சனி, 6 ஏப்ரல், 2013


“அலைசுருதி சேர்ந்த உடல்“

பொன் இளவேனிலின் கவிதை நூல்
“பியானோ மிதக்கும் கடல்“ குறித்து

இளஞ்சேரல்

கிறிஸ்து யுகத்தின் தொடக்க ஆண்டுகளில் இலக்கியச் செயல்பாடுகள் பல்வேறு வடிவங்களை எடுத்தது. தட்டையான முழுக்கவும அவநம்பிக்கை குறித்தும் நம்பித்தான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தப் பட்ட பலவகையான மதஆதிக்க தேவாலயங்களை நிர்வகித்த மதகுருமார்களின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கைகள் தகர்ந்து போக ஆரம்பித்ததின் காரணம் மொழி தன்னை செழுமைப்படுத்திக் கொண்டதும் தான் காரணம். உலக மக்கள் தங்களின் மொழியை வடிவமைக்கப் பட்டதிற்குப் பிறகு சற்றேறக்குறைய பெரும் சரிவை மூடநம்பிக்கைவாதிகள் சந்திக்க ஆரம்பித்தார்கள். இப்போதைய அவர்களின் சுகபோக வாழ்விற்குக் கூட மொழியை வைத்துதான் சுகித்துக் கொண்டிருக்கிறார்கள். மொழியன்றி ஒரு சுக்கும் வேகாது என்பதை அறிந்து கொள்ளத் துவங்கியதே கூட இலக்கியத்தின் மகத்தான வெற்றிதான்.
       பேச்சு வடிவம் மாறி எழுத்துருக்கள் வாயிலாக சித்திரங்களின் வழியாக தனது துயரங்களை வடித்த பிறகும் அந்த சித்திரங்களே சொற்களின் உடலாகவும் மாறியது.
       செவ்வியல் மரபின் இந்திய மரபு கவிதைகளின் ஆதிமூலம் கதா சப்தாசாதி என்கிற நாட்டுப்புறப் பின்னணியில் காதலின் பல்வேறு வடிவங்கள் குறித்து பிராகிருத மொழியில் எழுதப்பட்ட 700 கவிதைகள் தனித்துவமிக் கதாகவும் நேர்த்தியாகவும் நுட்பமாகவும் எழுதப்பட்டது. ஆதி நவீன கவிதைகளில் மிகச்சிறந்த தொகுப்பாகும்.
      அது ஹாலா எனப்படும் புதிரான சாதவாகன மன்னரால் எழுதப் பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் ஆறாம் நூற்றாண்டு வரையிலும் அதில் பல செய்யுள் வசன கவிதைகளாக இடைச் செருகல்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. புத்தரின் வாழ்க்கை குறித்து எழுதப் பட்ட பல்வேறு பௌத்த கவிதை வடிவ செய்யுள் வடிவ நூல்கள் பிராகிருதமும் சமஸ்கிருதமும் ஒன்றோடு ஒன்று கலந்தன என்பதற்கு போதுமான சான்றுகள் இருக்கின்றன.
         இந்தக் கலப்புகள் அனைத்தையும் மீறி அனைத்து வகையான இலக்கிய வெளிப்பாடு களுக்குமான முதன்மையான ஊடகமாக சமஸ்கிருதம் உருவானது என்பதை காலமும் நாமும் மறுக்க முடியாததாகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் பதஞ்சலி மகாபாஷ்யாவை எழுதினார். பாணினி எழுதிய அந்நூல் இன்றும் இருக்கக் கூடிய மிக ஆரம்ப கால சமஸ்கிருத இலக்கணத்திற்கான விளக்கவுரையாகும். முந்தைய இலக்கண விதிகளுக்குப் பிற்சேர்க்கையாக பதஞ்சலி நவீனத்துவ காலத்தின் செயல்பாட்டின் அம்சம் கருதியும் எதிர்கால அரசியல் கருதுகோள்கள் குறித்தும் சில விதிகளை உருவாக்குகிறார்.
இதன் பொருள் என்னவெனில் இதற்குள் அந்தக் கால நவீன யுகத்திற்கு ஒரு மொழியின் பயண்பாடாக சமஸ்கிருதம் மாற்றதிற்கு உள்ளாகியிருக்கிறது என்பதாகும்.
         நவீன தமிழ் கவிதையின் தோற்றுவாயை எந்தக் காலகட்டத்திற்கும் பொருத்தலாம். சங்கமரபின் ஆழமே முழுக்க மன்னன் மக்களை நம்பி அரசாட்சி செய்ததும் மக்கள் அரசன் மீதும் அவன் நிர்வாகம் மீது வைத்த நம்பிக்கைகளும் தான் பாடுபொருளாக இருந்திருக்கிறது. அவனுக்கு இயற்கை உயிர்தோழன். உயிருக்கு இயற்கையே ஆதாரம் என்று உறுதியாக நம்பினான் அவனின் கடவுள் அந்தம் அல்ல அவன் கடவுள் தான் நேரில் தரிசிக்கும் மன்னனே கடவுள். தனித்த பெரும் மூலசக்தி கண்ணுக்கு அப்பால் ஒரு சக்தி என்றெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியையும் கருதவில்லை.
     அச்சுப் பொறி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து. விவசாயப்புரட்சிகள் காலத்தில் இருக்கும் மொழிப் பயண்பாடு பற்றியும் அந்தந்தக் காலத்திற்கு அந்தந்த கால நவீன செயல்பாடுகள் புதியதாக நவீனமாகவும் நிகழ்ந்தே வந்திருக்கிறது. நம்மிடம் இருந்த உழவுக் குதிரைகள் இல்லை. நாய்கள் தென்படுவது மாதிரி குதிரைகள் தென்பட்ட காலத்தை நாம் நினைத்துப் பார்க்கிறோமா. இன்றும் எழுதப்படும் ஐரோப்பிய இலக்கிய வகைமைகளில் குதிரைகளும் தவளைகளும் இடம் பெறாத சித்திரங்களே கிடையாது.
      இங்கு பொன் இளவேனில் கவிதை மேலும் ஒரு பழங்கால சித்திரத்தைத் தருகிறது.

ஒரு மாலையில் தான் நிகழ்ந்தது.

கூடி வைத்த சூத்திரங்களை
ஆடத் துவங்கியிருக்கிறது
கட்டங்களைத் தாண்டிக் கொண்டிருக்கும்
குதிரைகள்
காட்சிகளை மாற்றுகிறது
நகர்ந்து கொண்டிருக்கும் பொழுதுகளுக்குள்
பட்சியாய்க் கடக்கிறேன்
அழுத்தமான காற்றின் அலைகளுக்குள் எதிரே
நிகழ்ந்தபடியிருக்கும் தத்தளிப்புகள்
மீளத்துடிக்கும் வாழ்வேயாக நீண்டு கிடக்கும்
ஒரு மாலையில் தான் நிகழ்ந்தது
உதிரியாக வீழந்து கொண்டிருக்கும் இறகுகளில்
மீதம் இழப்பதற்கு முன்னமே
சிறுமியின் விரல்களால் அழியப்போகும் கோடுகள்
நேராகியிருப்பதைப் போல
கொண்டு முடிந்தது
ஒரு எளிதான ஒப்பந்தம்-பக்-32
          வணிகத் தலங்ளை நிர்மாணிப்பதற்காக வந்த கடல்சார்நாடுகள் மற்றும் தங்களின் தொழில் நுட்பஙகளை விரிவு படுத்துவதற்காக தரகர்களாக குத்தகைதாரர்களா வந்து ஒவ்வொரு நில எல்லைகளுக்குள் நுழைந்து நாடுபிடிக் கொள்கைகளின் மூலமாக காலூண்ற ஆரம்பித்தார்கள். ஆசைகாட்டுவதற்காக சிற்சில வணிக ஏற்பாடுகள்.சிற்சில பண்டமாற்று வியாபார யுக்திகளின் வாயிலாக எளிய ஒப்பந்தம் என்கிற வலையில் ரகசியமாகப் புரியாத மொழியில் உருவாக்கப்பட்ட இலக்கியப் பிரதிகள் போன்ற ஒப்பந்த ஷரத்துகளால் பிடுங்கப்பட்ட சிற்றரசர்களின் நிலங்கள் எத்தனையெத்தனை.
        ஒரு சிற்றரசின் எல்லை அதிகபட்சமாக சில ஏரிகள் சில கால்வாய்கள் சில மதகுகள் சில மலைக்குன்றுகள் அதை வைத்து விவசாயம் கால் நடைகள் என்று வாழ்ந்த இனக்குழு மக்களிடமிருந்து பிடுங்கி அவர்களை சிறைப்படுத்தி பெண்களை சூறையாடிய கதைகளும் காப்பியங்களும் நம்மிடம் உள்ளது.                    அதைப்பற்றிய நவீன கவிதைவடிவங்களில் பதிவாகியிருக்கிறதா என்று சல்லடை போட்டுதான் சலிக்க வேண்டும். இடதுசாரி இலக்கிய எழுத்துகளி்ல் மட்டும் அந்த துரோகங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இடதுசாரி திருத்தல்வாத இலக்கியக் குழுக்கள் மற்றும் மாவொ லெனினிய இலக்கிய வாதிகள் முழுமையாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
       இளவேனிலின் இந்தத் தொகுப்புக் கவிதைகளில் பெரும்பாலும் இந்த வகையான ரகசிய தாக்குதல்களைக் குறித்தே பேசியபடி செல்கிறது. அந்தத் தாக்குதல்களில் மனித மனதின் இருப்பு. அலைக்கழிக்கப்படுகிற விதிகள் குறித்தெல்லாம் தொடர்ந்து பேசுகிறார்.
      
        மொழியின் மாற்றம் சமூகத்தின் மாற்றம்.
மொழியின் வடிவம் மாறமாறத்தான் சமூகத்தின் எல்லா படிநிலைகளையும் மாற்ற முடியும் என்பதை மேற்கண்ட நிலையை வைத்து நாம் உணரலாம். கி,மு.200-கி.பி.200 காலகட்டத்தைச் சார்ந்த மனுஸ்மிருதியின் ஆதிக்கம் கோலோச்சி யிருந்த காலம். இந்த நூற்றாண்டுகளில்தான் பிராமணர்கள் சட்டப்புலமை வாய்ந்தவர்களால் எழுதப்பட்ட ராமாயணம்,மகாபாரதம் மற்றும் இதர புராணவகை வசனகவிதைவடிவங்கள் உருவாக்க த்துவங்கினார்கள். இரண்டு நிலைகளுக்கும் பொதுவான வடிவங்களில் நூற்றுக்கணக்கான செய்யுள்கள் வடிக்கப்பட்டது.
         பரதமுனி எழுதியதாகக் கூறப்படும் நாட்டிய சாஸ்திரம்தான் நாடகம்,நடனம்.இசை குறித்து எழுதப்பட்ட முக்கியமான முதல் நூலாகும். இதுவே கிருத்துவிற்குப் பிறகு எழுதப்பட்ட இலக்கிய வகைமையில் தொடக்க நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டதாக நவீன மறுமலர்ச்சியை விரும்பிய   அறிஞர்கள் வகையறை செய்கிறார்கள். செவ்வியல் பாணியில் எழுதப்பட்ட மிகப் பண்டைய சமஸ்கிருத கவிதை கனிஷ்கரின் சமகாலத்தவரும் பவுத்தருமான அஸ்வகோஷரால் படைக்கப்பட்டதாகும். புத்த சரித்திரம், என்கிற புத்தரின் வாழ்க்கை பற்றிய கவிதை நூலை அவர் எழுதினார். பிந்தைய இடைச்செருகல்களுடன் அது நமக்கு சங்க காலத்தில் நம்முடன் வாழ்ந்த பிராமணத் தமிழ்ப்புலவர்களால் வந்து சேர்ந்தது.
       அஸ்வகோசும் பாஷாவும் ஒரு அலங்காரமான நடையில் கவித்துவமிக்க சொல்லாடல்களால் எழுதினார்கள். இந்த வடிவமே அரசகுமாரர்களுக்காக அவனது பரிவாரங்களுக்காக அந்த வடிவங்களை எழுதினார். அப்போதிருந்தே சமஸ்கிருதம் ஒரு பகட்டான மொழியாக நிர்மாணிக்கப்பட்டு அரசவை மொழி மேலாதிக்க சாதிகளுக்கான மொழி என்று வடிவம் மெருகூட்டப்பட்டு ராஜ அந்தஸ்து தரப்பட்டது. இவ்விடத்தில் யாரும் எளிதில் அறிந்து கொள்ள முடியாதமைக்கு புரிந்து கொள்ள முடியாமைக்கும் மறைமுகமான ராசாங்க விசயங்களைப் பயண்படுத்துவதற்கும் சிக்கலான பொருள்கொண்ட வாக்கியங்களை உருவாக்க ஆரம்பிக்கிறார்கள்.

         அதிகாரத்தின் பல கூறுகளை வரிவசூல் மற்றும் நிதிப்பரிவர்த்தனை அவனுடைய விளைச்சல்களை மகசூல்களை அபகரிப்பதற்கு பல விதமான கணக்கியல் சூத்திரங்களை இந்தக்காலகட்டங்களில் தான் உருவாக்குகி றார்கள். ஏற்கெனவே பிராமணர்களின் ஏகபோக மொழியாக இருந்த சமஸ்கிருதம் படிப்படியாக ஆளும் வர்க்கத்தின் அரசாங்க மொழியாக உருவாக ஆரம்பித்தது. அரசாணைகள் கூட பகட்டான அழகியல் நேர்த்தியான நுட்பமாக சொற்சித்திர வடிவங்களுடன் வெளியாக ஆரம்பித்தது. செவ்வியல் நடையில் எழுதப்பட்ட மிகப்பழைய அரசாணை கிபி 150 சார்கார் மன்னன் ருத்ரதாமனால் எழுதப்பட்டது. அந்த மொழியில் தமக்கு இருக்கும் ஆளுமை குறித்து அவன் பெருமைப் பட்டுக் கொண்டான்.
  பின்னர் சமஸ்கிருதம் மேலும் மேலும் அதிகமா அரச சாசனங்களில் பயண்பாட்டுக்கு உபயோகப் படுத்த ஆரம்பித்ததும் மக்களின் உபயோகத் திலிருந்து விலக ஆரம்பித்தது. மிக அதிகமாகவே சமஸ்கிருத கவிதைகள் செய்யுள்கள் புராணங்கள் எழுதியும் தள்ளப்பட்டது. ஊக்கப் படுத்தப்படுதலும் ஆதரிக்கப்படுதலும் நடக்க ஆரம்பித்தது. மவுரிய சாதவாகன மன்னர்களால் தொடர்ந்து கடைப்பிடிக் கப்பட மக்களிடம் புழக்கத்திலிருந்த பிராகிருதம் அழியத் துவங்கியது
             கிபி மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளில் வட தமிழ்நாட்டிலும் அதையொட்டிய பகுதிகளிலும் ஆரம்ப கால பல்லவ ஆட்சியாளர்கள் தங்களுடைய செப்பேடு களைப் பிராகிருத மொழியில் தான் வெளியிட்டனர். தனித்துவமான தமிழ்மரபு இன்னும் உருக்கொண்டிருக்கவில்லை. அந்தக் காலத்தில் வட இந்திய இலக்கிய மொழி மரபிற்கு ஒரு மாற்று என்கிற நிலையை அது இன்னும் அடைந்திருக்கவில்லை.
          மதுரை உட்பட பல பகுதிகளில் உள்ள சமண பவுத்த குகைகளில் கண்டுபிடிக்கப் பட்ட எழுபத்தைந்தும் மேற்பட்ட  கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் எழுத்துருவுக்கான மிகப்பண்டைய சான்றாக விளங்குகின்றன. சமஸ்கிருத,பாலி, அல்லது பிராகிருத மொழிச்சொற்களைத் தமிழ் தனதாக ஏற்றுக்கொண்டதற்கான பல்வேறு உதாரணங்கள் அந்தக் கல்வெட்டுக்களில் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகள் கிமு.200 முதல் கிபி300 வரையிலான காலகட்டத்தைச் சார்ந்தவை. அதே காலகட்டம்ந்தான் மிகப் பழங்காலத் தமிழ் இலக்கியமான சங்க இலக்கிய வளர்ச்சியின் ஆரம்ப காலகட்டமுமாக இருக்கிறது
எனினும் இந்த சங்க இலக்கிய வளர்ச்சியானது சமஸ்கிருத இலக்கிய மரபைச்சாராமால் பின்பற்றாமல் சுயேச்சையாக வளர்ந்தது என்பது உலக மொழி வரலாற்றில் இன்னும் அதிசயத்தையும் பிரமிக்கவைப்பதாகவும் இன்றளவும் வளர்கிறது தமிழின் ஆதிக்கம். ஆனால் அதன் வளர்ச்சில் சுய தனிமையை நோக்கி நகராத வன்னம் படையெடுப்புகளும் இனக்குழு மொழிகளின் ஆதிக்கத்திற்குட்பட்டும் வளர்ந்தது. எனினும் சமஸ்கிருத செவ்வியல் இலக்கிய வடிவங்கள் யாவும் மக்களிடமிருந்து தனித்தும் மக்கள் வழக்கு மொழிக்குத்தள்ளியும் இருந்தது. ஒப்பீட்டளவில் சங்கத் தமிழ் செவ்வியல் மரபு மக்களின் சராசரி வாழ்வுக்கு உகந்ததாகவும் யதார்த்தமான மனிதர்களின் மொழியும் உழவு வாழ்வும் அவன் கருவிகளும் நீர் நிலைகளும் செய்யுள்களில் பாடல்களில் காப்பியங்களில் மிக நெருக்கமாக இருந்ததை நாம் இன்று மரபிலக்கியங்களை வாசிக்கும் போது உணரமுடிவதைக் காண்கிறோம்.

நவீன காலத்தின் இருண்மையான புதிர்களை நாம் விடுவிப்பதற்கு முயற்சிக்கிறோம். புதிதாக சிற்சில சதுரங்கக் கட்டங்களை உருவாக்குகி றோம். சிலவற்றை செயற்கையாக சிலவற்றை நுட்பமாக. நவீன காலத்தின் கவிஞனின் சொற் கள் சில சதுரங்கக் கட்டங்களை அல்லது ஆட்ட த்திற்கான வலைப்பின்னல்களை உருவாக்கு கிறது. அதுபோலவே சில செயற்கையாக.சிலவ ற்றை நுட்பமாக. இந்த அலுத்துப் போகாத துயரம் நிரம்பிய வாழ்வை ஒரு நாள் அடுத்த நொடி அறியாமல் காணாமல் போய்விடும் வெளிச்சத்தை கவிஞன் எழுதும் போது நமக்கு நாம் கண்ணாடியாக மாறுவதை உணர்கிறோம்.
        பொன் இளவேனிலின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு பல தீராத வாழ்வின் குழப்ப ங்களைப் பட்டியல் போட்டுத் தீர விசாரிக்கிறது.
நூல்கண்டிலிருந்து அற்றுப்போய்த் தனியே விழுந்த நூல் பிசிர் தான் நூல் கண்டுடன் இருந்து கழித்த வாழ்வைப் பேசுவது போன்ற வரிகள். நூல்கண்டுகளிலிருந்து நூல் பிரிந்து திரிதிரியாகி எல்லா நெய்விளக்குகளிலும் வெளிச்சப் பந்துகளில் ஒளிர்கிறது. கவிதையின் உண்மைச் சாளரம் திறக்கத் திறக்க நமது வாழ்வின் சுய அனுபவத்திலிருந்து நாமும் பல சம்பவங்களைத் திறந்து பார்த்துக் கொள்கிறோம்.
       ஒரு கவிதை ஏன் எழுதப்படுகிறது எனும் கேள்வியும் ஏன் எழுதப்படவேண்டும் எனும் கேள்விகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. உலக ஞானங்களுக்கு அப்பால் ஒரு மனித மனம் இயங்க விரும்புவதில்லை.ஞானத்தை அடைவதற்கோ மோட்சத்தை அடைவதற்கோ சாகாவரத்தைப் பெருவதிற்கோ மனிதன் தேர்ந்தெடுக்கும் முயற்சிகளில் தவிர்க்க வியலாதது இலக்கியம். பேரிலக்கிய வகைமை யில் பிரதிகளும் எழுத்தும் படைப்பாளியும் அவன் வாழ்ந்த சமூக ஏற்ற தாழ்வுகளில் போர்களில் போட்டிகளில் இழப்புகளில் துயரங் களில் செதுக்கியும் எழுதியும் வந்து இருக்கிறான்
           அவனுடைய முதல் தேர்வு போர்.பிறகு நிலம்.பிறகு பெண்கள் பிறகு எழுத்து
நீர்நிலைகளைத் தேடுதலும் சமூக நிலைகளில் முந்தைய மனிதனின் தோல்விகளை அறிந்து கொள்ள எழுத்துத் தடயங்களைத் தேடி அலைகிறான்.எலும்புத் துண்டுகள் போன்று அகப்படும் கற்பிரதிகளைக் கொண்டும் செப்புக் காசுகளைக் கொண்டும் மிருகங்களின் எலும்பு களை வைத்தும் தன் மூதாதையர்களை அறிந்து கொள்கிறான்.

மழை சப்தம்

நம்
மௌனங்களுக்குள்
பெய்து கொண்டிருக்கும்
மழை சப்தம்
மற்றும் தவளை இசை
இரவு
தனிமை
ஒரு கப் டீ---பக்-31
          மனித மனம் மிருகங்களின் மனதை விடவும் சாதாரணமானது என்று தான் கவிஞன் பேசுவான். ஐந்தறிவு என்று சுருக்கப்பட்ட உயிரிகளின் புலன்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ளுதல் தொடர்ந்து நிகழ்வதாகும். அவைகளின் புலனறிதல் நுட்பத்திலிருந்துதான் நமது உணவுத் தேவைகளை அறிந்து இருக்கிறேம். மொழியின் ஆழம் பற்றிய விரிவை நாம் பறவை களின் குரல்களிலிருந்துதான் அறிந்து கொள்கிறோம். மழையை சற்று முன்பு அறிந்து கொள்கிற பறவைகள் உயிரினங்கள் அந்த மகிழ்வை உணர்வுப் புர்வமாக ரசிப்பதும் அதனுடன் இயைந்து கொண்டாடுவதையும் கண்டுள்ளோம். மழையின் இசையும் தவளையின் உரையாடலும் ஏறக்குறைய வாத்தியக் கருவிகளின் நாதம் என்றே சொல்லவேண்டும். எங்கள் பகுதியி்ல் பழங்காலத்துக் குட்டைப் பகுதி என்று ஒன்று இருக்கிறது. இடிவிழுந்த பாறைகள் தூர்ந்து வெகு ஆழம்பாவிய குட்டை அது. பாசியும் கெட்டித்துப் போன அழுக்குப் பச்சை நீரும் புழுக்களின் வாடையெல்லாம் தீந்து போய் முற்றிலுமான தேங்கிய நீரின் வாடை அந்த நிலமெங்கும் வீசிக் கொண்டிருந்தது. ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வுக்கு அங்கு குடிசை போட்டு வாழத் துவங்குகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பாறைக்குழிகள் மூடப்பட்டு மனிதர்களின் வருகை அதிகமாகி குடிசைகள் வீடாகி பிறகு குட்டை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. மக்கள் தவளைகளாக இருந்து பிறகு மனிதர்களாக மாறினார்கள். அந்த நிலத்தை கூர்ந்து கவனித்தவர்கள் அறிவார்கள் அந்தத் தவளைகள்தான் மனிதர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதை. தவளைகளுக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இல்லைதானே கவிஞனுக்கு.
          இருபது வருடத்திற்கு முந்தைய தேங்கிய குட்டைப்பகுதியிலிருந்து பல்லாயிரம் தவளைகளின் இசையை ஊர் கேட்டு ரசித்து உறங்கியிருக்கிறது. விவசாயத்தை நம்பி வாழ்ந்த மக்கள் தங்கள் கால்நடைகளுடன் கால்நடை மிருகங்களாக வாழ்ந்த மக்களுக்கு தேங்கிய குட்டையும் அழுக்குப் படிந்த நீர்நிலைக்குளங்களும் தான் உயிர்வாழ ஆதாரமாக இருந்தது. அந்தக்குளங்கள்தான் மற்ற உயிர்களும் ஜீவனாக இருந்தது. அங்கு பறவைகள் வந்தது. இரவின் நிசப்தத்தை ஓங்காரமாக கலைத்த இசை தவளைகளுடையது.
       அந்தக் குட்டையின் மக்களும் தவளைகளுடன் இணைந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அந்தக் குட்டைப் பகுதியின் இளைஞன் இசைவிரும்பி அவன் தன் மேட்டு நிலப்பகுதியின் காதலியின் ஞாபகத்தைக் கிளறுகிறபோது இந்தக் கவிதை வருகிறது.
ஒரு வகையில் கவிதை பண்டமாக மாற்றப்பட்டு உதாசீனப் படுத்தப்படுவதை நாம் விமர்சனமாக வைத்தாலும் பண்டம் வெறும் பண்டமாக காலத்திலும் இருந்ததில்லை. பண்டத்தின் பின்புலத்தில் நிலவும் அரசியல் அதன் உருவாக்கம் பற்றி யோசித்தால் கவிதையை நாம் பண்டமாக மாற்றுவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. மழைக்காலங்களில் நாம் உண்ணும் உணவிற்கு விதிவிலக்கு இருக்கிறது.
உடல் மிக சூடாக சாப்பிட வேண்டும் என்று தோன்றும். உடல் குளிர்விக்கவும் உடல் சூடாக்கிக் கொள்ளவும் இயற்கையைச் சார்ந்திருப்பது போன்ற இலக்கியத்தையும் சார்ந்திருக்கிறது மனித குலம். இலக்கியத்தில் கவிதையை முழுதுமா சார்ந்திருக்கிறோம். பொன் இளவேனிலின் “பியானோ மிதக்கும் கடல்அளவில் சிறியது எனினும் உற்பத்தி செய்யும் சித்திரங்களும் காட்சிகளும் மிகபிராமாண்டம். திரும்பத்திரும்ப சலிப்பு கொள்ள வைக்கும் அவர் உபயோகப் படுத்தும் சொற்களிலிருந்து அவர் விலகினால் அடுத்த தொகுப்பு மேலும் பல நிலைகளின் உயரத்திற்குப் போகும்.
         கடுமையாக உழைக்கும் உடலுழைப்பு கொண்ட சாமானிய வாழ்வின் வாசகனுக்கு பீடி தீப்பெட்டி மாதிரியே கவிதை வாசகனுக்கு உசிர் நிலைபிடித்துத் தங்க மேலும் ஒரு கவிதைத் தொகுப்பு..

வெளியீடு
ஆசிரியர்.பொன் இளவேனில்
பக்-70-ரூ-70
அகத் துறவு
மனை எண்-19
சிவசக்தி நகர்
ஐந்தாவது தெரு
இருகூர்-கோவை-641103
96296 46320




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக