கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடன்
சந்திப்பு- சில நினைவலைகள்
கோவையில் பிரதிமாதம் முதல் செவ்வாய்
அன்று ஊஞ்சல் இலக்கிய அமர்வு கூடும். இரவு ஏழுமணிக்குத் துவங்கும் நிகழ்வில்
முக்கியமாக கவிதை வாசித்தல், வாசிக்கப்பட்டக் கவிதைகளின் மீது உரையாடல் நடக்கும்.
பிறகு நூல் அறிமுகம். நூலாசிரியரின் ஏற்புரை, விவாதம் என நீளும் உரையாடல் எட்டரை
மணிக்கு முடியும். சென்ற செவ்வாய் அன்று நடைபெற்ற
அமர்வில் இளங்கவி, மீனாசிவம், இளங்கோவன், அகிலா, கவிதைகள் வாசித்தார்கள்.
நூல் விமர்சனம் தரவேண்டிய நண்பர் வரமுடியாத சூழல். வாசித்த கவிதைகள் மீதான
கலந்துரையாடல் சிறப்பாக நடந்தது. சிறந்த பேச்சாளரான அகிலாவின் பெண்ணியம் சார்ந்த
கவிதையும் மீனாசிவம் வாசித்த இரு கவிதைகளும் முக்கியமானவை. இளங்கோவன் மரபுக்
கவிதையை அவருக்கே உரிய அழகான தமிழ் உச்சரிப்புடன் வாசித்தார். அவர் கருத்துருவாக்க
நிலையிலிருந்து அழகிய காட்சி சித்தரிப்புகளுக்குள் தனது கவிதையின் மொழியை
மாற்றியிருந்தார். இளங்கவியின் கவிதை புதுக்கவிதையின் சொல் வகையில் இருந்தாலும்
கருத்தும் சிறு வெளிச்சம் தருபவையாக உள்ளடக்கம் இருந்தவை. மீனாவின் குரல் கவிதை
குறித்த விமர்சனத்தில் மரபின் மைந்தன் முத்தையா சங்க கவிதையின் சாயல் உள்ளதாக
சொன்னார்.
மூத்த தமிழறிஞர் அ.சா. ஞானசம்பந்தன் அவர்கள் அவருக்குப் பார்வை
குறைந்திருந்தாலும் குரல்களை வைத்து உடனே அவர்களுடைய பெயரைச் சொல்லி அழைப்பது
நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். அவரிடம் எப்பொழுதும் டிரான்சிஸ்டர் வைத்திருப்பார்.
செய்திகளின் மூலமாகத்தான் அனைத்தும் தெரிந்து கொள்வார். இப்பொழுது அலைபேசியின்
செயல்பாடு வந்தபிறகு குரல்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வந்துள்ளதை இந்தக் கவிதை
நமக்கு உணர்த்துகிறது என்றார். குரல்கள் அதிகமாக ஒலிக்கத்துவங்கியருக்கிற காலம்
இது என்றார்.
இந்த சந்திப்பின் மூலமாக புதியதாக ஒரு நிகழ்வு அறிமுகம் செய்திருந்தோம்.
ஒர் அனுபவம்-ஒரு வாசிப்பு- ஒரு சந்திப்பு என்னும் வகைமையில் பங்கேற்பாளர்கள்
ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். இதில் தென்றல் ராஜேந்திரன்
தான் வாசித்த ஜெயமோகன் எழுத்துரு சார்ந்த கட்டுரையின் மீது சில விமர்சனங்களை
முன்வைத்தார்.
கவிஞர் இளங்கவி பேசும் போது, மாணவர்கள் தங்கள் தமிழறிவு சார்ந்த
செயல்பாடுகளின் மீது கொண்டவர்களுக்கு நாம் எதாவது ஒரு அமைப்பு அல்லது பயிலரங்கம்
ஏற்பாடு செய்யவேண்டும் அதன் மூலம் தமிழிலக்கியத்தின் மீது பற்றுள்ள மாணவ மாணவிகள்
தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவும்
என்றார். இதற்கு பேராசிரியர்கள் கந்த சுப்பிரமணியம், து.இளங்கோவன் சில யோசனைகளை
முன்வைத்தார்கள்.
வாசிக்கப்பட்ட கவிதைகள் மீது
உரையாடலில் தென்றல் ராஜேந்திரன், இளையநிலா ஜான்சுந்தர்,கந்த சுப்பிரமணியம்,
கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வு நூல் விமர்சனத்திற்குச் சென்றபோது
நண்பர் வரவில்லை. மௌனம் சூழ்ந்த இரவின் குளிர் இறுகத் துவங்கியது. அப்பொழுது நான்
“ஒரு சிறுகதை சொல்லலாமா“ என்ற பொழுது ஊஞ்சல் அமர்வில் பங்கேற்ற நண்பர்கள் வரவேற்று
கதை சொல்ல அனுமதியளித்தார்கள். நான் தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கிற கதையின்
சுருக்கத்தை அல்லது முழுமையான கதையைச் சொல்கிறேன்.
“நேந்து கிடா“ கதையின் தலைப்பு.
ஊரில் ஒரு வளவு என்று சொல்லப்படும்
இனக்குழு ஒன்று சேர வாழும் பகுதி. தங்கள் குல தெய்வத்திற்கு ஒரு ஆட்டுக்கிடாவை
நேர்ந்து விடுகிறார்கள். அந்தக் கிடாவுக்குத் தோதாக மற்ற குலக்குடும்பம் மேலும்
ஒரிரு கிடாய்களை நேர்ந்து விட கிடாக்குட்டிகள் அந்த வளவின் சிறுவர் சிறுமிகளுடன்
ஒன்றாக வளர்கிறது. குழு தெய்வத்தின் நோன்பு சமயம் யாராவது ஒரு குலத்தின் பெரியவர் காலமாகிவிட
அந்த நோன்புப் பண்டிகை நின்று போய் கிடாவெட்டு தடங்கலாகிறது. இப்படியாகவே மூன்று
வருடங்கள் தங்கள் குலதெய்வத்திற்கு நோன்பும் கொடையும் செய்ய முடியாமல்
போய்விடுகிறது. அந்தக் கிடாய்கள் நன்கு வளர்ந்து சிறுவர் சிறுமிகள் வாழ்வின்
உடன்பிறந்த ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. நேர்ந்த கிடாக்கள் இந்த வளவின் சிறுவர்
சிறுமிகள் என்ன சொன்னாலும் கேட்கும். ஏவும் சில வேலைகளைச் செய்யும். நேராக
நடக்கும். மரத்தில் ஏறி காய்கள் பறித்துப் போடும். தண்ணீர்க்குடங்கள் சுமக்கும்.
குதிரைகள் போல் நிற்கும். கிடாய்கள் சொன்னபடி சண்டைகள் போட்டுக்கொள்ளும்.
ஒரு சூழலில் குலப் பெரியவர் இந்த
ஆண்டு எந்தக் காரணம் முன்னிட்டும் நோன்பு கொடை விழாவைத் தள்ளிப்போடுவதில்லை. என்ற
முடிவுடன் திருவிழா கொண்டாடப்படுகிறது. மேளதாளம் வானவேடிக்கை ஆட்டம் பாட்டம் என்று
ஊர் மெச்ச மற்ற குலங்கள் மெச்ச திருவிழா நடந்து முடிகிறது. அந்த நேந்த கிடாய்கள்
வெட்டப்படுகிறது. திருவிழா நடக்காது நம் தோழர்களான கிடாய்கள் வெட்டப்படாது என்று
நம்பிக்கொண்டிருந்த சிறுவர் சிறுமிகளுக்கு இந்தச் சம்பவங்கள் பெரிய
அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் சோகமயமாகிறார்கள். தங்கள் கிடாய்கள் உள்பட பல
கிடாய்கள் வெட்டுப்பட்டிருப்பதும் ஆட்டின் வாயில் ஒரு கால் கவ்வக் கொடுத்து கண்கள்
திறந்திருக்கிற நிலையில் தங்கள் தெய்வத்தைக்காண்பதாக பலிபீடத்தில் இருக்கிறது
ஆட்டின் தலைகள். ரத்தம் தொட்டுக் குலப் பெண்கள் ஆண்கள் பொட்டிட்டுக் கொள்கிற போது
அந்தச் சிறுவர் சிறுமிகள் பொட்டிடவில்லை.
ஆடுகள் பெரும் மைதானத்தில் கூறு
போட்டு குல மக்களுக்குக் கறி பகிர்ந்தளிக்கப்படுகிறது. பிறகு இரவு விழுகிறது.
ஆங்காங்கு அடுப்புகள் பற்றவைக்கப்பட்டு வளவு எங்கும் புகைகளும் மசாலா அரைக்கிற
மணமும் ஊரையே தூக்குகிறது. உறவுப் பெண்களின் பேச்சொலி, சாராயமருந்திய சில குடிகார
ர்களின் சத்தம், ஆட்டம். ஆங்காங்கு ஒலிக்கிற தப்பட்டைகளின் ஒலி..கிடாய் வேக
ஆரம்பிக்கிறது. வேகத் துவங்குகிறது. நேரம் போகிறது. போகிறது. கறி வேகவே இல்லை.
கறிவேகாமல் நீரும் மசாலாத் துவையலும் சுண்டி சுண்டிப் போக மீண்டும் மக்கள்
வேகவைப்பதற்காக பல பொருட்களை உள்ளே போடுகிறார்கள். செருப்புத் தோல் துண்டு. இரும்புத்துண்டு,
சாராயம். வாழைப்பழத்தோல் போடுகிறார்கள். இருந்தும் கறிவேகவில்லை.
வளவு மக்கள் கறிவேகாததால் ஏதே தெய்வக்குத்தம் என்னவோ என பயம்
கொள்கிறார்கள். பசியால் துடிக்கிறார்கள். பண்டிகைக்கு அழைக்கப்பட்ட உறவினர்கள்
பசியால் துடிக்கிறார்கள். மது அருந்தியவர்கள் உணவு கேட்டு சமைக்கும் பெண்களை
திட்டுகிறார்கள்.
சிறுவர் சிறுமிகள் மகிழ்வு
கொள்கிறார்கள். ஒருவழியாக இரவு நீண்டு பசி உயிரைக் கொல்வதால் ஆனவரைக்கும் வெந்த
ஆட்டுக்கறியைச் சாப்பிடத் துவங்குகிறார்கள். இரண்டுநாள் பண்டிகை அலைச்சல்.
ஆடியாடிக் களைத்த களைப்பு. மக்கள் தூங்கிக் கழிக்கிறார்கள். வளவில் எங்கும் மக்கள்
தூங்கி தங்கள் உடல் சோர்வைப் போக்குகிறார்கள்.
மூன்றாம் நாள் மஞ்சள் நீராட்டு.
சந்தனக் காப்பும் கட்டிய கங்கணமும் கழட்டப்பட்டு கிணற்றில் போடப்படும். அன்று
தங்கள் மாமன்மார்களுக்கு மரியாதை செய்யும்நாள். மணமுடித்துக் கொள்கிற பந்தம் உள்ள
குல மக்களுக்குச் சீர் செய்து பரிபாலனங்கள் செய்து அவர்கள் வயிறாற சோறு பொங்கும்
சடங்கு. தங்கள் அழைப்பின் பேரில் வந்து கலந்து கொண்டு சீரும்சிறப்பும் செய்து தங்களின் திருவிழாவில் பங்கு கொண்டு பெருமை
சேர்த்த மாமன் மச்சான் முறையினருடன் மஞ்சள் நீராடி தங்கள் அன்பைத் தெரிவிக்கிற
முறைமை சடங்கு.. பல்லாண்டுகளாகத் தொடர்கிற மனித உறவின் இனிய அம்சம்.
வளவு மக்கள் மஞ்சள் நீராடிக் கொண்டு
தங்கள் வளவு முழுக்க கோயிலுக்குப் போகிறார்கள். தங்கள் கோவில் திருவாபரணப்
பொருட்களை சரியாகச் சேகரித்து தங்கள் குலப் பெரியவர்களின் வீடுகளுக்கு
அனுப்பிவைக்கிறார்கள். இந்தப் பணிகள் நடைபெறுகிற சமயங்களில் கோவில் பீடத்திலிருந்த
தங்கள் சாமிகள் பீடத்திலிருந்து எடுக்கப்பட்டு களவு போயிருப்பதை அறிகிறார்கள்.
அதிர்ச்சியடைகிறார்கள். தங்கள் சாமிகள்
எங்கே போனது. என்று தேடுகிறார்கள். பலர் இது தெய்வக்குற்றம். நாம் ஏதோ தவறு
செய்திருக்கிறோம். அதுதான் சாமி கோபம் கொண்டு எப்படியோ வெளியேறிப் போய்விட்டது.
அதனால்தான் என்னவோ கறியே வேகவில்லை என்பதாக வளவு பெரியவர்கள் பேசிக்
கொள்கிறார்கள். அவர்கள் துயரம் கொள்கிறார்கள். மனம் வெதும்பி கவலையில்
ஆழ்ந்தார்கள். அப்பொழுது சிறிய சிறிய காலடித்தடங்கள். பார்ப்பதற்கு சிறுவர்
சிறுமிகளின் காலடிகள் போன்றே பதிந்திருக்க்கிறது. அது போகிற வழியாக களவு போனதை
அறிகிறார்கள். அந்தக் காலடித்தடங்களைப் பின்பற்றிப் போகும் போது அந்தக் காலடிகள்
கோவிலின் பிரமாண்டமான கிணற்றடிக்குச் செல்கிறது. சனம் ஆச்சர்யமும் பீதியும் கொண்டு
உள் இறங்கி கவனிக்கச் சொல்கிறார்கள்.
கிணற்றிற்குள் இறங்கியவர்கள் அதன்
ஆழத்திலிருந்து பலபல சாமிசிலைகளை, நாய் உருவாரங்களை, பாம்பு உருவாரங்களை, சின்னஞ்சிறிய காவல் தெய்வ கற்சிலைகளை எடுக்க
எடுக்க அவை வந்து கொண்டேயிருக்கிறது.
இந்தக்கதையைச் சொல்லி முடித்தபொழுது
உணர்வில் மூழ்கியிருந்த அரங்கு அமைதிவிலகி பாராட்டும் வாழ்த்தும்
பங்கேற்பாளர்களிடமிருந்து கிடைத்தது. கார்த்திகேயன் அவர்கள் பேசும் போது
கறிவேகவைப்பதற்கு இப்பொழுது பப்பாளி போடப்படுகிறது என்றார். கி.ராஜநாராயணன் கதை
ஒன்று இது போன்ற உணர்வு தருகிற கதையின் சம்பவங்களை ஞாபகப்படுத்தினார். ஜான்
சுந்தர் பேசும் போது நிறைய சிலைகள் கிணற்றுக்குள் இருந்து எடுக்கப்படுகிறது. அது
எப்படி என்றார். அந்த வளவு மக்களின் சிறார்கள் தங்கள் ஒவ்வொரு தலைமுறைகளிலிலும்
யாராவது பால்ய வயது சிறுவர் சிறுமிகள் இந்த பலிகளில் நம்பிக்கையில்லாத
சாமிகளுக்கான படையல் என்பதாக தங்கள் நேசத்திற்குரிய ஆடுகளைப் பலியிடுவதற்கான ஒரு
சிறிய எதிர்ப்பை அவர்கள் காலங்காலமாக காட்டிக் கொண்டிருப்பதான குறியீடு என்றேன்.
கதையின் சம்பவங்கள் சிறப்பாக உள்ளதாகச் சொன்னார்கள்.
மேற்சொன்ன கதையை திரு.முத்தையா
திரு. வைரமுத்து அவர்களிடமும் அவருடைய நெருங்கிய நண்பர்களிடமும் கோவை பயணங்களின்
பொழுது பகிர்ந்து கொண்டிருக்கிறார். என்னுடைய பிற நூல்களான “எஸ்பிபி குட்டி” “நீர்மங்களின் மூன்றடுக்கு” “என்.எச். அவிநாசி
திருச்சி சாலைச் சித்திரங்கள்” பற்றியும் தெரிவித்து இருக்கிறார். கதையையும் எழுத்துக்களையும் அவர்
பாராட்டியதாக திரு.முத்தையா என்னிடம் பேசினார். மகிழ்ச்சியாக இருந்தது. நாளை மதியம்
அவருடனான ஒரு சந்திப்பு நிகழ வாய்ப்பிருக்கிறது. எதற்கும் நான் உங்களுக்குக்
காலையில் அவருடைய நிகழ்ச்சிகள் விபரம் அறிந்ததும் தகவல் சொல்லி
உறுதிப்படுத்துகிறேன். என்றார். நீங்கள் நாளை மதியம் கோவையில் அவருடனான
சந்திப்பிற்கு தயாராக இருங்கள். மற்றும் உங்கள் நூல்களைக் கையில் வைத்திருங்கள்
என்றார்.
வீட்டில் தேடினால் எந்த நூல்களும் கைவசம்
இல்லை. நல்லவேளையாக பொன் இளவேனில்
நீர்மங்களின் மூன்றடுக்கு என்எச் அவிநாசி திருச்சி சாலை சித்திரங்கள்
வைத்திருந்தார். பள்ளித் தோழரும் நண்பருமான டிட்டோவை அழைத்தேன். அவர் தன்னுடைய
மார்க்சிய நூல் கிடங்கிலிருந்து தேட ஆரம்பித்த்போது வீட்டில் நுழைந்தேன். அவருக்கு
மகிழ்ச்சி. கவிஞரை சந்திக்கப் போகிறான். இல்லை யென்று சொல்ல முடியாது என்று
பொறுப்பாகத் தேடிக் கொண்டிருந்தார். தேநீர் வந்தது. குடித்தேன்.பதற்றமாக இருந்
தது. எஸ்பிபி குட்டி கிடைத்த பிறகு அப்பாடா என மூச்சு விட்டேன்.
“நீங்கள் மதியம் பணிரெண்டரை வாக்கில்
ஓட்டலுக்கு வந்து விடுங்கள்..“என்றார் திரு.மரபின் மைந்தன் முத்தையா
ஜான்சுந்தரும் பொன் இளவேனிலும் சரியான
நேரத்திற்கு வந்துவிடுகிறொம் அங்கு சந்திக்கலாம் என்றார்கள்.
ஓட்டல் வரவேற்பறையில் கவிஞரின்
நெருங்கிய நண்பர் திரு.ஜெகதீசன் அவர்களைச்சந்தித்து விபரம் சொன்ன பிறகு அறிமுகம்
செய்து கொண்டோம். அப்பொழுது அவர்களின் வருகையை யொட்டி பலர் சால்வைகளுடன்
காத்திருந்தார்கள். ஓட்டலில் திருமண வரவேற்புக்கு போகிற புறப்படுகிறவர்களுக்கான
கார்கள் வருவதும் போவதுமாக இருக்கிறது. கவிஞரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளில் ஓட்டல்
நிர்வாகிகளும் தயாரானார்கள். கார் வந்தபோது எனக்குப் பதற்றமும் என்ன பேசுவது
என்கிற தடுமாற்றமும் ஏற்படுகிறது.
கவிஞர் காரிலிலிருந்து இறங்கியதும்
மாணவர்கள் நண்பர்கள் வரவேற்கிறார்கள். வரவேற்பு வாயிலில் திருமண அரங்கின் நறுமணம்.
ஜவ்வாது சுகந்தம் வீசும் பட்டு வேட்டிகளின் மணமும் வீசுகிறது. என் முறை வந்த பிறகு
அவருக்கு நான் வணக்கம் சொன்னதும் திரு. முத்தையா அவர்கள் “இவர்தான் இளஞ்சேரல்..“என
அறிமுகம் செய்தார். கைலுக்கி வாழ்த்துத் தெரிவித்தார். லிப்டிக்கு வந்த போது அவர்
பங்கு கொள்ளவிருக்கிற திருமணவரவேற்பு மணமக்கள் அவரிடம் வாழ்த்துப் பெறுகிறார்கள்.
நண்பர்கள் தங்கள் அன்பைத் தெரிவிக்கிறார்கள். புகைப்படங்கள் எடுக்கப்படுகிறது.
அவருடன் லிப்டில் பயணிக்கிறோம்.”நீங்கள் சொன்ன கிடா
கதை அருமை. அது என் ஞாபகத்திலேயே இருக்கிறது என்றார். திருவிழாவும் சிறப்பு. என்
ஊர்> பணி> எழுத்து ஆர்வம் குறித்து
விசாரிக்கிறார். அறைக்குள் நுழைகிறோம்.
அவருக்கு என்று
பிரத்யேகமாக நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த விருந்தோம்பல். மதிய உணவு நேரமானதால் எங்களையும் உணவருந்த
அழைத்தார். கதையை அறிந்திருந்த நண்பர்களுக்கு திரு.முத்தையா இவர்தான் கதையை
எழுதியவர் என்று அறிமுகப்படுத்தினார். நண்பர்கள் பாராட்டினார்கள். கதையில் கிடா
விருந்து என்பதாக இருந்த காரணத்தினால் உரையாடலில் உணவு குறித்துப் பேசினோம். அவர்
சமீபத்தில் கலந்து கொண்ட மலேசிய இலக்கிய நிகழ்வு குறித்தும் ”மூன்றாம் உலகப் போர் நூல்” அறிமுக விழா பற்றிய நினைவலைகளை
மரபின்மைந்தன் முத்தையா பகிர்ந்து கொண்டார். இங்கு இலக்கிய நிகழ்வுகளில் பேசப்படுகிற விசயம்
குறித்துக் கேட்டார். உணவரங்கமும் இலக்கிய அரங்கமாக மாறியது. நிகழ்த்தப்படும்
இலக்கிய நிகழ்வுகளில் கவிதை வாசித்தல், நூல் அறிமுகம், படைப்பாளர்களுடன் உரையாடல்
இந்த அடிப்படையில் நிகழ்வுகள் உள்ளது என்றோம்.
உணவு முடிந்து அவருடைய அறையில் தற்கால அரசியல் நிலவரங்கள், மக்களின்
எதிர்பார்ப்பு, அரசியல் இயக்கங்கள் கொண்டிருக்கும் தீவிரமான கொள்கைகள் எப்படி ஒரு
சூழலில் அவர்களால் தீவிரமாக நடைமுறைப்படுத்தப் படமுடியாத நிலை ஏற்படுகிற
காலச்சூழலை கவிஞர் நினைவு கூர்ந்தார். நண்பர்களுடன் இயல்பாக உரையாடினார்.
ஓய்வுக்குப்பிறகு அவரிடம் என்னுடைய மூன்று நூல்களான எஸ்பிபி குட்டி, என்.எச். அவிநாசி,திருச்சி
சாலை சித்திரங்கள், நீர்மங்களின் மூன்றடுக்கு நூல்களை அவருக்கு அளித்தேன். அவர்
மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு வாழ்த்தினார்.
சில நிமிடங்கள் நூல்களில் சில வரிகள்
வாசித்தார். அவருடனான சந்திப்பு நினைவு கூறத்தக்க வகையில் புகைப்படங்கள் எடுத்துக்
கொண்டோம். அவருடனான இனிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்து ஆச்சயமும்
மகிழ்ச்சியுமளித்த திரு. மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் புகைப்படம் எடுத்து
உதவினார்.
கவிஞர் தன் ஆத்ம நண்பர்களுடன் மதியம்
இரண்டு மணிக்குப் புறப்பட்டார். நண்பர்களுடன் அவர் வழியனுப்பி வைக்கப்பட்டபோது
ஒவ்வொருவரிடமும் சில வார்த்தைகள் பேசினார். “வாசித்துப் பார்த்தேன் சில பக்கங்களில்..நடையும் எழுத்தும்
வித்தியாசமாகத்தான் எழுதியிருக்கிறீர்கள்.. நூல்களை வாசித்து விட்டு உங்களுடன்
பேசுகிறேன். இளஞ்சேரல்.. தொடர்ந்து எழுதுங்கள் சந்திக்கலாம்...என்று விடைபெற்றுக்
கொண்டார்.
நான் வண்டியை அலுவலகம் நோக்கிச்
செலுத்தினேன். பதின் பருவங்களில் மீள்வாசிப்பு கொண்ட காலத்தில் இருகூரில் ஓய்ந்து
களைத்து உழைப்பு நேரம் போக இலக்கியமும்
கவிதையும் பேசிய நாட்கள் நினைவுக்கு வந்து போகிறது. நேரெதிரான இலக்கிய இயக்கம்,
கவிதை இயக்கம், கவிதைகளின் படைப்புகளின் பரிணாமம், குறிப்பாக
புதுக்கவிதையியக்கத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்த விவாதங்களை நண்பர்கள் தொடர்ந்து
நிகழ்த்தியிருக்கிறோம். பெரியாரியச் சிந்தனாயாளர்கள். பொதுவுடைமைச்
சித்தாந்தவாதிகள், திரைப்படங்களின் வரலாறுகளை நுனிநாக்கில் வைத்துக் கொண்டு
வாதங்களால் மோதுகிற நண்பர்கள். தீந்தமிழ்ச்சுவை கொண்ட பக்தி இலக்கியங்களில்
தோய்ந்த தமிழ்ப்புலவர்கள் என்று வாதிடாத நாளுமில்லை யென்று சொல்லலாம்.
சிதம்பரம், பெருமாள், காளிதாஸ்,பொன்
இளவேனில்,சத்தி, கோபால்ராஜ், செல்வராஜ், கணேசன். டிட்டோ, ராஜ் உள்ளிட்ட நண்பர்களின்
உரையாடலில் கவிதைகள் பிரதானமாகவே இடம் பெறும். கவிதைகளின் வடிவங்கள் குறித்தும்
பேசியிருக்கிறோம். சங்க காலம் முதல் தொழிற்சங்க காலக் கவிதைகள் பற்றிய உரையாடல்களை
எங்கள் நண்பர்கள் விவாதித்த இரவுகள் ஞாபகங்களில் வந்து போகிறது.
கட்சிகளுக்காக, கொண்ட கொள்கைகளுக்காக
இலக்கியத்திற்காக வெறித்தனமாகத் தன் வாழ்வு, குடும்பம், எதிர்காலம்,
எல்லாவற்றையும் மறந்து உழைத்த இருகூர் வாழ்கிற நண்பர்கள் பலர்
உதவியிருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு ஒரு எளிய சொல்லுக்குக் கிடைத்த வெகுமதி.
கலை உணர்ச்சியாலான சொல். அது ஒன்றும் திடப்பொருளோ திண்மப் பொருளோ.
திரவப்பொருளோ அல்ல அவை ஓர் உயிர்ச்சொல்
என்று உணர்த்தியது இந்த அபூர்வமான சந்திப்பு.. எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும்
சுமந்து கொண்டு இந்தச் சொல் தள்ளாடியபடிதான் இருக்கிறது.
நன்றி.. நன்றி...கலைமாமணி மரபின் மைந்தன்
முத்தையா அவர்களுக்கும் ஊஞ்சல் இலக்கிய அமர்வின் நண்பர்களுக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக