வியாழன், 7 ஜூலை, 2016

யாழிசை மணிவண்ணனின் 'கூடுதலாய் ஒரு நுழைவுச்சீட்டு”


யாழிசை மணிவண்ணனின்

“கூடுதலாய் ஒரு நுழைவுச்சீட்டு

கவிதைக் கடவுச்சீட்டு-                  இளஞ்சேரல்

 

கதவாகிப் போன

மரத்தின் அடியில் துளிர்த்திருக்கிறது

குழந்தை வரைந்த இலை  -பக்-58

 

பெருமரத்தை விலைபேச

கூடி இருக்கின்றனர்

அதன் நிழலில்..        பக்-35

 

வேளாண்துறை மாணவனைப் பார்த்து

வெடித்த பிளவுகளின் வழியே

விரக்தியாய் சிரிக்கும் குளம்---பக்..32 

 

நள்ளிரவில்

சொல்லாமல் போனவனை

ஞானியென்று

ஏற்றிருக்க மாட்டாள்

சித்தார்த்தனின் மனைவி-  பக்- 50

 

கார்த்திகை தீபங்களோடு

நீரில் விடப்பட்ட கட்டெறும்புகளின் சாபம்

என் வெளிநாட்டு வாழ்க்கை..  பக்-51

 

           மேலும் கவிதைகளை வாசிக்க..  யாழிசை மணிவண்ணனின்

“கூடுதலாய் ஒரு நுழைவுச்சீட்டு“ வெளியீடு- பொள்ளாச்சி இலக்கிய வட்டம்- பில் சின்னாம்பாளையம் சமத்தூர் (அஞ்சல்)  பொள்ளாச்சி

90955 07547-98422 75662

 

இந்தக் கவிதை நூலை முன்வைத்து நமக்குள் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்வோம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமல்ல.. ஒரு வகையில் என் வாசிப்பு ஒரு கோழிச் சோறு...புதிய இளையதலைமுறைப் படைப்பாளர்கள் கூட்டாஞ்சோறு சமைக்கிறார்கள்.. புதிய கடல் வழிகள் புதிய நிலவழிகள் புதிய ஆகாச வழிகள் என அவர்கள் துளைத்துப் புகும் மொழியின் தீவிர தேடலில் மலரும் கவிதைத் தொகுப்புகள் நமக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது. வரவேற்போம் அவர்களுடைய படைப்புகளை விவாதிப்போம். விமர்சனங்களை காலம் அவர்களுக்குக் கொடுக்கும்.. தமிழ்க்கவிதையின் விமர்சகனை சில யுகத்திற்கு வெடித்த ஆற்றுப்பிளம்புகளுக்கும் வறண்ட வாய்க்கால்களைக் காண அனுப்பி வைப் போம்.. இந்த உலகத்தில் அறிவு வளராத ஒருவன் இருப்பானாகில் அவன் கவிதை விமர்சகனாகத்தான் இருப்பான். நமக்குள்ளே அவ்வப் பொழுது கிருமியாக முளைத்து விடுகிற விமர்சகனைத் தூரத் தள்ளி ஒதுக்கி விட்டு இயல்பான விசாரணையுடன் வாசிப்போம்.. அந்த வகையில் சில நூல்களை ஆதரித்து அதன் வியத்தகு படைப்பியலை அணுகுவது சரியாகும் என்று கருதுகிறேன்..

தமிழ்க் கவிதை மரபில் அயலகத் தமிழ்க்கவிதை மரபுகள் என்னும் வடிவமும் சொல்முறை மரபும் பேணப்படுகிற காலம். கடல் வழியாக நுழைந்த அந்நியர்கள் தீவுகளின் நாடுகளின் பொருளாதாரத் துறைமுகங் களைக் கைப்பற்றினார்கள். வியாபரங்கள்,பண்டமாற்று முறைகளில் கலாச்சாரங்களை அவர்களுடைய இலக்கிய முறைகள் சொல்கதை முறைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. வெறும் பண்டங்கள் மட்டுமே மாற்றிக் கொள்ளவில்லை. கவிதை,கட்டுரை,பயண இலக்கியம்,நாவல் கதைகள் வடிவம் எல்லாம் மாற்றிக் கொள்ளப்பட்டது. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிகளில் வெளிநாடுகளுக்கு பயணப்படும் புதிய தலைமுறை படைப்பாளர்கள் தமிழால் விரவினார்கள்..அவர்களால் தமிழ் எழுதாமல்,வாசிக்காமல் இருக்க முடியாமல் எழுத முனைந்தார்கள். படைப்பியக்கமாக செயல்படத்துவங்கினார்கள். அவர்களின் அந்நியமே அவர்களை இயங்கவைக்கிறது. இக்கரைக்கு அக்கரைப் பச்சை..என்பது போய் இந்நாட்டுக்கு அந்நாடு தேவலை என்பதானது.

         உலகமயமாக்கல்,நாடுகளை எளிதில் கடந்தும் வாழ்ந்தும் கொள்கிற அளவு கதவுகள் திறந்து விடப்பட்டது. ஒரு காலத்தில் மலையாளிகளும் இசுலாமியர்கள் மட்டுமே அந்நிய தேசத்தில் வாழ்கிற முனைக்கு இயல்பானவர்கள் என்பது போய் அவர்களுக்கு இணையாக தமிழகம் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாட்டு மக்கள் வாழப் பழகிக் கொண்டார்கள். அந்நிய நாட்டுப் பெருமைகள் பேசுகிறவர்கள் இப்பொழுது நம் உறவினர்களாக கூட மாறிவிட்டார்கள். ஒரு வீதியில் பத்து சதவிகிதம் பேர் வெளிநாடுகளில் வாழ்கிற கலாச்சாரம் மாறியிருக்கிறது. ஆனாலும் தமிழில் பேசுவதையும் தமிழ் வாசிப்பும் அவர்களுக்கு தீராத காதலைத் தருகிறது. பெரும்பாலான தமிழ் மக்கள் வெளிநாட்டிற்குப் போனபிறகுதான் தமிழ் இலக்கியங்களைக் கொண்டாடத்துவங்குகிறார்கள் என்பதே பேருண்மை.

             பழங்கால சிலைகள் மட்டுமல்ல தமிழ் மொழியும் இலக்கியங்களும் சிதறிப்போய் பல திசைகளில் விழுந்து அங்கு முளைத்து வளர்ந்து மறுபடிம் வெடித்துச் சிதறிப் போய் பல்லாயிரம் திக்குகளை அகப்படுத்துவதே அதன் நோக்கு. அந்தப் புதுவெளிகளிலிருந்து தமிழின் மிகச்சிறந்த படைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. நிலமும் வாழிடங்களும் வேறுவேறாக இருந்து போனாலும் அழிந்தாலும் தமிழ்க் கவிதையும் அது சொல்லும் காலப்பதிவுகள் மாறாத தன்மைகளாலானது.

யாழிசை மணிவண்ணனின் கவிதைகள் அப்படியான புதுவெளி திசையின் குரல். புதிய தலைமுறையின் கோட்பாடுகள். நம் தமிழ்நாட்டின் சிதறு தேங்காய் கொள்கைகளுக்கு அப்பாலானது. தொடர்ந்து ஒன்றின் மீது முரண் கொண்டு சதா சிதைப்பதே ஒரு சார்பு குழுவாதிகளின் செயல் பாட்டுநிலையாகவே இருக்கிறது. நம் சமூகத்தில் அரசியல் கள அறவியலும் இலக்கியக் கள அரசியலும் ஒன்றொடு ஒன்று கலந்து புணர்கிறவை. இந்த பாதிப்பு அயலகத் தமிழப் படைப்பாளர்களுக்கு வந்து விடக்கூடாது. பழங்காலத்தில் கருத்து,பொருள், அமைப்பியல் முறைகள் பற்றித்தான் கவிஞர்கள் புலவர்களிடத்தில் பிரச்சனை வந்து போனது. இன்று அப்படியல்ல. சாதி,பொருளாதாரம்,இனம், அரசியல் வலிமை ஆகியவையே தமிழ்க் கவிதையை நிலைநிறுத்துகிறது.

பொள்ளாச்சியில் கவிஞரின் நூலை நான் வெளியிட வேண்டும் அவருடைய தாயார் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார். கவிதைகளால் மேலும் மேலும் நண்பர்களுடனான உறவு காற்று போல நிரந்தரமாக நிலம்போல உறுதியாகி எங்கள் இலக்கியக் குடும்பங்கள் பெரிதாக வளர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. மொழியால் படைப்பிலக்கியத்தால் நாம் வளர்ச்சி கொள்கிறோமா அல்லது நாம் மொழிக்கும் படைப்பிலக்கியத்திற்கு உதவுகிறோமா என்பதே அறிவதே இந்த படைப்பியக்கம்.

        யாழிசை மணிவண்ணனின் கவிதை உருவகங்களும் அமைப்பும் வரிகளும் மிகவும் குறுகலானவை. ஹைகூவை விட மேலான அமைப்பும் புதுக்கவிதை மற்றும் குறும்பா வடிவங்களிலிந்து சற்றே குறைவானவை. குறட்பாக்களின் சொற்கட்டுமானமும் அது பேசும் வலியுறுத்துகிற கருத்தும் அறமும் சட்டங்களும் விதிகளும் கொண்டவையாக இருக்கிறது. அவர் தொடர்ந்து அந்த வடிவத்தைக் கையாண்டு வெற்றி கொண்டு வருகிறார். பொதுவாக கவிஞர் தனக்கான வடிவத்தை உருவகப்படுத்திக் கொள்வதற்கு முழுமையான சுதந்திரம் இருக்கிறது. தமிழ்க்கவிதையின் வளர்ச்சியில் நாம இந்தப் படிமங்களையும் ஆக்கங்களையும் காணமுடிகிறது.

“காரிகை கற்றுக் கவி பாடுவதிலும்,பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே..“ இந்தப் பழமொழி நினைவுக்கு வருகிறது. யாப்பு என்னும் கடலைக் கடக்க அது ஒரு கலத்தைப போல, கப்பலைப் போல உதவுமாம். இலக்கண முறைகளுடன் கவிதைகள் பாடிய சமூகம்  தொடர்ந்து போர்கள், கலகங்கள், கலாச்சாரக் கலப்புகள், மொழியின் வளர்ச்சி, தொழிற்நுட்பக் கருவிகளின் வளர்ச்சி என்பதாக ஒரு சமூகம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியாகவே தமிழக்கவிதையின் வளர்ச்சியும் தொடர்ச்சியாக மாற்றம் கண்டுவருகிறது.

எதுகை, மோனை,அடியும் ஓசையும்,அசையும்சீரும், வாய்பாடுகள், அறுசீர்விருத்தங்கள், எழுசீர்விருத்தம், எண்சீர்விருத்தம், அகவல்,ஆசரியப்பா,வெண்டலையும் வெண்பாவும் வெண்பா வகைகள் இன்னிசை வெண்பாவும் சிந்தியல் வெண்பாவும் பஃறொடை வெண்பாவும் கலிவெண்பாவும், கலித்துறை வகைள். விருத்த வகைகள், தரவு கொச்சக் கலிப்பா,யாப்பிலக்கணம், இப்படியாக தமிழில் கவிதை வகைகள் பேசிக் கொண்டே போகலாம். இந்த கவிதைகளின் வகைகள் சமூக காலகட்டங்களையும் சேர்த்தே குறிக்கிறது. அந் நாளைய மொழியின் கூறுகளையும் தமிழ் வளர்ச்சியையும் சேர்த்தே அளவிடுகிறது. கவிதைகளின் தன்மையை வைத்து காலத்தையும் வாழ்வு முறைகளையும் அறியும் மானுடவியல் கோட்பாடுகள் அறிவிக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்கள் வெறுமனே பாட்டுகளோ சந்தவகைகளோ அல்ல. அதுவே  முழுமையான அந்நாளின் வாழ்வு முறையும் கூட. பாடி வைப்பதும் எழுதிப் போவதும் பொழுதுபோக்கு அல்ல. அதுவே ஒரு சமூகமும் மனிதனும் வாழ்ந்த வாழ்வின் அடையாளம். இருப்பின் தீராத பதிவுகள்.

            கவிதைகளின் வகைகளில் கவிஞனின் அகமும் சொல் முறைகளும் அவனுக்கான வடிவமும் ஒருசேரக் கட்டமைத்துக் கொள்கிறான். யாழிசை மணிவண்ணனின் கவிதையின் பாணி என்பது வெண்டாழிசை அமைப்பும்  சிந்தியல் வெண்பா மற்றும் வெள்ளொத்தாழிசை வடிவங்களாகும் இந்த வடிவில் அமைந்த பழந்தமிழ்க் கவிதைகள் அசையும் சீரும் ஓசையும் அமைந்தவைகள். இந்த அமைப்பியல் கவிதைகளில் பல திருவாசகத்தில் இருப்பதை அறிவோம்.

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்

கூட்டிய வாபாடி உந்தீபற

கொங்கை குலுங்கிநின் றுந்தீபற

 

ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்

ஆகாசங் காவலென்றுந்தீபற

அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற

 

       யாழிசை மணிவண்ணனின் கவிதைகளில் பொருத்தப்படும் கருத்துகள் சமூக இயல்புகளைப் புறம் பேசுகிறவை. நம் காலத்தில் இவ்வடிவத்தை பல திரைப்படப்பாடலாசிரியர்கள்.திரைக்கவிகள் பயண்படுத்தியிருக்கிறார்கள்.கதைகளின் திரைக்கதைகளின் ஓட்டங்களுக்குத் தகுந்த உணர்வுகளையும் தனித்த சமூகப் பிரச்சனைகளை முன்வைத்து எதுகை மோனை சந்தம்,ஓசைநயம், ஆகார ஏகார ஓகார ங்களுடன் மெல்லிசைக்கு ஏற்ப தங்கள் சொற்களையும் சேர்த்து அமைத் துள்ளதை இன்று நாம் கேட்டு வருகிறோம். மூன்று நிமிடப் பாடல்களில் ஒரிரு வரிகள் மட்டுமே தமிழில் அதிகம் பேசப்பட்ட வரிகள் இருக்கும். பிற்பாடு அதே வரிகள் பல பாடல்களில் பல படங்களில் அவர் பயண்படுத்திக் கொள்வார். தமிழ்ச் சினிமா பாடல்களில் உள்ள கவிதைகள் என்று பேசப்படுபவை யாவும் பத்துப்பாடல்கள் மட்டுமே திரும்பத்திரும்ப ஒலிப்பதாகவே இருக்கும். ராகம்,பாடுபவரின் திறமை,இசைக்கோர்வை, இசையமைப்பாளர்களின் தனித்த திறமை இவற்றின் வழியாக ஒரு பிரபலமான பாடலில் தமிழ்க்கவிதையும் இணைந்து தன் பங்கிற்கு வாழ்ந்து வருகிறது. இதை நான் தெரிவிக்க காரணம் இவர் போன்ற இளைய தலை முறை தமிழ்க்கவிஞர்கள் தனக்கான பாதையை தன் மொழியைக் கட்டமைத்துக் கொள்கிற முனைப்பு மிக்கவர்கள் எதிர்காலத்தில் தமிழ்க் கவிதையின் தரத்திற்கும் புதுமைக்கும் முயற்சி செய்யவேண்டும்.

மேலும் சில பழங்கவிதைகளை வாசிக்கலாம்

 

“நண்பி தென்று தீய சொல்லார்

முன்பு நின்று முனிவு செய்யார்

அன்பு வேண்டு பவர்..

 

அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி

ஒன்னா ருடைபுலம் போல நலங்கவர்ந்து

துன்னான் துறந்து விடல்

 

ஏடீ அறங்கொல் நலங்கிளர் சேட் சென்னி

கூடா ருடைபுலம் போல நலங்கவர்ந்து

நீடான் துறந்து விடல்..“

 

“பாவாய் அறங்கொல் நலங்கிளர்சேட் சென்னி

மேவார் உடைபுலம்  போல நலங்கவர்ந்து

காவான் துறந்து விடல்.“

 

             இந்த வரிசையில் யாழிசையின் கவிதை ஒன்று..

 

அப்படியொன்றும் பெரிதல்ல

இந்த வானம்

ஒளிந்து விளையாட இடங்கொடுத்த

அம்மாவின் முந்தானை போல்.. பக்-30

 

        இப்படியொரு அசாத்தியமான கவிதை எழுதிய கவிஞன் தாய் அருகில் வெளியீட்டு விழாவின் பொழுது. இந் நல் வாய்ப்பைப் பொள்ளாச்சி இலக்கிய வட்டமும் யாழிசை மணிவண்ணனும் அன்பின் காரணமாகத் தந்தார்கள்..அன்பிற்குப் பாத்திரமானேன். ஆனால் தமிழ்க்கவிஞன் அருகில் இல்லை. நான் அருகில் அமர்ந்திருந்தேன். இப்படியாகவே அவருடைய முதல் நூலை வானம்பாடி மூத்த கவி ஆளுமை இயல் அறிஞர் புவியரசு வெளியிட தயார் மற்றும் கவிஞர் தனசக்தி வெளியிட்ட நிகழ்வு நிகழ்ந்தது கோவையில்.

அப்பொழுதும் ஆகாசமான சிங்கப்பூரில் இருந்தான். யாழிசை மணிவண்ணனின் தாயாரும் நூல் குறித்துப் பேசிய நண்பன் துரையும் தமிழின் கண்ணீரால் கவிஞனை வாழ்த்தினார்கள். தமிழ்க் கவிதை உலகம் இனி வாழ்த்தப் போகிறது..

 

முற்றும் துறத்திலின் பொருள்

அவனதிகாரத்தில்

தன்னை வென்றவன்

அவளதிகாரத்தில்

உலகை வென்றவள் – பக்-19       

 

திருவிழாவின் கண் வான்பொறி போல் விசுக் கென்று வெளிப்படுகிற தோட்டாவைப் போல கானலில் மின்னித் துள்ளிப் போகிற காயலைப் போல வடிவங்கள் பற்பல தொகுப்பில்..

 

         யாழிசை மணிவண்ணின் கவிதைகள் தொடர்ந்து முகநூலில் மற்றும் பற்பல இணைய இதழ்கள், சிற்றிதழ்களில் வெளியாகி வருகிறது. சமகாலத்தில் தமிழ்க் கவிதையைக் கொண்டாடுகிற மனமாக அவர் மனம் செயல்படுகிறது. இலக்கிய நண்பர்களை ஒருங்கிணைக்கிறார். புதிய படைப்பாளர்களை ஊக்குவிக்கிறார். அவர்களுக்காக நேரம் ஒதுக்குகிறார். அவருடைய முயற்சிகளுக்கு உறுதுணையாக உள்ள நண்பர்களைப் பெற்றிருக்கிறார். யாழிசை மணிவண்ணன் போன்ற கவிஞர்களுடன் பயணிக்கிற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக