வெள்ளி, 27 செப்டம்பர், 2013

கவிஞர் அவைநாயகன் மொழிபெயர்ப்பு நூல் “ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல்“எனும் ஞானப்பறவை


ரிச்சர்ட் பாக் எழுதிய

ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல்

எனும் ஞானப்பறவை-

 

தமிழில் கவிஞர் அவைநாயகன்

 

வெளியீடு –விஜயா பதிப்பகம்- விலை ரூபாய் 35-

 

          

      

         நம்பிக்கைகளை விதைப்பது, நம்பிக்கைகளை எப்படியாவது கொண்டு சேர்த்துவிடுவது. நம்பிக்கைகளை ஞானமாகக் கருதி ஆழ்மனதில் துளிர்த்துவிடுவது என்பதாக இந்த உலகில் உருக்கொள்ளும் படிமங்கள் எத்தனை யெத்தனை. இந்த நம்பிக்கை விதைகள் தூவுகிற ஆன்மாக்கள் உலகெங்கிலும் எல்லாப் புத்தாயிரங்களிலும் தோன்றியபடிதான் இருக்கிறார்கள். விஞ்ஞான நம்பிக்கை அஞ்ஞான நம்பிக்கையிலிருந்து நாம் எடுத்து வழங்கும் உத்திகள் விளைந்து கொண்டேயிருக்கும். நிராகரிப்பும் ஊதாசீனமும் புறக்கணிப்பும் சமகாலத்தில் சரியான விகிதத்தில் உற்சாகபாணத்தில் கலந்து தருகிற நம்பிக்கைகளையும் கலந்து தருகிற ஊடகங்களும் நம்பிக்கை உற்பத்தியில் சிறந்து விளங்குவதை நாம் அறிவோம். விமர்சனங்கள் ஆதிசேஷனாக படம் எடுத்து ருத்ரதாண்டவம் ஆடும் போது நாம் நம்பிக்கைகளை வைத்துத்தான் சரி செய்ய வேண்டியிருக்கிறது. இந்த ஆன்மா ஒன்றை அலைக்கழிக்க வைக்கிற பாடு அதைவிடவும் அதிகம்.

              நமது அறிவுலகம் எப்பொழுது உலக இயக்கம் மீது அன்பு கொள்ளும். எப்பொழுது இயற்கை மீது கரிசனத்துடன் நடந்து கொள்ளும் என்பது யாராலும் கணிக்க முடியாது. இந்த நூலில் ரிச்சர்ட்பாக் மற்றும் கவிஞர் அவைநாயகன் சீகல் பறவையை அதன் பறத்தல் சாகசத்தை வைத்து அசுரவேக உலகியல் லொகீக ஆசை கொண்ட மனிதனுக்கு ஆன்மா குறித்த அறிவுறுத்தலைக் கற்றுத்தருகிறார்கள் என்று சொல்லவேண்டும். பறக்கிற சிறகுகளின் கூர்மையை விடவும் எண்ணங்கள் குறித்து கவலையடைய வேண்டியதில்லை. என்கிற படிமம் வாசித்த மனதில் அலைகிறது.

 

           சனி இரவு அவைநாயகன் அண்ணனுடன்  அலைபேசியில் பேசினேன். மறுநாள் நடக்கவிருக்கும் கவிஞர் புவியரசுவின் “கரமசோவ் சகோதரர்கள்“ மொழி பெயர்ப்பு விழா குறித்துக் கேட்டார். சென்னையிலிருந்து இந்த நிகழ்விற்காகவே நூலை மிக வேகமாக வாசித்து விட்டு வந்திருக்கிறேன். உரையாடலாம் நீ வருகிறாய்தானே என்றார். வருகிறேன் என்றேன்.  அவர் கூடுதலாய் தந்த தகவல் தான் மொழிபெயர்த்து வந்த நூல் வெளியாகி யிருக்கிறது என்பது தான். மகிழ்வாய் இருந்த்து. எப்படியோ சில காலத்தை ஒரு படைப்பு அதிகமாகவே எடுத்துக்கொள்கிறது. மொழிபெயர்க்கும் அவர் நூலின் ஞாபகம் வெகு காலமாகவே இருந்து வந்தது. ஒரு வகையில் கரமசோவ் சகோதரர்கள் போலவே. நீண்ட காலத்தை அவருடைய நூலும் எடுத்துக் கொண்டதை அறிந்தேன்.

             களம் சார்பில் நடைபெற்ற விழாவில் அவரைச் சந்தித்தபோது நூலை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். முகப்பு தலைப்பு எழுத்தும் சீகல் பறவையும் வெள்ளி முலாம் அணிந்து பறப்பது போலவே இருக்கிறது. ஆச்சர்யத்துடன் பக்கங்களைப் புரட்டினேன். விழாவின் சூழல் மேற்கொண்டு வாசிக்க முடியவில்லை. நான் பதிலுக்கு அவருக்கு ஒரு புதிய நூலை அளித்தேன்.

           சில பக்கங்களைப் புரட்டியதும் அதிலிருந்த ஒரு வரி ”விலங்குகள் போன்று கொடியதாக“ என இருப்பதைக் கவனித்து கொடிய விலங்கு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது யுவர் ஆனர் என்றார். சிறிய கோபத்துடன். எனக்கு சுளீர் என்றது. கொடிய விலங்கு என்றும் சொல்லுக்காக அவர் காட்டிய எதிர்ப்பும் நான் காலங்காலமாக அறிந்த செய்திகளும் சொற்றொடர்களும் மனதளவில் மோதிக்கொள்ள ஆரம்பித்தது. ஜெயமோகனின் கவிதை ஞாபகம் வருகிறது. பூனை என்பது எத்தனை நல்ல பெயர் விலங்கு என்னும் போது மனம் கூசுகிறது என்பதான பொருள் தருகிற கவிதை.

        இது நாள் வரையிலும் எத்தனை விதமான மேற்கண்ட சொற்களை வாக்கியங்களை நாம் எழுதியிருக்கிறோமா என யோசித்தேன். எனக்குத் தெரிந்த வகையில் இல்லை. இருக்கவும் செய்யலாம். வாசிப்பதற்குத் துவங்கியபோது நூலைக் கண்ட இளவேனில் நான் வாசித்துவிட்டுத் தருகிறேன் என்று பெற்றுக் கொண்டார். ஆர்வம் தாங்காமல் அன்று மாலையே அவரிடம் வாங்கிக்கொண்டு வாசிக்கத் துவங்கினேன். இளையமகன் வாங்கி தன்னுடைய நூல்களுக்குள் வைத்துக்கொண்டு தர மறுத்தான். அலைக்களிப்பாக இருந்த நேரம் அது.

        இந்த நிலையில்தான் இந்திய அரசாங்கம் அடையாள அட்டைக்குப் புகைப்படம் எடுக்க நாள் குறித்து இருந்தது. வித்யாசமான உணர்வும் அனுபவம் என்று சொல்லவேண்டும். பொது மக்கள் குடும்பத்துடன் நாட்கணக்கில் ஒரே இடத்தில் பள்ளிகளில் அடைந்து கிடந்தார்கள். பள்ளி மைதானத்தில் ஆளுக்கு ஆள் கவிதைகள் போன்று பேசுகிறார்கள். ஒருவர் யதேச்சையாக திருப்பதி தேவஸ்தானத்தில் அடைப்பட்டுக் கிடப்பது போலவே இருக்கிறது. என்றார். ஒருவர் போர் முகாமில் இருப்பது போன்று இருக்கிறது என்றார். ஒருவர் முள் வேலி முகாமில் இருப்பது போன்று இருக்கிறது என்றார். ஒருவர் அரசாங்கம் நம்மால் முடியாத, நம்பமுடியாதளவு குடும்பத்துடன் மூன்று நாட்கள் ஒரே இடத்தில் வாழவைத்திருக்கிறது. நினைத்துப் பாருங்கள். நீங்கள் கடைசியாக எப்பொழுது குடும்பத்துடன் எத்தனைநாள் ஒற்றுமையாக இருந்திருக்கிறீர்கள். இப்படியாக நாம் காத்துக்கிடப்பதிலும் சுகமாகத்தான் இருக்கிறது. நாம் போர்க்காலங்களில் வாழ்வதற்குப் பழகிக்கொள்வது மாதிரியுமாயிற்று என்றார் ஒருவர். பிறகு பொழுது போகவேண்டுமே. சமூகப் பிரச்சனையைப் பேசுவதற்கு ஒரு மைதானம் போதும். பறவைகளும் தங்கள் புகலிடங்களில் அரசியல் பேசுமா எனத்தெரியவில்லை. புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று யோசித்திருக்குமா..எண்ணற்ற அளவில் நாம் எடுத்து வைத்திருக்கும் பறவைகளின் புகைப்படங்களைக் கண்டு அவைகள் என்ன நினைத்துக் கொள்ளும். நான் சில சமயம்  முகம் பார்க்கும கண்ணாடியை, சில்வர் தட்டுகளை வாயிலில் வைத்து பறவைகள் தங்கள் முகத்தை எப்படிப் பார்க்கும் என சோதித்து இருக்கிறேன். எத்தனை ஆச்சர்யத்துடன் தனது அழகை ரசித்திருக்கிறது தெரியுமா. அதுபோலத்தானே கடற்கரையில் நீரில் அழகில் தன் உருவத்தை சீகல் பறவைகள் ரசித்துக் கொண்டிருக்கும்.

       

      ஆமாம். எத்தனை குடும்பங்கள். ஒன்று சேர நம்முடன் வசிக்கும மக்களைக் காண்பது கூட சீகல் பறவைகளின் கூட்டத்தைக் காண்பது போன்றுதான் இருக்கிறது என்றார் ஒருவர். எனக்கு நானே சூடு வைத்துக் கொண்டேன். நல்லவேளையாக இவர்கள் எழுதாததால் நம் பிழைப்பு நடக்கிறது. இந்த ஊரில் வசிக்கிறது இத்தனை மக்களா.. எத்தனைவிதமான குழந்தைகள் சிறுவர்கள் சிறுமிகள் வயதானவர்கள் பலவேறுபட்ட இளைஞர்களின் முகங்கள். பார்க்கப்பார்க்க மக்கள் கூட்டம் என்பதும் மக்கள் என்பதும் இப்படித்தான் இருப்பார்களா என்று பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.

             வரிசையில் நிற்கிற பொழுது கிடைக்கும் நேரத்தில் வாசித்து விடலாம் என்று முடிவுடன் புத்தகத்துடன் கிளம்பினேன். வாசிக்க வாசிக்க அந்தப் பள்ளி அரங்கம் கடலாகத் தெரிகிறது. அங்கிருந்த மனிதர்கள் எல்லாரும் சீகல் பறவைகளாகத் தெரிகிறார்கள். அந்த மக்கள் குடும்பங்கள் எல்லாம் சீகல் குடும்பங்களாகத் தெரிகிறது.

               

                   மனிதர்களின் பெற்றோர்களை விடவும் பறவைகளின் பெற்றோர்கள் கண்டிப்பானவர்கள் போலிருக்கிறது. தனது குஞ்சுகளை குட்டிகளை மிகவும் கண்ணும் கருத்துமாகவும் அறிவுட்டி வளர்க்கிறது. ஆபத்துகளை முன்கூட்டி எச்சரிக்கிறது. தாய் எட்டடி குட்டி பதினாறு அடி என்பதையும இளங்கன்று பயமறியாது என்பதையும் உயிரினங்கள் அறியும். நம்மைவிடவும அறியும்.

       

      எனது வீட்டிற்குப்பக்கத்தில் ஆட்டுப்பட்டி ஒன்று இருக்கிறது. முப்பது நாற்பது ஆடுகளின் மேய்ச்சல் ஊர்வலம் பார்ப்பதற்கு மனம் நிம்மதி தருவதாக இருக்கும். மாலைநேரத்தில் அந்த ஆடுகள் அவிழ்த்துவிடப்படும். அவைகள் காலியாக இருக்கிற மனைகளில் விளைந்த பயிர்களை செடிகொடிகளை மேயும். தங்களை அனுமதிக்காத வீடுகளுக்கு அது போவதேயில்லை. படுரோசக்கார ஆடுகள். தன் குடும்பக் கூட்டத்தை அது அழைத்துச் செல்கிற அழகும் பாங்கும் பொறுப்பும் அதிசயிக்கவைப்பவை. சாலைகளில் பறக்கும் வாகனங்களை அறிந்து கடந்து செல்வதும் தனது குட்டிகளுக்கு ஆபத்தினைக் கண்டு கற்பிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

   

       முறையற்றுத் தவ்வி விளையாடும் குட்டிகளை அது கண்டிக்கும் அழகே தனி. ஒரு சமயம் அந்தக் குட்டிகளில் ஒன்றை அவ்வழியாக வந்த  டெம்போக்காரன் ஆட்டுக்குட்டியை அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய்விட்டான். ஆடுகள் கத்தியிருக்கிறது. தனது பட்டிக்குத் திரும்பும் போது தன் கண்மணியைக் காணவில்லையென்று காடு முழுக்க வீடுகள் ஒவ்வொன்றின் முன்னால் அது நின்று கொண்டு கத்தியது இன்றும் காதில் ஒலிக்கிறது. திரும்ப அந்தப் பட்டிக்காரரும் இரவெல்லாம் லே அவுட் முழுக்கத் தேடினார். மக்களுக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த ஆட்டின் குட்டி களவாடப்பட்டிருக்கிறது என்பதை அன்றிரவுதான் மக்கள் உணர்ந்திருப்பார்கள். கசாப்பிற்கு விற்கப்படும் ஆடுகளின் பிரிவினைத்தாங்குவது குறித்து. பிற்பாடு அந்த தாய் ஆடு இரண்டொரு முறை அந்த டெம்போவை அடையாளம் பார்த்து துரத்திக் கொண்டு அரற்றிக்கொண்டு ஓடியிருக்கிறது. ஆட்டின் நுண்ணுணர்வைப் புரிந்து கொண்ட லேஅவுட்கார இளைஞர்கள் சிலர் அந்த இளைஞனைப்பிடித்து விசாரித்தபோது அவன் மிரள்வதையும் முன்னுக்கு பின்னாக அளித்த பதிலை வைத்து அவன்தான் களவாடியிருக்கிறான் என்பதை அறிய முடிந்தது. இதைச் சொல்வதன் காரணம் சீகல் பறவைகளின் தலைவன் சீகல் ஜோனாதனைக் கண்டிக்கிறது. நமது பறத்தல் என்பது உணவுத்தேவைக்கு தானே தவிர அதிக தூரம் அதிகவேகமாகப்பறப்பதற்கு அல்ல என்கிறது.

       

      மறுகணம் மனிதர்களின் அடிமைத்தனத்தைக் குறித்த குறியீடாகவும் இருக்கிறது சீகல் பறவை. வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவது என்று முடிவில் இலக்கும் வாழ்வின் அற்புதம் பற்றிய அறிவின்றி உழல்கிற மனிதர்களும்  அடையவேண்டிய தூரத்தை உணர்த்துகிறது. சியாங்  பறவை போன்ற அறிவுறுத்தல் எனும் அச்சுறுத்தல்கள் இருக்கவே செய்யும். நான்கு கோடி பிரதிகளை விற்ற நூலின் அம்சம் என்னவாக இருக்கிறது. பாருங்கள் இலக்கும் அதை அடைவதற்கு இடையறாத முயற்சியும் அவசியமாகிறது.

         

       சீகல் பறவை பத்துவினாடிகளில் தொண்ணூறு மைல்வேகம் என்பது உலக சாதனை. சீகல் பறவை தன் அசுர சாதனை பறத்தல் பயிற்சியை எப்படி மேற்கொள்கிறது. தன்னுடன் பறக்கும் ஆயிரக்கணக்கான சீகல்களுக்கு மத்தியில் இடையறாத பயிற்சியாகப் பறத்தலின் வடிவங்கள். அதற்காக அப்பறவை மெனக்கெட்டு செய்யும் முயற்சி செய்வதுமாக காட்சிகளின் பிரமாண்டம் விரிகிறது. சில குறிப்பிட்ட அடிகள் வானத்தில் பறக்கிற போது நிலவும் காற்றழுத்தம் பற்றிய புரிதல்களையும் கற்றுக் கொள்கிறது. காற்றில் இருக்கும் ஈரப்பதம் சிறகுகளை விரைவில் உலர்த்திவிடுகிற போது பறத்தலுக்கு தன் இறகுகளைக் குறுக்கிக் கொண்டு பாய்வதும் பின் சாய்வாக தளர்வாக நெற்றுக்குத்தலாகப் பறத்தலின் முயற்சியில் கடலின் செங்கல் போன்ற படிமத்தில் விழுவதும் சிறகுகளும் தோள்களும் வலிப்பது பற்றியும் விவரிக்கிறது நூல். தன் தலைமைக்குக் கட்டுப்பட்டவாறு செய்யும பயிற்சிகள் வான் சாகசம் சரியான ஓய்விற்குப்பிறகு பறக்க எடுத்துக்கொள்கிற காலம். தங்களின் கட்டளைப்படி நடக்காத சீகல் ஜோனதனுக்கு தண்டனையாக தனித்த மலையில் தான் வாழ வேண்டும் என்கிற நிலையிலு தன் பறத்தல் பயிற்சியைத் தனது நண்பகளுக்குக் கற்றுத் தருவது கவித்துவத்தின் உச்சம். பொருளும் உணர்வின் ஆழமும் சிதையாமல் சிதையாமல் மொழியாக்கம் நடந்துள்ளது.

         

        சொர்க்கத்தைப் போல வேறு ஒர் இடம் இருக்கிறதா எனும் கேள்விக்கு “இல்லை ஜோனதன் அப்படி ஒன்றும் இல்லை. சொர்க்கம் என்பது ஒர் இடம் கிடையாது. அது ஒரு நேரமும் கிடையாது சொர்க்கம் என்பது குறைவில்லாதது. அது ஒரு முழுமை“ அதே நேரம் நமக்கு நரகம் குறித்து அந்தப் பறவைகள் என்ன நினைக்கும் என்பதையும் யோசிக்க வைக்கிறது. வாழ்தலில் பறத்தலில் இலக்கு கொள்ளுதல். உட்சபட்ச வேகத்தைப் பறந்து சாதித்தல் ஒலியின் வேகத்தைப் பறந்து சாதிக்க முடியுமா என முயற்சி செய்வதாக அதன் வாழ்வு நிலைபெற்ற ஒன்று என்கிறார் ரிச்சர்ட்பாக். சிறு நோகாணலில் அவர் பேசும் குறியீடுகள் முக்கியமானவை. இலக்கு நோக்கி முன்னேறுகிற கல்வி பயில்கிற மாணவ மாணவிகளுக்கும் சாதிக்க முனையும் ஒவ்வொருவருக்கும் இந்த சீகல் பறவையின் பறத்தல் அனுபவம் நல்ல உத்வேகத்தைத் தரும். கடல் புறாவின வகைகள் என அறியமுடிகிறது சீகல் பறவைகளை. கடலுக்குள்ளும் கடற்கரைப் பகுதிகளிலும் ஒரே ஜாடையில் இருக்கிற பறவைகளும் பறத்தலில் இன்பம் கொள்பவை. இன்றும் கூட நமது நாகர் கோவில் பகுதியில் வருடந்தோறும் புறாப்பந்தயங்கள் நடைபெறுகிறது.மேலும் இந்தியாவில் புராதன நிலங்களிலெல்லாம் புறாப் பந்தயங்கள் நடக்கிறது. நாகர்கோவிலில் நடக்கும் புறாப்பந்தயங்களின் தூரம் ஐநூற்று ஐம்பது கிலோமீட்டர். கேரளக்கடற்கரை முழுக்கவும் பறந்து சென்று விட்டு திரும்பவும் வருகிற புறாக்கள் அதி திறமைவாய்ந்த புறாக்கள் வளர்க்கப் படுகறது. புறாக்களின் வாழ்வு அல்லது புறாக்களுடனான நமது மனித வாழ்வும் பின்னிப்பிணைந்த ஒன்று. கடலோரங்களைத் தன்கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆங்கிலேயர்களில் ஒரு சில விமான சாகசங்களிலும் உலகம் சுற்றுவதிலும் ஆர்வம் கொண்டவர்கள் புதியபுதிய தீவுகளையும் நிலப்பகுதிகளையும கண்ட டைந்தனர். காண்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சிக்குப் பிறகு உலகின் பல மூலைகளுக்கு குறிப்பாக கடல் பயணங்களின் வழியாக அனுப்ப பட்டனர். அவர்கள் அனைவரும் பறவைகளின் வாழிடங்கள் அதன் வசீகரம் இருப்பு குறித்த அனுமானத்தின் படியாக அவர்கள் குடியேற்றங்களை அமைத்தனர்

 

               மனிதன் ஒரிடத்தில் இருந்து வாழும் வாழ்க்கையை அறிந்த பிறகும் அதன் சொகுசு கண்டபிறகு நிலங்களின் மீது தனது ஆதிக்கத்தைத் தொடங்கியபிறகு பல போர்களும் நில விஸ்தரிப்புகளும் நடந்தது. பறவைகளின் வாழ்க்கையைத் தத்துவங்களில் புராணங்களில் இதிகாசங்களில் செவ்வியல் பாடல்களில் வழியாக நமக்குப் போதிக்க ஆரம்பித்தனர். அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும். என்பதும் அப்படித்தான். பறவைகளின் வாழ்வுக் குறியீடு எந்தநாளும் மனிதனுக்குப் பொருந்தப் போவதில்லை. வேட்டையாடி சமூகத்தைச் சார்ந்தவனான அவனுக்கும் அறிவிற்குப் பஞ்சம் தான் எந்த நாளும். தற்காலத்தில் நகைச்சுவை நடிகர்களின் கோமாளித்தனங்க ளுடைய தத்துவார்த்தங்களில் நம்பிக்கை கொண்டவனாக இருக்கிறான். ஒரு துறைசார்ந்தவன் அந்த துறை குறித்துதான் அறிவான். ஆனாலும் நமக்கு பறவை குறித்த வாழ்வின் குறியீடுகள் அவசியமாகிறது. நாம் மனிதனை உதாரணம் காட்ட முடியாத நிலையிலிருப்பதாலேயே நாம் பறவையை சீகல் போன்ற பறத்தலை விரும்பி வாழ்கிற இலக்கை நாம் நிர்ணயம் செய்கிறோம்.

           இந்த நூல்வெளிவந்த காலத்திற்கும் தற்காலத்திற்குமான இயற்கையின் நிலையை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. அந்த நாட்களில் நாங்கள் மாலை வரை ஆற்றில் குளிப்போம். மாலைப்பொழுது மண்டியதை அறிந்து வண்டி மாடு கழுவ  வருகிறவர்கள் யேய் சீக்கரம் போங்கடா அங்க பாருங்க என்பார். வானத்தில் மேற்கு நோக்கி வரிசையாக பறவைகள் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குப்பயணம் செய்வதைக் கண்டிருக்கிறோம். அவைகள் காலையில் நொய்யலாற்றுப்படுகைகளில் இருபுறமும் இருக்கிற குளங்களில் ஏரிகளில் இனப்பெருக்கத்திற்காக உணவிற்காக வந்து திரும்பிக் கொண்டிருக்கும். குறிப்பாக கொக்குகள் இனம் புரியாத அற்புதமான பறவைகள் வரிசையாகப் பறந்து போகும். அதன் படியாக நாங்களும் ஆற்றிலிருந்து வீட்டை நோக்கி வந்திருக்கிறோம்.

        இன்றும் கடலோர மாவட்ட மக்களின் ஆதாரமே மீன்கள். வகைவகையான மீன்கள் போன்ற பறவைகளும் வாழத்தான் செய்கிறது.

பிளெட்சர் பறவை கூறுகிறது ”ஒரு சீகல் பறவை என்பது எல்லையில்லாத விடுதலையை வேண்டுவது.உங்கள் உடலின் உள்ள ஒவ்வோர் இறகின் நுனியும் உங்கள் எண்ணங்களை விதத்திலும் உயர்ந்தவை அல்ல.“ கவிஞரின் மொழிபெயர்ப்பு வாசகங்கள். சாதாரண மொழிபெயர்ப்புக்கும் கவிஞராக இருக்கிறவரின் மொழிபெயர்ப்புக்கும் எத்தனை வேறுபாடு.

        

           தற்கால நம் சமூகத்தில் “பறவை காணுதல்“ என்னும் வழக்கம் நடைமுறை மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. இயற்கையியல் நேசிக்கிற சுற்றுப்புறங்களில் ஆர்வமிருக்கிற மாணவ மாணவிகள் பறவைகளைக் கண்டு அதன் வாழ்வினை அன்றாடம் அதனின் இயல்புகளை குறிப்பெடுக்கிறார்கள். புகைப்படக் கலையின் ஒரு வெளிப்பாடாகத் துவங்கிய இந்தப்பழக்கம் நமது இளையோர்களின் மீது நம்பிக்கை கொள்ளவைக்கிறது. தாவரவியல் சூழலியல் சமூகவில் ஊடகவியல் மரபு சார்ந்த இயற்கை விவசாயம் பற்றிய படிப்புகள் படிக்கிற மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் பலர் இது போன்ற பறவை காணுதல் வழக்கத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். பாரட்டப் படவேண்டிது. குறிப்பிடப்பட வேண்டியது. அதுபோன்ற இயற்கையியல் குறித்த விழிப்புணர்வை அளிக்கிறது இந்த நூல். ஞானம் என்பது பறவைகளின் வாழ்விலிருந்துதான் பிறக்கும் என்பது இந்த நூலும் அல்லது சீகல் பறத்தலின் வழியாகவும் அமையும் என்கிறார் அவைநாயகன்.

 

            இயற்கை குறித்தும் காணுயிர்கள் குறித்தும் பறவைகள் பற்றியும் நாம் தொடர்ந்து படைப்புகளும் அரங்குகளும் கண்காட்சிகளும் நடத்தவேண்டிய இலக்கை கொண்டிருக்கிறோம். தலைமுறை தலைமுறையாய் பறவைகளின் வாழ்வுடன் நம் வாழ்வும் கல்வியும் அறிவும் கூடவே வளர்நது வந்துள்ளது. நம் பெற்றோர்களை விடவும் பறவைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அளப்பரிய அன்பும் எச்சரிக்கையுணர்வும் கொண்டிருக்கிறது என்பதை அறிய நேர்ந்துள்ளது. காக்கைக்கும் தன் குஞ்சு என்பது போன்று. தமிழ் மொழியில் பழமொழிகளில் கூறப்பட்டிருக்கிற பறவைகளின் வாழ்வும் மேன்மை பற்றிய பழமொழிகள் எல்லாம் சீகல் பறவையால் ஞாபகம் வருகிறது. சொர்க்கம் ஞானம் விடுதலை இலக்கு வேகம்  பறத்தல் என்பது எல்லாம் சக உயிர்களுக்கு முடிந்த வரை தீங்கிழைக்காமல் சீகல் வாழ்ந்திருந்து பறந்து கொண்டிருப்பதை உணர முடிகிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் மூத்த ஆளுமை புவியரசு மிகச்சிறந்த ஆன்ம முன்னுரையை வழங்கியிருப்பது சிறப்பு. தன் படைப்பிலக்கியத்தில் மேலும் ஒரு துறையில் முத்திரை பதித்த கவிஞர் அவை நாயகன் அண்ணனுக்கும் இனிய வாழ்த்துகள். வெளியிட்டு பரவலாக்கிய நூலின் முயற்சியை வரவேற்ற விஜயா பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்.

            

செவ்வாய், 30 ஜூலை, 2013

நிஜந்தன்- நாவல் -நான்-நிழல் குறித்த கட்டுரை


நான்-நிழல் –நிஜந்தன் நாவல் குறித்து.

 

புகையின் நிழலும்- நெருப்பின் அச்சமும்..- இளஞ்சேரல்

         

 

               புதிய புதிய நிலவியல் கண்டுபிடிப்புகளும் கடல் வழி வாணிபங்களும் மனித நாகரீகத்தை வளர்க்க உதவியது. நாகரீகங்கள் வளரத் துவங்கியதும் அவன் தனக்கான மொழிகளையும் குறிப்புகளையும் எழுத ஆரம்பித்தான். அவன் முதலில் வரைபடங்களை வரையத் துவங்கும் போது மொழிக்கான குறிகளையும் தன் எதிர்மனிதனுக்குப் புரியவைக்கவும் சில குறிப்புகளால் எழுதிப் புரிய வைக்கத் துவங்கினான். அவன் இழப்புகள் உறுதியென அறிந்தபிறகு அவன் வாழ்ந்த காலத்தையும் தனது இருப்பு குறித்த பதிவுகளையும் தன் முன்னோர்களின் இருப்பையும் அவன் பதிவு செய்யத்துவங்கியதே இலக்கியப் பிரதிகளின் மூலம் எனலாம். பத்தாம் நூற்றாண்டில் மொழி ஒருவாராக வடிவத்தை அடைந்தது.

நமக்கு நாவல் வடிவம் மேற்கத்திய உலகிலிருந்து கொடையாகப் பெற்றது. ஆங்கிலேய ஆட்சிக்குப்பிறகு இந்திய சமஸ்தானங்களும் அதன் மொழிகளும் கலாச்சாரச்சின்னங்களின் அழிவுக்குப் பிறகு மனிதன் தனது அடையாளங்களை நிலை நிறுத்தக் கல்வெட்டுகளில் தனது முக்கியக் குறிப்புகளை எழுதினான். அவன் வெற்றிகளை அவன் இழப்புகளை கொஞ்சமாகவும் உற்சாகத்தை சிலைகளாகவும் இழந்த நிலங்களில் அவன் கண்டெடுக்கப்பட்டதை வைத்து நாம் அவனின் இழப்பையும் வெற்றிகளையும் அறிந்து வருகிறோம். இந்த நாவலில் நிஜந்தன் மனித உடற்கூறுகளில் உள்ள நோய்மையால் அல்லல் அடையும் வாழ்வை எழுதிச் செல்கிறார்.

        இவ்வுலகின் இயக்கமும் மனித வாழக்கையின் தன்மையும் பிற உயிர்களின் வாழ்க்கை முறையும் காலத்தின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்டவை. மனித மனதின் உள்ளுணர்வுகளில் காலமும் அதன் செயல்பாடுகளும் உறைந்து கிடக்கின்றன. காலம் குறித்த சிந்தனை இந்திய மரபில் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது. “கால“ என்கிற சொல் ரிக்வேத்த்தில் மதச்சடங்குகளுடன் (தன்னுடையது என்று இருக்கும் அனைத்தையும் விட்டுவிடும் காலம்) இணைக்கப்பெற்றுள்ளது. அதனால் அது பொருத்தமான காலம் என்ற பொருளாக அறியப்பட்டது. பிறகு சமஸ்கிருதப் படைப்புகளில் “காலம்“ என்பது பரந்து பட்ட ஒரு பொதுப்பொருளிலேயே அழைக்கப்பட்டது.. ஜி.ஜே.விட்ரோவின் ஆய்வின்படி வேதகாலத்தில் காலம் என்பது செறிவானதாகவும் சுருக்கமானதாகவும் அதே நேரத்தில் இந்த அண்டத்தின் அடிப்படையான கொள்கையாகவும் உருவாகியது. மேலும் அது தெய்வங்களுடன் இணைக்கப்பட்டும் நிலையாமையை விளக்குவதற்கும் அடைப்படையானதாய் அமைந்திருக்கிறது என்கிறார். அதுமட்டுமின்றி அனித்திதா பல்சுலவ் எனும் திறனாய்வாளர் தமது ஆய்வின் முடிவில் பக்தமீமாம்சப் பள்ளியைச்  சேர்ந்தவர்களுக்கும் நியாய வைசேடிகா பள்ளியைச் சேர்ந்தவர்களுக்கும் நடந்த காலம் பற்றிய விவாதங்களை அவர் மிக நுணுக்கமாக ஆராய்ந்து கூறுகிறார். பக்த-மீமாம்சகர்கள் காலம் என்பது புலன்களால் உணரக்கூடியது  ஆனல் நியாய வைசோடிகர்களோ காலத்தை மனத்தால் உய்த்துணர்ந்துதான் அறிய முடியும் புலன்களால் அறியக் கூடிய நிறமோ,வடிவமோ அதற்கு இல்லை என்று கூறுகிறார்கள். அதற்கு பக்த மீமாம்சகர்கள் காலத்தைச் சோதனைக் கருவிகளின மூலம் அளந்து காண்பத என்பது முடியாத ஒன்றுதான் ஆனால் சில நிகழ்ச்சிகள் வேகமாகவோ மெதுவாக்வோ நடப்பதாக நாம் உணருகிறோம். இது காலத்தின் மீதான நம் நேரடியான அனுபவம்தான். அதனால் நாம் அதை உணரமுடியும் என்கிறார்கள். நியாய வைசோடிகர்களொ காலம் பற்றிய மெய்ப்பொருள் த்த்துவ விளக்க ஆராய்ச்சிகளின் மூலம் அதனை விளக்கி காலத்தை நேரடி உணர்வினால அறிய முடியாது மனதால் மட்டுமே உணர முடியும் என்கிறார்கள். நிஜந்தனின் நான்-நிழல் நாவலை வாசிக்கும் போது இந்த படிநிலைகள் ஞாபகம் வருவதைத்தவிர்க்க முடியவில்லை. நாவலின் காலங்கள் கருப்பு வெள்ளை ஈஸ்மெண்ட் கலரில், காலம் வந்து போகிறது. புகைப்படங்களில் இப்போது எல்லாம் சிதிலமடைந்த புகைப்படங்களைக் கொண்டு தந்தால் அழகாக வண்ணப்படங்களாக மாற்றித்தருகிறார்கள். அதுபோல நம்முடைய கருப்பு வெள்ளை வாழ்க்கைச சம்பவங்களை நாம் வண்ணச்சித்திரங்களாக மாற்றி நம் மனதுள்ளே கற்பனை செய்து பார்க்கிற உணர்வுகளை நிஜந்தன் தருகிறார். விவேகானந்தரின் காலம் பற்றிய கருத்துக்களை ப்ரதோவ் எனும் ஆய்வாளர் ஒரு வரைபடத்தின் மூலமாகக் காட்டுகிறார்.

அ. முழுமை (தி.அப்சொல்யுட்)

ஆ. காலம் (டைம்- இடம்- (ஸ்பெஸ்) காரண காரியம் (காசேசன்) ஆ.அண்டம் ( த யுனிவர்ஸ்) விவேகானந்தர் காலம்,இடம்,காரணகாரியம் என்கிற மூன்றும் அண்டத்தைக் காட்டும் கண்ணாடி என்பார். பகவத்கீதையில் ஒரு சுலோகம். இந்த நாவலில் பகவத்கீதையின் சுலோகங்கள் நிறையப் பயண்படுத்தப் பட்டிருக்கிறது. நாவலுக்கு அவசியமான தகுதியான இடங்களில் ராமானுஜனின் தந்தையின் வாயிலாகப் பெறப்படும் சுலோகங்கள் அற்புதமானவை. கீதை பேசுகிறது. “எந்தப பொருளிலிருந்து எல்லாப் பொருளும் தோன்றினவோ எந்த் பொருளால் அவையாவும் நிலைநிறுத்தப்படுகின்றனவோ அதுவே இறுதிப் பரம்பொருள்“ என்பதை நமக்கு நிஜந்தன் நாவல் மூலம் விளக்குகிறார். அதாவது நாம் மாற்றி நினைக்கலாம். எந்த சம்பவத்திலிருந்து எல்லா சம்பவங்களும் தோன்றினவோ எந்த சம்பவங்களா அவையாவும் நிலைநிறுத்தப் படுகின்றனவோ அதுவே இறுதி சம்பவங்கள் எனலாம். மனித நாகரீகங்களும்,தத்துவங்களும் முதலில் தோன்றி வளர்ந்த்து கிரேக்க த்தில் தான்.கிரேக்கர்களின் த்த்துவக் கோட்பாடுகள் இதர மேலை நாட்டுத்த்த்துவக் கோட்பாடுகளுக்கு ஊற்றாக இருந்திருக்கிறது. அவர்கள் வெளியை(ஸ்பேஸ்) பற்றி அதிகமாகசிந்தித்தனர். புகழ்பெற்ற ஒர கூற்று “ஓடுகிற ஆற்று நிரின் ஒரே பகுதியில் இரு முறை கால் வைக்க முடியாது” என்றார் எராக்லிடசுவின். காலத்தின் முன்னோக்கி செல்லும் தன்மையையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ந்து முடிந்த ஒன்றை மீண்டும் நிகழ்த்தவே முடியாது என்பதையும் விளக்குகிறது.

அவனுடைய புகைப்பட அரங்கில் உள்ள நாயகனின் உருவப்படங்களின் வாயிலாக ஒவ்வொரு புகைப் படங்களுக்குப் பின்னணியில் உள்ள கதைகள் கதைமாந்தர்களின் பின்னணி அவர்களுடைய உறவுப் பெண்கள்,ஆண்கள்,மாமா,அத்தை சித்தப்பா, அத்தை என்ற உறவுகளின் வாழும் சாதரண ராமானுஜனின் தினசரி நடவடிக்கைகளும் நோய்மையால் அவன் அடைந்த இழப்புகளை வாசகனுடன் அல்லது வெளியுலகத்திற்கு வாய்மொழிப் பிரமாணமாக சொல்வது மிகச்சிறப்பாகப் பதிவாகியுள்ளது. மனைவி தன்னைப்பிரிந்தது. காதலி வீணா தன்னைப் பிரிந்தது. ஏற்கெனவே திருமணமான பெண்ணுடன் மறுபடியும் காதல் சமயம் அவளும் இடுப்புக்கட்டியை அகற்றப்பட்டுவிட்டதாக எனக் கேட்பது

 அனைத்து இலக்கியங்களுக்கும் காலப்பின்னணி அமைய வேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்தியவர் தொல்காப்பியர் “முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்  இயல்பு என மொழிய இயல்புணர்ந்தோரே..“ என்கிறார். மேற்கத்திய நாவல்களில் தங்கள் சமூக சூழல்களுக்கேற்ப காலத்தை இணைத்து பல்வேறு நாவல்களைப படைத்துள்ளனர். இத்தகைய நாவல்கள் உத்தி முறையில் வெற்றி பெற்றனவாக எண்ணப் படுகின்றன. காலம் பற்றிய உணர்வுநிலை (கான்சியஸ்னெஸ் ஆப் டைம்) மேலை நாட்டினரிடம் மிகப் பரவலாக்க் காணப்படுவதால் காலத்தின் ஆளுமையை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். டேவிட் லியான் ஹிக்டன் எழுதிய காலமும் ஆங்கிலப்புனைகதைகளும்“ முக்கியமான நாவல் ஆய்வு நூல். நாவல்களில் காலப்பின்னணியை பல ஆய்வு முறைகளில் நான்கு வகைகளாகப் பகுத்துள்ளார். அ.வளர்நிலை காலம்(பிராசஸ் டைம்)- பின்னோக்கி நிலைக்காலம் (ரெஸ்ட்ரோபெக்டிவ் டைம்)- தடையற்ற காலம் (பாரியர் டைம்)-கலவை நிலைக்காலம் (பாலிடெம்ப் ரோரல் டைம்) அந்தக் காலங்களின் வழியாக நிஜந்தன் தன் நாவலை நகர்த்தியிருக்கிறார். அது போலவே. சுலோமித் ரிம்மான் கேன்னின் முக்கியமான நூல் எடுத்துரை புனைகதைகள்-சமகால கவிதையியல் (நேரெடிவ் பிக்சன்-காண்டம்பர்ரி பொயடிக்ஸ்) என்ற நூலில் நாவலில் வரும் கால ஆய்வு பற்றி பற்றி சில விளக்கங்களைத் தருவதை கவனிக்கலாம். அ. கால நிரல் (ஆர்டர்) ஆ. காலவரையறை (டியுரேசன்) இ. கால அடுக்கு (பிரிக்கிவன்சி) இந்த அளவிலும் நாவல் பயணிக்கிறது.

கதையின் நாயகன் ராமானுஜனுக்கு இடுப்பில் கட்டி இருக்கிறது. அந்தக் கட்டி அவனுக்கு கட்டி உடைகிறபோதெல்லாம் மகிழ்ச்சியாகிறான். கட்டி உடையாமல் இருக்கிறபோதெல்லாம் அவனுக்குப் பிரச்சனைகள் வருகிறது. நாவலின் மையம் முழுக்கவும் சிதைவுகளைப் பேசுகிறது. உறவுகளின் மனப்பிறழ்வுகளின் காரணங்களை அலசுகிறது. வக்கிரம் நிறைந்த மனிதனுக்கு இயல்பாகப் பிறந்து விட்ட நோய்மையை பலவிகித்ததில் ஆராய்கிறது. அவர் கலை நோய் தமிழ்ச் சமூகத்தின் பெருநகரவாழ்வியலில் பரவலாகிப் போன நடைமுறையைப் பேசுகிறது.

நாவலில் ஒரு இடத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி-ஜி.என்.பாலசுப்பிரமணியம் இருவருக்குமான உறவு குறித்துப் பேசுகிறது. அது போலவே நாயகனின் அம்மாவிற்கும் சித்தப்பாவிற்குமுள்ள உறவுகள். இதை அறிந்தே வாழ்கிற பிராமணத் தந்தையின் மனபோராட்டம். அவர் அதை வழிமொழிந்தவாறு கிருஷ்ணா உபதேசம் கேட்பது. பகவத்கிதையின் சுலோகங்களில் பக்தி இயக்கங்களில் ஆர்வம் காட்டுவது. விவரிக்கப் படுகிறது. ஏறக்குறைய இந்திய முஸ்லீம் குடும்பங்களின் வாழ்வும் பிராமணக் குடும்பங்களின் வாழ்வும் சரிசமவிகிதத்தில் தான் இருப்பதாக அவர் நாவலில் வடித்திருப்பதை இந்த நாவலின் அசாத்தியமான கட்டம். துணிவு என்று சொல்லலாம். சமீபத்தில் ஷரியத் நீதிமன்றங்களுக்கு இந்திய அரசு அனுமதித்திருப்தை நாம் நினைவு கொள்ளலாம். இந்திய மரபில் மட்டுமல்ல தமிழ்க் குடும்ப முறைகளின் பால் அவநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் தங்கள் இணைகளுக்கு வெளியே பழக்கத்தி லிருக்கும் ஆண்களை பெண்களும் பெண்களை ஆண்களும் விரும்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதாக நாவல் பேசுகிறது.

          தமிழ் நாவல்கள் தம் தொடக்க்கால அமைப்பு முறையின்ன்று எவ்வளவோ மாறி புதிய அமைப்பு முறையை அடைந்திருக்கிறது. நமது மரபுவழி நாவல்களில் தமிழ்க்காப்பியங்களும் புராணங்களும் ஒரு மரபை உருவாக்கியிருந்தன இலக்கிய அறத்தைத் தோற்றத்திலிருந்து ஆரம்பித்து அடுத்து வளர்ச்சி, அதன் பின் உச்சநிலை, இறுதியாக முடிவு என்ற அமைப்பைத்தான் பெரும்பாலும் பின்பற்றின.சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், மகாபாரதம், புராணங்கள் யாவும் இந்த மரபைப்பின் பற்றின.  இந்திய சமூக அமைப்பில் குடும்ப அமைப்பில் முற்பட்ட வகுப்பு அல்லது அல்லது வேத வைதீக மரபுகளில் பின்பற்றப் படும் அமைப்பியலை மிகவும் விமர்சனம் செய்கிறது நாவல். மனச்சிதைவுகளை ஒரு புகைப்பட ஸ்டுடியோ வழியாக எல்லாவற்றையும் காண்கிற வடிவத்தில் நாவல் நகருவதைப் புதுமையான உத்தி என்று சொல்லலாம். நாம் நம் வாழ்வில் அறிமுகமான ஸ்டுடியோக்களை ஞாபகம் ஊட்டுகிறது. ஸ்டுடியோக்களுக்கு வருகிற முகங்களை அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை அவர்கள் பெண்களை எதிர்கொள்கிற விதம். குறிப்பாக பெண்களின் அந்தரங்கம் சிலாகிக்கப் படுகிறது. அந்தப்புகைப்படங்களில் படிந்திருக்கிற முகபாவத்தின் பின்னணியின் சம்பவங்களை சுவராசியமாகப் பேசுகிறது. நாவலை வாசிக்கத் தூண்டுவதாக இருக்கிறது.  நமது வாழ்வின் நிகழ்வுகளுக்கு நாமே முதன்மையான பார்வையாளனாக உள்ளோம். தமிழ் நாவல்களின் வளர்ச்சியை நாம் ஒரு முறை நினைவுட்டிப்பார்த்தால் நீண்ட நெடிய பரிமாணத்தை அடைந்திருக்கிறோம். போதாமைகள் நம்மிடம் இருந்தாலும் கலைவடிவம் சார்ந்த நாவல்களில் நாம் குறித்த இடத்தை அடைந்திருக்கிறோம். விவசாயம்,நெசவு,அதிகார விரிவாக்கம்,புதிய தொழில்களின் வரவு,பாரம்பரிய கலைகளின் வீழ்ச்சி பற்றியும் பேசியிருக்கிறோம். சைவ-வைதீக வேளாளர் மரபை மீறாமல் மரபுக்களம் அமைத்து எழுதிய பண்புகளும் வந்தது. மேற்கண்ட வழிகளில் தங்கள் உறவுகளை கட்டமைப்புகளைக் கொண்ட வாழ்வை எழுதினார்கள். பல நாவலாசிரியர்களுக்கு சினிமா எனும் வடிவம் அச்சுறுத்திக் கொண்டிருந்த்து. சினிமா பாணியில் சித்தாந்த மரபுகளை அடிமைத்தனத்தை எதிர்த்த படைப்புகளையும் எழுதினார்கள். பொதுவாக பொதுவுடைமை சித்தாந்தத்தை எல்லாப்படைப்புகளையும் எழுதினார்கள். அப்படியாக எழுதப்பட்ட படைப்புகளுக்குத்தான் மரியாதை கிடைதது. தொ.மு.சி, கு.சின்ப்ப பாரதி, கே.முத்தையா, டி.செல்வராஜ் பிரபஞ்சன்,ராஜம் கிருஷ்ணன், சுந்தர்ராமசாமி, அசோக மித்ரன், ஜெயகாந்தன்.நாஞ்சில் நாடன். சுப்ரபாரதிமணியன், அகிலன்.நா.பார்த்தசாரதி ஆகியோருக்கு நிறைய வாசகர்கள் கிடைத்தனர். இருந்தார்கள் என்பது பெருமைப் படவேண்டியவை.

           தற்காலத்தில் நாவல்களுக்குக் குறைந்த அளவிலேயே வாசகர்கள் இருக்கிறார்கள். பழைய வாசகர்களுக்கு வயதாகியிருக்கிறது. அந்த வாசகர்கள் ஓரு வேளை இப்போது ஓய்வுபெறும் வயதை அடைந்திருப்பார்கள் என நினைக்கிறோம்.எஸ்.ராமகிருஷ்ணன்,இமையம், சிவகாமி, ஜோ.டி.குருஸ்,ஜெயமோகன், சு.வெங்கடேசன்,பூமணியின் நாவல்களை 60-70-80 களின் வாசகர்களின் தரம் இன்றைய இளையதலை முறையினர் வாசிக்கிறார்களா எனநாம் யோசிக்கிறோம். நிஜந்தன் நாவலில் நாம பயணம் செய்யும் போது நமக்கு பிரமிப்பாகவே இருக்கிறது.

இந்த நாவல் வடிவத்தில் ஒருவகை நனவோடை நாவலாகவும் இந்த நாவல் இருப்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்த உத்தியை சிறப்பாகப் பயண்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் டோரதி ரிச்சர்ட்சன், ஜேம்ஸ்ஜாய்ஸ், வெர்ஜினியா வுஃபுல்ப், வில்லியம் பக்னர், குஸ்டவ் ஃப்ளொபோட், முக்கியமானவர்கள். இதில் ஆங்கிலத்தில் ஜேம்ஸ்ஜாய்ஸ், மார்ஷல்ஃபிரஸ்ட் (பிரஞ்ச்) ஃபிரான்ஸ் காப்கா(ஜெர்மனி) ஆகிய மூவரும் நனவோடை உத்தியை நவீன முறையில் அமைத்து உலக நாவல் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினர். ரெக்ஸ் ஸ்டவுட்டி எழுதிய ஹவ் லைக் எ காட் என்கிற நாவல் முக்கியமானது படிக்கட்டுகளில் ஏறும்வரையிலான கால அளவில் தனது வாழ்வை நினைத்துப் பார்க்கி மாதிரியான உத்தியைப பயண்படுத்தியிருப்பார். ஷேக்ஸ்பியர் தனது “திடெம்பஸ்ட்” நாடகத்தில் பிராஸ்பெரோ என்ற பாத்திரம் கடந்த கால நிகழ்ச்சிகளையெல்லாம் கூறுவது போல அமைந்திருக்கிறது. எட்வர்டு டுஜார்டின் “தி லாரல்ஸ் ஹேவ் கீன் கட்” அளவில சிறியதாக இருந்தாலும் முக்கியமான நனவோடை நாவல்.

        தமிழில் நனவோடை உத்தி பற்றி மூத்த ஆளுமை சி.சு செல்லப்பா சொல்வதை கவனிப்போம், “அநேகமா மணிக்கொடிக் கதைக்கார்ர்கள் எல்லோருமே ரிப்ளக்டிவ் என்கிறோமே, சிந்திக்கிற,  முன்னும பின்னுமாக மனதை ஓடவிடுகிற மாடு அசைபோடுவது போல மனதின் சிக்கலான, கலப்பான, ஆழமான உணர்வுகளை ஆழத்திலிருந்து மேல் தளத்திற்குக கொணர்ந்து திரும்பத்திரும்ப உரைத்துப் பார்க்கிற விதமான எழுத்துப் போக்கு.” என்கிறார். நனவோடை எழுத்து பற்றி.

      உதாரணமாக சில நாவல்கள். சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம், நீல.பத்மநாபனின் பள்ளி கொண்டபுரம், லா.ச.ராமாமிருத்த்தின் அபிதா காவேரியின் ”ஆத்துக்குப் போகணும்” என் ஆர் தாசனின் “இங்கிருப்பதும் அதுதான் “ நாவல்களின் பயண்படுத்தப் பட்ட உத்தி வரவேற்கப்பட்டது. வீணா .மகேஸ்வரி கதாபாத்திரங்களின் வழியாக நிகழ்த்தப் படும் உரையாடல்கள்

பாலசந்தர்,மகேந்திரன்,ஸ்ரீதர் காலத்தின் படங்களை நாம் பார்ப்பதைப் போன்ற நினைவுகள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த நாவல் வாசித்த பிறகு நாமும் நம் புகைப்படங்களைப் பார்க்கிறோம். நமது பள்ளிப்பருவப் புகைப்படங்கள்,வேலை வாய்ப்பிற்காக எடுத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.திருமணப்புகைப்படம், நண்பர்களுடன். கூடபணிபுரியும் நண்பர்களுடன் எடுத்த புகைப்படம். இந்தப்புகைப்படங்களின் பின்புலத்தில் நமக்கு காட்சிகளாக விரியும். இவை அனைத்தும் ஒரு வகையில் யோசிக்கும் போது சம்பவங்கள் யாவும நிரலின்றி (நான் லீனியர்) வடிவிலும் சில அத்தியாயங்கள் இருக்கிறது. ஒரு கதாபாத்திரத்திலிருந்து அவை சந்திக்கும் இணை கதாபாத்திரத்தின் வாழ்வின் சில சம்பவங்கள் என விரிந்து சென்று நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி பிறகு முந்தைய சம்பவங்களை நினைவுட்ட வைக்கிறது.ரிச்சர்ட் ஆடம்ஸின் நாவலான “வார்டர்சிப்  டவுன்” ஜான் பௌலசின் ”தி பிரெஞ்ச் லிட்டினன்ட் விமன்”  சாமுவேல் பக்கெட்டின்“வாட்“ ஜோசஃப் ஹெல்லர்ஸ் என்பவரின் ”கேட்ச்-22“ நாவல்கள் நான் லினியரில் முக்கியமானவை. நிஜந்தன் நாவல் போலவே பாக்னரின் “அப்சலாம்..அப்சலாம்“நாவலும் முக்கியமானவை. வங்கமொழியில் இரவீந்திரநாத் தாகூரின் க்ரே பாயிரே (1916) என்ற நாவலில் வங்க் பிரிவினையை விவரிக்கும வித்த்தில் பல பாத்திரங்கள்  தங்கள் எண்ணங்களை வெளியிடுகிறார்கள். ஸதிதாத்தின் பாதுரியின் ஜாகரி என்ற வங்க நாவல் ஒரு பயங்கர இரவின் முடிவை நோக்கி இருக்கிற நான்கு கதாபாத்திரங்களின் நான்கு விநோதமான குரல்களாக நாவல் இருக்கிறது. தமிழ் நாவல்களில் நீல பத்மநாபனின் “யாத்திரை“யில் ஒருவனின் இறப்பு குறித்து நான்கு பேர் நான்கு விதங்களில் ஒரு கால கட்டத்தில் இறப்புக்கு முன் நடந்த  நிகழ்ச்சிகளை நினைவு கூர்கிறார்கள்.அசோகமித்திரனின் “கரைந்த நிழல்கள்” ஆதவனின் ”காகிதமலர்கள்“ காசியபனின் “அசடு” நகுலனின் “நவினன் டைரி” சுந்தர்ராமசாமியின் “ஜே ஜே.சில குறிப்புகள் தமிழவனின் “ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்” போன்ற நாவல்கள் முக்கியமானவை. நிஜந்தனின் நாவலான நான்-நிழல்- படைப்பில் மையம் கொண்டிருக்கும் மனித இயல்புகளின் குற்றங்களின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் அவ நம்பிக்கையையும் பேசுகிறது. தவறுகளை யார் புரிந்தாலும் உறவுகளுக்குள்ளாக தவறுகளை இழைத்துக் கொள்கிறபோது மன்னிப்பை வழங்குகிற நீதிமானாக யார் இருக்கப் போகிறார்கள். நாவலின் முதன்மையான மனிதனான ராமானுஜனுக்குத் தனது தாய் தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்பைக் கோருகிற சம்பவங்கள் எளிய உறவுச்சிக்கல்கள் கொண்ட குடும்பங்களில் அன்றாடம் நடக்கிறவைதான் என்றாலும் அதன் மூலமாக தனது கவச குண்டலம் போன்றிருந்த கட்டி இருந்த சுவடே அல்லது அதுபோன்ற ஒரு கட்டி தனது இடுப்பில் இருக்கவேயில்லை என்கிற உணர்வு வருவதை நிஜந்தன் புரியவைக்கும் போது மகத்தான படைப்பாக மாறுகிறது. அவருடைய பிற நாவல்களும்,நாடகங்கள்,சிறுகதைகள் கூட இந்த ஆன்மாவையே பேசுவதாக அறிகிறேன். கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலான எழுத்தியக்கத்தை நிகழ்த்தும் நிஜந்தனின் படைப்புலகம் முன்செல்லட்டும். அவருடைய சிந்தனையில் உறங்கிக் கொண்டிருக்கும் மேலும் பல அப்பழுக்கற்ற ஆன்மாக்களின் கதைகள் வரட்டும் என வாழ்த்துகிறோம்..

ஞாயிறு, 2 ஜூன், 2013

வஞ்சியர் காண்டம்- நவீன நாடகம் குறித்த பதிவு


வஞ்சியர் காண்டம்-

நவீன நாடகம்-

நிகழ்வு-31.05.2013 வெள்ளி மாலை 6.00 மணி ஆர்.எஸ்.புரம் மாநகராட்சிக் கலையரங்கம்-

கோவை- பதிவுகள்-

-

இளஞ்சேரல்

   

                 சமீபத்தில் பிரளயன் எழுதியும் பேராசிரியர்.ராஜூ இயக்கிய “வஞ்சியர் காண்டம்”நாடகத்தைக் காண நேர்ந்தது. ஆர்.எஸ்.புரம் அரங்கம் நிரம்பியது . டிக்கெட் பெற்று நாடகம் பார்த்த முந்தைய காலத்தை நினைவுட்டியது. இந்த அரங்கில் சமூக நாடகங்கள் ஓரங்க நாடகம். காதல் நாடகம் போன்றவை வருடா வருடம் நாடக விழாக்களில் கலந்து கொண்டு போட்டி போட்ட நாடகங்களும் கண்ட நாட்களுண்டு.

ஆனால் நவீன நாடகம் காணும் வாய்ப்பு கிட்டியதில்லை காரணம் அவையெல்லாம் மக்கள் கூடும் இடங்களிலேயே காணும் வாய்ப்பை அந்தக் கலைஞர்கள் தந்து விடுகிறார்கள். முதல் முறையாக கோவையில் நவீன தொழில் நுட்ப ஒலி ஒளி அமைப்புடன் நடந்ததால் நாடக ரசிகர்களுக்குப் புது அனுபவமாக இருந்தது எனலாம்.

        

             பொன் இளவேனில் நாடகம் துவங்கிற்று எங்கிருக்கிறாய் என்ற போது அரங்கினுள் நுழைந்தேன். மாத கடைசிநாள். வெள்ளிக்கிழமை. நேர நெருக்கடி பயண நெருக்கடியைத் தாண்டி வந்து சேர்ந்தேன். மேல் வரிசையில் அமர இடம் கிடைத்தது. இருட்டின் வழியில் நாடகம் பார்த்த போது கர்ப்பக்கிரகத்திற்குள் கடவுள் சிலைகள் நடித்துக்கொண்டிருப்பதாகவே உணர்ந்தேன். ஒளியமைப்பும் ஒலியும் இசையும் அடடே. கண்டேன் சீதையை என்பதாக நிமிர்ந்து உட்கார்ந்தேன். இளவேனில் இசையமைப்பும் பாடல்களும் ரசிக்க வைக்கிறது கவனி என்றார்கள். பக்கத்தில ரவீந்திரன். பழக்கப்பட்ட அரங்கம் ஆனால் நிரம்பியதை ஆச்சர்யமும் அதிசயமுமாகப் பார்த்தேன்.இளையராஜா வந்தபோது கூட காலியாக இருந்த பகுதிகளைக் காண முடிந்தது. அன்று அனுமதி இலவசம் வேறு.  ஆனால் நாடகத்திற்கு வந்திருக்கும் மக்களைப் பார்த்தபோது ரசனையின் மீது சந்தேகம் வலுக்கத்துவங்கிற்று. ஏனெனில் ரசனை சார்ந்த உச்ச நடிப்பில் நமது மக்கள் சாமானியர்கள் அல்ல. இன்று நுழைவுக்கட்டணம் இருந்தும் மக்கள் வந்திருப்பதை இதுதான் கோவை எனப் பேசவைத்தது.

 

           நாடகவிழாக்கள் நவீன நாடக வடிவங்களுக்கான முயற்சிகளை தொடர்ச்சியாக இடது சாரி இயக்கங்கள் நடத்தி வருகிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி இயக்கங்களில் நாடக வடிவங்களுக்கு முக்கியத்துவம் தரும் இயக்கமாக கடந்த அருபது ஆண்டுகளாக இருந்து வருகிறது. அவர்களின் மாநாடுகள் இயக்க நிகழ்வுகள் பேரணி ஆர்பாட்டம் தேர்தல் பிரச்சாரம். அரங்க மாநாடுகள் போன்ற இயக்கங்களின் போது நிச்சயமாக நாடகவடிவத்திற்கு வாய்ப்பளிப்பதோடு அந்தக் கலையை உயிருடன் தமிழகத்தில் காப்பாற்றி வருகிற இயக்கமாகவும் உள்ளது எனக் கூற கடமைப்பட்டிருக்கிறோம். குறிப்பாக வீதி நாடக வடிவங்களை கிராமியக் கலைவடிவங்கள் அழிந்து கொண்டிருக்கும் கலைகளுக்கும் கலைஞர்களுக்குமாக வாய்ப்புகளை வழங்கி பரவலாக மற்ற இயக்கம் கட்சிக்காரர்களையும் சேர்க்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிற கட்சியாகவும் சமூக இயக்கமாகவும் இடது சாரிகள் இருந்து வருகிறார்கள்.

(மக்களிடமிருந்து அந்நியப்படுகிறதை வைத்து நாம் ஊகிக்கலாம் அவர்கள் மக்களுக்கான பணிகளைச் செய்கிறார்கள் என்பதை)

          மக்கள் எனப்படுபவர்கள் சமூக மந்தைகள். மக்களின் சமூக வாழ்வு பசி பற்றியதாகவே இருக்கவேண்டும் அவர்தம் சிந்தனையில் சமூகவளர்ச்சி  என்னும் நஞ்சு விழுந்து விடக்ககூடாது என்பதை ஆழமாகப் போற்றி வளர்ப்பவர்கள் ஆதிக்கவாதிகள். மக்கள் கலைகளின் பக்கம் எந்த யுகத்திலும் திரும்பாமல் பார்த்துக் கொள்வதே ஆதிக்கவாத சொகுசு கலைகளின் பிதாமகர்களின் தலையாய பணி.

         செவ்விலக்கியப் படைப்புகளை நாடகமாக்கும் முயற்சிகளை தொடர்ச்சியாக இடது சாரி சிந்தனையாளர்கள் உலகெங்கிலும் நிகழ்த்தி வருகிறார்கள். இன்குலாப். மங்கை. பிரளயன்,மு.இராமசாமி.பேரா.திலீப் குமார் வெளி ரங்கராஜன் சண்முக ராஜா போன்ற நாடக ஆசிரியர்கள் முயன்று வருகிறார்கள். நிகழ்த்தியும்  வருகிறார்கள். நவீன நாடக வடிவத்தை கேலிக்கூத்தாக்கும்  முயற்சிகளும் நடக்காமல் இல்லை. அந்த முயற்சிகளை மக்களே நிராகரிப்பார்கள். பிரளயன் தன்னுடைய படைப்புகளின் வழியாக மறுவாசிப்பு. புத்தாக்க வெளிக்கு வாய்ப்புகளை வழங்குகிற படைப்பாளியாகவும் கள இயக்குநராகவும் இருக்கிறார்.

         சபாக்களை உறவினர்களை ஒரு சேரக் காணும் வாய்ப்பாகவும் குடும்ப விசயங்களை காபி டீ செலவில்லாமல் பேசுவதற்கான இடம் என்று நடுத்த மக்கள் விரும்பும் இடங்களில் நகைச்சுவைத்துணுக்குகளை சீரியலாகப் பேசி சிரிக்கவைக்க வும் நோயாளிகளுக்கு அமைதி தருவதற்கும் சபாக்கள் நாடகத்தைப் பயண்படுத்துகிறது. சபாக்களின் இன்றைய நிலை குறித்து மௌலி போன்றவர்கள் மிகுந்த வருத்தப்படுகிற அளவு நிலை மாறியிருக்கிறது. சங்கீத சபாக்கள் இதற்கு விதிவிலக்கு.

          சபா எனும் வடிவத்திற்கு மாற்றாக நாடகத்தை நவீனமாக்கியதில் பிரளயனுக்கு மகத்தான பங்கு இருக்கிறது. நாடகத்தை ஒரு மகத்தான கலையாக செவ்வியல் வடிவமாக ஆதிமனிதனின் புழுங்கு கலையாக பாவித்து சில புதுமையான நவீன முயற்சிகளில் ஈடுபடுகிற கலைஞர்களின் வளர்ச்சியும் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.

        நாடகக்கலையின் இலக்கணத்திற்கு மேலும் வளம் சேர்ப்பதாகவும் வலிமையுடனும் தற்கால நவீன தொழில் நுட்பத்தின் வழியாகக் கலையின் உச்சமாகவும் கண்ட நாடகம் தான் “வஞ்சியர் காண்டம்”

        நடித்த கலைஞர்களின் தேர்ந்த உடல் மொழி, அசைவுகள்,குரல் வளம், உடையலங்காரம். ஒப்பனை. நேர்த்தியான நடிப்பும் குழுநடிப்பின் போது வழுவாத நெறிமிக்க  இணை நடிப்பாகவும் இருந்ததைச்  சொல்லவேண்டும். அனைத்து நடிப்புக் கலைஞர்களும் பேராசிரியர்கள். ஆய்வுப் பட்டயம் நாடகத் துறையில் பயில்பவர்களாக இருந்ததும் சிறப்பியல்பிற்கு ஒரு காரணம். நாட்டிய நாடகவடிவிலும் காட்சிகளை ஒருங்கிணைத்தது புதுமை. நாடகத்தில் பயண்படுத்தப் பட்ட அரங்கப் பொருட்கள் கலைநேர்த்தியையும் சங்ககாலத்தின் நிலத்தைக் கண்டுணர வாய்ப்பாக அமைந்தது. நிகழ்த்து மேடையும் காட்சிகளுக்கு முன்பாக கலைஞர்களின் நடன ஒத்திசைவு கொண்ட இசை நடனம் ஒளிவண்ணத்திற்கேற்ப தத்ருபமாக இருந்தது.

      நாடகம் காவிய வடிவில் நிகழ்த்தப்பட்ட வரலாற்று நாடகவடிவமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. சிலப்பதிகார காப்பியத்தின் வரிகளும் கதாபாத்திரங்கள் பேசும் நவீன வாழ்வின் வசனங்களும் வடிவத்தின் உச்சம் எனலாம். பின்னணி இசையும் பாடல்களும் இனியதாக சுகமாக இருந்தது. அரங்கின் பின்னால் கட்டப்பட்டிருந்த திரைச்சீலையின் அமைப்பு ஒரு பெருமலையின் அடிவாரம் போன்றும் சில சமயம் கருநீல வெளிச்சத்தின் வழியாக அருவியொன்று கொட்டும் வடிவாகவும் அமைந்ததைக் குறிப்பிட்டே ஆகவேண்டும் காட்சியின் துவக்கத்தின் பொழுது பாடப்பட்ட கீர்த்தனைகளும் இசைப்பாடல்களும் இனிமையாக இருந்தது. காவிய நாடகத்தின் தன்மையினின்று விலகாமல் அற்புதமாக இருந்தது. நாம் கல்மேடைகளில் தீப்பந்தங்களுக்கு நடுவில் அமர்ந்து அந்தக் காப்பிய காலத்திலேயே நாடகம் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. பார்வையாளர்கள் ஒலி ஒளி அமைப்பின் வழியாக ஒரு நவீனநாடகம் செவ்வியல் பிரதியின் ஆக்கம் இப்படித்தான் இருக்குமா என ஆச்சர்யம் மிகுந்து ரசித்தார்கள்.

       குறிப்பாக கண்ணகி தன் கணவனை வழியனுப்பிவைத்து விட்டு அவன் போன பாதையையே காண்கிற வடிவம் ஒரு எழிலான ஓவியமாக இருக்கிறது என தோழி பேசும் போது அரங்கின் வெளிச்சம் லைட்டிங் அழகின் உச்சத்தின் வடிவமாக இருந்தது. விளக்குகளின் அமைப்பு வெளிச்சத்தின் அழகைக் கையாண்ட விதம் அருமை. இசைக் கோர்வை உடையலங்காரம். நடிகர்களின் உடல் மொழி அரங்கின் தரை அமைப்பு கூட நிலப்பகுதியின் வடிவத்திற்கும் நிலவொளியின் வெளிச்சத்திற்குமாக வடிவமைக்கப்பட்டிருப்பதை கூறவேண்டும்.

       கணவர்கள் பொருள் தேடவோ வாழ்வின் நிலைகுறித்தோ துணையாளை விட்டு்ப் பிரிகிற வாழ்வை சங்ககாலத்தில் இருந்து வந்திருக்கிறது. அதுவே இனியொரு கூடல் வாழ்வாகவும் பெண்சேரலாகவும் மாறிவிடுகிற நிலையையும் எடுத்துக் காட்டுகிறது. அப்படியாகப் பிரிந்து சென்ற கணவர் திரும்ப வரும்வரை அந்தப் பெண் நிலைகுறித்த காட்சிகளும் வசனங்களும் அவர்களைத் தேற்றுவதற்கு தோழிகள் எடுக்கும் முயற்சிகளும் எதார்த்தமாகப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.                           

            தற்காலத்தில் கூட வெளிநாடுகளில் தங்கள் கணவர்களை அனுப்பிவிட்டு டாலர்களுடன் குடும்பம் நடத்தும் பெண்களின் மனநிலையையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். வருடம் அன்றி பல வருடங்கள் கணவர்களைப் பிரிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் நவீன காலத்தில் கணவருக்காக ஏங்கும் பெண்களின் வாழ்வு சங்ககாலத்தில் இருந்ததை நினைவுட்டுவது சரியான காலப்பொருத்தமே. இப்பொழுதெல்லாம் கணவன் தொலைந்தால் மட்டும்போதும் உங்களுக்கு முழு நிம்மதி கிடைக்கும் என்கிற வடிவில் தொலைக்காட்சித் தொடர்களின் தரம் இருக்கிறது. குடும்ப வாழ்வில் கணவன் என்பன் வெறுமனே பொருளீட்டித்தருகிற இயந்திரம்தான் எனத்திரும்பத்திரும்ப வலியுறுத்தப்படுவதும் அப்படி ஈட்டித்தராதவன் ஆண்மகனுமல்ல கணவனாகத்தகுதியுடையவனுமல்ல என்கிறார்கள்.ஆணாதிக்க வகைமையில் கூட ஆணாதிக்கத்திற்கு சாதியப்பிரிவுகள் சூடப்படுகிறது.

         காட்சிகளில் நடித்த நடிக நடிகைகள் கொடுத்த கலை உழைப்பு மரியாதை தரத்தக்கவை. குறிப்பாக கதாபாத்திரமாகவே மாறி பொறுமையுடனும் நிதானத்துடனும் பேசிய வசனங்கள் யாவும் சமணகாலத்தின் கடவுள் மறுப்புக் கொள்கைகளை நினைவுட்டியது.

        உரையாடல்களில் அந்தக்கால யதார்த்தமான பெண்களின் இயற்கையோடு இணைந்த உணவு முறைகள் அவர்களின் உடையலங்காரம் அணிகலன்கள் பற்றியும் அவர்கள் உபயோகித்த பொருட்கள் அரங்கில் பயண்படுத்தியது பார்வையாளர்களுக்கு பழங்காலத்தின் அம்சங்களை நினைவு கூர்வதற்கு ஏதுவாக இருந்தது.  நாட்டியமாந்தர்களின் உடலசைவு கர்நாடக சங்கீதம் தமிழிசையின் பாங்கு உரையாடல்களின் மேலோங்கிய கச்சிதமான தன்மையும் புதுமையான கேள்விகளும் சிறப்பானது. குறிப்பாக கண்ணகி கதையை பாடுகிற இடத்தில் இரண்டு கலைஞர்களின் நடனமும் இசையும் பாரம்பரிய கலைகளான கூத்துக் கலையின் அம்சங்களும் இணைந்திருந்ததை வரவேற்க வேண்டும். நாடகம் பிரமாண்டமாக அமைந்து காணப்பட்டதற்கு முக்கியமாக லைட்டிங் அமைப்பும் சரியான இடத்தில் விளக்கொளியைக் கதாபாத்திரங்களின் மீது கவிய விட்டுப் பின் மெல்லமெல்ல இருள் தன்மைக்குக் கொண்டு வந்ததும் ஆகும்.

        நாடகத்தில் இருள் கூட ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்தது என்று சொல்லவேண்டும். இருளையும் வெளிச்சத்தையும் கச்சிதமாகப் பயண்படுத்தியதுதான் நாடகம் வெற்றியடைந்ததற்கான காரணம் என்று சொல்லமுடியும்.

       வடிவத்தைப் போலவே இந்த நாடகத்தின் உள்ளுறையும் கச்சிதமானது. அபலைகளின் கைவிடப்பட்ட வஞ்சியர்களின் நிலையைக்குறித்த நிலையினைப் பேசுவதாகவும் வஞ்சியர்கள் இருந்தும் தம்பதியர்கள் அனைவரையும் ஒரு அரசு கைவிடுகிற நிலையையும் பேசுகிறது. இராஜாக்களின் காலத்தில் நடந்த காப்பிய இடைச்செருகல்களை தற்காலத்தின் பெண்ணிய பார்வைக்கு ஏற்ப விடுதலை சம உரிமை இடஒதுக்கீடு வண்கொடுமைகளுக்கு எதிராக மறுவாசிப்பு செய்யப்ட்டதாகவே இந்த நாடகப்பிரதி உள்ளது.

        சிலப்பதிகாரத்தின் செவ்வியல் தன்மையை மாற்றாமல் மையத்தை அப்படியே பயண்படுத்தியிருப்பதால் சுவை மாறவில்லை. அதன் இயல்பான கூறுகளைப் பேசியும் அதிகமாகக் கவனிக்கப்படாத உதிரி பாத்திரங்கள் வழியாக வசனங்கள் எழுதியது புதிய வடிவம். கண்ணகியைக் கடவுளாகப் பாவித்துப் பாடப்படும் பாடல் உயர்ந்த தரம். அற்புதமான இசைவடிவம். பாடியவரும் கர்ப்பக் கிரகத்தில் ஓதுவார்கள் பாடுகிற அளவில் தொனியில் அழகான இசைநயத்துடன் ஓசையுடனும் பாடித் தொழுவது தத்ருபமாக நடிக்கப்பட்டது.

       பிற்பட்டகாலத்தில் கடவுளாகப் பாவித்தது அடிமைவம்ச காலத்தின் செருகல். காவிய நோக்கில் பார்த்தால் ஆணாதிக்க சமூகத்தில் அலைக்கழிக்கப்பட்ட அபலையின் குரல். காவியத்தின் மூலமான கண்ணகி என்றாலும் நாடகத்தில் வரும் துணைப்பாத்திரங்கள் யாவும் சங்ககாலத்தின் அடித்தட்டு மக்களின் குரலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதை வரவேற்க வேண்டும். நடித்த கலைஞர்கள் அவர்களின் அங்க அசைவுகள் பாவனைகள் எல்லாம் நமக்கு சங்கத்தை நினைவுட்டியது. அவை யாவும் செவ்வியல் நாடக அழகின் உச்சம். கலைகளின் ஆதி ஒழுங்கியல் கூறுகளுடன் அவர்களின் வாழ்வு கழிந்திருக்கிறது என்பது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடியதே.

         தற்கால வாழ்வை நாம் வஞ்சியர் காண்டத்துடன் பொருத்திப்பார்க்கும் போது கலையம்சங்களை வெகுசன ஊடகம் மற்றும் நுகர்வு கலாச்காரச் சாக்கடைக்குள் கலக்கி பிறகு அதையெடுத்துப் பயண்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்

அதுவே தூயமான கலையென. சுவராசியமான ரசனை என்பது கலையம்சத்திற்கு எதிரான செயல்பாடு எனும் மூடநம்பிக்கையை வளர்ப்பதும் அவர்களுடைய செயல்.

           தற்காலத்தில் கலையென்ன என்பதும் செவ்வியல் வடிவம் என்ன என்பதையறியாத மரமண்டைகளை வைத்துதான் நாம் கட்டியழுதுகொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம். மகத்தான செவ்வியல் பல்கலைக்கழகங்களை உருவாக்கி உலகத்திற்கே கலையைக் கற்றுக்கொடுத்த மரபு இன்று கல்லூரிகளில் பல்கலைக் கழக வளாகங்களில ரிக்கார்ட் டான்ஸ் ஆட்டம் போடுகிறதை நினைக்கலாம்.               

           அந்தக் கல்லூரிகளுக்கு ஐஎஸ் ஒ தரச்சான்றிதழ் வழங்கும் செய்கிற கலைநுட்பம் நம்முடையது. பெற்றோர்கள் கூட தங்கள் பெண்களை காட்சியுணர்வுக்குப் பயண்படுத்தலாம் தவறில்லை என்கிற சிந்தை மனோபாவத்தை வளர்த்தியிருப்பதற்கு யார் காரணம் என யோசிக்கலாம். இப்பொழுது கூட பன்னாட்டு வணி்கத்தலங்களுக்கு தங்கள் குழந்தைகளை அழைத்து வருகிற தமிழ்க் குடும்பங்களை பார்க்கும் வாய்ப்பிருப்பவர்கள் கவனிக்கலாம்.

         சிலப்பதிகாரம்,திருக்குறள், எல்லாம் சமண நூல்கள். அவற்றைச் சமயச் சார்பற்றவையாகச் சித்தரித்துக் காட்டியது திராவிட இலக்கியமும் இயக்கத்தவர்களும்.  தாம் செய்த பணிகளில் தலையானது. கடவுள் மறுப்புக் கொள்கைகளைக் கையிலெடுத்துதான். பிறகு ஒருவனே தெய்வம் ஒன்றே குலம் என்று மாறியபோது திராவிடம் சங்கஇலக்கியங்களை கீழே போட்டுப் புதைத்துவிட்டு பாரதி தாசனைத்தூக்கிக்கொண்டு ஆடிடத் துவங்கியதை நாம் மறக்கக் கூடாது. சங்கப் பாடல்களை மேற்கோள் காட்டினால் ஆட்சியதிகாரத்தில் கொள்ளையடிக்க முடியாது. உள்ளாட்சிகளில் திருடமுடியாது என்பதால் சங்கப்பாடல்களை திராவிட ஆட்சியாளர்கள் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு வசதிக்கு பாரதிதாசனை உடுமலை நாராயணகவியைத் தூக்கிக்கொண்டாட ஆரம்பித்ததை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பிராமிணிய எதிர்ப்பு அரசியலுக்கும் உகந்ததாக இருந்தது. சைவ-வைணவ தமிழாசிரியர்களின் பழமைவாதப் போக்கிற்கும் ஏதுவாக அமைந்தது இத்தகைய சூழல். ஆகவே தமிழர்கள் தங்களை முன்னாள் சமணர்கள் எனச் சொல்லிக்கொள்வதற்கு தயக்கம் கொள்வதும் அதன் காரணமே.

        வரலாற்று உண்மைககள் இலக்கிய ஆய்வுகள் உரைகள் யாவும் அவை சமண நூல்கள் என்றே வரையறுத்துவருவதை அறியலாம்.

         அந்தக் காலத்தில் நிலவியல் முறையில் கடைப்பிடிக்கப்பட்ட பொதுமகளிர் முறையைத் திருக்குறள் நேரடியாகத்தாக்கியதும் சிலப்பதிகாரத்தில் அது மறைமுகமாக விமர்சிக்கப் பட்டிருப்பதும் காட்சிப்படுத்தியும் பெண்ணடிமை முறையின் காட்சி விவரிப்புகளையும் அறியமுடியும். இந்த நாடகம் கோவலனும் கண்ணகியும் சமண மதத்தவர்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லிக்காட்டியுள்ளது. சமண முனிவர்கள் நாடகத்தில் பயண்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு காட்சியில் தன் வாழ்விற்காக கடவுளைத் தொழப்போகும் தோழியிடம் உன் கணவன் உன்னைச் சேர்வதற்கு என்ன உதவியை கடவுள் உனக்குப் புரிந்திருக்கிறார் பிறகு எனக்குத்தனிப்பட்ட முறையில் எப்படி உதவுவார் எனக் கண்ணகி கேட்பதும் துறைகளில் நீராடுவதும் தெய்வங்களைத் தொழுவதும் எங்கள் இயல்பில் இல்லை என கண்ணகியே பேசுவது போன்ற காட்சிகள் மரபு சார்ந்த நவீனத்துவம் மிக்கவை. இவைகளை பிராமணிய எதிர்ப்புக் கருத்துகள் எனக்கருத முடியாது. பக்தி மார்க்கம். ஆன்மீக. பக்தி இலக்கிய மரபுகள் யாவும் பிராமணர்களுடையதே என்று பேசும் வழக்கும் ஆபத்தானவையே. ஒருவகையில் விவாதத்திற்காக இத்தகைய பிராமணீய எதிர்ப்பு சமணக்கருத்துகளை இளங்கோவடிகள் கவுந்தியடிகள் மூலம் சொல்லியிருப்பது இதற்கு வலுவான காவிய ஆதாரமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.

      

         நவீன நாடக மரபில் இயங்கும் இடது சாரி மனோபாவ நாடக ஆசிரியர்களுக்கு இருக்கும் பெருங்கோபம் என்னவெனில் காவியங்களில் காணப்பட்ட பாத்திரங்களுக்கும் கோவில் கட்டி தெய்வமாக்கியது போன்று கண்ணகியையும் தெய்வமாக்கி வழிபடத்துவங்கிவிட்டார்களே என்பதுதான். இதன் மூலமாக அந்தக் காலத்தில் பெண்களின் அவல நிலையை இளங்கோவடிகள் சித்தரிக்க முயன்ற எதார்த்த வாழ்வை கவனமாகவும் இடைச்செருகல் மூலமாகவும் மறைத்துவிட்ட சம்பவங்களை மீண்டும் மறுவாசிப்பு செய்து நாடகமாக்கியிருப்பது தான் முக்கிய மையம். தங்கள் குறைகளையும் வேதனைகளையும் பேசும் போது

“தெய்வமெனத் தொழுதால் கூப்பிய கரங்கள் திரையாகிவிடுகின்றன” என்று கண்ணகியின் தோழி தேவந்தி வருத்தப்படுகிற காட்சியின் பின்னணியும் நடித்த கலைஞர்களின் அர்ப்பணிப்பு உணர்வும் சிறப்பாக இருக்கிறது. இந்தக் காட்சிகளின் வழியாகக் காலந்தோறும் பெண் உணர்வுகள் கடவுளாலும் எதிர்பார்ப்புகளாலும் சிதைக்கப்பட்டதை உணரமுடிகிறது.

       உயர்குடிப் பெண்ணாகக் கண்ணகி வரும் காட்சிகளில் பேசும் வசனங்கள் முக்கியமானவை. நவீன காலத்தின் பெண் மனதோடு ஒப்பும் காட்சிகள். மாதவியிடம் இருக்கம் கலைரசனை தன்னிடம் இல்லாதது பற்றி தனது ஒப்புமையை அழகாக ஒப்புக்கொள்ளும் காட்சியும் உதாரணம்.“இன்னொரு பெண்ணிடம் மயங்க ஆண்களுக்குக் காரணம் தேவையா என்ன? என்று கண்ணகி வெளிப்படையாக உடல்சார்ந்த வழக்காறு பேசும் போது ஆணாதிக்கவாதிகள் கூசத்தான் வேண்டும். ஒரு பெண்ணின் மிகப்பெரும் தாழ்வு அவள் ஒர் ஆணுக்காக இன்னொரு பெண்ணுடன் போராடுவதுதான். பெண்ணிற்கு பெண்ணே கொடுமையாக மாறுவதன் காரணங்களும் அலசப்பட்டிருக்கிறது. அறிவுப்புர்வமாக தன் வாழ்காலத்தை அறிந்து வைத்திருத்ததால்தான் கண்ணகி தனது செவிலித்தாய் காவற்பெண்ணோடு நடத்தும் வாதப் பிரதிவாதம் சிறப்பாக உள்ளது. கோவலனின் பிரிவால் தனக்கு நேர்ந்துள்ள அவமானத்தை தனது செவிலித்தாயால் உணர முடியாது என்றே அந்தப் பெருங்குடி வணிக மகளுக்குத்தோன்றியது. அந்தச் செவிலித்தாய் ஒரு கட்டத்தில் துயருற்றிருந்த கண்ணகியை “இப்படியே இடிந்துபோய் உட்கார்ந்திருந்தால் என்ன ஆகப்போகிறது. நீ எழுந்து நீராடு. மலர்களைப்பறித்து சூடிக்கொள் தலைக்கு நெய்தடவி உன்னை ஆற்றுப்படுத்திக்கொள் என தைரியம் சொல்லும் போது அப்படியெல்லாம் என்னை சீர்படுத்திக்கொள்ளும் போது கணவனுடன் நான் வாழ்ந்த சிறந்த நாட்கள் நினைவுக்கு வந்து மென்மேலும் என்னை வாட்டுகிறது. நான் இப்படியே இருந்து கொள்கிறேன் என்கிறாள். செவிலித்தாய் உரிமைமகளிர் வகையைச் சேர்ந்தவள் அடிமை என்பதன் மறைமுகமான பொருள். அடிமைக்கும் காதலுக்கும் உள்ள சம்பந்தம் பற்றிய உரையாடலும் வருகிறது.

        இளங்கோவடிகளும் சொல்லாத சொல்லத்துணியாத அந்த அடிமை செவிலித்தாயின் உள்ளத்து உணர்வுகளை பிரளயன்தான் சொல்லியிருக்கிறார். தனது எஜமானின் பிள்ளைக்குப் பால் கொடுக்கவே தான் கருவுற்றிருக்கிறேன் என்ற வசனம் பேசும் போது அரங்கம் துயரத்தைக் கண்டு நெகிழந்தது. நடித்த பெண் கலைஞரின் குரல் உண்மையாக ஒலித்தது. மனித குலம் அடிமைத்தனங்களின் வழியாகவும் இடையறாத போர்களின் வழியாகவும் குறிப்பாக பெண்களின் மீதான ஆதிக்க மனோபாவத்தின் வழியாகவுமேக் கடந்து வந்திருக்கிறது.

      இதற்குப்பிறகும் நாம் எப்படி வெற்றிகரமான மனித குலம் என்று பீற்றிக்கொள்வது. பெண்களை ரகசியமாகப் படம் பிடித்துக் கொள்ள விதவிதமாகக் காமிராக்களைக் கண்டுபிடித்துக் கொண்டேயிருக்கிறோம் அல்லவா. அடிமைத் தனத்திற்கு எதிர்ப்பதம் என்ன எனக் கேட்கும் வசனமும் உண்டு.

     செவிலித்தாய் மகள் நாகமணி புத்த சங்கத்தில் சேருகிறாள்.அதற்கும் அவளது எஜமானன் அனுமதி கோர வேண்டிய நிலை.தனது கடைசி காலத்தில் கண்ணகியின் காற்சிலம்புகள் மட்டுமல்ல காவற்பெண்ணான நாகமணியும் கூட  அவர்களின் சொத்துகளாக இருந்தது அவை மட்டுமே. ஒரு காட்சியில் கோவலன் தன்னை நினைத்து வருந்தாதே நான் திரும்பி வருவேன் என்று புறப்பட்டுப்போகும் போது அந்த விடுதலையை அவன் தர காவற்பெண் நான் இனி யாருக்கும் உணவாக இருக்க விரும்பவில்லை என்று நாகமணியும் கண்ணகியும் பேசுகிறார்கள்.

       இறுதிக்காட்சியில் கண்ணகி துயரக்கோலத்திலிருந்து எழுந்து நின்று சிலை போன்று செம்மஞ்சள் வெளிச்சத்தில் ஒளிர நின்று கொள்வதும் அவளை மலர்கள் சூடியும் அபிடேகம் செய்தும் வழிபடுகிறார்கள். தலைமைப் புரோகிதர் பாடல்கள் பாடுவதுமாக பத்துநிமிடத்திற்கும் மேலாக கண்ணகியாக நடித்த பெண்கலைஞரின் அசையாத சிலை போன்ற நடிப்பு அம்சம் உயரிய விருதுகளுக்கு ஒப்பானது. ஒளியின் மிளிரலில் அரங்க மையத்தில் நிகழ்ந்த இறுதிக்காட்சி கண்ணகியை நாம் தெய்வமெனப் போற்றுவதில் தவறொன்றுமில்லையென்றே பிரளயன் சொல்லி முடிந்ததாகக் கொள்ளலாம் .

          இருக்கட்டும். இருக்கும் லட்சக்கணக்கான தெய்வத்தில் கண்ணகிக்கு என்று இடமில்லாமல் போக வேண்டிய அளவிற்கு அவள் மீது கடவுள் எனும் தீண்டாமையை நுழைக்க வேண்டாமே.

         நாடகம் முடிவுற்றதும் கலைஞர்கள் வரிசையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். திருப்பத்தூர் மற்றும் பாண்டிச்சேரியைச்சார்ந்த கலைஞர்கள் மட்டுமல்ல. பேராசிரியர்கள். முனைவர்கள். நாடகத்தில் நிகழ்த்துக் கலையின் நிபுணர்கள். பல்லாண்டுகள் பயிற்சி பெற்ற கலைஞர்கள் .

         ஒரு நாடகக் கலைஞனின் வாழ்வு கூட கண்ணகியின் வாழ்வு போன்றதுதான். அவனின் ஈடுசெய்ய முடியாத உழைப்பு ரசிக மனோபாவத்தை விடவும் மேலானது. அவன் விரும்புவது கைதட்டல்களோ பாராட்டுகளோ அல்ல. ஒரு காப்பியம் பேசும் உன்னதமான வாழ்வைச் சற்றேனும் பின்பற்றும் போதுதான் அவன் நடிப்பும் வசனமும் உண்மையாகிறது. நடித்த நெறியாள்கை செய்த தொழிற்நுட்பக்கலைஞர்களின் சிரத்தை. சவுண்ட் என்ஜினியர்கள். உடையலங்காரம் பின்னணி இசை. பாடகர்கள் பயிற்சி அளித்தவர்கள் “வஞ்சியர் காண்டம்“ என்னும் காப்பிய வடிவில் கண்ணகிக்கு இணையாகப் போற்றப்பட வேண்டியவர்களே. கண்ணகியின் கதை கண்ணகியோடு முடியட்டும். நவீன கண்ணகி உருவாகமல் பாதுகாப்பதுதான் ஆணாதிக்கத்தின் குறைந்த பட்ச வேலை. நமக்குத்தான் வேலை செய்வது என்றால் வேம்பாகக் கசக்கும் செயலாயிற்றே..

         வாழ்க பிரளயன் உழைப்பு..நாடகக் கலைஞர்களின்  அர்ப்பணிப்பு உணர்வும் வாழ்க.. பேரா.ராஜூ மற்றும் கலைஞர்கள் வாழ்க வாய்ப்பளித்த தமுஎக சங்கம் மற்றும் உதவிய கோவை மாவட்ட மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் தோழமை அமைப்புகள். கோவை மாவட்ட நாடகக் கலா ரசிகர்கள் வாழ்த்தக் கடமைப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.

             

         கோவையில் நாடகவிழாக்கள் நடந்து நெடுநாள் ஆகிவிட்டிருந்தது. சமீபத்தில் எஸ்வி சேகர் கிரேசி மோகன் போன்றவர்கள் சில நாடகங்களை கோவையில் நடத்திவிட்டுப்போயிருந்தார்கள். அந்த நாடகங்களுக்கு உயர்தர நடுத்தர மக்கள் எதிர்பார்த்த அளவு பங்கேற்பு இல்லை. ரசனை சார்ந்து அல்லாமல் இருந்ததும் ரசனையின் அளவுகள் சென்னை போன்ற இடங்களில் அடியோடு மாறிவிட்ட சூழல்கள் கோவை போன்ற நகர்களுக்கு எஸ்வி சேகர் போன்றவர்களைத் திரும்ப வைத்திருக்கிறது. அந்த நாடகங்களுக்கு உடல்மொழி பாவனை போன்ற எந்த மண்ணாங்கட்டியும் தேவையில்லை. ஜனரஞ்ச பத்திரிக்கைகளில் இருந்து ஜோக்குகளைத் திருடும் நுட்பம் இருந்தால் மட்டும் போதுமானது.

   நாடகம் என்கிற வடிவத்திற்காக சேகர் போன்றவர்களை வரவேற்கத்தான் வேண்டும். உயர்குடி சமூக மக்களின் பகடி சமூகநிகழ்வுகளின் மீது அவர்களுக்கு இருக்கும் எதிர்மறையான சிந்தனை அவர்களின் இருப்புக்கு வேட்டு வைக்கிற அரசாங்கத்தின் நடவடிக்கைகளை குசும்பான வசனங்களின் மூலமாகக் கிண்டல் செய்வதாகவே காட்சிகளை அமைத்து தங்கள் சமூகத்தின் எரிச்சலைத் தணித்துக் கொள்கிறார்கள். அதில் வெற்று வாய்ச்சொல்லுக்கு மட்டுமே உழைப்பு. அவர்கள் பெரும்பாலும் வீட்டுக்குள் தமது குடும்ப உறவினர்களுடன் உரையாடுவதையே நாடக ரசிகர்கள் கேட்கவேண்டும் எனக் கட்டாயப்படுத்தி ரசிக்க வைப்பதாகவே இருக்கும். உயர்குடியின் கலைகள் ரசிக்க வைக்கக் கட்டாயப்படுத்துவதாக இருக்கக் காரணம் அவர்களால் அரசாங்கக் கட்டமைப்புகளை எதிர்த்து ஒரு சொல்லும் உருவாக்கத்தெரியாது என்பது மட்டுமல்ல அதை அவர்கள் விரும்புவதில்லை. அரசாங்கம் எனப்படுவது நம்முடைய அரசு. நாம்தான் நிருவகிக்கிறோம் என அதிமேதாவித் தனமாக விரும்புவதும் ஒரு காரணம்.

     

        காலமும் பொழுதும் அமைந்தால் மா.கம்யு கட்சியே மாவட்டந்தோறும் இந்த நவீன நாடகத்தை நிகழ்த்த முன்வரவேண்டும். மற்றவர்களிடம் உதவி கேட்டால் மஞ்சள் பச்சை பிரச்சனைகள் வரும். உதவும் மந்திரியும் மா.செவும் மாற்றப்படுவார். பாவம் நாம் ஏன் அவர்கள் வயிற்றில் அடிக்க வேண்டும்.

       பிரளயன் போன்ற கலைஞர்களை குறைந்த பட்சம் சிறுபான்மையினராக இருக்கும் உன்னத கலா ரசிகர்களிடத்திலாவது கொண்டு சேர்க்க வேண்டும். நாடகக் கலையையும் கூலிக்காரன்தான் கோவணத்தில் முடிந்து கொண்டு ஊர்ஊராய்த்திரிய வேண்டும் எனும் விதி புழக்கத்தில் சங்கம் முதற்கொண்டு இருப்பதால் தமுஎக சங்கமாவது நாடகக்காரனின் வலியைக்குறைக்க முயற்சிக்கலாம். அந்தத் திறம் அமைப்பு சார்ந்த ஒவ்வொரு இயக்கங்களுக்கும் இருக்கிறது. அவை கம்பெனிகளுக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தாது. கம்பெனிகளுக்கு வேலை செய்பவர்களிடம் கலை சிறுத்துப்போய்க்கொண்டிருக்கும் காரணமும் அதுதான்.

          இதற்கு ஒரே வழி நிறுவனங்கள் கலைகளின் மீது குறைந்த பட்சம் உறுதி மொழியையாவது எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் முதலீடுகளை நம்புவதோடு கலையை நம்பினால் ஒரு கலைஞன் உண்மையிலேயே சமூகத்தின் தளைகளிலிருந்து விடுவிக்கப்படுவான் என்பதற்கு வஞ்சியர் காண்டத்தின் வழியாக நமக்குத் தோன்றும் சிந்தனையாகும்.