திங்கள், 4 நவம்பர், 2013


கோவை இலக்கியச் சந்திப்பின்

35- ஆம் நிகழ்வின் பதிவுகள்

         வண்டியை மெதுவாக ஓட்டியபடியே வெறிச்சோடிய சாலைகளை ரசித்துக் கொண்டு போகிறோம். ஒட்டப்பட்டிருக்கிற எல்லா போஸ்டர்களையும் வாசித்துக் கொண்டே நகர்ந்தோம். நகரத்தின் இயல்புகளை அதன் உளவியல் பார்வைகளைப் போஸ்டர்கள் அறிவிக்கிறது. வால் போஸ்டர்களின் படிந்திருக்கும் உயர்தர இலக்கிய வகைமையை தவிர்க்க முடியாது.

இலக்கியச் சந்திப்பின் பேனர்கள் தளவாட சாமான்களை பத்திரமாக மடித்து வைத்துக் கொண்டார் பொன் இளவேனில். ஒரு போஸ்டரில் கூட பெண் முகம் இல்லை. ஒரு போஸ்டரில் புலியை முறத்தால் அடித்து விரட்டும் கட்அவுட் இருந்தது. உள்ளாட்சிப் பிரதிநிதிப் பெண்களின் கணவர்கள் பெரிதாகவும் பிரதிநிதி கொஞ்சம் சிரியதாகவும் பதிந்திருக்கிறார்கள்.

தேசியமும் தெய்வீகமும் எனதிரு கண்கள் என்று அறிவுறுத்திய பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜைக்கான ஆயத்தப்பணிகளில் மாநகரம் சுறுசுறுப்பாக இயங்கியது. பிளக்ஸ் பேனர்கள் கட்அவுட்களில் சிங்கம் புலி சிறுத்தைகளில் அவருடைய வழிநடப்போர் உறுமியபடி போஸ்களில் இருக்கிறார்கள். ஒரு பிளக்ஸ் பேனரில் எஜமான் ரஜினி நடக்கும் போஸ்டரிலும் குசேலன் ரஜினி நடக்கும் போஸ்டரிலும் ரஜினி முகத்தினை எடுத்துவிட்டு முத்துராமலிங்கத் தேவர் முகத்தைப் பொருத்தியிருந்தார்கள். அற்புதமான ரசனைவடிவமாக இருந்தது. ஒரு ஆயிரம் பக்கம் நாவலுக்குரிய அற்புதமான படிமம். யாருக்குப்புரியும்.

        மாநகரின் ஐந்து முக்கு வளைவுகளும் சந்திக்கும்  இடத்தில் பசும்பொன் ஐயாவிற்கு சிலை வைக்க மாநகராட்சி மேயர் ஒப்புதல் அளித்தமைக்குப் பாராட்டு என்று ஒரு கட்அவுட் இருக்கிறது. எனக்கு உடனே சென்னையில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது என்கிற காரணத்தால் நடிகர் திலகத்தின் சிலையை அகற்றுவதற்கும் அந்த சிலையை இடம் மாற்றம் செய்ய முடிவெடுத்த செய்திகள் நினைவுக்கு வந்து தொலைத்தது. அந்த முடிவை எதிர்த்து தமிழ்நாடு திரைப்படச் சங்கத்தினர்கள் சிவாஜிகணேசன் சிலையை இடம் மாற்றம் செய்யக் கூடாது என்று போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். நம் தமிழகத்தில்தான் சிலைகளுக்கு உயிர் உள்ளது.

         ஒரு காலத்தில் திருநாவுக்கரசு எம்.ஜி.ஆர் சிலைகளை ஆங்காங்கு நிறுவுவதற்கு முயற்சிசெய்தார். மிகவும் சிரமப்பட்டு உருவாக்கினார். அதன் படியே நிறைய சிலைகளை உருவாக்கினார். ஆனால் அப்பொழுது ஆட்சியிலிருந்த மாண்புமிகு அம்மா அவர்கள் ஒரு சிலையையும் பிரதிஷ்டை செய்ய அனுமதிக்கவில்லை. அவர் எம்ஜிஆர் சிலைகளை சாக்கு போட்டும் வைக்கோல் போர் போர் போட்டும் பாதுகாப்பாக மூடியபடியே லாரிகளில் தமிழ்நாடு முழுக்க சரியான இடத்திற்கு அலையாய் அலைந்து ஒரு இடத்திலும் அவரால் எம்ஜிஆர் சிலைகளைத் திறக்க முடியாமல் போனது. எம்.ஜி.ஆரை அவர் கேவலப்படுத்தியது போல யாரும் கேவலப்படுத்தியது இல்லை.

          ஒரு காலத்தில் சிலைகளை மியுசியத்தில் வைக்கப்படும் என்று அம்மா அவர்கள் எடுத்த முடிவுக்கு சிலைகளுக்குரியவர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட அம்மா அவர்கள் அம்முடிவைக் கைவிட்டார்கள். கண்ணகி சிலைக்கு நேர்ந்த கதியை இலக்கிய உலகம் நன்கறியும்.

           இலக்கியச் சந்திப்பின் வரவேற்பு பேனர்களைக்கட்டுகிற பொழுது அட தீபாவளியாயிற்றே. மக்கள் வருவார்களா. நாகர்கோயிலில் சுந்தர ராமசாமி ராஜமார்த்தாண்டன் விருதுகள் வழங்கு விழா வேறு இருக்கிறதே. பங்கேற்பாளர்கள் வருவார்களா. என ஐயத்துடன் கட்டினோம். பள்ளி விளையாட்டு மைதானம்  எப்பொழுதும் நிரம்பியிருக்கும். வெறிச் சோடியிருந்தது. காரணம் தீபாவளி. அவ்வப்பொழுது யாராவது சில மாணவ இளைஞர்கள் வந்து விளையாடினார்கள். பிறகு மைதானத்திற்கே பண்டிகை வெட்கம் கொண்டிருந்தமையைக் கண்டு வெளியேறினார்கள்.

            போதாக்குறைக்கு அன்று எனப்பார்த்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு வேறு நடக்க இருப்பதாக கரும்பலகை சொன்னது. என்னவொரு அருமையான நாள். பொதுமக்கள் அப்படியே இலக்கிய அரங்கிலும் வந்து அமர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என யோசித்தோம். ஒருவர் வெளிப்படையாக தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிசேக க்கூட்டமா என்றார். நான் இல்லைங்க இலக்கியக் கூட்டம் புத்தகங்கள் அறிமுகம் என்றேன். அதுல என்னங்க பெனிபிட் இருக்கு என்றார். பெனிபிட் எப்படி என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. சரியான காரணம் சொல்லியிருந்தால் அவர் ஐம்பதாயிரம் கட்டி ரசீது வாங்கிக் கொள்கிறவர் போன்ற ஆர்வத்தில் இருந்தார். பாவம். ஒருவர் முகமலர்ந்து “ஆம்வே“ வா என்றார். எனக்கு அன்பே வா என விழுந்தது. ஆனால் வெளித்தோற்றத்திற்கு மக்கள் கூடுகை எதோ இலக்கியச் சந்திப்புக்குத்தான் வந்து செல்வது போலிருந்தது. வாழ்க கோவை மாநகராட்சி..வெல்லட்டும் மக்கள் பணி..

               கிருஷ்ணமூர்த்தி சரியான நேரத்திற்கு வந்து அரங்க ஏற்பாட்டிற்கு உதவினார். எனக்கு அவரைப் பார்த்த பொழுது அவரைப் போலவே முதல் நாவல் எழுதிய ஜெயந்த ஸ்வாமியும் ஞாபகம் வந்தார். அவருடைய  “கலர்ஸ் இன் த ஸ்பெக்ட்ராம்“ சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. 70 களில் துவங்கிய பெங்களுர் வாழ்க்கைக்கு ஆசைப்படுகிற சாப்ட்வேர் என்ஜினியர்களின் விருப்பத்தையும் அதன் வழியாக அவர் ஒவ்வொரு கதாபாத்திரமும் தன்னை உணர்ந்து கொள்வதாக எழுதியிருப்பார். கிட்டத்தட்ட இந்த நாவலை அவர் ஆறேழு வருடங்களாக எழுதியதாகச் சொல்கிறார்.            இந்த நாவலை புகழ்பெற்ற லியோடாட் பதிப்பகம் வெளியிட்டுருக்கிறது. ஆனால் கிருஷ்ணமூர்த்தி தன் நாவலுக்கு அதிகளவு காலம் எடுத்துக் கொள்ளவில்லை. தன் அனுபவத்தை சிறப்பாக எழுதியிருக்கிறார்.

வழக்கம் போல பதற்றம் தணிக்க யாழி வந்து ஒலிபெருக்கியை சரிசெய்தார். தேவையான வெளிச்சம் குறைவாக படிகிறது. மதிப்பற்குரிய நாஞ்சில் நாடன் அழைப்பை நான் அறியத் தவறியிருந்தேன். எதற்கு அழைத்திருப்பார். அடடா.. அவருக்கு அழைத்துப் பேசியபோது அவர் நிகழ்வின் பங்கேற்பாளர்களான மதுமிதா, திலகபாமா மற்றும் நண்பர்களுடன் காரில் வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். இப்பொழுது நண்பர்களுக்கும் நிகழ்முறைகளின் மீது கவனம் செலுத்த ஆயத்தமாகிறார்கள்.

       நண்பர்கள் சிலர் பாட்னா குண்டுவெடிப்பு பற்றிய சந்தேகமும் கோவையில் ஏதேனும் பிரச்சனையாகுமா. ஏனெனில் நாகர்கோவிலில் குமரியில் பதற்றம். பஸ் கல்வீச்சு என்று புரளி கிளப்பினார்கள். அப்படியெதுவும் நடக்காது என்றோம். எப்படிச் சொல்கிறீர்கள் என்றபோது முக்கியமானவர்கள் எல்லாரும் எம்பிசீட் வாங்க பிசியாக இருக்கிறார்கள். அதுவுமில்லாமல் கோவையில் கரண்ட் கட், தொழில் மந்தம் போன்ற பணப்புழக்கம் இல்லாமையால் பிரச்சனையால் மக்களும் செரியான காட்டுக் காந்தில் இருக்கிறார்கள் பிரச்சனைகள் ஒன்றும் எழாவது என்றார் ஒருவர்.

     இதற்குப் பின்பும் மோடி கூட்டத்தில் நிதிஷ்குமாரைத்தாக்கிப் பேசியிருக்கிறார். ஒரு காலத்தில் பீகாருக்குள் அத்வானியின் ரதயாத்திரையை நுழையவிடமாட்டேன் என்று சொன்ன லாலுவைப் போலவே நிதிசும் பா.ஜ.கவிற்கு எதிராக இயங்குவதை தன் கொள்கையாக வைத்துள்ளார்.

            மூன்றாவது அணி அமைந்தால் பிரதமர் பதவிற்கு நிதிஷ்குமார் பொருத்தமானவர். என்று யெச்சுரி போன்ற தலைவர்கள் சொன்னாலும் சொன்னார்கள் வடமாநிலங்களில் பாஜகவிற்கு அச்சம் வந்துவிட்டது. அப்படிப்பார்க்கையில் இந்த முறையும் பிரதமர் பதவி தென்னிந்தியாவிற்கு கிடைக்காது போலிருக்கிறது. சிதம்பரத்திற்கும் நாராயணசாமிக்கும் பிரகாசமான வாய்ப்பு என்ற செய்திகள் கலகலப்பு ஊட்டுகிறது. ஒரு வகையில் பாராளுமன்றத்தேர்தலும் சுவராசியமிக்கவையாக மாறியுள்ளது. நமோ, மோடி என்கிற போஸ்டர்கள் நகரங்களில் பளீரிடுகிறது. ஒரு போஸ்டரில் வருங்கால தமிழக முதல்வர் என்றும் இருந்தது. திராவிடக் கட்சிகளிடமிருந்து சரியான சமிக்ஞை வராததால் மோடியார் என்று யாரும் விளிக்கத்துவங்கவில்லை. திராவிட மனோபாவமான ர் விகுதியை இன்னும் மோடிக்குச் சூட்டப்படாதமையால் அவருக்கான வாய்ப்பு தமிழகத்தில் எதிர்பார்த்தளவு கூடவில்லை. பாவம் சிப்பாய்களின் அண்ணியார் நிலைமையையும் மோசமாகத்தான் இருக்கிறது.

            யோசனையிலிருந்த என்னை முதுகில் தட்டி ஆரம்பித்துவிடலாம் என்றார் யாழி. நானே வரவேற்றுப் பேசினேன். அரங்கம் நிரம்பியிருக்கிறது. பேச நா தழுதழுக்கிறது. 35 சந்திப்பு. நிறையப் புத்தகங்கள், நிறைய உரையாளர்கள் அழைப்பிதழ் பார்த்தபோது சாத்தியமாகுமா எனப் பயம் கொண்டேன்.  மழையின் குளிரும் சாந்தமான வெயிலும் அறையை சுகந்தமாக்கியிருக்கிறது.

      முதலில் இளங்கவி நர்சிம் சிறுகதைகளான ஒரு வெயில் நேரம் தொகுப்பின் கதைகள் குறித்துப் பேசினார். தெளிவான உச்சரிப்பு. பேச்சாளர் போன்று பேசிய அவர் சிறுகதைகளின் எல்லா நிலைகளையும் கடந்து கதைகளின் தன்மைகளை விரிவாகப் பேசினார். செல்போன் சிதறல்கள் எனும் கதை தொகுப்பின் மிக முக்கியமான கதை என்றார். சிறுகதைகளின் வழியாக வாழ்வின் நிகழ்ச்சிகளின் போக்குகளில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் என்ன நினைக்கும் உறவுகள் என்ன நினைப்பார்கள் என்கிற சிந்தனையின் அடிப்படையில் கதைகள் அமைந்திருப்பதாக தெரிவித்தார். பல்வேறுகதைகளின் வழியாக கதைகளின் தன்மைகளை விவரித்தமை பங்கேற்பாளர்களுக்கு அலுப்படையாத தன்மையை அளித்தது. நம் வாழ்வின் நகைப்புக்குரிய வகையாக நிகழ்வுகள் இருப்பினும் அதன் பின்னணியிலுள்ள சம்பவங்களைக் கதைகளாக ஆக்கியிருக்கிறார் என்றார்.

   மிக நீண்ட உரை. தேர்ந்த பேச்சாளரின் குரலில் கதைகளின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு கதையில் ஒவ்வொரு பாலியல் தொழிலாளியிடம் செல்பவர்கள் மறக்காமல் கேட்கும் கேள்விகள் ஏன் இந்த இழிவான தொழிலுக்கு வந்தாய் என்பதுதான். கேட்பவர்கள் எல்லாம் கேட்டுவிட்டு பிறகு வழக்கம் போலப் போய்விடுவார்கள். ஆனால் இவருடைய கதையில் தன் மாமனால் கைவிடப்பட்ட பெண் இங்கு வருவதாகவும் பிறகு இழிந்த நிலைக்கு வந்து சிதறிய செல்போன் போன்று தன் வாழ்வு ஆனதாக சொல்கிறார். பேசி முடிந்த பொழுது எதிரில் லாரியில் அடிபட்டு சிதற இருந்த போது எதிரில் பேசியவர்க்கு சொல்கிறார் செல்போன் சிதற இருந்தது. தப்பித்துவிட்டது என்று இரண்டு வேறு முரண்களுடைய கதையின் சம்பவங்களாக சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது என்று கதைகள் பற்றிய எல்லா பதிவுகளையும் பேசியது. மேற்கொண்டு கதைகள் குறித்து அறிய ஒன்று மில்லையென்ற தோற்றத்தை தந்து விட்டார். இருந்தாலும் அவர் நூலை அணுகிய விதம் புதுமையாக இருந்தது.

            தேநீர் வருவதற்கு காலதாமதம் ஆகிவந்தது. இளவேனில் அலைபேசியைக் கிள்ளினார். எனக்கு யோசனை வேறெங்கோ போகிறது. பால் கொள் முதல் விலையை உயர்த்தப்படவேண்டும். முப்பது ருபாயும் எருமைப்பால் கொள்முதல் விலை நாற்பது ருபாய் என உயர்த்தப்படவேண்டும். ஏனென்றால் இருநூறு சதவிகிதம் மாட்டுத்தீவன விலைகள் ஏறிவிட்டது எனும் கோரிக்கைகள் அடங்கிய போராட்ட செய்தி நினைவுக்கு வருகிறது. ஏறுகிற விலைவாசிக்கு ஏற்ப கொள்முதல் விலையை உயர்த்த வேண்டி நடக்கும் போராட்டத்தைப் போலவே அச்சாகும் நூல்களை அரசே உரிய விலைக்கு வாங்கிப்பிறகு நூலகங்களுக்கு உபயோகப்படுத்தலாம் என்கிற போராட்டங்களை பதிப்பகங்களும் படைப்பாளிகளும் நடத்தினால் எப்படியிருக்கும். நமது பதிப்பகங்கள் கோவையில் புத்தக கண்காட்சியே இல்லாமல் செய்து விட்டார்கள். தனித்தனியாக புத்தக கண்காட்சியை நடத்துகிறார்கள். அரசே நூல்களைக் கொள்முதல் செய்வது போன்ற  கற்பனையில் மூழ்கிய போது  இளவேனில் யோவ் அவர் பேசிட்டாரு அடுத்து..என்றதும் ஓடினேன்.

             பேராசிரியர் திலிப்குமார் பேரா.பத்மாவதி மொழிபெயர்த்த கோவிந்த் மிஸ்ராவின் நாவலான “மூடுபனிச் சிறையின் வண்ணங்கள்“ என்னும் மொழிபெயர்ப்பு நாவல் குறித்த உரையாற்றினார். ஆண்பெண் உறவு குறித்த மிக நுட்பமான உரையாடல்களுடன் எழுதப்பட்ட நாவல். இந்த நாவல் அவருக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றத் தந்த படைப்பு. பத்மாவதி அவர்கள் தற்கால சிறுகதைகள் என்று சுமார் நூறு சிறுகதைகளுக்கும் மேலாக தமிழிலிலிருந்து இந்திக்கு மொழிபெயர்த்து உள்ளார்கள். அவருடைய மிகச் சிறந்த மொழிபெயர்ப்பில் இந்த நாவல் வாசிப்பதற்கு தமிழ் நாவல் போன்ற இயல்பைத் தருகிறது என்றார்

     ஏற்புரையாற்றிய பேரா.பத்மாவதி தன்னை மிகவும் பாதித்த நாவல். மொழிபெயர்ப்பின் பொழுது தன்னை மீறி அழ நேரிட்டது. பிறகு மனம் இயல்புக்குத்திரும்பும் வரை அழுவேன். பிறகு எழுதினேன் என்றார். சமூகத்தில் நிலவும் பல முரண்களுக்கு இந்த நாவல் பதிலளிக்கிறது. இந்தி மொழி என்பதால் நல்ல தரமான படைப்புகளுக்கு நாம் தடையிடக்கூடாது. மிகச் சிறந்த படைப்புகள் எந்த மொழியில் வெளியாகி இருந்தாலும் நம் மொழிக்குக் கொண்டுவரவேண்டும். நாவலில் வரும் சம்பவங்கள் நம் வாழ்வில் நடப்பதாகவே உள்ளது. சில பெண்கள் தங்கள் மகள் போன்ற பெண்கள் தற்போது வாழ்கிற வசதியான பொருள்கள் நிறைந்த வாழ்க்கை நமக்கு வாய்க்காமல் போய்விட்டதே என்கிற ஏக்கத்தில் கூட இருக்கிறார்கள். அவர்கள் மேல் பொறாமை கூட கொள்கிறார்கள்.

         அடுத்தாற்போல் நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ள சுப்ரபாரதி மணியன் புதிய நாவலான “தறிநாடாமீதான உரையை கோவை காமு வழங்கினார். நாவலின் மையமாக இருக்கிற விசைத்தறியாளர்கள் பிரச்சனைகளை முன்வைத்துள்ளது. விசைத்தறிகளின் கூலி, பாவு தருகிறவர்கள், கூலிக்கு நெசவு செய்து தரும் தொழிலாளர்கள் நிலை, அவர்கள் அரசாங்கத்தின் உதவிகளை நாடுவதற்கு எடுக்கும் முயற்சிகள். கவனத்தை ஈர்க்க தொழிற்சங்க நிர்வாகிகளின் நடவடிக்கைகள் என்று நகரும் நாவல் சமகாலத்தின் விசைத்தறியாளர்களின் வாழ்வியலைப் பேசுகிறது என்றார். சோமனூர்,பல்லடம்,சுல்தான் பேட்டை,பொங்கலூர் பகுதிகளில் நிறைந்திருக்கிற தொழில் விசைத்தறி தொழில். இதில் சாதாரண மக்கள் முதல் மேட்டுக்குடி மக்கள் வரை ஈடுபட்டு உழைக்கிறார்கள். அவர்களின் வாழ்வு குறித்த இயல்பான எளிய நாவலாகவும் உள்ளது என்றார்.இவரும் நாவலைப்பற்றிய முழுமையான அறிதலை வெளிப்படுத்தினார் என்றே சொல்ல வேண்டும்.

           அடுத்து உரையாற்றிய சிவதாசன் பழ.அதியமான் நூல் குறித்துப் பேசினார்.“துப்பாக்கிய நாயுடுஎன்றழைக்கப்பட்ட வரதாராஜூலு நாயுடு பற்றிய அறிமுகம் சிறப்பாக இருந்தது. அதிகமாக அறியப்படாத ஆளுமையாகவும் சுதந்திரப்போராட்ட தியாகியாகவும் இருந்தவர் என்றார். பெரியாரின் அரசியல் குருவாகவும் காமராஜர், பக்தவத்சலம்,ராஜாஜி போன்ற மிகப்பெரிய தலைவர்களுக்கு முன்னோடியான தலைவராகவும் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குடன் விளங்கியவர். பெரியார் கூட தன்னுடைய அரசியல் வாழ்விற்கு வரதாராஜூலு நாயுடுதான் அடித்தளம் இட்டவர் என்று சொல்லியிருக்கிறார். காமராஜர் முதல்வராக வருவதற்கு அன்று காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த தேர்தலில் காமராஜரை முதல்வராக்குவதற்கு பாடுபட்டவராகவும் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் கட்சிக்குள் நிறைய எதிர்ப்பைச் சம்பாதித்தார். அவர் குறித்த அரிய பல தகவல்களைச் சேகரித்து பழ.அதியமான் எழுதியிருப்பதை கவனப்படுத்தி உரையாற்றினார்.

          காங்கிரசார் சமீப காலங்களில் நகைச்சுவை உணர்வுள்ளவர்களாகவே மாறிவிட்டார்கள். அவர்கள் நம்மை ஈடில்லா இன்பத்தில் ஆழ்த்துவார்கள். கொள்ளை இன்பம் தருவதில் நாச்சியப்பனும் பவர் ஸ்டார் நாராயணசாமியும் அளிக்கும் இன்பம் எல்லையில்லாதவை. தற்பொழுது அந்தப்பட்டியலில் வாசனும் சேர்ந்து கொண்டார். அவர் பேசி முடிப்பதும் திருமால் புரண்டு படுப்பதும் ஒன்றாக நடந்து விடும். சமீபத்தில் சிதம்பரம் பேசிய ஒரு கூட்டத்தில் வாஜ்பாய் அமரர் என நினைத்து பேசிவிட கூட்டம் பதற்றத்திற்குள்ளாகியிருக்கிறது. பிற்பாடு பத்திரிக்கைகள் எல்லாம் மோடி பக்கம் சாய்ந்து விட்டது. “அவாநம்மை எப்படி ஆதரிப்பார்கள் என்றிருக்கிறார். இந்துத்துவ பிராமணிய பத்திரிக்கைகள் மோடியின் வருகையை ஆதரிக்கிறது என்பதால் அருக்குக் கோபம். அதனால் வாஜ்பாயை அமரராக்கிவிட்டார்.

          காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவும் பிரதமரும் கலந்து கொள்ளக்கூடாது என்று ஜி.கே.வாசன் பேசிவருவதும், நாச்சியப்பனும் சிதம்பமும் இந்தியா கலந்து கொள்வதின் மூலமாகவே இலங்கைத் தமிழர் வாழ்வுக்கு உதவமுடியும் என்று பேசிவருவதும்  எரிச்சல் வரவே செய்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசிற்கு மூன்று எம்பி தொகுதிகளை மட்டும் கொடுத்த தமிழ் மக்களுக்கு எதற்கு நன்மை செய்ய வேண்டும் என்று மேலிடம் நினைக்கிறது போலும்..

திலகபாமாவின் சிறுகதைகள் பற்றி பொன் குமார் கட்டுரை வாசித்தார். எளிய கட்டுரை. காலம் கருதியும் சுருக்கமாக அவர் கதைகளின் உலகத்தை அறிமுகப்படுத்தினார். தன் வாழ்வில் சந்திக்க நேர்ந்த மக்களின் கதைகள்

       திலபாமாவின் பயணக்கட்டுரைகள் அடங்கிய நூல் பற்றிய சுப்ரபாரதிமணியன் பேசினார். வழக்கமான பயணக்கட்டுரைகளிலிருந்து வேறுபட்டவையாக இருக்கிறது. பயணக்கட்டுரைகளில் முக்கியமானது. அறிஞர் சே.ப. நரசிம்மலு நாயுடு அவர்களின் நூல்கள். பயண இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர். இந்தியா உள்பட பல தேசங்களுக்கு சென்று அதன் வரலாற்றுப் பின்னணியை எழுதியவர். பெரும்பாலும பயணக்கட்டுரைகள் உணவு. சுற்றுலாத்தலங்கள் பற்றித்தான் எழுதுவார்கள் ஆனால் திலகபாமா சென்ற நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம், அரசியல் பின்னணிகள் குறித்து எழுதியிருக்கிறார்.ஜெர்மனி,இங்கிலாந்து. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் குறித்து எழுதியிருக்கிறார். அங்கு நடைபெற்ற இலக்கிய விழாக்கள் பற்றியும் எழுதியிருக்கிறார்.

           தேநீர்க்குப் பணம் தந்து கொண்டிருந்த போது ஒரு நண்பர் சில விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். இப்படியான சில நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளை நீங்கள் சந்திப்பில் வாசிக்கலாமே என்றார்.  அதாவது மதுரையில் சமூக அறிவியல் பயிலும மாணவ மாணவிகள் பிச்சைக்காரர்கள் குறித்த ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்கள். என்னதான் மைய அரசு அவர்களின் வாழ்விற்கு நூறு கோடி ஒதுக்கி மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்தினாலும் அவர்கள் திரும்பவும் பிச்சை எடுப்பதற்கே திரும்புகிறார்கள் எனும் ஆய்வு நமக்கு ஆச்சர்யமளிக்கிறது. மறுவாழ்வு மையத்திற்கு பலர் வரமறுக்கிறார்கள். அரசாங்கத்தின் முயற்சிகளின் மீது அவர்கள கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை.

         சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகளவிலான தலைசிறந்த இருநூறு பல்கலைக் கழகங்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்தவை ஒன்று கூட இல்லையென்று பிரதமர் வருத்தப்பட்டிருக்கிறார். பட்டியிலில் இடம்பெற்றவைகளில் பெரும்பாலான பல்கலைக் கழகங்கள் அரசாங்கம் நடத்துகிறவை.  பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்துவதற்கு போராடியவர்களில் ஒருவரான பேராசிரியர் மணிசுந்தரம் காலமானார். எண்பத்தியேழு வயது. இப்பொழுதுள்ள தொழிற்படிப்புக் கல்வியின் முன்னோடி. கனடாவில் டாகடர் பட்டம் பெற்றவர். தொழிற்படிப்பு இந்தியாவிற்கு அவசியம் என்று அரசுகளிடம் வலியுறுத்தி பரப்பியவர். என்ஐடியின் முதல்வர், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராகவும் இருந்துள்ளார். அவர் காலமான பிறகுதான் பல முயற்சிகளை அவர் செய்திருப்பது தெரியவருகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கலாமே என்றார் நண்பர் ஒருவர்.

          திலகபாமாவின் கவிதைகளின் பெருந்தொகுப்பு பற்றிய கட்டுரையை பொன் இளவேனில் வாசித்தார். சுமார் எட்டுபக்க அளவில் எழுதப்பட்ட கட்டுரை அவருடைய கவிதைகளை அறிந்து கொள்வதற்கு உதவியது. சமகாலத்தில் எழுதிவருகிற பெண் படைப்பாளர்களில் திலகபாமாவின் கவிதைகள் வேறுபடுகிற சூழல்களைக் குறிப்பிட்டிருந்தார். பெண்ணிய நோக்கில் அறியப்படுவது போலவே ஆண்களின் படைப்பிலக்கிய நோக்கில் பெண்ணியமும் பெண் எழுத்தும் குறித்தும் அறிய வேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்டிருந்தார். பீஷ்மர் அம்பைக்கும் நடக்கும் உக்கிரமான விவாதம் அதன்வழியாக நடக்கும் உரையாடல்களை நினைவுட்டிய கட்டுரையில் சில கவிதைகளை வாசித்துக் காட்டினார்.

        என் யோசனை மறுபடியும் நண்பரின் உரையாடலில் நகர்ந்தது. சர்ச் நிர்வாகத் தேர்தல்களில் சமீபத்தில் தகராறுகள் வெளியே தெரியவர ஆரம்பித்திருக்கிறது. இந்திய அரசாங்கங்கள் உள்ளே நுழையாதபடியாக இரும்புக் கோட்டைகளாக சர்ச் நிர்வாகங்கள் இருக்கிறது. நமது இந்துக் கோயில்களைக் கையப்படுத்துகிற மாதிரி சர்ச்களுக்குள் நமது அரசுகள் நுழைய முடியாது. சிலுவையிலேயே ஆப்பு வைத்துவிடுவார்கள். ஆனால் அங்கு இப்பொழுது எல்லாம் வெளிப்படையாக அடித்துக் கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். சரிதான் அங்கும் நம் ரத்தம்தானே இருக்கிறது. உள்ளுர்க்கார சர்ச் ஆட்கள் வெளியுர்க்கார சர்ச் ஆட்கள் என்று பிரித்து தேர்தல் நடத்த பிரச்சனைகள் துவங்குகிறது. அங்கு போலீஸ் வர பிறகு பிரச்சனை நீதிமன்றத்திற்குப் போயிருக்கிறது. மதவழிபாட்டுத் தலங்கள் குறித்த சட்டங்கள் பற்றிய விளக்கங்கள் அறிந்த போது ஓ.ஜீசஸ்.. உங்கள் முன்னால் எங்கள் நீதி சமூகம் செல்கிறது. பிற்பாடும் பதற்றமாகத்தான் இருக்கிறது. சட்டம் என்ன சொல்கிறது எனத் தெரியவில்லை. பாவம் சம்பந்தப்பட்ட வழக்குகளைக் கையாளும் துறைகளை நினைத்துப்பாருங்கள்.

            திலகபாமாவின் “கழுவேற்றப்பட்ட மீன்கள்“ நாவல் பற்றிய உரையை கவிஞர் மொழிபெயர்ப்பாளர் மதுமிதா வழங்கினார். மனஅழுத்தங்களின் வழியாக ஆண்பெண் உறவுகள் சிதைவடைவதை இந்த நாவலில் அவர் சிறப்பாக கையாண்டிருப்பார். எம்.கோபாலகிருஷ்ணனின் முனிமேடு சிறுகதை நூலில் இரண்டு சிறுகதைகளில் இது போன்ற நுட்பமான சித்தரிப்புகளைப் பார்க்கமுடியும். கத்திமேல் நடப்பது போன்ற சம்பவங்கள். வெளியில் சொல்லமுடியாத பல பிரச்சனைகளை ஆணும் பெண்ணும் மனதளவில் வைத்துக் கொண்டிருப்பதால்தான் அழுத்தம் அதிகமாகி விரிசல் வருகிறது. இந்த நாவல் பெருமளவில் பேசப்பட்டிருக்கவேண்டும். வழக்கம் போலவே இலக்கிய உலகம் கள்ள மௌனம் சாதிக்கிறது. ஆண் பெண் திருமண உறவு நம்  சமூகத்தில் போற்றப்படுகிற ஒன்று. குடும்ப அமைப்பிலிருந்து விலகுவதற்கான சாத்தியங்கள் இல்லையென்கிற பொழுது அதிகம் பாதிக்கப்படுவதும் பெண்ணாகவே இருக்கிறாள். சில சம்பிரதாயங்கள் திணிக்கப்படுகிறது. சில தவிர்க்கமுடியாத கடமைகளை செய்தாகவேண்டிய நிர்ப்பந்தங்கள் எழுகிறது கடமைகள் என்று வருகிற பொழுது பெண்களுக்கு அதிகப் பொறுப்பு உள்ளது போன்ற கட்டமைப்புகள் தான் பெண்களின் உணர்வுகளை சிதைக்கிறது என்றார்.

       எளிய மனிதர்களின் வாழ்க்கையிலும் அப்படியே நிகழ்கிறது. பெண் தனக்கு உரிய பாதுகாப்புத் தேடிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் போது பல பிரச்சனைகளை சந்திக்கவேண்டியிருக்கிறது. குடும்ப வாழ்வில் நிலை மாறுகிற தடம் மாறுகிற பல பெண்களின் பிரச்சனைகளுக்குக் காரணம் மன அழுத்தம்தான். ஓரளவிற்கும் மேல் தாக்குப்பிடிக்க முடியாத சமயங்களில் பெண் வேறுவிதமாக முடிவுகளை எடுத்துவிடுகிறாள்.

          வழக்கம் போலவே என் யோசனை எங்கோ சுற்றியது. என்னதான் பெண்ணியம் வளர்ந்திருந்தாலும் செவ்வாய் தோஷமுள்ள பெண்களுக்கான தனித்த போராட்டம் அவசியமாகிறது. பாம்பைக் கண்டால் நடுங்குவது போன்று செவ்வாய் தோஷம் என்றால் இனம் மதம் மொழி சார்ந்து ஒன்று போல பயப்படுகிறார்கள்.

ஆனால் அறிவியல் வளர்ச்சியோ இன்று செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் வெளிநாடுகளின் துணையின்றி தனித்த ஆய்வு மேற்கொள்ளப் படும் என்று இஸ்ரோ தலைவர் ராதா கிருஷணன் தெரிவிக்கிறார். சீனாவும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. நாம் எந்த செயல் செய்தாலும் சீனாவும் போட்டியாக களம் இறங்குவதை நினைத்துப் பெருமை கொள்வதா இல்லை சீனாவை நினைத்து ஆச்சர்யப்படுவதா தெரியவில்லை. இந்த விஷயத்தில் நாம் யாருடனும் போட்டி போட விரும்பவில்லை. நமக்கு நாமே போட்டியாளர்கள். எனப் இஸ்ரோ பேகியிருக்கிறது. அப்படியே செவ்வாய் தோஷ பெண்களுக்கான சாதகங்களுக்கான பலனையும் மாற்று ஏற்பாடுகளையும் கூறியிருக்கலாம். என்ன செய்வார்கள் அவர்கள் ராக்கெட்டுக்கே வழிபாடு செய்கிறவர்கள்

 

அகிலா நர்சிமின் தீக்கடல் கவிதை நூல் குறித்துப் பேசினார். கவிதைகளில் பல உணர்வு நிலையைப் பேசுவதாக இருக்கிறது. சில கவிதைகளை வாசித்தவர். நேர்த்தியான உரை. விஜய் தொலைக்காட்சியில் தமிழ்ப் பேச்சு நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பேசிப் பரிசு பெற்றவர். பேச்சுக்கலையின் பரிமாணங்களை அறிந்து பேசினார். மூன்று கவிதைகள் குறித்து சிறந்த ஒப்புமையை வழங்கினார்.

       நித்திலன் பேசும் போது காலச்சுவடு இதழில் ஜி.குப்புசாமி மொழிபெயர்த்து வெளிவந்த ஜப்பான் நாட்டின் முக்கியமான படைப்பாளி ஹாருகி முகராமியின் சிறுகதை வாசிப்பு பற்றி பகிர்ந்து கொண்டார். இந்தச் சிறுகதையின் வரும் சம்பவங்கள் நம் வாழ்வோடு ஒன்றிப்போகிறவையாக உள்ளது. பின்பாதியில் வரும் உரையாடல்கள் நுட்பமாக உள்ளது. நாம் பேசுகிற ஆண்பெண் உறவு பற்றி பூனைகள் உரையாடல் வழியாக காட்டியிருக்கிறார். படைப்பு மனம் என்பது இதுபோன்ற குறியீடுகளால் உருவாக்கப்படுவதேயாகும். இங்கு பேசிய மதுமிதா, பத்மாவதி, அகிலா போன்றவர்கள் குறிப்பிட்டது போலவே நம் சமூகத்தில் நிகழும் வெளிப்படையான பிரச்சனைகள் தான் நம்மையும் பாதிக்கிறது.

ஏற்கெனவே நாம் பொறுமைகாத்துக் கொண்டிருக்கிற உணர்வுகள் ஒரு நிலையில் வெடிக்கும் பொழுது யாராலும தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

இந்த நேரத்தில் ரிக் ரியோர்டனின் சமீபத்திய நாவல் நினைவுக்கு வருகிறது. அவருடைய புதினப்புனைவான பெர்சி ஜாக்சன் உலவும் கதைக்கள்ம்தான் தி ஹவுஸ் ஆப் ஹேட்ஸ். அதிகம் விற்பனையாகும் நாவல் வரிசையில் சேர்ந்துள்ளது. முந்தைய நாவலான கேன் க்ரானிக்கல்ஸ். இரண்டாவது ட்ரெஸ் நவாரே சீரிஸ். கிரேக்கப் பழங்கதை மரபுகளின் வழியாகவும் ரோமன் கத்தோலிக் மரபிலும் எழுதியிருக்கிறார். இந்த நாவலை எகிப்திய மரபின் வழியில் எழுதியிருப்பதாகச் சொல்கிறார்.

        எதார்த்தமான கதைப் போக்கில்தாம் எழுதிவருவதாகச் சொல்கிறார். சமீப காலமாக யார் யார் எழுதினாலும் மரபின் வழியாகவும் யதார்த்தமான வாழ்விற்கு சற்றுக் கொஞ்சம் புனைவுகளை இணைத்தே எழுதுகிறார்கள் என்று தோன்றுகிறது. அது ஹாருகி முகராமியாக இருந்தாலும் ஒற்றுமை ஒன்றுதான். அதுமாதிரியே இந்தியக் கர்ட்டுனிஸ்ட்டும் கிராபிக் நாவலாசிரியர்ருமான  விஸ்வஜோதி கோஷ் சமீபத்தில் எழுதி வடிவமைத்த “திஸ் சைட் தட் சைட்“ எனும் கிராபிக் நாவலில் மானுடவியல் கூறுகளை சுமார் இருபத்தியெட்டு அத்தியாயங்களில் பிரித்து வடிவமைத்திருக்கிறார். இலண்டன், அமெரிக்கா. வளைகுடா உள்பட வெளிநாடுகளில் வாழ்கிற இந்திய மனங்களின் உளவியல் கூறுகளை அவர் தொடர்ந்து வடிவமைத்து எழுதுகிறார்

       தலைமுறை இடைவெளிகளால் நிகழும் பிரச்சனைகள் பற்றி எழுதி வருகிற நேரத்தில் ரசனைகள் மாறுகிற மாறுபடுகிற தலைமுறை இடைவெளி ரசனைகளையும் நாம் கவனிக்கவேண்டியிருக்கிறது.

         அதுபோலவே சமீபத்தில் நடந்த விழாவில்   நீதிபதி ராமசுப்பிரமணியம் இந்தியாவின் பெருமைகள் குறித்து ஆச்சர்யப்பட் டிருக்கிறார். நமது ஆச்சர்யத்தை விடவும் உயர்குடி ரசனைகளின் ஆச்சர்யங்கள் நமக்கு அறிதல் அவசியம். திலகபாமா படைப்புகளில் காணப்படுகிற செய்திகளைக் கொண்டதாய் உள்ளது.

 அவர் உரையில் தொன்ம அமைப்புகளில் குடும்ப உறவுகள் முக்கியமானதாகவே இருக்கிறது. பெண்ணிய நிலைகளிலிருந்தே நாம் கவனிக்கிற பொழுது நாம் சிலவற்றைத் தகவலாகவே அறிய நேர்கிறது. அவர் பேசும் போது, உலகளவில் பகுத்தறிவு, கண்டுபிடிப்புகள், அறிவியல், வான சாஸ்திரங்கள், உளவியல் ஆய்வுகள்,கடினமான சமண்பாடுகள கண்டு பிடித்துள்ளோம், அந்தக் காலங்களிலேயே தட்ச்சீலம், நாளந்தா பல்கலைக் கழகங்கள் அமைத்து அறிவு புகட்டியிருக்கிறோம் அணுவைப் பிளக்கும் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புக்கு முன்பே நாம் அதுபற்றி அறிந்திருக்கிறோம். வரலாறு,மதங்கள், நாகரீகம்,பாரம்பரியம்,பண்பாடு, மொழியாக்கம், விளையாட்டுகள்,சதுரங்கம், அறிவியல் முன்னேற்றம், மாற்று மருந்துகள். நடத்தை விதிகள், கிருமிநாசினி, விலங்குகளிடமிருந்து நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருதல். போரினால் பாதிக்கப்படுகிற பொழுது தேவைப்படுகிற மருத்துவம் இப்படியாக நாம் உலகத்திற்கே வழிகாட்டியிருக்கிறோம்.

       ஏற்புரையாற்றிய திலகபாமா தன் கவிதை ஒன்று வாசித்தலுடன் பேசத்தொடங்கினார். தனது சிறுகதைகள் குறித்துப் பேசிய பொன்குமார், நாவல் பற்றிப் பேசிய மதுமிதா,பயணக்கட்டுரைகள் குறித்துப் பேசிய சுப்ரபாரதி மணியன்,கவிதைகள் குறித்த கட்டுரை வாசித்த பொன் இளவேனில் ஆகியோருக்கு நன்றி. நம் திருமணங்களில் கூட பெண் என்பவள் ஆணைவிட வும் உயரம் குறைவாக இருக்கவேண்டும். வயது குறைவாக இருக்கவேண்டும் அப்பொழுதுதான் அடங்கிப்போவாள். இல்லையென்றால் அடங்கமாட்டாள் என்று கட்டமைத்திருக்கிறது. குடும்பத்தில் உள்ள எல்லாப் பொறுப்புகளும் கட்டிக்காப்பாற்றவேண்டும் என்றுபோதிக்கப்பட்டிருக்கிறது. சில காரியங்களை பெண் செய்துவிடமுடியாது. அனுமதியுடன்தான் செய்யவேண்டும். எனது மருத்துவமனைக்கு வருகிற பல பெண்களின் பிரச்சனைகளை நான் கேட்டு அதிர்ந்து போயிருக்கிறேன். அவர்களால் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடிவதில்லை. தனக்குப் பாதுகாப்பு என்கிற அளவில் தான் சில முடிவுகளை அவர் எதிர்கொள்கிறாள். சில பெண்ணியவாதிகள் தங்கள் குடும்ப வாழ்வில் எப்படி நடந்து கொள்கிறார்கள் பிறகு வெளியுலகதிற்கு என்று எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இந்த விழாவையொட்டி நடைபெற்ற மிக முக்கியமான விழாவான

           நாகர்கோவில் நடந்த சுந்தர ராமசாமி விருது மற்றும் ராஜமார்த்தாண்டன் கவிதை விருது விழாவின் புகைப்படத் தொகுப்பு சுமார் நூறு படங்களை நண்பர் கவிஞர் சாம்ராஜ் வெளியிட்டிருந்தார். அத்தனை ஆளுமைகள் கலந்து கொண்டும் பங்கேற்பாளர்களின் வருகை குறைவாகவே இருந்தது. ஆச்சர்யமாக இருந்தது. வருசத்திற்கொன்று நடத்தினாலும் ஏன் பங்கேற்பாளர்கள் வரமாட்டேன் என்கிறார்கள் தெரியவில்லை விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா கோவையில் நடப்பது மாதிரி சுந்தர ராமசாமி-ராஜமார்த்தாண்டன் விருதுகளை கோவையில் நடத்தலாம். அல்லது அந்த வாய்ப்பை எங்களுக்கு அளியுங்கள்.

கோவை இலக்கியச் சந்திப்பின் வருகையாளர்கள் மிக அதிகமாக பங்கு கொண்டிருப்பது பிரமிப்பாகவே இருக்கிறது. அரங்க வசதிகள் சரியாக அமையுமென்றால் மேலும் இலக்கியத்தை மேம்படுத்த முடியும். இதற்கும் அவ்வளவு ஒன்றும் அவர்கள் எதிர்ப்பார்க்கும் அளவு மிகப்பிரபலமானவர்கள் கலந்து கொள்கிற  கூட்டமாகவும இது இல்லை.

குறிப்பாக ஜெயமோகன் நாகர்கோவிலில் கலந்து கொண்டிருப்பது அதிசயம். நம்ப முடியாத அதிசயம். இப்படித்தான்  ஒரு முறை உயிர்மை விழாவிலும் கலந்து கொண்டிருக்கிறார். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்பது மட்டுமல்ல இலக்கியத்திற்கு எதுவுமில்லை. எந்தக் கூடாரத்தில் யார் இருக்கிறார்கள் என்பதையே காணமுடியவில்லை. கவிஞர் சாம்ராஜை இளைய தளபதி ரேஞ்சிற்கு அவருடைய அசிஸ்டெண்ட்கள் தூக்கிக் கொண்டு கொண்டாடுகிறார்கள். மகிழ்ச்சிதான். முகநூல் வசதிகள் இந்த மனநிலையை மாற்றி தரத்தை உயர்த்தியிருக்கிறது.

அதே நேரம் ஒன்று கவனத்தில் இருப்பது அவசியம். தமிழ்ப்படங்களில் ஒரு உற்சாகமான பாட்டு ஒன்றுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படித்தான் மாறிக்கொண்டிருக்கிறது ஒரு சார்பு படைப்பிலக்கியம். அநேகமாக எல்லாவிருதுகளும் உடனடியாக அவருக்குத் தரப்பட்டுவிடும். அவர் உடனடியாக செய்யவேண்டியது ஒன்றுதான் ஏதாவது ஒரு சிறுகதை எழுதிவிடவேண்டும். கதாவிருது அவருக்குக் காத்திருக்கிறது. சம்ஸ்கிருதி சம்மான் உள்ளிட்ட விருதுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

     இப்படித்தான் செழியனும் ஒருகாலத்தில் கொண்டாடப்பட்டார். யாரும் எதிர்பாராத வண்ணம் “ஹார்மோனியம்“ எனும் சிறுகதையை இயல்பாக எழுதி வைக்க அவருக்குக் கதாவிருதை அள்ளித்தந்து திக்குமுக்காடச் செய்துவிட்டார்கள். அவரும் மிரண்டு போய் இலக்கியத்திலிருந்தே ஒதுங்கிவிட்டார். சில பாராட்டுக்கள் வளர்வதற்குப் பாராட்டுகிறார்களா இல்லை ஆட்டத்தை முடித்து வைப்பதற்குப் பாராட்டுகிறார்களா என்று தெரியவில்லை.

           பாராளுமன்றத்தேர்தல் உபவாசக் கூடுக்கைள் துவங்கியிருப்பதால் யாரைப்பார்த்தாலும் நாராயணசாமிகள், சுதர்சன நாச்சியப்பன்கள், ஞான தேசிகன்கள், இலகணேசன்கள், எச்.ராஜாக்கள் போன்ற செய்தித் தொடர்பாளர்கள் போலவே தெரிகிறார்கள். எல்லாமே காமன் வெல்த் மாநாடுகள்தானா ஒன்றும் புரியவில்லை. ஊடகவாதிகளும் ஆலாய்ப் பறக்கிறார்கள். என்ன செய்வார்கள் பாவம். அவர்கள் உண்மையைக் கண்டறிவதற்கு யாரிடம்தான் போவார்கள். யார் சாகிறார்கள். யார் வெடிக்கிறார்கள் என்றும் புரியவில்லை. நம்மூரில் ஒரு பழமொழி உண்டு “அறுக்கமாட்டாதவனுக்கு அம்பத்தெட்டு கருக்கருவாள்“ அதுமாதிரி சுதந்திரம்ட சனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் பற்றி எதையும் அறிந்து கொள்ள விழையாத மக்களுக்கு ஆயிரம் சானல்கள் இருபத்தி நான்குமணிநேரமும் ஒளிஒலியும் சிந்தி உழைக்கிறது.

 யோசனையிலேயே சிக்னலுக்கு நிற்கிறேன். வாலிபர் உபவாசக் கூடுகைகளில் வாலிபர்கள் கலந்து கொண்டு தீபாவளியை நாம் கொண்டாடலாமா என்று தங்கள் பாதிரிமார்களுடன் விவாதிக்கிறார்கள். அழகான, பேரழகு மிக்க யுவதிகள் ஏன் நமது கூடுகைகளுக்குள் இல்லையெனக் கேட்கிறார்கள். யுவதிகள் மதங்களைக் கொன்று தீர்த்துக் கொண்டிருப்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். பைபிளில் யுவதிகளின் பேழகுகள் குறித்த விவரணைகள் இல்லையே ஏன் என்றும் கேட்கிறார்கள். பாவம் என்ன செய்வது நானே நித்யமும் ஜீவனுமாயிருக்கிறேன்.

     சாலைகளில் வண்டிகள் சேர்கிறது. போக்குவரத்து கிளியர் ஆனது மாதிரி தெரியவில்லை. டீசல் பெட்ரோல் புகையை அருந்துகிறோம். ஒன்றன்பின் ஒன்றாக  வெள்ளை, கருப்பு,சிவப்பு ஸ்கார்ப்பியோ வாகனங்கள் சீரிப்பாய்ந்து வருகிறது. வாகனங்களில் தொங்கிக்கொண்டும் கோஷங்களை உரத்த குரலில் கூவிக்கொண்டும் ஸ்டண்ட் நடிகர்கள் போலப் பறக்கிறார்கள். ஏதோ தெலுங்குப்பட சூட்டிங் எடுக்கிறார்கள் என்றுதான் நினைத்தேன் முதலில். இல்லை. குருபூஜைக்காரர்கள் தன் பரிவாரங்களுடன் திரும்புவதாக போக்குவரத்து நெரிசலில் மாட்டியவர்கள் பேசிக்கொள்கிறார்கள்

            எனக்கு ரத்தத்தின் சக்கரையின் அளவு குறைவது போன்ற மயக்கம ஏற்பட்டது. ஒரு சீனி மிட்டாயை எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன். வண்டி புறப்பட்டது. நெருக்கடிகளிலிருந்து முன்னேறி முன்னேறி சாலைகளில் கலந்து  பறந்தபோது முப்பத்தி ஆறாம் நிகழ்வு என்னைப்பற்றிக் கொண்டு துரத்த ஆரம்பிக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக