வியாழன், 7 ஜூலை, 2016

ஆதிமுகத்தின் காலப்பிரதி- கவிதைகள் இரா.பூபாலன்


ஆதிமுகத்தின் காலப்பிரதி எனும் சிற்சில கவிதைப் பிரதிகள்

இரா.பூபாலன் கவிதைகள்

ஒரு கவிதை பற்றிய விவரணை- ததயூஸ் ரோஸ்விட்ச்ட் கவிதை

அந்த எழுதப்படாத- உன்னதக் கவிதையை- ஞாபகப்படுத்த முயன்றேன் ஏறத்தாழ கனிந்து- இரவில் உருக்கொண்டு-தொட்டு உணரும்படியாய்- அது மூழ்கி- காலைவெளிச்சத்தில் கரைந்தது- அது இருக்கவில்லை- சமயங்களில் அதை- என் நாக்கின் நுனியில் உணர்ந்தேன்-ஆவலுடன் கையில் பேனாவுடன் அமர்வேன்- பொறுமையுடன் காத்திருந்து- அது ஒரு மாயை என்று நிச்சயமானபின்-நான் நகர்ந்து செல்வேன்-கவிதை உத்தேசமாய்-ஒரு கவிதையைப் பற்றியதாய்- ஒரு முத்து- முத்துக்களைப் பற்றிப் பேசுவது போல்-ஒரு பட்டாம்பூச்சி- பட்டாம்பூச்சிப் பற்றிப் பேசுது போல்- --------------------------------------------------------                                நன்றி தமிழில் பிரம்மராஜன்

            நடப்பில் எழுதப்படுகிற கவிதைகளில் எளிமையான விளக்க முறை பாங்கில் அமைந்த கவிதைகளில் கவிஞர் இரா.பூபாலன் கவிதைகளின் தீவர வாசகன் நான். இவருடைய கவிதைகளில் பேணப்படுகிற கட்டாய ஒழுங்கு பிறர் கற்றுக் கொள்ளவேண்டியது. தீவிரமிக்க ஒழுங்கு வகையான கவிதைகள் என்று ஒப்புக் கொள்ளலாம். ஒழுங்குகளில் எத்தனையோ ஒழுங்கு வகைகள் உள்ளது. இந்தச் சமூகம் ஒழுங்கின்மையால் அமைந்திருப்பவை. மிக எளிதில் ஒரு சட்டம் ஒரு பெருங்குழுவை ஒழுங்கு படுத்திவிடும். இவ்வாறே ஒழுங்கின்மை நம் நடைமுறையில் துவங்கிவிடுகிறது. இதனால் என்ன பிரச்சனை. எதற்கு கவிதைகள் ஒழுங்கின்மைகளைச் சிதைத்துச் சிதைத்து ஒழுங்கைச் சீர் செய்ய வேண்டும். இந்நிலையில் அக ஒழுங்கு புற ஒழுங்கு என்பன முக்கியமானவை. நம் சமூகத்தில் மிக இயல்பாய் கிடத்து விடுபவைகளுக்கு மரியாதை இல்லை. இவை ஊதாசீனப்படுத்தப் படுகிற ஒழுங்கு வகைகள். இப்படியான சூழ்நிலைகளில் கவிதைக்கென்று ஒரு செயல் ஒரு பங்கு இருக்கிறதென்று கொண்டால் அது குறைந்தபட்சம் தற்போக்கு மிகுந்த தூய அழகியலை எல்லையாகக் கொண்ட ஒற்றை நோக்கம் உடைய தேடலைக் கைவிடவேண்டும் என்று ஒரு கவிஞன் வாதிடுவது இயற்கைதான்

        தற்கால தமிழுலகப் பொதுமைக் கவிதைகள் இணையங்கள் மற்றும் சமூக ஊடக வலைத்தளங்களில் மிக அதிகமாக, பரவலாக எழுதப்படுகிறது. பெரும்பாலும் அனைத்துப் பயண்பாட்டாளர்களும் கவிதைகள்,பதிவுகள்,கருத்துகள் எழுதுகிறார்கள். தன் மன வாக்கில் தன் அனுபவத்தின் இன்ப துன்பங்களைப் பகிர்வதெல்லாம் சில சமயம் கவிதைளையும் மிஞ்சுகிறது. அவ் வகை கருத்தூட்டங்களுக்கு இடையே தமிழுக்கு நல்ல கவிதைகளைத் தொடர்ந்து எழுதி கவனம் பெற்று வருகிற கவிஞர்கள் படைப்பாளர்களில் சிறப்பானப் படைப்புகளைத் தருவதில் இரா.பூபாலன் முக்கியமானவர். தமிழில் மிக விரைவில் மூன்று தொகுப்புகளை அதுவும் தன் முயற்சியில் வெளியிட்டிருப்பதும் வரவேற்கப்படவேண்டியது. இலக்கியப்படைப்பு முயற்சியே எதிர் நிலைச் செயல்பாடுதான். நான் உங்களுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறேன் என்று சொன்னாலும் இந்த சமூகம் நம்பாது. இதுவே அதிகார வரம்படுக்கு சமூக அமைப்பின் இயல்பும் கூட.

       கவிதைகளை எழுதிவிடுவதின் மூலம் நம் எல்லாக் குற்ற உணர்வுகளிலிருந்தும் விடுதலை பெற்ற பாக்கியசாலிகளாகிறோம். சமூகத்தின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் நிலவும் ஒழுங்கற்ற சித்திரங்களில் முக்கியமானது குற்றச் சித்திரங்கள். நாமும் பார்வையாளர்களே. இதைக் கடந்து போக முடியாது. எல்லா திடகாத்திரமான உடல்களுக்குள்ளும் இயலாமை என்னும் பிசாசு குடிகொண்டிருக்கிறது. எளிய உடலாளி தன் வயத்தில் சுயத்தை இழந்து கொள்ள முடிவெடுத்த போதைகளுக்கோ சந்நியாசியாகவோ அல்லது குற்றங்களின் உரிமையாளனாகவோ மாறிவிடுகிறான் என்பதை காட்சிக்காரன் கூண்டிலிருந்து கவிஞர் இரா.பூபாலன் செவிமடுக்கிறார். மனிதாபிமானமிக்கக் கவிதைகளைத் தொடர்ந்து கவிஞர்கள் யாருக்காக எழுதுகிறார்கள் எனத்தெரியவில்லை. இந்தக் கட்டுரை எழுதும் பொழுது இரண்டு சம்பவங்கள் ஒன்று பெருமாள் முருகன் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு படைப்பாளியின் சுதந்திரத்தை பறிக்க முடியாது என்றும் ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. அதுபோலவே கங்கைக் கரையில் திருவள்ளுவரின் சிலையைக் குறிப்பிட்டபடி அங்கு நிறுவுவதற்கு ஒரு மதவாத கும்பல் திருவள்ளுவர் ஒரு சூத்திரர், அவர் சமணர் என்று எதிர்ப்புத் தெரிவித்து பல இடங்கள் அலைக்கழித்து ஒரு வழியாக சம்பந்தமில்லாத இடத்தில் சிலையை நிறுவியிருக்கிறார்கள். அதற்கு முயற்சி எடுத்தவர் தான் என்ன செய்வது என்று புரியாமல் தவித்திருக்கிறார் பாவம்.

“தனக்குவமை யில்லாதான் றாள் சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்ற லரிது.“

 

         குழந்தைகளின் ராஜ்யத்தில் சட்டமும் தர்மமும் ஒன்றுதான். நல்லவேளை குழந்தைகளின் சாட்சியங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. குழந்தைகள் உண்மையே பேசும் என்று நம் நீதிமான்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆபத்தின் பொழுது என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்கிறது. கவிஞர்கள் கூட குழந்தைகளிடமி ருந்து அவ்வளவு எளிதாக தப்பித்து வரமுடிவதில்லை இக்கவிதையில்

 

கதைப் புத்தகத்தின்

பக்கத்தில்

புலி துரத்திக் கொண்டோடும்

மானுக்குக்

கூடுதலாக இரண்டு

கால்கள்

வரைகிறது குழந்தை          பக்-42

 

     இரா.பூபாலன் கவிதைகள் பெரும்பாலும் குழந்தைகளுடனான உரையாடல்களுக்கு முக்கியத்துவம் தருவார். சிலசமயம் குழந்தைகளின் கண்களைப் பொருத்திக் கொள்கிறார். முந்தைய தொகுப்பிலிலுள்ள கவிதைகளிலிருந்தும் சமகாலத்தின் சில கவிதைகளிலும் குழந்தைகளின் செயல்பாடுகளும் கேள்விகளும் விசாரணைகளும் உள்ளது. சமீபத்தில்  சென்னைக்கு ரயிலில் சென்றபோது அருகில் ஒரு குடும்பம் பயணிக்கிறது. பிறந்த இருமாதங்கள் ஆன குழந்தைக்கு கண்களில் ஏதோ பிரச்சனை. அதற்காக அவர்கள் சென்னை மருத்துவரிடம் முன் அனுமதி பெற்று அழைத்துப் போகிறார்கள். கடும் வெயிலும் காற்றாடிகளின் சத்தமும் ரயிலடியின் இறைச்சலுமாக அந்த குழந்தையின் உலகில் நுழைந்திருக்கிறது. அந்த தாய்க்குப் பாலூட்டப் போதுமான தனித்த இடமில்லை. குழந்தைகளைப் பெற்று வளர்த்த மக்கள் தங்களின் இடங்களுக்கான போட்டியில் இருக்கிறார்கள். சில நிமிடங்கள் விளக்கு களை அணைத்தோம்.

         சமீபத்தில் ஒரு திருமணம். சரியான கூட்டம்.விருந்து நடைபெறுகிறது.ஒரு தம்பதிகள் அழும் தன் பச்சிளங்குழந்தைக்கு ஒரு இட்லியைப் பாலில் கரைத்து ஊட்டிக் கொண்டிருந்தார்கள்.என்னதான் அந்த உறவினர் நட்புகள் மணமக்களை விருந்து உண்டுவிட்டு வாழ்த்தினாலும் அந்தப் பச்சிளங்குழந்தையின் வாழ்த்துக்கள்தான் முக்கியமாகிறது.

முப்பத்தியொரு முறை

சுற்றிவிட்டு

பதிவேற்றம் செய்யப்படவில்லை

என்று விழி பிதுங்கி நிற்கிறது

ஒரு நல்ல கவிதை         பக்—33

 

         பொதுவாக கவிஞனின் வாழ்க்கை குறித்து நம் சமூகத்தில் எத்தனையோ எள்ளல்கள் இருக்கிறது.பகடி, இம்சை, சுய பச்சாதாபம் உள்ளது. பொதுவெளியில் தமிழாசிரியருக்கு என்ன மரியாதையோ அதுவே கவிஞனுக்கும். அவனின் நல்ல கவிதைக்கு அல்லது அவனே நல்ல கவிதை என்று கருதுகிற கவிதைக்கு சரியான மதியாதை கிடையாது. இன்று கைப்பேசியில் கவிதைகள் லட்சம் அடுக்கமுடியும்.சமயத்தில் நம்முடைய நல்ல கவிதையைத்தேர்ந்தெடுக்க சுழற்றும் போதும் தேடும் போதும் கிடைக்காது போகும். அப்படியே தொகுக்கப்படும் பொழுதும் நிச்சயம் சிலவை நம் பரபரப்புக்கு வந்து சேராது. அச்சில் ஒரு மாதிரியும் அசப்பில் ஒரு மாதிரியும் நூலில் ஒருமாதிரியும் வாய்த்து எரிச்சல் கொடுக்கும். நல்ல கவிதை எனும் ஒரு வஸ்துவை வைத்துக் கொண்டு திரிகிற வலி கவிஞனுக்கே வெளிச்சம்.

 

தனித்தனி

சட்டகத்திற்குள்

ஒரு  பறவை

ஒரு வானம்

ஒரு நெல்மணி

 

விரல்களில் தூரிகை

பிடிக்கத்தெரியாதவனுக்கு

வாய்த்தன இந்த வரிகள்

 

அவன் பிரித்ததை

இணைத்து விட்டேன்

பறவை நெல்மணி வானம் கவிதை------ பக்-27

 

          இந்த இடத்தில் கவிஞன் ஓவியனாகிறான். ஒழுங்கு வகைமை கவிதைகளின் பாங்கு இந்த இடத்தில் மீண்டும் ஒளிர்கிறது. இப்பொழுது நவீன கவிதையின் பாங்கான ஒழுங்குகளைச் சிதைத்தலுக்கு எதிரான வகைமையே இந்த ஒழுங்கு செய்தல் என்பதை நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். கவிதை எந்த இடத்திலிருந்து எந்த இடத்திற்கு நவீன பாதைக்கு நகர்கிறது என்பதை நாம் உணரலாம் அல்லது நம் கவிதை எந்த இடத்தில் பொது வெளியைத் தகர்க்கிறது அல்லது ஒத்துப் போய் விடுகிறது என்பதை நாம் அறியலாம். சிம்பாலிசக் கவிதைகள் கோலேச்சியபோது அதற்கு எதிரான கவிதை இயக்கமான அக்மேயிசத்தின் விஷேசமான கவிஞராக அறியப்பட்டவர் ஒசிப் மெண்டல்ஷ்டாம். சிம்பாலிஸ்டுகளைப் போல கவிதையில் பில உலகங்களுடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று பிரகடனமே செய்தனர் அக்மேயிஸ்ட்கள். இரா.பூபாலன் கவிதைகள் பல பியுச்சரிசத் தன்மை கொண்டதாகவும் உள்ளது. தொகுப்புகளில் ஒவியங்கள் பற்றியதாகவும் கட்டிடக்கலைகள் குறித்தும் பதிவுகள் உள்ளன.

 பியுச்சரிசம் 1909 ஆம் ஆண்டு இத்தாலியில் எப் டி. மேரினெட்டி என்ற கவிஞரால் தொடங்கப்பட்டது பியுச்சரிச இயக்கத்தில் நிறைய ஓவியர்களும் கட்டிடக்கலைஞர்களும் இணைந்தனர்.  ஒவ்வொரு கலைகளுக்கும் தனித்தனி பிரகடனங்கள் வெளியிடப்பட்டன. இதன் தாக்கமே ரஷ்யப்புரட்சியின் பின்னணியில் இதுவே ஒரு காரணம். தற்காலத்தில் எழுதப்படுகிற கவிதைகள் எதிர்காலநலனியல் எனும் பியுச்சரிச கோட்பாடுகளுக்குரியவை.

அருகருகே

இரண்டு முக்கோணங்கள்

மலை உருவாயிற்று

 

நடுவில் ஒரு வட்டம்

சூரியனாயிற்று

மலையின் உயரத்தைத்தாண்டி

மரம் வரைந்தாயிற்று

இரண்டுவிவடிவக்

காக்கைகள்

சூரியனைத் தொட்டுப்

பறக்கின்றன

இரண்டு நீள் வட்டங்கள்

மேகமாகி விட்டன

வேறெப்படி வரைந்து

காட்டுவது..?

வானத்தை வரைந்து

தரச்சொல்லிக்

கெஞ்சும் மகளுக்கு... பக்-18

 

          தகவல்களுக்கு அப்பாலும் கவிதைகளுக்குள் சமரசமற்ற கவித்துவத்தை வைப்பது என்பது இரா.பூபாலன் தேர்ந்தவர். மிக எளிய சொற்களில் பெரும் பயங்கரத்தை விளித்துவிடுவார். கவிஞர்களுக்கு சமகால அரசியல் பார்வை மிகவும் அவசியம்  உலக கவிதை இயக்கத்திற்கு அரசியல் கருத்துக்கள் மிக அவசியம். அரசியல் பற்றிய விமர்சனங்களும் எதிர் வாதங்களும் மனித சமூகத்திற்கு அவசியம். கவிதையும் கவிஞனும் அரசியல் மயப்படுத்தப்பட்டவர்கள் ஆவார்கள். தங்கள் சுய வாழ்க்கை எனும் தளத்தில் யோசித்தாலும் சுட கவிதை அவர்களின் கவிதையை எழுதிச் செல்லும்.

 

இரா.பூபாலன் தனது கவிதைகளில் சமகாலத்தின் அரசியலைப் புகுத்தியிருக்கிறார். கறிவேப்பிலையிலிருந்து அணு ஆயுதம் வரை அரசியல் மயப்படுத்தப்பட்ட சர்வதேசத்தைப் பேசாமல் எந்தப் படைப்பும் இருக்க முடியாது. நிலம் எந்த திசையானாலும் ஒன்றுதான். அனைத்தையம் கடந்த ஒரு நிலையை ஒரு யோகியோ சன்யாசியோ எடுக்கும் பொழுது கவிஞன் அந்த தகுதியை எடுக்காமலா போவான்..

குழந்தைகளின் பாலில்

கொடுங்கலப்படம் செய்தவன் தன்

கோப்பையில் மது நிரப்பி

சியர்ஸ் சொல்லிக்கொள்கிறான்

 

தன் தலைவியின்

கைதைக்கண்டித்து

தீக்குளித்து இறந்தவனின்

கருகிய உடலைக்கட்டியழும்

மனைவியின் முந்தானையை

இழுத்து அழுகிறதொரு பிள்ளை--  பக் 76

 

 

 

   கவிதைகளின் வழியாக இந்த உலகம் இன்புற ஒழுங்கின்மைகளைச் சரிசெய்து ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தை உருவாக்க முனைகிற கவிஞர்களின் கவிதைகளை நாம் வரவேற்போம்.. இரா.பூபாலன் கவிதைகள் தொடரவேண்டும் மேலும் பல தொகுப்புகள் வரவேண்டும்.. வாழ்த்துக்களுடன்

இளஞ்சேரல்

 

ஆதிமுகத்தின் காலப்பிரதி- கவிதைகள் வெளியீடு-  ஆசிரியர். இரா.பூபாலன் பொள்ளாச்சி இலக்கிய வட்டம்- பில் சின்னாம்பாளையம் சமத்தூர் (அஞ்சல்)  பொள்ளாச்சி

90955 07547-98422 75662

 

1 கருத்து:

  1. அருமையான அடர்த்தியான பதிவு நன்றி உங்களுக்கு. வாழ்த்துக்கள் பூபாலன்

    பதிலளிநீக்கு