செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

சக்தி ஜோதியின் கவிதை நூல் பற்றி


காற்றில் மிதக்கும் நீலம்

சக்தி ஜோதியின் நான்காவது கவிதை நூல் குறித்து.

 

நீர்,நிலம்,காற்று,நெருப்பு,

ஆகாயத்தில் மிதக்கும் நீலம்.

 

இளஞ்சேரல்

 

        

       இந்த நூலுக்கான குறிப்புகளை எழுதத் துவங்கும் போது அவர் புதுதில்லியில் சாகித்ய அகாடமியின் விழாவில் கவிதை வாசிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.

             அவர் எழுதும் எந்த விதமான, வடிவச் சிக்கல்கள் இல்லாத  கவிதைகளையும் பிரசுரம் ஆகும் பாக்கியம் பெற்ற கவிகளில் அவரும் ஒருவர். எளிதில் இலகுவான பாராட்டுகளும் தமிழ்நிலத்தின் திசைகளிலிருந்து வாழ்த்துகளும் வாய்ப்புகளும் கிடைக்கும் பாக்கியமும் பெற்றவராகவும் இருக்கும் கவி. அவருடை கவிதைகள் கடந்த ஆண்டுகளிலிருந்து சமீபத்தில் எழுதப்பட்ட கவிதைகள் வரையிலும் வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் ஆண் பெண் ஜனரஞ்சக வாசகர்களுக்கு எந்த வகையிலும் தொந்தரவும் நெருக்கடி தராத கவிதைகள் அவருடையது.

 

கரையொதுங்கி காத்திருக்கிறேன்

இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும்

சிதைகளின் மத்தியில்

 

பூக்களைச் சூடியபடி

என்னைக் கடக்கிறாள்

கங்கை

 

அந்தப் பெண் துறவி

கங்கையில் மூழ்கி

மேலெழும்போது

நானாகத் தோன்றுகிறாள்.

மேற் சொன்ன கவிதை “என்னைக் கடக்கும் கங்கை“ எனும் நெடுங்கவிதையின் சில வரிகள்.

 

         எளிய சொல் அடுக்கும் வாக்கியங்கள் யாவும் ஒன்றின் ஒன்றின் பின் தொடர்ச்சியான  சித்திரங்களாகவே பயணத்தின் நிழல் போலவே அருகருகே வந்து கொண்டிருப்பவை. இருப்பினும் அவர் கவிமொழியின் வசீகரம் ஏதோ ஒரு வகையில் தற்கால கவிதை மற்றும் நவீன கவிதை வாசகியர்-வாசகர்களுக்கு திருப்தி தரக்கூடியவையாகவும் இருக்கிறது. சார்புத் தன்மையற்ற துள்ளல் மனோபாவத்தின் அறத்தைப் பேசுகிற கவிதைகளாகவும் பதிவா கியிருக்கிறது இந்தத் தொகுப்பிலும்..

      வருடம் தோறும் ஒரு தொகுப்பாக வெளியிடுகிற  கவிஞராக சக்தி ஜோதி தமிழுக்குக் கிடைத்திருக்கிறார். பெண் படைப்பாளர்களுக்கு யாவும் மிக எளிதில் சாத்திய மாகி விடுகிற வாய்ப்பை நம் தமிழ்ப் பெருங்குடிகள் வாழையடி வாழையாக அம் மரபைக் காத்து வருகிறார்கள்.

    முன்னுரைகளை அவருக்கு மூத்த தலைமுறை கவிஞர்கள் அளித்து ஊக்கப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. முன்னுரை வாங்கிப் பெறுவதற்காகக் காத்திருந்து காத்திருந்து தன் கவிதைகளின் நெருப்புச் சிகை தாளாமல் திரும்பவும் தன் குலத்தொழிலுக்கே போய்ச் சேர்ந்த கவிஞர்கள் ஏராளம் ஏராளம். ஆனாலும் தாரளமாக தற்காலத்தில் முன்னுரை அளித்து உதவுகிற கவிஞர்களை சாலத்தொழுதல் ஞாலமும் நன்று..

     மரபு பிரழ்வு இன்றி எழுதும் முறை முற்றிலும் வரவேற்கப் படவேண்டியதே. 100க்கு நூறு இருந்த பெண் விகிதாச்சாரம் 78 சதவிகிதமாகக் குறைந்து வருகிறது. கடந்து போன இரண்டு நூற்றாண்டு களுக்கு முன்பு ஆண் இருப்பு சதவிகித்திற்கு மேல் பெண்கள் இருந்தார்கள். இருநூறுகளில் பெண்களை 30 சதவிகிதத்திற்குக் கீழாக வேட்டையாடிக் கொண்றிருக்கிறார்கள். அந்தத் துயரம் பற்றிய சிற்றிலக்கியங்களோ பேரிலக்கியங்களோ பதிவு செய்யவில்லை. உலகளாவிய அரசுகள் தங்கள் தொழிற்புரட்சியை விரிவு படுத்து முதலில் பலியிட்டது பெண்களைத்தான். அதிகாமாகக் கொண்று குவித்த துறை விவசாயம். அவள் பட்டினியாக இருந்து பெருங்கூட்டத்தைப்பெற்றுப் போட்டுவிட்டு பட்டினியாகவே செத்த கதைகளும் நம்மிடம் இருக்கிறது. அந்தத் துயரம் பற்றி வரலாற்றில் எந்தளவிற்கு எழுத்தாகப் பதிவாகியிருக்கிறது எனத்தெரியவில்லை. ஒரு தீபா மேத்தாவிற்கோ அருந்ததி ராய்க்கு மேதா பட்கருக்கும் இந்தக் குதி குதி குதிக்கிறார்கள் போலி ஆணாதிக்க வாதிகள். பெண் விகிதாச்சார இழப்பு  பற்றிய பதிவுகள் பெண்களாவது எழுதியிருக்கிறார்களா அல்லது அந்த விகிதாச்சாரத்தை உயர்த்துவதற்கு என்னென்ன திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகிறது என்பதாவது அறிந்திருக்கிறார்களா.

           இந்த துறவி கவிதை மூலமாக சக்தி ஜோதி யோசிக்க வைக்கிறார். இக்கவிதையை சக்தி ஜென் கவிதை என்று கூட அழைக்கலாம் தவறில்லை.

       இனியொரு ஆச்சர்யம் என்ன வென்றால் அதிகமாக வாசிப்பவர்கள் பட்டியலில் பெண்கள்தான் இந்த நூற்றாண்டு காலத்தில்   அந்த சாதனையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். படிக்கிறார்கள். எனினும் குறைவாக எழுதுகிறார்கள்..

      பெண் எழுத்து தலித் படைப்புகளில் வீரியமும் உண்மையும் பெரு வெடிப்பும் இருப்பது போன்று மற்ற இடை சாதி சமூக பெண்களி டத்திலிருந்தும் நடுத்தர வேளாண் குடி சமூக பெண் மக்களிடமிருந்தும் இன்னும் காத்திரமான எழுத்துக்கள் வந்து சேர வில்லை.மாதாந்திர சஞ்சிகைகளில் ஒரு வகையான பெண் எழுத்தும் சிறுபத்திரிக்கைகளில் ஒரு வகையான  பெண் எழுத்தும். தீவிர இலக்கியப் பத்திரிக்கைகளில் ஒரு வகையான பெண் எழுத்தும் பிரசுரமாகிறது. அது போலவே கவிதைகளும் எழுதப்படுகிறது.                              இயக்கம் கட்சி பின்னணி கொண்ட பெண் எழுத்தில் மிகுந்த முன்னேற்றம் காணப்படுகிறது. பெண்ணிய இயக்கங்கள். பெண்ணிய சமூக அமைப்புகளில் ஈடுபடும் பெண்களின் எழுத்துக்களில் முன்னேற்றமும் ஆழமும் காணப்படுவதை தொடர்ந்து வாசிப்பவர்களால் உணரமுடியும்.

             நம் சமூக மேலாண்மை பசி கொண்டலையும் ஆட்களுக்கு இயக்கம் என்றால் வாயிலும் வயிற்றிலும் போக ஆரம்பித்து விடும். உலகமகா கோடிஸ்வரர்களே சங்கம் வைத்து தரையில் இறங்கி போராடும் காலம் தற்காலம். எல்லா பெருமுதலாளி களிலிருந்து உள்ளுர் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்காரர் வரை சங்கம் வைத்து பேரணி ஊர்வலம் கண்டனப் பொதுக்கூட்டம் போட்டு கோஷங்கள் போடுவதை மாநகரங்களில் பார்த்துவருகிறோம். இந்த பிரகஸ்பதிகள் எல்லாம் 70 80 களில் தொழிலாளர்கள் விவசாயிகள் போராடிய போது என்ன நக்கல் செய்தார்கள் நையாண்டி என்ன அடக்கு முறை என்ன. எப்படியெல்லாம் போராடுகளை மக்களைப்பிரித்து தூண்டிவிட்டு குலசம் வைத்தெல்லாம் பிரித்தார்கள். அதிலும் பெண்கள் எந்த ரகசியத்தையும் காப்பாற்ற மாட்டார்கள் என்கிற போதனை வேறு..

 

இக் கவிதையில்

 

உரத்து அழும் குரல்களை

தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கிற சுவரில்

வேண்டுதலை எழுதி

சுவரின் இடுக்கில் வைத்து

மன்றாட்டுதலை நிறைவேற்ற

தாவீது வரவேண்டுமென கண்ணீர் வடிக்கின்றேன். பக்-20    

 

    மேற்குச் சுவர் என்னும் நெடுங்கவிதையின் சிலவரிகள்

 

       உலகத்தின் பெருஞ்செல்வம் கொழித்த நாடுகளில் எல்லாம் பேராட்டங்கள் நடக்காமலா இருக்கிறது. நம்ம ஆட்கள் கேட்காமல் அள்ளிக் கொடுத்த அல்லது கிள்ளியாவது கொடுத்த சரித்திரம் இருக்கிறதா என்ன. ஆனால் சம்பளக்காரனோ கூலிக்காரனோ எதுவும் கேட்டு விடக்கூடாது அதுவும் பெண்கள் மூச்சே விடக்கூடாது.குறிப்பாக தொகுப்புதியம் என்கிற பெயரில் பணியமர்த்தப் படும் நவீன காலத்தின் நெருக்கடியில் மாதச் சம்பளம் பெறும் பெண் தொழிலாளர்கள் இன்கிரி மெண்ட் என்பதை யெல்லாம் மறந்து விடவேண்டும். இங்கு ஒவ்வொருவரின் பிரச்சனைகளை அவரவர் களாகவே சந்தித்துக் கொள்ளவேண்டியதுதான். இங்கு தொழிலாளர் நலச்சட்டங்களோ, உரிமைகளோ, அடிப்படை வசதிகளோ குறித்து எதுவும் கேட்க முடியாது. அதிலும் பெண் என்பவள் இருக்கும் இடமே தெரியாமல் பணியாற்ற வேண்டும். எதற்கும் வசதியாக ஒரு மாதத்தின் சம்பளம் அவர்களிடம் ஜாமீனா இருக்கவேண்டும் என்பதெல்லாம் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்ட கட்டளை.

 

 

மாத சம்பளம்

 

ஒவ்வொரு மாதமும்

மூன்று நாட்களுக்குள்

ஊதியத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்

தவறாமல் கிடைத்துவிடும்

சிலபோது

ஐந்தாறு நாட்கள் தள்ளியும் போகும்

பதற்றமடைவேன்

பதினைந்து நாட்களுக்கு மேல் எனில்

பதற்றமடைவோம்

பதினைந்து நாட்களுக்கு மேல் எனில்

பதற்றமடைவோம்

எவ்வாறு சமாளிப்பதென

இதனை

நாங்கள்

ஒருபோதும் விரும்பியதேயில்லை

இவ்வாறு நகர்கிறது காலம்

மூன்று நாட்களை அகற்ற விரும்பியபடி

அந்த நாளுக்காய் காத்திருக்கத் துவங்குகிறேன்.- பக்-49

    மாத சம்பளம் போன்றது அந்த மூன்று நாட்கள் என்கிற படிமம் புதுமையானது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு வாழ்வாதாரத் திற்காக உருவாக்கப்பட்டது தான் சம்பளம் எனும் வடிவம். அதைப் பெறுவதற்கு பெண்கள் நடத்திய போர்கள் எத்தனையெத்தனை. பெண் குரலின் வழியே பேசப்படும் போது இங்கு நாம் வாங்கிக் கொள்கிற சம்பளம் கூட யாருடையதோ என யோசிக்க வைக்கிறது. சம்பளம் என்கிற சொல் இங்கு வாழ்க்கையின் முழு பொருளாக மாறியது. குமாரமங்கலம், ஈரோடு, நாமக்கல்,கோபி பகுதிகளில் இருக்கின்ற பஞ்சாலைகளில் சின்னஞ்சிறு சிறுமிகள் சிறுவர்கள் பணியில மர்த்தப்பட்டு வேலைவாங்கப் படுகிறார்கள். அதுமட்டுமின்றி கோவை உடுமலை,

பொள்ளாச்சி, திருப்புர். பகுதிகளில் சுமங்கலி திட்டம் பெயரில் இளம் பெண்கள் மூன்று வருட நான்கு வருட குத்தகைகளுக்கும் சம்பள விகிதா சாரம் சார்ந்து அனுப்பப் பட்டு வருகிறார்கள். அவர்களை அவர்களுடைய இடத்திற்கே சென்று அழைத்து வருவதற்கு பேருந்து வசதிகளும் செய்திருக்கிறார்கள்.அவர்களுடைய வறுமையைப் பயண்படுத்தி பெற்றோர்களுக்கு குறைந்த வட்டிக்குப் பணமும் குழந்தை உழைப்பிற்கான முன்பணமும் தந்து அழைத்து வருகிறார்கள் என்பதும் பின்னணியில் இருக்கும் உண்மை. இந்தக் கவிதை அச் சிறுமிகளின் வாழ்வையும் இயற்கை தந்த தீட்டு நிகழ்வையும் இணைத்துப் பேசுகிறது. நாட்கள் நகர்ந்து போனால் வந்து தொலைக்கிற அச்சமும் பிரச்சனைகளும்

பரபரப்பும் தாங்க முடியாத இம்சை.

 

மாதவம்

 

வானிலும் மிதக்கும்

நீரிலும் மிதக்கும் இரகசியங்கள் கொண்டது

கண்களுக்கு புலப்படுவது போல் இருக்கும்

நாற்பத் தொன்பது ஜென்மங்களும்

பெண்ணாகவே பிறக்க வேண்டும்.பக்-61

       பரிபுரணமான பெண்ணாகவே தாம் இவ்வுலகின் லௌகீக சம்பத்துகளுடன் வாழ்வினுள் திளைத்துவிட்டதாகவே உணர்ந்து கொள்கிற இடம். பிறப்பின் தற்காலிகம் என்று நீங்கும்.அல்லது நீங்காமலும் போகலாம். இந்தக் கவிதையின் தொடர்ச்சியாகவே நீளும் இனி ஒரு கவிதை. உண்டு. தொகுப்பில் சமச்சீரான தொனியில் ஒவ்வொரு கவிதைகளும் இனி யொரு கவிதையின் படியாகவே இருப்பது வாசிப்பின் அயற்சியாக தென்படுகிறது. அவரின் இந்த ஐந்தாண்டு கவிதை இயக்கம் முழுவதுமாகவே அதே தொனியில் தான் ஒலிக்கவும் செய்கிறது. வடிவத்தில் அவர் எந்த மாறுதலும் செய்து கொள்ள விரும்பவும் இல்லை விருப்பப்படவுமில்லை. தனக்கான கவிமொழியை

அதுவே எனத் தீர்மானித்திருப்பின் அவை அவரவர் சுதந்திரம், அவரவர் அறம், கருத்து சுதந்திரம்.

பறவையின் விருட்சம் எனும் நெடுங்கவிதை தொகுப்பில் இருக்கும் சில வரிகள்

 

உயிர் கசிந்து

பேரார்வத்துடன் விண்ணில் பறக்கும் தருணம்

விருட்சங்களில் பூக்கள் மலர்கிறதை

நீ அறிந்திருப்பாயா

இல்லையேல்

நான் ஒரு பறவை என்பதையாவது- பக்-45

    அற்புதமான இயற்கையிலைப் பற்றிப் பேசும் இக்கவிதை உயிர்கள் தோன்றியதை நினைவுட்டுகிறது. நீர் நிலம் காற்று ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்து மயங்கிய உலகத்தில் இருதிணை ஐம்பால் இயற்கை நெறி வழுவாமல் தோன்றும் என்பது இயற்கைக் கொள்கை. இக்கொள்கையின் கூர்தலறக் கொள்கை முறைப்படி இவ்வுலகம் எவ்வாறு முறைப் படி தோன்றியிருக்கும் என்பதைப் பற்றித் தொல்காப்பியல் மரபினர் கீரந்தையார்

 

கருவளர் வானத்திசையில் தோன்றி

உருவறி வாரா ஒன்றன் ஊழியும்,

முந்துவளி கிளந்த ஊழுழ் ஊழியும்,

செந்நீர்ச் சுடரிய ஊழியும் பனியொடு

தண்பெயல் தலைஇய ஊழியும்,அவையிற்று

உண்முறை வெள்ளம் மூழ்கி யார்தருபு

மீண்டும் பீடுயர்பு ஈண்டி அவற்றிற்கும்

உள்ளீ டாகிய இருநிலத்து ஊழியும்

--பரிபாடல்-

       சக்தி ஜோதியின் பல கவிதைகளில் இப்பொழுது வந்துள்ள தொகுப்பிலும் எழுதி வருகிற கவிதைகளிலும் இயற்கைக் கொள்கையை முன்நிறுத்தி எழுதப்படுகிறது.

அதனுடன் இயற்கையின் முதன்மை கொள்கையான சார்பியலை முன்நிறுத்திக் கொண்டாடும் கவிதைகளும் உள்ளது. அவரின் காதல் மற்றும் கணவர் குழந்தைகள் சார்பு கவிதைகள் அதிகம் இருக்கிறது. பாதிக்கும் மேற்பட்ட கவிதைகள் தன் கணவருக்கு எழுதிய கடிதங்களாகவே பதிவாகியிருக்கிறது. சங்க மகளிர் மட்டுமல்ல. நிலமுள்ளோர் நிலம் சார் அரசியல் வகுத்தோர். நிலஅரசியல் வகுத்தோரின் நீர் நிலை எல்லைகள்,நீர் எல்லைகளின் காவற் திணைகள்,காவற் திணைகளின் மிகு போர்கள், மிகுபோர்களின் சட்டங்கள். சட்டங்களின் அளவீடுகள், அளவீடுகளின் துயர்கள்,துயர்களில் பெண்கள், பெண்களின் இழப்புகள்,இழப்புகளில் பெண்கள், பெண்களில் யுவதிகள்,யுவதிகளிலும் சிறியர் சிறுமிகள்.சிறுமிகளில்,பால் சிறார்கள். பிற்பாடு அவர்களின் இயற்கை கொள்கைகள் இப்படியாகவே தொடர்ச்சியாக நீளும் பெண் இயற்கை பாடு பொருள் மொழி வழக்கு எழுத்து வழக்கு வந்த நாட்களிலிருந்து தொடர்கிறது. அந்த இயற்கை மரபின் நீட்சியாக சக்தி ஜோதி  கவிதைகள் தொடர்வது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது. தமிழின் கவிதையையும் நவீன கவிதைகளின் தத்துவ விசாரத்தையும் அதி நுட்பமான செவ்வியலின் செழுமையையும், புராதன கலை நேர்த்தியை இந்த நூற்றாண்டின் கவிகள்  யார் தூக்கிச் சுமந்தாலும் போற்றத்தான் வேண்டும். நாமென்ன அத்தனை பெரிய பிசியான மனிதர்களா என்ன.அல்லது தண்டலா, மணியமா, ஜில்லா, பிர்க்கா கலெக்டரா, இல்லை தண்டோரா திடுமனா, போதிய நேரமும் அவகாசமும் இல்லை யென்று எத்தனை நாளுக்குத்தான் சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருக்க முடியும்.. அநேகமா சமீபத்தில் வந்த தொகுப்பைப் பற்றி எழுத நேரும் போது மேலும் சில தொகுப்புகள் அவர் கொண்டு வந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

நன்றியும் வாழ்த்துக்களும்..

 

வெளியீடு

உயிர் எழுத்து

விலை-ரு75-

பக்-104

முகவரி

9-முதல் தளம்

தீபம் வணிக வளாகம்

கரு மண்டபம்

திருச்சி-

91-0431-6523099-99427 64229

 

 

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

A.A Faizal Book Review


நிலத்துடனும் நீரினுடனும் பேசுகிறேன்

நிலத்தோடு பேசுகிறேன்.
ஏ.ஏ.பைசால் கவிதைகள் குறித்து

இளஞ்சேரல்


வரவேற்பு

முருங்கை மரம் பூச்சூடியிருக்கிறது
அணில்கள் கிளைவிட்டு கிளை தாவ
உதிர்நது விழுகின்றன என் தலையில் பூக்கள்
பிரசவிக்காத புழுக்களும்
சில பூக்களின் கருவறைக்குள்

ஆடு மாடுகள் வந்தனவா
உன் கூந்தலைக் கடித்துக் குதற

இல்லை
நீ இட்ட வேலி நல்ல பாதுகாப்பு
அணில் மட்டும் வரட்டும்
அணில் என் கூந்தலை வருடும் போது
என்ன சுகம் தெரியுமா முருங்கைத் தோப்பு ராசாவே
என்று என்னை வரவேற்கும்
முருங்கைப் பூக்கள் நிறைந்த தோப்பில்
இப்போது முகாம்கள்

      கவிதைகளில்தான் காலமும் வரலாறும் எத்தனை விதமான கவிதைகளை உருப்போட்டு உருப்போட்டுத் தம்மைத்திருத்தி எழுதியபடியே மொழியாக உருவாக்கி எழுதிக் கொண்டு வருகிறது. வியப்பதா அல்லது மேலும் தீவிரமாக ஆழமாக எழுதுவதா..காலப்பதிவுகளில்  தான் எத்தனை கட்டளைகள். அதற்கான தீர்வுகள். தீர்வுகளைப் பின்பற்றிடாவிடில் நிகழும் நெருக்கடிகள்.நெருக்கடிகள் மூலமாக வரும் தாக்குதல்கள். தாக்குதல்கள் பிற்பாடு குழுத் தாக்குதல்கள். அதுவே வளர்ச்சி பெற்று போராக மாறுதல். போர்கள் பிற்பாடு ஆயுதங்கள். ரசாயன ஆயுதங்கள். யாவும் தீர்ந்த பிறகோ அல்லது எஞ்சியிருந்தோ  இருப்பினும்  பிறகோ அன்றி முனை மழுங்கிய பிறகோ அன்றி வெறியாய்க் கொல்வதற்கான உடல்கள் இன்றியோ யாவும் முடிந்த பிற்பாடு மனிதன் சமாதானத்திற்கு வருதல். இதுதானே மனிதனின் தொழிற் நுட்பப் புரட்சியின் இலட்சணம்.
         பெரும்பாலான சமாதான உடன்படிக்கைகள் யாவும் மயானத்தில் அல்லது கல்லறைத் தோட்டங்களில் தான் நிகழ்த்தப் படுகிறது. அவ்விடத்து எல்லாம் எலும்புக்கூடுகளை நடுமையாக வைத்துதான் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.
      இந்த நூற்றாண்டின் மிக நவீனத்துவமிக்க கண்டு பிடிப்புகளில் ஒன்று முகாம்கள். முகாம்களைச் சமைப்பதில் மேற்கத்திய நாடுகளுக்கு இருக்கும் ஆர்வத்திற்கு கிழக்காசிய நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் அறிவியல் வளர்ச்சி எனும் மாயையைக் கொண்டு வசியப்படுத்தி,சில வசதிகளைத்தந்து  அடிமைப்படுத்தப் படுகிறார்கள். கவிஞர் ஏ.ஏ.பைசாலின் மேற்கண்ட கவிதை இந்த முகாம்களுக்கு முந்தைய முருங்கை மரத்தோப்பை நினைவு படுத்துகிறது.
       தொகுப்பில் உள்ள கவிதைகள் முழுக்கவும் அனாதையாக வானம் பார்த்துக் கிடக்கும் நிலத்தையும் மிச்சம் மீதி மக்கள் உதிரியாக வாழ்ந்து கொண்டிருக்கும் எதிர்காலம் பற்றி பேசுவதாகவே இருக்கிறது.
      இக் கவிதைகளில் பயண்படுத்தப்பட்ட கவி மொழியானது. நிறுவனங்களுக்கு வாக்கப்பட்டுப் போய்ப் பிறகு   ஈடு பெறாக் கடன்களின் செஞ்சோற்றுக் கடனுக்கு எழுதும் வழக்கொழிந்த ரொமாண்டிசிசக் கவிஞர்களின் மொழியை விடவும் அற்புதமான மொழி. கவிதை எது இது என்ன வடிவம் என்றறியாத தன் முனைப்பும் சுய அவதானிப்புமாக அழுக்கு மூடிய வர்க்க முரண் தொடை இலக்கிய கவிஞர்களின் கவித்துவத்தை விடவும் அழகான கவித்துவம் அனைத்துக் கவிதைகளிலும் மிளிர்ந்து காணப்படுகிறது.

அங்கே ஒரு கிழவர்
உடல் நனையாமல் குடை பிடித்துச் செல்கிறார்

இந்தச் சிறுமழையின் கற்களால் எறிந்தால்
என் குடை உடையுமோ
என்று ஒரு கிண்டல் சிரிப்பு
பொக்கை வாய்க்குள் ஒரு பூகம்பம்

நிலமெங்கிலும் தேங்கி நிற்கும்
நீரின் மேல்
மழை துளிகளாக விழுகின்றன
நீர் முழுவதும்-

பக்-27 (நீர் முலை எனும் நெடுங்கவிதையில் ஒரு பகுதி)

இந்தத் தொகுப்பு முழுக்க பதிவாகியுள்ள கவிதைகள் பல இலங்கைப் பற்றி பேசுகிறதா அல்லது பிரான்ஸ், கொரியா, ஜப்பான், இங்கிலாந்து பற்றி பேசுகிறதா என்கிற ஐயம் ஏற்பட்டது. காரணம் அவ்வளவும் நேர்த்தியான அற்புதமான அழகியல் படிமங்கள். இலகுவாக இலங்கைத் தமிழ் அன்றி முழுக்கவும் தமிழகத்தின் அரசியல்  தமிழ் நிலத்தின் அரசியல் வரைபடத்தின் வழக்கு மொழியில் எழுதப்பட்டி ருப்பது வியப்பாக இருக்கிறது.
         நிலத்தை இழப்பவர்கள் அல்லது விற்பவர்களுக்காகவே மூன்று நூற்றாண்டுகளாக ஆண்ட அரசுகள் அதற்கென துறைகளை உருவாக்கி விற்பது வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தபோது நாமும் விழித்திருக்கவேண்டும். அதுவும் நல்ல வயல்கள். எண்ணைப் படுகைகள் வைத்திருக்கும் தீவுக்காரன், நாட்டுக்காரன் பாடு திண்டாட்டம்தான்.கண்களை உறுத்தும். இன்றும் கூட நம்மில் பழகும் மனிதர்கள் நாம் ஒரு புத்தாடை உடுத்தி அவன் முன்னால் சென்று பாருங்கள். அவனால் அந்த புத்தம் புதியதை ஜீரணிக்கவே முடியாது.
        கீழ்க் காணும் கவிதையில்,அதிலும் காலியான பானை தன் நிலம் மாறியதை ஒரு படிமமாகவும் அப்பானை சோறுகாய்ச்சித் தந்து வெகுநாட்களா விட்டதையும் அற்புதமாகப் பேசுகிறார்.இந்தக் கவிதையாக்கம் கூட இக்கவிதை இந்தத் தொகுப்பில் மகுடமாக சொலிக்கிறது.


பானை

வாயைத் தேய்த்துக் கழுவுகிறாள்
தேய்த்த வாயிலிருந்து ஒளி தெறிக்கிறது

முதுகைத் தேய்த்துக் கழுவுகிறாள்
பால நாளாக தேக்கிவைத்த ஊத்தை உறுண்டு வருகிறது

வயிற்றுக்குள் கையை இட்டுக் கழுவுகிறாள்
உள்ளே குடலுமில்லை,சதையுமில்லை
பார்க்க என்ன அழகாய் இருக்கிறது
அவள் கழுவிய சோறாக்கும் பானை-பக்-16
     பெரும்பான்மையான கவிதைகள் முழுக்கவும் அதிகமாக உணவு சார்ந்த பிரயோகம். உணவின் ருசி,உணவு சமைப்பதன் அழகு, அதன் கருவிகள் எல்லாம் வந்து போவது புதுமையாக இருக்கிறது. அல்லது போருக்கு முந்தைய காலத்திலும் முப்போகம் விளைந்த காலத்திலும் இலங்கை தமிழ் மக்கள் இப்படியாக சமைத்து உண்டு வாழ்ந்த பெருங்குடிகள் இருந்திருப்பார்கள் என்கிற உணர்வைத்தருகிறது.
        தற்காலத்தில் எல்லாம் அழிந்து சின்னாபின்னமாகி அருகிப் போய்விட்ட வாழ்க்கையும் இந்த உணவு படிமம் மூலமாக பைசால் குறிப் புணர்த்துகிறார் என்றே தோன்றுகிறது. உணவு சார்ந்த கவிதைகள் யாவும் எளிமையான சொல்லாட்சியில் எழுதப்பட்டியிருக்கிறது.
       நிலத்தோடு  பேசுகிறேன் என்பதுடன் நிலத்தோடும் நீருடன் பேசுகிறேன் என்று தலைப்பிட்டிருக்கலாம். நிலம் வடிநிலங்களாக மட்டும் இருக்கவில்லை வேளாண் தொழிலுக்கு நீரும் நிலமும் எவ்வளவு இன்றியமையாதது. நீர் வாழ்க்கை ஆதாரங்களுக்கு எல்லாம் அடிப்படையானது. இலங்கைத் தீவின் நீர்வளமும் நீர்ப்பிடிப்பு மற்றும் கடற்கரைப் பகுதிகளின் வளமும் சிறப்புக்குரியது.
சங்க காலத்தில் தமிழ்நிலத்தின் வியாபார கலாசார பண்பாட்டு முறைகளுடன் நேரடித்தொடர்பு கொண்டிருந்தது. கடற்கரைத் துறைமுகங்களில் நிலவிய வர்த்தகமும் பண்டமாற்று முறைகளும் சமூக இணக்கத் தையும் நமக்கு உணர்த்துகிறது.

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசிணோரே     புறம்.18.21-23
      
       காலமும் அரசுகளும் மேற்கத்திய வளர்ந்த நாடுகளின் பேராசையும் அதுதான் .பச்சைப் பசேல் என்று ஒரு ஏழை நாட்டின் மண் செழித்த்துவிடக் கூடவே கூடாது அது அவனுக்கும் அவனுடைய ஏவலர்கள் அடிவருடி களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. வளரவே கூடாது. அப்படியாக கண்கள் உறுத்தப்பட்டு ஆதிக்க மேலாண்மையால் கொஞ்சம் கொஞ்சமாகத் திட்டமிட்டு களவாடப்பட்டு சூறையாடப் பட்டதுதான் இலங்கைத் தீவு. இலங்கையின் கடைசி நாற்பது ஆண்டுகள் சந்தித்த சமூக அரசியல் நெருக்கடிகளை வேறு எந்த தீவாவது சந்தித்திருக்குமா தெரியவில்லை. அல்லது ஒரு நாட்டின் மாகாணமாவது பாதிக்கப்பட்டிருக்குமா தெரியவில்லை. வாய்ப்பும் இல்லை. இரண்டாம் உலகப் போர்களுக்குப் பிறகு பெரும் போர்களை வளர்ந்த நாடுகள் விரும்புவதில்லை.
     மாறாக அவர்கள் சில சின்னஞ்சிறிய நாடுகளை அவர்களின் வளங்களைக் குறிவைத்து கொஞ்சம் கொஞ்சமாக கடன் வலையை விரித்து அவர்களின் நிர்வாணக் கலாச்சாரத்தின் வசமாக்கிக் கொள்கிற நுகர்வு வலையில் இலங்கையும் வீழ்த்தப்பட்டது. அதற்கு சொல்லப்படும் எழுதப்படும் காரணங்கள் யாவும் பத்திரிகா தர்மப்படி எழுதி வாசிக்கப்படுகிறது.
அவர்கள் எண்ணப்படியும் இந்த நாற்பது ஆண்டுகளில் இலங்கை போன்ற பல சின்னஞ்சிறிய நாடுகள் வீழ்ந்திருக்கிறது.
        இந்தியத் துணைக்கண்டத்தைச் சுற்றியயுள்ள நிலைப்பகுதிகளில் மிகுந்த அழகிய தீவாகவும் சத்துள்ள விவசாய நிலங்களையும் சுகாதாரமான கடல் பகுதிகளையும் சுற்றுலாவிற்கு உகந்த இடமாகவும் இருந்த தீவை பல நாடுகளை உற்றுப் பார்த்தபடியும் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு மிக ஏதுவான வாய்ப்பாக அமைந்தது தமிழ்-சிங்கள இனக்கலவரங்கள். எல்லா புகலிடங்களிலும் நான்கு பேர் பாதிக்கப்பட்டால் நாலாதிசைக்கும் உதவி உதவி என்று ஓடிப்போகத்தானே செய்வார்கள். எல்லா உதவிகளும் காரண காரியங்களுடனே செய்யப்பட்டது. இதன் பின்னணியை இலங்கை படைப்பாளிகள் மட்டுமே அறிவார்கள்.கவிஞர்கள்  அறிவார்கள். போர் நிலத்தின் இழப்பின் மிச்சமாக கொஞ்சம் உயிரை வைத்திருப்பவர்கள் அவர்கள்தானே. அவர்கள்தான் உலகின் மூலையில் மனிதாபிமானம் மிக்கவர்களுக்கு தந்திகள் போன்ற இலக்கிய வகைமைகளை எழுதி எழுதி நிலமையை விளக்கினார்கள்.
        குடும்ப அட்டையில் உள்ள குடும்ப அங்கத்தினர்களின் பெயர்களை நீக்க வைக்கும் அரசாங்கம் நம்முடைய அரசாங்கம். ஏன் இருந்து கொண்டு போனால் என்ன அவர்கள் இவர்கள் தின்று தீர்ப்பது மாதிரியா தின்று விடப் போகிறார்கள்.தாயும் தகப்பனும். இதை ஞாபகம் கொள்ள வைக்கிற மாதிரி ஒரு கவிதை


நீரின்றி,வலையின்றி
மீன் பிடிக்கிறது ஒரு நாய்

வெறும் கோப்பையுடன் வந்திருக்கிறாள்
பக்கத்து வீட்டுக்காரி
சுடுபோறு மட்டும் இருக்கிறதாம்
கறி சமைக்கவில்லையாம்
வேலைக்குப் போனவர் இன்னும் வீடு வரவில்லையாம்
கறி கொஞ்சம் கோப்பைக்குள் வைத்துக் கொடுங்க
உம்மா

சட்டிக்குள் இருக்கிற கறி
பக்கத்து வீட்டுக்காரியின் கோப்பைக்குள்
இறங்கிடக் கனவு கண்டிருக்கும்

சட்டியைத் துடைத்து அள்ளிக் கோப்பைக்குள்
கொட்டுகிறாள் உம்மா
பாதிப்பசி பறந்திட்ட சந்தோசத்தில் போகிறாள்
பக்கத்து வீட்டுக் காரி
போகும் வழியில் இரண்டாவது பூமியில் கால்
வைத்தவள் போல்
இடறுகிறாள்

வீதியில் இறங்கி விட்டன கறியுள் இருந்த மீன்கள்
நீரின்றி,வலையின்றி மீன் பிடிக்கிறது நாய்.-பக்-42

  நம் தமிழ்ச் சமூகத்தின் உணவுப் பழக்க வழக்கமே ஒன்று இருந்து ஒன்று இல்லாமல் மற்ற பக்கத்துக் குடித்தனக்காரர்களிடம் மாற்றுப் பெற்று இணக்கமுடன் வாழ்வதை அவர் குறிப்பிட்டிருப்பது அற்புதமான சமூக இணக்க உறவுக் கவிதை.நவீன வாழ்வில் மிக மிக அருகிப் போன சமூகத்திற்கும் தற்கால இளைய தலைமுறைக்கும் இவையெல்லாம் அறிந்திருப்பார்களாக தெரியவில்லை.
   உணவு முறைகளின் பண்டமாற்று பழக்கத்தின் வாயிலாக நடந்த அன்பும் இணக்கமும் குறித்த கவிதைகளை பைசாலின் கவிதைகளின் வாயிலாகத்தான் அபுர்வமாகக் காண்கிறேன். தொகுப்பு முழுக்கவும் கவிதைகள் பசியாறுதல் பற்றிய அவதானிப்பு மிகையாக இருப்பது அந்த நிலத்தின் மக்கள் உணவை எந்தளவிற்கு இழந்திருப்பார்கள் என்பதையும் உணர முடிகிறது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது தெரியும் இங்கு ஒரு தேசமும் இனமும் பறந்துபோயிருக்கிறது.

ஓங்குநிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்
கரும்புகைச் செந்தீமாட்டி பெருந்தோள்
மதிஏக்காறூஉம் மாசறு திருமுகத்து
நுதிவேல் நோக்கின் நுழைமகள் அரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்ப
(சிறுபாணாற்றுப்படை-154-159)
மீன்,கருவாடு,உப்பு,நெய் ஆகியவை நெய்தல் நிலத்தின்
முதன்மையான உணவு உற்பத்தியாகி பிற நிலத்து மக்களுக்கும் கொண்டு சென்று பண்டமாற்றிக் கொண்ட வாழ்வும் இருந்துள்ளது. அதுபோலவே இலங்கையின் நில விளைச்சலும் மீன்களும் தமிழக கடலோர மாவட்ட எல்லை சந்தைகளில் மாற்று பரிமாற்றம் நடந்துள்ளது. இக்கவிதையில் சோறு பொங்கியவள் தனக்குக் குழம்பு கேட்டு அலைபவள் பரம்பரை மேற்கண்ட கவிதையில் எப்படி வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறாள் என்பதை நினைவுட்டுகிறது பைசாலின் கவிதை.
      நிலம் பறிகொடுத்து இனிந்து பேசிய சொற்கள் பறிகொடுத்து, உறவு கருவி வெளிச்சம் இரவின் கடல் வெப்பத்தின் ராக்குளிர். கவிச்ச உறை உப்பின் வீச்சம் மறந்து உலகின் எல்லாத்திசைகளிலும் வெற்று உடலுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழ் மக்களின் ஆதி பசியைப் போக்குவதற்கு பைசால் போன்ற கவிஞர்கள் தங்கள் எல்லாவிதமான ஆத்துமாவையும் திரட்டி எழுதுகிறார்கள். எழுதுவதால் பசி தீர்ந்து விடப் போவதி்ல்லை என்பது தெரியாமாலா எழுதுவார்கள்.
        பசியைக் கருவிகளாலும் துப்பாக்கி ரவைகளாலும் பதுங்கு குழிகளாலும் முள்வேலிகளாலும் தீர்க்க முடியாது என்பது தெரியும். பசி தீர நிலம் விளைய வேண்டும். தானியக்குதிர்கள் வேண்டும். உழவாரக் கருவிகள் வேண்டும்.கால் நடைகள் வேண்டும். எல்லாவற்றிக்கும் நிலம் வேண்டும். தீவு இருக்கிறது நிலம் இருக்கிறது. அவை எங்கேயும் போய் விடவில்லை. அது எங்கேயும் போகாது. எங்கே போய்விடப்போகிறது.
நிலத்தோடு பேசுகிறவர்கள் நிலத்திடம் போய்ப் பேசும் காலம் இலக்கியங்களாக வருகிறது. குற்றம் நிகழும் இடத்தில் ஒரு தடயம் கிடைக்கும் என்றால் குற்றப் போர் நிகழும் நாட்டில் மக்கள் பற்றிக் கொண்டு மேடேற ஒரு மிதவை இல்லமாலா போகும்.
       சக்கரம் சுழலும் இயல்புடையது. அது ஒன்றும் செவ்வகமோ சதுரமோ அல்ல. புத்தகங்கள் காலத்தின் வழியாக அவைகளும் ஒரு நாள் சக்கரங்களாக மாறும்.

அதி அழகான ஓவியமொன்றின் கதை-
நெடுங் கவிதையிலிருந்து சில வரிகளின் மூலமாக அற்புதமான சித்திரங்களும் படிமங்களுமான ஏ.ஏ.பைசாலின் முழுமையான ஆளுமையின் ஒரு கவிதையுடன் முடிக்கிறேன்.

நான் ஆவலாகயிருந்தேன்
நிலாவைக் கையால் பிடிக்க

அருகில் வந்த நிலா
அச்சிறு கடலின் மோகன நளினத்தில்
கைகள் தட்டிக் கொண்டாடி
எட்டாத நீரின் தொலைவுக்குள் போய்விழுகிறது

குதிரைப்பந்தயத்தில் தோற்றவனைப் போன்று
மனவேதனையடைகிறேன்.
மணலைக் கைகளால் அள்ளி வீசுகிறேன்
இப்போதெல்லாம் பௌர்ணமி இரவில்
என்மனம் உறங்குவதில்லை

என்று ஒரு கதையைச் சொல்லி முடிக்கின்றார்
கடற்கரைக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் முதிவயர்

பேச்சுத்துணைக்கு வந்து வாய்த்தார்
ஒரு பழங் கவி பக்-15
          அருபது கவிதைகளுக்கும் மேலாகப் பதிவாகியிருக்கும் கவிதைகளின் உளப்பாங்கும் நேர்த்தியான வரிசை ஒழுங்கும் திரும்பத்திரும்ப இலங்கையின் விவசாய நிலத்தையும் கடற்கரைகளையும் நினைவு படுத்துகிறது. அவர் கவிதைகள் யாவும் எதையும் இறைஞ்ச வில்லை. யார்மீதும் புகார் தெரிவிக்கவில்லை. இந்த நிலம் இப்படி இருந்தது. இது போலவே நிலத்தை மீண்டும் கால்பாவி நடக்க முடியுமா என்று யோசித்துப் பார்க்கிறது. இந்த நிலச் சித்திரங்கள் மூலமாக பழங்காலத்தின் சமூக அறுவடையை கற்பனை செய்கிறது பைசாலின் கவிதைகள். குறிப்பிட்ட கவிதைகளை விடவும் இன்னபிற கவிதைகள் காட்டும் நிலவியல் அழகுகள் உச்சம் பெற்றவை.
       நூலக்கு கவிஞரும் தமிழின் முக்கியமான விமர்சகராக திகழ்கிற வா.மணிகண்டன் நல்லதொரு அணிந்துரை வழங்கியிருக்கிறார். என்பதும் ஏ.ஏ.பைசாலின் கவிதை நூலை வெளியிட்டு சிறப்பு செய்த புது எழுத்து மனோண்மணியும் பாராட்டுக்குரியவர்கள். கவிதை வாசகர்கள் தங்களின் ஆதரவை வழங்கவேண்டும்.






நிலத்தோடு பேசுகிறேன்
கவிதைகள் கவிஞர் ஏ.ஏ.பைசால்

வெளியீடு

புது எழுத்து
2-205 அண்ணா நகர்
காவேரிப்பட்டிணம் -635 112
கிருஷ்ணகிரி மாவட்டம்
90421 58667   
விலை-ரூ.60-