கதிர்பாரதியின் கவிதைகள்
“ஆனந்தியின் பொருட்டு
தாழப்பறக்கும் தட்டான்கள்“
“தட்டான்கள்
தாழப்பறந்தால் மழை வரும் தெரியுமா” என்ற
ஆனந்தியின் இமைகளிலிருந்து
முதன் முதலில் தட்டான்கள் பறந்தபோது
எனக்குள் மழைவரும் போலிருந்தது.....
பக்.26
நவீன கவிதையின் அளவீடுகள்
என்னென்ன..கவிதையிலிருந்து நவீன கவிதை எந்த வகையில் வேறுபடுகிறது. நவீன காலத்தின்
மனிதனின் பிரச்சனைகளைப் பேசுகிறதா. நவீன காலம் என்பது என்ன..தொழிற்புரட்சியின்
யுகத்திலிருந்து நவீன காலம் துவங்குகிறது. ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீர் மூழ்கி
மோட்டார்களின் வழியாக நீரை உறிஞ்சுகிற வல்லமை பெற்ற மனிதனின் காலம் நவீன காலத்தின்
துவக்கம். நெருப்பை உருவாக்கவும் கண்டுபிடிக்கவும் அடர்வனத்தின் தீயைக்கண்டு
தெறிக்க சதுப்பு நிலப்பகுதிக்கு ஓடிவந்த காலம் நவீன காலம். குன்றுகளின் மீதும்
மலைச்சரிவுகளில் கால்நடைகளைப் பழக்கி வேட்டையாடித் தின்ற காலத்திலிருந்து
பெருமழைக்காலங்களில் நீர்த்தேக்கங்களின் ரம்மியம் பார்த்து கரைகளில் வாழும் பறவைக்
கூட்டங்களின் குடும்பங்கள் பார்த்து குடும்பங்களை உருவாக்கிக் கொள்வதற்காக
குடில்களை அமைக்கத் துவங்கிய காலம். பஞ்ச காலத்தில் பசிக்குப் பிறரிடம்
பறித்துதான் திங்க வேண்டும் என்பதால் கருவிகளை உருவாக்கிக் கொலைத்தொழில்
புரியத்துவங்கியது நவீன காலம். போதுமான அளவில் உடலில் ஆயுதங்களை வைத்துக் கொள்ள
முடியாமையால் பெருங்கிடங்குகளை முதலில் உருவாக்கி பிறகு வீட்டை உருவாக்க முனைந்த
காலம் நவீன காலம்.பறவைகளின் இயல்புகளைக் காப்பியடித்து வசந்த கோடை கார் பஞ்ச
காலங்களில் இடம் பெயர முனைந்த காலம். உலகின் முதல் விவசாயி ஆன பறவையின் மலத்தின்
வழி விளையும் உணவை உண்ணத்தொடங்கிய காலம். காட்டுத்தீயில் வெந்த மாமிசத்தின்
ருசியைச் சுவைத்த காலம். விறைத்த குறியை மூடிக் கொள்ளவும் ருதுக்குறியின்
உதிரக்கவிச்சியை உணர்ந்து முயங்க முனைய இலைகளின் ஆடையை அணியத் துவங்கிய காலம்.
கூர்வாட்களால் உடன்பிறந்தோரைக் கொல்லத்
துணியலாம் என்று போதனையைக் கற்ற காலம். பசிமறந்து அச்சமே துணையாகத் துடித்தடங்கி
குழிகளிலும் விதைகளைப் போல வெடிகளை விதைத்து சிறுவர் சிறுமிகளை முன் நடக்கவைத்து
பின் வெடிக்காலம் உணர்ந்த காலம். வேலிகள் அமைந்து அங்கேயே தின்று அங்கேயே பேண்டு
கழித்து முயங்கி இனப்பெருக்கம் செய்யும் காலம். உலகத்து மணற்பரப்பு எல்லாம்
ரசாயனம் தூவி உயிர்களை அழித்து உலோகப் பயிர் வளர்த்து ஒவ்வொரு பாறையாக வெடித்து
வெடித்துப் பார்த்துக் குதூகலித்துக் கொள்கிற காலம்.
இந்தக்காலங்கள் பற்றி உரையாடுகிற சொற்களை
நவீன மொழி என்று சொல்கிறோம். அந்தந்த யுகங்களில் அந்தந்த கேந்திரங்களில் அந்தந்த
பொழுதுகளில் நவீனன் பிறக்கிறான். அவன் பச்சயத்தின் பலனையும் சிறு சிறு
காணுயிர்களின் கீச்சிடல்களையும் மரக்கிளைகளில் ஊஞ்சலாடும் அணில்களையும் மரத்து
உடலைப் பங்கிட்டுக் கொள்கிற உயிருணிகளைப் பற்றிப் பேசுவான். ரசாயனத்தை அதன்
வீரியத்தைப் பொசுக்குவான். எவ்வித கனரக உலோகமும் குரிமணி உயிரையும் காவு வாங்காமல்
கவனித்துக் கொள்வான்
கதிர்பாரதியின் இரண்டாவது கவிதைத்தொகுப்பு ”ஆனந்தியின் பொருட்டு
தாழப்பறக்கும் தட்டான்கள்“ வாசிக்க நேர்ந்த சமயத்தில் பல நூல்களுக்கான வாசிப்பு
மற்றும் எழுதவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். முதல் தொகுப்பிற்கும் இரண்டாவது
தொகுப்பிற்குமிருக்கிற கடந்து வந்த தொலைவை
ஒரு கணம் யோசித்துப் பார்க்கிற போது தமிழ் நவீன கவிதையின் அடுக்கும்
உயர்ந்திருப்பதாக உணர்கிறேன். நவீன கவிதைக்குள் “லோட்” செய்யப்படுகிற வீரியமிக்க கலன்கள் மிக முக்கியமானது.
ஒரு கவிஞன் எந்தளவு உறுதிமிக்க புலன்களின் இருப்பைப் பொருத்துகிறான் என்பது அவன் கற்றதில்
இருக்கிறது. அனுபவங்களுக்கு அப்பாலும் கற்பனையும் சமகாலத்தின் வெடிப்பும்
பற்றாக்குறைகளும் அறிவுசார் சொத்துரிமைத்திருட்டுகளுக்கு அப்பாலும் செயல்படுகிற
நவீன மனத்தின் ஆன்மாவையும் சேர்த்தே கணக்கிடச் சொல்கிறது. நன்செய் புன்செய்
நிலங்கள்,வயல்கள், பொழிகள், ஏரிக் கழிகள், நீரேற்றங்கள் உள்பட பச்சயங்களும் உண்டு.
அறுவடைக்குப் பிந்தைய அடுத்த காப்பிற்காகத் தயாராகிற உரமூறிய பதமிக்க தீவனப்
பில்லுக்காடுகளும் உண்டு.
என் தாத்தாவிடம்
ஒரு கதை இருந்தது
சப்பரம் போல்
ஜோடித்துத்திரியும்
கொள்ளிவாய்ப்
பிசாசுகளும்
பலிகேட்டு நச்சரிக்காத
குலசாமிகளும் அதில்
இருந்தன
அவற்றின் குழந்தைகளாக
நாங்கள் இருந்தோம்.
என் தாத்தாவிடம்
உறக்கம் ஒன்று
இருந்தது
அதன் தலைமாட்டில்
பூவரசின் வேர்த்திண்டும்
கால் மாட்டில்
உதயமரத்தின் நிழல் துண்டும்
சாமரங்களாக மாறி
சேவையாற்ற
காலங்களும்
பருவங்களும் களைப்பாறியதுண்டு.
“எங்களிடம் நீர்முள்ளிப் பூக்கள் இருந்தன” எனும் நெடுங்கவிதையிலிருந்து
மேற்கண்ட சில வரிகள். ஒரு தலைமுறையில் எல்லாம் மாறி அழிந்து மீண்டும் ஒரு புது
யுகம் பிறக்கும் என்பதை வரலாறு நமக்கு அறிவிக்கிறது. நூறாண்டுகள் ஆகிவிட்ட
வீட்டைக் கொஞ்சம் மராமத்துச் செய்து வாழ்ந்து கொள்கிறது மனித சமூகம். பல
நூறாண்டுகள் அறுவடைகள் பார்த்த நிலம் மற்றும் வேளாண்மை மக்கள் ஞாபகம்
வருகிறார்கள். புடவைக்கடையில் விற்பனையாளன் மிக லாவகமாகவும் நேர்த்தியாகவும்
புடவையைப் பிரித்து நூல் மணக்க அயாசமாக வீசிப் பார்வையாளர்களுக்குக் காண்பிப்பது
போல பல நெடுங்கவிதைகள் தொகுப்பில் உள்ளது.
உரைநடைக் கவிதைகளின் தன்மையிலேயே
கவிதைகளின் பயணங்களும் மிக நீண்ட விவரிப்புகளும் கொண்டிருக்கிறது. தலைப்புகள்
மட்டுமே கவிதைகளைத் தனியாகப் பிரிக்காவிடில் ஒரு கவிதா விலாசத்தின் குறும்பாகள்
எனக் கருத வாய்ப்பிருக்கிறது. மனிதனின் காம விகாரமும் தீர்வற்ற முறைபொருந்தாப்
பசிக்கிறக்கமும் இந்த நிலத்தை சதுப்பு நிலமாக்கி வெள்ளாமையைப் பெருக்க வைத்தது.
பசுமைப் புரட்சிக்கு முந்தைய மனிதன் இடம் பெயர்ந்து கொண்டிருந்தான். புதிய ஏரிகளை
வெட்டி பெருநதியிலிருந்த நீரைக்கடத்தி வந்தான்.
“என் புறாவைப் பற்றிச்
சொல்லிவிடுகிறேன்.” ஒரு குளத்துக் குரவையாக” மீன் வளக் குறிப்புகள்..“
முக்கியமான கவிதைகள். சொற்களுக்குள் உருவகத்தீ கணன்று எளிதில் பற்றிக் கொள்ளக்
கூடிய ரசனை மனங்களைப் பற்றிப் பரவுகிறது. செய்திகளும் விவரிப்பும் வழி அறிந்த
ஒருவனின் கால்கள் போல தாவுகிறது. இலகுவாக நீந்திச் செல்கிறது. இன்று வரவேற்பு
அறையில் மீன்தொட்டி இருந்தால் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு நல்லது
நடக்கும் என்றும். மீன் தொட்டி இருந்தால் நாமும் கடலில் மிதப்பது போன்ற பிரக்ஞை
இருக்கும். பொதுவாக பற்பல வண்ணங்களைக் களித்துக் கொள்வதும் சாஸ்திரங்களில் உள்ளது
என பற்பல வியாபாரங்களில் மனிதன் ஈடுபடுகிறான். எப்படியும் மனித சமூகத்திற்கு
மனிதன் ஆற்றும் தியாகம் போல சில மீன்கள் நம் வரவேற்பரை செட் ஆவதற்குள் மரித்து
விடுகிறது.
உம் முன்னோரில்
இருவர்
ஐயாயிரம் பேருக்கு
உணவாகி
புகழுடை
தெய்வத்திற்கு நிகராக
வரலாற்றில்
பொறிக்கப்பட்டிருக்கிறார்கள் தெரியுமா என
சுவைக்குதவாத
அவற்றின்
இனத் தொன்மம் பற்றிப்
பேசவேண்டும்..
மனிதனைத் தவிர வேறெந்த உயிரினங்கள்
தங்கள் வாழ்வின் பதிவுகளைச் செய்து வைத்திருக்கிறது. யானைகளோ,புலிகளோ, பறவைகளோ
தங்கள் மூதாதையர்கள் பற்றிய ஏதேனும் குறிப்புகளைப் பதிவு செய்திருக்கிறதா.
அன்றியும் குறிப்பிட்ட ஒரு உயிரி பற்றிய பதிவையாவது மனிதன் செய்திருக்கிறானா. ஆனால் இந்நிலத்தின் அத்து ணை
உயிரிகள் தாவரங்கள் பருவகாலங்கள் பற்றிய தொகுப்பை அதன் வளத்தை அழித்தும்
வளர்த்தும் நெறி செய்கிற பொறுப்பாளான
மனிதன் இருக்கிறான்.
ஒரு நவீன கவிதையில்
முக்கியமாக இடம் பெற வேண்டியது. ஒரு கதை,ஒரு நாவல்,ஒரு சிறுகதை,ஒரு பயணக்கட்டுரை,
ஒரு காப்பியம். ஒரு மருத்துவனின் குடுவை, மாந்த்ரீகனின் சல்லாப பாடல், ஒரு
சூதாடியின் தந்திரம், ஒரு மழலையின் அறிவார்த்மான கேள்விகள். ஒரு வேசியின்
தீர்க்கதரிசனம், விந்தின் பிசுபிசுப்பு. மதர்த்தமான உப்புக் கவிச்சி. அழுக்குக்
கேசத்தின் வாசம். நமுத்த அணுகுண்டின் திரி, லாரியோ கார் குண்டோ வெடித்தபடியால்
சிதறிய உடல்கள். இப்படியாக அவனவன் திசைக்குத் தகுந்த மாதிரியான உரையாடல்கள்,
பட்டாசுக் காயம் பட்ட உடல் போன்ற சொற்றொடர்கள். இடையிடையே செனாயோ வயிலினோ
புல்லாங்குழலோ நாதஸ்வரமோ இசைக்கும் இசைக்குறிப்புகள்.
இவையெல்லாம் நவீன வாழ்வை
எழுதுகிற கவிஞனின் சுரைக்குடுவையில் மீந்திருப்பவை. அவன் இறைச்சலிலிருந்து ஒரு தேவ
வசனத்தின் பிராக்ருத அதிர்வை ராகமாக்குவான். தேமலிலிருந்தும் அழுக்குச் சிரட்டைக்
காயங்களிலிருந்தும் கடவுச்சீட்டை அந்நிய மண்ணில் இழந்திருக்கும் சமயத்திலும்
சொற்கள் எழுதுவான். இந்த
நவீனப் பொருளியல் சந்தை மற்றும் புலனுகர்வும் படித்தவர்களை பல நாடுகளை நோக்கிப்
பறந்து போகவைக்கிறது. இங்கு முப்பது வருசம் சம்பாதித்து ஓய்ந்து சாவதை விடவும்
அயல்தேசத்தில் ஐந்து வருசம் இருந்து வந்து விட்டால் இங்கு தலைமுறைக்கும்
பிரச்சனையில்லாமல் வாழ்ந்து கொள்ளலாம் என்கிற வசவு உள்ளது. சமூகத்தில் முப்பது
சதம் அன்னியச் செலாவணிக்காகவும் இந்தியாவின் கடன்சுமையை அதிகரிக்கவும் வாழ்கிற
வர்களும் உண்டு. ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியான சமயங்களில்
கீழ்த்திசைநாடுகளிலிருந்து ஆட்களை வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டு போய் ராணுவத்தில்
உலகப்போர்கள் சேர்த்து அவர்களை வைத்தே கோடிக்கணக்கான மக்களைக் கொன்று புதிய நவீன
உலகை ஏகாதிபத்தியம் நிறுவிக்கொண்டது.
இந்தத் தொகுப்பில் வீரியமிக்க
நவீன அரசியல் வாழ்வின் விமர்சனங்கள் இல்லை. சமகாலத்தின் கலாச்சார அரசியல் பற்றிய
மிகக் கூர்மையான அரசியல் பார்வைகளும் விமர்சனங்களும் நவீன கவிஞனுக்கு
முக்கியமானது.குறிப்பாக ஒரு பராரி ஏழை தேசத்தின் பிரதமர் தன் வாழ்நாலெல்லாம்
வெளிநாடுகளுக்குப் பறப்பதையே தன் அலுவலகப்பணியென்று நினைத்துக் கொள்கிற தேசத்தின்
கவிஞன் தன் பங்கை ஆற்ற வேண்டுமென்று நினைக்கிறேன்.
குறுங்கவிதைகளில் கவித்துமிக்க தரிசனங்கள்
அகப்படுகிறது. உரைநடைக் கதைகளில் திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிற அடுக்கடுக்கான
விவரிப்புகள் சற்று அயற்சியைத்தருகிறது. கதிர்பாரதிக்கு இயற்கையின் மீதுள்ள
கரிசனங்கள் கவிதைகளை அடுத்தடுத்த வாசிக்க வைக்கிறதும் கவிதைக்குத் திரும்பவைக்கிற
உத்தியாக எழுதப்பட்டவைகள் மிகவும் நேர்த்தியாக வந்துள்ளது. குறிப்பாக “இரவுக்கு
வெட்கமில்லை..“ கவிதையிலிருந்து சில வரிகள்..மிக சாதரணமான விவரிப்புகளில் குறும்
நகைச்சுவையெனத் துள்ளிக் கொண்டிருக்கிற வெட்டுக்கிளியின் சுறுசுறுப்பு இக்கவிதையில்
காணமுடிகிறது. கூத்தில் பார்வையாளர்களை மகிழ்வு கொள்ளச் செய்கிற கலைஞனின்
உடல்பாசாங்கும் வசனங்களும் போல அறியும் இக்கவிதை கதிர்பாரதியின் அழகுணர்ச்சிக்
கவிதைகளில் ஒன்று. கவிதையில் மேலிட்டு வருகிற மிகை தான் மிகு அழகு...
என் வானில் தேனிலா
ஆடாதாவென ஏங்குகிற
அமாவாசையின் பிள்ளை
நான்
எனினும்
என் கொல்லைப்புற வானை
கோடிக்கோடி
நட்சத்திரங்களால் அலங்கரிப்பேன்
மல்லாந்து படுத்தபடி
பார்ப்பேன்
ஒரு
மூக்குத்தியாக்கலாமா என்றுகூட யோசிப்பேன்
எனக்கும்
உன்
நினைவுகளுக்குமிடையில்
ஒரு சிகரெட்டின் அளவே
இருக்கும்
இடைவெளியின்
முன்முனையில்
ஆசையைப்
பற்றவைக்கிறது இரவு
உறிஞ்சி இழுத்த
இழுப்பில்
விடிகாலையின்
கிழக்குக்கு
சிவந்து விட்டது.
அணிகலன்களின் வழியாக ஒவ்வொரு மனித நாகரீகத்தின்
வளர்ச்சியை அளவிடமுடியும். ஆப்பிரிக்கத் தேசத்து கருப்பின மக்களும் செவ்விந்திய
பழங்குடிகளும் அணிகலன்களை உடலெங்கும் அணிந்து கொள்வதின் வாயியலாக அவர்களின் குலம்
மற்றும் கலாச்சார மரபையும் பாதுகாத்துக் கொள்கிறார்கள். தென்னிந்திய மரபில்
தொண்ணூறுகளுக்கும் வரையிலும் மூக்குத்தி மரபு இருந்து வந்தது. பட்டிக்காடா பட்டணமா
படத்தில் சிவாஜி மூக்குத்தி அணிந்து நடித்தார். தாய்மாமன் மடியில் உட்காரவைத்து
ஆண் பெண் குழந்தைகளுக்கு மூக்கு குத்தி முதலில் மூக்கையா மற்றும் மூக்கம்மா என்று
உறவுகள் குழந்தைகளை எள்ளலும் கேலியும் பாட்டுப் பாடி விழாவைக் கொண்டாடுவார்கள்.
அசலான தமிழ் மரபு வழி அணிகலன். நம்மிடம் ஒவ்வொரு அணிகலனுக்கும் கலாச்சாரப்
பின்னணியும் உள்ளது என்பதை இக்கவிதை ஞாபகப்படுத்துகிறது. காதலையும் அன்பையும்
பிரிவாற்றாமையையும் பேசும் பல சொற்களில் காதல்,நட்பு,உறவுகள் பற்றிய விவரணைகள்
இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு முகநூலில்
நண்பர்கள் வாயிலாக அனுப்ப ப்பட்ட பாலுறவுப் படங்கள் வந்து குவிந்தபோது பார்க்க
நேர்ந்த அனுபவம். கூகுளில் விவரச்சேகரிப்புக்கு அடுத்தபடியாக வெகுமக்களால் கோடானு
கோடி தடவைகளால் பார்க்கப்படுகிற காணொளிப்படங்களாக அவை உள்ளதை அறிவோம்.
அப்படித்தான் மாநிற கருப்பினப் பெண்களுக்கு “ப்ருநென்ட்டீ” என வகைமைப்படுத்தியிருக்கிறார்கள். அப்படி ஒரு
குழுகலவிப் படத்தைப் பார்த்த சமயத்தில் நடித்துக் கொண்டிருந்த மங்கைகளில் ஒருவர்
ஆசிய மங்கை என்கிறது பெயர்ப் பலகை.அம் மங்கை மூக்குத்தி அணிந்திருந்திருந்தார். மூக்குத்தியைப்
பார்த்தேன். அக் காட்சிகளுக்கு அவ் உடல்களுக்கு அப்பால் அந்த மூக்குத்தி சூரியனின்
நீள் கம்பி என்னைத் துளைத்துக் கொண்டிருக்கிறது
வாழ்த்துக்கள் கதிர்பாரதி
வெளியீடு உயிர்மை பதிப்பகம் -11-29- சுப்பிரமணியம்
தெரு அபிராமபுரம்-சென்னை 18- விலை ரூ 85