புதன், 24 டிசம்பர், 2014

தோட்டாக்கள் பாயும் வெளி-ந.பெரியசாமியின் கவிதைகள்..



தோட்டாக்கள் பாயும் வெளி-
ந.பெரியசாமியின் கவிதைகள் குறித்து...
இளஞ்சேரல்

         கவிதைகளின் நிலைகளில் அதன் பதிவாக்கங்களில் பொருளும் காட்சிகளும் காட்சியும் படிமங்களும் வேறு நிலத்திற்குரியவனுக்கு அந்நியமாகவே தெரியும். எனினும் நாம் கவிதைகளை வாசிக்கிற பொழுது ஒரு புதிய நிலத்தை புதிய அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளப்போகி றோம் என்னும் உணர்வுடன்தான் அணுக வேண்டும். நாம் நமது ஊருடனும் உறவுகளுடனும் அந்நியமாதலைத் தொடர்ந்து நிகழ்த்திவருகிறோம். மிகவிரைவாக ஒரு பிடியைத் தளர்த்திக் கொள்கிறோம். அப்படியான விடுபடல் மூலமாக மனமகிழ்ச்சி கொள்கிறோம். அந்நிய நிலமாக அந்நியமனிதர்களாக ஒவ்வொன்றையும் அறியத் துவங்கியிருக்கிற காலமிது. தொலைவிலிருப்பவர்களிடம் உறவுகளைப் பற்றிக் கொள்ள முனைவதும் அருகிலிருப்பவர்களிடமிருந்து வெகு தொலைவு இடைவெளியை உருவாக்குவதுமாகவே மனித உணர்வுகளின் வாழ்வு பல்லாயிரம் ஆண்டுகளாகவே நடக்கிற தொடர் பெயரெச்சம் இது.
           ந.பெரியசாமியின் கவிதைகள் மாற்று சமூகத்தைப் புணரமைக்க நினைக்கிறது. கோம்பக்காட்டுப் புதூர்,புதுடெல்லி, புதூர் என்கிற நிலப்படிமங்கள் எல்லாமே புதுவகையான சமூகப் புத்தாக்கம்தான். ஒரு புகழ்பெற்ற கவிதையொன்று எழுதியவர் ந.முத்து என நினைவு
சமத்துவபுரம்
கழிவுகள் சுத்தம் செய்ய
அதே வெட்டியான்- என்பதாக.
         நிலச்சமண் என்பது இனவரைவியலுக்குட்பட்ட தாகவே இருப்பினும் அங்கு தோன்றியெழுவது புதிய சமூகத்தின் இயல்புகள்தான். தலைமுறைவேறுபாடுகளும் சிந்தனைகளின் தொடர்ச்சிதான். ஆனால் மொழியில் மட்டும் எதுவும் நிகழ்வதேயில்லை. அல்லது நிகழ விடுவதேயில்லை. ந.பெரியசாமியின் ஒரு கவிதை
எழுத மறந்த பக்கங்களில்...

தினமும் எழுதத் தீர்மானித்தேன்
வெண்மை மிளிரும் தாள்கள் நிறைந்த
நோட்டு ஒன்றை வாங்கி வந்தேன்
ஓரே ஒரு படம் வரைஞ்சிக்கிறேன்
ஆசையாக்க் கேட்டவனிடம் தந்தேன்
மரம் ஒன்றை வரைந்திருந்தான்
நாளையிலிருந்து துவங்கலாமென வைத்தேன்
நிறைய்ய கடந்தன நாட்கள்

திடுமென நினைவு சுட
எழுதத் தீர்மானித்து எடுத்தேன்
முதல் பக்கத்திலிருந்த மரம்
அடுத்த பக்கத்தில் துளிர்த்திருந்தது
அடுத்தடுத்த பக்கங்களில்
காக்கை கூடு கட்டியிருந்தது
மேலும் பல பக்கங்களில்
இலைகள் உதிந்து கிடக்க
காய்களும் இறைந்து கிடந்தன
மர நிழலில் அமர்ந்திருந்தவர்கள்
சேகரித்த பழங்களைத் தின்றனர்
துப்பிய கொட்டைகளில்
சிலது துளிர்த்தும் இருந்தன
பிரபஞ்சம் எங்கும்.---பக்-44

      தொல்காப்பியமும் சங்கப் பாடல்களும் வகைப்படுத்திய நிலங்களின் தன்மை மாறியிருக்கிறது. மலைகள் தரைமட்டமாக்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளும் மேம்பாலங்களும் உருவாக்கப்படுகிறது. குளங்கள் பேருந்து நிலையங்களாகிறது. ஆறுகள் சாலைகளாகவும் கனிம வளங்களைத் தோண்டியெடுக்கிற நிலமாகவும் மாறியிருக்கிறது. காதலர்களின் வாய்க்கால்களும் குரங்குக் குதிர்களும் இல்லை. கடல்வளங்களுக்காகவும் மீன்களுக்காகவும் சாகிறவர்கள் அதிகமாகிறார்கள். கடற்கரைகளுக்குக் காற்று வாங்க வருபவர்கள் குறைந்து வீட்டிலேயே உடற்பயிற்சிக்கூடங்களிலும் நடைபயிற்சி இயந்திரங்களுடன் வாழப்பழகிக் கொள்கிறார்கள். இளையோர் சமூகம் கிழட்டுத்தன்மையையும் கிழடுதட்டிய சாகப்பிரியப்படாமல் இந்தச் சமூகத்தை மேன் மேலும் என் தலைமுறையோடு இந்த மண்ணும் அழியட்டும் என நினைக்கிற கிழடு தட்டிய தத்துவங்க ளை வைத்துக் கொண்டு திரிகிற நிறுவனத் தலைமைகள். இதற்கிடையில் உண்மையையும் அறத்தையும் ஏதோ தன் சொத்து என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டு திரிகிற தீவிர இலக்கியப் பிரதியாளர்கள். பதிப்பாளர்கள். நூலாசிரியர்கள். மயிரளவு சுருங்கிப் போன உடையைப் போலவே கருத்துப் போன இன உணர்வாளர்கள். இன உணர்வாளர்களின் கருப்புக்கவிதைகள். எல்லாவற்றையும் விற்று டாலராக்க முனைகிற நிறுவனங்களும் அரசுகளும். ஒரு களையைப் பிடுங்கினால் ஓராயிரம் களைகள் முளைக்கிற சமூகம். தொண்ணூறு சதமான மரமண்டைகளும் பாதி வெந்த அரைவேக்காட்டு மக்கள்.
       இந்த மக்களுக்காக எழுதுகிற படைப்பாளர்கள். இந்த மக்களின் உய்வுக்குப் பாடுபடுகிற சிந்தனையாளர்கள். ரத்த அணுக்களில் கலந்து விட்ட சமூகப் பொறுப்புணர்வை புற்றுக்கட்டியாக அகற்றுகிற வடிவில் ஒவ்வொரு கவிதையையும் எழுதுகிற கவிஞன். எப்படியும் விடியும் விடிந்து விடும் என்று நம்பிக்கையோடு இயற்கையுடன் உரையாடி உரையாடி தனக்கு இணக்கமான சிந்தனையுள்ள நண்பர்களுடன் உரையாடி இலக்கியம் எழுதுகிற படைப்பாளர்கள் சோர்வடையாமல் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கலப்பட வியாபாரியும் கஞ்சா விற்பவனும் ரேசன் அரிசியையும் டீசலையும் அடிமாடுகளையும் கடத்துகிறவர்கள் இந்த உலகில் தைரியமாகவே வாழ்கிறபோது படைப்பாளர்கள் வாழ முடியாதா என்ன. கவிஞனும் கவிதையும் வாழாதா என்று மொழியின் துணிவுடன் எழுதுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
         ந.பெரியசாமியும் தன் கவிதைகளின் வழியாக அப்படித்தான் துணிவுமிக்க சொற்களுக்குச் சொந்தக்கார மனுசராகத் தெரிகிறார். கடந்த இரண்டு தொகுப்பிலிருந்து சற்று வேறுபடுகிறார். காட்சிகளை விவரிக்கிற பொழுதும் அனுபவங்களைப் பேசும் பொழுதும் அவருடைய உணர்விற்கு நம்மையும் ஆட்படச் செய்கிறார். இந்தத் தொகுப்பில் அல்லாத அவர் எழுதுகிற முகநூல் மற்றும் சிற்றிதழ் கவிதைகளிலும் தனித்த இயல்பை அவர் தொடர்ந்து கவனப்படுத்தப்படுபவராகவே உள்ளார். அறம், அரசியல்,நிலம், வளம், மனித உணர்வின் அதீத வெளிப்பாடுகளும் காலமும் தொடர்ந்து பின்பற்றுகிற கவிஞராக உள்ளார். கவிதையின் அமைப்பியலை நேசிப்பவராகவும் அறியப்படுகிறார்.
         உணர்வின் வெளிப்பாடுகளாக மட்டும் கவிதைகள் அறியப்படுவதில்லை. கவிதைக்கே உரிய இயல்புகளும் கவித்துவமும் நல்லியல்புகளும் மிகவும் முக்கியம் என்பதை சங்கப்பாடல்களின் தன்மை நமக்கு உணர்த்துகிறது. ஒரு செய்யுளில் கம்பன் கவிதைக்குரிய அமைப்பை தெளிவு படுத்திவிடுகிறார்
புவியினுக் கணியாய் ஆன்ற
  பொருள் தந்து புலத்திற்றாகி
அவியகத் துறைகள் தாங்கி
  ஐந்திணை நெறிய ளாவிச்
சவியுறத் தெளிந்து தண்ணென்
  றெழுக்கமும் தழுவிச்  சான்றோர்
கவியெனக் கிடந்த கோதா
  வரியினை வீரர் கண்டார்
        செய்யுட் வடிவமும் யாப்பும் அணியிலக்கணங்க ளுடன் சமூக வரைவிலக்கணங்களை எழுதினார்கள் புலவர்கள். பெரும் நிலவியல் சமூகங்களை ஒழுங்கு செய்தார்கள். நீதி இலக்கிய வகைமைகள் என்றே ஒரு மாபெரும் இலக்கியவடிவம் சமூகத்தை மேம்படுத்தியது போர்கள் மலிந்த காலத்தில் நீதியிலக்கியங்கள் நிலங்களின் தன்மையைப் பேசியது.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான்
             என்று வள்ளுவரும் நீதியைப் போற்றினார். ந.பெரியசாமி உள்ளிட்ட நவீன காலத்தின் கவிஞர்களும் கவிதைகளும் நீதியையும் அறத்தையும் எழுதி வருகிறார்கள். அறம் நீதி தர்மநிலை குறித்தெல்லாம் இப்பொழுது யார்யார் எழுதுகிறார்கள். யார் கோட்பாடுகளை எழுதுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். இலக்கியவாதிகள் சில காரியங்களைச் செய்யாமல் விடுகிறபொழுது அந்தக் காரியங்களை சுயநலக்காரியக்காரர்கள் செய்யத்துவங்கிடுவார்கள்.
          பதினேழாம் நூற்றாண்டுகள் வரையில் இந்த மனிதசமூகத்தின் அரசுகள் பேரரசுகள் எல்லாம் இலக்கிய வாதிகளின் படைப்பாளர்களின் கைகளில்தான் இருந்தது. மொழியைத் தன் ஆதிக்கத்தில் வைத்திருந்த படைப்பாளர்கள் தன் சொல்லுக்குக் கட்டுப்படுகிறளவு மன்னர்களையும் கீழ்ப்படியவைத்தார்கள். நாலடியாரின் ஒரு பாடல்
“அறுசுவை யுண்டி அமர்ந்தில்லான் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாகும்-வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன்று
உண்டாக வைக்கற்பாற்று அன்று.“
செல்வத்தையும் போகத்தையும் பொருட்படுத்தவேண் டாமென்று போதிக்கிற நீதி இலக்கியம் இது. பெருஞ்செல்வத்தைக் குறிவைத்து மொழியைப் பயண்படுத்திக் கொள்கிற காலத்தில் ந.பெரியசாமி உள்ளிட்ட கவிஞர்களின் கவிதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. நீதியும் அறமும் பேசுவதால்தான் கவிதை நூல்களை அங்காடிகள் புறக்கணிக்கிறது. வாசகர்கள் புறக்கணிப்பதில்லை.
இருளும் ஒளியும்
மரம்
தன் நிழலைக் கிடத்தி
இரண்டாகக் கிழித்தது என்னை
அம்மனச் சிறுவனாகி
மிதந்தலைந்தேன் குளத்தில்
அருகிலிருக்கும் நந்தவனத்தில்
எச்சிலாக்கினேன் புளியமரம் ஒன்றை
தோழிகளுக்குப் பூக்களைக் கொய்தேன்
காம்புகளில் மீந்த தேன் சுவைத்தேன்
மயக்கத்தில் புரண்டேன்
வெய்யில் சுட்டது
கூலிச்சீருடை அணிந்து
பிழைப்புக்குத் தயாரானேன்
சுருங்கியது மரநிழல்- பக் 39
             ந.பெரியசாமியின் கவிதை பற்பல சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது. வாழ்க்கை என்பதும் இயற்கையென்பதும் வேறுவேறு அல்ல. மில்லினார் கோடினார் உயிர்களில் மனிதனின் இருப்பு மயிரளவு கூட கிடையாது. மயிர் அணியும் செங்கோல்களின் அலப்பரை தாங்கமுடிவ தில்லை. அறம் பேசுகிறவன் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. தர்மநீதிகள் போதிக்கிறவன் நீதி கூறுபவன் நீதியைப் பின்பற்றவேண்டிய அவசியம் இல்லையென்பதை இந்த நூற்றாண்டில்தான் மனிதன் கண்டுபிடித்திருக்கிறான். ஒரு மனிதனின் நல்ல ஆடையும் நல்ல முகச்சவரமும் உடல் ஒழுங்கும் ஒருவனுக்கு அருவருப்பைத் தந்துவிடுகிறது. ஒருவனின் நீதிமான் கடவுள் ஒருவனுக்கு அருவருப்பான கடவுள்.
         அவனுடைய குழந்தைகள் சாத்தான்கள். அவற்றை ஈவு இறக்கமற்றுக் கொலைகள் கூட செய்யலாம். யாரும் கேட்கமாட்டார்கள். புதைகுழியில் பொக்லைன்களால் வழித்துக் கொண்டுபோய்க் கொண்டு மண்கொண்டு மூடலாம் அல்லது ஒரு சேர தீவைத்துக் கொளுத்தலாம் யாரும் கேட்கமாட்டார்கள். ஒரு கவிஞன் தன் கவிதையில் எழுதினால் அதில் கலையம்சம் இல்லையென்பான் ஒரு நாதாரி. அந்த நாய்க்கு குளுருட்டப்பட்ட அறையும் சிக்கனும் வறுவலும் ஆம்லெட்டும் சீமைச்சாராயமும் வழங்கவேண்டும். அவன் போதிக்கிற கவிதை முறையை அழகியலை,அறத்தை, விற்பனையைக் கொண்டு போய்ச் சொல்வது என்பதை அவன் சொல்வான். இவனைப் போன்ற விலைவிமர்சகர்களுக்கும்  விலைகவிஞர்களுக்கு மத்தியில் நல்ல கவிதையை எப்படி நிரூபிப்பது. இவர்களைப் போன்ற சொம்புதேர் வாழ்க்கை வாழ்கிற சொருபிகளுக்கு மத்தியில் ஒரு நேர்மையான கவிஞனை எப்படி நிறுவுவது..
நீதியும் அறமும் பேசாத சொற்களில் சொகுசு கொண்ட சொற்கள் மிகவிரைவில் பல்லக்கு ஏறிவிடும். அந்தப் பல்லக்கை மூத்த படைப்பாளர்கள் சிலரும் வாக்கு வங்கியைக் கணக்கில் கொண்டு ஆதரிப்பவர்களும் சொகுசு, பவிசு சொற்களைத் தூக்கிப் போற்றித் திரிவார்கள். அதறக்கு அரங்கேற்றங்களும் கும்பாபி சேகங்களும் பாலாபிசேகங்களும் நடக்கும் வாய்ப்பும் உள்ளது. அதே போலவே புழுதிவாரித்தூற்றுதல்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு படைப்பு எதிர்கொள்ளப்படுகிற நிலையைக் கூட இன்னும் நம்மால் ஒழுங்கு செய்யமுடியாமல்தான் இருக்கிறோம். இங்கு நாம் புகழ்பெற்ற அரவிந்தரின் கவிதையொன்று வாசிக்கலாம்.
Rose, I have loved
Rose, I have loved thy beauty, as l love
The dress that thou worn, the transient grass,
O’er which thy happy careless footsteps move,
The yet-thrilled waysides that have watched thee pass.
Soul, I have loved thy sweetness as men love
The necessary air they crave to breathe.
The sunlight lavished from the skies above,
And firmness of the earth their steps beneath.
But were that beauty all, my love might cease
Like love of weaker spirits; weren’t thy charm
And grace of soul, mine might with age decrease
Or find in death a silence and a term,
But rooted to the unnameable in thee
Shall triumph and transcend eternity.
 நம் அறிந்த கவிதையின் நாயகனாகவும் அறத்தின் போதனையாளராகவும் விளங்கிய அரவிந்தரின் ஆசிரமத்தின் மீது தற்காலத்தில் கூறப்படுகிற விமர்சனங்கள். அங்கு நடந்து வருகிற சம்பவங்கள் காட்சிகள் பத்திரிக்கை விமர்சனங்கள், தற்கொலைகள் பாலியல் சம்பவங்கள் நமக்கு அதிர்ச்சி தருகிறது. உலகின் மகத்தான மனிதர்களுக்கு தொடர்ந்து அவர்களின் சாவுக்குப்பின்னால் நடக்கிற கொடுரங்கள் அச்சமூட்டுகிறது. புனிதத்தைச் சிதைப்பதும் ஒரு தலைமுறையின் மகத்தான சிந்தனையை புகழை வாய்ப்புக் கிடைக்கிற சமயத்தில் சிதைப்பது கூட தற்காலத்தில் நடந்துவருகிறது. இங்கு மடங்களின் மீதும் நிறுவனங்களின் மீதும் காட்டப்படுகிற கருணைகள் கேள்விகளாகிறது. இங்கு அரவிந்தரின் புகழும் மகத்தான கவிதைகளும் நம் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கம் கேள்விக்குள்ளாகிறது. மொழியிலும் கவிதையிலும் தனிமனித பிம்பங்களின் மீது உருவாக்கப்பட்ட கட்டிடங்கள் புகழ் பணம் பொருள் சம்பாத்தியம் எல்லாம் அச்சத்தைத் தரவல்லதாக மாறியிருக்கிறது. புகழ்பெற்ற பிம்பத்தின் பெயரால் ஏற்படுத்தப்படுகிற ஒழுங்குகள் நம் காலத்தில் தகர்க்கப்படுகிறது.
       இப்படித்தான் காந்திய நெறியும் சர்வோதய நெறியும் கிராமப்புற மேம்பாடுகளும் கைவினை பொருட்களும் கதர் உடைகளும் அழிக்கப்பட்ட வரலாறுகள். ஐம்பதாண்டுகளுக்குள்ளாக ஒரு கவிதையும் கவிதையியக்கம் காலாவதியாகிப் போவதை திராவிடம் சார்ந்த மதிப்பீடுகளையும் உள்ளடக்கலாம்.
காந்தி குறித்த கவிதை பெரியசாமி எழுதியிருப்பது அற்புதமான குறிப்பான். காந்திய நெறிகளை கொள்கைகளை அழிப்பது உள்ளிட்ட வேலைகளைக் காங்கிரஸ் கட்சிக்காரர்களே அழித்தார்கள் அல்லவா அப்படித்தான். ஒரு வகையில் எம்ஜியார் புகழை அழிக்க அந்தக் கட்சிக்காரர்களே முனைகிறார்கள் அல்லவா அப்படித்தான். சில ஆளுமைகளின் புகழை அழித்து ஒழிக்கும் பட்சத்தில் தன் புகழை நிலைநாட்ட முடியும் என்பதை இந்த நவீன நூற்றாண்டு நமக்குக் கற்றுத் தருகிறது. அப்படியாக மூத்த நவீன கவிஞர்களின் புகழையும் சொற்களையும் அவர்களின் கவிதைப் படிமங்களையும் அழித்து வருகிறார்கள். குறிப்பாக அவருடைய சீடர்கள் என்று தங்களை அறிவித்துக் கொள்கிறவர்களே அந்தப்பணியைத் தைரியமாகச் செய்கிறார்கள்.
காந்தி..,
சிறு தொலைவிற்குப் பின்
தோட்டம் ஒன்றில்
வட்டமாக
“இளைஞர்கள்
என்ன செய்கிறார்கள்“

“வேண்டாம் போகலாம்“ என்றேன்
அவரின் பார்வைக்கு
பொய்யுரைக்க மறந்து..
“மது அருந்துகிறார்கள்“- என்றேன்
ஹேராமெனத் தலையிலடித்து
“அரசு என்ன செய்கிறது“
பார்வையைக் கேள்வியாக்கினார்
சிரிப்பைக் கட்டுப்படுத்த இயலாது
கடை நடத்துவதே அரசென்றேன்
ஐயோவென மயங்கிச்சரிந்தார்.... பக்-40

மேம்போக்காக வாசித்தால் சாதாரணமான கவிதையாகத் தெரிந்தாலும் உண்மையை கவிதை பேசுகிற பொழுது சாதாண நடையும் எளிமையான கவிமொழியும் அவசியம் என்று தோன்றுகிறது. கவிதைகளுக்குள்ளாக கருத்துகள் போதிப்பது கவிதையின் அமைப்பியலுக்கு ஒவ்வாமை யாகப் பட்டாலும் சமூகத்தின் பெரும் அவலத்தை கவிஞனாக குறிப்பிடவும் வேண்டியிருக்கிறது. மேற்கண்ட கவிதை மிக நீண்ட கவிதையிலிருந்து சிலவரிகள் மட்டுமே. மதுபானம் விற்ற பணத்தில்தான் இலவசங்கள் வழங்கப்படுகிறது என்கிற உண்மையையும் கவிஞர் சேர்த்திருக்கலாம்.
           ந.பெரியசாமியின் கவிதைகள் அப்பழுக்கற்ற நிலத்தைப் பேசுகிறது. கள்ளம் கபடம் ஏதுமறியாத மனிதனின் நுட்பமான கற்பனைப் புனைவுகளையும் பேசுகிறது. கவிதை ஒருதலைப்பட்சமான இலக்கிய வடிவமல்ல. சாதமான அம்சங்களை மட்டுமே பேசுகிறவையும் அல்ல. இயற்கை முரண்களையும் வாழ்வியல் நெறிகளையும் பேசிவருகிறது. ஒரு கவிதை எழுதப்பட்ட பிறகு இது கவிதைதானா என்கிற குழப்பம் தேவையற்றது. ந.பெரியசாமியின் பல கவிதைகள் நவீன கவிதைகளின் கட்டமைப்பிலும் எழுதப்பட்டிருக்கிறது. தொகுப்பில் பல கவிதைகள் அபாரமான சொல்லாட்சியில் எழுதப்பட்டிருக்கிறது. வாழ்த்துகளும் அன்பும்...
வெளியீடு
தோட்டாக்கள் பாயும் வெளி
ந.பெரியசாமி-கவிதைகள்-94876 46819
புது எழுத்து
2-205 அண்ணா நகர்
காவேரிப்பட்டினம்.-635 112
கிருஷ்ணகிரி மாவட்டம்
90421 58667

வெள்ளி, 5 டிசம்பர், 2014

கவிஞர் சுஜாதா செல்வராஜ் கவிதை நூல் அறிமுகம்



“காலங்களைக் கடந்து வருபவன்“
சுஜாதா செல்வராஜின் கவிதை நூல் குறித்து.
அது ஒரு பேரரசு

பெண்களின் புகைப்படங்கள்
தொங்கும்
பூஜையறைகளுக்குப் பின்னால்தான்
ஜன்னல்கள் ஏதும் அற்ற
வழுக்கும் சமையலறைகளும்
தூமைத் துணிகள் சொருகப்பட்ட
புழக்கடை வெளிகளும்
பரந்து கிடக்கின்றன-

பக்-40 (இருப்பின் ஒரு பிரதி-கவிதையின் ஒரு பகுதி)

தற்காலத்தில் கவிதை-நவீன கவிதை என்கிற பகுப்பில் கவிதைகளை நாம் அணுகுதலுக்கு எடுத்துக் கொள்கிறோம். புதுக்கவிதை மரவின் தொடர்ச்சியுடன் எழுதுகிற கவிஞர்களும் தொண்ணுறுகளின் உலகமயமாக்கலுக்குப் பின் எழுத வந்த நவீன கவிஞர்களின் கவிதைகளும் நம்மால் வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. புதுக்கவிதையினூடே மரபின் சாயல்கள் அடங்கிய  கவிதைகளுடன் நவீன கவிதைகளும் ஊடாடிவருகிற கவிதைகள்தான் காலத்தைப் பேசுகிற கவிதைகளாக அறியப்பட்டு வருகிறது. எது கவிதை  என்பதாகத் துவங்குகிற கேள்வியிலிருந்து துவங்குகிற அறிதல் முயற்சி பின்னால் அதுவே கோபம் கொப்பளிக்கிற தொனியில் அதுவெல்லாம் கவிதைகள் அல்ல என்பதற்கான ஆதரங்களும் தோன்றிவிடுவதைத் தவிர்க்க முடியவுமில்லை.
ஏனெனில் நாம் கவிதைகளாலும் பாடல்களாலும் செய்யுள்களாலும் பாராம்பரியமிக்க  இலக்கியச் செழுமையும் காப்பியக் கடல்களாலும் ஆக்கிரமிக்கப் பட்டவர்கள். கவிதை நம் இயல்பு மொழி. பேச்சின் முக்கால்பகுதி உரையாடல்களிலேயே நாம் கவிதையின் பாதிப்பைக் கொண்டிருக்கிறோம். அறியப்பட்ட கவிதையின் முகத்தின் பருக்களில் மொழியின் சூடு மட்டுமல்ல அனுபவத்தின் ஆக்ஞையும் புலப்படும்.
      சுஜாதா செல்வராஜ் இந்த நூலில் கவிதையின் எல்லாப் பாங்குகளையும் வைத்திருக்கிறார். பட்டுப்புழு ஆயிரமாயிரம் வண்ணங்கள் ஈன்றுதருவதைப் போன்ற லகுவில் சில கவிதைகள் உள்ளது. தன் வெகு எளிமையான கவிதைகளைப் பிரியமுடியாது என்கிற கவிதைகளைக் கூட இணைத்திருக்கிறார் என்று தான் கொள்ளவேண்டுமே தவிர சாதாரணம் என ஒதுக்கிவிட முடியாது.
மூழ்கிச் சாவேனெனில்
நீரென்ன பாலென்ன?    பக்-86   
 இந்த வரிகளை  வெறும் சொற்கள் என்று கூறிவிட்டு நாம் நகர்ந்து விடமுடியாது. இங்கு கவிதை குறித்து வெகு இயல்பாக பாராட்டி விடுகிற செயல்களே கூட விமர்சனங்களாக்கப்படுவது துயரமானது. நாடக , ஊடக, திரை நடிப்பில் எப்படி நவரசமாக நடித்து விடுவது எளிதான செயல். அதுவே இயல்பாகவும் நகைச்சுவையான குழந்தைகளுக்குப் பிடித்த கோமாளியாக நடிப்பதும் அதில் பெயர் பெறுவதும் எப்படிக் கடினமானதோ அதுபோலவே ஒரு படைப்பைப் பாராட்டி எழுதுவது மிகவும் கடினமான செயல். நம்மிடம் விமர்சனங்களுக்குப் பஞ்சமில்லை. அறிவின்மையையும் அறத்தின் செயல்பாடுகளுக்கு அப்பால் போதிக்கப்படுகிற தொழிற்கல்விகளும் நமக்கு விமர்சன உணர்வை தொடர்ந்து பயிற்றுவிக்கிறது. விமர்சன உணர்வுகள் பண்டமாகவும் மலினமாவும் தோற்றுவிக்கப்படுகிறது. ஒரு விமர்சகனைக கொன்று விடுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து கொள்கிறார்கள். விமர்சனம் என்பது எண்ணெய்க்கிணறுகளா என்ன..
       இங்கு பெண் உணர்விலிருந்து எழுதப்படுகிற கவிதைகளில் சமூகம் விசாரணைக்குட்படுகிறது. இயந்திரங்கள் சிறுகச் சிறுக தன் அளவைக் குறைத்து அது சமையலறைகள் வரை வந்து விட்டபிறகும் கூட பெண்ணுக்குக் கேள்விகள் தீரவில்லை. அவர்களின் உள்ளமே சமையலறைகளாக மாறி இயந்திரங்கள் இறைச்சலுடன் ஓடிக் கொண்டே இருக்கிறது. உறக்கத்திலும் கைகால்கள் பாத்திரங்களைக் கழுவுகிறது. நடு இரவில் வாசல் பெறுக்குகிறது. சமூகம் அவர்களுக்கு ஏதோ ஒன்றை ஒரு புதிய உலகத்தின் சிறு பகுதியைத் தருவதற்கு மறுத்துக் கொண்டிருக்கிறதாக எண்ணு கிறார்கள். நவீன காலத்தில் அடிமைகள் அவ்வளவு எளிதாக அகப்படுவதில்லையென்பதால் நம் குடும்பத்திற்குள் மிக எளிமையாக அமையப்பெற்ற பெண்களை அடிமை வியாக்கியானங்களைத் தருகிறோம்.
       பெண் உணர்வு கவிதை இப்படித்தான் இருக்கும். அது அவர்களின் சுயபுலம்பல்  தவிர வேறென்ன இருக்கப் போகிறது. அவர்களுக்கு என்ன தெரியும். என்ன பெரியதாய் எழுதியிருக்கப் போகிறார்கள். என்ன சாதித்து விடமுடியும் இவர்களால். அப்படி சரிக்கு சரியாக நிகருக்கு நிகரா நின்று விடுவதற்கான வாய்ப்புகளை நாம் அளித்தால்தானே பெண் கவிதை உயர்நிலைக்கு வரும். பார்த்துவிடலாம் என்கிற விமர்சன மரபு பத்தாம் நூற்றாண்டில் எழுத்து வடிவம் முறைமை பெற்ற காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது. அதன் சாரம் வேறொன்றுமில்லை. அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதுதான். இந்தச் செய்தியையும் ஆணாதிக்கத்தையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. எனினும் பெண்களின் எழுத்து பெண்களின் பிரச்சனைகளுக்கு உரியது மட்டுமே என்கிற விஷமப் பிரச்சாரமும் நடந்து கொண்டுதானிருக்கிறது. அவர்களுக்கு சமூக பிரக்ஞை பற்றிய விமர்சனமும் கோபமும் அவதானிப்பும் இருக்காது. அவர்களுக்குச் சுட்டுப் போட்டாலும் வராது என்கிற கருத்தும் நிலவுகிறது.
சிறகுகளின் சாம்பல்

ஏதாவது எழுத வேண்டும்
ஆனால்
என்ன எழுத?
இன்று
சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே
நீலரத்தம் கசிய
உடைந்து நொறுங்கிக் கிடந்த
பேனாவைப்பற்றி எழுதலாமா?
        ---பக்-73
        பாராளுமன்றத்திற்கு முதன் முதலாகப் பெண் சபாநாகராகத் தெரிவு செய்யப்பட்ட பின் வந்த ஒரு வெளிப்படையான விமர்சனம் அனைவரின் ஞாபகத்திலிருக்கும் என்று கருதுகிறேன். அவர்களுக்கு என்னவேலை.. இந்தப் பணிதான் சரியான பணி. “சும்மா உட்கார்ந்து கொண்டு... “சைலன்ஸ் பிளீஸ்..“ “ தி ஹொஸ் இஸ் அஜார்ன்ட்..“ ரெண்டு வார்த்தை சொல்றதுதான.. இருந்துட்டுப் போகட்டும் என்றுதானே அனைத்துக் கட்சிகளும் ஏனமனதாக தலையாட்டிவிட்டு விமர்சித்தார்கள். “ சபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது...“ அப்படின்னு சொல்ற வேலைதான... அதுக்கு பொம்பளை ம்ம்  சரிதான்...“ இந்த விமர்சத்தை எழுதாத பத்திரிக்கைகள் இருந்ததாதா என்ன? அது மட்டுமல்லாமல் அவர்கள் சபையில் இல்லாத பட்சத்திலும் கலந்து கொள்ள முடியாத நிலையில் அவையை நடத்துவதற்கு அதிகமான மூத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டார்களே..
        ஒரு நேர்காணலில் வெளிப்படையாகவே கிழட்டுக் கவியொருவர் ஆம் நான் ஆணாதிக் கவாதிதான்“ என்று சொல்லவும் அந்தப் பேட்டியை அட்டைப்படத்திலேயே போட்டு அவருடைய நீண்ட நேர்காணலை பெருமையுடன் வெளியிட்ட இலக்கியப் பாராம்பரியமும் நம்முடையதுதான். நம்மிடம் கவிதை என்பது சமூக விமர்சனம்தான் என்று உணரவைக்கவோ வலியுறுத்தவோ முடியாத நிலையில்தான் இருக்கிறோம். பிறகு அது அங்கதம். கலை, சுதந்திரம், விடுதலை, புத்தாக்கம், புது உலகம் என்றெல்லாம் எப்பொழுது விளக்க முற்படுவோம் எனத்தெரியவில்லை.
உயிர் விளையாட்டு

அட்டவணையில் சிறை சிக்கி
அழுகிறது நம் காலம்..
கட்டம் கட்டமாய் நகர்ந்து சென்று அடையப் போகும்
உனக்கும் எனக்கும் அறியா அம்முடிவில்
வாழ்தலின் அர்த்தம் தெளிவு பெறுமோ!

அட்டவணை கிழித்தெறிந்து
அம்மணம் தரித்துக் கொண்டு
ஆதிக்கே திரும்பிச் செல்லுதலெனும்
ஒரு பேரர்த்தமுள்ள
அல்லது
ஒரு அபத்தம் நிறைந்த
எனது ஆசையினை
எதிர் நிற்கும் உன்னிடம்
எங்கனமாவது வெளிக் கொணர முனைந்தால்..

எனது கரங்களைப் பற்றிக் கொள்வாயா
இல்லைஇனி எப்பொழுதுக்குமென
எனைவிட்டு தொலைந்து போவாயோ?

பக்-38

 கவிதை குறித்துப் பேசவோ உரையாடவோ பொழுதுகள் கழியவோ நிரம்ப இடத்தைக் கவிதை தருகிறது. கவிதைகள் குறித்து உரையாடத் துவங்கும் முன்பே சுயம் நமக்கும் நமது எதிர்வாத நண்பர்களுக்கும் முரண்பாடுகள் எழுந்து விடுகிறது. காரணம் கவிதைகள் குறித்து நிச்சயம் ஏதேனும் ஒரு நம்பகத்தன்மையான சாட்சிகளை நாமும் எதிர்வாதியும் வைத்திருக்கிறோம். இங்கு நாம் கவிதை எனும் பதம் அகப்படுகிற பொழுது நாம் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முன்வருவதும் அது நவீன கவிதை எனும் பொழுது நான் விவாத த்தை நீட்டித்துக் கொள்ள முனைவதையும் உணர்ந்தேயிருக்கிறோம்.
ஏன் கவிதைகளுக்காகச் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும். ஏன் எவரோ எழுதிய படைப்புகளுக்காக கவிதைகளுக்காக இயந்திரங்களுடன் ஒரு நான்கைந்து பேர் அல்லாடவேண்டும். எதற்குப் பொறுமையுடன் பக்கங்கள் மாறிவிடமால் சேர்க்க வேண்டும். எதற்காக ஒரிருவர் மைஒழுகவும் உடலெல்லாம் புண்ணாக்கிச் சுட்டுக் கொள்ளவேண்டும். ஏனெனில் வாழ்க்கை நம்மை வெள்ளைத் தாள்களாக்கி எழுதிக் கொண்டுவருகிறது. பொழுதுகள் விளைகிறது. நகங்கள் வளர்கிறது. கேசம் வெட்ட வெட்டத் துளிர்க்கிறது. பசிக்கிறது. வியர்க்கிறது. தனிமை ஒரு பெருநகரத்தை வண்ணநீர்க் குமிழ்களாக்கி உடைக்கச் சொல்கிறது. மழை பொய்க்கும் காலங்களில் உடல் வியர்த்து மழையாகிறது. அதிக மழைபொழிந்த நாட்களில் அம்மழையே உறைந்து பனியாகி காற்றைக் கெட்டிப்படுத்துகிறது. தொலைவுகள் பொருள் புரிபடாதளவு எல்லைகளை நீட்டிக்கிறது. ஏதாவது ஒரு பாடலையோ மொழியின் ஒலியையோ ஒலித்தாக வேண்டியிருக்கிறது. நம் அருகிலிருப்பவர்கள் பொழுதின் சில காலங்களில் பிரிவின் பிடியில் தங்கியிருக்கும் காலத்தில் எழும் இன்மை ஏதேனும் ஒலியை இசைக்கச் சொல்கிறது அல்லது எழுதச் சொல்கிறது.
கவிதைகளை எழுதுகிறளவு கவிதைகளை வாசிக்கிறார்களா என்பதை நான் ஏற்கெனவே நிறைய எழுதியும் வினவியுமிருக்கிறேன். ஒரு கவிஞரின் கவிதைகள் அச்சாக்கத்திற்குப் பிறகான கவிதைகளுக்கும் நூலாக்கத்திற்கு முந்தைய கவிதைகளுக்கும் மிகப் பெரிய முன்னேற்ற இடைவெளியை நாம் காணமுடியும். சொந்தமாக அச்சு இயந்திரங்கள் வைத்துக் கொண்டு செய்திகளை பிரசுரித்து அதன் கவித்துவமான தலைப்புகளுக்காக அவர்கள் ஏங்குவதை நாம் அது கவிதையின் வெற்றியென்றே கருதவேண்டும். அச்சாக்கத்தின் செய்தித்தாள்களாக விநியோகித்தலும் சுவரொட்டிகளில் விடியவிடிய செய்திகளையும் எதிர்க்குரல்களையும் எழுதி அதை சரியான இடங்களில் ஒட்டி வைக்கப்படுகிற செய்திகளுக்கும் உள்ள வித்தியாசம் தான் அது. உலகத்தின் எல்லா திசைநிகழ்வுகளையும் அதன் தினப் பொழுதுகளின் நடவடிக்கைகளிலும் நம் மனம் உள்ளார்ந்து கொள்வதில்தான் நம் குரல் நம்மையறியாமல் முனுமுனுக்கிறது. எதாவது சொல்லத்தோன்றுகிறது. பேசமுடிகிற ஒரு உயிரி நிச்சயம் எழுத முடிகிற உயிரி தன் அலகால் நிச்சயம் மரத்தில் சில சொற்களைக் கொத்திவைக்காமல் இருக்க வாய்ப்பில்லை. இந்தக் கட்டுரை எழுதுகிற சமயத்தில் பெண்கள் சிலிண்டர்களுக் காக அவர்களும் அவர்கள் குடும்பத்தார்களும் பல அரசு அலுவலகங்களுக்கும் வங்கிகளுக்கும் அலைய வைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கால் கடுக்க காத்திருக்கிறார்கள். அங்கேயே தன் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டி வரிசையில் காத்திருக்கிறார்கள். முறையாக முழுமை செய்த விண்ணப்பங்கள் கூட நிராகப்பட எழுதவே தெரியாத பெண்கள் மொழியை அறிந்து கொள்ளாமல் விட்டோமே என இறைஞ்சுகிறார்கள்.
பெண் எழுதிவிடுகிற சொற்கள் எளிதில் கவரப்பட்டு விடுவதற்கான காரணங்கள் இவையே. பல நூற்றாண்டு பொதுவெளியில் பேச முடியா மடந்தை களாக இருந்தவர்கள் கல்வி வியாபாரமாக்கப்பட்ட பிறகும் இடஒதுக்கீடுகளும் மதமாற்றங்களும் அங்கீகரிக்கப்பட்ட பிறகு பெண்கள் கல்வியைக கைக்கொண்டார்கள். விடுதலை குறித்தும் குடும்ப அமைப்பிலிருந்து விடுவித்துக் கொள்ளவும் உறவுகளின் நெருக்கடிகளிலிருந்த விடுவித்துக் கொள்ளவும் பெரும் முயற்சிகளை எடுத்தார்கள். கர்ப்பத்தடைச் சாதனங்களும் குடும்பக்கட்டுப்பாடு முறைகளும் பெண்கல்வியை மேலும் வளரத் துணை செய்தது என்று சொல்வதில் தவறில்லை. பெண் தன் குடும்பத்திற்கும் இந்த சமூகத்திற்கும் குடும்ப அமைப்பிற்கும் தேவையான பொறுப்புகளை மூன்றாண்டுகளில் முடித்துக் கொள்ளலாம் என்கிற சுதந்திரத்தை கர்ப்பத்தடையும் குடும்பக்கட்டுபாடு முறையும் அளித்தது. பெண்கள் ஐந்தாறு குழந்தைக ளைப் பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியமும் அதனால் மேலும் பத்தாண்டுகள் குடும்ப அமைப்பிற்காக உழைக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போனதே அவர்கள் சமூகத்தின் பொது வெளியில் உலவுவதற்கு ஏற்ற காரணிகள் எனலாம்.
பொருளியில் கோட்பாடுகளும் முதலாளித்துவ நெருக்கடிகளும் பெண்களை இன்னும் குடும்ப அமைப்பியல் சுரண்டலுக்கு இன்னும் நூறு ஆண்டுகளுக்கு அவர்களை சிரமப்படுத்தவே வாய்ப்பிருக்கிறது. அவர்களைக் குடும்ப அமைப்பில் கண்காணிக்கப்படுகிற நிலையில்தான் வைத்திருக்கி றோம். நமது பெண்ணிய இயக்கங்களுக்கு பெண்ணியக் கோட்பாடுகள் குறித்து எதுவும் விள்க்கப்படவேயில்லை. அவர்கள் கொண்டாடுவது அரசியல் பெண்ணியல் நிலைகளேயாகும். பெரியாருக்கு பிறகு பெண்ணிய சிந்தனைகளை பெரியாரிய தொண்டர்களே கைவிட்டு விட்டார்கள். ஆண்களுக்கான இடஓதுக்கீடுகளுக்கான போராட்டங்கள்தான் தீவிரப்படுத்தப்பட்டது. திராவிட இயக்க ஆட்சிகளிலும் பெண்ணியச் சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்படவில்லை.
பெண்ணுக்குச் சொத்தில் சமஉரிமையென்பதில் உள்ள பெரிய பிரச்சனைகளால் அவர்களுக்கு சொத்திலும் பெரியளவில் உரிய பங்குகள் கிடைக்க வில்லை. இதனால் நல்ல சௌகரிமான வாழ்வில் உள்ன பெணகளும் வறுமையிலுள்ள பெண்களும் நம் சமூகத்தில் ஒன்றாக வாழவேணடிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுப் போனது. அந்தச் சட்டத்தின் வாயிலாக பெண் மேலும் தன் உறவுகளால் பிரிக்கப்பட்டு உறவு முறைப் பரிசோதனைகள் செய்யப்பட்டாள். தன் தந்தையின் அன்பிலிருந்து விலக்கப்பட்டாள். தன் கணவன் தன் மனைவி எப்பொழுது அவளுக்குரிய சொத்துக்களைக் கேட்டுக் கொண்டுவரப்போகிறாள் என்கிற சிந்தையை குடும்ப அமைப்பியலுக்குள் விளைந்து போனது.
ஒவ்வாமையின் வாசனை

சர்ப்பம் போன்ற உனது வருகையால்
சலசலத்துக் கைமாறும் என் தேசம்
கரை ஒதுங்கும்
கடல் தின்ற மிச்சமென

வால் முளைத்த வலிகள்
குருதியின் வாசனை பொங்க
நீந்தத் தொடங்கும் அதன் பாதையெங்கும்

நனைந்த தீபத்தின் திணறும் ஒளியினூடே
கருகிப் புகையும் மௌனகாலத்தில்
மனம் சுரண்டி
ஒற்றை அச்சில் சுழன்று அடங்கும்
சர்ப்ப வருகை

பக்-60

        இந்தக் கவிதையைக் குறிப்பிடுகி இந்த சமயத்தில் இன்று திருவண்ணாலை தீபம். தெருக்கள் முழுக்கவும் தீபங்களை விற்றுக் கொண்டு பெண்கள் கூவிச் செல்கிறார்கள். மிக வெளிச்சத்தை நாம் கண்டுணர்ந்த பிறகு நம் மனம் இருளாகிவிட்டது. எனினும் இன்னும் ஏதோவொரு வண்ணத்தில் வெளிச்சம் தேவைப்படுகிறது. காதலின் தன் துணைவனின் இருப்பு அல்லது இன்மை இரண்டையும் ஒரு கவிதைக்குள் பேசுகிற இடம் முக்கியமானது. இந்தக் கவிதை எனக்கு வேறொரு சங்கக் கவிதையை நினைவுட்டுகிறது.
அந்துவனாரின் ஒரு கவிதை
மாலைநேரம்.மேற்கே செவ்வானம். கிழக்கே தண்மதி எழும் நேரம் நெய்தல் நிலம் எத்தகைய காட்சி வழங்குகிறது. நீலக்கடலை ஒட்டிய மணல் மேட்டிலே காவியுடுத்திய துறவிகள் ஒருபால்,பெருநாரைகள் ஒருபால். பெரு நாரையின் சிறகு சிறிது சிவந்திருக்கும் மூக்கும் நீளமாயிருக்கும். அந்த நாரை பகல் முழுதும் மீன்களைக் கொத்தித் திரியும். மாலை வந்தபிறகு என்ன செய்யும். மணல் மேட்டின் மீது வந்து தங்கும். அந்தக் காட்சி எப்படியிருக்கும்.
காவியுடை தரித்த துறவிகள் கையிலே தடியுன்றி அமர்ந்து தியானம் செய்துபோல் இருக்குமாம். இத்தகைய நெய்தல் நிலத்தின் பெரும் செல்வன் ஒருவன் ஒரு பெண்ணைக் காதல் கொள்கிறான். அவளும் விரும்புகிறாள். இருவரும் அடிக்கடி சந்தித்து இன்பமாகப் பேசிக் கொள்ள முடியவில்லை. அவள் வருந்துகிறாள். அதனைத் தோழி எடுத்துச் சொல்கிறாள் அந்தக் காதலனிடம் சென்று அவளுக்காகப் பரிந்து பேசுகிறாள்.
“பறவைகளின் ஒலி கேட்டு எழுவாள்.எட்டி எட்டிப் பார்ப்பாள் உன்னுடைய வரவு காண்பான்.உன்னைக் காணாது வருந்துவாள். திடீரென்று மலர் மணம் வீசும்.நீதான் வந்திருக்கிறாய் என்று எண்ணுவாள். எழுந்திருந்து பார்ப்பாள் நீ இருக்க மாட்டாய்.வருந்துவாள். தென்றலில் கலந்து வந்த மணம் அது என்று அறிவாள்.
“இப்படியாகத் தூக்கமின்றி எழுவதும் படுப்பதும் எழுவதுமாகவேயிருப்பாள் அசதியாள் கண் அயர்வாள் உன்னை அணைத்துப் படுத்திருப்பது போன்ற எண்ணம். அப்படியே தேடிப்பார்ப்பாள் ஒன்றுமிராது. விழிப்பாள் வெறும் பிரமையா என நாளும் வருந்துவாள்..“என அவள் நிலையை அவனிடம் சொல்கிறாள் தோழி...
பொன் மலை சுடர் சேர,புலம்பிய இடன் நோக்கி,
தன் மலைத்து உலகு ஏத்த,தகைமதி ஏர்தர,
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி, இன நாரை
முன்கோல் கொள் அந்தணர்முது மொழி நினைவார் போல்,
எக்கர்மேல் இறை  கொள்ளும்,இலங்கு நீர்த் தண் சேர்ப்ப!

அணிச்சிறை இனக்குருகு ஒலிக்குங்கால், நின் திண் தேர்
மணிக்குரல் என இவள் மதிக்கும்மன், மதித்தாங்கே
உன் ஆன்ற ஒலியவாய் இருப்பக் கண்டு, அவைகானற்
புள் என உணர்ந்து. பின்புலம்பு கொண்டு, இனையுமே,

நீர் நீவிக் கஞன்ற பூக் கமழுங்கால், நின் மார்பில்
நார் நாற்றம் என இவள் மதிக்கும்மன்,மதித்தாங்கே,
அலர் பதத்து அசைவளி வந்து ஒல்க, கழிப் பூத்த
மலர் என உணர்ந்து,பின் மம்மர் கொண்டு,இனையுமே
நீள்நகர் நிறை ஆற்றான், நினையுநள் வதிந்தக்கால்,
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்மன், மதித்தாங்கே,
நனவுஎனப் புல்லுங்கால்,காணாய்,கலங்குமே,

என ஆங்கு,

பல நினைந்து, இனையும் பைதல் நெஞ்சின்,
அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி
மதி மருள் வாள் முகம் விளங்க,
புது நலம் ஏர்தர,
பூண்க,நின் தேரே!



        அதாவது நிலங்களுக்குரியவளாக இருந்து ஆதி மூதாதைத் தாயாக இருந்து வேட்டைக்கு முன்சென்று தன் குகைக்குடில்களை வழிநடத்திய பெண்ணை  பெர்ருளியலும் இயந்திரங்களும் உழைப்புச்சுரண்டலும் இனியொரு நூற்றாண்டுகள் அவர்கள் போராட வேண்டியதையே காலம் சொல்கிறது. நாடுகள் விடுதலையடைந்திருக்கிறது. அரசுகள் பேரரசுகள் வல்லரசுகள் ஆகியிருக்கிறது பெண்ணியக்கங்களும் பெண்களும் விடுதலைக் காகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளில் இருக்கிற பெண்களின் உறவினர்கள்தான் ஆள்கிற நிலையைக் கண்கூடப் பார்த்து வருகிறோம். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சம் அதுதான் அதன் வழியாகவே பாராளுமன்றத்தில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் முப்பத்தி மூன்று சதவிகிதம் பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பெண்கள் செல்லும் பட்சத்தில் மேலும் சில முன்னேற்றங்கள் மக்கள் தொகையில் பாதியளவு உள்ள பெண்களுக்கு பத்து சதவிகிதமாவது மேம்பாடு அடைய வழியிருக்கிறது என்று பெண்ணிய இயக்கங்கள் போராடுகிறார்கள்.
          ஒரு கவிதை நுற் தொகுப்பில் காதல்,பிரிவு, சோகம், மகிழ்ச்சி. இழப்பு, மரணம் போன்ற எல்லாப்பொருள்கள் குறித்தும் கவிதைகள் இருத்தல் நலமென்று கூறியதோடு மட்டுமல்லாமல் அப்படியாகவே கவிதைகளைப் பதித்தவர் தாகூர். பெரும்பாலும் அப்படித்தான் எல்லாத் தமிழ்க்கவிதைகளும் அமைகிறது. சுஜாதா செல்வராஜ் கவிதைகளிலும் பார்க்கமுடிகிறது. கவிதையென்பதே அப்படியான வடிவம்தான் என நிறுவப்படுகிறது. தன் வாழ்வைத் தன் எழுத்தின் வழியாக கண்டடைய முனைகிற சமகாலத்தின் படைப்பாளர் களுடன் கவிஞர்களுடன் அவரும் இணைந் திருக்கிறார் வாழ்த்துக்கள்..
நன்றி
வெளியீடு
புதுஎழுத்து
2-205 அண்ணாநகர்
காவேரிப்பட்டினம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
90421 58667
விலை 90-