thdk; ghu;j;j fij- rpWfij- ,sQ;Nruy;;
அவன் சைக்கிளிலில்
இருந்தபடியே பேசினான். முள் தாடி. பறட்டைத் தலை. கண்களை உறுத்தும் அளவில் வண்ண
உடைகள். அவன் பேசுவது அவளுக்குக் கேட்கவே இல்லை. ஒவ்வொரு முறையும் ஊம் என்ன
சொன்ன..எனக்கேட்டு மீண்டும் அவள் அவனிடமிருந்து வார்த்தை வாங்குகிறாள். அதிக நேரம்
பேசமுடியாது. அதற்குள் மூட்டைப்புச்சியை நசுக்குவது மாதிரி பேசிக்கொள்ளவேண்டும். இரண்டு
மணி நேரம் மின் தடையின் இடைவெளியில் சில நொடி உரையாடல். இரண்டு மணி காந்து வெயில்.
ஆற்றோரத்து மணலின் தணல் வெம்மை. ஆயினும் அவள் கண்களிலிருந்து வரும் வெளிச்சக்
குளுமை அந்த வெயிலைக் கலையிழக்கச் செய்கிறது.
வழிந்து ஓடும் வியர்வையை வழித்துக்
கொட்டாமல் அவள் பேசுவதை அவன் ரசிக்கவே செய்கிறான். மரம் செடிகொடிகளில் சிறு அசைவு
இல்லை. வற்றிய ஆற்றின் அரையணாக் கயிறு போல ஓடும் சாக்கடையின் வீச்சம் அடிப்பது
அவர்களுக்குத் தோணவில்லை. அவள் அவன் சைக்கிள் கைப்பிடியைப் பிடித்தபடியே பேசுவதும்
அவள் கையைப் பிடிக்கப் போகும் போது எடுத்துக் கொள்வதுமாகக் கழிகிறது பொழுது. சாப்பிட்ட
உணவு. பார்த்த டிவி நிகழ்ச்சி நாளைய சந்திப்பு. அறிந்தவர்களால் வரும்
அச்சுறுத்தல்கள் பற்றியெல்லாம் விவாதிக்கிறார்கள். அவள் உடை, ஒப்பனை அலங்காரம்
பேசிவிட்டுப் பிரிந்து போனபின் உரையாடிய சொற்கள் தம்மை திரும்பத்திரும்ப தொந்தரவு
செய்வதாக அவன் சொல்கிறான். அவளுக்கும் அப்படியாக உணர்வதாகவும் தனித்து இருப்பதற்கான நெருக்கடிகள் அதிகமாகி
வருகிறதாகவும் அவள் தெரிவித்தாள். அவன் நம்முடைய உறவை யாருக்கும் அறியாத வண்ணம் காப்பாற்றி வருவதாகவும் தெரிவிக்கிறான்.
அவளும் அப்படியே சொல்கிறாள். ஆனால் அவர்களைச் சந்தித்துப் பேசுகிறவர்கள் “என்ன
விசயம்..பாத்தா அப்படித் தெரியலையே“என சந்தேகிப்பதையும் இரண்டு பேரும்
விவாதித்துக் கொள்கிறார்கள்.
அந்த உரையாடலுக்கு இடையிடையே அவன்
கைகளைப் பற்றவும் அவள் விலக்குவதும் தொடர்கிறது.
சரளை மண் பாதையில் சைக்கிள்காரர்கள் இருசக்கரம் கனரக வாகனங்கள் கூட கடந்து
போய்க் கொண்டிருக்கிறது. அதில் செல்பவர்கள் யாவரும் இவர்களைத் திரும்பத்திரும்பப்
பார்த்தபடியே செல்கிறார்கள். அவர்கள் பிரிந்து கொள்ள முடிவு செய்து நகர்கிறார்கள்.
அவன் நீ சைக்கிளில் ஏறிக் கொள் என்கிறான். அவள் மறுத்து நடக்கத் துவங்குகிறாள்.
அவளை நடக்க விட்டு பின்னால் மெதுவாக
சைக்கிள் செலுத்துகிறான். நீ போ நேரமாகிவிட்டது நான் சாப்பிட்டுவிட்டு திரும்பவும்
மி்ல்லுக்கு வர நேரம் சரியாக இருக்கும் நீயும் சாப்பிட்டு வா என்கிறாள். ஏழுநிலைபாட்டப்பன்
கோவில் தாண்டி இட்டேரி மதவு கற்சாலையின் திருப்பத்தில் அவன் அவளுக்கு பறக்கும்
முத்தம் தந்தான்.
அவள் அதை கவனிக்கவில்லை. சரியான மண்ணுக்குட்டு.
இனி அவனும் அவளும் ஒரு மணிநேர இடைவெளிக்குப்பின் மில்லுக்குள் பணியாளர்களாக
நுழைவார்கள். யாருக்கும் யாரும் அறிந்து விடக்கூடாது நமது சிநேகிதத்தை என்பதில்
உறுதியான ஒப்பந்த்துடன் இருக்கிறார்கள். வென்ற காதலைப் புனிதப்படுத்துவதோ ரகசியமாக
அனுபவித்துக் காப்பாற்றுவதோ எதுவானாலும் காரியம் முடியும் வரை பொறுப்பதே நன்று.
அவன் தன்னுடைய பனியனுக்குள் வைத்திருந்த
பழகிய கிராபாஜி புறாவை எடுத்து வீசினான். இன்றைய சந்திப்பு மகிழ்ச்சி வெற்றியின்
அடையாளம். அது இரண்டு மூன்று கரணங்கள் அடித்து அவள் செல்லும் திசைநோக்கி
அவளுக்குப் பாதுகாப்பாகப் பறந்து பின் தொடர்ந்தது.
”வாடா தர்மா”- சிநேகிதன் சோமன் வாஞ்சையுடன் அழைக்கிறான். பொழுதின் கரிச்சல் தீர்ந்து
குளுமையும் மசங்கலும் கவ்வியிருக்கிறது வாசல் முழுவதும். முப்பது நாற்பது
புறாக்கள். வகைவகையான சாதிப் புறாக்கள். தூவியிருந்த சோளக்குருணைகளையும்
அரிசியையும் கொத்தித் திண்கிறது. குட்ருக்கும் குட்ருக்கும் சந்த நயமான இசையழகு.
எந்த நோட்டுப்புத்தகமும் வைத்து எழுதாத இசைக்குறிப்புகள். இணைப் புறாக்களை கழுத்து
நுரைப்பொங்குத் தழும்ப வசியம் செய்யப் பாடுகிற ஆண்புறாக்களின் ஆரோகண அவுரோகண ராக
ஆலாபனை. சோமன் கையில் சில குஞ்சுகள் ஏறிவிளையாடவும் அவர் மேல் சில புறாக்கள்
உட்கார்ந்து எழுந்து பறக்கிறது.
தனக்குப் பக்கத்தில் பாதி அருந்திவிட்டு
வைத்த மோர் சொம்பை தர்மனிடம் நீட்டி இந்தாடா குடி என்கிறார். வக்காலி சரியா வர்றடா
உனக்கு நல்லா மூக்கு வேர்க்குதுறா என்றார். வாங்கிய தர்மன் மோர் சொம்பின் கடைவாயில்
தேங்கியிருக்கிறது. இந்தா நீயே முண்டு இதையும். நான் அம்மிணிகிட்ட வாங்கிக்கறன் தே
ஆத்தா மோர் கொண்டா என்கிறார். டேய் குட்றா மூட்டு வேற ஊட்ல இல்லை. அப்படியா
என்றவர் வெடுக்கென்று எடுத்து குடிக்கிறார்.
இத்தன உப்புப்
போடுவாங்களா வலுசு ஐம்பதுக்கு மேலன்னா கொறைச்சர்றனும்றா.
தர்மன் சோமனின்
பீடிக்கட்டை எடுத்து ஒன்று பற்ற வைத்துக் கொண்டே ரேடியோவைத் திருகினான். டேய் ஆப்
பண்றா. ஏன் என்றிட மறுபடியும் குண்டு வெடிச்சிருக்காம். ஐதராபாத்ல சும்மா அதயே
திருப்பித்திருப்பி சொல்லிட்டுருக்கு. பின்ன தயாரிச்சு வெச்சிட்டு பூசை பண்டவா
வைப்பாணுக..சினிமாபாட்டு வைத்தான்
“நாளை இந்த
வேளைதான் போய் வா நிலா“ பாடத் துவங்கியதும். சோமன் மெதுவா வெய்டா வயசுப்புள்ள
இருக்கற ஊடு பாட்டுவக்கிறான் பாரு. பழைய டிஎம்எஸ் பாட்டு வைடா.
பந்தயக் குஞ்சு என்ன சொல்லுது என்று
கருப்பு கிராபாஜி குஞ்சைக் கைளில் ஏந்திப் பார்க்கிறான். அத்தனை நெகுநெகு என்று
உள்ளங்கைகளை கிச்சு மூ ட்டுகிற பொங்குகளில் இலகு. மூக்கைப்பிடித்து இரண்டு பேரும்
இயற்கையின் படைப்பே படைப்புடா தர்மா. நான் சொன்னது மாதிரி சோடி சேத்து வைச்சதுல
எப்படி வந்திருக்குது குஞ்சு. இந்த டோர்ணமெண்ட்ல நம்மதாண்டா செயிக்கறம்.
ஆமாம்டா. நல்லா பறக்குது. இடையில எங்கயும்
உட்காரரது இல்ல. மிரள்றது இல்லை.புறாக் குஞ்சை தர்மன் மேல்நோக்கி வீசினான்.
இரண்டு கர்ணங்கள்
அடித்து அழகாக மேலெழும்பி கணத்தில் மேற்குத் தாவியது. அதே நேரத்தில்
சங்கிலிக்கிணறிலிருந்து 50.60 புறாக்கள் கிழக்கு நோக்கிப் பறந்து போகிறது.
ஏண்டா அறிவிருக்கா பொழுது இறங்கிருச்சு
இப்ப வீசற என்றான் இப்பப் பாரு என்றிட பா..பா. என்றதும் சங்கி அப்படியே காகிதம்
போல ஆடாக் கம்பத்தில் அமர்ந்து பின் தர்மன் வாசலில் அமர்ந்தது. வெரிகுட் என்றான்
சோமன்
ஆமாண்டா ஆடாவில
உட்காந்துதான் கிழே இறங்கணும் பாத்துக்கடா. அப்பறம் நாலு மணிநேரம் பறந்து வேஸ்ட்
ஆயிரும். நல்லாப் பழக்கியிருக்க.
அவள் வந்தாள். அவன் தர்மனைப் பார்த்துச்
சிரித்தாள். செந்தாமரை சிப்ட் முடிஞ்சுதா. ஆமாங்க்ணா. என்றாள். அவென்ங்க என்று தன்
மகனைத் தர்மன் கேட்க ஊட்டுக்குப்
போறாணுங். என்கிறாள். ஏம்புள்ள சம்பளஞ் சேத்திக் கேட்கலாமில்ல.120 ருவாய் எல்லா
வைச்சு என்ன திங்க முடியும் என்கிறார். அவள் தீவாளி முடிஞ்சு ஆளுகளுக்கு 20 ருவா
சேத்தரணும் சொல்றாங்க நாங்க 50 கேட்கறம். கேட்கறது கேட்கறீங்க 200 கேட்டாதான அவன்
150 குடுப்பான் கேட்கறதோ கம்மியா கேட்கறீங்களே..
சோமன் அவன்
கிடக்கறானு நீ போய் வேலையப்பாரு..இருக்கறத உட்டுட்டு பறக்கறதப் புடிக்கற
கதையாயிரு. குடுக்கறத வாங்கிட்டு ஒழுங்கா வேலைக்குப் போ. மாசமானா கிருமமா
சம்பளங்குடுக்கறானு ஆவ தேவைக்கு ஆயிர ரெண்டாயிரங் கொடுக்கறானு. டேய் தர்மா வந்தியா
மூடிட்டு உன்ற வேலைய மட்டும் பாரு. என்றான். நாமளும் முப்பது வருசமா வேல பண்றம்
என்னத்தக் கூலி ஏறிருக்கு வர்ற வரும்பிடிய வெச்சுத்திங்க வேண்டிதுதா. சும்மா ஆய்
ஆய்னு பறந்து என்னத்தக் கொண்ட்டு போறம் பொறகுக்கு..
உன்னய மாரி பயந்த
பேடிங்க இருக்கறதுனால தாண்டா சம்பளமே ஏறமாட்டங்குது. எனச் சொல்லிவிட்டு மறுபடியும்
பீடியைப் பத்தவைத்தார் தர்மன்
அவள் காபி கொண்டு
வந்து தந்தாள். வக்காலி எல்லா ஒசிலயே அமுத்துறா. பீடி மோர் இப்ப காபி..நானாட உன்ன
காபி பீடி குடிக்க வேண்டாம்கற. பெரிசா நூறு வருச வாழப் போற யோகி. உன்ன மாதிரி
ஆளுதாண்டா பொட்டு போய்ருவீங்க.. நாமல்லா கல்ல மாரி..தெரிமா..
அவள் ரேசன் வாங்கி வைத்த சக்கரை
சீமையெண்ணை கொண்டு வந்து வைக்கிறாள் அண்ணா எடுத்துக்கங்க ..அடடே அதிசயமா இருக்கே.
சோமா காசு வேற இல்லயே..சரி புள்ள நாளக்க அவன் கிட்ட குடுத்தர்றேன். சரியான
காரியக்காரண்டா உனக்குன்னு அமையுது பாருறா..உள்ளேயிருந்து மறந்த ரேசன் கார்டை
சோமனின் மனைவி வந்து தருகிறாள். அண்ணா நானு கெழவரந்தான் போறன் குடுங்க ஊட்ல
குடுத்தர்றன். வேண்டாம்மா தாயி ஏற்கனவே உன்ற பண்ணாடி நம்பள காயறான். சோமனோ குட்றா அவ
அங்கதான போறங்கறா. தே வர்றப்ப மொழுகுதிரி இல்ல வாங்கிட்டு வந்திரு.
இவ ஒருத்தன்
மெழுகுதிரி எதுக்குப்பா..காடாத்துணியச் சுருட்டு கோட்டர் பாட்டல்ல சீமெண்ண ஊத்திப்
பத்தவச்சா அது வருது ரெண்டு நாளு
தர்மன்
நியாயவியாக்யாணம் பேச
சோமனுக்கோ அப்ப மொழுகுதிரி செய்யறவன் பொழப்பு. நீ வாங்கிட்டு வாளே..
அவள் தன்னை சிங்காரித்துக் கொண்டு வாசலில்
இறங்கியபோது சோமன் எங்காத்தா மாலை நேர வெளில போற..வேல எதாச்சும் இருந்தாப்
பார்ப்பியா.
யேய் மூஞ்சில
குத்தவனாம்பா..போற புள்ளய எங்கனுட்டு. நீ போய்ட்டுவா என்கிறார் தர்மர். உனக்கென்றா
நாளக்கு ஒருத்தனுட்டுக்குப் பொழைக்கப் போறவ எனக்கெல்ல தெரியும் எங்கஷ்டம்..
அதல்லா எதெது
எதெது எங்கங்கன்னு யாருக்கு எங்க போட்டுவெச்சுருக்குன்னு யாருக்கும் தெரியாது.
அங்காத்தாளுக்குத்தான் தெரியும்.
அவனும் அவளும் மசால்பூரி சாப்பிட்டார்கள். தள்ளுவண்டிக்கடைகள் வியாபாரம்
சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.
விளக்கு
வெளிச்சத்தில் ஊர் தன் பகலுக்கான தவறுகளை நாளைவரை ஒத்திவைத்தது.
“பாரத் மாதாகி ஜே” என்ற விண்ணைப் பிளக்கிற கோசங்கள். இனிப்பு காரங்கள் அளித்தபடியே ஒரு கூட்டம்
வருகிறது. அவனிடம் இனிப்பு வழங்கினார்கள்.அவள் சற்று தள்ளி மறைவாக நின்று
கொண்டாள். என்ன விசயம் என்று கேட்க குஜராத்ல மோடி மறுபடியும் முதல்வராயிருக்கறாரு.
அவனோ யாருங்க என்றான் மறுபடியும் அவர்களோ ஏண்டா அறிவுகெட்ட நாய்ங்க்றது
சரியாத்தாண்டா இருக்கு பத்துவருசமா சிஎம்யா இருந்துருக்காரு தெரியலைங்கறயே போ போ
என்றான். வருங்காலப் பிரதமர் மோடி பாரத் மாதாகி ஜே என்றான். அவனோ
ஆமாமய்யா பிரதமரா வந்தாக் கிழிஞ்ரும். ஏற்கெனவே ஐஞ்சு வருசம் பிஜேபி ஆட்சியில
தமிழ்நாட்ல இருந்த காதி கதர் தொழில்களை அழிச்சுப் பெறவு எல்லாத்தையும்
வடநாட்டுக்குக் கொண்டு போய்ட்டானுக. ஏண்டா இந்தக் கதை தெரியாம அவிங்களுக்குக்
கொடிபிடிக்கறீங்க. தென்னிந்தியாவில குடிசைத் தொழில்கள அழிச்சதே அவிங்கதாண்டா..
இதெல்லாம் அந்தக் காவிப் பித்தனுகளுக்குச் சொல்லவேண்டும் என்று நினைத்தான் .
செந்தாமரையிடம் பேசவே அவனுக்கு நேரம் போதவில்லை. லட்டும் மிச்சரும் கூட
காவிக்கலரில் இருந்தது. பாரத் மாதாகீ ஜே என்றான் மறுபடியும் அவன் காதுகளுக்கு
அருகில். கூவும் போது கூர்ந்து கவனித்தால் திட்டுகிறானா..போற்றுகிறானா
எனத்தெரியவில்லை..
அவனுக்குள் மனசு .30 வருசமா சோதிபாசு சிஎம்மா இருந்ததை உனக்குத் தெரியுமான்னு கேட்க நினைத்து அவளைப் பார்த்தான் அவளோ
எதுவும் பேசாத என்றாள்.
அந்த இடத்தில் தான் சந்திப்பதற்கு சௌகரியம் நிறைய அடையாளம் அறிந்து கொள்ள
முடியாத வடநாட்டு இளைஞர்கள் வியாபாரம் செய்யும் இடம் யாருக்கும் எளிதில்
தெரியாதபடிக்கு மக்கள் புழங்கும் நெருக்கடியான பகுதி. அதுவுமில்லாமல்
குடியானவர்கள் இங்கெல்லாம் வரமாட்டார்கள் இங்கு வா எதுவானாலும் பேசலாம் என்றவன்
அவன்தான்.
வழக்கம் போல அதீத
அச்ச உணர்வு மேலிட உடனே கிளம்பிவிட்டாள். நான் சொன்னது எல்லாம் ஞாபகம்
இருக்கல்ல..எதுவும் எடுக்க வேண்டாம். கடைசியல இருந்து ரெண்டாவது பெட்டி நான் மேல
உட்கார்ந்து இருப்பன் சோமனூர் தாண்டியதும் எம்பக்கத்துல வந்துரு கோயில்ல எம் பிரண்ட்ஸ்க எல்லா ஏற்பாடோட
இருப்பாங்க.. பயந்துக்காத எதுவும் ஆகாது எல்லாம் சரியாப் போயிரும்.. ஏன்னா இந்த
புறா டோர்ணமெண்ட்ட விட்டா நாம தப்பிக்க முடியாது. உங்கப்பனும் எங்கப்பனுக்கும்
ரோசனை பூரா பந்தயத்திலயே இருக்கும்ப்பா. காலைல வேலக்கி வர்றமாதிரி வந்திரு..என்றான்
அவன்
அவள் கண்களில் சந்தோசமும்
பயமும் சரிசமவிகிதத்தில் தாண்டவமாடியது.
சுங்கம் மைதானம் களைகட்டியது. மொத்தம் 37 புறாக்கள். கிராபாஜி பந்தயம் நாளை
தவ்டால் பந்தயம். கிராபாஜி சாதி நான்கு மணிநேரம் தான் பறக்கும். தவடால் எட்டுமணி
நேரம் பறக்கும். தினசரி காய்கறி வியாபாரம் நடக்கும் வியாபாரப் பகுதியாதலால்
எங்கும் காய்கறிகளின் மணம் எருதுகளின் மணம்.
வசவு வார்த்தைகள் இடையிடையே சைக்கிள் காய்கரிகாரர்களின் இடைஞ்சல் செய்யும்
பயணங்கள் வேறு. வண்டிகளின் நுகத்தடிகள் இடப்பற்றாக்குறையால் மக்கள் நடமாடுவதற்கே
இடைஞ்சல் இதில் புறாப்பந்தயம். வக்காலிகளுக்கு வேற எடங்கெடைக்கலையா. போ வெண்டியதான
சினிமாக் கொட்டாய்க்கு.. நந்தாவனத்துக்கு என்று சுங்கம் காண்ட்ராக்டர் புலம்பிக்
கொண்டிருந்தார்.
புறாக்களை ஏதோ ராஜகிரிடத்தைப்
பாதுகாப்பது போல காத்துக் கொண்டிருக்கிறார்கள். சோமனும் தர்மனும் வெற்றி
நமக்குத்தான் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல உயர் சாதி கிராபாசிக் குஞ்சு
ஆறுமாத மான துடிப்பான குஞ்சு. புறாவின் தீர்க்கமான பார்வை பறந்து காட்டுவதற்குத்
தயாராக இருக்கிறது. புறாவின் இருபுறமும் அடையாத்திற்கு அடிக்கப்பட்ட வண்ண
சாயங்களின் அடிப்படையில் பெயர்கள் பதிக்கப்பட்டு பந்தயத்திற்குத் தயாரானது.
மைதானம் நேரம் ஆக ஆக சுற்று வட்டார புறாக் கூண்டுக்காரர்கள் நிறைய
ஆரம்பிக்கிறார்கள். சிலர் குடித்திருந்தார்கள். எல்லாரும் பந்தய அறிமுகம்
கொண்டவர்கள் தங்களுக்குள் உரையாடிக் கொள்கிறார்கள். வெற்றி வாய்ப்புள்ள புறாக்களை
வந்து பார்த்து ரசிக்கிறார்கள். அதன் வளர்ப்பைக் கேட்டு அறிந்து கொள்கிறார்கள்.
ஏழுமணியை இளங்காலை நெருங்கிக்
கொண்டிருந்தது. பந்தய நடுவர் மாவட்ட புறாப் பந்தய வளர்ப்பு பொறுப்பாளர் விதிகளை
எடுத்துறைத்தும் பரிசுகள் விவரமும் அறிவிக்கிறார். ஐந்து ஐந்து புறாக்களை சரியான
நிமிட இடைவெளியில் வீசப்பட்டது. எல்லாப்புறாங்களும் விண்ணில் ஏறிப்பறக்கத்
துவங்கியதும் ஆர்ப்பரித்தார்கள். சீட்டி விசில் சத்தம் பறக்கிறது. நடுவர்கள்
கூண்டுக்காரர்கள் எல்லாரும் சைக்கிள்களை எடுத்துக் கொண்டு பறக்கும் புறாக்களைக்
கண்காணிக்கத் துவங்குகிறார்கள். சில புறாக்கள் சுங்கத்தின் தாணிய வாடைக்கு
உடனடியாக உட்கார்ந்து கொள்ள உரிமையாளர்கள் கல்லெடுத்து கோபத்துடன் கத்திக் கொண்டு
விரட்டப்போக அவை தோற்றது என்று குறிக்கப்பட்டது. கண்டாரோலி வப்பாநோலி வசவு
வார்த்தைகளுடன் பாய்ந்து பாய்ந்து துரத்துகிறார்கள் தோற்றுப் போய் மானத்தை
வாங்கிக் காற்றில் பறக்கவிட்ட புறாக்களை..
புறாக்களைத் நாராசமாகத்
திட்டுவதைக் கண்டு காய்கறி வாங்க வந்த
பெண்கள் இந்த நாய்கள செருப்பலயே பிய்யத் தொவட்டி அடிக்கோணும்..என்கிறார்கள்
சோமனும் தர்மனும் சந்தோசம் கொண்டார்கள்
புறா ஏறிய வேகமும் பறக்கும் வேகமும் கர்ணமடித்த அழகைப் பார்த்தால் நிச்சயமாக டெபாசிட்
தொகை கிடைக்கம். முதல்பரிசான ஒருகிராம்
தங்கமும் ஐந்தாயிரம் பணமும் இரண்டாம் பரிசாவது கிடைக்கும் என்பது அங்கிருந்த புறா
வல்லுநர்களின் கணிப்பு. வானத்திலிருந்து நடுவர்களும் புறாக்காரர்களும் கண்களை
விலக்கவே இல்லை. வருவோர் போவோர் மீதெல்லாம் விழப்போகிறார்கள். பொதுமக்கள்
யாரக்கேட்றா பந்தயம் வெக்கறீங்க எனக் கண்டபடியாகத் திட்டுகிறார்கள்.
ஒரு மணி நேத்திலிருந்து உட்கார்ந்த
புறாக்களின் எண்ணிக்கை அதிகமானது. புறாக்காரர்கள் போச்சு ஆறுமாச வளர்ப்பு என்று ஓத்தா ஒம்மா வசவுகளைப் பொழிந்தான். வெறுத்துப் போன ஒருவன்
அப்படியே கழுத்தைத் திருகி வீசினான் மைதானத்தில். மாவட்ட பொறுப்பாளர் விதியை
ஞாபகப்படுத்தி இப்டி செய்தாய் என்றால் அடுத்த முறை போட்டிகளில் பங்கேற்க முடியாது
என்றார்.அவனோ போதையில் மூடிட்டுப் போடா உன்ற யோக்யதக் கொண்ட்டு. உடனே குறித்துக்
கொள்கிறார் அவர்.
புறாக்கள் ஒரு சில அதற்குரிய அந்தந்த
ஆடாக்களில் உட்கார்ந்தது. அதுபோலவே அவைஅவைகளின் திருட்டுத்தனமான இடங்களிலும்
அமர்ந்து ஓய் வெடுத்துக்கொண்டும் பறந்தது. பிற்பாடு அவைகள் குறித்து
போட்டியிலிருந்து விலக்கப்பட்டு முன்வைப்புத்தொகையை இழந்தது. முதல் ஐந்து இடங்களை
பெறும் புறாக்கள் தொகையைத் திரும்பப் பெறும் டொபாசிட் கிடைக்காதவர்கள் கேவலமாகவும்
புறா வளத்திருக்காம் பாரு என்றும் திட்டுவார்கள் என்பதால் பந்தய மைதான சுங்கத்திற்கே
மாதத்திற்கும் வரமாட்டார்கள்.
சோமன் தர்மனின் புறா டெபாசிட் பெறும்
வாய்ப்பைப் பெறுகிறது.அப்போது தர்மன் அவனைத் தூக்கிக் கொண்டாடினான்.ஐந்தில்
ஒன்றால் வானில் வட்டமடித்துப் பறக்கிறது. அப்படியே நிற்கிறது. வடிவ வடிவ அழகில்
கிழே விழுவது மாதிரி பிறகு அப்படியே நிற்பது போல கத்தியை வீசுவது மாதிரியெல்லாம்
பறந்து காட்டுகிறது. ஒய்வுப் பறத்தலை இறக்கைகளை அப்படியே கக்கத்தில் வைத்துக்
கொண்டு நிற்பதாக பிறகு தொப்பென்று கீழ் நோக்கி வர மறுபடியும் விர்றென்று ஏறு வதும்
பறத்தலை அனுபவித்துப் பறந்ததை புறா ரசிகர்கள் கைதட்டி கூச்சலிட்டார்கள். ஒரு
மனிதக் கூட்டம் பறவை ஒன்றின் பறத்தலை ரசிப்பதை யாரும் கண்டு கொண்டமாதிரி
தெரியவில்லை. சுங்கத்தின்
காய்ந்து போன காய்கறிக ளின் கூறுபோட்டு விற்கும் கடைகள் துவங்கி வியாபாரம் நடக்கத்
துவங்குகிறது.
அவளுக்கு அவன் தாலிகட்டும்போது அவள் ஓவென்று அழுதாள். வேண்டாம் கலியாணம்
என்றாள். கீழே சுவற்றோரம் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். பதற்றம் கொள்கிறார்கள். நண்பர்கள்
திகைத்தனர். டேய் அவளுக்குத் தைரியம் சொல்றா.. என்ன செந்தாமரை இப்பப் போய் வேண்டாங்கற.பாரு
பிரண்ட்ஸ் முன்னால அவமானப்படுத்தாத எழுந்திரு.. அவன் கெஞ்சுகிறான்.
அவள் கதறி
அழுதாள். நண்பர்கள் சமாதானப்படுத்த முனைய கோவிலிலி்ருந்த மற்றவர்கள் நிலமை அறிந்து
அங்கிருந்து நகரத்துவங்குகிறார்கள்.
என்னமோ ஏதோ விசாரிக்க அவர்கள் வர
ஆரம்பித்ததும் அவள் அழுது கொண்டே எழுந்து
நின்றாள். பிற்பாடு சில நிமிடம் காலஅவகாசத்திற்குப் பிறகு தாலியைக் கட்டினான்.
மகிழ்வு சூழ அவன் நிம்மதி பெருமூச்சு விட்டான். யானை பலம் ஆட்கொண்டதாக உணர்வு
பெற்றான். நண்பர்கள் வாழ்த்துச் சொன்னார்கள்
கைகுலுக்கினார்கள்.
கோவில் பூசாரி அவர்கள் தந்த அதிகபட்சமான ஐநூறு ரூபாயைத் தன் வேட்டிக்கட்டில்
சொருகி முடிச்சிட்டார். இது சக்தியுள்ள தெய்வம்மா அழாத தாயி.. அம்மா காலடியிலதான
நீ வந்து சேர்ந்திருக்க.. நல்லாப் பொழப்பப் பாரு. பதினாரும் பெற்று பெருவாழ்வு
உண்டம்மா.. என்று எலுமிச்சை திருநீறு சில துளசிச் செடிகளைத்தந்து
ஆசீர்வதிக்கிறார்.
மணமக்கள் சகிதமான நண்பர்களின்
வாகனங்கள் ஸ்ரீஅன்னபூர்ணா உணவகத்திற்குள்
நுழைந்தது. அவள் மறுபடியும் இரண்டாவது சுற்று அழுகையை துவங்கிப் பின் நிறுத்தவேயில்லை..
ஏன் என்பதை அவனால் உணர முடிந்தது. புறாக் கூண்டுக்காரனான அவன் வானத்தில்
ஏதெச்சையாக புறா சாக்கு பார்த்தான்
பல வெள்ளி
கிராபாஜிகள் தங்கள் ஆடாக் கம்பம் நோக்கிப் பறந்து கொண்டிருக்கிறது.
சோமனை புறாக்கூட்டமே தூக்கிக்கொண்டு ஆடியது. அதற்குள் தகவல்
இருகூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பண்ணெண்டு ஊர்களுக்கும் சேதி போய் சனம் சுங்கம்
வந்து வெற்றிவிழாவைக் காண்பதற்கு வந்தாகியது. நம்மூர் பெறாவே
செய்ச்சிருச்சாய்யா..நெசமா என்றார்கள். அபுர்வமான காரியம்தான் காரணம் இங்கு
விளைநிலங்கள் அதிகம்.. எந்த சாதிப் புறாக்கள் ஆனாலும் விரைவாக அமர்ந்து காரியத்தைக் கெடுத்துவிடும்.
எத்தனையோ வருசக்கனவை சாதித்தேவிட்டார்கள் சோமனும் தர்மனும். காலியாக
சுங்கத்திக்குள்ளாகவே எளிமையான விழா. மதிய வெயிலைப் பொருட்படுத்தாமல் சனம்
முச்சுடும் நிழல்தென்படுகிற இடுக்குகளில் நின்றபடியே வேடிக்கைப் பார்க்கிறார்கள்.
வென்ற புறாவை முத்தங்களால் மொச்சிச் கொண்டிருந்தான் சோமன். பறந்த
களைப்புத்தெரியாமல் விடு.. தலை இன்னும் பத்து நாள் பறக்கறன் உனக்கு வேண்டி என்பதாக
அந்தப்புறா வாயைத் திறந்தபடி வெக்கு வெக்கு என்று முழிக்கிறது.
பரிசை வாங்கும் போது கண்ணீர்
ததும்பியது. தர்மன் அழுதே விட்டான். வாழ்க்கையில உச்ச சந்தோசம்ங்கறது இப்படியா இருக்கும்.. வக்காலி
பத்து மூட்டை இருபது மூட்டை விளைச்சுக் கொண்டு வந்து அட்டாலியில் சோளத்தை
அடுக்கும் போது கூட இப்படி அனுபவச்சிதில்லயே.. பரிசுப்பணம் தந்தபோது. மாவட்டத்
தலைவர் நல்ல குஞ்சுறா சோமா..நல்ல சோடியாப் போட்டு சேர்த்து வைய்டா இத விட அபாரமான
குஞ்சுக பொறிக்கும்றா. என்று புறா வாழ்வு பற்றி அறிவுறுத்தி, வாழ்த்திவிட்டுப்
போனார். இது தர்மன் ஊராஊராக அலைஞ்சு திரிஞ்சு கொண்டு வந்த கிராபாஜிக்குஞ்சு.
நம்பிய நம்பிக்கை வீண் போகவில்லை. தர்மா என் மானம் மரியாத என்ற கனவு லட்சியம்
எல்லாத்தையும் காப்பாத்திட்டடா. நான் எப்படியெல்லாம் உன்னய எகத்தாளமும் கிண்டலும்
பண்ணியிருக்கறன்.. மனசாரச் சொல்றண்டா புறாப் பைத்தியகாரனுகனுட்டு ஏகடியம்
பேசுனவங்க முன்னால நாம சாதிச்சிட்டம்டா. போதும்டா இந்த கௌரிதி..
இந்தாடா
வெச்சிக்கடா உன்ற கூண்டுலயே இருக்கட்டும். என்றான். தர்மனோ அட நீ வேற போ ..அது
உன்ற கூண்டுல கு்ஞ்சில இருந்தே
வளர்ந்ததுறா எங்க கொண்டு போய்விட்டாலும் உன்ற கிட்டவே வந்துரும்றா.. வேணாம் என்று
கட்டாயப்படுத்திட..வற்புறுத்தி திணித்தான் கைகளில். புறா சச்சரவு கண்டு
அதிர்கிறது.
அவனோ சரி சொன்னாக் கேட்க மாட்ட என்று
நூல் வாங்கி இறக்கைகளைத் தைக்க ஆரம்பித்தான். (கண் திருஷ்டி மற்றும் மேலும் புறாக்
கூண்டுக்காரர்கள் திருடிக் கொண்டு போய்விடுவார்கள் அல்லது திட்டம் போட்டு
பிடித்துவிடுவார்கள் என்பதால் வெல்லும் புறாவிற்கு சில நாட்கள் இறகு தைத்து
ஓய்வெடுக்க வைப்பார்கள் அந்தப் புறா தனி கவனத்துடன் பராமரிக்கப் படும்)
சோமனின் புறா தர்மனின் புறாவாக
கூண்டுக்கு வந்தது. அவன் தான் வைடா கொஞ்ச நாள் இருக்கட்டும் இங்கயும் அங்கயும்
போகட்டும். அடுத்தாப்ல சுதந்திரதினம்தான பந்தயம். பாக்கலாம் நல்ல சோடி எப்படி
அமைதின்னு..என்றான் சோமன்.
சோமனின் மனைவி தலவாசலுக்கருகில் கண்ணக்கசக்கிக்
கொண்டிருந்தவள் இவனப்பார்த்தும் எழுந்து கொண்டாள். ஏண்டி சுங்கத்துக்கு
வந்திருக்கலாம்ல. இந்தாக் கொண்டு போய் வை என்றான். பணமும் ஒரு கிராம் தங்க நாணய
டப்பியையும். அவளின் முகமே சரியில்லை. பாத்திர பண்டங்களை உருட்டினாள். நான்கு மணி
வெயிலின் கருக்கம். கத்தி சிரைப்பால் தாடியெல்லாம் பற்றி எரிந்தது. காலையிலிருந்து
வெயில் வானம் பார்த்து அலைந்த அலைச்சல். புறாக்கள் பந்தய காலமானதால் வெளியில்
தீவனத்திற்கு எடுத்துவிடாததால் இவனைப்பார்த்ததும் அனத்துகிறது. சத்தமாக
குடுகுகிறது. குறிப்பாக ஆண்புறாக்களின் குடுகம் கடுமையாக இருக்கிறது.
கதவைத்திறந்து விட்டு தகரடப்பாவைத்
திறந்து குருணையை வீசினான் .ஆய் ஆய் என்று தீவனத்தைப் பறந்து பறந்து கொத்தியது.
மொலு மொலுவென்று புறாக்களின் மோதல்களும் இடித்துக் கொண்டும் கொத்திக் குலைந்து
சாப்பிடுகிறது சிலவை தண்ணீர்க்குடுவையில் குளித்து நீந்தியது. கோபக் காந்துடன் மனைவி
பெரிய மக்கிரிக் கூடையை எடுத்துவந்து புறாக்களை அடித்துவிரட்டத் துவங்குகிறாள்.
சோமனுக்கு விருட்டென்ற கோபம்.. அவளின் செயல் பைத்தியகாரத்தனமாகவும் இருக்கிறது
காலையிலிருந்து வயிற்றுக்குத் திங்காமல் பாவம் சாப்பிடும்பொது விரட்டுகிறாளே.
யேளெ கழுத முண்ட பெறாவ எதுக்குறி
விரட்டற..என்றபடி அவளைப் பிடித்துத் தள்ளுகிறான். இந்த நாசங்கெட்ட சாதிகள கொண்டு
திய வெச்சுக் கொளுத்துறா நாசமாப்போனவனே. அவனையும் சாத்து சாத்தினாள். அவனோ. என்றி
சும்மா துள்ளறே..எப்பப் பார்த்தாலும் பெறாவுகள வெறட்டது கத்தறது. என்று தள்ளினான்.
அவள் தலைதலையாய் அடித்துக் கொண்டு மிகச் சன்னமாக அழ ஆரம்பித்தாள்.
வெற்றியின் களிப்பில் இருந்தவனுக்கு ஏதோ
உரைக்கத் துவங்கியதும் கொஞ்சம் முதுகின் வழியாக வியர்வை ஆறாக இறங்கி புட்டத்தின்
வரியில் சள் என்று இறங்கி கீழே நிலம் நனையத் துவங்கியது. செந்தாமரை செந்தாமரை
என்று வீட்டுக்குள் கூச்சலிட்டவனைப் பின்னால் வந்து மனைவி கழுத்தோடு
சேர்த்துக்கட்டிக் கொண்டு ஊரே தூக்கும் அளவிற்கு கத்தி அழ ஆரம்பித்தாள்.
சோமனின் புறா அவ்வப்பொழுது வந்து ஆடாவில் அமர்ந்து போகும். தர்மனின் வீட்டிலும்
அமர்ந்து போகும் அது போலவே தர்மன் புறாவாக மாறும் போதும் சோமனின் ஆடாவில்
அமர்ந்துபோகும். இரண்டுபேரும் இப்போது அந்தப் பந்தயத்தில் வென்ற புறாவை
சீந்துவதும் இல்லை கேட்பாருமில்லை. அந்த வீதிக்கு பெறாக்கார வீதி என்று பெயருக்கு அழைத்தாலும்
அந்த எடத்தில் வீதியில் வெத்து ஆடாக்களில் கூட வக்காலி ஒரு பெறாவக் கூடப் பார்க்க
முடியாது இப்பொழுதெல்லாம் உங்களால் எங்களால் ஊர்க்காரர்களால்..