திங்கள், 5 செப்டம்பர், 2016

ஜான் சுந்தரின் “ந க லி சை க் க லை ஞ ன் எனும் அ ச ல் க லை ஞ ன்“


ஜான் சுந்தரின்

“ந க லி சை க்  க லை   ஞ ன்    எனும்

அ ச ல் க லை ஞ ன்“

                                                        இளஞ்சேரல்

           

 

    கடைசியாக நான் எப்பொழுது மெல்லிசைக் கச்சேரி கேட்டேன் என்பதை நினைவுபடுத்திக் கொள்கிறேன். சுற்றிலும் காய்கறிக் கடைகள்.பேல் பூரி கடைகள்.கையேந்திபவன் வண்டிகள். வாழைத்தார் மண்டி, நாற்புறமும் பேன்சி ஸ்டோர்கள் மற்றும் சில்லிசிக்கன் கடைகள். நான்கைந்து மருத்துவர்களின் கிளினிக். காணாமல் போன பள்ளமும் இட்டேரியும் இவற்றிற்கு இடையில் கீபோர்டும் கிடார்களின் துவக்கநிலை சரளி வரிசை ஆலாபனைகள் துவங்குகிறது. ஒரே பாடகர் எஸ்பிபி யேசுதாஸ் டிஎம்எஸ்  சீர்காழி எல்லாமும் அவரே. “தென்னகமாம் இன்பத்திரு நாட்டில்..“ அவள் ஒரு நவரச நாடகம். பல்லேலக்கா..காவிரி ஆறும் கைக்குத்தலரிசியும்.இரவு நேரம் சுங்கம் மைதானம் இருகூர். அதிமுகவின் வெற்றிக்காக உள்ளுர் அதிமுக பிரமுகர்கள் ஏற்பாடு செய்திருந்த கச்சேரி அது. இன்னிசைக் கச்சேரி உள்பட நகல் கலைஞர்கள் தோன்றுகிற நடனமாடுகிற நிகழ்ச்சியும் கூட. நல்ல ரசிகர்கள் கூட்டம். எம் ஜி ஆர் நகல் நடிகர் ஒருவர் அசத்தினார். தாயில்லாமல் நானில்லை மற்றும் காஷ்மீர் பியுட்டிபுல் காஷ்மீர் பாடல்கள் உள்பட பல பாடல்களுக்கு வாத்தியாரின் நடிப்பை அப்படியே கொண்டு வந்தார்.   எம்.ஜி.ஆரின் உடல்மொழிகளை அவரின் பிரத்யேகமான பாவனை களை மிக அற்புதமாக வெளிப்படுத்தினார் அந்தக் கலைஞர் குறிப்பாக காஷ்மீர் பியுட்டிபுல் காஷ்மீர் பாடலுக்கு அவரின் அங்க அசைவுகள் உண்மையிலேயே எம் ஜி ஆர் எழுந்து வந்து விட்டாரோ. அதே பிரமை.. நேர்த்தியான நடன அளவுகளுடன் ஆடினார்.

           இப்படி அசலை ஒற்றியெடுத்து செய்யப்படுகிற நகல்கள் நமக்கு அறிவுறுத்துவது என்ன. ஒரு வகையில் நாம் அசல் ஆவணங்களை மிக வெளிப்படையாக எடுத்துச் செல்கிறோமா என்ன. யோசித்துப் பார்க்கிறேன்..அனைத்தையுமே நாம் நகல்களைத்தான் வைத்துக் கொண்டு மிக தைரியமாக போனால் போகட்டும் வேறொன்று எடுத்துக் கொள்ளத்தான் வாய்ப்பு இருக்கிறதே. துணிச்சலான தைரியம். இந்த அசல் தைரியத்தை நகல்கள் தருகிறது. யாவற்றிலும் நாம் முன்னிறுத்துவது அசல்களை அல்ல நகல்களையே முன்னிருத்துகிறோம் மன்னிக்கவும் அசலான நகல்களை..இவ்விடம் நகல்கள் என்பது அசல்நகல்கள் நகல் நகல்கள் இருக்கிறது என்பதை உணர்வதற்கான ஒரு அசலான வாய்ப்பு. அந்த அடிப்ப்படையில் நகல்களை நாம் நகல்கள் என்று விளிக்கிற பொழுது முதன்மைப் படுத்துகிற பொழுது கவனமும் நுட்பமும் கொள்ளவேண்டும் என்பதை இந்த நூல் நமக்கு உணர்த்துகிறது.

மெல்லிசைக்குழுக்கள் நடத்துகிற இசைக்கலைஞர்களின் வாழ்க்கைப் பின்புலங்களைப் பற்றிப் பேசுகிற நூல். மெல்லிசை என்பது அந்தக் காலத்தில் வானொலியில் சில தனிப்பாடல்கள் ஒலிபரப்புவார்கள். நிலைய வித்வான்கள் எனப்படுகிற குரல் கலைஞர்களை வைத்து சில நிகழ்ச்சிகளைச் செய்கிற விதம் ( இந்தக் குரல் கலைஞர்கள் என்பது தனிப்பிரிவு) இவர்களின் வாழ்க்கை பற்றியும் ஒரு நூல் வந்தால் தேவலை.இன்று நாம் மிகச்சிறந்த தமிழைக் கேட்பதே கூட குரல்கலைஞர்கள் என்பவர்களால்தான்..நமக்கு எஸ் என் சுரேந்தரா நினைவுக்கு வருகிறார் மைக் மோகன் தானே நினைவுக்கு வருகிறார்..போகட்டும்...நகலிசைக்கலைஞன் நூல் பற்றி பேசுவோம்

           தொலைக்காட்சிப் பெட்டியில் நூறு சேனல்கள் மற்றும் 24 மணி நேரமும் படங்களும் பாடல்களும் என்றான பிறகு மக்களுக்கு வெளியில் பொழுது போக்குவதற்கு வருவது என்பதே பெரும்பாடாகிவிட்டது. அவர்களுக்கு வீட்டிலேயே ஜிம்..மற்றும் வீட்டுக்குள்ளேயே எல்லா உடற்பயிற்சியும் என்றான பிறகு நடுத்தர வயது உள்பட எல்லா வயதினருக்கும் வெளியே வந்து சில பொதுக்காரியங்கள் உள்பட பல விழாக்களில் கலந்து கொள்கிற தன்மை அறவே போய்விட்டது.

ஜான் குறிப்பிடுகிற நகலிசையை நகலிசை என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை..அது அசலிசை என்றே குறிப்பிடுவதற்கு சான்றுகள் உள்ளது. உதாரணமாக நீங்கள் ஒரு ஆவணத்தை ஜெராக்ஸ் எடுக்கிறீர்கள் அதன் அசல் உங்களிடம் இருக்க அது அப்படியே வேறொரு தாளில் கருப்பு வெள்ளையில் உங்களின் கைகளுக்குக் கிடைக்கிறது. கவனியுங்கள் கருப்புவெள்ளையில். ஆனால் அசல் இசை எனப்படுகிற இசையோ அப்படியே மறுபடியும் கருவிகளால் மீட்டப்பட்டு உங்களுக்குத் தருகிறது.அதாவது மீண்டும் ஒரு இசைக்கப்படுகிறது. அந்த வகையில் நீங்கள் இசைத்தட்டுகளில் கேட்பதுதான் நகலிசை.புரியவில்லையா..இதோ இனொரு உதாரணம் நீங்கள் வானொலியில் டிவியில் கேட்பது நகலிசை நண்பர்களே..அதே நேரம் அந்தப் பாடலை இசைக்கலைஞர்களால் மீட்க கேட்டால் அது அசலிசை. அந்தப் பாடல் ஏற்கெனவே எழுதப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதோடு அதன் வேலை முடிந்துவிட்டது. இனியும் ஒரு உதாரணம் தற்பொழுது எஸ்பிபி யேசுதாஸ் சரண் விஜய்யேசுதாஸ் உன்னிகிருஷ்ணன் ஹரிச்சரண் கார்த்திக். நரேஷ் ஐயர்,ஜானகி .பி.சுசீலா பாடுவது நகலிசை என்பதை உங்கள் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது தானே..ஆகவே மெல்லிசைக் கலைஞர்கள் பாடுகிற பாடல்கள் அசல் பாடல்களே அது நகலிசை என்பதில் அடங்காது.

        அது நகலிசைதான் என்று வாதிட்டாலும் மேற்சொன்ன பின்னணி பாடகர்கள் பாடுவதும நகலிசைதான்.. இனிமேல் நீங்கள் அழைக்கும் போது அவர்களை பின்னணி மற்றும் நகலிசைப் பாடகர்கள் என்று டைட்டில் கார்டு போடுவீர்களா அப்படிப் போட்டால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா.

         மெல்லிசைக் கலைஞர்கள் தங்களின் பெருந்தன்மை காரணமாக தங்களை நகல் செய்கிறவர்கள் என்று சொல்லிக்கொள்ளலாம் நாம் அப்படி ஏற்றுக் கொள்ளமுடியாது. அது போலவே ஒரு பைக் பார்த்து இனி ஒரு பைக் செய்கிறார்கள் அது நகலாகிவிடுமா. இன்றைய தகவல் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான முறைகள் ஏன் ஏவுகணைகள் அனுகுண்டுகள் உள்பட ஒன்றைப் பார்த்து அதன் தொழில்நுட்பம் பார்த்து நகல் செய்யப்படுபவைகள் என்றுதானே பொருள். அப்படியானால் நகல் என்பது தான் என்ன..நகல் என்பது உடனடியாக அப்பொழுதே எளிய பொருட்செலவில் உண்மை மாதிரியே உருவாக்குவதன் பொருளே நகல். மெல்லிசைக் கலைஞர்கள் அந்தப்பாடலை இனியொரு முறை உண்மையாக இசைக்கிறார்கள் என்பதை நீங்கள் மறுக்கமுடியாது.உங்கள் முன்னால் மீண்டும் ஒரு முறை நிகழ்த்துகிறார்கள்..இப்படித்தானே பின்னணிப் பாடகர்கள் இசைக்கிறார்கள் இசையமைப்பாளர்கள் இசைக்கிறார்கள் சில நாட்களுக்கு முன்பு இசைஞானி இளையராஜா தொடர் இசைக்கச்சேரிகள் நடத்தினார்.அப்பொழுது டைட்டில் கார்ட் நகலிசைத் தொடர் என்றா சொன்னது. சரி நூலுக்குள் போவோம்.

       வாத்தியக் கலைஞர்களின் குடும்பப் பின்னணி நமக்கு வெளிச்சமாகிறது. அவர்களால் வேறு தொழிலுக்குப் போகவும் முடியாது. பொதுவாக சீசன் இல்லாத நாட்களில் முகூர்த்தம் கோவில் கொடை திருவிழாக்கள் இல்லாத மாதங்களில் கச்சேரிகள் ஏற்பாடு செய்கிற மற்ற மூத்த கலைஞர்களுடனான உறவுகள். அவர்களால் தரப்படுகிற குறைவான சம்பளங்கள். அவர்களின் தொடர் திரைப்பட முயற்சிகள் அதன் வழியாக ஏற்படுகிற தோல்விகள். அர்ப்பணிப்பு உணர்வுமிக்க இசைவாழ்க்கை. அவர்களின் அபாரமான ஞாபகத்திறன். இசைக்குறிப்புகளுக்கு ஏற்ப சரியான அளவில் மிகச்சரியான தருணத்தில் அசலைவிடவும் அதிகசமயம் நேர்த்தியாகப் பாடி கைத்தட்டல்கள் பெறுகிற அசாத்தியம். ஜான் இந்த நூலில் சிற்ப்பாக பதிவு செய்திருக்கிறார்.

   இசை விமர்சகர் தொகுப்பாளர் ஷாஜியின் கட்டுரைகளில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்கள் பின்னணி பாடகர்கள் அவர்களின் வெற்றி தோல்வி அனுபவங்கள் மட்டுமே பதிவாகியிருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் கட்டுரைகள் நூலாக வெளியானால் அதையொட்டி மாநிலம் முழுமைக்கும் உள்ள பல மெல்லிசைக்கலைஞர்கள் பற்றிய பல பதிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது. ஆகவே உங்கள் நூலை எதிர்பார்க்கிறேன் என்பதை அவரிடம் உரையாடல்களின் வழியாக கேட்டுக் கொண்டதுண்டு. அந்த அபிலாஷையை அவர் நிறைவேற்றியதற்காக நன்றி. ஜான் பல பிரபலமான பாடகர்களின் குரல்களில் பாடுவதில் நுட்பம் கொண்டவர். மலேசியா வாசுதேவன்.புஷ்பவனம் குப்புசாமி,ஜெயச்சந்திரன்.சிதம்பரம் ஜெயராமன், கார்த்திக்,உள்ளிட்ட பலரின் மாடுலேசன்களில் பாடுவது சிறப்பு. உங்களுக்கு எஸ்பிபியின் பாடல்கள் மற்றும் டிஎம்எஸ் பாடல்களை நன்றாக பயிற்சி எடுத்துவிட்டாலே மற்ற பாடகர்களின் பாடல்கள் கைகூடிவிடும். குறிப்பாக தமிழின் மகத்தான குரல்களான மகாதேவன்  சீர்காழிகோவிந்தராஜன், கே.பி.சுந்தராம்பாள் சங்கர்மகாதேவன் குரல்களைப் பயிற்சியின் பொழுதே மேற்கொண்டுவிடுவதும் பல சவாலான பாடல்களைப் பாடுவதற்கு உகந்த தாகவே இருக்கும்.

         பொதுவாக திரைப்பட வாய்ப்புகள் என்பது கோரஸ் பாடி பிறகு டிராக் பாடி பிறகு டம்மி பாடி அதன்பிறகு எப்பொழுதாவது மெயின் பாடகருக்கு நோவோ பெருநோக்காடோ கண்டுவிட்டால் அதிசயமாக டம்மியோ டிராக்கோ பாடுபவருக்கு ஆச்சர்யமாக வாய்ப்பு கிடைக்கும். இந்த இடத்தில் முப்பதாயிரம் நாற்பதாயிரம் பாடல்கள் பாடியவர்கள் எத்தனை இசைக்கலைஞர்கள் மெல்லிசைப் பாடகர்களின் வாயில் மண் போட்டிருப்பார்கள் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்.  வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் வென்றாலும் வெல்லாவிட்டாலும் கலைஞன் கலைஞன்தான். பணமும் புகழும் கிடைக்கும் வாய்ப்புகளைப் பொருத்தது. வாய்ப்புகள் என்பது சாதி மதம் பணம் அந்தஸ்து அடியாள் பலம் சூதுவாது இவையெல்லாம் நிர்ணயிக்கிற சக்திகளாகும். இவைகள் யாவும் ஒரு கலைஞனின் திடத்தையோ கலையம்சத்தையோ குறைத்துவிடுகிற சக்திகள் அல்ல. கலைஞன் என்பவன் வறுமையும் தோல்விகளும் சூழச் சூழ அவன் தன்னையும் தன் கலையையும் மேம்படுத்திக் கொண்டேயிருப்பான். ஒரு கலைஞன் தான் ஒரு கலைஞன்தான் என்பதை உணர்ந்து கொள்ளத் துவங்கியதில்லை அவன் தோல்வி ஆரம்பமாகிறது. தோல்விகளும் நிராகரிப்புகளும் தழுவத் தழுவ அவன் கலை பரிபூரணத்துவம் கொள்கிறது. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் அல்ல. கர்த்தர் பொறாமைப் படுகிற அளவிற்கு கலை வளர்வதே ஞானத்தின் வெற்றி.

              மெல்லிசைக் கலைஞர்கள் அஷ்டாவதானிகள். அவர்கள் பல இசைக்கருவிகள் வாசிப்பார்கள். சமயத்திற்கு உதவும். சக கலைஞர்களுக்கு ஓய்வு கொடுக்க உதவுகிற கலைமனம் அது. கௌரவம் பார்க்காமல் மொராஸ் சுற்றுவார்கள்.தேநீர்வாங்கிவருவார்கள். ஒரு சமயம் ஒரு எஸ்பிபி தேநீர் பார்சலுக்குக் காத்திருந்தபோது சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பதை கிராமத்து மங்கைகள் ஆசையாகப் பார்ப்பதை நாங்கள் வெறித்தோம். பாடகர் பாடகிகளுக்கு இருக்கிற கிராமிய செல்வாக்கு என்பது அற்புதமானது. எல்லா இளைய மனங்களும் சுவற்றில் மைக் பிடித்தவாறு ஒரு போஸ் கொடுத்துப் பார்த்துக் கொள்ளாத மனமும் உண்டோ.

      தற்காலச் சூழல்கள் எத்தனையோ நவீனம் புகுத்தப்பட்டிருந்தாலும் இன்றும் தமிழக கிராமங்களில் திருவிழாக்களில் நிச்சயமாக மெல்லிசைக் கச்சேரிகள் இருக்கவே செய்கிறது. அவர்களால் மெல்லிசையைத் தவிர்த்த ஒரு திருவிழா நிறைவு பெறாது. பாடகனோ பாடகியோ அத்தனை அழகாக இல்லாவிட்டாலும் அவர்களைப் பார்த்து அவர்களின் திறமைதான் உலகின் அதிகபட்ச திறமை என்று வியக்கிற கிராமிய உள்ளங்கள் இருக்கும் வரை மெல்லிசைக் கச்சேரிகளை மெல்லிசைக் கலைஞர்களை அவர்கள் கைவிடமாட்டார்கள்.

    ஜான் சுந்தர் தனது நூலில் பதிவு செய்யப்பட்ட பல தகவல்களில் முக்கியமானது மிகவும் வெற்றிகரமான பாடகர்களாக பின்னணி பாடகர்களாக வந்திருக்க வேண்டிய பலரின் சமகால வாழ்க்கை பற்றியது. வெளியிட்டு விழாவில் பேசிய சுகுமாரன்,கே.என் செந்தில்,ரவீந்திரன்,க.வை பழனிச்சாமி உள்பட பல ஆளுமைகளும் இந்த பெருந்துயரத்தைக் குறிப்பிட்டார்கள். இது எல்லா கலைப் பிரிவுகளில் நடந்து வருவதே.

       இன்றும் தொழில் முறைக் கலைஞர்களுக்கான வாய்ப்பு என்பது இசைக்குழுக்களிடையே இருக்கிற புரிந்துணர்வுகளின் காரணமாகவும் தங்களுக்கு அமையும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்கிறபடியால் ஓரளவு அவர்களின் திறமையும் வாய்ப்புகளும் நிலைநிற்கிறது. அவர்கள் மக்களின் ரசனைக்குரியவர்கள். எளியமக்களின் விருப்பத்திற்குரியவர்கள். அவர்கள் முதல் மூன்று பாடல்கள்தான் கடவுளுக்குப் பாடுகிறார்கள் மீதிப் பாடல்களை மக்களுக்காக பாடுபவர்கள் இசைப்பவர்கள். இந்த தொகுப்பு மெல்லிசைக் கலைஞர்களின் மீது கவியாமல் இருந்த அன்பை பொழிந்து கொள்ள வைத்திருக்கிறது. இலக்கியப் படைப்புகளுக்குரிய மொழியைத் தன் படைப்புக்கு ஜான் பயண்படுத்தி சிறிதும் சுவராசியம் குன்றாதவரை சரளமாக வாசிக்கவைத்திருக்கிறார். பெருஞ்சோகம் பேசுகிற பொழுது கொஞசம் சிலாகிப்பும் குதூகலம் தேவையே என்பதால் காட்சிகளில் சில இடங்களில் தூக்கலாக நமுட்டுச் சிரிப்புகள் வரவழைக்கிறவை.

                     வாழ்க்கை பற்றிய அறிதல்கள் கொண்டவர்களாக அமையப் பெற்றவர்காக இந்த நாற்பது வயதிலிருந்து ஐம்பது வயது கொண்டவர்கள் எனலாம். அது என்ன வாழ்க்கையை அறிவது. மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாதா. என்றால் இருக்கிறது நண்பர்களே இவர்களே வீடியோ கேஸட் மற்றும் 60-90 ஆடியோ கேஸட்டிலிருந்து டெக் எடுத்து கல்யாண வீட்டில் மெல்லிசை முடிந்து இரவுகளில் படம் பார்த்த கோஷ்டி. இவர்கள் கண் முன்னால்தான் இப்பொழுது ஒரே பென் டிரைவில் ஓராயிரம் பாடல்களை வைத்துக் கொண்டு ஒரு பாடலும் ஒழுங்காக கேட்க முடியாத யுகம் இது. இந்த வளர்ச்சியை ஆதிமுதல் இன்று வரை இந்தவயதினரால் அறிய முடிவதால் ஒரு ஒப்பீடு அவ்வளவுதான். எம் ஜி ஆர் ஆட்சியைப் பிடித்த தும். எண்பதுகளில் இலங்கையில் துவங்கிய கலவரங்களும் எண்பத்தி நான்கில் இந்திரா படுகொலையையும் தொண்ணூற்றி ஒன்றில் ராஜீவ் படுகொலையும். எம்ஜி ஆர் என்டி ஆர்,சிவாஜி நாகேஷ்,தங்கவேலு, ஏ கருணாநிதி. தேங்காய் சீனிவாசன் உள்பட பல கலைஞர்களின் எழுச்சி வீழ்ச்சியைக் கண்டவர்கள் இந்த வயதினரே. குறிப்பாக தனது டீன் ஏஜ் வயதுகளை எண்பதுகளில் பெற்ற வயதினரால் மிக எளிதாக தமிழ் நாட்டின் பொற்காலம் என்ன என்பதை உணர்கிற தருவாயாகும். இவர்களுக்கு எல்லாம் மிகவும் ஞாபக அலைகளை உருவாக்குகிற படைப்பாக “நகலிசைக்கலைஞன்அமைந்துள்ளது.

          ஆர்க்கெஸ்ட்ரா கச்சேரிகளுக்காக கோவையின் இருபது கிலோமீட்டர் சுற்றளவு கிராமங்களுக்கு சைக்கிளில் பேருந்தில் நடந்தும் சுற்றி சுற்றி கேட்ட அனுபவங்கள் மறக்கக் கூடியதா. இருகூரிலிந்து சைக்கிளில் வெள்ளிங்கிரி மலைக்குப் போகிறேன் பேர்வழி என்று கிளம்பி ஆங்காங்கு சிவராத்திரி மெல்லிசைக் கச்சேரிகள் கேட்டுவிட்டு மூங்கில் கடையில் சிறு கை மூங்கில் வாங்கிக் கொண்டு ஊர் திரும்பி நான் வெள்ளிங்கிரி மலைதான் போய்வந்தேன் என்று சொல்லி காலில் ரத்தக்கட்டு விழுந்ததைப் போல இளைஞர்கள் நடந்து திரிந்த காலங்கள் மறக்குமா..

      பொதுவாக நமது ரசிகமணிகள் கதாநாயகர்கள் அழும் காட்சிகளில் தம் அடிக்கப் போவதுண்டு. டுயட்பாடுகிற பொழுது செல்வது நம் மரபு என்பதை அறிவீர்கள். ஆனால் குணசித்திரநடிகனோ,நகைச்சுவைக் கலைஞன்  சோகமாக நடிக்கிற பொழுது அப்படியே நம்பிக் கொள்வது நம் மக்களின் ரசனை. இந்த சொல்கதை மொழி கலையை பாசாங்கு அல்லாமல் கொண்டாடுகிற படைப்பாளியால்தான் எழுத முடியும். அது இந்த நூலில் ஜானுக்கு கைவந்திருக்கிறது. வாழ்க்கையை கலையால்தான் பிரதிபலிக்க முடியும். அறிக்கை வேறு. படைப்பு வேறு. ஆனால் கலையும் கலைஞனும் ஒன்றும் ஒருவராவார்கள்.

      ஜான் ஏற்கெனவே புகழ்பெற்ற கலைஞர். எளிய ஏழை மக்களின் கைத்தட்டல்களைக் கேட்டும் ரசித்து அவர்களுக்காக மேலும் பல விருப்பப் பாடல்களைப் பாடி மகிழ்விக்கிறவர். எனினும் இந்த தொகுப்பு வழியாக அவர் அடையப் போவது வேறுமாதிரியான புகழ். புதிய புகழ். மெல்லிசைக் கலைஞர்களுக்காக அவர்களின் கலை ஆர்வத்தை மேன்மையை எழுதியவன் எனும் புகழ்..இது அவருக்கு அதிகமாகப் பிடித்துப் போகிற புகழ்..

இளையநிலா ஜான்சுந்தர் என்னும் அசல் மெல்லிசையை வாழ்த்துகிறேன்.. என்றென்னும் ரசிகமனத்துடன்..

 

“நகலிசைக்கலைஞன்மெல்லிசைக் கட்டுரைத் தொகுப்பு

ஆசிரியர்- ஜான்சுந்தர்

வெளியீடு-காலச்சுவடு-கே.பி சாலை-நாகர்கோவில்

தொடர்புக்கு 98422 13012

 

 

 

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

தமிழ்நதியின் “பார்த்தீனியம்” நாவல் குறித்து

தமிழ்நதியின் “பார்த்தீனியம்நாவல் குறித்து
         
வசந்தன் தன் காதலை முதன் முதலாகச சொன்ன அன்று வானதி பல தடவை கண்ணாடி பார்த்தாள்....
-----
ராஜினி,சுபத்திரா,ஜெனிபர் இன்னும் எத்தனை பேர் தங்களுக்கு நடந்த கொடுரத்தை எவரிடமும் சொல்லாமல் மறைத்தவர்களின் நிலையும் மனநிலையும் என்னாகும். அவமானம் என்றெண்ணி வைத்தியசாலையில் சிகிச்சை கூட எடுத்துக் கொள்ளாமல் வலியும் சீழுமாய் அவதிப்படுபவர் எத்தனை பேர்...
-----
ஐபிகேஎல்எப்  எண்டதுக்கு அர்த்தம் இன்னெசெண்ட் பீப்பிள்ஸ் கில்லிங் போர்சஸ் எண்டு சொல்றது சரியாதானிருக்கு....
------
“என்னை மறந்திடுவீங்களா..?
        பிறகும் கேட்கிறாள்.இதென்ன கேள்வி அவன் தலையை நிமிர்த்தவில்லை.இத்தகைய கேள்விகள் எவ்வளவு அபத்தமானவை. உடலில் ஒரு அங்கத்தை இழப்பதைப் போன்றதல்லவா காதலை இழப்பதும்? அதனினும் மோசமான துயரம் அது.....

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட எல்டிடிஇ தலைவரும் தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்தவருமான வே.பிரபாகரன் தனது நேர்காணலில் ராஜீவ் காந்தி படுகொலையைப் பற்றிய உங்கள் கருத்து என்ன என வினவிய போது அது ஒரு துன்பியலான சம்பவம் என்றதிலிருந்து இந்த நாவலை வாசிக்கத் துவங்கினேன்.
            தமிழ்நதி தன் உரையில் குறிப்பிட்டிருப்பது போன்று 1983-89 வரையிலான இலங்கைத் தமிழ் நிலங்களிலிருந்த வாழ்வியல் முறைகளை இந்த நாவல் பேசுகிறது. 83 லிருந்து துவங்கிய மிகப் பெரியத் தாக்குதல் களிலிருந்து இலங்கைப் பிரச்சனைகளை அறியவேண்டிய சூழல்களை இந்தியாவும் இலங்கையும் ஏற்படுத்தியது. தமிழ் மக்கள் மீது துவக்கப்பட்ட தாக்குதல்களும் இனக்கொலைகளும் அதற்கு எதிராகத் துவக்கப்பட்ட போராட்ட அமைப்புகள் மற்றும் தமிழ்த்தனி ஈழப் போராட்டங்களும் போராளிக்குழுக்கள் துவக்கப்பட்டதும் நம் நினைவிலிருக்கும் துல்லியமான பிரச்சனைகள்.
                  இந்தியாவின் உதவிகள் அப்பொழுது இலங்கைத்தமிழ் மக்களுக்குக் கிடைத்தது. சிங்கள இனவாதத்திற்கும் சிங்கள அரசின் பிரச்சனைகளை எதிர்கொண்டு தமிழ் மக்களுக்கு உதவும் பொருட்டும் போராட்டக் குழுக்களுக்கு ஆயுதங்களும் பணஉதவியும் அடைக்கலமும் இந்தியா செய்து வந்த சமயம். அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி வெளிப்படையான உதவிகளைச் செய்தார். அகதிகளுக்கான முகாம்கள் போராளிகளுக்கான பயிற்சி முகாம்கள். பண உதவி. உள்ளிட்ட உதவிகளைச் செய்து கொடுத்த வரலாறுகள் உண்டு. இலங்கையில் நிலவிய அரசியல் அதிகாரப் போட்டிகளும் இலங்கைத் தீவைத் தன்பிடியில் கொண்டுவருவதற்கான முயற்சியில் அருகாமை நாடுகள் எடுத்த ரகசிய முயற்சிகள் அங்கு பெரிய அளவில்  இனமோதல்களும் அழித்தொழிப்புகளும் நடந்தேறியது.
           தமிழ்நதியின் நாவலில் இந்தக் காலகட்டத்தின் சமூகப் பண்பாட்டுச் சூழல்களை மிக வெளிப்படையாக எழுதியிருக்கிறார். இலங்கையில் நடந்து வந்த அனைத்துப்பிரச்சனைகளின் தன்மைகள் குறித்து நாட்டிற்குள்ளும் வெளியே தமிழகம் உள்ளிட்ட பகுதிளிலிருக்கிற எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் பார்வையாளர்கள் வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்கள் என்று எழுதி வைத்த நிகழ்வுகள் ஏராளம். தமிழ் மக்களுக்கு தனி ஈழம் வேண்டும் என்பதிலிருந்தும் சிங்கள- தமிழ் மக்களுக்கான சரிசமவிகித அதிகாரங்கள் எனும் நிலையிலிருந்தும் பேசப்பட்ட பேச்சுவார்த்தைகள் நம்மிடம் உண்டு.
      தமிழ்நதியின் நாவலில் வருகின்ற பல தரப்பட்ட தமிழ் உணர்வு மிக்க கதாபாத்திரங்கள் வழியாக வாழ்ந்த இளையவர்கள், பாதிக்கப்பட்டவர் என வாழ்வியல் சம்பவங்களை விவரிக்கிறார். நாவலில் அமைதிப்படை நிகழ்த்திய கொடுரங்களைக் குறிப்பிடுகிறார். யார் யார் எந்த எந்த முகாம்களில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்.சித்ரவதைக்குள்ளாக்கப் பட்டார்கள். ஆயுதங்களுடன் சரணடையாத விடுதலைப்புலிகளுக்கு உதவியவர்களை எப்படியெல்லாம் ராணுவம் சித்ரவதை செய்தது பற்றிய விவரங்களை தன் நாவலில் குறிப்பிடுகிறார்.
         நமக்கு தமிழகத்திலிருந்த அரசியல்கட்சிகள் மற்றும் பல அரசியல் இயக்கங்கள் நிகழ்த்திய பல போரட்டங்கள் நினைவுக்கு வருகிறது. தமிழகம் தன் சாதிக்கலவரங்களின் பொழுதும் மதக்கலவரங்களின் பொழுதும் ராணுவத்தின் வெறியாட்டத்தைக் கண்டிருக்கிற படியால் ராணுவம் இலங்கையில் என்ன செய்து கொண்டிருக்கும் என்பதை உணரமுடியும்.  ஒரு  காலகட்டத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் இந்திராகாந்தி அம்மையார் 84ல் சுட்டுக் கொல்லப் பட்டபிறகு அன்றைய சூழலில் உலகெங்கும் பெரிய அளவில் அரசியல் கொலைகளுக்கு வித்திட்டது என்று சொல்லலாம். பழிக்குப் பழி வாங்கு வது என்பதான மாபெரும் அரசியல் தலைவர்களைப் பிரதமர்களை பழிவாங்குவது என்கிற அரசியல் பாதகத்தை நிகழ்த்துகிற விதமாகவே அன்றைய சூழலில் அறியப்பட்டது. அப்பொழுது எனக்குப் பதினான்கு வயது. அன்றைய தினம் நாடெங்கிலும் சீக்கிய மக்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரங்கள் படுகொலைகள் பயங்கரம். கோவையில் அவர்களுக்குரிய வீடுகள் கடைகள் டயர்கடைகள் எல்லாம் பற்றியெறிந்த காலச்சூழல்கள் நினைவுக்கு வருகிறது. எதற்குக் குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு பயங்கரத்தைக் காண்பது என்பது சாதாரணமானது அல்ல.. பொதுவாக எல்லைப் பிரதேசங்களில் மலைப்பகுதிகள்,தீவுகள். பெரும் வனப்பகுதிகள் ஒட்டியிருக்கிற கிராமத்து மக்கள்தான் அதிகமாக அதிகாரத்தின் கீழ் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இந்திய எல்லையோர கிராமங்கள் கடற்கரைப் பகுதி மக்கள் இளையவர்கள் சிறுவர்கள் சிறுமிகள் விசாரணைகள் என்கிற அளவில் துன்புறுத்துப்படுவதை பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் மட்டுமல்ல அத்துனை விடுதலைக்காலங்களிலும் இந்த நிலங்கள்தான் இந்த மக்கள்தான் துன்புறுத்தப்படுவதை தமிழ்நதியின் நாவல் அறுதியிட்டுக்காட்டுகிறது.
             ராஜீவ்காந்தி படுகொலைப்பிறகான தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் நிலை அதுபோல கொலைக்கும் முந்தைய நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இங்குள்ள முக்கியமான அரசியல் கட்சிகள் தங்கள் இலங்கைத் தமிழ்மக்கள் மற்றும் விடுதலை இயக்கங்கள் போராளி இயக்கங்கள் பற்றிய கருத்தாக்கங்கள் மாற்றம் பெற்றதை அறிவோம். பார்த்தீனியம் நாவலில் இந்தக் காலத்தின் நிழல்சாட்சியாக தொடர்ந்து வருகிறது. நாவல் குறிப்பிடுகிற காலத்தை நன்கு அறிந்தவனாக இருந்த படியாலும் இங்கு நிலவிய அரசியல் சூழல்களின் பொழுது அரசியல் களத்திலிருந்தவன் என்கிற முறையிலும் இந்த நாவலின் கதாபாத்திரங்க ளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இலங்கையின் தமிழர்கள் பெரும்பகுதி வசித்த பகுதிகளின் அவர்கள் தொழில்,கலாச்சாரம், பண்பாட்டு அளவில் பெரும் புகழ்பெற்று வாழ்ந்த வாழிடங்கள் அனைத்துமே அழித்தொழிக்கப்பட்ட காட்சிகளை தமிழ்நதி தன் துயர்மிகு வரிகளில் எழுதிச் செல்கிறார்.
             யாழ்ப்பாணம்,கண்டி,திரிகோணமலை,வவுனியா,யானை இரவு, பகுதிகளின் முந்தைய நிலை மற்றும் தற்போதைய நிலைபற்றிய விவரணைகள் மற்றும் நாவல் மாந்தர்களின் இலங்கைத் தமிழ் உரையாடல்கள் எல்லாம் இலங்கைத் தீவில் நாம் அமைதியின் பொருட்டு சுற்றிப்பார்த்த உணர்வைத் தருகிறது. இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கங்கள் உள்பட மற்ற போராளிப்பிரிவு களின் ஆயுதங்கள் ஒப்படைப்பு காலத்தையும் பேசுகிறது. பலவகையான கருத்துப் போராட்டங்கள், எதிர்நிலைக் கருத்துக்கள் இருந்த நிலையை கதா மாந்தர்கள் வாயிலாப் பேசுகிறார் தமிழ்நதி. தமிழகத்தில் கூட அரசியல் இயக்கங்கள் “இந்திய ராணுவமே இலங்கையிலிருந்து வெளியேறுஎன்னும் போராட்டத்தை நிகழ்த்தினார்கள். பொது அரசியல் அரங்கங்களில் இலங்கையில் நிகழ்ந்து வந்த அமைதிப்படையில் செயல்பாடுகளைக் கண்டித்தார்கள். இவையெல்லாவற்றும் விலையாக இந்தியாவின் ராஜீவ் காந்தி 1991 ல் எதிர்பாராத விதமாக கொல்லப்பட்டபிறகு இலங்கையின் நிலவரங்கள் சர்வதேச அளவில் சீர்கெட்டது மட்டுமல்ல..ஒரு கருத்தாக இலங்கை சம்பந்தமான பிரச்சனையில் இந்தியாவின் சரியான நிலைபாடுதான் என்னும் கருத்து உருவாகிவிட்டது. ராஜீவ் காந்திக்கு நிகழ்ந்த பாதகச்செயலைக் காங்கிரஸ் அரசாங்கம் தன் சொந்த இழப்பாக கருதியதின் காரணமாக 1991 லிருந்து இலங்கை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டது.அதுமட்டுமல்ல எல்லாப் போராளிக்குழுக்களும் சிதறிப்போனதைக் காலமும் இந்த நாவலும் அடையாளங்காட்டுகிறது.
      இன்றளவும் இலங்கைப் படைப்பாளர்களால் பலவித கருத்து முரண்களைக் கொண்டிருப்பதைப் பார்க்கமுடியும். இலங்கைக்குள்ளே அளிக்கப்படும் சிற்சில அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டு சிங்க ளர்களுடன் இணைந்த பகிர்மானங்களுடன் வாழ்வது என்னும் ஒரு கருத்தோட்டமும் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்னும் கருத்துடனும் வாழ்கிறார்கள். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் அளவில் தன் தாய்நாட்டிற்கு எந்த அளவிலும் உதவிவிடமுடியாத வண்ணம் அவர்கள் அடைக்கலாமாகியிருக்கிற நாட்டின் கெடுபிடிகளை யும் பொறுத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. இலங்கை நாட்டின்  தேசியச் சூழல்களில் எதிர்பாராத நிலையாக அமைந்தது என்னவெனில் பத்து ஆண்டுகள் இந்தியாவில் காங்கிரஸ் அரசு ஆட்சியிலிருந்ததுதான். அது மட்டுமல்ல. இலங்கைக்குச் சாதகமாக இருந்த சூழல்கள் என்பது 89-91 வரையிலான திமுக அரசும் மத்தியில் நிகழ்ந்த விபி சிங் தலைமையிலான அரசும்தான் இந்தக்காலகட்டத்தைப் பயண்படுத்தியிருக்க வேண்டிய இலங்கையைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அதிக அளவில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் இயக்கச்செயல்பாடுகளும் இந்திய அரசால் திமுகவின் அரசியல் நிலையைத்தகர்க்கும் விதமாக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுக வின் ஆட்சி கலைப்பை அடுத்து அரசியல் சூழல்களால் தமிழ்நாடு கொந்தளிப்பான நிலையில் தவித்தது. இதற்கு முன்பாக 87 ல் எம் ஜி ஆர் மறைவும் இலங்கை மக்களுக்குப் பெரும் சரிவைக் கொடுத்துவிட்டது. அதுவரையிலும் எல்லா  வகையான உதவிகளும் ஓரளவிற்கு கிடைத்துவந்த உதவிகள் துண்டிக்கப்பட்டது.
        எம்ஜிஆர் மறைவிக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைய ஏறக்குறை 89 வரை ஜனாதிபதி ஆட்சியில் அதிகளவு ஊடுறுவல் மற்றும் ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு வளையத்தை மீறிய செயல்பாடுகளை மிகவும் சரியாக கணித்த புலிகள் தங்களின் செயல்பாட்டில் மிகமிக தவறான முடிவான அந்தப் படுகொலையை நிகழ்த்த எல்லாமுமெ சர்வநாசமாக முடிந்து போனது. பிறகு அனுதாப அலையில் ஆட்சிக்கு வந்த காங்கிரசும் தமிழகத்தில் அதிமுகவும் புலிகளின் ஊடுறுவல்கள் மற்றும் இங்கிருந்து சென்று கொண்டிருந்த எல்லாவிதமான அரசியல் மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் இழந்துவிட்டது மட்டுமல்ல தமிழ்மக்களும் மிக கொடுமையானத் தாக்குதல்களைச் சந்தித்தார்கள். எப்படி இந்திராகாந்தி 1984 ல் சீக்கியப் பாதுகாவலர்களால் கொல்லப்பட்டத ற்கு பழிக்குப்பழியாக சீக்கியர்கள் மீது காங்கிரஸ்காரர்கள் தாக்குதல்கள் தொடுத்தார்களோ அதேபோல இங்கு அனைத்துத்தமிழ் மக்களும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே என்று கருதப்பட்டு வேட்டையாடப்பட்டார்கள்.. தமிழ்நதியின் நாவலின் பின்னணி இந்தப் பகுதிகள்தான்.
              ஏற்கெனவே பற்பல படைப்புகள் வந்திருந்தாலும் தமிழ்நதி எடுத்த இந்த களம் முக்கியமானது. இவையணைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டியது. முழுவதும் பழிஅரசியல் சூழப்பட்டுவிட்ட இந்தியத் தமிழ்நிலம் மட்டும் இலங்கைத் தமிழ்நிலம் இவ்விரு நிலங்களின் மனிதர்களின் நியாயமான உணர்வுகள் பேணப்படவேண்டும். அவர்களின் வாழ்வு புணரமைக்கப்படவேண்டும் இன்றைய சூழல்கள் மிகவும் சரியாக அமைந்திருக்கிறது. காங்கிரஸ் அல்லாத அரசு மத்தியில் அமைந்திருக்கிறது. வேறுவழியில்லை. இந்த இடைப்பட்ட காலங்களில் நடத்தப்பட்ட தமிழ்மாகாணத்தேர்தல்கள் மற்றும் வழங்கப்பட்ட சிற்சில அதிகாரப் பகிர்வுகள் இலங்கையில் தற்காலிகமாக வெடிச்சத்தங்கள், பயங்கரங்கள் ஏறக்குறையக் குறைந்திருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கையின் வெளியுறவுத்துறைகள் முள்வேலி முகாம்களில் மற்றும் அகதிகள் முகாம்களில் உள்ள மக்களை மீண்டும் அவர்களுக்குரிய பகுதிகளில் மறுகுடியமர்த்தல்களுக்கான முயற்சிகள் நடைபெறுகிறது.  இந்த அளவில்தான் இலங்கையில் தமிழ்க் குடும்பங்களின் வாழ்வைப் புணரமைக்க முடியும். அயலகங்களில் வாழ்கிற லட்சக்கணக்கான இலங்கைத்தமிழ் மக்களின் உணர்வுகளும் கோரிக்கைகளும் அபிலாசை களும்கூட அதுவேதான். ஒவ்வொரு இழப்பிற்குமான பழிக்குப்பழி என்பதாக அரசியல் பகைகளின் தட்பவெட்பச் சூழல்கள் தணிந்திருக்கிறது.
        1983-91 களின் இலங்கைச்சூழல்கள் இலங்கையில் இல்லை. அதுபொலவே தமிழகச்சூழல்களிலும் அதே நிலையில்லை. 91ல் அறிமுகப் படுத்தப்பட்ட காங்கிரஸ்-மன்மோகன்சிங் புதியப் பொருளாதாரக்கொள்கை களையும் நாம் கணக்கிடவேண்டும். இந்த அயலுறவுக் கொள்கைகளால் தேசிய இனங்கள் அழியத்துவங்கியது. உலக வர்த்தகங்களுக்குள்ளாக தேசியப் பிரச்சனைகள் அழுத்திக் கொள்ளப்பட்டது. வளரும் நாடுகள் தேசிய இனப்பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கிற நாடுகளைச் சுரண்டத் துவங்கியது. இதன் விளைவாகவே கீழ்த்திசைநாடுகளின் வளங்கள் சுரண்டப்படத் துவங்கியது. இதில் சிக்குண்ட நாடாக இலங்கையும் வளைக்கப்பட்டது. இலங்கையிலிருந்து பல நாடுகளிலுக்கு மக்கள் புலம் பெயர்ந்தார்கள். ஒரளவு வசதிவாய்ப்புகள் இருந்தவர்கள் வெளியேறினார்கள். அயலில் இருந்தவர்கள் தங்கள் உறவுகள் ஈழத்தில் படுகொலையாவதைச் சகிக்க முடியாதவண்ணம் தங்கள் படைப்புகளில் எழுதிக் கொஞ்சம் ஆசுவாசமானார்கள்.
            தமிழ்நதி உள்ளிட்ட இலங்கைப் படைப்பாளர்கள் தங்கள் எழுத்துகளில் இலங்கைத் தமிழ்த்தேசத்தின் கலாச்சாரச் செழுமைமிக்க வாழ்வை எழுதிவருகிறார்கள். விவசாயநிலங்களில் வெடிகள் புதைக்கப்பட்டதையும் பதுங்கு குழிகளில் வாழப்பழகிய காலத்தையும் பதிவாக்கியிருக்கிறார்கள். இயக்கங்களிலிருந்தவர்கள் இயக்கங்களிலிருந்து வெளியேறி ஜனநாயகத்தன்மைக்கும் பொதுவெளிக்கும் வந்தவர்கள் தகவல் இணையத்தொழிற்நுட்பச் சூழல்களைப் பயண்படுத்தி தங்கள் வாழ்வின் பகுதிகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.
         தமிழ்நதியின் “பார்த்தீனியம்குறித்தும் ஒரு பதிவு வருகிறது. இந்திய அரசு அளித்த கொடைகளில் ஒன்று அமைதிப்படை. அது போல இந்தவிஷப் பார்த்தினியத் தூவல் என்கிறார். இலங்கையின் விவசாயத்தை முற்றிலுமாகப் பாதித்த வரலாற்றைப் பதிவு செய்கிறார் தமிழ்நதி. தமிழ் நாட்டிலும் அத்தகைய நிலையைப் பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது. பார்த்தீனியச் செடிகள் இலங்கையின் வளமான விவசாயத்தை அழித்த பதிவுகளை முன்வைக்கிறார். நாவலில் முன் பின் அத்தியாயங்களில் இலங்கையின் நிலப்பரப்பை மிக நேர்த்தியாக தத்ருபமாகப் பதிவு செய்கிறார். தமிழ்ப்பெயர்களில் அமைந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், நிலப்பரப்பின் வசதி கொண்டு போராளி அமைப்புகள் இயங்கிய விதம். அவர்கள் இலங்கை சிங்கள அரசு மற்றும் அமைதிப்படை ராணுவ வீர ர்களுடன் அகப்படும் சூழல்கள், விசாரணைகள், துன்புறுத்தல்கள், பாலியல்  சித்ரவதைகள். உள்பட காலக்கிரமமாகப் பதிவு செய்திருக்கிறார். நமக்குச் செய்திகளாகவும் பரிதாபத்திற்குரியதாக அறிந்த காட்சிகளுக்குள்ளும் சம்பவங்களுக்குள்ளுமாக அந்த தமிழர்களின் நிலையை ஒரு படைப்பாளியின் பொறுப்பு எனும் தார்மீகத்துடன் தமிழ்நதி பதிவாக்கியிருக்கிறார்.
      1983-89-91 வரையிலான இனப்போர்கள் களப்பலிகள் பற்றிய மிக நுட்பமான களஅரசியல் பதிவாக இந்த நாவல் அமைகிறது. இந்தக் காலத்தில் வாழக் கிடைக்காதவர்கள் புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் இந்த நிலையே புத்தம் சமணம் பற்றிய எதிர்நிலைவாதங்களுக்கும் வித்திட்டது எனலாம். தமிழ்நதியின் இந்த ஆவணப்படுத்தல் மிக முக்கியமான படைப்பு என்று சொல்ல வேண்டும். இன்னும் எழுத எழுத தீராத காத்திரங்களை உடைய காலம்.
       காதலை நட்புணர்வை நண்பர்களை குடும்ப உறவுகளை ரத்த உறவுகளின் நிலையை தமிழ்நதியின் நாவலில் பதிவு செய்திருக்கிறார். எல்லா உறவின் கமறலையும் பிரதியுபகாரங்களையும் பேசியிருக்கிறார். போர் இலக்கிய வகைமைகளில் காதலும் பிரிவும் ஒரு தலைக்காதலும் இழப்புகளும் புலம் பெயர்தலும் பேசப்பட்ட பிரதிகளில் பார்த்தீனியம் முக்கியமானது.  தமிழக நிலப்பரப்புகள் இந்தக் காலங்களில் செழுப்புடைய தாகவே இருந்த நாட்கள். எனினும் 83-90 களில் அருகிலிருந்த இலங்கையின் தமிழ் நிலங்கள் நேரெதிராக போர்க்களங்களாக இருந்தது. தமிழகத்தில் நடத்தப்பட்டப் புகைப்படக் கண்காட்சிகள் மற்றும் வீடியோக் காட்சிளில்தான் கண்ணுற முடிந்த காலம் அது. மிகைப்படுத்தப்பட வேண்டியதைக் குறைத்தும் குறைக்கப்பட வேண்டியதை மிகைப் படுத்தியும் காட்டப்பட்ட நாட்கள். இந்தக் காலம் எங்களுடை பதின் பருவங்கள். சுயநினைவுள்ள காலம். தமிழ் மக்களுக்காக எல்லா திசைகளிலும் மருந்து துணிமணிகள் அகதி முகாம்கள் துவங்கிய நாட்கள். ஒரு இனத்தின் ஒரு உறவின் ஒரு பகுதி வேட்டையாடப்பட்ட காலம்.
இனி ஒரு போதும் எந்தச் சிறுபான்மை மொழி பேசும் இனத்திற்கும் இத்தகைய நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே இப்படைப்புகள் எழுதப்படுகிறது. அதிகாரத்தைப் பற்றிய பிறகு அதை எந்தச் சூழலிலும் இழந்து விடக்கூடாது அப்படியான அதிகாரம் ஒரு மக்கள் குழுவிற்கு வரலாறு ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை அளிக்கும் அதை நாம் பறி கொடுத்துவிட்டால் பிறகு மேலும் பல நூற்றாண்டுகள் கழித்தே அது நம் நம்மிடம் வந்து சேரும்..நாம் நம் மக்கள் இழந்துவிட்டார்கள்..அவ் வதிகாரம் வரும் வரையிலும் காத்திருப்போம்..வானதி,பரணி,தனஞ்செயன்,நித்திலன்., ஜீவானந்தம்,தனபாக்கியம் அருமைநாயகம் செல்வன் தயாபரன் உள்ளிட்ட அந்த  தீவின் படகுத்துறைகள், இரவுகள் பகல்கள் புயற்காலங்கள் என்று இந் நாவலின் களங்கள் ஒரு சுற்றுலாத் தோழன் போல நகர்த்திச் சென்று விளங்க வைத்திருக்கிறார்.
இன்னும் எழுதப்படவேண்டிய சங்கதிகள் வலிகள் உள்ளதை தமிழர்கள் வாழ்க்கை பேசுகிறது. தமிழ்நதியின் கவித்துவமிக்க எழுத்து நடையும் இலங்கைத் தமிழ் உரையாடல்களும் நம்மைப் பற்றிக் கொள்கிறது. உலக மொழிகளின் இலக்கியப் படைப்புத் தரத்திற்கு ஈழப்படைப்பாளர்களும் தமிழில் எழுதப்பட்டு வருகிறது என்பதற்கு இந்தப் படைப்பும் சாட்சி. தமிழ் மக்கள் வாழ்க்கை மட்டுமல்ல சிறுபான்மை இனங்களுக்கும் தேசிய இனங்களுக்குமான விடுதலைப் பார்வையை இந்த எழுத்து உருவாக்கியிருக்கிறது. அவருடைய கம்பீரமான தமிழ்ப் படைப்பிலக்கிய முயற்சிகளுக்கு எந்த வகையிலும் கையாலாகாத ஒரு வாசக மனதின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..
வெளியீடு- பார்த்தீனியம்- ஆசிரியர்- தமிழ்நதி ஏப்ரல் 2016
நற்றிணைப் பதிப்பகம் பி லிட்
எண் 6-84 மல்லன் பொன்னப்பன் தெரு

திருவல்லிக்கேணி சென்னை-5

வியாழன், 28 ஜூலை, 2016

கதிர்பாரதியின் கவிதைகள் “ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்“

கதிர்பாரதியின் கவிதைகள்
“ஆனந்தியின் பொருட்டு  தாழப்பறக்கும் தட்டான்கள்“
       
“தட்டான்கள் தாழப்பறந்தால் மழை வரும் தெரியுமாஎன்ற
ஆனந்தியின் இமைகளிலிருந்து
முதன் முதலில் தட்டான்கள் பறந்தபோது
எனக்குள் மழைவரும் போலிருந்தது.....         பக்.26

    நவீன கவிதையின் அளவீடுகள் என்னென்ன..கவிதையிலிருந்து நவீன கவிதை எந்த வகையில் வேறுபடுகிறது. நவீன காலத்தின் மனிதனின் பிரச்சனைகளைப் பேசுகிறதா. நவீன காலம் என்பது என்ன..தொழிற்புரட்சியின் யுகத்திலிருந்து நவீன காலம் துவங்குகிறது. ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீர் மூழ்கி மோட்டார்களின் வழியாக நீரை உறிஞ்சுகிற வல்லமை பெற்ற மனிதனின் காலம் நவீன காலத்தின் துவக்கம். நெருப்பை உருவாக்கவும் கண்டுபிடிக்கவும் அடர்வனத்தின் தீயைக்கண்டு தெறிக்க சதுப்பு நிலப்பகுதிக்கு ஓடிவந்த காலம் நவீன காலம். குன்றுகளின் மீதும் மலைச்சரிவுகளில் கால்நடைகளைப் பழக்கி வேட்டையாடித் தின்ற காலத்திலிருந்து பெருமழைக்காலங்களில் நீர்த்தேக்கங்களின் ரம்மியம் பார்த்து கரைகளில் வாழும் பறவைக் கூட்டங்களின் குடும்பங்கள் பார்த்து குடும்பங்களை உருவாக்கிக் கொள்வதற்காக குடில்களை அமைக்கத் துவங்கிய காலம். பஞ்ச காலத்தில் பசிக்குப் பிறரிடம் பறித்துதான் திங்க வேண்டும் என்பதால் கருவிகளை உருவாக்கிக் கொலைத்தொழில் புரியத்துவங்கியது நவீன காலம். போதுமான அளவில் உடலில் ஆயுதங்களை வைத்துக் கொள்ள முடியாமையால் பெருங்கிடங்குகளை முதலில் உருவாக்கி பிறகு வீட்டை உருவாக்க முனைந்த காலம் நவீன காலம்.பறவைகளின் இயல்புகளைக் காப்பியடித்து வசந்த கோடை கார் பஞ்ச காலங்களில் இடம் பெயர முனைந்த காலம். உலகின் முதல் விவசாயி ஆன பறவையின் மலத்தின் வழி விளையும் உணவை உண்ணத்தொடங்கிய காலம். காட்டுத்தீயில் வெந்த மாமிசத்தின் ருசியைச் சுவைத்த காலம். விறைத்த குறியை மூடிக் கொள்ளவும் ருதுக்குறியின் உதிரக்கவிச்சியை உணர்ந்து முயங்க முனைய இலைகளின் ஆடையை அணியத் துவங்கிய காலம்.
         கூர்வாட்களால் உடன்பிறந்தோரைக் கொல்லத் துணியலாம் என்று போதனையைக் கற்ற காலம். பசிமறந்து அச்சமே துணையாகத் துடித்தடங்கி குழிகளிலும் விதைகளைப் போல வெடிகளை விதைத்து சிறுவர் சிறுமிகளை முன் நடக்கவைத்து பின் வெடிக்காலம் உணர்ந்த காலம். வேலிகள் அமைந்து அங்கேயே தின்று அங்கேயே பேண்டு கழித்து முயங்கி இனப்பெருக்கம் செய்யும் காலம். உலகத்து மணற்பரப்பு எல்லாம் ரசாயனம் தூவி உயிர்களை அழித்து உலோகப் பயிர் வளர்த்து ஒவ்வொரு பாறையாக வெடித்து வெடித்துப் பார்த்துக் குதூகலித்துக் கொள்கிற காலம்.
        இந்தக்காலங்கள் பற்றி உரையாடுகிற சொற்களை நவீன மொழி என்று சொல்கிறோம். அந்தந்த யுகங்களில் அந்தந்த கேந்திரங்களில் அந்தந்த பொழுதுகளில் நவீனன் பிறக்கிறான். அவன் பச்சயத்தின் பலனையும் சிறு சிறு காணுயிர்களின் கீச்சிடல்களையும் மரக்கிளைகளில் ஊஞ்சலாடும் அணில்களையும் மரத்து உடலைப் பங்கிட்டுக் கொள்கிற உயிருணிகளைப் பற்றிப் பேசுவான். ரசாயனத்தை அதன் வீரியத்தைப் பொசுக்குவான். எவ்வித கனரக உலோகமும் குரிமணி உயிரையும் காவு வாங்காமல் கவனித்துக் கொள்வான்
          கதிர்பாரதியின் இரண்டாவது கவிதைத்தொகுப்பு ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்“ வாசிக்க நேர்ந்த சமயத்தில் பல நூல்களுக்கான வாசிப்பு மற்றும் எழுதவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். முதல் தொகுப்பிற்கும் இரண்டாவது தொகுப்பிற்குமிருக்கிற கடந்து வந்த  தொலைவை ஒரு கணம் யோசித்துப் பார்க்கிற போது தமிழ் நவீன கவிதையின் அடுக்கும் உயர்ந்திருப்பதாக உணர்கிறேன். நவீன கவிதைக்குள் “லோட்செய்யப்படுகிற வீரியமிக்க கலன்கள் மிக முக்கியமானது. ஒரு கவிஞன் எந்தளவு உறுதிமிக்க புலன்களின் இருப்பைப் பொருத்துகிறான் என்பது அவன் கற்றதில் இருக்கிறது. அனுபவங்களுக்கு அப்பாலும் கற்பனையும் சமகாலத்தின் வெடிப்பும் பற்றாக்குறைகளும் அறிவுசார் சொத்துரிமைத்திருட்டுகளுக்கு அப்பாலும் செயல்படுகிற நவீன மனத்தின் ஆன்மாவையும் சேர்த்தே கணக்கிடச் சொல்கிறது. நன்செய் புன்செய் நிலங்கள்,வயல்கள், பொழிகள், ஏரிக் கழிகள், நீரேற்றங்கள் உள்பட பச்சயங்களும் உண்டு. அறுவடைக்குப் பிந்தைய அடுத்த காப்பிற்காகத் தயாராகிற உரமூறிய பதமிக்க தீவனப் பில்லுக்காடுகளும் உண்டு.
என் தாத்தாவிடம்
ஒரு கதை இருந்தது
சப்பரம் போல் ஜோடித்துத்திரியும்
கொள்ளிவாய்ப் பிசாசுகளும்
பலிகேட்டு நச்சரிக்காத
குலசாமிகளும் அதில் இருந்தன
அவற்றின் குழந்தைகளாக நாங்கள் இருந்தோம்.

என் தாத்தாவிடம்
உறக்கம் ஒன்று இருந்தது
அதன் தலைமாட்டில் பூவரசின் வேர்த்திண்டும்
கால் மாட்டில் உதயமரத்தின் நிழல் துண்டும்
சாமரங்களாக மாறி சேவையாற்ற
காலங்களும் பருவங்களும் களைப்பாறியதுண்டு.

            “எங்களிடம் நீர்முள்ளிப் பூக்கள் இருந்தனஎனும் நெடுங்கவிதையிலிருந்து மேற்கண்ட சில வரிகள். ஒரு தலைமுறையில் எல்லாம் மாறி அழிந்து மீண்டும் ஒரு புது யுகம் பிறக்கும் என்பதை வரலாறு நமக்கு அறிவிக்கிறது. நூறாண்டுகள் ஆகிவிட்ட வீட்டைக் கொஞ்சம் மராமத்துச் செய்து வாழ்ந்து கொள்கிறது மனித சமூகம். பல நூறாண்டுகள் அறுவடைகள் பார்த்த நிலம் மற்றும் வேளாண்மை மக்கள் ஞாபகம் வருகிறார்கள். புடவைக்கடையில் விற்பனையாளன் மிக லாவகமாகவும் நேர்த்தியாகவும் புடவையைப் பிரித்து நூல் மணக்க அயாசமாக வீசிப் பார்வையாளர்களுக்குக் காண்பிப்பது போல பல நெடுங்கவிதைகள் தொகுப்பில் உள்ளது.
    
         உரைநடைக் கவிதைகளின் தன்மையிலேயே கவிதைகளின் பயணங்களும் மிக நீண்ட விவரிப்புகளும் கொண்டிருக்கிறது. தலைப்புகள் மட்டுமே கவிதைகளைத் தனியாகப் பிரிக்காவிடில் ஒரு கவிதா விலாசத்தின் குறும்பாகள் எனக் கருத வாய்ப்பிருக்கிறது. மனிதனின் காம விகாரமும் தீர்வற்ற முறைபொருந்தாப் பசிக்கிறக்கமும் இந்த நிலத்தை சதுப்பு நிலமாக்கி வெள்ளாமையைப் பெருக்க வைத்தது. பசுமைப் புரட்சிக்கு முந்தைய மனிதன் இடம் பெயர்ந்து கொண்டிருந்தான். புதிய ஏரிகளை வெட்டி பெருநதியிலிருந்த நீரைக்கடத்தி வந்தான்.
             “என் புறாவைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன்.ஒரு குளத்துக் குரவையாகமீன் வளக் குறிப்புகள்..“ முக்கியமான கவிதைகள். சொற்களுக்குள் உருவகத்தீ கணன்று எளிதில் பற்றிக் கொள்ளக் கூடிய ரசனை மனங்களைப் பற்றிப் பரவுகிறது. செய்திகளும் விவரிப்பும் வழி அறிந்த ஒருவனின் கால்கள் போல தாவுகிறது. இலகுவாக நீந்திச் செல்கிறது. இன்று வரவேற்பு அறையில் மீன்தொட்டி இருந்தால் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு நல்லது நடக்கும் என்றும். மீன் தொட்டி இருந்தால் நாமும் கடலில் மிதப்பது போன்ற பிரக்ஞை இருக்கும். பொதுவாக பற்பல வண்ணங்களைக் களித்துக் கொள்வதும் சாஸ்திரங்களில் உள்ளது என பற்பல வியாபாரங்களில் மனிதன் ஈடுபடுகிறான். எப்படியும் மனித சமூகத்திற்கு மனிதன் ஆற்றும் தியாகம் போல சில மீன்கள் நம் வரவேற்பரை செட் ஆவதற்குள் மரித்து விடுகிறது.
உம் முன்னோரில் இருவர்
ஐயாயிரம் பேருக்கு உணவாகி
புகழுடை தெய்வத்திற்கு நிகராக
வரலாற்றில் பொறிக்கப்பட்டிருக்கிறார்கள் தெரியுமா என
சுவைக்குதவாத அவற்றின்
இனத் தொன்மம் பற்றிப் பேசவேண்டும்..

              மனிதனைத் தவிர வேறெந்த உயிரினங்கள் தங்கள் வாழ்வின் பதிவுகளைச் செய்து வைத்திருக்கிறது. யானைகளோ,புலிகளோ, பறவைகளோ தங்கள் மூதாதையர்கள் பற்றிய ஏதேனும் குறிப்புகளைப் பதிவு செய்திருக்கிறதா. அன்றியும் குறிப்பிட்ட ஒரு உயிரி பற்றிய பதிவையாவது மனிதன்  செய்திருக்கிறானா. ஆனால் இந்நிலத்தின் அத்து ணை உயிரிகள் தாவரங்கள் பருவகாலங்கள் பற்றிய தொகுப்பை அதன் வளத்தை அழித்தும் வளர்த்தும்  நெறி செய்கிற பொறுப்பாளான மனிதன் இருக்கிறான்.

          ஒரு நவீன கவிதையில் முக்கியமாக இடம் பெற வேண்டியது. ஒரு கதை,ஒரு நாவல்,ஒரு சிறுகதை,ஒரு பயணக்கட்டுரை, ஒரு காப்பியம். ஒரு மருத்துவனின் குடுவை, மாந்த்ரீகனின் சல்லாப பாடல், ஒரு சூதாடியின் தந்திரம், ஒரு மழலையின் அறிவார்த்மான கேள்விகள். ஒரு வேசியின் தீர்க்கதரிசனம், விந்தின் பிசுபிசுப்பு. மதர்த்தமான உப்புக் கவிச்சி. அழுக்குக் கேசத்தின் வாசம். நமுத்த அணுகுண்டின் திரி, லாரியோ கார் குண்டோ வெடித்தபடியால் சிதறிய உடல்கள். இப்படியாக அவனவன் திசைக்குத் தகுந்த மாதிரியான உரையாடல்கள், பட்டாசுக் காயம் பட்ட உடல் போன்ற சொற்றொடர்கள். இடையிடையே செனாயோ வயிலினோ புல்லாங்குழலோ நாதஸ்வரமோ இசைக்கும் இசைக்குறிப்புகள்.
      இவையெல்லாம் நவீன வாழ்வை எழுதுகிற கவிஞனின் சுரைக்குடுவையில் மீந்திருப்பவை. அவன் இறைச்சலிலிருந்து ஒரு தேவ வசனத்தின் பிராக்ருத அதிர்வை ராகமாக்குவான். தேமலிலிருந்தும் அழுக்குச் சிரட்டைக் காயங்களிலிருந்தும் கடவுச்சீட்டை அந்நிய மண்ணில் இழந்திருக்கும் சமயத்திலும் சொற்கள் எழுதுவான். இந்த நவீனப் பொருளியல் சந்தை மற்றும் புலனுகர்வும் படித்தவர்களை பல நாடுகளை நோக்கிப் பறந்து போகவைக்கிறது. இங்கு முப்பது வருசம் சம்பாதித்து ஓய்ந்து சாவதை விடவும் அயல்தேசத்தில் ஐந்து வருசம் இருந்து வந்து விட்டால் இங்கு தலைமுறைக்கும் பிரச்சனையில்லாமல் வாழ்ந்து கொள்ளலாம் என்கிற வசவு உள்ளது. சமூகத்தில் முப்பது சதம் அன்னியச் செலாவணிக்காகவும் இந்தியாவின் கடன்சுமையை அதிகரிக்கவும் வாழ்கிற வர்களும் உண்டு. ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியான சமயங்களில் கீழ்த்திசைநாடுகளிலிருந்து ஆட்களை வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டு போய் ராணுவத்தில் உலகப்போர்கள் சேர்த்து அவர்களை வைத்தே கோடிக்கணக்கான மக்களைக் கொன்று புதிய நவீன உலகை ஏகாதிபத்தியம் நிறுவிக்கொண்டது.
       இந்தத் தொகுப்பில் வீரியமிக்க நவீன அரசியல் வாழ்வின் விமர்சனங்கள் இல்லை. சமகாலத்தின் கலாச்சார அரசியல் பற்றிய மிகக் கூர்மையான அரசியல் பார்வைகளும் விமர்சனங்களும் நவீன கவிஞனுக்கு முக்கியமானது.குறிப்பாக ஒரு பராரி ஏழை தேசத்தின் பிரதமர் தன் வாழ்நாலெல்லாம் வெளிநாடுகளுக்குப் பறப்பதையே தன் அலுவலகப்பணியென்று நினைத்துக் கொள்கிற தேசத்தின் கவிஞன் தன் பங்கை ஆற்ற வேண்டுமென்று நினைக்கிறேன்.
        குறுங்கவிதைகளில் கவித்துமிக்க தரிசனங்கள் அகப்படுகிறது. உரைநடைக் கதைகளில் திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிற அடுக்கடுக்கான விவரிப்புகள் சற்று அயற்சியைத்தருகிறது. கதிர்பாரதிக்கு இயற்கையின் மீதுள்ள கரிசனங்கள் கவிதைகளை அடுத்தடுத்த வாசிக்க வைக்கிறதும் கவிதைக்குத் திரும்பவைக்கிற உத்தியாக எழுதப்பட்டவைகள் மிகவும் நேர்த்தியாக வந்துள்ளது. குறிப்பாக “இரவுக்கு வெட்கமில்லை..“ கவிதையிலிருந்து சில வரிகள்..மிக சாதரணமான விவரிப்புகளில் குறும் நகைச்சுவையெனத் துள்ளிக் கொண்டிருக்கிற வெட்டுக்கிளியின் சுறுசுறுப்பு இக்கவிதையில் காணமுடிகிறது. கூத்தில் பார்வையாளர்களை மகிழ்வு கொள்ளச் செய்கிற கலைஞனின் உடல்பாசாங்கும் வசனங்களும் போல அறியும் இக்கவிதை கதிர்பாரதியின் அழகுணர்ச்சிக் கவிதைகளில் ஒன்று. கவிதையில் மேலிட்டு வருகிற மிகை தான் மிகு அழகு...
என் வானில் தேனிலா ஆடாதாவென ஏங்குகிற
அமாவாசையின் பிள்ளை நான்
எனினும்
என் கொல்லைப்புற வானை
கோடிக்கோடி நட்சத்திரங்களால் அலங்கரிப்பேன்
மல்லாந்து படுத்தபடி பார்ப்பேன்
ஒரு மூக்குத்தியாக்கலாமா என்றுகூட யோசிப்பேன்

எனக்கும்
உன் நினைவுகளுக்குமிடையில்
ஒரு சிகரெட்டின் அளவே இருக்கும்
இடைவெளியின் முன்முனையில்
ஆசையைப் பற்றவைக்கிறது இரவு
உறிஞ்சி இழுத்த இழுப்பில்
விடிகாலையின் கிழக்குக்கு
சிவந்து விட்டது.
          
 அணிகலன்களின் வழியாக ஒவ்வொரு மனித நாகரீகத்தின் வளர்ச்சியை அளவிடமுடியும். ஆப்பிரிக்கத் தேசத்து கருப்பின மக்களும் செவ்விந்திய பழங்குடிகளும் அணிகலன்களை உடலெங்கும் அணிந்து கொள்வதின் வாயியலாக அவர்களின் குலம் மற்றும் கலாச்சார மரபையும் பாதுகாத்துக் கொள்கிறார்கள். தென்னிந்திய மரபில் தொண்ணூறுகளுக்கும் வரையிலும் மூக்குத்தி மரபு இருந்து வந்தது. பட்டிக்காடா பட்டணமா படத்தில் சிவாஜி மூக்குத்தி அணிந்து நடித்தார். தாய்மாமன் மடியில் உட்காரவைத்து ஆண் பெண் குழந்தைகளுக்கு மூக்கு குத்தி முதலில் மூக்கையா மற்றும் மூக்கம்மா என்று உறவுகள் குழந்தைகளை எள்ளலும் கேலியும் பாட்டுப் பாடி விழாவைக் கொண்டாடுவார்கள். அசலான தமிழ் மரபு வழி அணிகலன். நம்மிடம் ஒவ்வொரு அணிகலனுக்கும் கலாச்சாரப் பின்னணியும் உள்ளது என்பதை இக்கவிதை ஞாபகப்படுத்துகிறது. காதலையும் அன்பையும் பிரிவாற்றாமையையும் பேசும் பல சொற்களில் காதல்,நட்பு,உறவுகள் பற்றிய விவரணைகள் இருக்கிறது.
      சில நாட்களுக்கு முன்பு முகநூலில் நண்பர்கள் வாயிலாக அனுப்ப ப்பட்ட பாலுறவுப் படங்கள் வந்து குவிந்தபோது பார்க்க நேர்ந்த அனுபவம். கூகுளில் விவரச்சேகரிப்புக்கு அடுத்தபடியாக வெகுமக்களால் கோடானு கோடி தடவைகளால் பார்க்கப்படுகிற காணொளிப்படங்களாக அவை உள்ளதை அறிவோம். அப்படித்தான் மாநிற கருப்பினப் பெண்களுக்கு “ப்ருநென்ட்டீஎன வகைமைப்படுத்தியிருக்கிறார்கள். அப்படி ஒரு குழுகலவிப் படத்தைப் பார்த்த சமயத்தில் நடித்துக் கொண்டிருந்த மங்கைகளில் ஒருவர் ஆசிய மங்கை என்கிறது பெயர்ப் பலகை.அம் மங்கை மூக்குத்தி அணிந்திருந்திருந்தார். மூக்குத்தியைப் பார்த்தேன். அக் காட்சிகளுக்கு அவ் உடல்களுக்கு அப்பால் அந்த மூக்குத்தி சூரியனின் நீள் கம்பி என்னைத் துளைத்துக் கொண்டிருக்கிறது
வாழ்த்துக்கள் கதிர்பாரதி
வெளியீடு உயிர்மை பதிப்பகம் -11-29- சுப்பிரமணியம் தெரு அபிராமபுரம்-சென்னை 18- விலை ரூ 85


லஷ்மிசிவக்குமாரின் நாவல் “இப்படிக்கு கண்ணம்மா..”

லஷ்மிசிவக்குமாரின் நாவல் “இப்படிக்கு கண்ணம்மா..
சுயசரிதையும் திரைக்கதையுமாக ஒரு நாவல்
         
தமிழில் நாவல் வடிவங்கள் நவீன வாசிப்பு முறைக்கு ஏற்பவும் விஞ்ஞான வளர்ச்சிகளுக்கு ஏற்பவும் மாறிக் கொண்டு வருகிறது. தமிழில் வாசிப்பு முறைகள் உச்சத்திற்கு இருந்தகாலம் எழுபதுகளும் எண்பதுகளும். இன்றும் வாசிக்கிறவர்களுக்காக எழுதப்படுவதாக அன்றி படைப்பாளியின் தனித்துவத்தின் வெளிப்பாடுகளை அறிவிப்பதற்கும் நாவல் பயண்படுகிறது.  பிக்சன் நான் பிக்சன் லீனியர் நான் லீனியர் விஞ்ஞான அடிப்படையிலான படைப்புகள் என்பதாகவும் வந்து கொண்டேயிருக்கிறது. தொடர்கதை அல்லது தொடர்நாவல் என்னும் பகுப்பிலும் நாவல்கள் வந்து கொண்டிருக்கிறது. பல தேசங்களின் நிலங்களைப் பேசுவதாக கலாச்சார விழுமியங்களைப் பதிவு செய்வதற்காகவும் நாவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்தக் கட்டுரை எழுத வாய்த்த நேரம் வரையிலும் நாவல் வகைகளில் ஏற்பட்டு வருகிற மாற்றங்களை அறிந்திருக்கிறேன். சமீபத்தில் வெளிவந்த நாவல்கள் பற்றிய சிறு குறிப்புகளேனும் உண்டு. பொதுவாக குழுயமைவாதங்களால் நாவலின் தன்மைகள் பழிக்கப்பட்டும் தரம் திணிக்கப்படுவதாகவும் உள்ளது. ஒரு குழுவிற்கு நாவல் சிறப்பாக இருக்கிறது என்னும் பதிவு வந்துவிட்டால் அதற்கு அடுத்த எதிர்க்குழுவின் ஜால்ராக்கள் உடனடியாக “அது ஒன்றுமில்லை..குப்பை..ஐயோ...உன்னை யெல்லாம் எவண்டா எழுதச் சொன்னான்..“என்பார்கள்..தமிழச்சூழலில் முன்னணியில் இருக்கிற எழுத்தாளர் என்பவரின் சமீபத்திய படைப்புகளை வாசித்திருப்பவர்கள் கூட இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று நூலின் விலை மற்றும் அப்படைப்பாளி  சார்ந்த குழு..
       பிரச்சனைகள் இருந்தவண்ணமே இருப்பினும் எழுதுகிறவர்கள் நாவல் எழுதுகிறவர்கள் படைப்பிலக்கியத்திற்கு பாடுபடுவர்கள் இயங்கிக் கொண்டிருக்கவே செய்கிறார்கள். சமகாலத்தின் ஒரு சில குழுவாதிகளிட மிருந்து கருத்துகளைப் பெறுவதற்காக இலக்கியத்திற்கு யாரும் வரவில்லை. எப்படியிருந்தாலும் எந்த திசையின் குழுவிற்கும் ஒரு சாராருக்கும் பிடித்தமான படைப்பை எந்தப் படைப்பாளியும் தரப் போவதில்லை. நான் என் அனுபவத்தை எழுதுகிறேன்..அதற்கும் நான்கு வாசகர்கள் இருப்பார்கள் எதிர்காலத்தில் வரலாம்.வாசிக்கலாம் என்னும் உந்துதலில் சில எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டுதானிருக்கிறான். இப்பொழுதும் கூட “வரப்பெற்றோம்என்னும் பகுதியில் பல நூற்றுக் கணக்கான நூல்கள் வெளிவந்தமிருக்கின்றது. உலகம் மிகவும் பெரியது. சிற்சில குழுக்கள் அடிப்படை வசதிகளில் தங்கள் வாழ்வில் செழுமையான வாழ்வு முறைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் எழுத்தும் ஏழ்மையும் சிறுபாண்மையினரின் பெண்களின் எழுத்தும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டேயிருக்கிறது.
          தமிழில் தற்காலத்தில் எழுதுபவர்கள் இரண்டு விசயங்களின் பால் முனைப்புடன் எழுதுகிறார்கள். தன்காலத்தை தன் பண்பாட்டுக் கூறுகளை,நவீன வாழ்க்கையின் போக்குகளின் வழியாக தன் மக்களின் எதிர்காலத்தின் பிரச்சனைகளைப் பேசுகிற படைப்புகளை எழுதுகிறார்கள். இந்த விஞ்ஞான அறிவில் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுக்க முடியாது அப்படியே அதற்காக இந்த மனித குலத்தின் வளர்ச்சியும் முக்கியம். ஏற்றத்தாழ்வற்ற நிலை, எல்லாருக்கும் எல்லாமுமாக பொதுப்பங்கீட்டு முறைகள். இயற்கை வளங்கள் பாதுக்கப்படவேண்டும். நீர்நிலைகள் அதன் வழியாக காணுயிர்களின் பாதுகாப்பு, தன் இனவிருத்தி உள்பட பல் வேறு மரபுக் கூறுகளை உள்ளடக்கிய படைப்புகள். அடுத்த விசயம் தன் தனிப்பட்ட படைப்பு வாழ்க்கையின் அடுத்த கட்ட வளர்ச்சி புகழ் பணம் வாழ்க்கை முறையில் வசதிகள் உள்ளடக்கிய சுழற்சி முறைகள் குறித்த எழுத்துக்கள் என்பதாக. நேரடியாகவே சொல்வதென்றால் திரைப்படத்துறைக்குள் நுழைவதும் அதன் மூலமாகத் தன் கருத்துக்களை தன் நவீன சிந்தனைகளை, படைப்பாக்க முயற்சிகளை மேம்படுத்துவது என்கிற முனைப்புகள் என்பதாக..
        தமிழில் கலை இலக்கிய முயற்சிகள் அனைத்துமே சினிமா எனும் மாயாஜால வாழ்க்கைக்கு என்று பேச முடியாது. ஆனால் சினிமாத் துறையின் மீதுள்ள பற்று என்பதே முக்கால்வாசிப் பேரைக் கலைஞர்களாக்கிக் கொண்டிருக்கிறது எனலாம்..காரணம் புகழும் பணமும் மிக எளிதில் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்துவிடுவதற்கான வாய்ப்புகள். தங்களுக்குப் பணம் கூட வேண்டாம் டைட்டில் கார்ட்டில் என் பெயர் வந்தால் போதும் என்று தன் உழைப்பையெல்லாம் தன் தனித்துவச் சிந்தனைகளையெல்லாம் குடிக்கும் பசிக்கும் அறைவாடகைக்கும் விற்கிற மகத்தான திறமைசாலிகளை எனக்குத் தெரியும். சென்னையிலிருந்து திரும்பி வந்தவர்களிடம் உள்ள நாவல்கள் எத்தனை தெரியுமா..தோல்வியின் எல்லாத் தழும்புகளையும் வைத்திருக்கிற ஒருவன் தன் கிராமத்தில் எப்படி பேனா பிடித்து எழுதுவான். எனினும் இலக்கியப் படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிற படைப்பாளிகள் தொடர்ச்சியாக எழுதியபடியே தங்கள் சினிமா முயற்சிகளைத் தொடர்ந்து வருவதையும் அறிவேன். இன்றைய தொழிற்நுட்ப வளர்ச்சி நிலையில் வெத்து வேட்டுகளும் டுபாக்கூர்களும் சினிமாவில் கால் வைக்கவே முடியாது என்பதும் திறமையற்றவர்களால் எந்த நிலையிலும் வெற்றி பெறமுடியாது என்பதே இன்றைய சினிமா சூழல். இது ஒருவகையில் வரவேற்கத்தகுந்த செய்தியே. சிறந்த படைப்புகளைத்திருடுதல், கதைகளைத்திருடுதல். தலைப்புகளைத் திருடுதல். தங்கள் அறைநண்பர்களின் மிகச்சிறந்த கதைக்கருக்களைத் திருடிக் கொள்ளுதல்,திரைப்படச் சூழல்களிலும் ஒரு இளம் கதாநாயகனை வைத்து அவரைச்சுற்றி இருபது பேர் ஜால்ரா அடித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்திற்காக மற்றவர்களின் சிறந்த படைப்புகளைத் தங்களுடையது என்று சொல்லி மிக சாதுர்யமாக ஏமாற்றுதல். ராயல்டியை ஏமாற்றுதல் என்னும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை.
          திரைப்படத்துறையை மனதில் வைத்து எழுதப்படும் படைப்புகள் அதிகம்தான். கலை இலக்கியச் செயல்பாட்டின் அடுத்த படி சினிமாதான் என்னும் கருத்து ஆழமாக வேறூண்றி விட்டிருக்கிறது நம் படைப்பாளர்களிடம். இதற்குக் காரணம் சமகாலத்தில் புதிய நவீன சிந்தனையாளர்களின் வரவும் அவர்களுடைய இலக்கிய நண்பர்களுடனான உறவுகளுமே இந்த ஆசைக்குக் காரணம் என்றால் மிகையில்லை.
          ஒருவகையில் லஷ்மிசிவக்குமாரும் அந்த நிலையிலேயே தன் எழுத்து வாழ்க்கையைத் துவக்கியிருக்கிறார். சினிமாவிற்கான முயற்சிகள் என்பது தீண்டத்தகாதவை அல்ல. எந்த எழுத்தாளனுடைய படைப்பும் எழுத்தும் மிகப்பரவலான அறிதல்களுக்குள் தன் சிந்தனை,படைப்பு சென்று சேரவேண்டும் என்று நினைப்பதில் நூறு சதவிகிதமும் தவறில்லை. நான் அப்படியான முயற்சிகளை முழுமனதுடன் வரவேற்கிறேன். இந்தக்கட்டுரை எழுதும் போதும் கூட பலருடைய படைப்புகள் சினிமாவாக மாறிக் கொண்டிருக்கிறதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக “விசாரணைஇரா முருகவேளின் மிளிர்கல்.“ மற்றும் மு.சந்திரகுமாரின் “கட்டுதளையினூடே காற்றுஇன்னும் பல படைப்புகள் முதல் கட்ட தயாரிப்பு முறைகளிலிருக்கிறது.
“இப்படிக்கு கண்ணம்மா..“ நாவல் இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று நாவலாகவும் திரைக்கதை வடிவமாகவும் எழுதப்பட்டிருக்கிறது. தன் வாழ்வில் ஏற்பட்ட விபத்தொன்றையும் தன் முகநூல் நட்புத் தோழியுடன் ஏற்படும் காதல் மற்றும் திருமணம் உள்ளிட்ட நகர்வுகளுடன் நகரும் நாவல். பின்னணியில் இலங்கையின் தற்போதைய நிலையையும் கணக்கில் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. அடிப்படையில் இந்த நாவல் தமிழ்நாடு-இலங்கை- தமிழினப்பிரச்சனைகள் உள்ளிட்ட முக்கியமான அம்சங்களைப் பேசுகிறது. தமிழில் முன்பு அறிந்த கே.பாலச்சந்தரின் “புன்னகை மன்னன்“ படம்தான் மிக அதிகமாக சென்சாருக்குள் சிக்கியபடம். மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால், மரியான், நந்தா, போர்க்களத்தில் ஒரு பூ உள்பட பல படங்கள் இலங்கை-தமிழ்நாடு அகதிகள் மற்றும் மீனவர்கள் பிரச்சனைகள் பற்றிப் பேசியிருக்கிறது.
     திரைக்கதை வடிவங்களில் பல முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு மிகச்சிறந்த படைப்பை அப்படியே திரைமொழியில் படம் எடுத்து விடமுடியாது. அந்த இடத்தில் பலதுறை தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்களிப்புடன் காட்சிகள் விரியவேண்டியிருப்பதால் படைப்பாளனின் கதை அந்தந்தப் பகுதியில் சிதிலமடைய நிறைய வாய்ப்பிருக்கிறது. கதைக் களனும் நிலையும் பாத்திரங்கள் உலவும் இடங்களும் மிக முக்கியமாகது. ஒரு ஒற்றை வரிக்கரு மட்டுமே மிகச்சிறந்த படைப்பிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு அவை சமகாலத்தின் திரைமொழி,ரசனைச் சூழல், வியாபாரம் மற்றும் நடிகர் நடிகைகளின் கால்ஷீட்களுக்குப் பிறகு அக்கதை பல வடிவங்களில் திருத்தப்பட்டு எடுக்க ஆரம்பித்த போது ஒரு கதையும்திரைக்கதையும் எடுத்த பிறகு இனியொரு கதையுமாக மாறிவிடும் நிலையேதான் சினிமா உலகின் நூற்றாண்டு கதைகளின் லட்சணம்.
லஷ்மிசிவக்குமாரும் உள்ளிட்ட நண்பர்கள் நேரடியாகவே திரைக்கதை வடிவத்துடனும் அதே நாவலை நாவல் வடிவத்துடன் எழுதுகிற பாணி சிறப்பானது.உங்களுக்கு எதுவேண்டுமோ எடுத்துக் கொள்ளலாம் என்பது. சினிமாவில் கதை சொல்கிற முறைகள் மாறியிருக்கிறது. காரணம் திரையரங்குகள் இப்பொழுது முப்பது சதவிகிதம்தான் உள்ளது. நான்கு காட்சிகளுக்கும் வேறுவேறுபடங்கள் திரையிடப்படுகிறது. 3ஜி 4ஜி போன்ற நெட் வசதிகள் மற்றும் டவுன்லோட் சிஸ்டங்கள் வந்த பிறகு ரிபிட்ட் ஆடியன்ஸ் என்பது முற்றிலும் வழக் கொழிந்து போய்விட்டது. மற்றபடி இருபத்திநான்கு மணிநேர சினிமாவென தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு வேறு. இவைகளுக்கும் மத்தியில் சினிமாத்துறையும் அதைச் சார்ந்த பல லட்சம் தொழில்நுட்பக்கலைஞர்களின் வாழ்க்கை உள்ளது. அதுமட்டுமல்லாது இன்று படம் தயாரிக்க ஆகிற செலவுகள்,வாடகை, சம்பளங்கள்,திரையரங்கு விநியோக உரிமைகள்,சென்சார் போர்ட் பிரச்சனைகள் என தீராத பெருந்துன்பங்களில் சிக்கிச் சின்னாபின்னமா கிறார்கள்.மிகப்பெரிய அளவில் தொழிற்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பும் நல்ல உறுதியான அனுபவமிக்க தயாரிப்பாளர்களுக்காக காத்திருக்கிற சிறந்த கலைஞர்களின் வாழ்க்கை மிகவும் கேள்விக்குரிய தாகவே உள்ளது.
          இந்தச் சூழலில்தான் தேர்வு செய்யும் கதையும் பின்னணிக் களமும் முக்கியமாகிறது.சமூகத்தின் சென்சிடிவான பிரிச்சனைகளை எடுத்து தமிழின் முக்கியமான படமாக மாற்றலாம் என்று ஒரு கலைஞன் முனைந்தால் முதலில் சந்திக்கிற பிரச்சனை அரசியல்வாதிகளின் தலையீடும் சென்சார் போர்ட்தான். அதனாலேயே மிக சாதாரணமான படங்களை எடுக்கிறபொழுது அதில் எந்த அளவு கலாரசனையின் அடிப்படையில் எடுக்கலாம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அது மட்டுமல்ல அந்தப்படம்தான் பல கலைஞர்களுக்கான வாழ்க்கை எதிர்காலம்.
லஷ்மிசிவக்குமாரின் எழுத்து நடை இயல்பாகவும் தகவல்களின் கோர்வையாகவும் உள்ளது. எதிர்பாராத விபத்தொன்றில் தனது இயல்பான செயல்பாடுகளில் தற்காலிக தடை ஏற்பட்டு விட்ட பிறகு எழுத்தும் வாசிப்பும் என நகர்ந்து கொண்டிருக்கிற எழுத்தாளனின் உலகம் நம்மால் புரிந்து கொள்ளக் கூடியது. நாவலின் அத்தியாயங்களில் காட்சிகளில் இணையவெளியில் காதல்,சாட்டில் உரையாடல்,திருமண ஏற்பாடுகள், குடும்பச்சூழல்கள்,இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள நிலவரங்கள்,தன் காதலியின் குடும்பச் சூழல்கள்,இலங்கை ராணுவத்தின் செயல்பாடுகள் என நாம் தினமும் அறிந்துகொண்டிருக்கிற நாளிதழ் செய்திகளின் பின்னணியை மிகச்சிறப்பாக நம் கண்முன் நிறுத்துகிறார். திரைப்படத்துறைக்குள் நுழைவதற்கான ஏற்பாட்டிலிருக்கிற படித்தவர்கள் மற்றும் சென்னையில் பல்வேறு பணியிடங்களில் பணிபுரிகிற எண்ணற்ற வர்களின் வாழக்கை அம்சங்கள் நமக்குப் புலப்படுகிறது. நாவலின் களங்கள் கிராமம், ஊர்,நகரம் பெருநகரம்,இலங்கையின் பல ஊர்களின் சித்திரங்கள் கூகுளில் தேடிக்கிடைப்பது போன்ற களங்கள் கிடைக்கிறது. கதாபாத்திரங்களின் முகங்களும் பாவனைகளும் அவர்கள் பேசுகிற இலங்கைத் தமிழும் நமக்குப் பல பிரதிகளின் வழியாக கிடைத்தவையே. ஏறக்குறை இலங்கைத்தமிழ் என்பது தமிழ்நாட்டின் மாவட்டத் தமிழ் மொழிகளில் ஒன்றாகவே அறியப்பட்டுவிட்டது. நாவலின் முழுமையான கதையையும் அதன் முழுமையான சிறப்புகளையும் சொல்லி மேற்கொண்டு நாவலுக்குள் யாரும் நுழையாத வண்ணம் செய்வது அறிமுக உரை எழுதுபவனின் வேலையல்ல என்பது யாவரும் அறிவார்கள்.
           லஷ்மிசிவக்குமார் தஞ்சைத் தரணிப் பகுதி படைப்பாளராக இருப்பதால் அவருக்கு சோழநாட்டின் தமிழுக்கு நாம் கட்டியம் கூறவேண்டியதில்லை.சைவமும்வைணவமும் பக்தி இலக்கியங்களும் நவீன இலக்கியப் பிதாமகர்களான கரிச்சான்குஞ்சு,பி.எஸ் ராமையா. தஞ்சைபிரகாஷ்,க.நா.சு,மௌனி,தி.ஜா, மற்றும் பல மணிக் கொடி எழுத்தாளர்கள் எழுத்துலகத்தைக் கட்டி ஆண்ட எழுத்துப் பரம்பரையின் மண். அந்த நிலத்தின் எழுத்துக்குச் சற்றும் குறைவில்லாத எழுத்துநடை. நாவலின் நெல்வயல்களும் பாசன நிலங்களும் கண்ணுக்குள் நுழைந்து கொள்கிறது. உரையாடல்களில் சிக்கனத்துடன் பேசுகிறது. நமது அலோபதி மருத்துவ முறைகளின் ஏற்படுத்துகிற “சைட் எபக்ட்கள்பற்றிய விபரங்கள் நாவலின் உண்டு. நம் உடலுக்கு என்ன மாதிரியான மருந்துகளை நம் உடல் ஏற்றுக் கொள்கிறது என்பதை அறிந்து கொள்வதற்குள் நாம் போய்ச் சேர்ந்துவிடுகிற அளவு இன்று நம்மிடம் மருத்துவமுறைகள் வந்துவிட்டது. எல்லா மருத்து முறைகள் பற்றியும் விளம்பரங்கள் அதுபற்றிய தொலைக் காட்சி விவாதங்கள் எதிர்விளைகள் நமக்குப் பஞ்சமில்லாமல் கிடைக்கிறது. என்ன ஒரே குறை நம்மிடம் பணமோ அதற்குரிய உடலோ நம்மிடம் இல்லை. மருந்துக்கடைகள்,மருத்துவமனைகள்,மருத்துவப் பணியாளர்கள் போலி டாக்டர்கள்,சித்த ஆயுர்வேத,அக்குபஞ்சர், தொடு முறைசிகிச்சை, யோகமுறை,இயற்கை வைத்தியங்கள் என்று அதற்கெனவே உருவாக்கப்பட்ட மனிதச் சமூக அங்கத்தினர்கள் வைத்தியம் செய்துகொள்கிறார்கள். இதற்கிடையில் யோகாப் பயிற்சி வேறு நம்மைப் பற்றிக் கொண்டிருக்கிறது. இவையணைத்தும் செய்து கொள்வதற்கான நேரம் உள்ளதாவென்று தெரியவில்லை. எழுதப்படிக்கத் தெரியாத பரம ஏழைகள் பரம்பரை ஏழைகளின் பாடு தேவலை. மூன்றாது உலகப் போர்கள் தேவையே இல்லை.நம் மருத்துவமனைகளே போதும் மக்கள் தொகையை சிறப்பாக குறைத்துத்தருவார்கள் என்பது நிச்சயம். இந்த நாவலில் லஷ்மிசிவக்குமார் வலியிறுத்துகிற குறியீடாக அவரது இன்றைய இருப்பே மருத்துவத்தின் மீதான சாட்சி எனலாம். நமக்குக் கிடைக்கும் பதில் இப்படி யாராவது ஒருவருக்கு நடக்கலாம்ங்க..அதவெச்சிட்டு நாம மொத்தமா எல்லாத்தையும் குத்தம் சொல்லக் கூடாது என்பதுதான்.
         நாவல் பற்றிய விமர்சனமாகப் பேச நிறைய இருந்தாலும் கூட மிக தைரியத்துடன் இந்த நாவலை அவரே பதிப்பித்து உள்ளார். முதல் நாவல்வேறு. அதிகமாக தமிழ்நாவல்களை விமர்சிப்பதைப் போல அக்கு அக்காகப் பிரித்துப் பேசுவது சாத்தியமல்ல. நம் இதிகாசங்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ராமாயணம் மகாபாரதம் பற்றிய விமர்சனங்கள் இன்றும் பட்டிமன்றங்களில் ஒலிக்கக் கேட்கிறோம்.  படைப்பு வாசிக்க மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக அது நம் வாழ்வின் மீது நாமே வைத்துக் கொள்கிற விமர்சனமே. இன்னும் சொல்லப்போனால் இந்த நாவலே கூட இந்த வாழ்வின் மீது படைப்பாளி தான் வைத்த விமர்சனமே எனலாம். இன்று புதிதாக எழுதப்படுகிற எந்தவிதமான படைப்பு அம்சங்களுமே விமர்சன மரபு கொண்டவை. மகத்தான படைப்பாளர் என்று அறியப்பட்ட படைப்பாளியின் படைப்புகளைக் கூட நார்நாராக் கிழிக்கிற விமர்சகர்கள் நம்மிடம் உண்டு. ஆனால் அவர்களால் ஒரு பாராவோ பத்தியோ எழுத தெரியாது. அவர்கள்தான் விமர்சகர்கள். நூலை இலவசமாக கொடுத்துவிட்டால் அதுவே அந்தப்படைப்பாளிக்கு தான் வைத்துக் கொள்கிற ஆப்பு..நீங்கள் ஆட்டோமேடிக்காக இலக்கிய உலகத்திலிருந்து வெளியேற்றப்படுவீர்கள்.
            லஷ்மிசிவக்குமாரும் இந்த நாவலில் சில புதுமையான கதைசொல்கிற முயற்சியை மேற்கொண்ட அதே நேரத்தில் சரளமான வாசிப்பு  முறையைக் கையாண்டிருக்கிறார். வெகுசன வாசிப்பின் சௌகரியத்திற்காக எப்பொழுதும் ஒரு நாவல் சென்று விடக்கூடாது. அதற்கென நாவல் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள் அப்பணியை அவர்களுக்கு விட்டுவிடுவோம். நாவலில் வரும் பாத்திரங்களின் உரையாடல்களை இன்னும் பயண்பாட்டு மொழியிலேயே வைத்திருக்கலாம். நாவலுக்குள் நாவலும் சிறுகதைகளும் திரைக்கதை அமைப்புகளும் வைத்திருப்பது நல்ல முயற்சி. வாழ்வின் சுயத்தின் ஒரு பகுதியை படைப்பிலக்கியமாக மாற்றியிருப்பதற்கு வாழ்த்துக்கள். தமிழ்க் குடும்பத்தின் சமகாலப் பொருளாதாரப் பிரச்சனைகளை உரையாடல்களின் மூலமாகவே புரியவைக்க முனைந்திருக்கிறார். நாவலின் அரசியல் களத் தன்மை இல்லாத நிலை பெருங்குறையாகப் படுகிறது. இவ்வுலகில் அரசியல் பின்புலமில்லாமல் ஒன்றுமில்லை. அல்லது அரசியல் படுத்தல்கள் சம்பந்தமான தர்க்கமும் விமர்சனங்களும் தேவை. அத்துனை பிரச்சனைகளுக்குமான அரசியல் மறைபுலம் அவசியமாகிறது. அடுத்து வருகிற படைப்புகளில் இக்கருத்துகளை பரிசீலனைச் செய்தபடி மேன் மேலும் எழுத வேண்டுகிறேன்..எழுத வாய்த்த பொழுதுகள் அற்புதமானது. கொண்டாட்டத்தின் அம்சங்கள். அவர் விரும்பிய படியே இந்த நாவல் திரைப்படமாக வெளிவந்து சிறப்பு கொள்ளட்டும் என்று வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு கண்ணம்மா- நாவல்- முதல் பதிப்பு- டிசம்பர்-2015
விலை-200 ரூ பக்-300 வெளியீடு-முடிவிலி- கரந்தை- தஞ்சாவூர்-613002
அலைபேசி-999 4384 941-































ஞாயிறு, 24 ஜூலை, 2016

கவிஞர் சிவ விஜயபாரதியின் “வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது..“ தொகுப்பு குறித்து......


கவிஞர் சிவ விஜயபாரதியின் “வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது..“ தொகுப்பு குறித்து......

 

 

திராவிட இயக்கப் படைப்புகளின் தற்கால நிலையென்ன.சமகாலத்தில் அப்படியான வகையில் எழுதப்படுகிறதா. அப்படியே திராவிட இயக்கக் கவிதைகள் எழுதப்படுகிறதா. திராவிட இயக்கக் கவிதைகள் என்பது எப்படி இருக்கும். அப்படியொன்று உள்ளதா இல்லையா எனும் கேள்விகள் உதித்து மறையும். ஒரு நாள் நண்பரொருவர் சொன்னார். தமிழ்நாடு கேரளம் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் எழுதப்படுகிறவை அனைத்துமே திராவிட இயக்கப்படைப்புகள்தான் என்றார். அக்கருத்தை ஆனித்தரமாக நிறுவி வாதிட்டார். அந்த வாதத்தில் தமிழ்த்தேசியம் என்பது எந்த இடத்தில் உள்ளது. என்னும் வாதம் நீண்டு திராவிட இயக்கக் கவிஞர்கள் என்பவர்களெல்லாம் யார் என்னும் பட்டியல் நீண்டு கடைசியாக திராவிடக் கட்சிகளைக் கலைத்துவிடலாம் என்பதில் வந்த முடிந்து போனது. தனித்தமிழ் இயக்கங்கள் வகுத்த கட்டளைகள், பொதுத்தமிழ் வளர்த்து வருகிற தமிழாங்கிலசம்ஸ்கிருத தேவநாகரி மொழி வழக்குகளின் படைப்புகள் பற்றியும் விவாதங்களிடையில்தான் கவிஞர் சிவ விஜயபாரதியின் “வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது..“ தொகுப்பு வாசித்தேன்.

        முன்னுரைகள் முறையே வானம்பாடி மூத்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர் புவியரசு இந்த தொகுப்பு பற்றி இப்படி எழுதுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளாய் நின்று கொண்டிருக்கும் வள்ளுவ மரத்தின் புதுமலர்“ என வருணணை செய்திருக்கிறார். தோழர் கொளத்தூர் மணி “நம்பிக்கை தரும் பகுத்தறிவுக் கவிதைகள்என வகை செய்திருக்கிறார். கவிஞரின் உரையில் கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் வாசகர் என்பதைப் பதிவு செய்கிறார். நாம் இந்த வகையில் ஏறக்குறைய திராவிட இயக்கக் கவிதைகள் என்று முடிவுக்கு வருவதற்கு மேற்கண்ட அறிமுகங் கள் உதவி செய்துவிடுகிறது. பொதுவாக நாம் திராவிட இயக்கம் பற்றிப் பேசுகிற பொழுது ஆட்சி அரசியல் பகுதிகளை நீக்கிவிட்டு சிற்சில நடவடிக்கைகளைச சேர்த்துக் கொண்டால்தான் உரையாடலைத் தொடர முடியும் நீங்கள் திராவிட ஆட்சிகள் குறித்த விவாதங்களை உள்ளே நுழைத்தால் பிறகு இருவரும் காவல்,நீதிமன்றம்,சட்டம் ஒழுங்குகளுக்குச் செல்வதாக மாறிவிடும். ஆகவே..

“வெள்ளக்காக்கா மல்லாக்கப் பறக்குது...சாதிச் சண்டைகள் நடந்த சமயத்தில் தன் விசுவலிங்கமாமா பாடிய பாடலின் வரிகளையே தன்  தொகுப்பிற்குத் தலைப்பிட்டிருக்கிறார். பொதுவாக சமகாலத்தில் சமூக உணர்வு ஊட்டுதல்,சாதி சமய வேறுபாடுகளைக் களைதல், ஏற்றத்தாழவு களை உடைத்தல்.லஞ்ச ஊழல்களை ஒழித்தல் போன்ற ஆபாச நடவடிக் கைகள் நடைபெறுவதில்லை. அப்படியாக நடக்கும் போரட்டங்களுக்கு என்ன வரவேற்பு இருக்கிறது என்பதை நாம் அறிவோம். இருந்தாலும் போராடமல் இருக்கமுடியாது. இதெல்லாம் நடப்பதே திராவிட இயக்க ஆட்சிகளில்தானே என்று நீங்கள் எதிர்கேள்வி கேட்க கூடாது. இதற்குதான் நான் முன்பே எச்சரித்து தவிர்த்துவிட்டுவாசியுங்கள் என்று விண்ணப் பித்தேன்..இக்கட்டுரை எழுதும் பொழுது தாமிரபரணி ஆற்றில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு அஞ்சலி நாள் இன்று. பல்வேறு அரசியல் கட்சிக்காரர்கள் ஆற்றிற்குச் சென்று மலர் தூவி அஞ்சலி  செலுத்தினார்கள் (சில திராவிடக்கட்சிகள் போகவில்லை).

         சிவ விஜயபாரதியின் கவிதைகளிலிருந்து சிறப்பான கவிதை யுடன் உரையாடலைத் தொடங்குவோம்.

செம்பருத்திப் பூ

 

துவட்டப்படாத தலை

நீரைச் சொட்டிக் கொண்டிருக்க

 

துளசி மாடத்தைச் சுற்றிவந்து

துளசியின் மேல் செம்பத்திப் பூ

பரப்பி விட்டு விழுந்து வணங்கினாள்

 

எதிர்ப்பட்ட என்னிடம்

படபடத்த விழிகளோடு

வி பூதியை நீட்டினாள்

 

துளசிக்குள்

செம்பருத்தி பூத்திருந்தது

 

           தொகுப்பில் மேலும் சிறந்தகவிதைகள் உள்ளது. இயல்பான நேரடிக் கவிதைகள் அவை. இனக்குழு சார்ந்த கவிதைகள். முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோரின் குரலாக ஒரு கவிதை. அரசியல் விடுதலை பேசுகிற கவிதைகள். கிராமத்தில் நடக்கும் மூட நம்பிக்கை களுக்கு எதிரான கவிதை,சாதிய மோதல்கள்களால் பாதிக்கப்படுகிற மனிதம் பற்றிய கவிதைகள். சாதிய உருவாக்கங்கள் பற்றிய கருத்துகளின் மீதான கோபங்கள் எல்லாம் எதிரொலிக்கிறது. தமிழீழம் சார்ந்த துயரம் நிறைந்த கவிதைகள். தமிழ்க்கவிஞன் எழுதித்தீர்த்துக் கொள்ளவேண்டிய எல்லா அம்சங்களும் கொண்ட கவிதைகள். சமூக அரசியல் களப்பளியாள ர்கள் நடைமுறையில் உள்ள நேரெதிர் கள அரசியல் முறைகளை அறிவார்கள். அவர்களுக்கும் கவிதை வரிகளால் சமூகத்தின் இயல்புகளைச் சாடவேண்டும். அறைகூவல் விடுக்கவேண்டும். இக் கொடிய நிலைகளுக்கு எதிராக மக்கள் திரண்டு அநீதிகளைத் தட்டிக கேட்கவேண்டும். போதும் சகிப்புத்தன்மை பொங்கி எழுங்கள் மக்களே..ஏற்றத்தாழ்வு கொண்ட பழமைமுறையைத் தகர்ப்போம் என்னும் பொருளில் சில கவிதைகள். மீத்தேன் வாயுத் திட்டத்தை எதிர்த்து ஒரு கவிதை

 

சம்பா குருவ வெதவெதச்சோம்

களையெடுத்தோம் கதிரறுத் தோம்

தென்னை வாழை நட்டு வெச்சோம்

குலையும் சீப்புமா வளர்ந்து நிக்கும்

 

வகை வகையா வளர்ந்த  பூமி

மீத்தேனுக்குள்ள மாட்டும் கத

நெனச்சா வயிறு குமுறுது

 

காடும் கழனியும் கருகிப் போக

பசியும் பஞ்சமும் வந்து நிக்கும்

வெளைய வச்ச எங்க மக்க

வட்டிக் கடனுக்குச்ச் செத்தா போக?

     

          பொதுவாக புரட்சிகரமான கவிதைகள் என்கிற படிமத்தில் சமகாலத்தில் கவிதைகள் வருவதில்லை. அல்லது கவிதையில் புரட்சியைப் பேசி என்ன பயன் என்று கூட கவிஞர்கள் விட்டிருக்கலாம். அல்லது தமிழுக்கும் புரட்சிக்கும் சம்பந்தமில்லையென்று கூட நினைத்திருக்கலாம். எதற்கு வம்பு என்று கூட தவிர்த்துவிடலாம். கவிஞர் சிவ விஜயபாரதி கவிதை விமர்சகர்களைக் கண்டு அச்சமடையாமல் தைரியமாக கவிதை அல்லாத கவிப்பின்னல்களை எழுதியிருக்கிறார்.

கவிதை எப்படி வேண்டுமானாலும் எழுத சுதந்திரம் உண்டு. கவிதை எந்த இடத்தில் கவிதையாக மாறும். எதோடு கவிதையின் அழகு முடிந்து விடுகிறது என்பதை அறிந்து கொள்வதும் நலமே.. மேலும் ஒரு சிறந்த கவிதையை வாசிக்கலாம். புதுக்கவிதையின் உயரத்தின் நிழலுடன் ஒளிர்கிற கவிதையாக அமைந்திருக்கிறது.

 

மழை விட்டிருந்தது

 

வெக்கை குறையத் தொடங்கி

மாலைப் பொழுதில்

நட்பின் சுவை மாறாது

பேசிக் கொண்டிருக்க

திரண்டிருந்த மேகம்

கொட்டிக் கொண்டிருந்தது

 

ஆவியாய்

குறைந்து கொண்டிருந்தது

தேநீரின் சூடு

 

நட்பின் மேய்ச்சல் நிலத்தில்

மேய்ப்பராகிய நீ

பைபிளை ஒதுக்கி

அழைப்பிதழை எடுத்து நீட்டுகிறாய்

 

வெட்டும் மின்னலில்

முகிழ்க்கும் மூங்கில் குழந்தையென

நினைவுகள் நமக்குள்

 

அடைக்கும் தாளற்று

திரளும் கண்ணீரை

மறைக்கிறோம்

 

கட்டுடைத்த அன்பு

மௌனமாய்

நீண்டு கிடந்தது

 

மழை விட்டிருந்தது

 தனக்கு நண்பனாக இருந்து சாதிய அடுக்கில் உயர்ந்தவனாக அறியப்பட்டு விட்டவன் தன் இல்லத்து விழாவிற்கு அழைப்பிதழ் தருகிற காட்சியை அறிமுகப்படுத்துகிற இடத்தில் கவிஞனின் இயல்பு சிறப்பாக வெளிப்படுகிறது.பொதுவாக பல நூறு புரட்சிக்கவிதைகள் செய்ய வேண்டிய வேலையை இப்படியான ஒரு கவிதை செய்து விடுகிறது. இந்த நூலில் முழுக்கவும் மழை கவிதைகள் அதிகமாகப் பொழியப்பட்டிருக்கிறது. சாதியப் பற்றுகள் அதிகமாக உள்ள ஊர்களில் மழைக் காலங்கள் எப்படியிருக்கும் என்பதை உணர்த்துவதாக உள்ளது.

         இந்த நூலுக்கு தமுஎக சங்கம் வைத்திருந்த அறிமுக விழாவில் கவிஞர் சிவ விஜயபாரதியின் உரையைக் கேட்டிருக்கிறேன். நல்ல பேச்சாளராகவும் இருக்கிறார். அவர் உரையிலும் தமிழ்ச்சமூகத்தில் புறையோடிப் போய்விட்ட சாதிய அமைப்புகளைச் சாடினார். நம் பண்பாட்டில் சாதியத்திற்கு எதிராகப் பேசுகிற சாதியும் சாதி ஆதிக்கத்தைத் தான் நிலைநாட்டுகிறது என்பது பொருள். தங்கள் சாதிகளும் மேல்நிலையை அடைந்து தற் பொழுது உள்ள மேல் சாதிகள் அனைத்தும் கீழ்சாதிகளின் நிலைக்கு வந்து கீழ் சாதிகள் என்று கட்டமைக்கப்பட்டவர்கள் மேல்சாதிகளாக அதிகாரங்களைக் கைப்பற்றி பழிக்குப் பழி வாங்குவதல்ல என்பதை சாதியைத் தகர்க்க நினைக்கிறவர் களும் இன்ன பிற ஏனைய எதிர்ப்பாளர்களும் அறிவார்கள் என்று அறிகிறேன். நிலம் அதிகாரம் பணம் அடியாள் நிறுவனம் என்று சகல அள்ளக்கைகளுடன் இருக்கிற சாதிகள் எந்தக் காலத்திலும் அழியாது என்பதை கவிஞர் சிவ விஜயபாரதி உள்ளிட்ட முற் போக்காளர்கள் நம்புவார்கள் என்று கருதுகிறேன். காரணம் ஒன்றுமே இல்லாதவர்கள் கொள்கையில் வலுவாக இருக்கும் பொழுது மேற்கண்டவர்கள் தயிர் சாதம் மட்டுமே சாப்பிடுவார்கள் என்று கருதக் கூடாது. இறுதியாக அடுத்த ஒரு கவிதையுடன் முடிக்கிறேன். நினைத்துப் பாருங்கள் சாதிகளே இல்லாமல் போனால் நமக்கு மண்டை காயுமா காயாதா...

பூவரசனும் புவியரசனும்

 

புரியாத பெருநகரச் சாலையொன்றில்

பரிச்சயமற்ற முகங்கள்

விரைந்து கொண்டிருக்க

பூவரசம் பூக்கள்

உதிர்ந்து கிடந்த

பழைய மரத்தினடியில் நின்றேன்

மழை தூவிக் கொண்டிருந்தது

இருவர் முகத்திலும்           

 

நல்ல பேச்சாளராக இருப்பது கவிதை எழுதுபவர்களுக்கு பலம்..அப்படியே கவிஞர்கள் நல்ல பேச்சாளர்களாக இருப்பது கவிதைகளுக்கும் பலம். இரண்டில் எதையும் பேசியும் எழுதியும் சமூகத்துடன் நின்று கொள்ளலாம். இக்கவிதைகள் திராவிட இயக்கக் கவிதைகளா, திராவிடம் எனப்படும் பகுத்தறிவுக் கவிதைகளா என்பதை காலமும் அவருடைய இலக்கிய வாழ்வும் முடிவு செய்யும். அதுவரையிலும் திராவிட இலக்கியப் பரப்பில் கவிதைத் துறையில் ஒரு சிறந்த கவிதைப் பிரதி இதுவெனச் சொல்லலாம்...வாசித்துப் பாருங்கள்.. கைப்பற்றி வாழ்த்துங்கள்...

 

வாழ்த்துக்களுடன்..     

வெள்ளக்காக்கா மல்லாக்கா மல்லாக்காப் பறக்குது“

கவிதைகள்-ஆசிரியர் சிவ விஜயபாரதி

வெளியீடு-குயிலி பதிப்பகம்

44 ஊத்த மந்தை- கல்லூர் அஞ்சல்-

கும்பகோணம் தாலுக்கா

தஞ்சாவுர் மா

தமிழ்நாடு-612 503

அலைபேசி-97866 34522

விலை-70 ரூபாய்...