உயிர்நிழல்-
ஓசை அமைப்பின்
காணுயிர்ப்
புகைப்படக்கண்காட்சி பதிவுகள்-
இளஞ்சேரல்
கடந்த 4-10.2013 முதல் பதினாறாம் தேதி வரை ”உயிர்நிழல்” காணுயிர் புகைப்படக்
கண்காட்சி மிகச்சிறப்பாக் கோவையில் நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்
கழகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் இயற்கை ஆர்வலர்கள், மாணவ மாணவியர்கள் பள்ளிக்
குழந்தைகள் உள்பட பொதுமக்களும் கண்டு பயண் பெற்றார்கள். ஓசை சுற்றுச் சூழல்
அமைப்பும் தோட்டக்கலைப் பண்ணை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் நடந்த
நிகழ்வு மறக்க முடியாத அனுபவத்தை தந்தது
வருடாவருடம் இயற்கையைக் கொண்டாடும் நவராத்திரி விழாவாக
அமைந்தது என்றால் மிகையில்லை. இயற்கை வளங்கள் நவீன காலத்திற்கு ஏற்ற வகையில்
அழிக்கப்படுகிறது. மிக விரைவில் அழிக்க கூடிய வெடிமருந்துகள், ரசாயன மருந்துகள்,
கனரக இடிப்பு அழிப்பு கருவிகள் கண்டுபிடித்துவிட்டோம். இனி நாம் வாழ்வை கவலையுடன்
தான் கழிக்க வேண்டிருக்கிறது. காடுகளின் சதவிகிதம் இருபது சதவிகிதம் தான் கைவசம்
இருப்பதாக ஓசை கூறுகிறது. ஒரு முறை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தான் தாஜ்மகாலைப்
பார்ப்பதற்கு இருபது முறைக்கும் மேலாகப் போயிருக்கிறேன். ஆனால் தாஜ்மகாலை நான்
பார்க்க வில்லை காரணம் யமுனை நதியின் மாசும் சுற்றுப்புறங்களின் கழிவு
மேடுகளைத்தான் பார்த்துவிட்டு வந்தேன். அந்த அளவு அந்த நதி கெட்டுப்போயிருக்கிறது.
சுகாதாரக் கேடை நினைத்து உள்ளே போக மனம் வரவில்லை. என்று சொன்னது நினைவுக்கு
வருகிறது.
நான் திங்களன்று சென்றேன். ஊரிலிருந்து
இருபத்தியைந்து மைல் தொலைவு வேளாண்மைப் பல்கலைக்கழகம். மாலையில் மழை
அச்சுருத்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்கள் வாழைக்கன்றுகளை மாவிலைகளை மலர்களை
தேங்காய் கரும்புகளை வாங்கிப் போகிறார்கள் இன்று விஜய தசமி. நாடெங்கும்
கொண்டாட்டங்களில் மக்கள் திளைக்கிறார்கள். வழக்கம் போலவே சில துயரமான சம்பவங்கள்.
எங்காவது ஒரு திசையில் நடக்காமல் இல்லை. கொலுவைத்த வீடுகளுக்கு நண்பர்கள்
அழைக்கிறார்கள். காலமும் நேரமும் வாய்க்கிறது.
அரங்கிற்குப் போனபோது நம்பிக்கை தரும்
வகையில் பண்டிகை நாட்களிலும் மக்கள் வந்திருக்கிறார்கள். கடந்த பத்து
நாட்களுக்கும் மேலாக இரவு பகல் என்று பணியாற்றும் சூழல் நண்பர்கள். ஓசை அமைப்பின்
தலைவர் காளிதாசன் வரவேற்கிறார்கள் வருகிற ஆர்வலர்களை.
அவரைச் சந்தித்த போது கவிஞர் அவைநாயகன்
இருவருமாக சில தினங்களுக்கு முன்பாக தந்தி தொலைக்காட்சியில் சீமான் நடத்தும்
மக்கள் முன்னால் நிகழ்வில் பேசியது ஞாபகம் வருகிறது. கோவையை மட்டும் வைத்து
இயங்காமல் மாநிலத்தின் இந்தியாவின் பிற சூழல் அமைப்புகளில் ஒன்றாகவும்
இயங்கியபடியே மாநில இயற்கைச் சூழல் செயல்பாட்டாளராகவும் செயல்படுகிறார். அவருடன்
சில நிமிடங்கள் பேசினேன். குடும்பம் குடும்பமாக கைக்குழந்தைகளுடன் ஆர்வலர்கள்
பங்கு கொண்டு திரும்புதல் ஆச்சர்யமாகவும் உள்ளது. இந்த முறை அரங்கில் பல புதிய
அற்புதமான புகைப்படங்கள் நிறைய பதிக்கப்பட்டள்ளது. அதுமட்டுமல்லாமல் தனித்த
உயிர்களின் இயற்கைக் காட்சிகளின்
வரிசையில் மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டுள்ளது
என்றேன்.
கடந்த மூன்று மாதங்களாக இயங்கிய பணி. ஒவ்வொரு
செயல்பாட்டாளரும் உயிர்ப்புடன் கடுமையான உழைப்பின் மூலம் சாத்தியப்பட்டிருக்கிறது
என்றார். ஒவ்வொரு உயிரினத்திற்கும் தமிழ்ப் பெயர் அதன் புவியியல் பெயர்,
ஆங்கிலப்பெயர்களின் வரிசைகள். அதன் புர்வீகம் வாழிடம் அதன் தற்போதைய இருப்பு
குறித்த விவரங்கள் அடங்கிய செய்திப் பெட்டகத்துடன் தயாரிக்கப்பட்டு ஆங்கிலத்திலும்
தமிழிலும் வைக்கப் பட்டிருக்கிறது. இந்த தயாரிப்புக்கு எடுத்திருக்கிற பொறுப்பு
பிரமிக்க வைக்கிறது. ஒரு தகவல் களஞ்சியமாக அன்றி உள்ளப்புர்வமாக ஒரு உயிரினமாக
மனிதன் உணர்ந்து கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டே ஆக
வேண்டும். இயற்கை தந்த உயிரினமாக மனிதன் தன்னளவில் உணர்கிற போது இயற்கை நிச்சயம்
பாதுகாக்கப்படும் என்பது உறுதியான நம்பிக்கையை இந்தக் கண்காட்சி உணர்த்தியது.
கண்காட்சிக்குள் நுழையும் போது என்
மனநிலை வேறாக இருந்தது. மன நெருக்கடி. சொந்தப் பிரச்சனைகள், கவலை, நோய்மை, வழக்கம்
போலவே பீடிக்கும் எதிர் அரசியல் செயல்பாட்டிற்கு எதிராக நடக்கும் அரசியல்
நடவடிக்கைகள். முடியாமல் தத்தளிக்கும் வாழ்வியல் பிரச்சனைகள். வழிநெடுக மக்கள்
தங்கள் கடவுளுக்கு நம்பிக்கையாக வாழ்கிற இயல்பு. அந்த பிரமாண்டமான ஷாப்பிங் அரங்குகளைத் தங்கள் திரையரங்காகப்
பார்க்கிறார்கள். சொந்த ஊர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருக்கிற மற்ற
மாவட்டத்து மக்கள். பிறமாநில மக்கள்.
ஆர் எஸ் புரம் உள்ளாக வடம்பிடிப்பதற்குத்
தயாராக இருக்கிற தேர்தான் கொஞ்சம் என்னை இயல்புக்குக் கொண்டுவருகிறது. பெருநகரத்
திற்குள் அப்படியொரு அற்புதமான தேரை நான் பார்த்து வெகுநாளா கியிருக்கிறது.
தன்னந்தனியாக யாருமற்று தனது வடக்கயிறுடன் நின்று கொண்டிருக்கிறது. அதன் மேல் சில
மைனாக்கள். என் வண்டி கண்காட்சிக்குள் ஆர்வத்துடன் நுழைகிறது.
முதல் வரிசையில் தினமும் அதிகாலையில்
பார்க்கிற விரித்து வைத்த குடைகள் போன்றிருக்கிற மேற்குத்தொடர்ச்சி மலைகளின்
அழகுப் புகைப்படங்கள். புகழ்பெற்ற இயற்கை புகைப்படக்கலைஞர்களின் காமிராவில்
பிடிக்கப்பட்ட காட்சிகளின் அழகும். பிரமாண்டமும். அருவிகள், தேயிலைத் தோட்டங்கள்.
பசேலென்ற இயற்கையின் விரிப்பு. மனம் சட்டென்று மூங்கில் நெகுவாகப் பஞ்சாக மாறிவிடுகிறது.
மலர்க்காடுகளின் வனங்களின் மடிப்பு. மலைகளின் அமைதியாக வனத்தினுள்ளாக நுழைந்து
திரிவது போன்ற பிரமை. பார்வையாளர்கள் தங்கள் அலைபேசியில் படம் பிடிக்கிறார்கள்.
இணையத்தில் கூகுளில் இயற்கைக் காட்சிகளை தனித்து ரசிப்பதற்கும் ஒரு அரங்கில்
பார்வையாளர்களுடன் லயித்துப் போய் ரசிப்பதற்கும் வித்தியாசம் உணர முடிந்தது.
பறவைகளுக்குத் தனியாக ஒரு
வரிசை, மான்கள், தவளைகள், வாத்து, நாரைகள், குரங்குகள், வரையாடுகள். சிலந்தி,
ஈசல், கழுகு, பாம்புகள், மரங்கொத்திகள், உடும்பு, பட்டாம்புச்சிகள், யானைகள்,
கடமான்கள், அரிய வகையிலுள்ள பூச்சிகளின் புகைப்படங்கள், காட்டுநாய்கள், எருமைகள்,
பன்றிகள், அந்தந்த உயிரினங்களின் உணவுவகைகள் அதன் இருப்பு. அதன் இனப்பெருக்கம்.
வாழ்நாள் போன்ற குறிப்புகளுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. நம் காலத்தில் நமக்கு
அருகாமையில் வாழும் பறவைகள் பூச்சிகள் உயிரினங்களின் ஞாபகம் வருகிறது. வெகுவேகமாக
அழிந்து வருகிற உயிரினங்களில் பூச்சியினங்கள் அதிகமாக உள்ளது. நம் உயிர்காக்க
மருந்துகள் தருகிற அரியவகை உயிரினங்கள்.
புகைப்படக்கலைஞர்களின்
தேடுதலும் ஆர்வமும் காட்சிகளில் தெரிகிறது. கல்யாண் வர்மா, அருந்தவச்செல்வன்,
உள்ளிட்ட கலைஞர்களின் படங்கள். நுண்ணுயிரிகளின் உடல் அமைப்புகளும் அதன்
வண்ணங்களும் இயற்கையின் மகோன்னதமான ஆச்சர்யத்தை அளிக்கிறது. மின் ஒளியில் ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கிற அரங்குகள் பார்வையாளர்களுக்கு சௌகரியமாக உள்ளது. ஒவ்வொரு
உயிரியின் பரிணாம வரிசையின் படங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
அண்ணன் அவைநாயகன் மேலும்
சில படங்கள் குறிப்புகளைத் தருகிறார். சற்று முன்பு முடிந்த சூழல் விழிப்புணர்வு
நாடகப் போட்டிகளில் மாணவர்கள் உருவாக்கியிருந்த காட்சிகள் நடிப்பு
முதன்மைப்படுத்திய கருத்துகள் குறித்துப் பாராட்டிப் பேசினார். அந்த மாணவர்களின்
ஆர்வம் மகிழ்ச்சியைத்தருகிறது என்றார். மாணவ மாணவிகள் வரைந்திருந்த ஓவியங்கள்
வைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துக் காட்டினார். குறிப்பிட்ட நேரத்திற்குள் வரைய
முடியாத ஒரு மாணவன் தனது மேலும் சில நிமிடங்கள் ஒதுக்க கேட்டு வரைந்த ஓவியம் என்று
படத்தைக்காட்டினார். புலியின் ஓவியம்.பின்னணியில் அடந்த கானகம். மற்ற
ஓவியங்களிலும் மாணவ மாணவிகள் தங்கள் கற்பனையில் சில காடுகளை உயிரினங்களை
வரைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு பார்வையாளர்களான நாமும் நம் மனதிற்குள்ளாகவும் ஒரு
கானகத்தினை உயிரினத்தை வைத்திருக்கவேண்டும் என்று உணர்த்தியிருக்கிறார்கள்.
தற்கால நவீன உலகத்தின்
எஞ்சியிருக்கிற காடுகளைக் காப்பாற்றுவதற்கான எளிய வகைகளை எழுதியிருக்கிறார்கள்.
புதிய சாலைகளை அமைக்காதிருத்தல், அதிக ஒலியெழுப்பியபடி செல்வதை தவிர்ப்பது.
பூங்காக் களை அமைப்பதை தவிர்ப்பது. காடுகளுக்குச் செல்லும் போது அணிய வேண்டிய
உடையின் வண்ணம் பற்றியும் சொல்கிறார்கள். நாம் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம்
அளிக்கிறார்கள் ஓசை நண்பர்கள்.
அண்ணனுடன் பேசியபோது பறவை பார்த்தல். அதன்
இயல்புகளுடன் கவனித்துப் படம் பிடிக்கும் ஓவியங்களாக்கும் பார்வையிடங்களை,
கண்ட இடங்களை ஞாபகப் படுத்தினார்.
கோவையின் பூர்வீகமான பறவைகளின் இடம் சிங்காநல்லூர் குளத்தேரிக்கும் ரயில்வே
பாலத்திற்கருகில் உள்ள குளம் தான் ஒரு காலத்தில் பறவைகள் வந்து போகிற இடம்.
மழைக்காலம் முடிந்து கோடைக்கு பல ஊர்களிலிருந்து பறவைகள் வந்து இனப்பெருக்கம் முடிந்து
செல்லும் அழகைக் கண்டிருக்கிறோம் என்றார். கோவையின் குளங்கள், ஏரிகள், ஆறுகள்,
பாசனக் கால்வாய்கள்,கிணறுகள் எல்லாம் மூடப்பட்டு எஞ்சியிருக்கிற குளங்கள் நாசாமாகி
வருவதையும் கவலையுடன் பேசினோம். குறிப்பாக நொய்யலில் கலக்கும் கிளை வாய்க்கால்கள்
தரைமட்டமாகியிருக்கிறது. உடைக்கப்படுகிற சிமெண்ட் கட்டிகளால் கட்டிடக் கழிவுகளால்
அடைக்கப்பட்டு மூடப்படுகிறது.
கோவையில் கட்டப்படுகிற
அடுக்குமாடிக்குடியிருப்புகளில் எங்கும் மரங்களுக்கு மட்டுமல்ல வாகனங்கள்
நிறுத்தப்படுவதற்குக் கூட இடம் விடுவதில்லை. இன்னும் அங்கீகரிக்கப் பட்ட
மனைப்பிரிவுகளில் பூங்காவிற்கான இடங்களில் கட்டிடப் பொருட்களைக்குவித்துக்
கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். நாம் மெதுவாக கூட கேட்க முடியாது. பெரு நகர
ஆக்கங்களில் மற்ற மாநிலங்களில்
நகரங்களிலும் இதே நிலை தொடர்கிறது.
கடவுள் மதம் நிறுவனங்கள் பெயரால்
கைவசப்படுத்தப்படும் இயற்கையான மலையடிவாரங்கள், காட்டுயிர்களின் வாழிடங்கள், அதன்
வழித்தடங்கள் எல்லாம் மறிக்கப்படுகிறதைக் காண்கிறோம். தீம் பார்க் என்றும் செயற்கை
நீர்வீழ்ச்சி, புதியதாக உருவாக்கப்படும் சுற்றுலாத்தலங்கள், புறவழிச் சாலைகள்,
காடுகளுக்குள் போடப்படும் சாலைகள் இவையெல்லாம் காட்டுயிர் களையும் பறவைகளையும்
இழக்கச் செய்கிறது. பறவைகள் மனிதர்கள் இல்லாத தேசத்தில் வாழும் ஆனால் மனிதன்
பறவைகள் இல்லாத தேசத்தில் வாழமுடியாது எனும் சலீம் அலியின் கூற்றை ஓசை தன்னுடைய
பிரதானமான வாசகமாக வைத்திருக்கிறது.
அரசு தாம் மக்களின் தேவைகளுக்காக
இருக்கிறோம் என்பதாகவும் மக்கள் எல்லாவற்றையும் அரசு பார்த்துக்கொள்ளும்
அதற்காகத்தான் தேர்வு செய்திருக்கிறோம் என்று விட்டுவிட்டதும் இந்த அழிவுக்குக்
காரணமாகிறது. நமது தேசத்தில் தான் எந்தவொரு அரசியல் இயக்கமும் இயற்கையின்
அழிவுக்கும் மாசுக்கும் போராட்டம் நடத்திடாத நாடு நமது நாடு. காரணம் வெறும்
மனிதனின் உண்டு உறைவிடம் பாதுகாப்புக் குறித்தே இயக்கங்கள் நடத்திப்
பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் நாம். நமது அரசியல் இயக்கங்களும் அப்படியாகவே
தன்னைப் பாதுகாத்தும் கொள்கிறது. தமது அரசியல் பிரிவுகளில் எல்லா அமைப்புகளுக்கும்
தொழில் பிரிவுகளுக்கு இளைஞர்களுக்கு, பெண்களுக்கு, மாணவர்களுக்கு,
இலக்கியத்திற்கு, விவசாயத்திற்கு என்று பதவிகள் பிரித்துக் கொள்வதற்கு இணை சங்கம்
வைத்திருக்கிற கட்சிகள் இயற்கைப் பாதுகாப்பு எனும் பிரிவு வைத்து அதற்கென இயக்கம்
நடத்த முன்வருவதில்லை முன் வந்ததுமில்லை யென்பதை நாம் நினைவு கூர்ந்து கொள்வது
அவசியம் எனக் கருதுகிறென். நீங்கள் யோசிக்கலாம்.
அரசியல் கட்சிகளுக்கு எதிர்
நடவடிக்கைகளில்தான் ஆர்வம் அதிகம் அதில் மக்கள் குறித்தோ இயற்கை குறித்தோ தெளிவான
சிந்தனை வருவதற்கு வாய்ப்பில்லை. அதனால் இந்தக்கண்காட்சியில் அரசியல் கட்சி
சார்ந்த பார்வையாளர்கள் நிச்சயமாக ஐந்து சதவிகிதம் கூட வருவதற்கு
வாய்ப்பில்லை. இங்கு திருவள்ளுவர்,
பாரதியார், பாரதிதாசன் போலவேதான் இயற்கை குறித்த மரியாதையும் உள்ளது. என்
சிற்றறிவுக்கு எட்டியவகையில் நாற்பது ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சிதான் நடந்து வருகிறது.
ஆளும் எதிர்க்கட்சிக்காரர்கள் இயற்கை காணுயிர் காடுகள் குறித்துப் பேசியும்
எழுதியும் இயக்கம் நடத்தியும் நான் அறியவில்லை.
நம் சமூகவளர்ச்சி அரசியல் வளர்ச்சி
சார்ந்த அமைப்பாக வேறூரூன்றி விட்டது. முழுக்கவும் அரசியல் அடிப்படையில் மனித சமூக
வாழ்வு அமைந்து விட்டது. அப்படியாகவே நமது துன்பங்களை அனுபவித்து ரசிக்கப் பழகிக்
கொண்டோம். அதனாலேயே நல்லவை என்று சொன்னாலே நமக்கு பெருத்த சந்தேகம்
வந்துவிடுகிறது. அல்லது பராகாசூர நிறுவனங்கள் தங்கள் டாலர் முதலீடுகளால்
அப்படியாகப் பழக்கியிருக்கிறது. நாம் என்னதான் போராடினாலும் கடைசியில் நம் டேபிளுக்கு
வந்து தானே ஆகவேண்டும் எனும் மனம் ஆழமாக திராவிட அரசு அரசியல் மேலாண்மையில்
படிந்து விட்டது. அதுபோலவே இந்திய மனோபாவமும் அதையொற்றியே நகர்கிறது.
நம்மிடம் அதற்கென அமைச்சகங்கள் உள்ளது.
அதிகாரங்கள் சட்டங்கள் பாதுகாப்பிற்கு உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தன்னார்வ
தொண்டு அமைப்புகள் இயற்கைப் பாதுகாப்பினர் தொடர்ந்து போராடித்தான் சில
காப்பாற்றுதல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் அரசு அமைப்பின் மூலமாகத்தான்
எளிதில் சில பாதுகாப்புகளை மேற்கொள்ள முடியும். என்னதான் தேசம் முழுக்க இயற்கை
தன்னார்வ நிறுவனங்கள் போராடினாலும் இயக்கம் நடத்தினாலும் சட்டங்கள் மூலமாக விதிகள்
மூலமாகத்தான் சில வழிகளில் இயற்கையைக் காப்பாற்றமுடியும்.
ஓசை அமைப்பு வருடாவருடம் காணுயிர்க்
கண்காட்சி, புகைப்படக் கண்காட்சிகளை நடத்திவருகிறது. வாய்ப்பு அமைகிற பட்சத்தில்
கல்லூரிகள், கலாச்சார விழாக்களில் புகைப்படக்கண்காட்சிகள் நடத்திவருகிறது. இளைய
தலைமுறையினர்கள், மாணவ மாணவிகள் பள்ளிகள்,கல்லூரிகளின் அமைப்புகளுக்கு இயற்கையான
காடுகள், காட்டுயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு
அமர்வுகளை நடத்துகிறார்கள்.
அவசியமற்ற வகையில் தேவையற்ற
மரங்களை வெட்டுதல், சுற்றுப் புறங்களுக்கு ஏற்படுகிற மாசுகளைத்தவிர்த்தல் உள்பட பல
பணிகளை இடையறாமல் செய்கிறார்கள். தங்கள் புலனுக்குத் தெரியவருகிற இயற்கை மீறல்களை
சம்பவ இடங்களுக்குச் சென்று தடுத்து சட்டப்படியாக சில அறிவுறுத்தல்கள் வழங்குகிறார்கள்.
அரிய வகை உயிரினங்களைப் பாதுகாப்பது வேட்டையாடுதல் மூலமாக நடக்கும் பல செயல்களை
அரசின் நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கவைக்கிறார்கள்.
முக்கியமான பணியாக ஓசை பிரதிமாதம் கடைசி
ஞாயிற்றுக்கிழமை கோவை மாநகரில் மாலை நேரம் ”சூழல் சந்திப்பு” எனும் மாதாந்திர சந்திப்பு நடத்துகிறார்கள். தற்பொழுது
மிகச்சிறப்பாக ஐம்பது சந்திப்புகளைத் தாண்டி நடந்து வருவது அநேகமாக மாநிலத்திலேயே
தொடர்ச்சியாக நடத்துவது ஓசை அமைப்புதான் எனும் போது நாம் ஓசை அமைப்பின் பணிகளை
நாம் பாராட்டிட முடியும். இந்த அமர்வுகளின் வளர்ச்சியாகத்தான் ஒரு பரிணாமமாகத்
தான் இந்தக் கண்காட்சி. சூழல் குறித்த விழிப்புணர்வுகளும் நாம் வாழுகிற நிலத்தைப்
பற்றியும் நீர் குறித்தும் நீர் மாசு பற்றியும் மலைகள் காடுகள் காட்டுயிர்கள்
குறித்தும் தொடர்ச்சியாக நாம் தேசமெங்கும் இயக்கங்கள் நடத்தியாக வேண்டும்.
ஆனால் நம்முடைய போதாமை ஓசை போன்ற
அமைப்புகள்தான் நடத்துகிறது. நாம் சாதிபிரித்துக் கொண்டிருப்பது போன்று இந்த
இயக்கத்தை இவர்கள் செய்வார்கள். இது இது இவர்கள் தான் செய்யவேண்டும். அந்தப்பணியை
அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் இயற்கை சாதி. இவர்கள் ஆன்மீகம் இவர்கள்
அரசியல், இவர்கள் சாதிய இயக்கம். இவர்கள் இடஒதுக்கீடு இயக்கம் என்று நாம் பணிகளைப்
பிரித்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் அந்தப்பணியிலிருந்து வேறு இடம் போகாமல் சில
சமயம் தான் சார்ந்த இயக்கத்திற்கும் போகாமல் வாழ்வதுதான் நமது சமூக அரசியல்
மேம்பாடு கற்றுத் தந்திருக்கும் பாடமாகியிருக்கிறது.
குறும்படங்கள் ஆவணப்படங்கள்
திரையிட அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு படங்கள் திரையிடல் தொடர்ச்சியாக நடந்து
கொண்டிருக்கிறது. நான் போயிருந்தபோது புலிகள் குறித்த ஆவணப்படம் ஓடுகிறது. புலிகளை
வேட்டையாடி அதன் தோல்களை சீனா, பர்மா, போன்ற கிழக்காசிய நாடுகளில் விற்கிறார்கள்.
கொல்வதற்கும் விற்பதைப் பெற்றுக் கொள்வதற்கும் அதற்கென தரகர்கள் இருக்கிறார்கள்.
புலிகளின் தோலுக்கும் நகங்களுக்கும் இருக்கிற கிராக்கிக்கு கொல்கிறார்கள்.
புலிகளைக் கொல்வதற்கும் உயிருடன் பிடிப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிற வினோதமான
கருவிகளைப் பார்த்தால் பயமாக இருந்தது. அதில் புலி மாட்டுகிறது. தாய்ப்புலிகளை
இழந்த குட்டிப்புலிகள் கானகங்களில் உலாவுகிறது. கால் மட்டும் சிதைத்துப்பிடிக்கிற
கருவியில் புலியில் கால்கள் நசுங்கி தன் கால்களைப் பார்க்கிறப்புலியின் வேதனையைக்
காண முடியவில்லை.
பிற்பாடு சுற்றுலாத்தலங்களில் காடுகளை
வழியாக கொண்டிருக்கிற நெடுஞ்சாலைகளில் பயணித்துப் போகும் வாகனங்களால்
அடிபட்டுச்சாகிறது. வெகுவேகமாக ஒலியெழுப்பிப் போவதால் கானகத்திற்குள்ளாக உயிரிகள்
தங்கள் பாதை மறந்து தாறு மாறாக ஒடி பாதையில் வந்து இறக்கிற உயிரினங்கள் பற்றய
புகைப்படங்கள். அது போலவே வனச்சரகத்திற்குள் செல்லும் வாகனங்களில் அடிபட்டு சாகும்
காட்டுயிர்களின் நிலை பற்றிய புகைப்படங்களின் தொகுப்பு நம்மை துயர்கொள்ள
வைக்கிறது. புலிகள் உள்பட பல உயிரிகளின் தோல்கள் திருடும் கொள்ளையர்கள் பற்றிய
குறிப்புகளும் படத்தில் காட்டப்படுகிறது.
நம் சமூகத்தில்
பெருந்தனக்காரர்கள் உருவாக்கிய வேட்டை கலாச்சாரம் இன்று நவீன கருவிகள் மூலமாக
நடந்து கொண்டிருக்கிறது. படிப்படியாக காடுகள் அழிப்பிற்குப்பிறகும் உயிரிகளை
அழிப்பிற்குப் பிறகும் வளங்களை வெட்டியெடுப்பதற்குப் பயண்படுத்தப்படுகிறது.
தற்காலத்தில் ஓசை போன்ற சூழல் அமைப்புகள் வனச்சட்டங்களைத் தீவிரமாக அமுல் படுத்த
விடுக்கும் கோரிக்கைகள் மூலமாக இப்பொழுது அரசுகள் சில நடவடிக்கைகளை எடுப்பது
பாராட்டும் படியாக உள்ளது. ஒரு நிலம் கையகப்படுத்தப் படும் போது திட்டம் ஆரம்பத்
துவக்கும் போது சூழல் அமைப்புகளின் கருத்தறிய முயற்சிப்பது வரவேற்கத்தக்கதாக
உள்ளது. சமீபத்தில் விளைநிலங்களை பாழடிக்கும் அன்னூர் மேட்டுப்பாளையம் நீலாம்புர்
புறவழிச்சாலை திட்டத்தை அரசு கைவிட்டது நினைவிருக்கலாம். இதற்கு மக்களின்
விவசாயிகளின் இடைவிடாத போராட்டமே ஆகும்.
அப்படியாக சில தாதுக்கள்
வெட்டியெடுப்பதற்கு வனத்தை அளித்து பிறகு சத்தான தாதுக்கள் கிடைக்காத பொழுது
திட்டத்தைப் பாதியில் கைவிட்ட வன அழிப்புகளும் இருக்கவே செய்கிறது. மக்கள்
வாழிடங்கள் மட்டும் சுத்தமாகவும் சுகாதாரமாக இருக்க வேண்டும் அப்படியிருந்தால்
போதும் காடும் நாடும் சுத்தமாகும் என்னும் கருத்தியலுடன் பேசும் சூழலியல்வாதிகளும்
நம்மிடம் உள்ளார்கள். வனமும் கானகமும் வளம் பற்றியும் சூழலியல் குறித்தும்
தொடர்ந்து இயங்குகிற அமைப்பாக ஓசை பணியாற்றுகிறது. உலகின் அழகிய மலைத்தொடர்களில்
ஒன்றாக மேற்கு மலைத்தொடர்களும் உள்ளதாக செய்திப் புகைப் படம் காட்டுகிறது.
ஒருவகையில் மிகந்த மகிழ்ச்சியாகவே உள்ளது. இயற்கை பருவ நிலைக்குத் தகுந்த மாதிரி
அழுகுற மேன்மேலும் உயிரினங்கள் பல்கிப் பெருகிட இந்த மலைத்தொடர் உதவிவருகிறது.
ஓசை அமைப்பின் இந்தப் பணியும் இந்தக் கண்காட்சி
நடைபெற உதவிய தன்னார்வ நிறுவனங்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். அரசு
தோட்டக்கலைப் பண்ணை, பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கிற இயற்கை ஆர்வலர்கள்,
கல்லூரி மாணவ மாணவியர்கள், பேராசிரியர்கள், சூழல் அமைப்புகளுக்கு கொலுவைத்துக்
கொண்டாடி வணங்கினாலும் போற்றினாலும் ஆத்திகனும் நாத்திகனும் கோவித்துக் கொள்ளப்
போவதில்லை.