சனி, 5 ஜனவரி, 2013

கோவை இலக்கியச் சந்திப்பின் 25 ஆம் நிகழ்வின் பதிவுகள்


கோவை இலக்கியச் சந்திப்பு-

வெள்ளி விழா சந்திப்பு

30.12.2012 கோவை

 

ஞானியின் படைப்புலகம்

விழாவின் பதிவுகள்----------

 

இளஞ்சேரல்             

              

              உற்சாகமான பண்டிகை நெருங்க நெருங்கவும் நம் வீட்டில் தம்பிக்கோ தங்கைக்கோ அல்லது நமக்கோ கூட ஒரு சுக நிகழ்வு நிகழப் போகிறது எனும் போது நமக்குள் கிறங்குமே ஒரு சந்தோசம் அப்படியான சிலிர்ப்பு. மாதவாடகை தருகிற குடும்பஸ்தனுக்குள் இருக்கிற வாடகை தவணை நாள் பற்றிய பயம் எங்களுக்கும் இருந்தது. கண் மூடித் திறப்பதற்குள் மாதம் பிறந்து கடைசி ஞாயிறு வந்து சேரும். பார்க்கப் பார்க்க செய்ய முடிக்கவும் பணி தீராது. யாவையும் அறிந்த நாங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே பணியைத் துவங்கிவிட்டோம்.

          எல்லாவகையிலும் இந்த நிகழ்வு பெருமை கொள்ளத்தக்கதாக மாறிவிட்டது. மாதங்களில் மார்கழியில் விழா.25 ஆம் விழா. ஆண்டின் இறுதி நிகழ்வு-ஞானி அவர்களின் இயக்கத்திற்கான விழா-பங்கேற்கும் தமிழின் முக்கியமான ஆளுமைகள்- தற்காலத்தில் மூத்த படைப்பாளர்களுக்கு அவர்களுடைய நண்பர்கள் மாணவர்கள் நாடு முழுவதும் விழா எடுக்கும் சமயம் இப்படியாக இதமான சூழல்.தமிழகத்தில் நடப்பது வரவேற்கத் தக்கது.

         மேற்படியான சூழல்களை நாம் உருவாக்கும் போதுதான் சமூக கலாச்சார நிகழ்வுகளில் பண்பாட்டு முறைகளில் மேன்மை நிகழ்கிறது. அப்படியாகவே உறவு-

சகிப்புத்தன்மை-சகோதர மனப்பாங்கு உண்டாகி ஒவ்வொரு நகரம் நாடு கிராமத்தில் அமைதி நிலவுகிறது. ஒரு கும்பாபி சேகமோ குடமுழுக்கோ தேர்த்திருவிழாவோ நடந்தாலோ நிகழ்த்தப்பட்டால் மட்டுமல்ல மும்மாரி மழை பெய்து நாடு செழிப்பது. இது மாதிரியான விழாக்களாலும் தான் நாட்டில் மும்மாரி பொழிகிறது என்பதும் உண்மை.

            விழாவிற்கு முந்தைய நாள் மழைத் துறல் பனிக்கும் குளிருக்கும் இதமாக இருந்தது. எல்லா கூம்பு ஆரன்களில் நாம் ஆண்டாண்டு காலமாகக் கேட்டுச் சலிக்காத பக்திபாடல்கள். பொதுவாக டிசம்பர் மாதத்தில் இலக்கிய நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது வழக்கம். ஆன்மீக பக்தி நிகழ்வுகள் இசை நிகழ்ச்சிகள் காரணமாக இலக்கிய பங்கேற்பு ஆர்வலர்களின் வருகை குறைவாகும். இலக்கியச் சந்திப்பின் 25 ஆம் நிகழ்வு டிசம்பரில் வந்தது மகிழ்ச்சி. இதற்குக் காரணம் எஸ்.ராமகிருஷணன் கலந்து கொண்டு சிறப்பித்த சிறப்பு நிகழ்வின் காரணமாக ஒரு சந்திப்பு கூடுதலாகி வருடத்தின் இறுதியிலேயே வெள்ளி விழாவிற்கான வாய்ப்பு. நிச்சயமாக நம் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.

 

      கருத்தரங்கு நிகழ்ச்சிகளின் நீண்ட பட்டியல் காரணமாக சரியாகக் காலை 9.30 மணிக்குத் துவங்கினால் தான் சரியாக இருக்கும் என்று கருதினோம். மின்சாரம் வந்திருக்கவில்லை. அரங்கில் பனி மூட்டம் காரணமாக இருட்டு.

             பெங்களுரிலிருந்த படிகள்”- “இலக்கு“ ராமசாமி அவர்களையும் சென்னையிலிருந்த வந்திருந்த பாவண்ணன் அவர்களையும் ரயில் நிலையத்தில் வரவேற்றோம். நிகழ்வின் பங்கேற்கும் ஆளுமைகளை வரவேற்பதில் சுகம் தான். அதிகாலை ரயிலடியும் பயணக் களைப்பு மிக்க மக்கள். குழந்தைகள் தரையைக் கண்டது கொள்ளும் உற்சாகம். ஆட்டோக்களின் அவசர திருப்பல். எளிதில் கலைந்து போகாத பாதசாரிகளின் சோம்பல். புறப்படும் ரயிலைப்பிடிக்க ஓடும் பிரயாணிகள்.

             நானும் இளவேனிலும் புத்தக மூட்டையுடனே ரயில் நிலையம் போய்விட்டோம். நடந்துசெல்லும் தூரமே லாட்ஜ் இருந்ததால் கொஞ்சம் நடை பயிற்சி. வந்திருந்த விருந்தினர்களுக்கான அறை தயாரானதும் விடைபெற்றுக் கொண்டு  கிளம்பினோம்.

         விழா அரங்கத்தை வந்து கலையரங்கமாக மாற்றத் துவங்கினோம். பொள்ளாச்சியிலிருந்த வந்துவிட்ட சோழநிலா மல்யுத்த வீரனைப் போல  அந்த மரடெஸ்க்களில் பீரோ மீதும் சிலசமயம் சுவர்கள் மீதும் ஏறி இறங்கி சரிசெய்தார். 

          இரண்டு நாட்களாக நிற்காத வாந்தியையும் வீசிங்க் காய்ச்சலையும் பொருட்படுத்தால் அரங்கு வந்த யாழியை தியாகுவைப் பார்க்கக் கஷ்டமாக இருந்தது. ஆடுகளம் இறக்குவதற்குத் தேவை பிட்னஸ் சர்டிபிகேட். தருவதற்கு இளவேனில் தயங்கினார். நீங்கள் ஓய்வெடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என்கிறோம் கேட்வில்லை..

         நான்தான் யாழி இன்று சதமோ குறைந்த பட்சம் மேட்ச் வின்னராக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. இன்று எத்தனை பங்கேற்பாளர்கள் வருவார்கள் என கணக்கிடத் துவங்கினோம்.

                 விஜயகாந்த் குரலில் பேசி உடல் வலி தெரியாமல் வேலை நடப்பதற்கு சோழநிலா உதவினார்.  யாழி கிரொண்டுக்குள் இறங்கி களத்தின் ஈரத்தன்மையைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அதாவது அந்த மைக்செட்டை அபாராமாக பிரசாத் ஸ்டுடியோ இளைய ராஜாவின் ஒலியமைப்பு சவுண்ட் என்ஜினியராக மாறியது ஆச்சர்யமாக இருந்தது. மைக் செக்..என்று சோழநிலா ப.தியாகு, நான் இளவேனில் பேசிப்பார்த்தோம். 22 அமர்வுகளில் மைக் வைக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

         மைக் செட் களம் அமைப்பின் நிறுவனரும் மூத்த ஆளுமையுமான தோழர் ஆறுமுகம் அவர்களின் வீட்டிற்கு சென்று பெற்றோம்.

        அவரின் துணைவியார் எங்கள் பதற்றம் அவசரம் பார்த்து அமைதியாகவும் நிதானமாகவும் செயல்படுவதற்கு அறிவுறுத்தினார்கள்.

              தேநீர் தயாரித்துக் கொடுத்து பிஸ்கெட்டுகளைத் தந்தார்கள். நான் பிஸ்கெட்கள் எப்பொழுது சாப்பிட்டாலும் அ.முத்துலிங்கத்தின் “மகாராஜாவின் ரயில் வண்டி“ கதைதான் ஞாபகம் வரும். திருமதி ஆறுமுகம் “இந்த பிஸ்கட் சாப்பிட்டுப் பாருங்கள்.

இந்த பிஸ்கட்களில் சில விசேசம் இருக்கிறது. சாப்பிடும் போது சப்பாத்தி வாசம் வீசும். பசி நேரத்தில் சாப்பிட்டால் சிற்றுண்டிக்கு சமமான சத்து இருக்கிறது.“

      அந்த பிஸ்கட்களின் சத்து மாலை 4 மணிவரை தாங்கியது.

           ஏற்கெனவே செய்ய செய்ய மூயாமல் வேலை அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே இருந்தது. பட்டியல் போட்டதில் இருக்கும் வேலைகள் தீராமல் துண்டு பட்டியல்கள் பிறந்தது. இருந்தும் கூட வந்திருந்த விருந்தினர்களை எங்களால் அறைக்குச் சென்று சாப்பிட அழைத்துப்போக முடியவில்லை. மகேஸ் லாட்ஜில் அறைகள் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். ரயில் நிலையத்திற்கு அருகிலும் பொருத்தமான அமைவிடமும் சிறந்த பராமரிப்பும் கொண்ட அறைகள். நாங்கள் புதிது புதிதாக அவர்கள் வருகிறார்கள் இவர்கள் வருகிறார்கள் என்று கடைசி நேரத்தில் அளித்த மன நெருக்கடிகளை லாட்ஜ் பணியாளர்கள் சிறப்பாக சமாளித்தது திருப்தியாகவும் அப்பாடா என்றிருந்தது.

 

          இலக்கியச் சந்திப்பின் வெள்ளி விழா வரைக்கும் நகரும் என்று நானும் நண்பர்களும் நினைத்திருக்கவில்லை. துவக்கப்பட்ட நாள் மற்றும் அதன் பின்னணி இன்றும் நினைவில் இருக்கும் இனிய அனுபவம். முதல் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்த அமைவிடம் காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் இருக்கிற அரசு ஊழியர் சங்கத்தின் அரங்கமான தாமஸ் கிளப் எனும் அரங்கு. அந்த அரங்கு முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியாளரும் சிறந்த அதிகாரிகளில் ஒருவருமான சங்கர் ஐஏஎஸ் அவர்களின் பெயரால் அமைந்த அறிவொளி சங்கர் அரங்கம் அது.

        அந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்றிய வே.மு.பொதியவெற்பன் 25 ஆம் நிகழ்விலும் பங்கேற்றுப் பேசியது அதிசயம்  என்றும் சொல்ல வேண்டும்.

              முதல் சந்திப்பிற்காக அச்சிட்டிருந்த வரவேற்பு பதாகையில் புத்தம்புதிய பேனரை அந்த வழியாகப் போன யாசக துறவி தாம் உறங்குவதற்காக அப்போழுதே அறுத்து எடுத்துக் கொண்டு போனதை மறக்க முடியவில்லை. பேனரின் மசியின் வாசனை கூட அந்த இடம் முழுக்கப் பரவியிருந்தது,

             அந்த பேனர் களவு போனது தமிழச் சமூகத்தின் செண்டிமென்ட் மனம் துவள ஆரம்பித்தது. நிகழ்விற்கு வந்த மு.ஹரிகிருஷ்ணன் மற்ற பேனர்களைக் கட்டுவதற்குத் துணை புரிந்தார். முதல் நிகழ்வை நடத்தும் போது இருந்த உழைப்புச் செல்வம் வற்றாமல் அதே ஈரத்துடன் இது நாள் வரை இருக்கிறது.

 

            25 ஆம் நிகழ்வு கொஞ்சம் மேலும் அழுத்தமாக நடத்துவதற்கு யோசித்துக்கொண்டிருந்த போதுதான் தமிழ்நாடு முழுக்க மூத்த ஆளுமைகளுக்குத் தத்தம் மாணவர்கள், வாசகர்கள், நண்பர்கள், சகோதரத்துவப் படைப்பு மனம் கொண்டவர்கள் விழாக்களை எடுத்துக் கொண்டிருப்பது நினைவில் வந்தது.

          இயல் அறிஞர் ஞானி அவர்களின் படைப்பு எழுத்து- இதழியக்கம் என்கிற பிரிவுகளில் இரு நாட்கள் ஆய்வரங்கம் நடத்த விரும்பினோம். அவருக்கு இப்படியான விழாக்களிலும் சடங்குகளிலும் விருப்பமில்லாதவர். எளிமை, இயல்பான உரையாடல்களை மட்டுமே விரும்புவார்.  அவரைச் சம்மதிக்க வைக்க முடியுமா என்ற யோசனைதான் இடித்தது. அவரிடம் எப்படி சம்மதம் வாங்குவது என்று யோசித்துக் கொண்டேயிருந்தோம். அப்படியென்ன நான் செய்துவிட்டேன். பிறகு பார்க்கலாம் என்றார். ஏற்கெனவே தொடரும் நிகழ்வுகள் சிறப்பாக நடக்கிறது. அதைத் தொடருங்கள் என்றார்.

      அவரைப் பொருத்தவரை நாங்கள் ஏற்கெனவே சிரமத்தில் இருப்பதால் நிதிச்சிக்கல் ஏற்பட்டுவிடக்கூடாது. என்பதின் காரணமாகவே அவர் தவிர்த்ததையும் புரிந்து கொண்டோம். இருந்த போதிலும் நாங்கள் சமயம் கிடைக்கும் போது விழா பற்றிய விருப்பத்தைத் தெரிவிக்காமல் இல்லை. 

          விழாவின் சிறப்பான அமர்விற்கு வந்திருந்து  உரையாற்றிய, கட்டுரை வாசித்த ஆளுமைகள்   உரையாளர்கள் உள்பட கட்டுரை அனுப்பி வைத்தவர்கள் எல்லோரும் ஞானி அவர்களின் மார்க்சியம் திறனாய்வு குறித்தே இருந்தது அபுர்வம் என்று சொல்லவேண்டும். இந்த அரிய பெரும் கருத்தரங்கை மார்க்சியத்தின் எதிர்காலம் குறித்துப் பேசுகிற கட்சி மார்க்சியர்கள் மார்க்சிய சிந்தனை யாளர்கள் யாரும் வந்து பயண்படுத்திக் கொள்ள வில்லை என்பதை பதிவு செய்து தான் ஆகவேண்டும்.       

 

         நிகழ்வின் ஒன்பது மணி நேரத்து உரைகளையும் காட்சிகளையும் தொகுத்தால் முக்கியமான பதிவுகள் கிடைக்கும். அரிய களஞ்சியமாகவும் பதிவாகும். ஆயினும் முக்கியமான விழாத் துளிகளை மட்டும் இங்கு பதிவிடப்படுகிறது.

            

        10.30 மணிக்கெல்லாம் பங்கேற்பாளர்கள் வந்திருந்த நிகழ்வைத் துவக்குவதற்கு உற்சாகம் அளித்தார்கள். முனைவர் கு.முத்துக்குமார் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அமர்வு ஒன்றின் நிகழ்ச்சிகள் துவங்கியது. வரவேற்புரையை வழங்க நான் அழைக்கப்பட்டேன். வெள்ளிவிழா நிகழ்விற்கு அரங்கு வழங்கியமைக்கும் நிகழ்வின் காரணகர்த்தா ஞானி அவர்களுக்கும் நன்றி தெரிவித்தேன். வந்திருந்த தமிழின் முக்கிய ஆளுமைகள் பங்கேற்பாளர்கள் மற்றும் ஞானியின் உடன் இயங்கிய ஆளுமைகள் இளம் படைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றேன். இந்த வரவேற்பு உரை இடத்தில் நின்று பேசுவதற்கான வாய்ப்பை வழங்கியவர் இளவேனில் காரணம் நான் நன்றியுரையும் வரவேற்பு அவருமாக இருந்தது. அவர் நன்றியுரைக்கு மாறினார்.

           பேராசிரியர் தமிழவன் மதியம் தான் பெங்களுரிலிருந்து வருவதால் அவருக்குப் பதிலாக படிகள்“ ராமசாமி அவர்கள் தலைமைப்  பொறுப்பு ஏற்றார். ராமசாமி பேசும் போது தமக்கும் ஞானிக்குமான 40 ஆண்டு கால நட்பு மற்றும் இதழியக்கம் பற்றியும் உரையைத் தொடர்ந்தார். அவருடைய இதழ் வெளியீடுகள் பதி்ப்பு குறித்தெல்லாம் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

      முன்னதாக நூல் வெளியீடு நடைபெற்றது. 25 நிகழ்வுக்கென தயார் செய்யப்பட்ட நேர்காணல் பகுதியை பேராசிரியர் செங்கோடன் கேட்ட கேள்விகளுக்கு ஞானி அளித்த பதில்கள் புதுப்புனல் சார்பாக ஒரு நூலாக வெளிவந்து சிறப்புப் பெற்றது. ஞானியுடனான நேர்காணல் எனும் தலைப்பில் சிறப்பாக அச்சிடப்பட்டிருந்தது. இந்த விழாவுக் கென்றே நேர்த்தியாக வடிவமைப் பட்டிருந்தது. நூலை பாவண்ணன் வெளியிட க.வை.பழனிச்சாமி பெற்றுக் கொண்டார். நூலில் இடம் பெற்றுள்ள நேர்காணல் பற்றிய தமது கருத்துக்களை படிகள் ராமசாமி எடுத்து வைத்தார்.

        சங்க இலக்கியத் திறனாய்வு என்னும் தலைப்பில் முனைவர் க.ஜவஹர் கட்டுரை வாசித்தார். ஞானியின் சங்க இலக்கிய நூல்கள் வாசிப்பு அந்த நூல்களுக்கு எழுதிய கட்டுரைகள் பற்றிய விரிவான அளவில் எழுதப்பட்ட கட்டுரையை ஜவஹர் வாசித்தார்.

           ஞானியின் தமிழ்நேயம் நிகழ் பரிமாணம் வேள்வி உள்பட பல இதழ்களில் அவருடைய உரைகளில் எல்லாம் அவர் வலியுறுத்திய கோட்பாடுகள் தமிழர் மெய்யியல் பார்வை குறித்தும் அவர் கட்டுரை விரிவாக பேசியிருக்கிறது.

         பாவண்ணன் தமது உரையில் தமிழ் நாவல் இலக்கியத்திறனாய்வு எனும் தலைப்பில் ஞானி அவர்களின் தமது கட்டுரைகளில் தமிழில் வெளிவந்த நாவல்கள் பற்றிய அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் மீதான திறனாய்வை வைத்தார்.

சுந்தரராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகளை அவர் ஏற்றுக்கொண்டது. கொற்றவை பற்றியும் பிறகு எம்.ஜி.சுரேஷ் நாவல்கள் பற்றிய மதிப்புரைகளையும் நினைவு கூர்ந்தார். நாவல் பரப்பில் நாம் இன்னும் செல்லவேண்டிய நிலைகள் இன்னும் பதியப்பட வேண்டிய காலத்தினைப் பற்றியும் பாவண்ணன் கவனப்படுத்தினார். அவருடைய ஆழமான கட்டுரையும் தெளிவான விமர்சனமும் பங்கேற் பாளர்களுக்கு புதிய புதிய வடிவங்கள் நாவல் பற்றிய சிந்தனைகள் தோன்றியது. பாவண்ணனின் உரை தெளிவு மிகுந்த திறனாய்வுக் கோட்பாடாக இருந்தது எனலாம்.

           கவிஞர் செந்தமிழ்த் தேனீ கருத்துரை வழங்கினார். ஞானியின் உதவியாளராக,இல்ல நண்பராக அவருடைய தோழராக பழகிய அனுபவங்களும்  உரையாடல் பற்றியும் வாசிப்பின் வழியாக அவர் தேடும் நுட்பங்களைக் குறித்து உரையாற்றினார்.

        புதுப்புனல் ஆசிரியர் ரவிச்சந்திரன் ஞானியின் புதிய நூல்களான நேர்காணல்,அகமும் புறமும் பற்றி அறிமுகம் நிகழ்த்தினார்.

      இரண்டாவது அமர்விற்கான தலைமையை ஏற்ற புலவர் ஆதியின் உரை ஞானியினுடனான நட்பு மற்றும் அவர் மார்க்சிய திறனாய்வு வழியாக எழுதிய படைப்பு மற்றும் நாடு முழுவதும் அவருடைய ஆய்வு கள் மதிக்கப்படுகிறது. ஒரு வகையி்ல் எங்கள் ஊர்க் காரர் என்பதில் கூடுதலான மகிழ்ச்சி.

        முனைவர் வே.சுகுமாரன் ஞானியின் கவிதைகள் அளித்த அனுபவங்களைப் பேசினார். கள்ளும் முள்ளும் கவிதைகளும்,அகலிகை தொகுப்பு களிலிருந்தும் தனிக் கவிதைகளில் அவர் காட்டிய ஈடுபாடு கவிதைகள் வாசிப்பதிலான ஆர்வம் அவர் கவிதைகளைத் தொடர்ந்து எழுதியிருந்தால் முக்கியமான கவிஞராகவும் அறியப்பட்டிருப்பார் என்றார்.

     இந்த அமர்விற்காக கருத்துரைகளை பாவலர் இரணியன், இரா.செல்வி, சுப்ரபாரதி மணியன் வழங்கி

னார்கள். ஞானியின் படைப்பிலக்கியத்தில் அவர் காட்டிய ஈடுபாடு சளைக்காமல் எழுதியதும் இதழ்களை தொடர்ந்து நடத்துவதில் உறுதி பற்றி யெல்லாம் தமது வாழ்துரையில் குறிப்பிட்டார்கள்.

               மூன்றாம் அமர்வு முனைவர் அறவேந்தன், பெரியாரியல் ஆய்வுமையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கம் நடைபெற்றது.

       மார்க்சியப் பார்வை குறித்து கட்டுரையை அருட்திரு பிலிப்  சுதாகர் அனுப்பியிருந்தார். வாசித்தவர் ஜவஹர்.

      பெரியாரியம்- பெண்ணியம் சிந்தனைகள் பற்றி அறிவன் பேசினார். அறிவன் உரையில் பெரியாரின் கொள்கைகளில் ஞானியின் உடன்பாட்டு அம்சங்ளையும் குறிப்பிட்டார்.

        கடவுள்-சமயம் பற்றி இளவேனில் (பள்ளிப்பட்டி) பேசினார். ஞானியின் எழுத்துகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் அவர் தனது காலத்தின் இளைய தலைமுறையினரையும் வசப்படுத்துகிற எழுத்தாக இருக்கிறது சோர்வடையாத அவருடைய இயக்கம் எங்களைப் போன்ற இளையதலைமுறையினருக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது என்றார்.

        கடவுள் சிந்தனை உருவ வழிபாடு சார்ந்த கருத்துகளை ஞானி கையாண்ட விதம் புதுமையானது என்றார். கட்சியில் வறட்டுத்தனமான சிந்தனைகள் மேலோங்கிய போதும் படிக்காமல் கையாளப்படும் கொள்கைகள் குறித்த விமர்சனங்கள் என்னைப் போலவே ஞானிக்கும் இருந்தது.எஸ்.என்.நாகராசன்,

தொடர்ச்சியாக அவர் விவாதங்களிலும் ஆய்வுரைகளிலும் ஈடுபட்டதைப் பாராட்டினார். ஞானி தன்னுடைய குரு என்று போற்றும் மூத்த மார்க்சிய அறிஞர் எஸ்.என்.வந்திருந்து வாழ்த்தியது நெகிழ்ச்சியான தருணம்   

       ஆய்வறிஞர் செ.சு.பழனிச்சாமி கருத்துரை வழங்கினார்கள். திறனாய்வு முறைகளில் அதிக அளவு மார்க்சீய சிந்தனையில் எழுதிய திறனாய்வாளர் ஞானியாக மட்டுமே இருக்க முடியும்.

ஐயாவைப் போல எந்த அறிஞராவது எழுதியிருக்க வாய்ப்பேயில்லை..

           நான்காவது அமர்வில் அஜயன் பாலா வானம்பாடி ஆய்வுகள் தலைப்பில் பேசினார்.செறிவு மிக்க கட்டுரையாகவும் குறிப்பிடும்படியான பல விடுபடல் பற்றி பேசினார்.

        ஞானி தன் நிறைவுரையில் மறக்காமல் நினைவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது. இலக்கியத்தைப் பொருத்தவரை வயசு வித்தியாசம் கிடையாது. எனக்கும் ஞானிக்கும் ஓரே வயசுதான். இப்பொழுதும் வானம்பாடி இயக்கம் இயங்கினால் சிறப்பாக இருக்கும் என்றார்.

          முனைவர் கு.முத்துக்குமார். தமிழ்நேயம் இதழ் அனுபவங்கள் பற்றி விரிவாகப் பேசினார்.தமிழ் நேயத்தில் எழுதியவர்கள் பின்னாளில் தமிழ்ச்சூழலி்ல் அதிகம் கவனப்படுத்தப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். தமிழ்நேயம் 70 இதழ்களில் வெளியான கட்டுரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பல தமிழறிஞர்களின் வாழ்வும் படைப்பும் தலைப்பில் வெளியான கட்டுரைகள் ஆழமானவை.

       ஞானியுடனான நேர்காணல் நிகழ்த்திய செங்கோடன் தனது சில கேள்வி-பதில்களை வாசித்து

மார்க்சியம் குறித்த நீண்ட சந்தேகங்களுக்கு அவர் பொறுமையுடன் விளக்கங்கள் தந்ததை நினைவு கூர்ந்தார்.

         ஞானியின் படைப்புகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவரும் களம் இலக்கிய அமைப்பாளருமான முனைவர் ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினார்.   ஒவ்வொரு துறைகள் மீதும் அவர் காட்டிய தீவிரமான அக்கறைதான் அவரை இயங்க வைக்கிறது. அவர் நிறைய ஆளுமைகளை வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்தவும் செய்தார்.

         யாழ் நூலகம் மற்றும் தமிழி்ன் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் துரைமடங்கன் வாழ்த்துரையில்

ஞானியின் திறனாய்வுகள் மற்ற அறிஞர்களிடமிருந்து எவ்வாறு வேறுபட்டது என்பதற்கான தரவுகளைத்

தந்தார். குறிப்பாக ரஷ்ய வீழ்ச்சிக்கும் பிறகு உலகளாவிய சோசலிச மாறுபாடுகளையும் விமர்சிக்கும் அவர் தன் நிலையில் மார்க்சிய அடிப்படைக்கு அவர் தரும் சான்றுகள் முக்கியமானவை என்றார்.

            முனைவர் ச.இரவி தன்னுடைய உரையில் தற்கால பல்கலைக்கழக ஆய்வுகள் மாணவர்கள் துறை ஆய்வுகளில் நடைபெறும் உலகளாவிய மார்க்சியத் தாக்கம் முக்கியமானவை என்றார். எல்லாத் துறைகளிலும் மார்க்சியத்தின் தாக்கம் பரவியிருக்கிறது. தாம் முதலில் ஞானியை சந்தித்தது இன்றும் நினைவிருக்கிறது. ஆய்வுக்காக அவரிடம் உரையாடல் நிகழ்த்திய போது வரை மார்க்சியம் பற்றிய எதிர்மறையான கருத்து கொண்டிருந்தேன். ஆனால் அவருடன் உரையாடிய போது அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டேன் என்றார்.

         த.சக்தி வேல் பேசிய போது தனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு அவருடன் இணைந்து பணியாற்றுவதும் வாசிப்பதும் என்றார். எல்லா துறைகளிலும் அவர் காட்டும் ஆர்வமும் அறிந்து கொள்வதில் ஈடுபாடும் பிரமிப்பானவை. அவருடன் பழகியவர்கள் நன்கு அறிவார்கள் என்றார்.

  வே. மு.பொதிய வெற்பன் பேசியபோது ஞானியின் இதழியக்கம் மற்றும் அவர் காட்டும் நவீன இலக்கிய ஈடுபாடும் திறனாய்வு முறைகள் தமிழ்ச் சூழலில் பெரும் கவனப்படுத்தப்படுபவை. முக்கியமானவை.

ஆனால் ஒரு சில படைப்பாளர்கள் தவறாக நடந்து கொள்வதை நீங்கள் ஏன் ஆதரிக்கறீர்கள். அவர்களை நீங்கள் கண்டித்துப் பேசுவதில்லை.நீங்கள் எழுதும் கட்டுரைகளை அவர்கள் பிரசுரம் செய்ய மறுக்கிறார்கள் இருந்தாலும் நீங்கள் அவர்களை ஆதரிப்பதுதான் ஏன் என்று வினா எழுப்பினார். நிகழ்ச்சி நிரலின் அவகாச காலம் கருதி மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டதை வரவேற்க வேண்டும்.

         தமிழவன் உரையாற்றிய போது தன் இளமைக்காலத்தின் வாசிப்பிலிருந்து துவங்கிய அவர் வே.மு.பொதிய வெற்பன் நடத்திய “பறை“ இதழ் குறித்துப் பேசினார். இன்றைய நிலையில் எழுதுபவர்கள் சிந்திப்பவர்கள் யாவரும்  கனவு நிலைக்குள்ளாக சென்று விடுகிறார்கள் ஒவ்வொரு செயலும் படைப்பும் சிந்தனையும் கனவு நிலை வசத்திற்குப் போய் விடுகிறது. தர்க்க நிலைதான் நமக்கு அவசியம் என்றார். கனவு நிலையோ கனவு கற்பனை நிலை இயக்கமோ எழுத்தோ தேவையில்லை. நமது படைப்பாளர்கள் கனவு நிலையைத்தான் விரும்புகிறார்கள் தர்க்க நிலையை விரும்புவதில்லை என்றார். நம் தமிழச் சமூகத்தின் மேன்மைக்கு தர்க்க நிலைதான் தேவை. ஞானிக்கும் எனக்குமான உறவு 40 ஆண்டு களுக்கும் மேலானது. அவருடன் உரையாடுவதும் இயங்குவதும் மகிழ்ச்சியானது. என்றார்

             ஏற்புரையாற்றிய ஞானி காலை 10.30 மணிக்குத் துவங்கிய ஒவ்வொரு நிகழ்வில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை சுருக்கமாகத் தொகுத்து. விமர்சனமாக வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் பேசினார். அவர் எழுத்து-திறானாய்வு- இதழியக்கம் மட்டுமல்ல தமிழின் தலைசிறந்த  மார்க்சிய உரையாளர் என்பதாகவும் இருந்தது அவருடைய நேர்த்தியான தெளிவான உரை.              

          காலையிலிருந்து அவர் உன்னிப்பாகக் கவனித்த நிகழ்வின் சாராம்சங்களை  அவர் இப்போது பேசும் உரையை அரங்கின் பார்வையாளர்கள் உன்னிப்பாகக் கவனித்தார்கள்.  

        இளவேனில் (பள்ளிப்பட்டி) அஜயன்பாலா ஆகியோரின் பேச்சில் குறிப்பிட்டதை வரவேற்ற அவர் வானம்பாடிகளின் வரலாறை தம்மால் எழுத முடியும் ஆனால் சிற்பி புவியரசு மேத்தா ஆகியோரால் எழுத முடியுமா எனத் தெரியவில்லை. என்னால் எழுத முடியும் ஏனென்றால் நான் என்னை உடைத்துக் கொண்டு இயங்கியிருக்கிறேன். அவர்கள் எழுதினாலும் வரவேற்பேன். ஒரு வேளை அக்னிபுத்திரன் எழுதலாம். தனக்குக் கல்வி கற்பித்த தன்னுடைய பள்ளி ஆசிரியர்களை நினைவு கூர்ந்தவர் தனக்கும் எஸ் என் நாகராசன் உறவு மேன்மையானது. நான் மிகவும் போற்றக்கூடியது. என்பது அவர் தான் எனக்கு குரு ஆசான் எல்லாம். முதல் முதலில் மார்க்சியத்திலிருக்கும் எண்ணற்ற துறைகளை மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார். இயங்கியலை மெய்யியலை. திறனாய்வு. சூழலியல் தத்துவம் வரலாறு பற்றியெல்லாம் அவர்தான் இங்கு கொண்டு வந்து தந்தார். கட்சிக்காரர்கள் எந்தளவிற்கு மார்க்சீயக் கல்வி கற்றிருக்கிறார்கள் என்பது தெரியாது. நாங்கள் அவ்வளவு வாசித்தோம். அத்தனை துறைகளைத் தேடித்தேடிக் கற்றோம். கற்றுக் கொண்டே இருக்கிறோம். புலவர் ஆதி அற்புதமாகக் கவிதைகள் எழுதுவார் தெரியுமா அவருடைய வாசிப்பு என்ன இயக்கம் என்ன உழைப்பு என்ன. அந்த மாதிரி யாராவது கட்சிக்காரர் உழைத்திருக்கிறீர்களா. வாசித்திருக்கிறீர்களா.

       அப்படிப் படித்தோம். எழுதினோம். இயங்கினோம். ஒரு கட்டத்தில் என்னைப் பற்றி அவதூறு செய்திகள் வெளியிட்டார்கள். அதை ஒரு மார்க்சிய இதழில் வெளியிட்டார்கள். நமது நண்பர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்கவில்லை. ஏன் உங்களுக்குத் தெரியாதா என்னைப் பற்றி..நான் கவலைப்படவில்லை.

      ஒரு முறை ஜெயகாந்தன் ஜெயமோகனைத் தன் குரு என்று சொன்ன போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்ன இவர் வயதென்ன எழுத்தென்ன. அனுபவம் என்ன.. இவர் அவரை குரு என்கிறாரே. என்று யோசித்துக் கொண்டிருந்த போது சென்னையில் ஒரு விழா ஏற்பாடானது. அவர் என்னருகில் அமர்ந்திருக்கிறார்.

அவரிடம் அந்த சந்தேகத்தைக் கேட்டேன். எப்படி அவரை குரு என்று சொல்கிறீர்கள் என்ற போது அவர் நான் வாசிக்காததை அவர் வாசிக்கிறார். ஒவ்வொரு விசயத்தையும் ஆழமாகப் பார்க்கிறார். நான் போகாத எழுதாத விசயங்களை எழுதுகிறார். எத்தனை துறைகள் பற்றியும் எழுதுகிறார். இயங்குகிறார் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.. அதனால் தான் குரு என்றேன். என்றார். அப்படித்தான் நானும் நிறையக்கற்றுக் கொள்கிறேன். நண்பர்கள் மூலமாக ஒவ்வொரு நிகழ்வுகளையும் அறிந்து கொள்கிறேன்.

        கருத்தரங்கில் உரையாற்றிய ஆளுமைகளின் விமர்சனக் குறிப்புகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளித்த அவர் அவருடைய தளர்வறியா இயக்கத்திற்கு தன்னுடைய வாசிப்பும் இன்னும் ஆற்ற வேண்டிய பணிகளின் இருப்புமே காரணம். வந்திருந்து நிகழ்வில் கலந்து கொண்டு கட்டுரை வாசித்த உரையாற்றிய ஆளுமைகளுக்கும் இளம் படைப் பாளர்கள் பத்திரிக்கையாளர்கள் ஊடகவிய லாளர்கள் இலக்கிய ஆர்வலர்களுக்கும் நன்றி தெரிவித்தார். ஏழுமணிக்கு மின்சாரம் தடைபடும். ஆனால் அவருடைய உணர்ச்சிப் பிழம்பான உரையை கேட்க வேண்டும் என்பதால் என்னவோ மின்சாரம் கூட தடைபடவில்லை. இயற்கையாகவோ அதிசயமாகவோ என்னவோ 12 மணிக்கு வந்த மின்சாரம் தடைபடவே இல்லை. நிகழந்த பற்பல அபுர்வ நிகழ்வுகளில் இதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒரு மகத்தான அறிஞருக்கான ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில்

முக்கியத்துவமும் அவசியமும் கருதி வந்திருந்து அவரையும் அவர் உழைப்பையும் போற்றிய பங்கேற்பாளர்கள் எந்நாளும் போற்றத்தக்கவர்கள்.

       

        விழா பற்றிய செய்திகளை மின்னஞ்சல், முகநூல், அலைபேசி, தொலைபேசிகளிலும் விபரங்களை அக்கறையுடன் கேட்டு அறிந்து கொள்ளும் நண்பர்கள் பலரும் தாம் நிகழ்வைத் தவறவிட்டதற்காக வருத்தம் தெரிவிக்கிறார்கள். நிகழ்வு அளித்த நிறைவு தற்காலிக அமைதியைத் தருகிறது. இரவு முழுவதும் அந்தக் காட்சிகளும் உரைகளும் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

 

         இறுதியில் நன்றியுரை தெரிவித்த பொன் இளவேனில் நிகழ்விற்கான அரங்கு அளித்து உதவிய ஸ்ரீ எஸ்.பி.என் நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளி நிர்வாகத்திற்கும். ஒலியமைப்பிற்கு உதவிய களம் இலக்கிய அமைப்பின் நிறுவனர் மூத்த படைப்பாளர் திரு.ஆறுமுகம் அவர்களுக்கும் பல திசைகளிலிருந்து நிகழ்விற்கு வந்திருந்து நிகழ்வைப் பெருமைப்படுத்திய அனைத்து இலக்கிய ஆர்வலர்கள் படைப்பாளர்கள் பத்திரிக்கையாளர்கள் நிதி தந்து உதவிய நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.. புத்தாண்டில் 26 ஆம் நிகழ்வில் சந்திப்போம்..

                  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக