கவிஞர் சிவ விஜயபாரதியின் “வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது..“ தொகுப்பு
குறித்து......
திராவிட இயக்கப் படைப்புகளின் தற்கால
நிலையென்ன.சமகாலத்தில் அப்படியான வகையில் எழுதப்படுகிறதா. அப்படியே திராவிட
இயக்கக் கவிதைகள் எழுதப்படுகிறதா. திராவிட இயக்கக் கவிதைகள் என்பது எப்படி
இருக்கும். அப்படியொன்று உள்ளதா இல்லையா எனும் கேள்விகள் உதித்து மறையும். ஒரு
நாள் நண்பரொருவர் சொன்னார். தமிழ்நாடு கேரளம் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில்
எழுதப்படுகிறவை அனைத்துமே திராவிட இயக்கப்படைப்புகள்தான் என்றார். அக்கருத்தை
ஆனித்தரமாக நிறுவி வாதிட்டார். அந்த வாதத்தில் தமிழ்த்தேசியம் என்பது எந்த
இடத்தில் உள்ளது. என்னும் வாதம் நீண்டு திராவிட இயக்கக் கவிஞர்கள்
என்பவர்களெல்லாம் யார் என்னும் பட்டியல் நீண்டு கடைசியாக திராவிடக் கட்சிகளைக்
கலைத்துவிடலாம் என்பதில் வந்த முடிந்து போனது. தனித்தமிழ் இயக்கங்கள் வகுத்த
கட்டளைகள், பொதுத்தமிழ் வளர்த்து வருகிற தமிழாங்கிலசம்ஸ்கிருத தேவநாகரி மொழி
வழக்குகளின் படைப்புகள் பற்றியும் விவாதங்களிடையில்தான் கவிஞர் சிவ விஜயபாரதியின்
“வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது..“ தொகுப்பு வாசித்தேன்.
முன்னுரைகள் முறையே வானம்பாடி மூத்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர் புவியரசு
இந்த தொகுப்பு பற்றி இப்படி எழுதுகிறார். ”இரண்டாயிரம்
ஆண்டுகளாய் நின்று கொண்டிருக்கும் வள்ளுவ மரத்தின் புதுமலர்“ என வருணணை
செய்திருக்கிறார். தோழர் கொளத்தூர் மணி “நம்பிக்கை தரும் பகுத்தறிவுக் கவிதைகள்” என வகை செய்திருக்கிறார். கவிஞரின் உரையில் கவிக்கோ அப்துல் ரகுமான்
கவிதைகளின் வாசகர் என்பதைப் பதிவு செய்கிறார். நாம் இந்த வகையில் ஏறக்குறைய
திராவிட இயக்கக் கவிதைகள் என்று முடிவுக்கு வருவதற்கு மேற்கண்ட அறிமுகங் கள் உதவி
செய்துவிடுகிறது. பொதுவாக நாம் திராவிட இயக்கம் பற்றிப் பேசுகிற பொழுது ஆட்சி
அரசியல் பகுதிகளை நீக்கிவிட்டு சிற்சில நடவடிக்கைகளைச சேர்த்துக் கொண்டால்தான்
உரையாடலைத் தொடர முடியும் நீங்கள் திராவிட ஆட்சிகள் குறித்த விவாதங்களை உள்ளே
நுழைத்தால் பிறகு இருவரும் காவல்,நீதிமன்றம்,சட்டம் ஒழுங்குகளுக்குச் செல்வதாக
மாறிவிடும். ஆகவே..
“வெள்ளக்காக்கா
மல்லாக்கப் பறக்குது...” சாதிச் சண்டைகள் நடந்த சமயத்தில் தன்
விசுவலிங்கமாமா பாடிய பாடலின் வரிகளையே தன்
தொகுப்பிற்குத் தலைப்பிட்டிருக்கிறார். பொதுவாக சமகாலத்தில் சமூக உணர்வு
ஊட்டுதல்,சாதி சமய வேறுபாடுகளைக் களைதல், ஏற்றத்தாழவு களை உடைத்தல்.லஞ்ச ஊழல்களை
ஒழித்தல் போன்ற ஆபாச நடவடிக் கைகள் நடைபெறுவதில்லை. அப்படியாக நடக்கும்
போரட்டங்களுக்கு என்ன வரவேற்பு இருக்கிறது என்பதை நாம் அறிவோம். இருந்தாலும்
போராடமல் இருக்கமுடியாது. இதெல்லாம் நடப்பதே திராவிட இயக்க ஆட்சிகளில்தானே என்று
நீங்கள் எதிர்கேள்வி கேட்க கூடாது. இதற்குதான் நான் முன்பே எச்சரித்து
தவிர்த்துவிட்டுவாசியுங்கள் என்று விண்ணப் பித்தேன்..இக்கட்டுரை எழுதும் பொழுது
தாமிரபரணி ஆற்றில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு அஞ்சலி நாள் இன்று. பல்வேறு
அரசியல் கட்சிக்காரர்கள் ஆற்றிற்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள் (சில திராவிடக்கட்சிகள்
போகவில்லை).
சிவ விஜயபாரதியின் கவிதைகளிலிருந்து
சிறப்பான கவிதை யுடன் உரையாடலைத் தொடங்குவோம்.
செம்பருத்திப் பூ
துவட்டப்படாத தலை
நீரைச் சொட்டிக் கொண்டிருக்க
துளசி மாடத்தைச் சுற்றிவந்து
துளசியின் மேல் செம்பத்திப் பூ
பரப்பி விட்டு விழுந்து வணங்கினாள்
எதிர்ப்பட்ட என்னிடம்
படபடத்த விழிகளோடு
வி பூதியை நீட்டினாள்
துளசிக்குள்
செம்பருத்தி பூத்திருந்தது
தொகுப்பில் மேலும் சிறந்தகவிதைகள் உள்ளது.
இயல்பான நேரடிக் கவிதைகள் அவை. இனக்குழு சார்ந்த கவிதைகள். முருகன் சாந்தன்
பேரறிவாளன் ஆகியோரின் குரலாக ஒரு கவிதை. அரசியல் விடுதலை பேசுகிற கவிதைகள்.
கிராமத்தில் நடக்கும் மூட நம்பிக்கை களுக்கு எதிரான கவிதை,சாதிய மோதல்கள்களால்
பாதிக்கப்படுகிற மனிதம் பற்றிய கவிதைகள். சாதிய உருவாக்கங்கள் பற்றிய கருத்துகளின்
மீதான கோபங்கள் எல்லாம் எதிரொலிக்கிறது. தமிழீழம் சார்ந்த துயரம் நிறைந்த
கவிதைகள். தமிழ்க்கவிஞன் எழுதித்தீர்த்துக் கொள்ளவேண்டிய எல்லா அம்சங்களும் கொண்ட
கவிதைகள். சமூக அரசியல் களப்பளியாள ர்கள் நடைமுறையில் உள்ள நேரெதிர் கள அரசியல்
முறைகளை அறிவார்கள். அவர்களுக்கும் கவிதை வரிகளால் சமூகத்தின் இயல்புகளைச்
சாடவேண்டும். அறைகூவல் விடுக்கவேண்டும். இக் கொடிய நிலைகளுக்கு எதிராக மக்கள்
திரண்டு அநீதிகளைத் தட்டிக கேட்கவேண்டும். போதும் சகிப்புத்தன்மை பொங்கி எழுங்கள்
மக்களே..ஏற்றத்தாழ்வு கொண்ட பழமைமுறையைத் தகர்ப்போம் என்னும் பொருளில் சில
கவிதைகள். மீத்தேன் வாயுத் திட்டத்தை எதிர்த்து ஒரு கவிதை
சம்பா குருவ வெதவெதச்சோம்
களையெடுத்தோம் கதிரறுத் தோம்
தென்னை வாழை நட்டு வெச்சோம்
குலையும் சீப்புமா வளர்ந்து நிக்கும்
வகை வகையா வளர்ந்த பூமி
மீத்தேனுக்குள்ள மாட்டும் கத
நெனச்சா வயிறு குமுறுது
காடும் கழனியும் கருகிப் போக
பசியும் பஞ்சமும் வந்து நிக்கும்
வெளைய வச்ச எங்க மக்க
வட்டிக் கடனுக்குச்ச் செத்தா போக?
பொதுவாக
புரட்சிகரமான கவிதைகள் என்கிற படிமத்தில் சமகாலத்தில் கவிதைகள் வருவதில்லை. அல்லது
கவிதையில் புரட்சியைப் பேசி என்ன பயன் என்று கூட கவிஞர்கள் விட்டிருக்கலாம்.
அல்லது தமிழுக்கும் புரட்சிக்கும் சம்பந்தமில்லையென்று கூட நினைத்திருக்கலாம்.
எதற்கு வம்பு என்று கூட தவிர்த்துவிடலாம். கவிஞர் சிவ விஜயபாரதி கவிதை
விமர்சகர்களைக் கண்டு அச்சமடையாமல் தைரியமாக கவிதை அல்லாத கவிப்பின்னல்களை
எழுதியிருக்கிறார்.
கவிதை எப்படி வேண்டுமானாலும் எழுத சுதந்திரம்
உண்டு. கவிதை எந்த இடத்தில் கவிதையாக மாறும். எதோடு கவிதையின் அழகு முடிந்து
விடுகிறது என்பதை அறிந்து கொள்வதும் நலமே.. மேலும் ஒரு சிறந்த கவிதையை
வாசிக்கலாம். புதுக்கவிதையின் உயரத்தின் நிழலுடன் ஒளிர்கிற கவிதையாக
அமைந்திருக்கிறது.
மழை விட்டிருந்தது
வெக்கை குறையத் தொடங்கி
மாலைப் பொழுதில்
நட்பின் சுவை மாறாது
பேசிக் கொண்டிருக்க
திரண்டிருந்த மேகம்
கொட்டிக் கொண்டிருந்தது
ஆவியாய்
குறைந்து கொண்டிருந்தது
தேநீரின் சூடு
நட்பின் மேய்ச்சல் நிலத்தில்
மேய்ப்பராகிய நீ
பைபிளை ஒதுக்கி
அழைப்பிதழை எடுத்து நீட்டுகிறாய்
வெட்டும் மின்னலில்
முகிழ்க்கும் மூங்கில் குழந்தையென
நினைவுகள் நமக்குள்
அடைக்கும் தாளற்று
திரளும் கண்ணீரை
மறைக்கிறோம்
கட்டுடைத்த அன்பு
மௌனமாய்
நீண்டு கிடந்தது
மழை விட்டிருந்தது
தனக்கு நண்பனாக இருந்து சாதிய அடுக்கில் உயர்ந்தவனாக
அறியப்பட்டு விட்டவன் தன் இல்லத்து விழாவிற்கு அழைப்பிதழ் தருகிற காட்சியை
அறிமுகப்படுத்துகிற இடத்தில் கவிஞனின் இயல்பு சிறப்பாக வெளிப்படுகிறது.பொதுவாக பல
நூறு புரட்சிக்கவிதைகள் செய்ய வேண்டிய வேலையை இப்படியான ஒரு கவிதை செய்து
விடுகிறது. இந்த நூலில் முழுக்கவும் மழை கவிதைகள் அதிகமாகப்
பொழியப்பட்டிருக்கிறது. சாதியப் பற்றுகள் அதிகமாக உள்ள ஊர்களில் மழைக் காலங்கள்
எப்படியிருக்கும் என்பதை உணர்த்துவதாக உள்ளது.
இந்த நூலுக்கு தமுஎக சங்கம் வைத்திருந்த அறிமுக விழாவில் கவிஞர் சிவ
விஜயபாரதியின் உரையைக் கேட்டிருக்கிறேன். நல்ல பேச்சாளராகவும் இருக்கிறார். அவர்
உரையிலும் தமிழ்ச்சமூகத்தில் புறையோடிப் போய்விட்ட சாதிய அமைப்புகளைச் சாடினார்.
நம் பண்பாட்டில் சாதியத்திற்கு எதிராகப் பேசுகிற சாதியும் சாதி ஆதிக்கத்தைத் தான்
நிலைநாட்டுகிறது என்பது பொருள். தங்கள் சாதிகளும் மேல்நிலையை அடைந்து தற் பொழுது
உள்ள மேல் சாதிகள் அனைத்தும் கீழ்சாதிகளின் நிலைக்கு வந்து கீழ் சாதிகள் என்று
கட்டமைக்கப்பட்டவர்கள் மேல்சாதிகளாக அதிகாரங்களைக் கைப்பற்றி பழிக்குப் பழி
வாங்குவதல்ல என்பதை சாதியைத் தகர்க்க நினைக்கிறவர் களும் இன்ன பிற ஏனைய
எதிர்ப்பாளர்களும் அறிவார்கள் என்று அறிகிறேன். நிலம் அதிகாரம் பணம் அடியாள்
நிறுவனம் என்று சகல அள்ளக்கைகளுடன் இருக்கிற சாதிகள் எந்தக் காலத்திலும் அழியாது
என்பதை கவிஞர் சிவ விஜயபாரதி உள்ளிட்ட முற் போக்காளர்கள் நம்புவார்கள் என்று
கருதுகிறேன். காரணம் ஒன்றுமே இல்லாதவர்கள் கொள்கையில் வலுவாக இருக்கும் பொழுது
மேற்கண்டவர்கள் தயிர் சாதம் மட்டுமே சாப்பிடுவார்கள் என்று கருதக் கூடாது.
இறுதியாக அடுத்த ஒரு கவிதையுடன் முடிக்கிறேன். நினைத்துப் பாருங்கள் சாதிகளே
இல்லாமல் போனால் நமக்கு மண்டை காயுமா காயாதா...
பூவரசனும் புவியரசனும்
புரியாத பெருநகரச் சாலையொன்றில்
பரிச்சயமற்ற முகங்கள்
விரைந்து கொண்டிருக்க
பூவரசம் பூக்கள்
உதிர்ந்து கிடந்த
பழைய மரத்தினடியில் நின்றேன்
மழை தூவிக் கொண்டிருந்தது
இருவர் முகத்திலும்
நல்ல பேச்சாளராக இருப்பது கவிதை
எழுதுபவர்களுக்கு பலம்..அப்படியே கவிஞர்கள் நல்ல பேச்சாளர்களாக இருப்பது
கவிதைகளுக்கும் பலம். இரண்டில் எதையும் பேசியும் எழுதியும் சமூகத்துடன் நின்று
கொள்ளலாம். இக்கவிதைகள் திராவிட இயக்கக் கவிதைகளா, திராவிடம் எனப்படும்
பகுத்தறிவுக் கவிதைகளா என்பதை காலமும் அவருடைய இலக்கிய வாழ்வும் முடிவு செய்யும்.
அதுவரையிலும் திராவிட இலக்கியப் பரப்பில் கவிதைத் துறையில் ஒரு சிறந்த கவிதைப்
பிரதி இதுவெனச் சொல்லலாம்...வாசித்துப் பாருங்கள்.. கைப்பற்றி வாழ்த்துங்கள்...
வாழ்த்துக்களுடன்..
”வெள்ளக்காக்கா மல்லாக்கா மல்லாக்காப் பறக்குது“
கவிதைகள்-ஆசிரியர்
சிவ விஜயபாரதி
வெளியீடு-குயிலி பதிப்பகம்
44 ஊத்த மந்தை- கல்லூர் அஞ்சல்-
கும்பகோணம் தாலுக்கா
தஞ்சாவுர் மா
தமிழ்நாடு-612 503
அலைபேசி-97866 34522
விலை-70 ரூபாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக