செவ்வாய், 10 மே, 2016

கடங்கநேரியான் கவிதைகள்

“சொக்கப்பனை“
“வியாபகம் மற்றும் வியாப்பியம்“
கடங்கநேரியான் கவிதை நூல் குறித்து
        
கவிதைகளில் எது நல்ல கவிதை எது கவிதை அல்லாத கவிதை எனும் விவாதம் என்றுமே இருக்கும். ஏற்றத் தாழ்வுகளும் சமூகத்தில் மேலோர் கீழோர் வசதி படைத்தோர் அதிகாரம் படைத்தோர் நிலமுடையோர் நிலமற்றோர்  இவ்வடுக்குகள் தீர்ந்து மறையும் வரையும் இதுவே நல்லது இது முறையற்றது எனும் மாறிகளும் மாறிலிகளும் ஊண் குறுத்துகள் போலுதித்துக் கொண்டே இருக்க வாய்த்தவை.
        
சமணர்கள் கழுவேற்றப் பட்ட துயர் வரலாற்று காதையை நினைவு படுத்தப் படுகிற கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்வாக இந்த சொக்கப்பனை ஏற்றுகிற நிகழ்வு நடந்து வருவதை நினைவு கொள்ளவைக்கிற தலைப்பு.. நந்தனாக, ஏகலைவனாக, புத்தனாக, நந்தியாக, பன்றியாக, கழுமரமாக இப்படியே தன் ஆன்ம பலத்தை புனைந்து கொள்கிற கவியாக இத் தொகுப்பில் அறியமுடிகிறது.

கொய்வதினும்
கொய்யப்படுவதே விருப்பமானதெனக்கு
வேல் கம்பு
நெஞ்சு கீறுவது வரம்
எதிர்பார்த்து நிற்கிறேன்
மாரிக்கால தவளைகளின் பாடலைப் பாடுகிறேன்
சர்ப்பங்கள் வளைக்குள்
ஒடுங்குகின்றன
கொள்ளிக் கலையமுடைத்து
நீர்க் கடனைடைக்க
இரண்டு மகவுகள் உண்டெனக்கு
மாயவலையறுக்கும் சூக்குமம் அறிந்தவை
என் குளத்து மீன்கள்
இறுதியாத்திரைக்குத்
தயாராக நிற்கிறேன்
எதிர்திசை பார்த்து
ஆனாலும்
உங்களது கண்கள்
என் முதுகிலேயே........ பக்-44
    கடங்கநேரியானின் மூன்றாவது கவிதை தொகுப்பில் உள்ள கவிதைகள் முழுக்கவும் அரசியல் அறக்கோட்பாடுகளின் வழியாக சமூகஇயலின் புனைவுகளைப் பேசுகிறவை. இயற்கை களவையுயும் நீர்நிலை மேலாண்மையை பேசுகிற குடியாக இக் கவிஞன் இருக்கிறார். தான் வாழ்கிற நிலத்தின் மலைகளின் நீரியல் ஆழங்களை, காற்றில் செயற்கையாக கலக்கப்படுகிற நச்சுகள் பற்றியும் கவிதை பேசுவது அவசியம்.
     
தனிமை,காமம்,சுயகழிவிறக்கம்,திணிக்கப்பட்ட ஏழ்மை, நிராகரிப்புகள் தீவிரமாக அண்டும் பயங்கரங்கள் பற்றியும் கவிதைகள் உண்டு. நீரின் அவசியத்தை தீவிரமான பிரச்சாரமா கவே பல வரிகள்.

கவிதைகள் கருத்துகள் சொல்வதற்கும் தத்துவச்செறிவுகள் அகச்சிக்கல்களை எழுதுவதும் மட்டுமல்ல மேற்சொன்ன புற நிலைகளும் பற்றி சமஅளவில் கவிதைகள் எழுதப்பட்டுதான் வருகின்றது. சமூக கொந்தளிப்புகள் ஏற்படுகிற பொழுது இப்படியான கவிதைகளே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும்.
தமிழ் கவிதைகளில் அகத்திற்கும் புறத்திற்கும் சரிசம அளவில் முக்கியத்துவம் அளித்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பசியின் நிவாரத்திற்கான போர் என்பதையும் பசி ஆறியபின் உரையாட வேண்டிய கலைகள் குறித்த ரசனையும் இவ்விரண்டுமே எது முதன்மை என்பதை ஆய்வதைவிடுத்து இரண்டும் அவரவர் பசி ரசனையும் குறித்த ஆர்வமும் அறிவும் குறித்தவை. நம்மிடம் பொதுமக்களுக்காக பேசுதல் பேசுதல் எழுதுதல் என்பதைக் கூட அநாகரீகமானவை. அறக்கோட்பாடு களுக்கு பொருந்தாதவை எனும் கருத்துகள் உண்டு. நிலவுடமையின் கருத்துகளும் சாதிய மத நிறுவனமயத்தின் கருத்துகளும் பொதுமக்கள் ரசனையில் பொதுகவிதை ரசனையில் முழுமையாக விரவியுள்ளது என்பதையும் கவிதை ரசனை பேசுகிறபொழுது நாம் கவனத்தில் கொண்டால் மிக எளிதில் நல்ல கவிதையை ரசித்துவிடலாம். இதெல்லாம் கவிதையா எனப் புறக்கணிக்கிற கவிதையில் உள்ள கவிதானுபவம் மேலோச்சி நிற்கிற தரிசனத்தையும் காணலாம்.

முன்னுரையில் கவிஞன் எழுதி வைக்கிற சொற்களும் உவமைகளும் கடப்பாடுகளும் சொல்லியே ஆகவேண்டிய பிரச்சனைகள் முக்கியமானவை. இங்கு கடங்கநேரியான் வைத்துள்ளவை யென்பதை நீங்கள் வாசித்தால் கவிதைகளை வாசிக்கும் போது பொதுரசனையும் கவிதைரசனையும் புரிந்து கொள்ளலாம்.

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே
வித்திவான் நோக்கும் புன்புலம்
கண்ணகன் தாட்குஉத வாதே அதனால்
அடுபோர்ச் செழிய, இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின்  நீர்நிலை
பெருகத்தட்டோர் அம்ம,
இவண்தட் டோரே,
தள்ளா தோர்இவண் தள்ளாதோரே..
 குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நீரின் அவசியத்தை அதனைக்காக்க வேண்டிய கடமையை அறிவுறுத்தியிருக்கிற கவிதை. இந்த நூலின் முன்னுரையில் இக்கவிதையைப் பயன் படுத்தியிருக்கிற காரணம் நமக்கு எளிதில் புரிந்து கொள்ளமுடிகிறது. அரசனுக்கும் மன்னர்களுக்கும் குறுநிலமன்னர்களுக்கும் குடிகளுக்கும் அருகில் மிக அருகில் கவிதை இருந்துள்ளதை அறியலாம். தற்கால கவிதை அரசுகளுக்கு அருகில் உள்ளதா..அன்றி எனில் ஏன் இல்லை எதன்பொருட்டு விழுந்து போனது இவ்விடை வெளி..ஓரிடத்துக் கவிதையில்

சொற்கள் அனைத்தும் தீர்ந்து
விட்டதாவெனக் கேட்டாள்
ஸ்பரிசம் ரயில் பூச்சியெனச்
சுரைக் குடுவைக்குள்
இருண்டு கிடக்கிறதென் காலம்.. பக்-28
    
நீர் பற்றிய படிமங்கள், நீரைக்குறித்த புனைவுகள் அதிகமான வரிகள். உணவும் நீருணவும் பற்றிய சொல்லாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளது. இதன் தாக்கத்தைப் பற்றிய அறிமுகத்தை தன் உரையில் குறிப்பிடுகிற பொழுது புத்த தேவன் தோற்றம் பற்றிக் கூறுகிற கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் கவிதையான
“பெருங்குள மருங்கில் சுருங்கைச்
சிறு வழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர் கொளப் புகும்

“சுருங்கை“ என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய் அதாவது பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒரு புறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன் தரும் அதுபோல செவித்துளை வழியாக நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இக் கவிதையின் பொருள். சமகாலத்தின் அரசியல், சமூக எதிர் நிகழ்வுகள் பற்றிய தனது நிலைப்பாடுகளைத் தனது கவிதைகளுக்குள் பேசியிருக்கிறார்.
     
ஏற்கெனவே குறிப்பிட்டது போல் ஏற்றத்தாழ்வுகள் பூமிப்பரப்பைப் போல நிலவடிவமைப்பு போல எதிர் கவிதை ஆக்கம் என்பது புறத்திணையில் எழுதப்படுகிறவைகள். கடங்க நேரியான் கவிதைகள் நிலவியல் சூழல் கொள்ளைகளை, நிறுவனமயப்படுத்தி பெருஞ்சுரண்டல்களை நடத்தும் அரசியலையும் சாடுகிறார். சில கவிதைகள் முழுமை பெற்ற பிறகு தொடர்வதும் கவிதைகளுக்குள் பொருந்திக் கொள்ளாத தன்வயப்படுத்தப்படுகிற அகச்சிக்கல்களையும் சேர்த்து குழப்பிக் கொள்வதையும் குறிப்பிடவேண்டும்.
      
எனினும் எதிர்நிலைக் கவிதைகளின் பதிவுகள் சரிக்குச் சரியாக தமிழ்க் கவிதையில் பதிவாகியே வருகிறது. சமூக ஏற்றத்தாழ்வுகளின் பாதிப்புகள், பண்பாட்டுச் சீரழிவுகள் பற்றி யும் கவிஞர்கள் மொழியின் ஓழுங்கும கட்டமைப்பும் துவங்கி காலத்திலிருந்து எழுதுகிறார்கள். அவ்வரிசை கவிதைகளும் சமகாலத்தின் பதிவுகளை ஒப்படைக்கிறது.
      
கவிதையாக்கம் செம்மையான கவிதைகள் பல உள்ளது. பனை மரங்களைக் காணும் போதெல்லாம் தோன்றுகிற கவிதைகள். இவ் வெயில் காலத்தின் மரநிழல்களில் திசைகள் விட்டு திசைகள் மாறி வந்து பெருநகரத்தின் மர நிழல்களில் குவிக்கப்படுகிற நுங்குகளிலும் பதநீர்த் தாழைக் குவிகளில் கவிதைகள் தென்படுகிறது. சொக்கப்பனையாகிற நெருப்பின் தகிப்பும் சொற்களில் சுடுகிறது.சீத்தலைச் சாத்தனார் நெருப்பு குறித்து பேசுகிற பொழுது நெருப்பும் புகையும் ஆகிய இரண்டில் நெருப்பில் புகை அடங்கித்தோன்றும். இதனால் நெருப்பு வியாபகம். புகை வியாப்பியம் எனப்படும். அதாவது ஒன்றில் ஒன்று அடங்கி உடன் நிகழும் பொருள்களில் அடங்காது மற்றதைத் தன்னில் அடக்கும் என்பதாகும்..(மணிமேகலை-400)
ஆதி முனியெனத் தேய்ந்தும் வளர்ந்தும்
நிலை கொண்டிருக்கும்
நிலவு
திரண்டு
உருகிப் பொழிவது
காற்றோடு கரைவதென
வருவதும்
போவதுமாய்
மேகத்திரள்
சம்பந்தரின் தயவில்
குருதி பருகிய
சமணப்பள்ளியின் காலடிக் குளம்
சலனமற்றிருக்கிறது
இவ்விரவில்
நீராடி கரையேறும் கவி
எண்பது கிலோமீட்டர் பயணம் செய்தாக வேண்டும்
உள்ளாடையை உலர்த்தும் போது
சமணத் துறவியின் ஆடை அணிகிறான்
..............................
............ பக்-41
வாழ்த்துக்களுடன்
வெளியீடு
வலசைப் பதிப்பகம்
எச்.1-எச்-2 65 ஆர் எம் காலனி.
திண்டுக்கல்-1-

9976402706

கனிமொழி.ஜி கவிதைகள்

கோடை நகர்ந்த கதை- கனிமொழி.ஜி கவிதைகள் குறித்து
கவிதைகளைத் தன் குழந்தைகள் போல்
பராமரிப்பவரின் கவிதைகள்...

காலத்தின் கடைசி மந்திரம்

இறுதியாய் இந்தக் கானகம்
என் கட்டுப்பாட்டில் வந்து விட்டது
ஆக்கவும் இயக்கவும் மாற்றவும் மற்றவற்றிற்குமாய்
இனியிங்கு எதுவொன்றும் என் விருப்பம் --  பக்-22    

    வாழ்வு அளித்த பரிசுத்தங்களில் நுமக்கு சௌகரியமானவை  யெவை எனக் கேட்கும் பொழுது பற்பல சாத்வீகமான அசௌகரியங்களின் பட்டியல்கள் நீளும். விவரிப்புகளுக்கு அப்பாலும் கடலின் எல்லை நெளிந்து கொண்டிருப்பது போல கற்பனைத் தூண்டில்களை வீசிப்பார்க்கத் தோன்றும். மிக நெருக்கத்துடன் இறுகிக் கிடக்கும் தீராப் பிரச்சனைகளும் விலகியே போய்க் கொண்டிருக்கும் அட்சயப்பாத்திரமும் எழுதுகிறவர்களைப் பிடித்து உலுக்குகிறது. இசைக் கருவிகள் வாசிப்பவர்கள் தொடர்ந்து வாசிக்கிறார்கள். வெளியேறிக் கொண்டிருக்கிற மக்கள் வெளியேறுகிறார்கள்.
பகலும் இரவும்  வகைக் கொரு வெளிச்சங்களும் வகைக்கொரு கருங்கலுமாக இருவகைப் பொழுதுகளில் நீந்துகிறோம். தீராப் பசிக்கு இயற்கையின் ஓசையே இசையே ஆகாரமென வாழும் கோடினானுகோடி சீவராசிகளில் மனிதனும் ஒரு உயிரி.
          இருப்பைத் தன் சகவாசிகளுக்குத் தெரிவித்துக் கொள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட இசையே மொழியாகும். லட்சக்கணக்கில் பொழுதில் மசவெக்கையின் நிழலுக்கும் மாலையின் புழுதிக்கும் பறக்கிற வௌவால் குஞ்சுகள் தன் இனத்தையும் தாயையும் உடன்பிறப்புக்களையம் அது அறியும்.
     கவிஞனின் மொழியை கவிஞன் அறிவான்.கவிஞனை மனிதன் அறிவான். இச்சைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட கட்டளைத் தகர்க்கிற வழிகளை கவிஞன் அறிவான். கவிஞன் எல்லா ஒழுங்குகளையும் ஒழுங்கீனங் களையும் கலைக்கவும் கட்டுப்படுத்தவும் உரியவனாகிறான். கற்பிரதிகளிலிருந்தும் பாறைச் சித்திரங்களிலிருந்து கானுயிர்களின் வடிவங்களிலிருந்து மொழிச் சொற்களுக்கான வகைகளை வடித்துக் கொடுத்தான். மொழிச்சித்திரங்கள் அனைத்துமே மிருகவாசம் கொண்டவை.
      கனிமொழி.ஜி கவிதைகள் புலப்படுத்தும் காட்சிகளும் விவரிப்புகளும் சகலமும் பேசுகிறது. கோடை நகர்ந்த கதை மட்டுமல்ல வேனலையும் வெம்மையையும் சொல்கிறது. முந்தைய தொகுப்பான மழை நடந்தோடிய நெகிழ்நிலத்தில் மழைக்காலத்தின் நிலவியலைப் பிரதியாக்கினார். இத்தொகுப்பில் கடற்பகுதிநிலங்களின் தகிக்கும் வெம்மையை அகச்சித்திரங்களின் வழி தனலைப் பேசியிருக்கிறார்.
இரவு

பொழுதின் கூர்மை முற்றிலும் முடமாகி
விழும் கதிரின் ஒளிர் விளிம்புகளோடு
உருமாறும் முகிற்செறிவில் விரிகிறது
இரவு குறித்த ஒரு மாயச்சித்திரம்

உலர்ந்த தென்னை மட்டையொன்று
பிடிப்பிழந்து விழுந்த சத்தத்தில்
உடைந்த விரிசல் வழியே
மெல்ல வெளியேறுகிறது இவ்விரவு-  பக்17

         கனி யின் இக்கவிதை பல நூறு இரவுச்சித்திரங்கள் பேசும் “மணிமேகலை“காப்பியத்தின் சில கவிதைவரிகளை நினைவு கொள்ள வைத்தவை.

ஏஉறு மஞ்ஞையின் இனைந்து,அடி வருந்த,
மாநகர் வீதி மருங்கில் போகி,
போய கங்குலில் புகுந்ததை எல்லாம்
மாதவி-தனக்கு வழு இன்று உரைத்தலும்-
நல்மணி இழந்த நாகம் போன்று,அவள்
தன்மகள் வாராத் தனித் துயர் உழப்ப,
இன்உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்,
துன்னியது உரைத்த சதமதி-தான்-என்
( துயிலெழுப்பிய காதை)
 ( சதமதி அம்படிப்பட்ட மயிலைப் போல் நெஞ்சம் நைந்தாள். தன் மெல்லிய அடிகள் வருந்துமாறு புகார் நகரின் பெருவீதிகள்வழியே சென்று மாதவியை அடைந்தாள். சென்ற இரவில் நடந்ததையெல்லாம் அவளிடம் வழுவாது கூறினாள். தன்னுடைய மகளான மணிமேகலை திரும்ப வாராததால் மாதவி பெருந்துன்பம்  அடைந்தாள். நல்ல மணியை இழந்த நாகத்தைப் போல வருந்தினாள் மணிமேகலைக்கு நேர்ந்ததை உரைத்த சதமதி இழந்த உடலைப் போல அசைவற்று நின்று கொண்டிருந்தாள் )
        கனிமொழி.ஜி கவிதைகளில் முழுக்கவும் வெப்பவியல் நிலங்களின் வெம்மையும் உம்மையுடன் இருக்கிறது. தன் கையில் எப்பொழுதும் சிறு தூண்டிலொன்றுடனே வாழ்வதான கனவிலும் எழுத்தில் கவிதையில் புனைவையும் இணைத்துக் கொள்கிறார். தற்பொழுது தான் வாழும் கடற்கரையோரங்களில் உப்பளங்களும் உவர்ப்பு மிகு நிலத்து மனிதர்களின் உணர்வுகளுமாக அமைந்திருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதும் சமயத்தில் மீன்பிடி தடைகாலத்திற்கான ஓய்வில் மீனவர் சமுதாயம் தங்கள் சிறு கப்பல்களையும் படகுகளையும் கரைகளில் நாங்கூரமிட்டுவிட்டு ஓய்விலிருக்கிறார்கள். கோடையில் கடற்கரைகள் கடும் வெம்மையுடன் தகிக்கும். எல்லா நதிகளும் அணைக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. நதிகள் வந்து கடலில் கலக்கிற காலத்திற்காக காத்திருக்கிற கடலும் உவர்ப்பின் வழி ஊத்துப் பொருமி குடிநீராகிற கடல் நீரை அருந்துவதான கவிதை ஒன்று..கனிஜி கவிதைகள் புறம் பேசும் நிலப்பரப்பு குறித்தவை..
நதியருந்தும் கடல்

தீராவேட்கையுடன்
நீந்தி வருகிறதோர் நீரரவம்
நிதானமாய்ப் பற்றி அருந்துகிறது
நிலப் பெருங்கடல்----பக் 39
       வேனல் காலத்தில் பேசப்படுகிற கவிதைகள் குளிர்விக்க வேண்டிய அவசியமில்லை. இலையுதிர்காலத்திற்கு முந்தைய வேகையால் கறுகிக்காய்கிற மரஉச்சி இலைகளின் வாழ்வை பேசுகிறது உலக கவிதை ஒன்று..
ஏப்ரல்- நான்சி மோர்யான் (கியுபா)

வானத்தின் அடியில் பறக்கும் அந்த இலைகள்
எங்கள் தேசத்தின் தாய்மொழி
சூறாவளியின் பகைமையான சோர்வை
சுவாசிக்கும் இந்தப் பறவைகள்
அறியும். எல்லா ஆக்ரமிப்புகளையும்
கட்டவிழ்த்துவிடுவது ஏப்ரல்மாதம் தான் என்பதை
என் ஜன்ம பூமியே
கடலோரத்தில் கடுஞ் சீற்றத்துடன் நிற்கும் உன்னை நான்
காண்கிறேன்
நான் நடக்கும் இந்தப்புழுதி நிலம்
உன்னதமான பொதுத்தோட்டமாகும்
நாம் போரில் இறந்தால் மீண்டும்
நம் எலும்புகள் மணல் மீது உயிர்த்தெழும்
முன்நோக் முடியாத ஏப்ரல் மாதத்தில்
இயற்கைபோல் தூங்கும் இந்தத் தீவில்
நமது ஆவிகள் தங்கி வாழும்
இந்த தொகுப்பிலும் நிலங்களின் பல்வகைத் தரைகளின் கவிதைகள் உண்டு. நீள் கவிதைகளுக்குள் உள்ளாற ஓடும் சில வரிகளில் வாசிக்க அமைகிறது.

முத்தத்தின் வாசனை

வெம்மை இறங்கும் இம்மாலையில்
நசுங்கிய புல் வரப்பில் அமர்ந்து
அவள் நாசியை நினைவூட்டும்
வெள்ளை நிற எள்ளுப்பூ ஒன்றைப்
பிய்த்து முகர்கிறான்
எங்கோ இருக்கும் அவனை
ஒரு முத்தத்தின் வாசம் சூழ்கிறது... பக்-55

        இந்தக் கவிதை அகநானூற்று செவ்வியல் சங்க கவிதைகளின் காலத்தை நினைவு கொள்கிறது. எள் மலர் பற்றிய பதிவு ஆச்சர்யமாக உள்ளது.

வருவர் என்று உணர்ந்த மடங்கெழு நெஞ்சம்
ஐயம் தெளியரோ, நீயே பலவுடன்
வறன் மரம் பொருந்திய சிள்வீடு உமணர்
கணநிரை மணியின் ஆர்க்கும் சுரனிறந்து
அழிநீர் மீன்பெயர்ந் தாங்கு அவர்
வழிநடைச் சேறல் வலித்தி சின் யானே- அகநானூறு...

(அப்பறவைகள் போல), அவர் திரும்பி வருவார் என எண்ணும் அறிவற்ற நெஞ்சமே ஐயம் நீங்கித் தெளிவாயாக! வறண்ட மரங்கள் அடர்ந்த இடத்தில் சிள் வண்டுகள், உமணர்கள் வண்டியிலுள்ள மணிகள் போ ஓசையிடும் பாலை வழியைக் கடந்து நீர் அற்ற இடம் விட்டு நீர் உள்ள இடத்திற்கு மீன்கள் போவது போல, அவர் சென்ற வழியே  நடத்தலை நான் துணிந்துள்ளேன்..

     கனிமொழி.ஜி இரண்டாவது கவிதை நூல் இது. ஐம்பத்தி நான்கு கவிதைகள். சிலவை நீள் கவிதைகளும் காட்சிகளும் உண்டு. குறுங்கவிதைகளும் சிள் ஆச்சர்யங்கள் காட்டும் கவிதை வரிகளும் உண்டு. பற்பல பொருள் பேசும் உள்ளடக்க விவரிப்பு கொண்ட கவிதைகளும் உண்டு. நான் குறிப்பிடாத சிறப்பு மிக்க கவிதைகளான தேசமெங்கும் பெருமரங்கள், காலக் கடிகாரங்கள், கூடற்காலம், குறிஞ்சி நிலக்குருவி யொன்று, வலியின் நிறம், ஒரே வாகனம் உள்ளிட்ட கவிதைகளில் கவிஞரின் கற்பனை வளம் சாத்தியமாகி யிருக்கிறது. மிக நேர்த்தியாக முடிந்து விடாத சம்பவங்களும் கைநழுவிப் போய்விடுகிற அற்புதமான இயற்கை வாய்ப்புகளும் கவிஞனின் சொற்களாகிறது. அகச் சட்டகங்களுக்குள் புறவயப்பட்ட கட்டளைகள்தான் கவிதைகள் என்கிறார் கவிஞர். ஏமாற்றங்களிலிருந்து தனக்கான ஒரே ஓர் எள்ளுப்பூவைப் பறித்திருக்கிறார் கவிஞர்.. மேலும் பற்பலக் கவிதை நூல்களுடன் வலம் வருவாராக என..
வாழ்த்துக்களுடன்
இளஞ்சேரல்


வெளியீடு

கோடை நகர்ந்த கதை
கவிதைகள்- ஆசிரியர் கனிமொழி.ஜி

விலை ரூ 75-
உயிர்மை பதிப்பகம்
11-29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்

சென்னை 18

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

கவிஞர் யாழியின் ”கேவல்நதி” குறித்து

-         பகலறையின் தாழ்ப்பாழ்
-         கேவல் நதி
யாழியின் நான்காவது கவிதை தொகுப்பு குறித்து
இளஞ்சேரல் 
ஒரு முறை மலைப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். பாதையின் ஒரு புறம் பெரும்பள்ளங்களும் மரங்களின் உச்சிகளும் தலை வனத்தில் நீண்ட வெள்ளி முடிபோல சிறுகச் சிறுகக் கொட்டுகிற அருவி. இவ்வனத்திற்கும்  அவ்வனத்திற்குமிடையான மலைச்சரிவுகளுக்கு அப்பால் காதலில் திளைத்துக் கொண்டிருக்கிற பறவைகளை பறவைகளின் மூதாதையர்கள் தங்கள் குரலில் அடிக்கடி அழைத்துப் பார்த்துக் கொள்வதும் பதிலுக்கு இதே இந்த மலைப்பகுதியிலருகில் தான் இருக்கி றேன் நிலப்பகுதிக்குச் சென்றிடவில்லை எனும் பதிலை ஷெனாய் மொழியில் கங்குமைனா சொல்கிறது. அங்கே என்னவாம் பிரச்சனை என் பதாக பற்பல பறவைகள் பேசுகிறது.
        பாதையில் எம் வாகனம் மூச்சிறைத்துக் கொண்டு ஏறுகிறது. பாதைகளின் திருப்பங்களுக்கு ஏற்ப இரு மருங்கிலும் நீண்டு குறுகுகிற சிறுவழிகளில் இரு சக்கரவாகனங்கள் நுழைந்து லாவகமாகத் தப்பித்து கீழிறங்குவதும் மேலேறுவதுமான சாகசங்கள். இருள்,வெயில்,பச்சயம், வாய்ப்புக் கிடைக்கும் போது பனிப்பொழிவும் கொஞ்சம் சிறுமழைத் தூறல்களுமாக பகலின் மலைப்பொழுது நகர்கிறது.
   மேலே ஏறுகிற பெரும் பாரம் கொண்ட  டிரக் லாரிகள் தன் எல்லா குதிரைத்திறன்களையும் இசைத்து ஏறிட முற்படுகிற வேதனை கண்டு கிழிறங்கி வருகிற மற்ற நான்கு சக்கரவாகனங்கள் சற்றே மேலேயே ஒதுங்கி நின்று கொள்கிறது. அந்த பாரவண்டி ஓட்டுநர் தனக்கு வழிவிட்டு மேலேயே தான் செல்லும் வரை காத்திருக்கிற அவ்வண்டியின் ஓட்டுநர்களுக்கு நன்றி சொல்லுகிற விதமாக மெல்லிய கீபோர்ட்டின் ஸ்வரக்கட்டை ஒன்றை மீட்டிடுவதைப் போல் நன்றியை மீட்டுகிறார்.
          இம்மலைக்காற்றில் தனக்கான நன்றி ஒன்று மிதந்து வருகிறது என்பதை அறிந்த ஓட்டுநர் பதில் நன்றியை இசைக்கிறார். பாதையைச் சௌகரியமாக கடந்து போன பின்பு மறுபடியும் ஒரு நன்றி. பதிலுக்கு இவரிடமிருந்தும். பெருமலைப்பாதைகளில் நித்தமும் நடந்து கொண்டிருக்கிற மொழி உரையாடல் இது. இந்த உரையாடல்களுக்கான இசைமொழியேதான் மொழிகளுக்கப்பாலான ஆன்மாவின் நன்றியறிதலாக இருக்கிறது என்பதை நாம் அறிந்தும் உணர்ந்திருக்கிறோமா. இந்த உலகில் மொழிகளைப் பயண்படுத்தாமலே உணரவைக்கப்படுகிற இசைமொழிகள் ஏராளமாகவே உள்ளது. கவிதைகளை எழுத இத்தொழில் முறைகள் கவிஞர்களுக்குப் பயண்படுகிறது.
         வாழ்வின் எல்லாப்பயண்பாட்டுத் தளங்களையும் வெட்டி முற்றாகத் தள்ளிவிட்டு பெருநகரத்தின் பொருட் சிக்கல்களில் ததும்புகிற மனங்கள் தனது கவிமனத்தைக் கண்டடைய ஒரு மலைப்பாதை போன்ற கவிஉலகை உருவாக்கிக் கொள்கிறது. கவிதை எழுதப்படுவது என்பதே தன்னை விடுவித்துக் கொள்ளவே. பலரின் தயவய எழுச்சிகளே உணர்வு கூடுதுறையில் மையப் படுத்தப்பட்டு பொதுவிவாதத்திற்கு வருகிறது.
        யாழியின் கவிதைகள் இவ்வகையின் சாட்சியங்கள். இயல்பாக விரித்துரைக்க முடியாத சம்பவங்களை அனுபவங்களை அவர் சித்திரமாக்கி விடுகிறார்.
கமலஹாசனும் ஜெயப்ரதாவும்
நடந்து கொண்டிருக்கிறார்கள்
பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கறது
இது மௌனமான நேரம்
ஓடாத அந்தத்தேரின் சக்கரங்களுக்கிடையே
அகப்பட்ட மௌனம்
சிதைந்து வழிகிறது
தொலைக்காட்சிப் பெட்டிவழியே
அதில் நிரம்பத்துவங்கியது என் அறை
இப்போது
வேறிடம் தேடுகிறது
என்னறைக்குள்ளிருந்த மௌனம் –பக் 12
          மௌனம் சத்தம் அன்றி இறைச்சல் என்பதெல்லாம் ஒரே உணர்வுதான். எங்கும் இறைச்சலில்லாமல் இல்லை.கண்கள் மூடி கணம் அகமௌனத்தை யோசித்தால் நரம்புகளுக்குள் பாய்ந்து கொண்டிருக்கிற இரத்த ஓட்டத்தின் மௌனம் நமக்குப்புலப்படும். வெறுமனே ஓடாமல் நிற்கிற சக்கரங்களின் மௌனம் எனக்கு வேறுபல சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு விசைத்தறியாளர்கள் காலவறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அதுவரையிலும் இரவு பகலாக ஒலித்துக் கொண்டிருந்த விசைத்தறிகளின் சத்தம் நின்று போய்விட்டது. இந்த மௌனம் பயங்கரமானதாகவும் கொடுரமானதாகவும் இருந்தவை. பலநாட்கள் நீடித்த இந்தப் போராட்டத்தின் மௌனம் மக்களை உறங்கவிடாமல் செய்துவிட்டது. இந்த விசைத்தறிகளின் சத்தம்தான் அவர்களுக்கான தாலாட்டாக, பாடல்களாக தன் உணர்வுகளை இயல்புகளைப் பேசிய சத்தமாக அமைந்திருந்தாக கூறினார்கள். தங்களால் உறங்க முடியவில்லையென்று இரவெல்லாம் சாலைகளில் திரிந்தவர்கள் கூறினார்கள். ஒரு மாதத்திற்கும் மேல் நீடித்த இந்தப் போரட்டத்தினால் உளவியல் அடைப்படையில் மக்கள் தங்களால் இந்த விசைத்தறிகளின் சத்தமின்றி வாழவே முடியாதோ என தங்கள் பேட்டிகளில் தெரிவித்தார்கள்.  இந்த அதிபயங்கர மௌனம் சிக்கலானது. கோரிக்கைகளைக் கேட்காத அரசின் தீவிர மௌனங்களும் இப்படியான தினுசுதான்.
       திடப்பொருள்களின் வழியாக நாம் காணும் மௌனங்கள் நம் அக இறைச்சல்களின் திறப்பாக அமைகிறது. எப்பொழுதும் நாம் கடைப்பிடிக்கிற மௌனங்கள் அதிகநேரம் தாக்குப்பிடிக்க முடியாத மௌனங்கள் என்ற நிரம்பக் கொட்டிக்கிடக்கிறது நம்மிடம். ஒரு நிலக்கடலைக் கூட்டைச் சட்டென்று நிலத்தில் கொட்டி இரு வேர்க்கடலைகளைச் சுவைத்துப் பார்க்கிற மௌனக் காத்திருப்பின் நீளம். யாழியின் கவிதைகளின் அளவுகள் இவ்வளவே. முகநூல் பக்கங்களில் அவர் பதிந்த ஏராளமான கவிதைகளில் இந்த மௌனத்தொலைவுகள் ஊடாக இருப்பதைக் காணலாம்.
இதே அறை படிமக் காட்சியில் வேறொரு கவிதையில்
நெடுங்காலத்திற்குப் பின்
அந்தச் சாளரத்தைத் திறந்தேன்
நேற்றுகளால் நிறைகிறது அறை
            நம் காலத்திலும் முந்தைய காலத்திலும் அறைகள் குறித்த கவிதைகள் உருவாக்கியிருக்கிறோம் அறைகள் பற்றிய கதைகளும் புனைவுகளும் புத்தாக்கப்பிரச்சனைகளையும் அறைகளுடன் ஒத்திசைவு ஏற்படுத்தி அறைகள் பற்றிய சுவராசியங்களில் நமக்கு மிகுந்த ஈடுபாடும் கிச்சு கிச்சும் உண்டு. சி மோகனின் நல்ல தலைப்பு நினைவுக்கு வருகிறது எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை என்பதாக. என்னதான் நட்பு உறவு சூழ இருப்பினும் இறுதியில் உடன் உறங்குவது அறையே. அறையின் கணலில் நமக்குப் பல செய்திகள் விசயங்கள் கருத்துகள் வந்து கொண்டே இருக்கிறது. அறை நம்முடன் விதண்டாவாதம் செய்வதில்லை. அதன் மௌனமே நம் பிரச்சனைகளுக்கு நாம் எடுக்கும் முடிவுகளை ஆமோதிப்பதுதான். அதனாலே அறைகளை நமக்குப் பிடிக்கிறது.யாழியின் கவிதைகளில் அவர் ஈடுபடுத்துவது குறைந்தளவிலான சொற்களையே கவிதைப் பேச்சுவார்த்தைகளுக்கு தேர்வு செய்வதுதான். மிகக் குறுகுறுகிய இடவசதியில் பொருள் படுத்துவது அவருக்குரிய கலை. அதில் அவர் தீவிர விருப்பம் கொண்டவர் என்பதை அறிவேன்.

தொட்டிக்குப் பழக்கப்பட்ட மீன்
கடலுக்குள் தேடுகிறது
செவ்வகத்தை...
சட்டென அதிர்ந்துதான் போனேன். பழக்கங்களுக்க அடிமையாவது ஒன்று. அதே பழக்கத்தை சென்ற இடத்தில் தேடுவதற்கு முயற்சிப்பதும் அப்படித்தானே. முன்னூறு வருடம் ஆண்ட வெள்ளைக்காரனைப் பிரிய மனமில்லாமல் நாம் நீங்களே இருங்கள்..எங்களுக்கு சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னவர்கள்தானே நாம். சுதந்திரநாளைத் துக்கநாள் என்று அறிவித்தவர்கள்தானே நாம்.
   இந்தக் கவிதையை மீண்டும் வாசித்தபோது. ஒரு முறை அலுவலகத்திற்குள் ஏதேச்சையாக ஒரு புறா ஒன்று நுழைந்து விட்டது. நாங்கள் உடனடியாக காற்றாடிகளை நிறுத்திவைத்தோம். எதற்காக அந்த உணர்வு ஏற்பட்டது என இன்றளவும் எனக்குப் புரியவில்லை. அலுவலக பணியாளர்கள் அச்சம் கொண்டு தவித்தார்கள். அவர்கள் பார்க்காத விபத்துகளா. எல்லாரும் சன்னல்களின் வழியாக அந்தப்புறாவை நகர்த்த முயன்று தோற்றார்கள். அந்தப்புறா நெத்துக்குத் தலாக கால்கள் பற்றி சுவற்றிலேயே பீதியுடனும் மூச்சுக் கேவக்கேவ பதறிக் கொண்டிருக்கிறது. அந்தப்புறா தன் ஆகாயம் தொலைந்து போய்விட்டது அல்லது அந்தர வெளி தீர்ந்து போய்விட்டதோவென பதறியது. எனக்குப் புறாப் பழக்கம் இருந்ததால் அதை மிக சாதுர்யமாக ஏமாற்றி அருகில் சென்று பிடித்து வெளியே கொண்டு வந்து விஸ்தாரமான ஆகாயவழிக்குக் கொண்டு வந்து விட்டதும் விருட்டெனப் பறந்து போனது.

யாழி இந்த தொகுப்பில் பற்பல புறாக்களை என் அகத்துக்குள் அனுப்பி வைத்திருக்கிறார்..ஒவ்வொன்றாக வெளியிலெடுத்து அனுப்பவேண்டும்..
வாழ்த்துகளுடன்

வெளியீடு-உயிர்மை பதிப்பகம்
“கேவல் நதி”- கவிதைகள் ஆசிரியர்- யாழி
பக் 64-விலை ரு-60
11-29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம் சென்னை-99763 50636



ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

“காக்கா முட்டை” திரைவிமர்சனம் நன்றி 00கொலுசு மின்னிதழ்...

காக்கா முட்டை- திரைவிமர்சனம்-
இதுவரையிலான நடந்த உரையாடலை முன்வைத்து-
         காக்கா முட்டை படம் குறித்து மிக விரிவாகப் பேசப்பட்டு விட்டது. உண்மையில் ஒரு மிகச் சாதாரணமான படமாக இருந்த நிலையை தேசிய விருது அறிவிப்புகளும் இந்தப் படத்தை வாங்கிய வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியினர் செய்த பரவலான போஸ்டர் விளம்பரங்களும் இந்தப் படத்தை  வணிக அடிப்படையிலும் வெற்றிப்படமாக மாற்றியிருக்கிறது.
       மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெகுசன மக்கள் கண்டுகளித்த கலைப்படம் இதுவாகத்தான் இருக்கும். வெகுசன மக்களுக்குக் கலைப்படங்கள் மீது இருந்த அச்சத்தை இந்தப்படம் போக்கியிருக்கிறது என்றும் சொல்லலாம்.
        காக்கா முட்டை படத்திற்கு இணையதளங்கள் உள்பட வேற்றுமை பாராமல் ஆதரவு அளித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். அநேகமாக ஒட்டுமொத்த ஆதரவை காக்கா முட்டை படத்திற்கு கிடைத்திருக்கிறது. கருத்தொற்றுமையுடன் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டது போன்ற நிலை அமைந்திருக்கிறது.
         ஒரு முக்கியமான படம் எந்தெந்த வழிகளில் கொண்டாடப்படும் என்பதை அறிந்து கொள்ளவும் இந்தப் படத்தின் வெற்றி அமைந்திருக்கிறது. எளிமையான படங்களை குறைந்த அளவு பொருளாதாரச் செலவில் படங்களைத் தரமுடியும் என்னும் நம்பிக்கையை தற் பொழுது ஊடகவியல் காட்சி ஊடகவியல் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நம்பிக்கையும் அளித்திருக்கிறது.
       படத்தின் கதையை மிகச்சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடியது. இன்றைய மிக நிரப்ப பட்ட உணவுக்குவியல் உள்ள நம் நாட்டில் ஒரு சிறுவனின் எளிய விருப்பம் நிறைவேற்றப்படுகிறதா என்பதுதான். இதற்காகத் இயக்குநர்  மணிகண்டன் எடுத்த முயற்சிகள் தான் படத்தின் களம். பெருநகரங்களின் ஓரத்தில் கழிமுக கழிவு ஓர வாய்க்கால்களில் பாசனம் பிடித்த ஏரிகளில் வாழ்கிற எளிய மக்களின் வாழ்க்கையும் கூடவே வருகிறது. இந்திய சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னும் இந்தியப் பெருநகரங்களின் அருகில் வாழ்கிற மக்களின் வாழ்க்கைகளும் எளிய ஆசைகளும் தீர்க்கப்படுகிறதா என்பதே கேள்வி.
       படப்பிடிப்பின் களங்கள் தமிழ் சினிமாவிற்கு பழசு என்றாலும் மணிகண்டனின் பார்வை முழுக்கவும் கலையும் மனிதாபிமானமும் சார்ந்த வெளிப்பாடுகள். இரண்டு சிறுவர்களுடன் உள்ள தாய் அவளின் கணவன் சிறையில். அச்சிறுவர்களுக்கு பிட்சா சாப்பிடும் ஆசை வருகிறது அந்த ஆசை நிறைவேறுகிறதா என்பதே படம் என்று அவர் சொன்ன கதையை யார்தான் படமாக்க முன்வந்திருப்பார்கள். படத்தைத் தயாரித்த இந்த வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகதஸ்கரும் பாராட்டுக்குரியவர்கள்.
         படம் வெளியான சில நாட்களில் எதிர்மறையான விமர்சனங்கள் வெளியானது. சில முக்கியமான கருத்தியலாளர்கள் இந்திய ஏழ்மையை விற்றுப் பணம் பார்க்கும் குயுக்தி என்றெல்லாம் பேசினார்கள். நம் உரையாடலில் கலை குறித்துப் பேசும் போது ஏழ்மையை மட்டம் தட்டுகிற தூய கலையமைய வாதிகள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் காகிதப் புலிகள் எந்த நாளும் ஒரு அருகம்புல்லைக் கூட தன் வாழ்நாளில் கிள்ளியிருக்க மாட்டார்கள்.
    ஒரு வெகுசன மக்கள் ஊடகத்தை மக்களின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்துவதை எதிர்க்கிறவர்களின் கலை பற்றிய அறிவை நாம் சோதிக்கவேண்டியிருக்கிறது ஒரு உரையாடலில் ஒரு வசனம் “குப்பத்துப் பசங்கன்னு ஏன் சார் சொல்றீங்க..நம்ம பசங்கன்னு சொல்லுங்களே..படம் இதைத்தான் சொல்ல வருகிறது. கட்டாயக் கல்வி கட்டாய தமிழ் வழிக்கல்வி. தமிழுக்கு முன்னுரிமை என்றெல்லாம் பேசும் சமயத்தில் சிறார் கல்விக்கு முன்னுரிமையும் குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பும் அவசியத்தை இந்தப் படம் பேசுகிறது.
    இந்தியப் பொருளாதரச்சூழலில் இன்று ஒரு குடும்பம் சாப்பிடவேண்டுமென்றால் குடும்பமே பாடுபட்டுத்தான் சாப்பிடவேண்டியிருக்கிறது. ஏழ்மையில் இருப்பவர்கள் நிலையை நாம் சொல்லவேண்டியதில்லை. வறுமையைப் பேசத் துணிவதே நாம் கலைக்குச் செய்யும முதல் மரியாதை. அரசியலற்ற கலையின் அம்சத்தின் மேன்மை யான பகுதிகளை காக்கா முட்டை படம் எடுத்துரைக்கிறது.
     பீட்சா கடை முதலாளிகள் மற்றும் அடியாட்களை துவக்கத்திலிருந்து மக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டப்பட்டு பிற்பாடு படத்தின் இறுதியில் அவர்கள் நல்லவர்கள் அல்லது வியாபார உத்தியின் வெளிப்பாடு என்று மிக தைரியமாக ஒரு கலைஞன் பேசியிருக்கிறான் வணிகமயத்தின் ஊடுபாவுகளில் சிக்கும் எளிய உணவு ரசனை பற்றிய மையக்கருத்து நமக்குள் உரையாடுகிறது. விவாதங்களுக்கு பஞ்சமோ அறிவுரையோ இல்லாமல் இல்லை.
    படமாக்க முறைகளில் வணிக படத்தின் அம்சங்கள் தான் அதிகமாகத் தென்பட்டது. பின்னணி இசையின் இறைச்சல்கள். வாகனங்களின் சத்தம். தேவையில்லாத எதிர்பார்ப்பும் விறுவிறுப்புமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு சிறுவர்களும் அவர்களின் சிரிப்பிலேயே கலையின் எதார்த்தம் மின்னுகிறது. காணாமல் போன சிறுவர்களைத் தேடிக் கொண்டு வருகிற தாயைக் கண்டதும் “தோ அம்மாடா ..என்று ஓடிவந்து கட்டிக் கொள்கிற காட்சியின் இதுவரையிலுமான தமிழ் சினிமாவின் அம்மா பாசத்தை விடவும் உன்னதமான காட்சியாக அமைந்திருக்கிறது. வழக்கம் போல ஏழ்மை யைக் காசாக்குதல் எனும் விமர்சனம் வருகிறது. இந்திய தமிழ் சினிமாக்கள் குறித்து வருகிற  விமர்சனங்கள்தான்
     சத்யஜித்ரே, அடுர் கோபாலகிருஷ்ணன், மிருனாள் சென் “பசிதுரை, எம் ஏ காஜா போன்ற இயக்குநர்களுக் கும் இந்த விமர்சனம் வந்து போனது. இந்திய வறுமையை ஏழ்மையை பற்றாக்குறைகளை கலை என்ற பெயரில் வெளிநாட்டில் வெளிச்சம் போட்டுக்காட்டி தங்கள் மேதாவித்தன்தைக் காட்டிக் கொள்கிற கூட்டம் என்றார்கள் திரைப்படக்கலைஞர்களை...
எழுபதுகளில் பசி படம் ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானது அல்ல.. இதே போன்ற சென்னையின் மற்றொரு மக்களின் முகத்தை அந்தப்படம் காட்டியது. பசி இயக்குநர் துரை ஷோபா உள்பட விருதுகள் மேல் விருதுகள் வாங்கி குவித்தார்கள். உலகிலேயே ரஷிய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாராட்டுத் தெரிவித்து பேசவைத்த திரைப்பட இயக்குநர் பசி துரைதான். தமிழ்த்திரைப்படம்தான் அந்த சாதனையைச் செய்திருக்கிறது. ஆனால் மணிகண்டனின் திறமை பற்றி இங்கு எந்த பெரிய அளவு மரியாதையும் கிட்டவில்லை.
        சமீபத்தில் மீண்டும் ஒரு முறை காக்கா முட்டை படம் பார்க்க வாய்த்தது. இடையிடையில் இரண்டு சிறுவர்கள் மற்றும் மணிகண்டனின் உரையாடல்கள் அடங்கிய பிரிமியர் ஷோ வும் பார்த்தேன். இப்படத்தின் ஆக்கங்கள் பற்றிய விரிவான உரையாடலை மணிகண்டன் தந்தார். சின்னவன் பாராட்டும் போது கூல் கூல் என்று மணிகண்டனைக் குத்தினான். பெரியவனை வாடா போடா என்றே அழைத்தான். தேசிய விருது பெற்ற செய்திகளைச் சொன்னபோது அவர்களுக்கு மகத்துவம் தெரியவில்லை. ஒரு வேளை அந்த விருதும் பீட்சா போல கொழ கொழவென்றுதான் இருக்குமோ என்று நினைத்திருப்பான் என்று நினைக்கிறேன். அவனுடைய அந்த சிரிப்புதான் படத்தின் மாஸ்டர் கிளாஸ் அப்பியரன்ஸ் என்று சொல்ல வேண்டும்..
சின்னவனிடம் கேட்டபோது “உன்னுடைய முதல் விமானப் பயணம் எப்படியிருந்தது விமானம் மேலே பறந்தபோது என்னவெல்லாம் உணர்ந்தாய்...“என்று மணிகண்டன் கேட்டபோது சின்னவன்
“ஏசப்பா...என்ன சீக்கிரம் அம்மா அப்பாகிட்ட கொண்டு போய் விட்ரு...என்று வேண்டி நடித்துக் காட்டி வெட்கப்பட்டான்....










ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

மு.சந்திரகுமார் நாவல் “எரியும் பட்டத்தரசி” குறித்து..

மு.சந்திரகுமாரின்...
எரியும் பட்டத்தரசி- நாவல்
      தமிழில் நாவல் வடிவங்கள் நவீன காலத்திற்கேற்ப மாறிக் கொண்டு வருகிறது. அறநெறி இயலுக்குள் நுழைகிற பெரும்பாலான நாவல்கள் அகத்துக்குள் நடக்கிற குழப்பங்களை விசாரணை செய்யும். அரசியல் தவிர்த்த நாவல்கள் மனதின் ஆழத்தில் முங்கிக்கொண்டு புறச்சிக்கல்களை அலசும். அரசியல் தவிர்க்கிற நாவல்கள் பொது மனதின் அபிப்ராயங்களுக்குள் எளிதில் நுழைந்து விடும். பெரும்புகழையும் பெற்றுவிடும். ஒரு படைப்பாளி அரசியல் மட்டும் பேசாமல் அதிகாரங்களுடன் அனுசரித்துப் போய்விட்டால் போதும் அவனுடைய படைப்புகள் மிக உச்ச்த்திற்குச் சென்றுவிடும்.
          தமிழ் நாவல்களில் உள்ள சிக்கல் இதுதான். அரசியல் நாவல்களுக்கு  என்று வாசிப்பு தளம் இடது சாரி முகாம்கள் தவிர பொது இடத்தில் அதற்கு அவ்வளவாக மரியாதை கிடையாது. பொதுப்படையான ரசனையில் அரசியலுக்கு இடமளிப்பதில் நாவல் வாசகர்கள் விரும்புவதில்லை. நாவல் வாசிப்புக் காலமாக எண்பதுகளைச் சொல்லலாம். நெருக்கடி காலத்தின் நாவல்கள் பரவலாக அரசியல் களமாகவே இருந்தது.
      இருந்தாலும் அரசியல் நாவல்களை எழுதாமல் படைப்பாளர்கள் விடுவதில்லை. அரசியலைக் களமாக கொள்ளாத படைப்புகள் சந்தேகத்திற்குரியவையாகவே எதிர்காலத்தில் கணிக்கப்படும்.
       மு.சந்திரகுமாரின் எரியும் பட்டத்தரசி நாவல் தமிழின் முக்கியமான அரசியல் நாவலாகிறது. சுமார் ஐநூற்றைம்பது பக்கங்களுக்கும் மேல் எழுதப்பட்ட இந்த நாவல் கோவை நகரத்தின் ஐம்பதாண்டுகால தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் இடதுசாரி அரசியல் நிலைபாடுகளைப் பேசுகிறது.
      சமூகத்தின் விளிம்பு நிலைமக்கள் என்று அறிப்படுகிற அல்லது குற்றம் சுமத்தப்பட்ட அருந்ததியர்களின் அரசியல் மயப் போராட்டம் என்று சொல்லலாம். அரசியலமைப்பிற்குள் வருவதற்குக் கூட அவர்கள் நிகழ்த்திய போர்கள் இந்த நாவல்களில் வருகிறது. அரசியல் கட்சிகளின் ஏமாற்று வாக்குறுதிகள். தொழிற்சங் கங்களின் பிளவுகள், ஆதிக்க சக்திகளின் தொடர் தாக்குதல்கள் உள்பட பல்வேறு களச் செயல்பாடுகளை இந்த நாவல் பேசுகிறது. என்னதான் இடதுசாரி அரசியலை விளிம்பு நிலைமக்கள் தவிர்க்க நினைத்தாலும் அவர்களுடன் காலங்காலமாகத் துணை நின்று போராடிக்கொண்டிருப்பவர்கள் இடதுசாரிகள்தான். தற்காலிக நிம்மதிக்கு இந்த விளிம்பு நிலைமக்கள் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்தக்கட்சியின் மாவட்ட தலைமையுடன் இணங்கிப் போய்விடுகிற நிலையையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
            கோவை சுதந்திரமடைந்த பிறகு தொழில் நகரமாக வளர்வதற்கு ரயில்பாதைகளும பஞ்சாலைகளும் வார்ப்படத் தொழில்கள்  மோட்டார் சம்பந்தப்பட்ட தொழில்கள் உள்பட பல்வேறு தொழில்கள் வளரத் தொடங்கிய பிறகு அதனுடனே தொழிற்சங்கங்களும் வளரத்தொடங்கியது. இந்த வளர்ச்சிக்கு முழுமையாக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட விளிம்பு நிலைமக்கள் கூலித் தொழிலாளர்களாகவும் மூன்று சிப்ட் முறைகளில் பணியாற்ற ஆரம்பித்தார்கள். துவக்கத்தில் இந்த இடங்களில் சாதிய மோதல்கள் எழத்துவங்கிய போது முதலில் பாதிக்கப்பட்டவர்கள் அருந்ததியர்கள். தொழில் வளர்ச்சியை எதிர்கொண்டாக வேண்டிய நிலையிலும் தங்கள் சாதியத் தொழில்கள் சார்ந்து விடுதலையடைய அவர்கள் மற்ற தொழில்களுக்காக பயண்படுத்தப் பட்டார்கள்.
       அப்படியாக அவர்கள் தொழிலாளிகளாக நுழைந்த பொழுது அவர்கள் நிராகரிக்கப்பட்ட வரலாறுகளையும் மு.சந்திரகுமார் பதிவு செய்திருக்கிறார். நகர விரிவாக்கத்திற்காக அவர்களின் குடியிருப்புகள் அகற்றப்பட்டது. அதையொட்டி நடந்த தாக்குதல் என நாவல் எல்லா இடங்களையும் பதிவு செய்கிறது. இதன் பின்னணியிலிருந்த அரசியல் புள்ளிகள் திராவிடக்கட்சி களின் வளர்ச்சியும் ஆராயப்படுகிறது. தலித் இயக்கங்க ளின் வளர்ச்சியும அதன் செயல்பாடுகளும் வென்றெடுத்த இயக்கங்களையும் பேசுகிறது. ஒரு பெருநகரத்தின் அரசியல் சூழல்களை விரிவாகப் பேசுகிறது..கோவையின் பிரமாண்டமான தோற்றத்திற்கு உதவுகிற நகர்களான காளப்பட்டி, பீளமேடு, மசக்காளிபாளையம், ஹோப்ஸ் என அவிநாசி சாலையும் அதனையொட்டி வருகிற சிறிய கிராம ஊர்களின் அரசியல் பிரச்சனைகளின் வரலாறும் பேசப்படுகிறது. நிலக்கிழார்கள், ஆதிக்கவாதிகள், ஆளும் திராவிடக்கட்சிகளின் நிலைபாடுகள் அதே போல தொழிற்சங்கங்கள் வைத்துப் போராடிய இடதுசாரிகளின் நிலைபாடுகளும் பேசப்பட்டது.
    ஒரு நிலையில் பிரச்சனைகள் வெடித்த காலத்தில் இடதுசாரிக் கட்சிகளின் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் பதவியிலிருந்த நிலையையும் நாவலில் சுட்டிக்காட்டிடத் தவறவில்லை. பலதரப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருக்கிற இடதுசாரி உறுப்பினர் கள் எடுத்த சில முடிவுகள் என்பதாக நாவலில் எந்தப் பதிவையும் அவர் எழுத தவறவில்லை. மக்கள் நலன் போராட்டங்களில் களத்தில்  சில தவறுகளும் நிலைப்பாடுகளும் சூழலுக்குத் தக்கவாறு மாற்றிட வேண்டிய நிலையில் இடதுசாரிக்கட்சிகள் எடுத்த நிலைகள் மீதும் விமர்சனங்கள் உள்ளது.
       அதிகாரங்களுக்கு எல்லா மட்டத்திலும் உதவிகள்  கிடைக்கும். யார் சொன்னாலும் கேட்பார்கள். எந்தப் போரட்டத்தையும் அரசு அதிகாரத்தினால் உடைக்க முடியும். எந்தப் போராட்டக் குழுக்களையும் கலைத்து விடமுடியும். ஆனால் பெரும்பாலான போராட்டங்கள் வென்ற சரித்திரங்களும் உண்டு. அப்படியாக வெற்றி பெற்ற போரட்டங்களில் பலவைகளில் ரயில்வே கூட்செட் மற்றும் ஜீவா பாரம் தூக்குவோர் சங்கத்தின் வெற்றிகளை யும் அவர் பதிவு செய்திருக்கிறார்.
      இந்த நகரத்தின் உருவாகத்தின் பின்னணியில் நிகழ்ந்து முடிந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தொழிற்சங்க போராட்ட வெற்றிகளும் அதில் அருந்ததியர்களின் எழுச்சியையும் பதிவு செய்திருக்கிறார். இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது புனையப் பட்ட பல்வேறு பொய் வழக்குகள் மற்றும் கள்ளச்சாராய வழக்குகள் அடிதடி வழக்குகள் என்ற பதிவுகளையும் அதன் விடுதலைக்காக வாதாடிய விபரங்களையும் பதிவு செய்திருப்பது ஒரு சாமான்ய னின் பார்வையிலிருந்து எழுதப்பட்டவை.
       இடதுசாரிக் கட்சிக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட குறிப்புகள்.பேட்டிகள், நேர்காணல்கள், காவல் நிலையத்தி லிருந்து பெறப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள், குற்ற விபரங்கள் என பற்பல தரவுகளை இந்நாவலின் நேர்மைக்கு இணைத்திருக்கிறார். தொழிற்சங்க வரலாற்றின் காலப்பதிவாகவும் அமைந்திருக்கிறது. இந்த நாவலில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கானவர்களின் பெயர்கள் விபரம் பதிவிடப்பட்டிருந்தாலும் ஆதிக்க வாதிகளின் அடக்குமுறைக்கு வித்திட்டவர்களின் பெயர்களை அவர் தவிர்த்திருக்கிறார். அந்தப்பதிவு பெரும் நெருடலாகவே அமைந்த ஒன்று. அவர் மறைமுகமாக வாவது அந்த நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக் கலாம். கோவையின் புறநகர்களில் நாம் அறிய அண்ணா நகர்,அம்பேத்கார் நகர். காமராஜர் நகர், பெரியார் நகர், எம்.ஜி.ஆர் நகர்,கலைஞர்நகர் என்னும் நகர்கள் புறம்போக்குப் பகுதிகளில் குடிசைகளாக, ரயில்வே பகுதிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வசித்த அருந்த தியர்கள் மீது நிகழ்ந்த பிரச்சனைகளையும் அவர்களுக்கு நிலஉரிமைச் சான்றுகள் பெற்று வாழ எடுக்கப்பட்ட முயற்சிகளையும் இந்த நாவல் பதிவு செய்திருக்கிறது.
        பொதுவாக இந்த நாவலில் பதிவு செய்யப்பட்ட செய்தியில் தத்துவார்த்தமாக களப்பதிவுகள் உள்ளது. செய்தி திரட்டுகளாக விசாரணைக்குறிப்புகளாகவும் உள்ள நாவல் பதிவுகள் முக்கியமானது. இடதுசாரிக்கட்சிகளின் தனிப்பட்ட வளர்ச்சியை முக்கியமாக வைத்து நடத்திய அரசியல் நிகழ்வுகளின் பின்னணியை அலசுவது சிறப்பு. இந்திய தமிழக மற்றும் உள்ளுர் அரசியல் களங்களில் இடது வலது சாரி அரசியல் களங்கள் சற்று வித்தியாச மானவை. இரண்டு கம்யுனிஸ்ட் கட்சிகளுக்குள் உள்ள தொழிற்சங்க கட்சி நிலைப்பாடுகள் குறித்த பதிவுகள் வித்யாசமானது. வரும் காலத்திற்கும் புதிய தலைமுறைக்கும் முக்கியமானது. அது போலவே சில சுயேட்சையான அரசியல் தேர்தல் பங்களிப்பு முடிவுகளை இந்திய கம்யுனிஸ்ட்சி கட்சி எடுத்த முடிவுகளை நாம் அறிவோம். ஆனாலும் சமீபத்தில் பல்வேறு களப் பணிகளில் இரண்டு கட்சிகளும் இணைந்து பணியாற்று வது மகிழ்வான செய்திகளாகும்.
இரண்டு கட்சிகளும் இணையவேண்டும் என்று விரும்புகிற எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லை. அவை சாத்தியமற்றதாகவும் கனவாகவும் நிகழ்ந்து கொண்டிருக் கிறது. உள்ளாட்சித தேர்தல்களில் தேர்தல் பணிகளில் நிலவுகிற இடம் பிடிப்பு வெற்றி சம்பந்தமான போர்களில் நடைபெறுகிற சம்பவங்களும் முக்கியமானவை.
மு. சந்திரகுமாரின் நாவலில் புதிய கோவையின் பழைய சரித்திரம் எனலாம். களத்தில் அனுபவம் ரத்தம் தோய்ந்த அரசியல் இயக்கங்களின் செயல்பாடாக பதிவாகியிருக் கிறது. சந்திரகுமார் ஒரு தொழிற்சங்கவாதியாக, கட்சி செயல்பாட்டாளராக எழுத்தாளராக, பல போரட்டங்களில் ஈடுபட்டவராக வழக்குகள் கைதுகள் என்று அனுபவத்தின் சாட்சிகளாக அவருடைய முந்தைய படைப்புகளிலிருந்து இந்த நாவல் புதுமையாக உள்ளது.
கலைப்படைப்புகளைக் காணும் வாசிக்கும் வாசகர்களுக்கு வாழ்க்கையை வாசிக்க விரும்பும் போது நிச்சயமாக எரியும் பட்டத்தரசி அசலான அனுபவத்தைத் தருவது உறுதி. தலித் இயக்கங்களுக்குள் நிகழ்கிற பிணக்குகள் அவர்கள் கொள்கை புர்வமாக சந்திக்கிற பல்வேறு நெருக்கடிகள் முரண்பாடுகளையும் நாவல் பல்வேறு அத்தியாயங்களில் வெளிப்படையாக பேசுகிறது. காளப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் நடந்த தாக்குதல்களும் பிற்பாடு நடந்த சமூக ஒருங்கிணைப்பு முயற்சிகளும் குறிப்பிட்டுள்ளார்.
     இந்த நாவல் ஒவ்வொரு பெருநகரத்தின் பின்புலம் தொழில்மய நெருக்கடிகளால் பின்னப்பட்டது என்பதை உணர்த்துகிறது. தங்களைப் புணரமைத்துக் கொள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் சமூக இயக்கங்களும் எப்படிப் பேராடுகின்றன என்பதை இந்த நாவல் எந்த அழகியல் கோட்பாடுகளையும் கொள்ளாமல் மக்கள் மொழியில் பேசியிருக்கிறது. காவல் நிலையங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமான உறவுகள் முற்றிலும் வினோதமான பக்குவங்கள் கொண்டது. இந்த அனுபவங்களை வெறும் அழகியல் நோக்கிலும் அகச் சிக்கல்களுடன் எழுதமுடியாது. புழுதியிலும் வெயிலிலும் இரவு பகல் பாராமல் இந்தப்பெருநகரத்தை உருவாக்க உழைத்த சாமானியர்களின் வாழ்க்கைப் பதிவாக இந்த நாவல் உருப்பெற்றிருக்கிறது.
அரசியல் மனமாச்சர்யங்கள் தவிர்த்து மு.சந்திரகுமாரின் மார்க்சிய பார்வை போற்றப்படவேண்டியது. அவரின் விமர்சனங்கள் பரிசீலிக்கப்படவேண்டியவை. சில படைப்புகள் நமக்கு கச்சா பொருளாக இருந்தால் தான் நாம் நம் வாழ்விற்குத் தேவையான தத்துவ விசாரத்தைக் கண்டடைய முடியும்..தலித் இயக்கங்களின் அரசியல் விடுதலையெழுச்சி பற்றிய முக்கியமான இலக்கியப் பதிவாகவும் இந்த நாவல் விளங்குகிறது. ஆகப்பெரும் சிறந்த முயற்சியை விமர்சனங்களைக் கண்டு அச்சுறாமல் படைப்பாளிக்குரிய பொறுப்புடன் நூலாக்கி இருக்கிறார். களம்,பொறுப்புகள், அரசியல்இயக்கம் என இடையறாது சுழல்கிற மார்க்சீய சித்தாந்தம் கற்றவரான

தோழர் மு. சந்திரகுமாருக்கு வாழ்த்துக்களுடன்..
எரியும் பட்டத்தரசி..நாவல்
வெளியீடு- பதிவுகள் பதிப்பகம்
தாய்மை இல்லம் 10-ஸ்ரீராம் நகர் 2 வது வீதி
லட்சுமி புரம் கோவை 641004
அலைபேசி-90033 92939
Auto5chandran@gmail.com