வியாழன், 2 மே, 2013

மாரி செல்வராஜின் சிறுகதை நூல் “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்“ குறித்து


நவீன கலிங்கத்துப் பரணி     

 

சிறுகதைகளின் காலம்- 

மாரிசெல்வராஜின் சிறுகதைகள் குறித்து...

 

இளஞ்சேரல்- 

 

  சிறுகதைகள் ஒருவரின் அல்லது ஒரு குலக்குழுவின் வாழ்கால அனுபவத்தைப்பேசுகிற வடிவமாக மாற்றப்பட்டது. அல்லது கலைஅனுபவமாக மாற்றி இனியொருவருக்குத் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக பயண்படுத்தப் பட்டது. ஆதிகாலத்திலிருந்தே ஆபத்து காலத்தின் அனுபவங்களைப் பறவைகளின் வழியாகக் கற்றுக் கொண்ட மனிதன் சில ஆபத்தான வழிகள் குறித்த அனுபவங்களை சித்திரக்குறிகளாக எழுதிய காலத்திலிருந்து எழுத்து வடிவம் பிறந்தது.

         சமகாலத்தில் அனுபவம் அல்லாத புனைவுகளைகளையும் புதிரான கனவுகளையும் அதீதமான கற்பனைகளையும் இணைத்து சிறுகதை வடிவங்களாக எழுதிக் கொள்ளலாம் எனும் சுதந்திரம் எலக்ட்ரானிக் யுகம் வந்த பொழுது பரவலானது. மரபு சாராத எரிசக்திகளின் வழியாக மனிதனின் வாழ்வும் அனுபவங்களின் புரிதல்கள் கச்சாவாகவே கிடைத்தது அவனுக்கு..

         அறிவியல் புனைகதைகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் பொழுது தோல்வியில் முடியும் அனுபவங்கள் குறித்தும் எழுதப்பட்டது. விஞ்ஞான வாதமும் அஞ்ஞான வாதமும் குறித்த மூடநம்பிக்கைகள் பற்றியும் கதைகள் வரத்துவங்கியது. தோல்வியடைந்த போர்க்கருவிகள் பற்றிய கதையாடல்களை நாம் புராணகதைகளாக எழுதி எழுதி பிரமித்து இருக்கிறோம்.

        மாரி செல்வராஜின் சிறுகதைகளை வாசிக்கும் போது திரைக்கதைகளின் ஸ்டோரி போர்டை வாசிப்பதான உணர்வு மேலிட்டது. காட்சிகள் அளவில் சிறியதாகவும் உரையாடல்கள் மிகக் குறைந்த அளவிலும் பேசுகிறார்கள்.உணர்வு மேலிட்ட நிலத்திலிருந்து மக்களின் குரலும் உணர்ச்சி வெளிப்பாடும் இப்படி சுருக்கமாக வெளிப்படாது. அவர் வாசகனுக்கு தொந்தரவு கொடுக்காத சுவராசியமான நடையை அவர் தெரிவு செய்திருக்கலாம்.“செம்புலப் பெயனீர்கதை உண்மையாகவும் வாழ்க்கையின் மீது தீவிரத்தன்மையும் அதே வாழ்க்கையின் மீது உக்கிரமான வெறியும் கொண்ட தம்பதிகளைக் காண முடிகிறது. தமிழ் வீரம் என்பதேகூட ரத்த உறவுகளைக் கொன்று குவிப்பதில் அதிகமாகப் போற்றப்படுகிறது. ஒரே நிலத்தில் எதிரிகள்.ஓரே குலத்தில் எதிரிகள்,ஒரே பட்டியில் எதிரிகள்,ஓரே ஜில்லாவில் எதிரிகள் என்று நாம் வீடு கட்டி அடித்த புராணங்களும் நம்மிடம் உண்டு.

        தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் கதையின் களமும் நிலமுமாக இருப்பது பரணியும் மனிதர்களின் ரத்தமும். ஒரு வகையில் இந்தக்கதை நவீன கலிங்கத்துப் பரணி என்று சொல்லலாம். ஒரு கல் ஒரு கலவரம் எப்படி உருவாகிறது என்பதை நாம் இச்சிறுகதையின் வாயிலாக நாம் அறிய நேருகிறது. ஒரு கதையாளன் அல்லது கதைசொல்லி மனிதநேயமிக்கவனாக இருக்கிறபோதுதான் அவன் கலை உயிருடன் இருக்கும் இல்லையெனில் அவை வெறும் செய்தித் தொகுப்பாக மாறிவிடுகிறது. இந்தக் கதையில் வரும் கலவரங்களை நாம் ஒவ்வொருவரின் வாழ்விலும் கண்டுதான் வருகிறோம். எப்பொழுதும் அதிகாரத்தின் விகாரத்திற்குக் கூட்டத்தைக் கண்டால் பிடிக்காது. இப்பொழுதும் கூட இரவு பத்துமணிக்கு மேல் கிராமத்திலோ நகரத்திலோ கூடுங்கள் பாரா வருகிற காவல் துறைக்குச் சந்தேகம் வந்து விடும். பிரிட்டிஷ்காரன் சுதந்திரம் தந்த பொழுதே இந்த அடிமை நாய்கள் எப்போதும் பயந்து கொண்டே இருக்க வைத்துக் கொள். பயத்தை உண்டு செய்வதே ஒரு ஆட்சியாளர்களின் தலையாய கடமை. அதற்கு நீ எந்த அறிவை வேண்டுமானாலும் உபயோகம் செய். முடிந்தால் பகுத்தறிவைக் கூட பயண்படுத்து.

             இந்தக் கொடுரக் கொலைகளைச் செய்த அரசாங்கம் தான் மறுபடியும் ஆட்சிக்கு வந்தது. அந்த மாவட்ட மக்களே மறுபடியும் அதே அரசாங்கத்திற்கு வாக்களித்து இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்து வாசிக்கலாம். மாரி குறிப்பிடும் அந்தக் கல் வெற்றி பெற்ற அரசாங்கமாகவும் இருக்கலாம். தமிழ்ப் பழமொழியே என்ன பேசுகிறது அல்லது பேசச் சொல்கிறது “ஆயிரம் பேரைக் கொன்னாத்தான் அரைவைத்தியன் ஆகமுடியும்“ என்று தானே பேசுகிறது.

    தமிழ்ச்சிறுகதைகளுக்கு வாசிப்பு தளம்  மணிக்கொடி காலத்தில் பரவலாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு வந்த சொர்க்கம் பற்றிய வதந்திகள் கூட கதைகளாக எழுதப்பட்டது. அப்படித்துவங்கிய வாசிப்பு எழுச்சி காலமானது அப்பொழுது தமிழகம் இடதுசாரி சிந்தனைகளின் வசம் இருந்தது. பெரியாரும் அண்ணாவும் ஜீவாவும் கல்யாணசுந்தரமும் பி.ராமமூர்த்தியும் தமிழகத்தின் பட்டி தொட்டிகள் உள்பட எங்கு காணிணும் பொதுவுடைமைக் கொள்கைகளைப் பேசினார்கள் எழுதினார்கள். ஒவ்வொரு பிரதிகளிலும் எட்டுக் கதைகள் கூட பிரசுரம் ஆனது.

       சாதிய மேல் கட்டுமான அடுக்கு ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒரு நிர்வாகமிக்க அரசாங்கத்தை அமைப்பதற்கு நிலக்குவியலை மனதில் கொண்டு எழுத்தியக்கம் பிறந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரமயமாகி வந்த வாழ்வியல் கூறுகள் மெல்ல மெல்ல குடும்ப உடைப்புகளுக்கும் வழிவகுத்தது என்று சொல்லவேண்டும். பெண்கள் கல்விகற்றதும் கல்வியை மேம்படுதத எடுத்த முயற்சிகள் வாசிக்கவும் மக்களுக்கு வாய்ப்பு அளித்தது. அதன்வழியாக மக்கள் பொதுவுடைமைச் சிந்தனையை எல்லோரும் எழுதினார்கள். அண்ணாவின் சிறுகதைகளும் திராவிட இயக்க மேடைகளும் சிறுகதைகளுக்கு உதவின. அதன் வழியாக சிறுகதைகளுக்கான விளம்பரத்தை ஜெயகாந்தனும், லஷ்மி. சிவசங்கரி, பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்கள் வெகுசன ஊடகங்களில் உரிமைக்குரல் எழுப்பும் மனித உணர்வுகளை எழுதினார்கள். ஏறக்குறைய 60 70 80 காலங்களில் எல்லா சிறுகதை எழுத்தாளர்களும் தங்கள் கதாபாத்திரங்கள் யாவும் உரிமைக்குரல் எழுப்புவதாகவும் தியாக உணர்வுகளை சித்தரிப்பதாக வும் எழுதினார்கள். பிற்பாடு திராவிட இயக்கங்களின் ஆட்சிகளின் வழியாகக் கண்டடைந்த வெறுப்பும் எதிர்பாராத அளவு தமிழ்மக்களின் வாழ்வாதாரமும்  உழைப்பும் வீணடிக்கப் பட்ட கதைகளைத் தங்கள் கதாபாத்திரங்களின் வழியாக எழுதினார்கள்.

         மாரி செல்வராஜ் கதைகள் இயல்பான மனநிலைகொண்ட மாந்தர்களின் வாழ்வைப் பேசுகிறது. அவர்கள் இழந்ததை நினைவுட்டுகிறது. ஒவ்வொரு நாளை இழப்பதும்கூட இழப்புதான் இங்கு ஈடு செய்ய முடியததாக நாளும் இருக்கிறது. கட்டமைக்கப் படுகிற நிறுவன ஆதிக்கத்தின் கீழாக அடிமையாகிற மனித உணர்வுகள் பற்றியும் 2000 திற்குபிறகு எழுதத் துவங்கியவர்களில் கரிசல் படைப்பாளர்கள் முக்கியமானவர்கள். தீப்பெட்டி இயந்திரம் வேண்டாமென்று போராடும் மக்களையும் தீப்பெட்டி இயந்திரம் வந்தால் வாழ்வு பறிபோய்விடும் என்று போராடும் மக்கள் பற்றியும் எழுதுகிற படைப்பாளர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். தலித் எழுத்து  பெண்

எழுத்து. சிறுபாண்மை மக்களின் எழுத்து என்னும் பிரிவாக சிறுகதைகளின் தன்மையை பகுக்கத் துவங்கியதும் இரண்டாயிரத்திற்குப் பிறகுதான்.

       மனித மனங்களின் இருக்கத்தையும் நாம் பெறமுடியாத அனுபவத்தை வாசிப்பின் வழியாக அடைவதற்கும் சிறுகதைகள் பயண்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் எழுதப்பட்ட ஐரோப்பிய சிறுகதைகள் எல்லாம் போரின் விளைவுகளை,குற்றங்களை,தண்டனைகளை,சிறைகளின் கொடுமையை,பனியின் சூழ்நிலையைப் பற்றி எழுதி உலக மக்கள் கவனத்தை ஈர்த்தது. இந்திய விடுதலைக்காலங்களில் எழுதப்பட்ட சிறுகதைகளில் சுதந்திரக் கனவை விதைத்தது.

மொழி வாரி மாநிலம் எனும் கோரிக்கைகளின் பொழுது இன எழுச்சியை மையப்படுத்தி எழுதினார்கள் சிறுகதையாளர்கள். கிராமப்புற இளைஞர்கள் தாம் உழைப்பிற்காகவும் வருமானத்திற்காகவும் பெருநகரங்கள் நோக்கிச் சென்று அங்கு தாம் பெற்ற அனுபவங்களையும் கதைகளாக எழுதினார்கள்.

             தற்கால நிலை என்பது சிறுகதைகளுக்கு அளிக்கப் படும் மரியாதையும் பக்கங்களும் குறைந்தே வந்து கொண்டிருக்கிறது. சிறுகதைகளின் வாசிப்பு இடத்தை தொலைக்காட்சித் தொடர்கள் நிரப்ப ஆரம்பித்தது. எப்படி சினிமாவை தொலைக்காட்சி விழுங்கியதோ அப்படியே வாசிப்பு அனுபவத்தையும் விழுங்கியது. குறிப்பாக பெண் வாசகர்கள் எனும் ஒரு தளத்தை தொலைக்காட்சி தொடர்கள் நசித்துவிட்டது. புத்தக விற்பனையை டாஸ்மார்க் தகர்த்ததோ அதுபோலவே சிறுகதைகளின் வளர்ச்சியையும் தகர்த்தது. ஆயினும் மாரி செல்வராஜ் சிறுகதைகளை எழுதுவதும் வரவேற்கத்தக்கது.

        நவீன காலத்தின் அச்சு நெருக்கடி மற்றும் மந்த விற்பனை காரணமாக நூல்களின் தேக்கநிலை ஏற்பட ஆரம்பித்ததின் விளைவாக சிறுகதை எழுத்தாளர்கள் தொலைக்காட்சி,திரை ஊடகம்,பத்திரிக்கைத் துறைகளுக்குத் திரும்ப ஆரம்பித்தார்கள். ஒருவகையில் இந்த இடங்களிலெல்லாம் கொஞ்சம் இவர்களால் நவீன மயம் ஆனது. மொழியின் அழகும் காட்சிகளில் விசாலமான அழகும் மேம்பட்டது என்றே சொல்ல வேண்டும்.பாலுமகேந்திரா.மகேந்திரன்,ருத்ரய்யா,எம்.ஏ.காஜா,ஜே.வி.ருக்மாங்கதன்.அம்சன்குமார் போன்ற படைப்பாளர்கள் சிறுகதைகளை ஊக்குவித்தனர்.இதில் தங்கர் பச்சானையும் சேர்க்கலாம்.

           உலக இலக்கிய வகையில் சிறுகதையே மகத்தான வடிவம்.செவ்வியல் தன்மையுடன் வாழ்விலையும் கலையையும் நுட்பத்தையும் பேசுவதற்கும் சித்தரிப்பதற்கும் சிறுகதையைப் போன்ற ஒரு வடிவம் வாய்க்காது. சோ.தர்மன், இமையம்.உமாமகேசுவரி,என்.ஸ்ரீராம்.ஜே.பி.சாணக்யா பெரிய அலையையே உருவாக்கினார்கள் என்று சொல்லாம். ஒரு கலைஞன் மகத்தான கலைஞனாக மாற விரும்புகிறவன் சிறுகதையைத் தான் தேர்தெடுப்பான். அல்லது கதைகளை வாசிப்பததின் வாயிலாக கலைஞன் தன்னிடமிருக்கும் கலைகளின் செவ்வியல் தன்மையை மேம்படுத்திக் கொள்கிறான்.

 

        சிறுகதைகளின் வழியாக நாம் கண்டது எல்லாமே நிலவுடைமைகளுக்கு எதிரான குடும்பச் சிதைவுகளையும் ஆதிக்க வர்க்கங்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் செயல்பட்ட மனிதமனங்கள் பற்றியும் பேசத் துவங்கியது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கதைப்பாங்கிலும் உரையாடல்களுக்கு இடையில் கதை சொல்லல் பாங்கில் கொஞ்சம் சுவராசியமும் பாலியல் வருணணைகளும் சொற்றொடர்களும் உபயோகப் படுத்தப்பட்டன. அதற்கென சில சிறுகதை எழுத்தாளர்கள் உருவாக்கவும் உற்பத்தியும் செய்யப்பட்டார்கள். தொழில் முறை எழுத்தாளர்கள் இப்படித்தான் உருவாக்கப்பட்டார்கள். எப்படி காட்சிபிம்பங்களில் கொஞ்சம் உணர்ச்சி வயப்பட வைக்கிற சித்திரங்கள் உபயோகப் படுத்தப் படுகிறதோ அதுபோன்றே வெகுசன எழுத்துக்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதித்தள்ள ஊக்குவிக்கப்பட்டன. அதற்காகவே நடுத்தர வாழ்வின் இல்லாமைகள் போதாமைகள் எதிர்த்துப் போராட முடியாமைகள் என்பதாக நிரம்பக் கதைகளை உற்பத்தி செய்து குவிக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் வாசக தன்மை நிரம்பியவர்களாக புதியதாக கல்வி கற்ற பெண்களுக்கு இலக்கிய வாசிப்பின் மீது ஆழ்ந்த பிரியம் ஏற்பட்டது. பெண்கள் அதிகமாக் கற்காத போது அவர்கள் கல்வி கற்றவர்கள் புத்திசாலிகள் பொறுமை மிக்கவர்கள் நளினமானவர்கள் அப்பாவிகள் அவர்களை எளிதில் ஏமாற்றலாம் என்து போன்ற கற்பனைகளை கொட்டிக் கொட்டி எழுதி விற்ற காலமும் இருந்தது. பெண்கள் வாசகத் தன்மை சார்ந்த எழுத்துக்களை ஏறக்குறைய எல்லா சிறுகதை படைத்தவர்களும் எழுதினார்கள். ஒன்று கதைகளில் ஆண்வர்க்கம் மோசம் என்றும் எல்லாமே ஆணாதிக்கம்தான் என்றும் பிறகு நேரெதிராக இது வரை நடந்த போராட்டங்கள் யாவும் வர்க்கப் பேராட்டங்களே என்று இன்னொரு தரவும் வாதிட்ட எழுத்துகளும் பிறந்தது. வாசகர்கள் எளிய நடுத்தர மனம் படைத்தவர்களாகவே அதுமட்டுமின்றி மந்தித்தனம் கொண்ட வாசகர்களாக மாற்றியதும் ஒருகாரணமாகும். இன்றும் ஐம்பது வயது கடந்த அல்லது முப்பது வருடமாக வாசிக்கும் ஒருவருக்கு எது கலைப்படைப்பு என்று அறியாதவராகவே வளர்த்து வைத்து இருக்கிறோம். குறிப்பாக சிறுகதைகள் பற்றிய ஆர்வம் குறைந்ததற்கும் பிரசுரங்களுக்குக் கதைகள் தேர்வு செய்யப்படாததற்கு இந்த மந்த நிலையும் காரணமாக இருக்கிறது.

மகாத்மாவைக் கொல்ல ஒரு திட்டம் அற்புதமான சிறுகதை. இதில் அம்பேத்காரும் காந்தி பற்றிய உரையாடல்களும் சித்திரங்களும் வந்துபோகிறது.

அது போலவே எனக்கு ரயில் பிடிக்காது. சிறுகதையில் பால்யமும் ரயில் பாதைகளும் விடுமுறை நாட்களைக் கழிக்கிற சிறுவனின் மனஓட்டங்களுடன் மாட்டின் மீது வருகிற எரிச்சல் என்பதாக கதையின் களம் கிராமியத்தின் காட்சிகளும் சித்திரங்களும் நிறைந்திருக்கிறது.

என் தாத்தாவை நான் தான் கொன்றேன் கதையின் தனது தாத்தாவின் மரணத்தையும் ராஜ்கிரன் குறி சொல்கிற மீனா சினிமா டிக்கெட் சித்தப்பாவிடம் அடி உதை பாசம் உறவு பற்றிய காட்சிகள் அழகாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

நவீன சிறுகதை வடிவங்களி்ல் பரிசோதனை முயற்சிகளின் வடிவமாகவும் மாரிசெல்வராஜ் கதைகள் பதிவாகியிருக்கிறது. பொதுவாக அறிவியல் புனை கதைகள் என்னும் பெயரில் நடக்கும் கந்த்ரகோளம் சொல்ல விளக்கமுடியாது.

மாரி அதையெல்லாம் தவிர்த்து எளிய வாழ்வு கொண்ட மனிதர்களின் தொகுப்பற்ற வாழ்க்கையை எழுதிச்செல்கிறார்.

         பொதுவாக கலைசார்ந்த படைப்புகளை வாசித்தல் தேர்ந்தெடுத்தல் என்கிற ஆர்வம் குறைந்து போனதற்குக் காரணமே அப்படியான அற்புதமான கலைப்படைப்புகள் வரவில்லை என்று மேதாவித்தனமாக உளறுகிறவர்களை நாம் வைத்துக் கொண்டிருப்பதும் அல்லது ஏதாவது ஒரு வகையில் கலைப்படைப்பு வெளிவந்திருந்தால் அதைத் தூக்கிக் கடாசி விமர்சிக்கிறேன் பேர்வழி என்று நாரடிப்பதும் கூட ஒருவகையில் பாசிசத்தனம்தான். நல்ல படைப்புகள் வராமல் போவதற்குக் காரணம் நல்ல படைப்புகள் வந்து விடவே கூடாது அதில் ஒருவன் நம்மைத்தாண்டி போய்விடகக்கூடாது என்பதில் தெளிவாக மூத்தத் தலைமுறைகள் இருப்பதும் ஒரு காரணமே. அதுபற்றியெல்லாம் தைரியமாக எழுதுவதற்கோ கூட இன்னும் கட்டுப்பாடும் சாதி விலக்கமும் இருக்கவே செய்கிறது. இன்னும் கூட ஒரு மகத்தான தலித் படைப்பை ஒரு உயர்ஜாதி படைப்பாளி ஏற்றுக் கொண்ட சரித்திரம் இன்னும் நிகழவில்லை. அதுபோலவே நீ என்ன பெரிய மயிறு என்று அவர்களுகம் இவர்களுடைய கலைப்படைப்பை இவர்களும் ஏற்றுக் கொண்ட வரலாறும் இன்னும் நிகழவில்லை. ஆனாலும் நாம் இன்னும் ஐரோப்பிய சிறுகதைகளைப் பற்றிபேசிக் கொண்டிருக்கிறோம்.

         மகத்தான கதைகள் எழுதியவர்களில் மௌனி முக்கியமானவராக இருக்கிறார் ஆனால் தலித்  படைப்பாளர்கள் எத்தனை பேர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று யோசித்தோமானால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

          சிறுகதைகளில் கலை நுட்பம் பற்றிய அக்கறையை சுந்தரராமசாமி எடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.அவர் புதுமைப்பித்தனை ஆகர்ஷமாகக் கருதியதும் மலையாளக் கதைகள் மற்றும் அம்மக்களின் உறவுகளின் அந்நியோன்யம் அவர்களுடைய நிலம், உறவுகளின் பிரிவு அதன் மூலம் அவர்கள் எதிர்கொள்ளும் சூழல்கள் பற்றிய விவரணைகளை அதிகமாக எழுதினார். அவரும் வண்ணநிலவனும் நேரெதிர் தன்மைகளைக் கொண்டிருந்தனர். பிற்பாடு இடதுசாரி இதழ்களில் வெளியான கதைகள் முழுக்கவும் சாதி மத முரண்களால் சமூகத்தில் மக்களின் வாழ்நிலையைப் பற்றி பகிரங்கமாகவே பேசியும் எழுதியது. ஆனால் அந்தக்கதைகளுக்கு தொழிலாளர் வர்க்கம் மத்தியில் பேராதரவு கிடைத்தது. அந்த தரவிலிருந்து சிறுகதையாளர்கள் நிறைய உருவானார்கள் எனினும் அந்தக் கதைகளுக்கு வேறொரு தரப்பிலிருந்து வந்த விமர்சனம் மலத்தை விடவும் கேவலமான விமர்சனத்தை நெகு நெகு சால்ரா இலக்கிய வியாதியஸ்தர்கள் வைத்தார்கள். உண்மை தத்ரூபமாக வெளிப்பட்ட காரணத்தாலெ அக்கதைகள் எல்லாம் வறட்டுத்தனமானவை மற்றும் கலை நேர்த்தி இல்லாதது என்றும் பேசினார்கள். அந்தக் கதைகளை விடவும் படுகேவலமான கதைகளை புரட்சிக்கதைகளை மொழிபெயர்த்துத் தந்து பதிலுக்குப் போட்டியாகக் களம் இறக்கியதையும் நாம் பார்த்திருக்கிறோம். தற்காலத்தில் சிறுதையின் வடிவம் மாறியிருக்கிறது. அதை மாற்றிய பெருமை முழுக்கவும் இடது சாரி சிந்தனாவாத கலைஞர்களால் சாத்தியமாகியிருக்கிறது. ஒரு நுட்பமான கலைவடிவமொ உலகத்தரமான வடிவமோ எதுவாயினும் அதைச் சிருஷ்டிக்கிற ஒருவனாக இடதுசாரி கலைஞனாகவே இருக்கிறான். அவனால் உண்மையை அழகாகப் பேசமுடியும். கலைஞன் எப்போதும் நடித்துக் கொண்டே இருக்கமாட்டான் அவனுக்கு என்று ஒரு உடலும் உடல் தேவைக்கான வாழ்வும் இருப்பதால் அவனுக்குக் கலை என்பது ஒருவகையில் முகச்சவரம் செய்கிற வடிவம் மட்டுமே. கலையைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பவர்கள் யாவரும் காடு காடாய் ஏரி ஏரி ஏரியாய் பழங்குடிமக்கள் வாழும் பகுதிகளுக்குப் போய் அவர்களுடன் வாழ்ந்து கொண்டு அவர்கள் பற்றி அறிந்து எழுதுகிறார்கள். பிறகு அம்மக்களின் அறியாமையைக் கிண்டல் செய்வதும் அவர்களுடைய குடும்பம் கலை அரசியல் பொருளாதாரம் குறித்து அதிமேதாவித்தனமாக எழுதுவதுமாகவே இருக்கிறது. அப்படியானா வர்களுக்குத்தான் இங்கு நாம் பீடங்களை அமைத்துத் தருகிறோம். மன்னிக்கவும் மறைமுகமாக அமைத்துத் தரப்படுகிறது. இப்படித்தான் எழுத்து யுகம் போகவேண்டும். இப்படி மாற்றி எழுது. இது போன்ற ஆக்ரோசமான படைப்பு வந்து கொண்டிருக்கிறது பார். நீ என்ன புடுங்கிக் கொண்டிருக்கிறாயா. போட்டுத்தாக்கு அவனை அவன் எழுத்தைக் கிழி,.டேய் விமர்சகா எட்றா உன் பேனாவை போடு அறிவாயுதத்தை கலை இருக்கா கேள்..நுட்பம் இருக்கா கேள். எல்லாம் இருந்து விட்டால் அவனை விடாதே அவன் டேன்ஜர். அவன் எழுத்தின் நிலையை மாற்றிவிடுவான் அப்படியே அமுக்கு அவனை..இழிவாகக் கருதப்பட்ட சமூகத்தின் அடுக்கிலிருந்து மேலேறிவந்தால் அவனை சக்கரவியுகம் அமைத்துச் சாய்ப்பதற்கும் அந்த எழுத்துக்களை கலை இல்லை நுட்பம் இல்லை. செய்நேர்த்தியில்லை. அடர்த்தி இல்லை என்று நிறுவன விமர்சகர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்குத் தேவை கொஞ்சம் பரபரப்பு.

              அவன் பற்றிக் கேள்விப்படாத மாதிரியே இரு..அப்படியா யார் அது என்று கேள். அவனைக் கொல்வதற்கு அந்தக் கேள்வி ஒன்று போதும். அவன் குலத்தின் கதையையே கொல்ல முயற்சி செய். நீ யெல்லாம் ஞானபீடம் வாங்கினாலும் என் சாதிக் காரன் சோப்பு டப்பா வாங்குறதுக் குச் சமம் என்று பேசு..அவனை அவன் எழுத்தின் ஆக்ரோசத்தை அழிக்கத் துவங்கு. முடிந்தால் நீயெ உன் சொந்த செலவில் தண்ணி வாங்கிக் கொடு..அவசரம் அவசரம் அவன் எழுதாமல் பார். விடாதே பார் அவனுக்கு அதிகமாக லைக் விழுகிறது. அடித்துத் துரத்து என்பதுதான் தற்போதைய இலக்கிய வகைமை இதிலிருந்து மாரி செல்வராஜ் போன்ற சிறுகதையாளர்கள் தப்பிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்..

        சிறுகதைகளின் வாயிலாக நாம் அறிய விளைவது பிறிதொருவரின் அனுபவம் மட்டுமல்ல ஒரு சமூகத் தொகுப்பின் கலைவடிவங்களையும் அவர்களின் தலைமுறைகளின் கலாச்சாரச் சடங்குகளையும் அறிந்து கொள்கிறோம். மாரி செல்வராஜின் கதைகள் தாமிரபரணி,திருநெல்வேலி மண்டலத்தைச் சார்ந்த மண்ணின் மனிதர்கள் வாழ்வு எதி்ர்கொள்ளும் சம்பவங்கள் என்பதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எளிய மனிதர்களி்ன் தவிர்க்க வியலாத குற்றங்களும் அதன் பின்புலமும் அவர்கள் எதிர்கொள்கிற தற்காப்பு நடவடிக்கைகளும் சிறப்பாக கதைகளாக எழுதப்பட்டிருக்கிறது.

       நம் யதார்த்தமான வாழ்வில் நம்மால் நம்பிக் கொள்ளவே முடியாத இடர்களை கலை அனுபவத்தின் வாயிலாக அவர் எழுதிச் செல்கிற காட்சிகள் உணர்வுப் புர்வமாக அமைந்திருக்கிறது.சிறுகதைகளுக்கென்று ஒதுக்கப்படும் பக்கங்களை சிற்றிதழ்களும் குறைத்து விட்டது.நவீன இலக்கியப் பத்திரிக்கைகளும் குறைத்துவிட்டது. சிறுகதைகளை ஊர்விலக்கம் செய்வது போன்ற மனப்பான்மையை தற்கால நவீனம் ஏற்படுத்தியிருக்கிறது. சினிமா இனி எப்படி மேடு ஏறுவதற்கான வாய்ப்பில்லையோ அதுபோலவே சிறுகதைகளுக்கான வாழ்வும் அப்படித்தான். ஒருவேளை பொக்லைன்கள்,புல்டோசர்கள் ராட்சத கிரேன்கள்,ரொலிங் ஷட்டர்கள் வந்து நமது வேலைவாய்ப்பைக் குறைத்து இருக்கிறது. மிக சுலமாக உடலுழைப்பு இல்லாமல் வேலை செய்வதற்குக் கருவிகள் வந்துவிட்டது.

               தொலைக்காட்சி ஊடகங்களில் சொற்ப வருமானத்திற்காக பணிபுரிந்து தன் நவீன சிந்தனையையும் பல்லாண்டு காலம் வாசித்த கிளாசிக் இலக்கியங்களை மறந்து கற்பனை செய்து வைத்த அனைத்து நவீன பின் நவீன படைப்பு ஆசைகளை தூக்கி கூவம் ஆற்றில் வீசிவிட்டு எடுபிடிகளாக தான் வாசித்ததிற்கும் தன் படைப்பிற்கும் சம்பந்தமி்ல்லாத வேலையைத் தன் கலைபசியின் பொருட்டு வாழ்ந்து கொண்டிருக்கி பல்லாயிரம் கலைஞர்களை இந்தக் கதைகள் ஞாபகத்தில் கொண்டு வருகிறது. கலை என்பதை கலை வெளிப்பாடும் கலைஞனைத் தீவிரமாகப் பாதுகாப்பதும் ஆக இருக்க வேண்டும். கலையை ஏவுதல் என்கிற மனோபாவத்தை இந்த நவீன காலத்தில் ஒருசில பதிப்பு நிறுவனங்கள் ரகசியமாகவே மேற்கொண்டு வருகிறது என்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது.

             மாரி செல்வராஜ் கதைமாந்தர்கள் ஏற்கெனவே வாழ்ந்தவர்கள்.வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அதிகாரத்தின் ஒடுக்குமுறைகளை சகித்துக் கொள்கிறவர்கள். அதிகாரம் தந்துதவுகிற ஜாமீன் வசதியை வைத்து வாழப் பழகிக்கொண்டவர்கள். எளிய மனித சமூகத்திடம் முன்புபோல எல்லாம் ஆயுதங்கள் எல்லாம் இப்போது இல்லை. அவர்கள் ஒரு போதும் அதிகாரத்தின் மீது எறிந்ததில்லை.  ஆனாலும் எப்படியோ அதிகாரத்தின் துறைக்கு கற்கள் எறிவது போன்ற படங்கள் கிடைத்துவிடுகிறது.

            மாரியின் கதைகளில் வரும் பெண்களும் அவர்களின் உலகும் விசனப் படவைக்கிறது. ஆறுகளின் வழியாகவும் மண்வளம் வழியாகவும் மக்களின் சமூகப் பழக்கவழக்கங்கள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருப்பதை உணரமுடிகிறது. சரிபாதியாக ஐந்து கோடி பெண்கள் இருந்தாலும் அத்தனை பேருடைய கதைகளையும் சிறுகதையாளர்கள் சில நூறு பெண்களின் கதைகள் வழியாகத்தான் பேச முடியும்.

              நல்ல தங்காளும் பாஞ்சாலியும் முத்துலட்சுமியும் ஜான்சிராணியும் கல்பனாசாவ்லாவை மற்றும் சிலர் வாழ்க்கைச் சம்பவங்களை வைத்துப் பேசுகிற சைவ வைதீக திராவிடப் பகுத்தறிவு சமூகத்தில் இப்படித்தான் கொஞ்சம் பெண்களைக் குறித்தும் பேசவேண்டும். விதியை நம்புகிற அளவிற்கு எந்த சமூகமும் பெண்களை அவர்களுக்கான இடஒதுக்கீடுகளை நம்புவதில்லை. இன்றும் ஊராட்சிப் பதவிகளில் பெண்களின் பின்னால் இருந்து கொண்டு அதிகாரத்தைச் செலுத்தும் பல்லாயிரம் கணவர்களின் சிறுகதைகளையும் மாரி செல்வராஜ் எழுதவேண்டும். எழுத முடியுமா தெரியவில்லை.

           சிறுகதைகள் வாசிப்பு நமக்குள் இறுக்கத்தையும் நாம் பால்ய காலத்தின் ஓட்டங்களையும் சிந்திக்க வைப்பவை. எனினும் வாசிக்கக் கிடைக்கிற வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. ஒரு வேளை வலியில்லாமல் வாசிப்பதற்கும் மனதில் எளியவிதமாக பதிவதற்கு ஏதேனும் சூப்பர் கம்ப்யுட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் தமிழ் வாசிப்பு மனமும் புத்தகங்களும் விற்பனை ஆகும் என நம்பலாம் அது வரை சிறுகதை எழுதுபவர்கள் காத்திருக்க வேண்டும் முடிந்தால் சூப்பர் கம்ப்யுட்டர் கண்டுபிடிக்கத் துவங்கவேண்டும். மாரி செல்வராஜ் கதைகள் காட்சி விவரிப்புகளில் தடங்கல்கள் இருக்கிறது. துண்டு துண்டாக ஒரு சம்பவங்களை கோர்ப்பது உறுத்துகிறது. மற்றபடி ஒரு கதையாளனை மிகவும் ஆர்ப்பரித்து வரவேற்க வேண்டிய காலத்தில் இருப்பதால் மாரியின் நூலை நாம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம். நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக