மு.சந்திரகுமாரின்...
எரியும் பட்டத்தரசி- நாவல்
தமிழில் நாவல் வடிவங்கள் நவீன காலத்திற்கேற்ப மாறிக் கொண்டு
வருகிறது. அறநெறி இயலுக்குள் நுழைகிற பெரும்பாலான நாவல்கள் அகத்துக்குள் நடக்கிற
குழப்பங்களை விசாரணை செய்யும். அரசியல் தவிர்த்த நாவல்கள் மனதின் ஆழத்தில்
முங்கிக்கொண்டு புறச்சிக்கல்களை அலசும். அரசியல் தவிர்க்கிற நாவல்கள் பொது மனதின்
அபிப்ராயங்களுக்குள் எளிதில் நுழைந்து விடும். பெரும்புகழையும் பெற்றுவிடும். ஒரு
படைப்பாளி அரசியல் மட்டும் பேசாமல் அதிகாரங்களுடன் அனுசரித்துப் போய்விட்டால்
போதும் அவனுடைய படைப்புகள் மிக உச்ச்த்திற்குச் சென்றுவிடும்.
தமிழ் நாவல்களில் உள்ள
சிக்கல் இதுதான். அரசியல் நாவல்களுக்கு
என்று வாசிப்பு தளம் இடது சாரி முகாம்கள் தவிர பொது இடத்தில் அதற்கு
அவ்வளவாக மரியாதை கிடையாது. பொதுப்படையான ரசனையில் அரசியலுக்கு இடமளிப்பதில் நாவல்
வாசகர்கள் விரும்புவதில்லை. நாவல் வாசிப்புக் காலமாக எண்பதுகளைச் சொல்லலாம்.
நெருக்கடி காலத்தின் நாவல்கள் பரவலாக அரசியல் களமாகவே இருந்தது.
இருந்தாலும் அரசியல் நாவல்களை
எழுதாமல் படைப்பாளர்கள் விடுவதில்லை. அரசியலைக் களமாக கொள்ளாத படைப்புகள்
சந்தேகத்திற்குரியவையாகவே எதிர்காலத்தில் கணிக்கப்படும்.
மு.சந்திரகுமாரின் எரியும்
பட்டத்தரசி நாவல் தமிழின் முக்கியமான அரசியல் நாவலாகிறது. சுமார் ஐநூற்றைம்பது
பக்கங்களுக்கும் மேல் எழுதப்பட்ட இந்த நாவல் கோவை நகரத்தின் ஐம்பதாண்டுகால
தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் இடதுசாரி அரசியல் நிலைபாடுகளைப் பேசுகிறது.
சமூகத்தின் விளிம்பு நிலைமக்கள் என்று அறிப்படுகிற அல்லது
குற்றம் சுமத்தப்பட்ட அருந்ததியர்களின் அரசியல் மயப் போராட்டம் என்று சொல்லலாம்.
அரசியலமைப்பிற்குள் வருவதற்குக் கூட அவர்கள் நிகழ்த்திய போர்கள் இந்த நாவல்களில்
வருகிறது. அரசியல் கட்சிகளின் ஏமாற்று வாக்குறுதிகள். தொழிற்சங் கங்களின்
பிளவுகள், ஆதிக்க சக்திகளின் தொடர் தாக்குதல்கள் உள்பட பல்வேறு களச் செயல்பாடுகளை
இந்த நாவல் பேசுகிறது. என்னதான் இடதுசாரி அரசியலை விளிம்பு நிலைமக்கள் தவிர்க்க
நினைத்தாலும் அவர்களுடன் காலங்காலமாகத் துணை நின்று போராடிக்கொண்டிருப்பவர்கள் இடதுசாரிகள்தான்.
தற்காலிக நிம்மதிக்கு இந்த விளிம்பு நிலைமக்கள் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ
அந்தக்கட்சியின் மாவட்ட தலைமையுடன் இணங்கிப் போய்விடுகிற நிலையையும் நாம் கூர்ந்து
கவனிக்க வேண்டும்.
கோவை சுதந்திரமடைந்த பிறகு தொழில் நகரமாக வளர்வதற்கு ரயில்பாதைகளும
பஞ்சாலைகளும் வார்ப்படத் தொழில்கள்
மோட்டார் சம்பந்தப்பட்ட தொழில்கள் உள்பட பல்வேறு தொழில்கள் வளரத் தொடங்கிய
பிறகு அதனுடனே தொழிற்சங்கங்களும் வளரத்தொடங்கியது. இந்த வளர்ச்சிக்கு முழுமையாக
தங்களை அர்ப்பணித்துக் கொண்ட விளிம்பு நிலைமக்கள் கூலித் தொழிலாளர்களாகவும் மூன்று
சிப்ட் முறைகளில் பணியாற்ற ஆரம்பித்தார்கள். துவக்கத்தில் இந்த இடங்களில் சாதிய
மோதல்கள் எழத்துவங்கிய போது முதலில் பாதிக்கப்பட்டவர்கள் அருந்ததியர்கள். தொழில்
வளர்ச்சியை எதிர்கொண்டாக வேண்டிய நிலையிலும் தங்கள் சாதியத் தொழில்கள் சார்ந்து
விடுதலையடைய அவர்கள் மற்ற தொழில்களுக்காக பயண்படுத்தப் பட்டார்கள்.
அப்படியாக அவர்கள் தொழிலாளிகளாக
நுழைந்த பொழுது அவர்கள் நிராகரிக்கப்பட்ட வரலாறுகளையும் மு.சந்திரகுமார் பதிவு
செய்திருக்கிறார். நகர விரிவாக்கத்திற்காக அவர்களின் குடியிருப்புகள்
அகற்றப்பட்டது. அதையொட்டி நடந்த தாக்குதல் என நாவல் எல்லா இடங்களையும் பதிவு
செய்கிறது. இதன் பின்னணியிலிருந்த அரசியல் புள்ளிகள் திராவிடக்கட்சி களின்
வளர்ச்சியும் ஆராயப்படுகிறது. தலித் இயக்கங்க ளின் வளர்ச்சியும அதன்
செயல்பாடுகளும் வென்றெடுத்த இயக்கங்களையும் பேசுகிறது. ஒரு பெருநகரத்தின் அரசியல்
சூழல்களை விரிவாகப் பேசுகிறது..கோவையின் பிரமாண்டமான தோற்றத்திற்கு உதவுகிற
நகர்களான காளப்பட்டி, பீளமேடு, மசக்காளிபாளையம், ஹோப்ஸ் என அவிநாசி சாலையும்
அதனையொட்டி வருகிற சிறிய கிராம ஊர்களின் அரசியல் பிரச்சனைகளின் வரலாறும்
பேசப்படுகிறது. நிலக்கிழார்கள், ஆதிக்கவாதிகள், ஆளும் திராவிடக்கட்சிகளின்
நிலைபாடுகள் அதே போல தொழிற்சங்கங்கள் வைத்துப் போராடிய இடதுசாரிகளின்
நிலைபாடுகளும் பேசப்பட்டது.
ஒரு நிலையில் பிரச்சனைகள் வெடித்த
காலத்தில் இடதுசாரிக் கட்சிகளின் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் பதவியிலிருந்த
நிலையையும் நாவலில் சுட்டிக்காட்டிடத் தவறவில்லை. பலதரப்பட்ட மக்களின்
பிரதிநிதியாக இருக்கிற இடதுசாரி உறுப்பினர் கள் எடுத்த சில முடிவுகள் என்பதாக
நாவலில் எந்தப் பதிவையும் அவர் எழுத தவறவில்லை. மக்கள் நலன் போராட்டங்களில்
களத்தில் சில தவறுகளும் நிலைப்பாடுகளும்
சூழலுக்குத் தக்கவாறு மாற்றிட வேண்டிய நிலையில் இடதுசாரிக்கட்சிகள் எடுத்த நிலைகள்
மீதும் விமர்சனங்கள் உள்ளது.
அதிகாரங்களுக்கு எல்லா
மட்டத்திலும் உதவிகள் கிடைக்கும். யார்
சொன்னாலும் கேட்பார்கள். எந்தப் போரட்டத்தையும் அரசு அதிகாரத்தினால் உடைக்க
முடியும். எந்தப் போராட்டக் குழுக்களையும் கலைத்து விடமுடியும். ஆனால் பெரும்பாலான
போராட்டங்கள் வென்ற சரித்திரங்களும் உண்டு. அப்படியாக வெற்றி பெற்ற போரட்டங்களில்
பலவைகளில் ரயில்வே கூட்செட் மற்றும் ஜீவா பாரம் தூக்குவோர் சங்கத்தின் வெற்றிகளை
யும் அவர் பதிவு செய்திருக்கிறார்.
இந்த நகரத்தின் உருவாகத்தின்
பின்னணியில் நிகழ்ந்து முடிந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தொழிற்சங்க போராட்ட
வெற்றிகளும் அதில் அருந்ததியர்களின் எழுச்சியையும் பதிவு செய்திருக்கிறார். இந்தப்
போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது புனையப் பட்ட பல்வேறு பொய் வழக்குகள்
மற்றும் கள்ளச்சாராய வழக்குகள் அடிதடி வழக்குகள் என்ற பதிவுகளையும் அதன்
விடுதலைக்காக வாதாடிய விபரங்களையும் பதிவு செய்திருப்பது ஒரு சாமான்ய னின்
பார்வையிலிருந்து எழுதப்பட்டவை.
இடதுசாரிக் கட்சிக்கூட்டங்களில்
எடுக்கப்பட்ட குறிப்புகள்.பேட்டிகள், நேர்காணல்கள், காவல் நிலையத்தி லிருந்து
பெறப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள், குற்ற விபரங்கள் என பற்பல தரவுகளை இந்நாவலின்
நேர்மைக்கு இணைத்திருக்கிறார். தொழிற்சங்க வரலாற்றின் காலப்பதிவாகவும்
அமைந்திருக்கிறது. இந்த நாவலில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கானவர்களின் பெயர்கள்
விபரம் பதிவிடப்பட்டிருந்தாலும் ஆதிக்க வாதிகளின் அடக்குமுறைக்கு
வித்திட்டவர்களின் பெயர்களை அவர் தவிர்த்திருக்கிறார். அந்தப்பதிவு பெரும்
நெருடலாகவே அமைந்த ஒன்று. அவர் மறைமுகமாக வாவது அந்த நபர்களின் பெயர்களைக்
குறிப்பிட்டிருக் கலாம். கோவையின் புறநகர்களில் நாம் அறிய அண்ணா நகர்,அம்பேத்கார்
நகர். காமராஜர் நகர், பெரியார் நகர், எம்.ஜி.ஆர் நகர்,கலைஞர்நகர் என்னும் நகர்கள்
புறம்போக்குப் பகுதிகளில் குடிசைகளாக, ரயில்வே பகுதிகளுக்கு அருகில் உள்ள
பகுதிகளில் வசித்த அருந்த தியர்கள் மீது நிகழ்ந்த பிரச்சனைகளையும் அவர்களுக்கு
நிலஉரிமைச் சான்றுகள் பெற்று வாழ எடுக்கப்பட்ட முயற்சிகளையும் இந்த நாவல் பதிவு
செய்திருக்கிறது.
பொதுவாக இந்த நாவலில் பதிவு
செய்யப்பட்ட செய்தியில் தத்துவார்த்தமாக களப்பதிவுகள் உள்ளது. செய்தி திரட்டுகளாக
விசாரணைக்குறிப்புகளாகவும் உள்ள நாவல் பதிவுகள் முக்கியமானது. இடதுசாரிக்கட்சிகளின் தனிப்பட்ட வளர்ச்சியை முக்கியமாக வைத்து நடத்திய அரசியல்
நிகழ்வுகளின் பின்னணியை அலசுவது சிறப்பு. இந்திய தமிழக மற்றும் உள்ளுர் அரசியல்
களங்களில் இடது வலது சாரி அரசியல் களங்கள் சற்று வித்தியாச மானவை. இரண்டு
கம்யுனிஸ்ட் கட்சிகளுக்குள் உள்ள தொழிற்சங்க கட்சி நிலைப்பாடுகள் குறித்த பதிவுகள்
வித்யாசமானது. வரும் காலத்திற்கும் புதிய தலைமுறைக்கும் முக்கியமானது. அது போலவே
சில சுயேட்சையான அரசியல் தேர்தல் பங்களிப்பு முடிவுகளை இந்திய கம்யுனிஸ்ட்சி கட்சி
எடுத்த முடிவுகளை நாம் அறிவோம். ஆனாலும் சமீபத்தில் பல்வேறு களப் பணிகளில் இரண்டு
கட்சிகளும் இணைந்து பணியாற்று வது மகிழ்வான செய்திகளாகும்.
இரண்டு கட்சிகளும் இணையவேண்டும் என்று விரும்புகிற எதிர்பார்ப்பும் இல்லாமல்
இல்லை. அவை சாத்தியமற்றதாகவும் கனவாகவும் நிகழ்ந்து கொண்டிருக் கிறது. உள்ளாட்சித
தேர்தல்களில் தேர்தல் பணிகளில் நிலவுகிற இடம் பிடிப்பு வெற்றி சம்பந்தமான
போர்களில் நடைபெறுகிற சம்பவங்களும் முக்கியமானவை.
மு. சந்திரகுமாரின் நாவலில் புதிய கோவையின் பழைய சரித்திரம் எனலாம். களத்தில்
அனுபவம் ரத்தம் தோய்ந்த அரசியல் இயக்கங்களின் செயல்பாடாக பதிவாகியிருக் கிறது.
சந்திரகுமார் ஒரு தொழிற்சங்கவாதியாக, கட்சி செயல்பாட்டாளராக எழுத்தாளராக, பல
போரட்டங்களில் ஈடுபட்டவராக வழக்குகள் கைதுகள் என்று அனுபவத்தின் சாட்சிகளாக
அவருடைய முந்தைய படைப்புகளிலிருந்து இந்த நாவல் புதுமையாக உள்ளது.
கலைப்படைப்புகளைக் காணும் வாசிக்கும் வாசகர்களுக்கு வாழ்க்கையை வாசிக்க
விரும்பும் போது நிச்சயமாக எரியும் பட்டத்தரசி அசலான அனுபவத்தைத் தருவது உறுதி.
தலித் இயக்கங்களுக்குள் நிகழ்கிற பிணக்குகள் அவர்கள் கொள்கை புர்வமாக சந்திக்கிற
பல்வேறு நெருக்கடிகள் முரண்பாடுகளையும் நாவல் பல்வேறு அத்தியாயங்களில்
வெளிப்படையாக பேசுகிறது. காளப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் நடந்த தாக்குதல்களும்
பிற்பாடு நடந்த சமூக ஒருங்கிணைப்பு முயற்சிகளும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாவல் ஒவ்வொரு பெருநகரத்தின்
பின்புலம் தொழில்மய நெருக்கடிகளால் பின்னப்பட்டது என்பதை உணர்த்துகிறது. தங்களைப்
புணரமைத்துக் கொள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் சமூக இயக்கங்களும் எப்படிப்
பேராடுகின்றன என்பதை இந்த நாவல் எந்த அழகியல் கோட்பாடுகளையும் கொள்ளாமல் மக்கள்
மொழியில் பேசியிருக்கிறது. காவல் நிலையங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமான
உறவுகள் முற்றிலும் வினோதமான பக்குவங்கள் கொண்டது. இந்த அனுபவங்களை வெறும் அழகியல்
நோக்கிலும் அகச் சிக்கல்களுடன் எழுதமுடியாது. புழுதியிலும் வெயிலிலும் இரவு பகல்
பாராமல் இந்தப்பெருநகரத்தை உருவாக்க உழைத்த சாமானியர்களின் வாழ்க்கைப் பதிவாக இந்த
நாவல் உருப்பெற்றிருக்கிறது.
அரசியல் மனமாச்சர்யங்கள் தவிர்த்து மு.சந்திரகுமாரின் மார்க்சிய பார்வை
போற்றப்படவேண்டியது. அவரின் விமர்சனங்கள் பரிசீலிக்கப்படவேண்டியவை. சில படைப்புகள்
நமக்கு கச்சா பொருளாக இருந்தால் தான் நாம் நம் வாழ்விற்குத் தேவையான தத்துவ
விசாரத்தைக் கண்டடைய முடியும்..தலித் இயக்கங்களின் அரசியல் விடுதலையெழுச்சி பற்றிய
முக்கியமான இலக்கியப் பதிவாகவும் இந்த நாவல் விளங்குகிறது. ஆகப்பெரும் சிறந்த
முயற்சியை விமர்சனங்களைக் கண்டு அச்சுறாமல் படைப்பாளிக்குரிய பொறுப்புடன் நூலாக்கி
இருக்கிறார். களம்,பொறுப்புகள், அரசியல்இயக்கம் என இடையறாது சுழல்கிற மார்க்சீய
சித்தாந்தம் கற்றவரான
தோழர் மு. சந்திரகுமாருக்கு வாழ்த்துக்களுடன்..
எரியும் பட்டத்தரசி..நாவல்
வெளியீடு- பதிவுகள் பதிப்பகம்
தாய்மை இல்லம் 10-ஸ்ரீராம் நகர் 2 வது வீதி
லட்சுமி புரம் கோவை 641004
அலைபேசி-90033 92939
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக