வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

"'kugai maravasigal"" nadagam pathivi




“‘குகைமரவாசிகள்’” –நவீன நாடகப் பதிவு

 

கோவை பூ.சா.கோ கலைஅறிவியல் கல்லூரியும் அதன் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் மாணவர்-மாணவியர் அமைப்புகள்-நிலாமுற்றம் ஆகிய ஒருங்கிணைந்த பொறுப்பில் மணல்குடி நாடகநிலத்திலிருந்து வந்த கலைஞர்கள் நடத்திக் காண்பித்த நவீன நாடகமான குகைமரவாசிகள் குறித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். ஏற்கெனவே தமிழின் மிக முக்கியமான ஆக்கங்கள் எல்லாம் முதல்முறையாக கலைவையான பெருநகரமான கோவையில் நடந்து வந்துள்ளது. சென்னைக்கு அடுத்த பெருநகரமாக கோவையிருப்ப தாலும் சென்னையில் ஒரு புதிய ஆக்கத்தற்கான வரவேற்பு எந்த லட்சணத்தில் கிடைத்து வருகிறது என்பதற்கான சாட்சிகள் அரங்கேறிக் கொண்டேயிருக் கிறது. ஒரு நிகழ்ச்சியாவது உருப்படியாக நடந்து முடியுமா என்பது சந்தேகமான நகரமாக சென்னையும் அங்கு வாழ்கிற பெருங்குடி இலக்கியக் குழாம் வகையறாக்கள் செய்கிற செப்படி வித்தைகள் நாடறியும்.

இதன் காரணங்களாக கலைஞர்கள் தங்கள் ஆக்கங்களுக்கு முழுமையாக நம்புவது இன்று நம்ப வேண்டியாகவேண்டிய கட்டாயத்தை கோவை ஏற்படுத் தியிருக்கிறது. கோவையை விட்டால் அடுத்த நிலையை கலையம்சத்தைக் கொண்டு சேர்ப்பதற்கு அடுத்த இடத்திற்கான நிலை வெற்றிடமாகவே உள்ளது. இதற்கு முன்பு நவீன நாடக கர்த்தாக்களான கோமல்சுவாமிநாதன் மு.இராமசாமி,பிரளயன், உள்பட பல கோக்கொக முனிவர்களான கிரேசிமோகன்,விசு,எஸ்வி சேகர்ஜி, மௌலி,பிரசன்னா, போன்றவர்களும் நாடகங்கள் நடத்தியிருக்கிறார்கள். கோவையிலுள்ள பிரபலமான கல்லூரிகளில் தினமும் ஒவ்வொரு ஆங்கிலப பெயர்களில் சதா கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதில் சினிமா தொலைக்காட்சி ஊடகங்கள் சேர்ந்த கேசவமூர்த்திகள் அழைக்கப்பட்டு பாடங்கள் பாடல்கள் நடனங்கள் காட்டப்படுகிறது. அந்தக் கலைஞர்களுக்கு லட்சக்கணக்கிலும் குளிர்சாதன வசதிகள் கொண்ட அறைகளும் சிங்கிள் லார்ஜ் ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொண்ட சரக்கு சப்ளை செய்யப்படுகிறது. அவர்களின் நிகழ்ச்சிகளின் கூட்டங்களுக்கு கூடும் ரசிகர்கள் கூட்டம் கடல் அலைகளைத்தாண்டும். இப்பொழுதும் சில கலை அறிவியல்  கல்லூரிகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் கலை சார்ந்தவர்களுக்கு வெறும் உப்புமா காபி ரவையும் பொது கழிப்பிட வசதியும் ஒரு பழைய மெட்ட டார் டெம்போவில் திருமண கோஷ்டி மாதிரி மக்கள் கலைஞர்கள் அழைத்து வருகிற அவலம்.

ஆனால் அப்படியிருந்த நிலைகளை கோவையின் இலக்கிய அமைப்புகள் மாற்றிக்காட்டியிருக்கிறது. கலையம்சம்,நவீனம், நவீன புதினங்களின் எழுச்சி, புதிய வாசிப்பு இயக்கம். புதிய ஆக்கங்கள், புதிய ரசனைகள் பற்றிய விழிப்புணர்வுகளைத்தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருப்பது கோவைதான். அந்தக் கோவையில் எதிர்பாராத வகையில் மகத்தான நிகழ்வுகளும் நடந்து விடும். சில தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் உயரிய கலைநிகழ்வுகளை நடத்தியும் வருகிறார்கள். அப்படியான ஒரு நிகழ்வாக ச.முருகபூபதி யின் குகைமரவாசிகள் நாடகத்தை இலவசமாக காண வாய்ப்பு அமைந்தது. இதற்கான முன் முயற்சிகளை மேற்கொண்ட பேராசிரியர்கள் ராமராஜ், கந்த சுப்பிரமணியம் மற்றும் அவர்களுடைய மாணவர் மாணவியர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

ச.முருகபூபதியின் சமீபத்திய ஆக்கம் குகைமரவாசிகள். நாடகத்தின் பல்வேறு அரங்கேற்றங்கள் ஆங்காங்கு நிகழ்ந்த வண்ணமிருந்தாலும் சர்வதேச அளவில் தொடர்ந்து நான்காவது முறையாக இடம் பெறும் நவீன நாடக இயக்குநர் மற்றும் கலைஞராக ச.முருகபூபதிதான் இடம் பெற்றிருக்கிறார் என்பது பிரமிப்பாகவும் ஆச்சர்ய மிக்கதாகவும் இருக்கிறது.

கதையமைப்பு

வாழிடங்களை, இயற்கை வளங்களை, மரங்களை, பறவைகளை, நீர் நிலைகளை, குருவிகளை,தானியங் களை, சடங்குகளை, தொழில்களை, சந்ததிகளை, தங்கள் குழந்தைச் செல்வங்களின் எதிர்காலங்களை, தங்கள் நிலப்பகுதிகளை, தங்கள் சோலைவனங்களை இழந்த மக்களுக்கு ஆதரவுக்குரலாக, அவர்களுக்கான விடுதலையை, மதநிறுவனங்கள் தொடர்ந்து உருவாக்கி வருகிற அச்சுறுத்தல்களும், அந்த அச்சுறுத்தல்களின் விளைவாக மக்கள் தங்கள் கட்டுகளுடன் மேலும் பல இறுக்கமான பின்னல்களுக்குள் வலைகளுக்குள் அகப்பட்டபடியே கதறிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கான விடுதலைப் பாடல்களை அந்த மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்ட களங்களை உருவாக்குகிற படிமங்களாக இதன் கதை யமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. . ச.முருகபூபதியின் முந்தைய ஆக்கங்களிலிருக்கிற இந்த நாடக ஆக்கம் வேறுபட்டிருக் கிறது. ஒவ்வொரு நாடகப்பிரதியும் அதில் பொருத்தப்படு கிற உடல்கள் எனும் படிம இறுக்கம் இந்த நாடகத்தில் சற்று எளிமையாக்கப்பட்டிருக்கிறது எனலாம். பொது ரசனைகளுக்கு ஏற்ப கொஞ்சம் இளகியிருக்கிறது. கதையில் சொல்லப்படுகிற காட்சிகள் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்கிற காட்சிகள் அப்படியே ரூபமாக நிழலாடுகிறது. இவை ச.முருகபூபதியின் முன்னேற்றம் அல்லது வெகுமக்கள் ரசனைக்குள் நுழைந்து கதை பேசுதல் எனும் பொருளைக் கொள்ளலாம்.

நாடக ஆக்கம்.

      ச.முருகபூபதியின் நாடக ஆக்கத்தில் பல நவீன நாடக ஆக்க கலைஞர்கள் உதவியிருப்பதை அவரே வெளிப்படையாக அறிவித்துக் கொண்டது ஓர் சக கலைஞனுக்கு அளித்த வெகுமதி மட்டுமல்ல கலைகளுக்கே அளிக்கிற காணிக்கை என்று சொல்ல லாம். கருணாபிரசாத் ஒலி ஒளி அமைப்புகளிலும் இயக்க கூறுகளுக்கும் உதவியிருப்பதை அறியமுடிகிறது. கோணங்கியின் பல கவிதைகள் உரையாடல்களாக மாற்றப்பட்டிருக்கிறது. சுமார் இருபத்தி ஐந்து கலைஞர் கள் தங்களின் ஒருமித்த ஈடுபாட்டுடன் ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றவாறு ஏனெனில் ஒவ்வொரு முறையும் திரும்பத்திரும்ப நடிக்க ஏதுவாக காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கிறது. சரியான அளவில் அந்தக் கலைஞர்கள் ஓய்வு கொள்கிற அளவும் அதே சமயம் அவர்களின் வசன உச்சரிப்புக்கு ஏற்றவாறான காட்சிகளும் அதற்குரிய பின்பல கலைஞர்களின் பாவனைகளும் முறைப்படுத்தப் பட்டிருக்கிறது. உடல்கள் மட்டுமே படிமங்களாகவும் உடல்கள் மட்டுமே பேசுவதாகவும் அந்த உடல்கள் பேசுகிற வசனங்களும் கவிதைகளும் பாடல்களும் உரையாடல்களும் உடல்களே பேசுகிறது. கலைஞர்கள், படைப்பாளி, நாடகப்பிரதியைத்தாண்டி அந்த நிகழ்வில் நடிக்கிற உடல்களின் கூக்குரல்களாக ஒலிக்கிறது. நாடக ஆக்கத்தில் படைப்பாக்கத்தில் ஒரு புதுமையான வடிவம் என்று சொல்லாம். உலகளவில் நாடக ஆக்கப்படிமங்க ளிலிருந்து சற்றும் வேறுபட்டுக் கொள்கிற விதத்தில் இந்தக் குகைமரவாசிகள் அமைகிறது. நாடகத்தை நாம் காண்கிற பொழுது அந்த உடல்கள் என்ன சொல்கிறது என்ன பேசுகிறது. என்ன பேச முடியாமல் தவிக்கிறது. இந்த உடல் படிமங்கள் எதை வலியுறுத்த தன் உடல்களை வறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை ரசிகர்கள் அனுமானிக்க முடிகிறது. ரசனை, மக்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா ரசிப்பார்களா. இந்தப் பிரதி வெற்றி கரமான பிரதியாக அமையுமா என்பதையெல்லாம் யோசிக்காமல் மிக தைரியமாக நாடக காட்சிகளை வைத்த ச.முருகபூபதியின் தைரியம் பாரட்டப்பட வேண்டும். கோவை போன்ற மேட்டுக்குடி ரசிகர்கள் இருந்த கலையரங்கில் கண்ணீர் வழிந்த காட்சிகளை அரங்கம் உணர்ந்ததை நான் கண்டேன். உயர் குடி மக்களிலிருந்து உழைப்பாளர்கள் வரையிலும் கண்ட ரசிகர்கள் தங்கள் வாழ்நாளில் இனி என்றும் பார்க்க முடியாத ஒரு பிரதியை அதன் நாடகத்தைக் கண்ட பிரமிப்பு காண முடிந்தது. கலை என்பது இதுவா. இதன்  பெயர்தான் கலைஞர்களா, என நம்பமுடியாமல் அதிர்ந்து போன பெரும் படிப்பாளிகள், வாழ்க்கையில் நோகாமலே நோன்பு வைத்து உயர்ந்துவிட்ட மனிதர்கள் பேரதிர்ச்சியு டன் காட்சிகளைக்கண்டதைப் பார்த்தேன். வெறும் புத்தகங்களில், நுனிப்புல் வாசிப்புகளில், நோகுமிடத்தில் நிறுத்திக் கொண்டு உடல்களை ஒரு மெத்தை போல சௌகரியமான இடத்தில் பொருத்திக் கொண்டு சீரணமா வதற்காகவே வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிற சொகுசு ரசனையாளர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் பல அமைந்திருந்தது. கலைஞர்களின் வெற்று உடல்களும் அதன் எலும்புகளும் நடித்தது. ஒவ்வொரு உயிரினங்களும், பறவைகளும்,மீன்களும், நாய்களும், குருவிகளும், குகைகளுக்குள் வசிக்கிற உயிரனங்களின் பாவனைகளும் அந்த உடல்கள் பேசியது. அப்படியான உடல்களைத்தான் நாமும் கொண்டிருக்கிறோம் என்பதை அந்தக் கலைஞர்களும் நாடகப்பிரதியும் நமக்குச் சொல்கிறது.

கலை

நாடக ஆக்கத்தில் முழுமையாக ஆதிக்கம் பெற்றது கலையமைப்புதான். அரங்க அமைப்பு பற்றிக் குறிப்பிட வேணடும். பின்புலம் முழுக்க ஆகாய வெளியும் ஒரு குகைக்குள் வாழ்கிற மனிதர்கள் பற்றிய பிரமை தருகிறது. குகைகளுக்குள் மனிதர்கள் வாழ்ந்த காலமும் அவர்களின் உடலசைவுகள் அவர்கள் தேர்ந்த மொழியை நமக்காகப் பேசிக்கொண்டு உடலசைவுகளில் குகைமர வாசிகளைப் போல படிமங்களும் பாவனைகளுமாக கலை அமைக்கப்பட்டிருக்கிறது பறவைகளின் மொழி, காட்டுயிர் களின் உடல்மொழி, குறிப்பாக பழங்குடி மக்களின் நடன அசைவுகள், குகைமனிதர்களின் பாய்ச்சல்கள், தாவுதல், போர்க்குணங்கள், உறுமல்கள்,பிளிறல்கள். அவர்களின் குரூரமான பார்வைகள், ஆவேசமிக்கவாறுஅவர்கள் ஆடுகிற தாண்டவங்கள். சிறப்பான கடுமையான பயிற்சி யால் கலைஞர்கள் தங்கள் உடல்களை பழக்கியிருக்கிறா ர்கள். அந்த உடல்கள் ஒரு கட்டுமஸ்தானுக்குரியவை யாகவும் அதே நேரம் தேர்ந்த ஆசனவாத்தியாருக்குரிய வளைப்புகளுக்குட்பட்டதாகவும் ஆக்கம் செயது வைத்திருக்கிறார்கள். ரஷ்ய பாலே நடன அசைவுகளும் உண்டு. ஸ்பானிய காளைச்சண்டைக்காரனுக்குரிய அசைவுகளும் உண்டு. நமது ஊர் ஜல்லிக்கட்டுக் காரனுக்குரிய உடலும், ஒரு சடங்கு சாமியாடிக்குரிய உடலாகவும் வறுத்தியிருக்கிறார்கள்.

பாடல்கள்

        பெரும்பாலான வசனங்கள் நவீன கவிதைகளாக வும் பாடிய பல பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்களாகவும் அமைந்திருக்கிறது. தானியவகைகள் குறித்த பாடல்கள், இந்த மண் அழித்துவிட்டுப் போன மனித குலத்தின் உணவு வகைகளை நினைவு கொள்ள வைக்கிற பாடல்கள், கும்மி, அறுவடைப்பாட்டு, துவைக்கிறபோதும், அறுவடைப்பாடல்கள், ஒப்பாரிகள், ஆவேசங்கள், சடங்குப் பாடல்கள் என்று அத்தனை வகையான பாடல்களை அந்த நடிகர்களும் கலைஞர்களும் பாடியே நடித்து இருக்கிறார்கள் என்கிற பொழுது சின்னப்பா, தியாகராஜ பாகவதர் மகாலிங்கம் எல்லாம் என்ன பெரிய திறமை என்று வியக்கவைக்கிற மாதிரியான குரல்வளங்கள். எதிர்ப்பாட்டும், எசப்பாட்டும், தந்தனத்தொம், தகிந்தனத்தோம் எனும் ஜதிகளுக்குட்பட்பட்டும் நாட்டிய அசைவுகளுக்குமாக அவர்கள் பாடிய விதம் முற்றிலும் கிராமிய ராகங்கள் தவிர்த்த புதிய தாளவகைகளைக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் ச.முருகபூபதியின் வசனங்களாக பேசப்பட்டதாகவே பாடி நடித்தார்கள். கதாபாத்திரத்தின் உடலசைவுகளும் குரலும் அது பேசிய மொழியும் முழுக்க கவிதைகளின் சாயல் அமைந்திருந்த து. இயற்கையின் ஒலிகள் சுருதியாகப் பின்னணியில் ஒலிக்க அதன் அசைவுகளுக்கு ஏற்ப ஒளியின் வண்ணங்கள் பொழியவும் அந்த கவிதைகள் மறுபடியும் கேட்க முடியாதே என்னும் ஏக்கத்தை தருகிறது. பின்னணி இசையும் குரல்களும் நாடகத்தினை எங்கோ கொண்டு செல்கிறது. அந்த இடம் மாபெரும் பாறைக்குகையாகவே மாறிவிடுகிறது. ஒளியமைப்பில் வண்ணக்குழல் விளக்குகளின் ஒளிகளான பச்சை, நீலம் கருப்பு (இருள்) சிவப்பு, மஞ்சள், என்னும் வண்ணங்களின் திரிபு வண்ணங்கள் அதன் ஒளிப்பந்தின் விலாசம் அது கலைஞர்களின் மீது கவிழக் கவிழ அவர்களின் வெற்று உடல்கள்,எலும்புகள். விரல்கள், கண்கள் மேலும் மேலும் உயிர்பெற்று அதிர்வளிக்கிறது. ச.முருகபூபதியின், கருணா பிரசாத் இருவரின் பின்னணி குரல்கள், பறவைகளின் ஒலிகளை, ஏகார ஒலிகளை. துன்பியலின் பாடல்களை அவர்கள் இடையிடையே தங்களின் குகைகளின் அச்சத்தி னூடேயே வாழ்கிற காட்டுயிர்களின் சத்தங்களைக் கொடுத்தார்கள். காட்சிகளுக்கு ஏற்றவாறு காட்சி மாந்தர் களின் உடல்கள் பாம்புகளின் சரசரப்புகளும் மீன்களின் துள்ளல்களும்,மான்கள்,சிறுத்தைகள், நரிகளும் ஆந்தை களும் மனிதக்குரங்குகளின் அசரீரிகளாகப் பின்னணி இசையும் புதுமையாகவே இருக்கிறது. சில சமயம் நடுச் சாமங்களில் தேவநாகரி மனிதர்களின் கல்லறைக் கூட்டங்களின் ஒத்திகையோ எனவும் தோன்றுவதாகவே உணர்ந்தோம். ஒரு காட்சியில் உடல்களில் ஏறியுள்ள ஆணிகளால் உமக்கு வலியில்லை ஆனால் இந்த முள் ஏறியதற்காக வலியென்கிறாயே கிருத்துவே என் தேவனே..இந்த முள்ளை நீக்கி விடுவதால் மட்டும் உன் சமூகத்தின் வலி தீர்ந்து விடவா போகிறது என்கிற உடல் பாவங்கள் அற்புதமாக அமைந்த காட்சிகள் அது..

காட்சியமைப்புகளின் நவீனத்துவ ஆக்க நிலைகளில் கலைஞர்களின் உடையலங்காரங்களும் அவர்கள உபயோகப்படுத்திய பலவிதமான அரங்குக் கலைப் பொருட்கள் மிகவும் முக்கியமானவை. மூங்கில்குழல் நாயனங்கள், புல்லாங்குழல்கள், சிறுசிறு காட்டுக்குயில் களின் ஓசைகளுக்கு ஏற்றவாறு மூங்கில் குழல்கள், மரப்பட்டைகள். இலவப்பஞ்சுகளாலான சிறு சிறு குழந்தை விளையாட்டு பொம்மைகள், குழந்தை பொம்மைகள்,மரப்பாச்சி பொம்மைகள், மீன் பொம்மைகள், திமிங்கில பொம்மைகள், இப்படியான குழந்தைகள் வாழ்வு பறிபோய்க் கொண்டிருக்கிற தரைவாழ் மனிதர்கள் கனவுகளுக்காக அவர்களின் நம்பிக்கையளிக்கிற எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஏங்குகிறார்கள் குகைமரவாசிகள். குறிப்பாக ஆற்றோரங்களில் துணிவெளுக்கிற மக்களின் கொண்டாட்டமும் ஆட்டமும் பாட்டமுமாக அவர்கள் துணி வெளுத்து விளையாடுகிற காட்சிகளில் அரங்கத்தின் வெளிச்சமும் கலைஞர்களின் நடனமும் அந்தப்பாடல்களும் நவீன நாடகத்தின் தமிழ் நிலத்தின் அழகுப் பொதியின் உச்சம்.

சில காட்சிகளில் திடுமங்கள் பயண்படுத்தப்பட்டிருக்கி றது. ஆனால் அதன் வாசிப்பு முறைகளுக்கு ஏற்ப அமையவில்லை. அது ஒரு பெரிய குறையாக இருக்கிறது. பொதுவாக திடுமங்களின் ஒலியற்ற அரங்காக மாறிவிட்டது. அத்தனை திடுமங்களையும் ஒன்று சேர ஒவ்வொரு அடியாக அடித்துச சுற்றி ஆடியது நடனமும் அடவுகளும் சிறப்பாக இருந்தாலும் திடுமங்களின் பிரத்யேகமான ஒலிகளும் வாசிப்பும் இல்லை. திடுமங்களின் தாள வாசிப்புகள் நிகழ்த்துக் கலையில் சேர்த்துக் கொள்ளவேண்டுகிறேன்.. இன்னும் சில வாத்தியக் கருவிகள் இணைத்துக் கொள்ளவேண்டும். சமீபத்தில் ஒரு கழைக்கூத்தாடி பழைய அலுமினிய வட்டில் பல்வேறு வகையான கர்நாடக சங்கீத ராகங்களை வாசித்துக் காட்டியது நினைவுக்கு வருகிறது. எத்தனை நாட்களுக்கு தங்கள் குரல்களையே இசைக் கருவிகளாகப் பயண்படுத்த முடியும்.. ச.முருகபூபதியின் யோசனைக்கு விட்டுவிடுகிறேன்.

    உலகளாவிய நாடகரசனைகளின் தன்மைகளுக்கு ஏற்ப நாடக ஆக்கத்தைத் தந்திருக்கிறது  ச.முருகபூபதி யின் குழுவும் கலைஞர்களும். தமிழ் நாடகத்தின் எழுச்சியென்று நிச்சயமாகச் சொல்லமுடியும். இந்த நாடகத்தைப் பற்றிய விமர்சனங்களாக நாம் எதுவும் காணமுடியாது. சமகாலத்தில் மருத்துவமனைகளில் ஒரு வாசகம் எழுதியிருக்கிறார்கள் “மருத்துவத்துறையில் பணியில் காலதாமதம் தவிர்க்க முடியாது..தங்கள் வரிசை வரும் வரையில் தயவு செய்து காத்திருக்கவும்.“ என்பதுதான் அது, அதைத்தான் இங்கு சொல்ல வேண்டும் கோடாணுகோடி ரூபாய்கள் கொட்டிக் கொழித்துக் கொண்டிருக்கிற தனியார் மருத்துவத்துறைகளே இந்த வாசகத்தைப் பயண்படுத்தும் போது கலைஞர்களும் கலைகளைக் கையாள்கிற கலைஞர்கள் சொல்வதில் தவறில்லை. நல்ல விசயங்களை நீங்கள் ரசிப்பதற்கும் ரசிக்கப் பழகுவதற்கும் சில காலம் ஆகலாம். அதுமட்டுமல்ல அது மாதிரியான ரசனைக்குரிய அறிவு உங்களுக்கு குறைச்சலாக இருக்க்கிறது. அதாவது ரசனை சம்பந்தமான நோய்கள் பீடித்திருக்கிறது என்பதையும் உணர்ந்தால் மட்டுமே நவீன ஆக்கங்களுக்குள் நுழைய முடியும்.

“புரியவில்லை..என்ன சொல்ல வருகிறீர்கள்..“

“அது என்ன சத்தம்..

“என்ன பேசிக் கொண்டு இருக்கிறார்கள்..நாய்..பறவை, மீன்கள் கடல்கள்..நிலம்..குகை.. என்கிறார்களே..“ என்று தனக்குத்தானே தலைச்சவரம் செய்து கொள்கிற விஜய் டிவி. ஆனந்தவிகடன், தினத்தந்தி, தி இந்து தமிழ், உள்ளிட சொறிப்பெயர்ச்சி ரசனை சார்ந்த லட்சக்கணக்கில் மரமண்டை ரசனையாளர்களை இவர்கள் உருவாக்கு கிறார்கள். இந்த மேம்போக்கு சரும க்ரீம் ரசனைகளும், குருப்பெயர்ச்சி பலன்கள் வாசிப்பவர்களுக்கு குழப்பமாக இருக்கலாம். அதற்காக மகத்தான மக்கள் கலைஞர்கள் திரும்பவும் சவரப்பெட்டியைத்தூக்கிக் கொண்டு மரத்தடியில் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.. இப்பொழுதெல்லாம் ரசக்கரண்டியும் மட்டக்கோலும் டெம்ப்போ டிராவலரில் போகிற காலம் இது. ரசனை அறிவு சேகரிக்க சில மைல்கள் நடந்துதான் ஆகவேண்டும். சில பைசாக்கள் செலவு செய்துதான் ஆகவேண்டும். டாஸ்மாக் கவுண்டர்க்கு மட்டும் எப்படி ஆயிரம் ரூபாய் நோட்டு எளிதில் நுழைகிறது. அப்படியாக நல்ல நிகழ்வுகளுக்கும் சில தாள்களை நீங்கள் செலவு செய்யவேண்டும்.

தமிழ்நாட்டில் நல்ல நிகழ்வுகள் நடத்துவதற்கு வெளி நாட்டு வாழ் தமிழர்கள் உதவியில்லாமல் நடத்த முடிவதேயில்லை. காரணம் உள்ளுர்ப் புரவலர்கள் கோவில்களுக்குக் கொண்டு போய்க் கொட்டி விடுகிறார்கள். கொடுங்கள்  வேண்டாமென்று சொல்ல வில்லை. தாளத்தையும் தப்பையும் நம்பி வாழ்கிற தொல் கலைகளுக்கும் அள்ளித்தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். அப்படியாக மணல்குடி நாடக நிலத்தின் ஆக்கமான குகைமரவாசிகளைக் கண்டுகழியுங்கள்.. நமது மூதாதையர்களின் குரல்களைக் கேளுங்கள் நமது கானகத்தின் ஒலிகளைக் கேளுங்கள்..

வாய்ப்பு வழங்கி மணல் குடி நாடக நிலத்தைக் கௌரவித்த  மனங்களுக்கு நன்றி...

 

 



சனி, 14 பிப்ரவரி, 2015

Yathumagi-2015 sivakasi- katturai


 

 

 

 

 

 

 

 


 


























 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


முன்னுரை

 

கோட்பாடுகளுக்குப் பின்னாலான இலக்கிய மரபு செழுமைமிக்கதாக மாறியிருக்கிறது. மற்றும் மாறிக்கொண்டுமிருக்கிறது. தமிழில் கிடைக்கின்ற இலக்கிய வடிவங்களுக்கும் இலக்கண மரபுகளுக்குமாக தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் பல்வேறு தரப்புக் கோட்பாடுகளை முன்வைத்துச் சென்றுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையை, அதன் அரசியல் முறையை, பண்பாட்டுச் செறிவுகளை அது வரையறுத்துள்ளது.

அதன் ஒவ்வொரு செறிவு மிக்க அடர்த்தி மிக்க மொழியில் உட்கூறுவகைக் கோட்பாடுகளான உழைப்பு சார்ந்த நடவடிக்கைகள், மதிப்பீடுகள்,வழிவகைகள். ஒழுங்குமுறைகள் நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், விழாக்கள். சமயமுறைகள். ஆகியவற்றைக் குறித்து அறிந்து கொள்ள நமக்கு வரைவிலக்கணக் கோட்பாடுகளாக அமைந்துள்ளது. பாட்டும் தொகையுமாக,செய்யுள்களாக,வசன கவிதைகளாக, அகவல்களாக, எதுகை மோனை ஒலிநயச் சந்தங்களாகவும் நமக்குக் கோட்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நமக்குத் தொகுத்து அளிக்கப்பட்டிருக்கிற பதினெட்டு நூற்களிலும் சங்க கால மக்களின் வாழ்வியல் தரவுகளும் அனைத்தும் ஒவ்வொரு ஆய்வின் பொழுதும் சமகாலத்தில் ஏற்படுத்தப்பட்ட கள ஆய்வுகளின் அடிப்படையிலும் அறிந்து கொள்கிறோம்.

இந்த தரவுகளைக் கொண்டும் கோட்பாடுகளையும் கோட்பாடுகளுக்குப் பின்னாலான இலக்கியத்தையும் அறிந்து கொள்ள ஏதுவாக உள்ளது. இந்தக்கோட்பாடுகளுக்குப்பின்னாலான இலக்கியங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆய்வுகள் அறிஞர்களால் அவரவர் சூழல்களுக்கு ஏற்ப பார்வைக் கேற்ப மேற் கொள்ளப்பட்டுள்ளன. அம்மரபின் தொடர்ச்சியில் “இந்தக் கோட்பாடுகளுக்குப்பின்னாலான இலக்கியம்“ தலைப்பில் சில கூறுகளை நாம் விவாதிக்கலாம்.

 

 

ஆய்வுத் தலைப்பு

 

ற்கால அறிவுச் சூழல் நமக்குப் புதிய புதிய இலக்கியக் கோட்பாடுகளை அறிமுகமாகிக் கொண்டேயிருக்கிறது. உலக இலக்கியக் கோட்பாடுகள் மிக வேகமாக மாறிக் கொண்டேயிருக்கிறது. அதன் பாதிப்புகள் இன்றைய தகவல் தொழிற்நுட்ப வளர்ச்சி, இணையதளங்கள், தனிநபர் இணையதளங்கள், உலக ஆதிக்க மொழிகளான பிரஞ்ச். ஜெர்மன்,அமெரிக்க ஆங்கிலம்,பிரிட்டிஷ் ஆங்கிலம்,சீன மொழிகள் உள்பட தெற்காசிய பிராந்திய மொழிகளின் வழியாக கோட்பாடுகளுக்குப்பின்னாலான இலக்கிய மரபு புத்தம் புதிய நவீன கோட்பாடுகளைப் பேசுகிறது. இந்த பாதிப்புகளின் எதிரொலியாகவும் அயல்நாடுகளில் வாழ்கிற இந்தியர்களையும் தமிழர்களையும் அந்த மொழிக் கோட்பாடுகளுக்கு ஏற்ப எழுத வைக்கிறது. இந்திய மொழிகளிலும் கோட்பாடுகளை புத்தாக்கம் செய்ய வைத்திருக்கிறது.

மார்க்சியம், சோசலிசம், கம்யுனிசம்.நவீனத்துவம்,பின் நவீனத்துவம், பின் அமைப்பியல், பின் காலனியம், பின் மார்க்சியம், மார்க்சிய-லெனியம், பெண்ணியக் கோட்பாடு களின் பேரெழுச்சி, தலித் படைப்பியலக்கியம். உலகளாவிய சிறுபான்மை மக்களின் எழுச்சிமிக்க இலக்கியக் கோட்பாடுகள், அடித்தட்டிலிருக்கிற மக்கள் சார்ந்த அணுகுமுறைகள், மானுடவியல் சார்ந்த அணுகு முறைகள், தேசிய இனங்கள் சார்ந்த அணுகுமுறைகள் என்பதாக கோட்பாடுகளுக்குப் பின்னாலான இலக்கியத்திற்கு வலிமையைச் சேர்த்துவருகிறது. இந்த மரபின் தேடலில் ஆய்வும்  கள ஆய்வுகளும் விரிவடைந்து கொண்டே வருகிறது. இந்த ஆய்வு என்பது  சமூகத்தின் இங்கு இடுக்குகளில் இன்னும் தொங்கிக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருக்கிற சாதாரண எளிய மக்கள் சாரந்த அணுகுமுறை கொண்ட படைப்புகள். மாநாடுகள் ஆய்வரங்குகள், நாட்டாரியல் மரபுகள் கொண்டவையாகவே அமைகிறது. அதன் ஒரு பகுதியாக பெண்ணியம் சார்ந்த ஆய்வு முறையையும் அடித்தள மக்களின் பார்வையுடன் மானிடவியல் அணுகு முறையை மற்றொரு பகுதியாக கொண்டும் “கோட்பாடுகளுக்குப்பின்னாலான இலக்கியம்“ ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆய்வின் நோக்கம்

 

கோட்பாடுகளுக்குப் பின்னாலான இலக்கியம் குறித்த அறிமுகத்தில் அதன் வளர்ச்சி நிலை, தற்காலத்தில் ஏற்பட்டிருக்கிற படைப்பாக்கச் செயல்பாடுகளும் நூலாக்க முயற்சிகள், அதில் படைப்பாளி என்பவன் கோட்பாடுகளின் வழியாக உருவாகிறாரா, அல்லது அவர் தன் படைப்பின் வழியாக கோட்பாடுகளை மறுவாசிப்பு, மீள்வாசிப்பு செய்ய உதவுகிறாரா என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. நம் மரபு சங்க இலக்கியப் பிரதிகளை முன்வைத்துதான் தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சியை ஒப்பு நோக்கிக் கொள்கிறோம். கலாச்சாரப் பண்பாட்டு எழுச்சிகள், அந்த மரபுகளைப் பின்பற்றிய சிறு குறு மக்கள் அரசுகள், இனக்குழுக்கள், அதன் படிப்படியான வளர்ச்சிகளில் ஏற்பட்ட போர்கள், போர்களுக்குப் பிறகு கல் வெட்டில் செதுக்கபட்டு வைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்கு இணையான கோட்பாட்டுப் பதிவுகள் நமக்கு முன்னால் வந்து நிற்கிறது. இன்றும் உலகளாவிய அளவில் இயற்கை வளங்களைக் கொள்ளை கொள்கிற வல்லரசு நாடுகளின் ஆதிக்க மனோபாவங்களுக்கு எதிரான கருத்துகளும் கோட்பாடுளும் உருவாகியே வருகிறது. அதன் வீரியமிக்க இடையறாத படையெடுப்புகளை அத்துமீறல்களைத் தங்கள் இலக்கியப் படைப்புகள் வழியாக படைப்பாளர்கள் எழுதிக் கொண்டுதான் வருகிறார்கள். அப்படியான இலக்கியப் பிரதிகளின் கருத்தொற்றுமைகள் திரைப்படங்களாகவும் வருகிறது.

 

ஆய்வின் கருதுகோள்

 

தமிழ்நிலத்திற்கு நாம் வருகிற பொழுது சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்ற மக்கள் அதாவது உழைப்பை நம்பி வாழந்த மக்களின் கலைகளும் அதன் அம்சங்களும் உட்படுகிறார்கள். அரசர்கள்,வணிகர்கள்,நிலவுடைமையாளர்கள், வள்ளல்கள், வீரத்தாய்கள் பற்றிய பல்வகைப் பொது ஆய்வுகள் மேற்க் கொள்ளபட்டிருக்கிறது. சங்க நிலமக்களின் பாடல்களும் தொகுப்புகளும் ஒரே விதமான கோட்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. இந்தப் படைப்புகள் உழைப்பின் அடிப்படையில் ஏற்பட்ட மாற்றங்கள் இவர்களின் வாழ்க்கையிலும் ஏற்படுத்தியது. குறிப்பாக நீரைச் சேகரித்துப் பயண்படுத்தியதும் நெல் உற்பத்தி மற்றும் விவசாயத்தை விரிவாக்கியதும் உபரியான உற்பத்திப் பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கியதும் இந்தச் சேகரிப்பின் வழியாக ஏற்படுத்தப் பட்ட தனியுடைமை எனும் கோட்பாடு புதியவெளிச்சமாகத் தோன்றியதை நாம் மறுக்கமுடியாது. சங்க கால சமூகத்தில் அடித்தள மக்கள் என்ற பிரிவினர் உருவாவதற்கு அடிப்படையான காரணமாக இந்தக் கோட்பாடு உதவியது. ஐவகை நிலக் கூறுகளில் திணைநிலங்களில் வாழ்ந்த மக்கள் குழுக்களில் அடித்தள நிலையில் வாழ் வேண்டிய சூழலுக்கு ஆளாக்கப்பட்ட மக்களைக் குறித்தும் அவ்வாறு வாழ நேர்ந்த கோட்பாடுகளையும் நாம் கவனிக்கவேண்டியிருக்கிறது. உலக அளவிலும் இந்திய அளவிலும் சமூகநீதிப் போராட்டங்களானாலும் எழுத்தியக்கங்களி லும், மாநாடுகளிலும் அதிகம் பேசப்படுகிற நிலையாக இந்தக் கோட்பாடுகளுக்குப் பின்னால் எழுந்துள்ள இலக்கியவகைமைகள்தான். இன,மொழி,மத, தேசிய,சர்வதேசிய இனவெழுச்சிப் போராட்டங்கள் தற்கால த்திலும் ஓய்வதாகவே இல்லை. தன் சொந்த நிலப்பகுதிகளை இழந்தவர்களும் நாடுகளை இழந்து கொண்டிருப்பவர்களும் சொந்த நாட்டிலேயே அகதிகளாக அடிமைகளாக வாழந்து கொண்டிருக்கிற சூழ்நிலையை இந்தக் கோட்பாடுகள் பேசுகிறது. அல்லது இந்தக் கோட்பாடுகளைத் தகர்த்தெறிய முனைகிறது. அல்லது புதிய கோட்பாடுகளை முன்வைக்கிறது.

 

ஆய்வுப் பரப்பு

சங்க இலக்கிய வரையறைகளுக்குட்டபட்டதுடன் பல செவ்வியல் பிரதிகளும் சமண சைவ வைணவ பக்தி இலக்கியக் கோட்பாடுகளும் முக்கியமானது. கோட்பாடுகளுக்குப் பின்னால இந்த வகைமைகள் தற்காலத்திலும் தொடர்கிறது. வழிபாட்டுத்தலங்களிலும் சடங்குகளையும் பின்பற்றி வருகிறது. இதன் பாதிப்பிலும் சமகாலத்திலும் இதன் பின்னணி யிலான படைப்புகள் நவீன இலக்கியச் சூழலிலும் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். பத்துப்பாட்டு,எட்டுத்தொகை என்னும் இரு பெரும் பிரிவுகளில் உள்ள வேறுபாடுகள் உள்ளது. அதன் உள்ளடக்க முறைகள்,யாப்பிசைப்பு அடிகள் அமைப்பு.பொருள் முறைகள்,பாடுபொருள்கள் கோட்பாடுகளுக்கு அப்பாலும் சங்க காலத்திலும் மக்கள் தங்கள் படைப்புகளைப் படைத்துள்ளதை அறியலாம்.

இரண்டாயிரம் ஆண்டு மரபில் திராவிட இலக்கியத்தின் நெடிய பரப்பை நாம் தவிர்க்க முடியாது. திராவிட அழகியல்.திராவிட இலக்கியத்தின் மொழியமைப்பும் கட்டுரைகளும் வசன கவிதைகளும் சொல்லமைப்பும். மேடைப் பேச்சு வழக்குகளும்.பட்டிமன்றங்கள் வழக்காடு மன்றங்கள், தென்னிந்திய மொழிகளில் திராவிட இலக்கிய மரபை வளர்த்து மக்களைப் புத்தாக்க முயற்சியில் இறக்கியது. ஆகப் பெரும் கொண்டாட்ட வகைமை யைச்சாந்த திராவிடக் கோட்பாட்டுக்கூறுகள் சில அரசியல்வாதிகளுக்கு பதவிகளையும் ஆட்சி அதிகாரங்களையும் பெறுவதற்கு உதவியது என்பது கண்கூடு.

அது போலவே ரஷ்யப் புரட்சிக்கு மார்க்சிய இலக்கியக் கோட்பாடுகள் பெரிதும் உதவியது என்பதை வரலாறு அறியும். முதல் இரண்டாம் உலகப் போருக்குப்பின்னால் கோட்பாடுகளில் பெரிய மாற்றங்கள் வந்து குவிந்த காலத்தை அறிந்திருக்கிறோம். உலகெங்கும் ரஷ்ய இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகள் வெளியாகி மக்களின் கவனத்தைப் பெற்றது. ரஷ்ய இலக்கியங்கள்தான் கோட்பாடுகளுக்குப்பின்னாலான ஆகச்சிறந்த வடிவங்க ளை உருவாக்கியது. ரஷ்யமக்கள், ரஷ்ய படைப்பாளர்கள் நாடுகள் கடத்தப்பட்டார்கள். தங்கள் நாடுகளை இழந்து அவர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்தபடியும் தங்கள் படைப்புகளுக்கான கருப்பொருளையும உலக நாடுகளின் விடுதலைக்கான சோசலிக் கூட்டமைப்புக்காக உழைத்தார்கள். சோவியத்தின் வீழச்சி வரையிலும் அதன் கோட்பாடுகள் உச்சத்தில் அமைந்திருந்த வரலாற்றை அறிந்திருக்கிறோம்.

ஆய்வு ஆதாரங்கள்

கோட்பாடுகளுக்குப் பின்னாலான இலக்கியம் இதற்கான ஆதார வளங்களை நாம் அச்சுப்பொறிகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகான காலத்தை வரையறை செய்து கொள்ளலாம். அதன் படிப்படியான வளர்ச்சிக்குத் தகுந்த காலத்தை அது ஏற்றுக் கொண்டு மொழியும் வளமும் படைப்பும் வளர்ந்தது. துணைபுரிந்த ஆதாரங்கள், முதன்மை ஆதாரங்கள், துணைமை ஆதாரங்கள் என நாம் நம் அறிதலுக்குட்படுத்திக் கொள்ளலாம். இன்று கணணியின் செயல்பாடுகள், தமிழ்மென்பொருள், விசைப்பலகைகள், இணையதளங்கள். வலைப்பூக்கள்,முகநூல்கள். செல்பி.வாட்ஸ்ஆப்,புளுடுத், டிவிட்டர்,கூகுள்,விக்கிப்பிடியா, உள்ளிட்ட வசதிகளில் தங்கள் கோட்பாடுகளுக்குப்பின்னாலான இலக்கிய வகைகள் வளர்ந்து கொண்டிருக்கிறது. மலிவான இலக்கியப் படைப்புகளும் குவிந்து வருவதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். மலிவான படைப்புகளின் வளர்ச்சியை வெகுசன ஊடகங்கள் வளர்க்கிறது. கலாச்சாரச் சீரழிவுகளை ஒரு நாட்டிற்குள் அனுமதிக்க நினைக்கிற ஏகாதிபத்திய வல்லரசு நாடுகளின் பிடிக்குள் சில உள்ளுர் பத்திரிக்கை முதலாளிகள் தங்களின் பத்திரிக்கைகளில் வெகுசன இதழ்களில் மட்டரகமான படைப்புகளை வெளியிட்டு அந்தப்படைப்புகள் தான் மகத்தான படைப்புகள் அந்தப் படைப்பாளர்கள்தான் மகத்தான படைப்பாளர்கள் என்பதைத் தொடர்ந்து நிறுவுகிற ஆபத்தான சூழ்நலையிலும்தான் நாம் வாழ்ந்தும் வாசித்தும் வருகிறோம் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

படைப்பாளின் வாழ்வில் தேனாறும்பாலாறும் ஓடவில்லையென்பதையும் பல எழுத்தாளர்கள் வெகுவசதியுடன் வாழ்கிற ஏற்றத்தாழ்வுகளுடன்தான் தமிழ் இலக்கியக் கோட்பாட்டு வரையறைகள் அமைந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பல தலித் படைப்புகளுக்குத் தனியான பெருமைகள் கிட்டவில்லை. பெண்ணிய படைப்பியக்கத்திற்கான சிறப்பு வெகுமதிகள் இல்லை. குறிப்பாக பெண்ணிய உழைப்பும் சிறுமிகள் சிறார்கள் உழைப்பின் வழியாக வருகிற இந்திய நாட்டிற்கான வருவாயில் பதினைந்து சதவிகிதம் உள்ளது. பெண்ணிய எழுத்து இன்னும் ஊக்கப்படுத்தப்படவில்லை. சிறுபாண்மை எழுத்துக்களை சிறுபாண்மை இயக்கங்களே தடைசெய்கிற கேவலமான நிலையையை நாம் கவனம கொள்ளவேண்டும்.

உலக அளவில் சாலமன் ருஷ்டிக்கு கோமேனி அளித்த மரண தண்டனை நிலுவையில் உள்ளது. தமிழ்ச்சூழலில் பெருமாள் முருகன்.துரை.குணா. ஹெச்.ஜி.ரசூல். உள்பட பல படைப்பாளர்கள் மிரட்டப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி பாரதியார்,பாரதிதாசன்,ஜீவா, பெரியார்,அண்ணாதுரை, உள்பட பல மூத்த படைப்பாளர்கள் தடைசெய்யப்பட்டார்கள். கம்யுனிஸ்ட் இயக்கங்கள் தடைசெய்யப்பட்டது 1964ல் ரஷ்ய இலக்கியப்பிரதிகள் நாடெங்க்கும் தடைசெய்யப்பட்டது. இடது சாரி படைப்பாளர்கள் ரஷ்ய உளவாளிகள் என்றும் அண்ணா போன்றவர்களை அமெரிக்க ஏஜெண்ட்கள் என்று முத்திரை குத்தப்பட்ட நிகழ்வுகள் நம் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது என்பதை கவலையுடன் நினைவில் கொள்ள வேண்டும்.

 

துணைமை ஆதாரங்கள்

நம் இந்திய தமிழ் நூலகங்களில் அறியதாய்க் கிடைக்கிற ஆனால் எவராலும் அதிகஅளவில் எடுத்தாளப்படாத அரிய வகை ஆய்வு நூற்கோவைகள், சிற்றிலக்கிய வகைகள், அவ்விலக்கியங்கள் குறித்த செய்திகள், கட்டுரைகள், புதினங்கள். சொல்லகராதிகள்.வட்டாரச் சொல்லகராதிகள் திறனாய்வுக்கட்டுரைகள். மூத்த ஆளுமைகளின் நேர்காணல் பதிவுகள், வட்டுத்தகடுள், ஆவணப்படங்கள் வாயிலாக பெற்ற துணைமை ஆதாரங்கள் இந்தக்கட்டுரைக்குப் பயண்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக வரலாற்று அறிஞர்கள்,டி.டிகோசாம்பி,நா.வானமாமலை, தொ.பரமசிவன், பயண இலக்கியத்தந்தை சேலம் படகலா நரசிம்மலுநாயுடு, டி.என் ராமச்சந்திரன். கோவைஞானி, கா.சிவத்தம்பி, முத்துமோகன். ஆ.வேங்கடசுப்பிரமணியன்.ஆ.இரா.வேங்கடாசலபதி, அ.கா. பெருமாள்.டி.தர்மராஜன்,நாஞ்சில் நாடன்,கோவைக்கிழார்,புலவர் செ.ராசு உள்பட பல அறிஞர்களின் படைப்புகள் ஆய்வுகள் நம் காலத்தின் முன்பாக வீற்றிருக்கிறது.

 

சமகால இலக்கியக் கோட்பாடுகளுக்குப் பின்னாலான இலக்கியச் சூழல்.

     

சாகித்ய அகாடமி விருதுகள் பெற்ற தமிழ்ப்படைப்பாளர்களின் மொழிபெயர்ப்புகள் பதினெட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. உலக அளவில் மிகச்சிறந்த பதிப்பியக்கமாக இந்திய சாகித்ய அகாதமியின் பணி சிறப்பாக அமைந்து வருகிறது. சமீபத்திய அகாடமியின் விருதுகளைப் பெற்ற படைப்புகள் தமிழின் மேன்மை மிக்க படைப்புகள் என்று சொல்லவேண்டும்.நாஞ்சில்நாடன்,டி.செல்வராஜ்,ஜோடி குருஸ். சு.வெங்கடேசன்.பூமணி. மற்றும் இந்திய மொழிகளிலிருநது மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அதன் வழியாய அறியப்பட்டவர்களாகவும் சிற்பி, இந்திரன், புவியரசு, ம.இல,தங்கப்பா. நிர்மால்யா,பாவண்ணன். போன்ற ஆளுமைகள் இந்திய மொழிகளின் பல படைப்புகளை தந்துள்ளார்கள்.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு நம் கோட்பாடுகள் மாறியது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு வட்டார மொழிகளில் தேர்ச்சியும் கொண்ட படைப்பாளர்கள் தங்கள் மக்களின் இலக்கியங்களை வாய்மொழி வரலாறுகளை எழுதினார்கள். அச்சு வசதிகளைப் பயண்படுத்தி பழங்குடி மக்களிலிருந்து முதல் பட்டதாரிகளாக முதல் தலைமுறை எழுத்தாளர்கள் எழுந்து வந்தார்கள். தங்கள் மக்களின் அடிமை வரலாறுகளை எழுதினார்கள். பல படைப்புகளை வழக்கம் போல ஒழுக்கவாதிகள் அவைகளில் கலையம்சம் இல்லையென்று ஒதுக்கியும் புறக்கணித்தும் வந்த கெடுதல்களும் நடந்துள்ளது. இன்னும் நடந்து கொண்டுதான் உள்ளது. “அது நாவல் இல்லை, அது சிறுகதை இல்லை. அது குப்பை., மொக்கை..என்று மரமண்டை விமர்சகர்களாலும் அரைவேக்காடு மதிப்பீட்டாளர்களாலும் புறக்கணிப்புகளாலும் மகத்தான படைப்புகளை அறவே அழித்த பெருமையும் நம்மிடம் உண்டு. வெகுசன இதழ்கள் அளிக்கிற நிதியுவகை பெற்றுக்கொண்டு அந்த இதழ்களுக்காக, அந்தப் பதிப்பகங்களுக்காக உழைக்கிற வெகுமதி எழுத்தாளர்கள் பரம்பரையும் இந்தக் கோட்பாடுகளுக்குப்பின்னாலான இலக்கியச் சூழலில் நிலவுகிறது என்பதையும் மறுத்தோ,தவிர்த்தோ நகர்ந்து விடமுடியாது.

மொழிவாரி மாநிலங்கள் தோன்றியபிறகு மொழிப்போர்கள் உண்டாகியது. கட்டாய மொழித்திணிப்பும் இனியொரு மொழியைக கற்பதற்கு விரும்பாத மக்கள் மொழித்திணிப்பை எதிர்த்துப் போராட்ட்ஙகள் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற இந்தி மொழி எதிர்ப்பு வரலாறு நெடிய வரலாறு.

பிறகு இந்தியா ஐந்தாண்டுத்திட்டங்களின் வழியாகவும் உலக நாடுகள் கடன்களை இந்தியாவிற்கும் வழங்கத்துவங்கியதின் விளைவாகவும் அந்தக்கடன்களைப் பெற்றுக் கொண்டு சில மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி பெற்றது. இந்த நிதிகள் அதிகம் பெற முடியாத மாநில மக்களிடம் பல் வேறு கிளர்ச்சிகள் மற்றும் தனிமாநிலக் கோரிக்கைகள் எழுந்தது. இதன் அடிப்படைகளைக் கொண்ட படைப்புகளை படைப்பாளார்கள் எழுதினார்கள்.

பயங்கரவாதம் தலைதூக்கியது. ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டது. நாடெங்கும் நெருக்கடி நிலை பிரகடனம் அறிவிக்கப் பட்டது. நாடெங்கும் கருத்துரிமைகள் எழுத்துகள் நசுக்கப்பட்டது. படைப்பாளர்கள் தாக்கப்பட்டார்கள்.சிறையிலடைக்கப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாக பயங்கரவாதங்களுக்கு எதிரான கோட்பாடுகளும் அதற்குப் பிறகான எழுத்துகள் உருவாகியது. 1984ல் பயங்கரவாதம் மற்றும் இன பயங்கரவாத நிலையின் உச்சமாக பிரதமர் இந்திராவின் படுகொலை நாட்டையே உலுக்கியது. இதற்குக் காரணமான சீக்கியர்கள் பழிவாங்கப்பட்டார்கள். அந்தப்படைப்பாளர்கள் கொல்லப்பட்டார்கள். பிற்பாடு மதஅடிப்படைவாதிகளின் பயங்கரவாத செயல்கள் தலைதூக்கத்துவங்கியது. இன்றளவும் உலகெங்கும் நடைபெறுகிற பயங்கரவாத செயல்களுக்கு எதிராக படைப்பாளர்கள் ஊடகவியலாளர்கள் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டும் தாக்கப்பட்டும் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விசயம்.

மூன்றாம் உலகப் போர்களுக்குரிய செயல்பாடுகளை வளர்ந்த நாடுகளும் ஏகாதிபத்திய நடவடிக்கைகளும் நாடு பிடி கொள்கைகள், இயற்கை வளங்களைக் கொண்டுள்ள நாடுகளை கைப்பற்றுதல், அணுசக்தி ஒப்பந்தங்கள், எல்லைப்பகுதிகளில் ராணுவ தளங்களை அமைத்தல், உள்நாட்டு சீர்குலைவுவாதிகளை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் உலக வல்லரசு நாடுகளால் மறைமுகமாகவே நடத்தப்பட்டு வருவதை படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளில் ஆய்வுகளில் கருத்தரங்குகளில் அறிவித்தபடியே உள்ளார்கள்.

கட்டுரை நிறைவுரை

       உலகின் பல்வேறு மூலைகளில் பல சம்பவங்கள் அச்சுறுத்தல்கள் கொடுத்தாலும் அந்தந்த காலகட்டங்களில் இலக்கியக் கோட்பாடுகளின் வழியாக நம்பிக்கை தருகின்ற மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளது. இன்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு முப்பத்திமூன்று சதவிகித இடஒதுக்கீடு முறைகள் அமுலில் இருப்பது போன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் முப்பத்திமூன்று சதவிகிதம் ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றால் நாடு இன்னும் மிகவேகமான அளவில் முன்னேற்றம் காணும். பெண்ணிய எழுத்துகள் மேம்படும். பெண்நிலை வாசிப்பிலும் இயக்கங்களிலும் மறுமலர்ச்சி ஏற்படும். ஆனால் இந்த மசோதா இன்னும் முதல் நிலை ஆய்வுகளுக்குள்ளேயே செல்லாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. பெண்ணியச் சிந்தனையாளர்கள் எழுத்தாளர்கள் உள்பட பல சமூக சீர்திருத்தவாதிகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் போரடி வருகிறார்கள்.

இலக்கியப்படைப்புகள் வாசிப்பதிலும் தன்மைகளுக்கேற்ப வேறுபட்ட பொருள்களைத் தருவதற்கான வாய்ப்புகள் வழங்க்கின்றன. பால்,சாதி, சமயம், இனம்,பண்பாடு,மொழிவளம், இனக்கலப்பு,கூட்டுறவு எனப் பல்வேறு கோட்பாடுகள் சார்ந்த கூறுகளும் வாசிப்பில் அடங்குகிறது. பெண்ணிற்கான அடிப்படைக் கல்வியையும் அறிவு சுதந்திரத்தையும் நீண்ட யுகங்களாக மறுத்து வந்த நிலையில் இலக்கியப்பிரதிகள் எழுதுதல் வாசித்தல் என்பது ஆணாதிக்க மரபுகளுக்குட்பட்டதாகவே இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் பெண்கள் சீர்திருத்தவாதிகளின் பெண் படைப்பாளர்களின் இடையறாத முயற்சிகளால், வளர்ச்சியில் புதிய கோட்பாடு அலகும் தளங்களும் உருவானது. இந்தப் பெண்ணிய தளத்திலிருந்து இலக்கியத்தை அணுகுவது என்பது பெண்ணின் பார்வையிலிருந்து இலக்கியத்தையும் சமூக மேம்பாடுகளை அறிய முற்படுவதாகும்.

இந்தக் கோட்பாடுகள் தாய் வழிச் சமூகத்திற்கு உட்பட்ட பெண்நிலை,ஆண் தலைமைக்கு வாழத் தொடங்கியபெண்நிலை, உடல் உழைப்பு நடவடிக்கைகள், சங்க காலம் தொட்டுக் கிடைக்கிற கலைகளும் பெண்ணும்,பெண் வாழ்க்கை பற்றிய இதரப் பண்பாட்டுக் கூறுகள், சங்க காலக் கவிதைகளில் கண்டெடுக்கப்பட்ட பெண்கவிஞர்களின் கவிதைகளிலிருந்து சமகாலத்தில் எழுதுகிற பெண் கவிஞர்கள் வரையிலும் கோட்பாடுகளின தாக்கமும் கோட்பாடுகளுக்குப்பின்னால் இலக்கிய வகைமைகளில் பெண்களின் பங்கும் முக்கியமானதாகவே காலத்துடன் இணைந்து வந்து கொண்டிருக்கிறது.

மானுடவியல் கோட்பாடு அணுகுமுறை என்பது இருபதாம் நூற்றாண்டின் போர்களின் வழியாக நமக்குக்கிடைத்த இலக்கியக் கொள்கைகளாகும். 18 ஆம் நூற்றாண்டின் தொடர்ச்சியாக பிரஞ்சுப்புரட்சிக்குக்பிறகு நடந்த ருஷ்யப் புரட்சியும் இரண்டு உலகப் போர்களும் பல நாடுகளுக்கிடையே போர்களும் நம் படைப்புலகத்தை பெருமளவில பாதித்தது. மானுடவியல் ஆய்வுகளில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்ந்தது. புதிய புதிய அகழ்வாராய் ச்சிகளின் முடிவுகள் நமக்கு நம்பிக்கையளித்தது. மனித சமூகம் என்பது தன் வாழ்நாள் முழுக்கவும் போர்களுடனான,ஆக்ரமிப்புகளுடனான, ஆதிக்க சக்திகளுடனான முரண்களைப் பேணியே வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

மானுடவியல் வழியாக குறிப்பிட்ட மக்கள் குழுவின்,இனக்குழுவின். சாதியக் கட்டுமானத்தின், பால்நிலை சாரந்த பிரிவுகளின் மொத்த வாழ்வியல் கூறுகளையும் அவர்களின் பண்பாட்டுக் கலாச்சார விழாக்களின் வழியாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

மக்கள் தங்கள் இனக்குழுவின் மீது அன்பு பாராட்டுகிறார்கள். தங்கள் மேம்பாடுகளை தங்களின் போர்க்குணங்களை, நெடிய பாரம்பரியம் மிக்க தங்களின் மூதாதையர்களின் சடங்கு வழக்கங்களைப் பின்பற்ற நினைக்கிறார்கள். நமது சமூகத்தில் மதங்களின் ஆதிக்கம் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திவருவதை அறிவோம். அதன் வழியாக ஒவ்வொரு இனக்குழுவையும் மதம் சார்ந்த கட்டமைப்புக்குள் கொண்டு வந்து விடமுடியும் என்று மதபீடங்கள் நினைக்கிறது. இனக்குழுக் கலாச்சாரங்களை அழித்துவிடுவதின் மூலம் கலைகளை, தொன்மையான பாரம்பரிய சின்னங்களை பண்பாட்டு நடவடிக்கைகளை முற்றாக அழித்துவிடவும் முயற்சிக்கிறது..

நாம் அனுமதிக்கப் போகிறோமா

அல்லது அனுசரித்துக கொண்டு வாழப்பழக்கப்படுத்திக் கொள்ளப் போகிறோமா என்பதை பொறுமையுடன் ஒர் பார்வையாளராக இருக்கப் போகிறோமா அன்றியும் களத்தில் நிற்கப் போகிறோமா என்பதை இந்த மாநாடு முடிவிற்கு விடுகிறோம்....

நன்றி...வாய்ப்பளித்த “யாதுமாகி“ மாநாடு அமைப்பாளர்களுக்கும் பங்கு கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கிற அறிஞர் பெருமக்களுக்கும்..மாணவ மாணவியர் செல்வங்களுக்கும் நம்பிக்கையுடன் நன்றிகளை உரித்தாக்குகிறேன்..

இப்படிக்கு

இளஞ்சேரல்-கோவை-641103-99427 88486

 

 

 

 

 

 

 

 

 

 

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

“க.அம்சப்ரியாவின் “என் இரவு ஒரு தேநீர் கோப்பையாகிறது..” கவிதை நூல் குறித்து...



“என் இரவு ஒரு தேநீர் கோப்பையாகிறது“
க.அம்சப்ரியா- கவிதை நூல் குறித்து..
வாழ்க்கை
உன் கானகப் பயணம்
உன் சுயநலம்
யாரும் உன்னுடன் வரவில்லையென
இடைவிடாமல் சபிக்கிறாய்
அதன் போக்கில் ஊர்ந்து போகும்
சர்ப்பங்களை உன் பகைபோல்
கற்பனைத்து ஓலமிடுகிறாய்
மிருகங்களின் வனத்திற்குள்
உனக்கென்ன வேலையென்று
முறைத்துப் பார்க்கும் ஒரு
யானைக்கூட்டத்தை
உன் பகையாளர்களைப் போல் எண்ணி
பின் வாங்குகிறாய்
வழி மறிக்கும் விலங்குகள் யாவும்
தன் வாழ்வை நிச்சயப்படுத்திக் கொள்ளும்
பேராபத்தில் திகைத்தோடுகின்றன
தயவு செய்து கானகப் பயணியே
வெளியே வா
உன்னை வேட்டையாடத் தோதானவை
உன் மனித மிருகங்களே
நீ வேட்டையாடவும்தான்- பக் 69
   
         அம்சப்ரியாவின் கவிதைகளைப் பேசுகிற பொழுது அவருடைய நீண்ட நெடிய கவிதை உறவுகள் நினைவிலாடுகிறது. தமிழச்சூழலில் அம்சப்ரியாவின் இடம் அவருடைய கவிதைகளுக்குரிய இடம் பற்றியும் ஞாபகங்கள் போகிறது. எனக்கும் பொன் இளவேனிலுக் குமான கவிதை குறித்த உரையாடல்களில் அம்சப்ரியா இருந்திருக்கிறார். கவிதை,சிறுகதை,நாவல் உரையாடல் களிலும் அவர் இருந்திருக்கிறார்.கண்ணதாசன். மருதகாசி, வண்ணதாசன்,கலாப்ரியா வைரமுத்து, முத்துலிங்கம் அறிவுமதி,மரபின்மைந்தன் முத்தையா,பொன்னடியான், புலமைப்பித்தன்,நா.காமராசன்,தமிழன்பன்,அப்துல்ரகுமான் பிறகு நவீன கவிதைகளை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு தொண்ணூறுகளுக்குப்பிறகு நடந்த ராஜீவ் படுகொலைக் குப்பிறகுத் தமிழக்கவிதைச்சூழல் தமிழர்களுக்கு எதிராக வும் தமிழக்கவிதையில் தேசியமும் வன்முறை, இன வன்முறைகளுக்கு எதிராகவும் எழுதப்பட்டது. இப்படியாக தமிழ்காலத்தின் அரசியல் நிலவரையியல்கள் பொருத்து கவிதைகளில் பாடுபொருள்கள் மாறிமாறி வந்தது. இதில் நவீன பின் நவீன கவிதைகள் மற்றும் அதன் கவிஞர்கள் மட்டுமே காலத்தின் அசைவுகளையும் வரலாற்றின் அசைவும் மனித மனதின் அகபுற உணர்வுகளையும் எழுதினார்கள். வெறும் அழகியல் கூறுகளுடன் எழுதிய அரைமாடி மரமண்டைகள் சினிமாவுக்குப் பாட்டு எழுதப் போனார்கள். வேறுவழியில்லாமல் கறுப்புச்சட்டை அணிந்து கொண்டார்கள். அவர்களே அவர்களுக்குத் துக்கம் கொண்டாடிக கொண்டவர்களில் கறுப்புச் சட்டைக் காரர்களைச் சொல்லலாம். இலக்கியப் பிரதிகளை அவர்கள் வெறுக்கத்துவங்கிய பிறகு மக்களிடமிருந்து அவர்கள் அன்னியமானார்கள். சமகாலத்தில் பெரியார் குறித்த அக்கறையையும் கைகழுவிக் கொண்டார்கள். தங்களுக்குச் சௌகரியமாக ஆளும் திராவிடக் கட்சிகளு டன் இணைந்து பொதுப்பணிக்கான்ட்ராக்ட்களில் இணை ந்து கொள்வதோடு சரி அவர்களுடைய அரசியல் இயக்க ங்கள். அவர்களுக்கு வயதும் வழக்குகளும் மொழியின் மீதும் இலக்கியப்பிரதிகளின் மீது ரசனையும் இல்லாமல் போனதே அவர்கள் காற்றாக மாறியதற்குக்காரணம்.
       திராவிட இலக்கியத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்று பெரியாரையும் அண்ணாவை பேருந்து நிலையக் குறியீடுகளாக மாற்றியதுதான். அதிலும் இரண்டு வகை அண்ணாக்கள் எல்லாப் பேருந்து நிலையத்திலும் இருக்கி றார்கள் ஒரு அண்ணா திமுக அண்ணா இனி ஒன்று அதிமுக அண்ணா. மற்றவர்களின் அண்ணாவை மற்றவர் உபயோகப்படுத்தப்படமாட்டார்கள்.
அம்சப்ரியாவின் கவிதைகளுக்கும் திராவிட இலக்கியத் திற்கும் என்ன சம்பந்தம். அவர் இந்த வகைமைகளை யெல்லாம் தன் கவிதைகளில் கட்டுரைகளில் படைப்பு களில் கொண்டுவந்தவர்கள். அரசியல் நிலைபாடுகள்தான் ஒரு படைப்பாளியின் படைப்புகளில் வரும் மாற்றங்கள். ஒருவன் இனியும் தன்னம்பிக்கை குறித்தோ உடல் ரத்த தானம் குறித்தோ முதியோர் இல்லம் குறித்தோ இருபது ருபாய் கவிதைகள் எழுதுகிறவனின் உலகம் அவன் உழலும் சாக்கடையில்தான் இருக்கிறது எனலாம். தன் சாதிக் கவிஞனைத்தவிர வேறொரு சாதி கவிஞனுக்கான அங்கீகாரத்திற்காக பல எண்ணற்றக் கவிஞர்கள்  கடற்கரைப் பழம் பெரும் புலவர்களின் சிலைகளுக்கரு கில் வரிசையில் காத்திருக்கிறார்கள். இந்த சாதியில் பிறந்தமைக்கும் பெருமையும் கீழ்மையும் கொண்டு தன்னை வறுத்தி மெய்வறுத்தம்பாராமல் கண் துஞ்சாமல் இரவு பகல் உழைக்கிறார்கள். பத்திரிக்கை அலுவலகங் களை மாற்றுகிறார்கள். தேசியப்பத்திரிக்கைகளில் சேர்ந்தி ருந்தால் மாநில சுயாட்சி அவசியமற்றது என்கிறார்கள். மாநிலப் பத்திரிக்கைகளில் சேர்ந்திருந்தால் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் தமிழுக்குமாய் உழைக்கிறார்கள். பாவம் அவர்கள் வேறு என்னதான் செய்யமுடியும்.
அம்சப்ரியாவின் இனியொரு கவிதையை வாசிக்கலாம்.
கடலின் கோப்பை நிரம்பி வழிகிறது
கோப்பை நிரம்பி வழிகிறது
துயரங்களில் சிறிதும் இனிப்பற்ற
அத்திரவத்தில்
துளியும் கசப்பில்லை
மீன்களின் சுவாசம்
அலைகளை மீறி
கரைசேர்கிறது
உப்புக்காற்றின்
வெப்பச் சூட்டில்
குளிர்ந்த துயரம்
மென் பனிக்கட்டியாகிறது
ஒரு கோப்பை நிறைய
துயரத்தை
விருந்தாக்கும் யுவதி
கசப்பின் சிநேகிதியாக்குகிறாள்
நள்ளிரவில் சூரிய உதயத்தை
எதிர் கொள்ளவியலாமல்
கடல் தற்கொலையாகிட
கோப்பை கவிழ்ந்து
ஆடையைச் சரிசெய்து கிளம்புகிறாள்
முற்றிய அச்சிறுமி--44

இந்த அரசியல் டிஸ்கோ,கரேத்தே,பிரேக்,டிஸ்கொதோ, பஃப். டேட்டிங், சாட் பாலே நடனம் எதுவும் தெரியாதவர் அம்சப்ரியா. அவருக்குத் தெரிந்தது தமிழும் கவிதையும் கவிதையில் அழகும். வெள்ளந்தியான மனிதர்களும்தான். இதெல்லாம் சந்தையில் செல்லுபடியாகுமா. அவர் எங்களைப் போல குடிக்கப்பதும் இல்லையென அறிந்தேன். சந்தைக்குத் தேவை பலசரக்கு சாமானங்கள். அல்லது பலசரக்குச் சாமானம் விற்கிற கடையில் வேலை செய்யவேண்டும். தமிழாசிரிர்களால் முடியுமா. இந்த ஐம்பதாண்டுகாலத்தில் அதிகம் கேவலப்படுத்தப் பட்டவர்கள் பிராமணர்கள். அடுத்து தமிழாசிரியர்கள். க.அம்சப்ரியாவிற்கு அனுசரனையான கட்டுரையை எந்த விமர்சகனும் எழுதியதை நான் வாசித்த நினைவிலில்லை.
கவிதைகள் இரண்டு நிலைகளில் வாசிக்கப்படுகிறது. நூல் வெளிவருகிற இடம், பொருள், ஏவல், ரிஷிமூலம் நதிமூலம் எல்லாம் பார்த்துதான் வாசிக்கப்படுகிறது. ஒவ்வொரு தளத்தின் மேஸ்திரிகள் அவர்களின் சித்தாள்கள், வாத்தியகாரர்கள், மோளஸ்தர்கள், பெட்டிக்காரர்கள், பந்தக்காரர்கள், பட்டாசுக்காரர்கள், ஒருதலைவிருப்பதாரிகள், உறுமி வாசிக்கிற பத்திரிக்கைகளில் பணிபுரிகிறவர்கள்.  நேர்காணல்கள் தருவதற்கு ஆலாய்ப் பறக்கும் நடனமாடும் நடனசிகாமணிகள்,
நவீன கவிதை உலகத்தை கடந்த பத்தாண்டுகளில் “வளவுகளாக்கிய பெருமை தற்கால கவிதை விமர்சகர் களுக்குண்டு. பொதுவாகப் பட்டியல் போடுவதே கூட சிலரைத் தவிர்ப்பதற்குத்தான் என்பதை நானே ஒரு ஆளுமை பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஒரு மூத்த ஆளுமை சொல்கிறார் “வத வாதன்னு தொகுப்புகள்..குவியுது.“ ஏதோ இவர் பாராபட்சம் பார்க்காமல் அப்படியே வாங்கிக் குவித்து அதற்கு விமர்சனம் அல்லது அறிமுகம் எழுதி அந்தக் கவிஞனுக்கு மரியாதை செய்து விட்டது போல..
அட பன்னாடையே.. அவன் உணர்வை எழுதித்தானே ஆவான்.. அவன் சொல்ல வேண்டியதை அவன் மரணத்திற்கு முன்பாகச் சொல்லத்தானே செய்வான்..  ஏதோ நீதான் பதிப்பகத்தில் சிபாரிசு செய்து ஆள் குறித்து பிடித்து விட்டது மாதிரிப் பேசுகிறாயே...
இந்தக் கிரிக்கெட் கமெண்டரி காலரியில் பழைய வீர ர்கள் அன்றைய ஆட்டத்தைப் பற்றிய விவரணைகள் பேசுவார்கள். இவர்கள ஆடிய காலத்தில் ஒரு வெங்காயமும் செய்யாதவை உலகத்திற்கே தெரியும். ஆனால் தற்பொழுது ஆடுகிற ஆட்டக்காரன் குறித்தும் ஆட்டம் பற்றியும் இல்லாத டெக்னிக்குகளைச சொல்லி ரசிகர்களைக் கடுப்பேற்றுவார்கள். அப்படித்தான் தனக்கே விளங்காத சொற்கள் கண்டு அலர்ஜியாகி அந்த நூலையே தவிர்த்து விடுகிறார்கள்..குறிப்பிட்ட கவிஞர்கள் குறிப்பிட்ட பதிப்பகங்கள் வெளியிடுகிற கவிதை நூலை உடனடியாக வாங்கிப் பெற்று எழுதி சிலாகித்துத் தள்ளுகிறவர்கள்.சிலர் எழுதுகிற கவிதைக்கு மட்டும் ஒருதலைவிருப்பம் தெரிவிக்கிற ஜண்டுபாம் கவிதை வாசகர்கள் பேக் ஐடிகள். “உங்க நூலுக்கு அவரு விமர்சனம் எழுதியிருக்காரு பாத்தீங்களா..“ யார் அவரு..என்றது எந்த நூலுக்கு என்று கேட்கிற ஏர்வாடி ஸ்பைடர் மேன்கள். ஆகாயத்தாமரைகள் போலக் குவிந்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் கிழட்டு விமர்சகர்களால் கவிதை நூல்கள் விற்பனையாகிறதா வென்றால் அதுதான் இல்லை. “கவிதைன்னா என்னதாண்டா சொல்லித்தொலைங்கடா“ வென்றால்..ஹிஹி..என்பான். பிறகு எதாவது தொலைக் காட்சியிலோ பத்திரிக்கை பேட்டியிலோ ஊர் உலகத்தில் இல்லாத வெள்ளைக்காரப் பெயர்களைச் சொல்லிப் பைத்தியம் பிடிக்கவைப்பான்கள்.   தமிழ்ப்படங்களில் ரவுடிகள் எல்லாம் கடற்கரைக் குப்பத்தைச் சார்ந்தவர்கள்தான் என நிறுவிவருகிற நிலை இருப்பதை அறிவோம். கவிதை உலகிலும் குப்பத்து ரவுடிகளைப் போல ரவுடிகள் அல்லது ரவுடித்தனமான கவிதைகள் தான் தரமான கவிதைகள் என்பதை நிறுவுவதற்கு கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்,  சுகுமாறன். சமயவேல், ஆனந்த், யுவன் சந்திரசேகர், பிரபஞ்சன், விக்ரமாதித்யன் உள்ளிட்ட அவர்களுக்குக் கீழ் சேவகம் செய்கிறவர்களைத் தவிர கவிதைகளில் என்ன பரிமாணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எந்த நிலத்திலிருந்து எந்தப்புதிய குரல் பேசுகிறது என்பதும் தெரியாது. எல்லமே..அப்படிங்களா..அப்படியா. .தான்..ஓஹோ வென்று  பீ மிதித்த காலைப் பார்ப்பது மாதிரி அந்தக் கவிஞனிடம் நடந்து கொள்வார்கள். தவணைத் திட்டத்திற்கு ஆட்களைக் கவருகிற விதமாக எழுதி மேலேத்தி விடுவார்கள். சனஞ்சேராத, சாதி சேராத, சாதியில் சேர்த்திக் கொள்ளப்படாத சில பைத்தியகாரக் கவிஞர்கள் பெப்பளத்தானுகளைப் போல வாழ்நாள் முழுக்க எழுதிக் கொண்டும் நூல்களை சிறுபத்திரிக்கைகளை நடத்திக் கொண்டே குண்டி வத்திச்சாக வேண்டியதுதான்.
அந்தக் காலத்தில் பாரதி, பாரதிதாசன் புதுமைப்பித்தன் ந.பிச்சமூர்த்தி, செல்லப்பா, வறுமையில் செத்தார்கள் என்றால் நாடே சிரமப்பட்ட நாட்கள். இன்றைய காலத்திலும் அது நிகழவேணடுமா. மிகப்பெரும் தமிழ்ப்பரப்பை தமிழக்கவிதையின் பரப்பை முப்பது நாற்பது பேர்தான் நிர்ணயிப்பதா. நான்கைந்து இடைநிலை இதழ்களும் ஒரு சில தொலைக்காட்சிகளும்தான் முடிவு செய்வதா தமிழக்கவிதையை. இது குறித்து எந்தக் கண்டனமும் தெரிவிக்காமல் சுகர் பிபி கொழுப்பு மாத்திரைகளும் தூக்கமாத்திரைகளையும் எந்த நேரமும் சாப்பிட்டுத் தூங்குகிற வயோதிகத் தமிழக்கவிகளை விமரிசகத் தூதர்களை நம்பிக் கொண்டிருக்கலாமா.
கவிதை குறித்த விமர்சனங்கள் அறிமுகங்கள் அவசியமா அல்லது அவசியமே இல்லை என்பான்கள். நல்ல வாசகன் எத்தனை யுகமானாலும் கண்டு கொள்வான். என்பான்கள். அவனுடைய கவிதைகள் மீட்டெடுக்கப் பட்டுவிடும் என்றுதான் கருத நினைக்கிறார்கள். அது இந்தக் கேசவமூர்த்திகள் இருக்கும் வரை நடக்காது. நம் திடுமங்களும் பறைப்பலகைகளும் அணலில் காய்ந்து கொண்டேயிருக்க வேண்டும் நண்பர் அம்சப்ரியா அவர்களே..கவிதை விமர்சகர்கள் எல்லாம் பெரு நகரத்தின் ஓட்டல்கள் முன்பு இருக்கிற எச்சிலைத் தொட்டிகளுக்கருகில் அமர்ந்திருக்கிறார்கள் அல்லது அங்குமில்லை. நான் அறிந்த வகையில் குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி,ராகு கேது சனீஸ்வர பகவான் கோவில் களின் தூதுவர்களாக டிராவல் ஏஜென்சிகளாக மாறியதாக கேள்வி. எல்லாம் இந்த இரண்டு ஆண்டுகால உழைப்பின் பயண். சிலர் ராசி பலன்கள் தொலைக்காட்சிகளுக்காக எழுதிவருகிறார்கள், எனும் தகவல்கள் வந்துள்ளது. எங்கிருந்தாலும் வாழ்க..அவர்கள் அரசியல் வெல்லட்டும். அவர்களின் ஆக்கங்கள் வெல்லட்டும்..அவர்கள் நினைத்து விரும்பிய புகழும் செல்வமும் கொழிக்கட்டும்.. க.அம்சப்ரியா போன்ற தமிழாசிரியர்களுக்கும் ஏனைய பிற மொழிப் பைத்தியக்கவிஞர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கட்டும். தக்க தண்டனை கிடைக்கட்டும்..“இறைவா பரம்பொருளே..ஈசனே..வேலவா..விண்ணவா..“
“வாழ்க தமிழ்..வெல்க தமிழ்..
எனினும் வளர்ந்த நாடுகளில் அல்லது வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகளில் கவிதை உள்ளிட்ட இலக்கியப்படைப்புகள் பெறுகின்ற அங்கீகாரம் நமக்கு ஆச்சர்யம் தருபவை. அந்த இலக்கியப்பிரதி நிச்சயம் ஏதாவது ஒரு புதிய செய்தியை மறுமலர்ச்சிக்கான வழியைத் தெரிவித்து இருக்கும் என்றுதான் அங்கீகரிப்பார் கள். ஆனால் வளர்முக நாடுகளில் இலக்கியப் பிரதிகளுக் குள்ள நிலையென்பது வேறு. தமிழில் நிலவுகிற தரித்திர காலத்தில் ஒர் கவிஞனின் தொகுப்புகள் மெஜாரிட்டி இருந்தும் வெற்றிபெறாத மசோதாக்கள் போலத்தான்.
அம்சப்ரியாவின் இந்தக்கவிதை இந்தக் காலத்தின் அபுனைவை விமர்சிக்கிறது.
துரோகம்

அவன் அந்த இடத்தில்தான்
தன்னை அச்சுறுத்திய
அதனைக் கடந்து போனான்
ஒவ்வொரு முறையும்
அவ்விடத்தைக் கடக்கிறபோதெல்லாம்
படம் எடுத்தாடுகிறது
இல்லாத சர்ப்பம்..-பக் 45
     
கவிதை உலகளாவிய பாடுபொருள் கொண்டவை. அதன் மொழியும் நடையும் உணர்த்தும் கருப்பொருளும் தனி மொழிக்கோ தனி அடையாளத்திற்காகவோ அல்ல. அதன் உள்ளார்ந்த பொருளும் அதன் செயப்பாட்டு வினையும் காட்சிகளும் உலகின் நிலப்பரப்பின் அத்துனை செயல்பாடுகளையும் கவிதை உள்வாங்கியே பேசுகிறது. தமிழில் எழுதப்படுகிற கவிதையின் காலமும் உணர்வும் தமிழருக்கானது மட்டுமல்ல. கவிஞன் தமிழனுக்காகவும் தமிழ் மொழியின் பலத்தைக் காட்ட மட்டுமே எழுதுவதில்லை. தமிழில் உலக உயிரிகளின் இயல்புகள் பேசப்படுகிறது என்றுதான் நாம் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
அம்சப்ரியாவின் கவிதைகளை எத்தனை பருவங்களாக வாசிக்கிறேன் என்பது நினைவிலிருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி,தொழில் வளர்ச்சி,தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி உள்பட பல்வேறு காலநிலைகளின் சூழல்களில் வாசித்து வருகிறேன். தமிழ்நாட்டில் அதிக காலமாக கவிதை எழுதிவருகிறவர்களில் அவரும் ஒருவர். மிக அதிக காலமாக கவிதைகள் என்ற பெயரில் எழுதிவருகிற வர்கள் என்ன எழுதுகிறார்கள் எப்படி எழுதுகிறார்கள் என்பதை என்னுடைய முந்தைய கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன். கவிதைகளை நேசிப்பவர்களின் பட்டியலில் முதலில் அவர் வருகிறவராகவே அறியப் பட்டிருக்கிறார். இதற்கு அவர் பெற்ற ஏழு உயரிய விருதுகள் சாட்சி.
பொள்ளாச்சி இலக்கிய வட்ட நூல் வெளியீட்டு விழாவில் பேசிய உயர்திரு.எட்வின் அய்யா அவர்கள் அம்சப்ரியா சரியாக அங்கீகரிக்கப்பட வில்லையென்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கவிதை அவருக்கு உரிய அன்பையும் தகுதியான இடத்தையும் வழங்கியிருக்கிறது என்பதை நான் உள்ளன் போடு எட்வின் ஐயாவிற்குச் சொல்லிக்கொள்வேன். சில தொகுதிகளில்தான் வாக்கு வங்கி சரிந்திருக்கிறது. அது சரிசெய்யப்படவேண்டுமென்றுதான் இப்பொழுது துடைப்பத்தை எடுத்திருக்கிறோம்.
அம்சப்ரியாவின் கவிதைகளில்தான் குழந்தைமையின் குழந்தைமையும் அழகுணர்ச்சியின் அழகுணர்ச்சியும் அன்பின் அன்புடைமையையும் நிலவியல் காட்சிகளின் நிழல்களும் பரிமாணங்களையும் காணமுடியும். அதன் நிறங்களில் அம்சப்ரியாவின் அனுபவங்கள் தென்படும். நெடிய அனுபவமிக்க சொற்களாலானது அவருடைய கவிதைகள்.
விளையாட்டு மைதானத்தில்
தொலைத்த தன் ஒரு ருபாயைத்
தேடிச் சலித்த குழந்தை
விசும்பலோடு நகர்ந்ததை
எதிர்கொண்ட அம் மைதானம்
ஒரு பணம் காய்க்கும் மரத்தையும்
விரும்பியபோது
காசுகளைத் தரும்
ஜாமின்ரி பாக்ஸ் ஒன்றையும்
குழந்தையின் கனவுக்கு அனுப்பி வைத்தது
படுக்கையெங்கும்
காசுகள் நிறைய நிறைய
தூக்கத்தில்
சிரித்துக் கொண்டேயிருந்தது குழந்தை!- பக்-54

       குழந்தைகளின் இழப்புகள் பற்றிய நம் சிந்தனை கள் நம்மில் எப்படி உதிக்கிறது. நாம் நம்முடைய எதிர்பார்ப்பில் குழந்தைகளின் இழப்புகளை எப்படி மதிப்பீடு செய்கிறோம். நம் அவர்களுக்குரிய அவர்கள் வேண்டுகிற இறைஞ்சுகிற பொருட்களை நாம் வாங்கித் தந்திட முடிகிறதா நம்மால். ஒரு ருபாயை மட்டுமா குழந்தை தன் வாழ்நாளில் தொலைக்கிறது.
அம்சப்ரியாவின் கவிதைகளின் மீது குற்றம் குறைகளைச் சொல்லமுடியாதபடியாக எழுதியிருக்கிறார். மிகுந்த அடர்த்தியும் சொல்லாக்கமும் சிறுகதைகளின் பாணியி லும் அமைந்திருக்கிறது. அதனால்தான் தமிழ் கூறும் நல் உலகத்தின் மீதும் அம்சப்ரியாவின் மீதான கவனம் திரும்ப வேண்டுமென்பதற்காக சமகால இலக்கிய அரசிய லையும் பொருளியல் அரசியலையும் முன்வைத்திருக்கி றேன்.
கவிஞனின் சொற்கள் டண்டணக்காவிற்கு ஆடுதல் அல்ல. அவன் டான்ஸ, பாட்டுப் போட்டிகளுக்கான ஜட்ஜஸ் அல்ல. அவன் இந்த சமூகத்தில் வாழ்கிறவன். ஒரு ஐந்து வயது குழந்தையின் மேதமை இன்னும் வளர வேண்டும் என்று துன்புறுத்துகிற நடுவர்களைப் போலத்தான் நம் இலக்கியப் பிதாமகர்கள் என்று பீத்திக் கொண்டிருக்கிற அடிமாட்டு யாவாரிகள் கவனத்திற்குச் செல்லவேண்டும் என்பதற்காக கொஞ்சம் மசாலா சேர்க்கப்பட்டுள்ளது. ஐந்து வயது குழந்தையிடம் கலைகளின் நுட்பத்தை, சாரீரத்தை, அழகை. பாவனையை, வேதியியலை, புவியலை, அரசியலை, கண்க்கியலை, வேதபரிபாஷபுரணத்தை,இன்னும் இன்னும் இன்னும் என்று எத்தனை சித்ரவதையை நாம் செய்கிறோம். தூய முதல் தர இலக்கியமென்று குப்பைக் கூளங்களை நிறுவுறுகிற தடிமாடு மலைமாட்டு முண்டங்களிடம் நாம் சரியானவற்றை, செவ்வியல் தன்மை வாய்ந்த அம்சப்ரியாவின் கவிதைகளைப் போன்ற கவிதைகளையும் கவிஞர்களிடமும் எதிர்பார்ப்பதில் தவறொன்றுமிருப்பதாக எனக்குப்படவில்லை.
ஆகவெ இப்பொழுது பாராட்டும் பகுதி...எங்கே எல்லோரும் நான் சொல்வதைத்திருப்பிச் சொல்லுங்கள்..
வாழ்க தமிழாசிரியர்கள்..வெல்க தமிழ்..வளர்க திராவிடக்கட்சிகளின் ஒற்றுமை..பெரியார் அண்ணா புகழ் ஓங்கட்டும்..புரட்சித்தலைவர் நாமம் வாழ்க..டாக்டர் கலைஞர் நாமம் வாழ்க...மக்கள் முதல்வர் வாழ்க..தமிழக முதல்வர் வாழ்க... தமிழ்நாட்டு குருமகா சன்னிதானங்கள் வாழ்க...மடங்கள் வாழ்க..பிராமணர்கள் வாழ்க. மலையடிவாரங்கள் வாழ்க.....
தேவநேயப் பாவாணர் வாழ்க..மறைமலையடிகள் வாழ்க. உ.வே சா. வாழ்க..ஜீவா வாழ்க..குன்றக்குடி அடிகளார் வாழ்க..மபொசி வாழ்க, மு.வ.வாழ்க. சி.பா. ஆதித்தனார் வாழ்க..சரத்குமார் வாழ்க..சத்யராஜ் வாழ்க. மணிவண்ணன் வாழ்க..தி க  சி வாழ்க வ.வே.சு ஐயர் வாழ்க..
ஆர்.கே..சிதம்பரம் செட்டியார் வாழ்க.. பத்து மாநகராட்சிகள் வாழ்க..மேயர்கள் வாழ்கள் கவுன்சிலர்கள் வாழ்க..குப்பை டிராம்கள் வாழ்க..துப்புறவாளர்கள் வாழ்க..
குப்பைகள் வாழ்க..குடும்பிகள் வாழ்க..இலக்கியம் வாழ்க..
அவர் வாழ்க இவர் வாழ்க.. அட எல்லாருமே வாழ்க வாழகப்பா.....
வெளியீடு

பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
பில்சின்னாம்பாளையம்
சமத்தூர்-642 123
பொள்ளாச்சி
விலை ரூ-70- பக் 95

90955 07547
98422 75662