் விழிப்பது. எப்படி இந்த இழப்பை ஈடுகட்டுவது புரியவில்லை. வழக்கம் போலவே நகை செய்யப் பயண்படுத்தும் இரசாயனத்தை அருந்தி உயிர் விடுகிறான். அந்த மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு அவள் என்ன செய்வாள் பாவம் என்று அந்தப் பாவி நினைக்கவேயில்லை. அவனுக்கு முன்னால் இருந்த அச்சம். அந்தத் தொழிலுக்கே இருக்கும் அவசர நெருக்கடி.

       பிறகு ஆவதென்ன. அந்தப் பெண்மணி தன் குழந்தைகளுக்காக வாழ முடிவெடுக்கிறாள். அந்த அபலையின் நிலையறிந்த அப்பகுதி மக்கள் தைரியம் சொல்கிறார்கள். தன் இருபெண்களையும் மகனையும் வளர்க்கிறாள். அவ்விரு பெண்களுக்கும் காலத்திற்கு திருமணம் செய்து வைக்கிறாள். மகனுக்கு இப்போது பெண் பார்த்து வருகிறாள். வணிக வளாகத்தில் துப்புறவு பணியாளர் பணி. அப்பெண் நிலை கண்டு வழங்கப்பட்ட பணியை வைத்து தனது குழந்தைகளை ஓரளவிற்குப் படிக்க வைக்கிறாள். அப்பெண்ணுக்குக் கிடைத்த முதல் கூலியின் அளவு இருபது ருபாய். வாடகையில்லாத சிறு அறையை அப்பகுதி மக்கள் அவளுக்கு அளித்து உதவிட

இந்தப் பதினெட்டு ஆண்டுகளை ஒரு காகிதத்தைக் கிழித்து எறிவது போல எறிந்து வீசிவிட்டு இன்றும் தன் பேத்திகளை சீராட்டி விட்டு இப்பொழுதும் அதே துப்புறவு பணியை செய்கிறாள்.தற்போதைய சம்பளம் 150 ரூபாய். இந்த இருபது ருபாயில் துவங்கிய வாழ்வை 150 ருபாய் வரும்போது அவள் வெற்றிகரமான தாயாக வாழ்ந்து காட்டியிருக்கிறாள். அதே சமூகம் அதே நாடு அதே ஊர். அதே மக்கள். அதே. வைசியாள் வீதி.

       அது போக அப்பெண் விடுமுறை நாட்களில் உயர் அலுவலர்களின் வீடுகளுக்குச் சென்று துப்புறவு மற்றும் துணிமணிகள் துவைப்பது போன்ற வேலைகள் செய்வதின் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தை வைத்து “நகை சீட்டுகள் போட்டு  தம் பெண் குழந்தைகளுக்கு நல்ல படியாக திருமணம் செய்து வைத்தை அந்தப் பகுதி மக்களே உறுதியைப் பாராட்டுவார்கள்.

         இப்போது கேட்டாலும் அந்தத் தாய் சொல்வாள். அவரு ஒரு நிமிசமும் யோசிக்கலை நகை காணும்னதுமே பயந்துட்டாரு..இப்படியொது காரியத்தைப் பண்ணிட்டார். ஒரு கெடுதலும் யாருக்கும் நெனைக்காத மனுசம்.என்பார்.

பிறகு அந்த நகைக் கடை முதலாளி பெருந்தன்மையாக “அவனே போய்ட்டான் விட்டுரும்மா அந்த நகையப்பத்திப் பேசாதஅவனக் கொன்ன நகை போனாப் போகுதுன்னு என்று விட்டுவிட்டதாகவும் சொல்வார்.

        அப்போதும் கூட இந்தப்பெண் அந்த நகைக் கான தொகையை தாம் தந்து விடத் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறார். அப்பெண் உடலுக்கு வழக்கம் போல ஆங்காங்கு இருக்கும் வெறும் ஆண்கள் முயற்சி செய்து பாவ்லா காட்டியபோதும் “அண்ணா பாருங்க.. எங்கொழந்தகளுக்குத்தான் இந்த வேலைக்கும் வர்றேன்னே தவிர இதுக்காக இல்லை..என் வீட்டுக்காரரு என் மேல எத்தன நம்பிக்க இருந்திருந்தா சட்டு னு செத்திருப்பாரு. இவ எப்படியும் குழந்தகளைக் காப்பாத்திருவான்னு தான செத்திருப்பாரு. என்பிள்ளைகளை நான் என்ன நெனச்சிருந்தன்னோ அப்படி வளர்த்துவேன்..இந்த மாதிரி பொழப்புக்கு மட்டும் போகமாட்டன்“என்றார் உறுதியாக.

        நாவல் பேச வேண்டிய முக்கிய இடமே அரசியல் தான். நாவலில் நாவலாசிரியரின் சுயம் சார்ந்த விமர்சனம் இல்லை. சமூக விமர்சனம் ஒரு களம் சார் நாவலுக்கு மிக முக்கியம். கால் புழுதி நாவல் களம் சார்ந்து உழைத்த பெண்ணின் எல்லா உணர்வுகளையும் பேசும் நாவல்

நம்முயை எதிர் நிலை  இருப்பு அரசியல் காரணங்களுக்கு  நாம் வாழ்வை பலிகொடுத்து வருகிறொம். அரசியல் சூழ்ச்சிகளை நாம் அம்பலப் படுத்துவதின் வாயிலாகவே ஒரு கலை தன்னை மேலும் வளர்த்துக் கொண்டு செல்லும். நாவலுக்கு முக்கியமானது தர்க்க புர்வமான அணுகு முறை குறைவாகவே இருக்கிறது. சம்பவங்களின் மீதான எதிர்வினைகள் இல்லை. புராதனமாகவே மனிதன் எதிர் கேள்விகளுடன் தன்னைச் சுற்றியுள்ளவர்களை கேட்டு வருபவன். அவை நாவலில் குறைவாகவே வெளிப்பட்டுள்ளதை குறிப்பிடுவது கனக தூரிகாவின் அடுத்த எழுதப் போகும் மூன்றாவது நாவலில் மேலும் ஆழமாக செல்வதற்கு உபயோகமாக இருக்கும் என்பதற்காக தெரிவிக்க வேண்டியது ஒரு வாசகனாக எளிய எதிர்பார்ப்பு..

      புனைவு வெளியை அதிக அளவு நம்பாமல் எதார்த்த பாணி நாவல் எழுதியமைக்கு அவரைப் பாராட்டலாம். புனைவும் மீள் புனைவும் எழுதுவதற்கு எந்த வாழ்க்கை நிகழ்ச்சியும் தேவையில்லையென்பதையும் உணர்ந்திருக்கி றார். அவை மேலதிகமான கட்டு உரையாடல்களையே நிகழ்த்தும் வடிவம் கொண்டது. தற்கால நவீன நாவல் எழுதுபவர்கள் விரும்பும் வடிவம் அதுவாக இருப்பதின் காரணம் அவர்களுக்கு இந்த வாழ்வின் மீதும் அக்கறையில்லாதது மட்டுமல்ல நவீன வாழ்வின் பாதிப்பு களின் மீதும் அக்கறையில்லையென்பதையும் கொள்ளலாம். காலம் திரும்பவும் உண்மையான அறத்தை நோக்கியும் தீவிரமான இருப்பு குறித்து பரிசீலனை செய்தும் வருகிறதின் வெளிப்பாடுதான் கனக தூரிகாவின் கால் புழுதி நாவலும். நாவல் முடியும் இடம். மிக எளிமையாக ஒரு சாதாரண சம்பவம் மற்றும் உரையாடலுடன் முடிந்து மறுபடியும் நாவலின் முதல் பத்தியை வாசிக்கச் சொல்கிறது. இங்கு கீரை மட்டுமல்ல நாமும் நம் சந்ததிகளும் மிளகுக் காக மூன்னூறு ஆண்டுகள் அடிமைப்பட்டுக்கிடந்தவர்கள் நமக்குத் தெரியாதா கிள்ளுக் கீரையின் அருமை..

 

ஆசிரியர்

கனக தூரிகா

 

வெளியீடு

 

சந்தியா பதிப்பகம்

பக்கம்-120

புதிய எண் 77

53 வது தெரு

9 வது அவென்யு

அசோக் நகர்

சென்னை 600 083

044.24896979