வியாழன், 25 அக்டோபர், 2012

ராமநாதபுரம் சிக்னலில் குழிதோண்டி கூடாரம் அமைத்தோம்
நானும் ராதாராணியும்..
இரவு உணவுக்காக நஞ்சுண்டாபுரம் சாலையில்
ஒரு சிற்றுண்டி விடுதியில் பிச்சை கேட்டு நிற்கிறோம்..
வீண்போகாத புரோட்டா இட்லிகள் கிடைத்தது
காத்திருந்தது வீண்போகவில்லை..
 
ராதாராணியிடம் நான்கு சாலைகளையும் ஒப்படைத்தேன்..
இந்த சிக்னலைத் தேர்வு செய்ததின் காரணம்
120 செகண்ட்கள் இங்குதான் மினுக்குகிறது..
ராதா மேலும் சில ஆடைகளை அணிந்து கொள்ளத் துவங்குகிறாள்..
அடப் பைத்தியமே எங்கு கண்டெடுத்தாய் இவ்வளவு
எனத் திட்டுறேன்..
அவளுக்குக் கதராடைகள் என்றால் கொள்ளைப் பிரியம்
 
இன்று என்ன பாட்டுப் பாடுவது..
இப்பொழுது நவராத்திரி சீசன்
எல்லோரும் 80 வருடத்திற்கு திரும்புகிறார்கள்
நாமும் திரும்புவோம் ராதா..
அப்போது நீ கதர் நெசவுகளில் ஈடுபட்டிருந்தாய்
நான் குதிரை வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்..
நாமிருவரும் இணைந்தபின் ஜவுளிக் கடை வைத்தோம்..
எல்லாவற்றையும் இழந்தோம்..
நமது சாலைகளும் நாம் செழிப்பாக வாழ்ந்த வீதிகளிலேயே
நம்மை தெரிந்தவர்களிடமே பிச்சை கேட்டு வாழ்கிறோம்..
 
ஆதலால் நீ” ராதையின் நெஞ்சமே கண்ணணுக்கு சொந்தமே” பாடு
நான் ”சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை” பாடுகிறேன்..
அவள் கோவை சாலையினை சேகரிக்கிறாள்..
எனக்கு கை மேல் பலன்
தங்க முலாம் பூசிய ஐந்து ருபாய் நாணயம் விழுந்தது
யாரோ புண்ணியவான் பாலமுரளிகிருஷ்ணாவின் ரசிகனாக இருக்கலாம்..
அல்லது பாலமுரளிகிருஷ்ணாவாகவும் இருக்கலாம்...

1 கருத்து:

  1. நான் புண்ணியவானா என்பதில் குழப்பமுண்டு,சர்வ நிச்சயமாகபாலமுரளி கிருஷ்ணாவின் ரசிகன்தான் என்பதை தானாக ஆடும் தலை சொல்லக் கூடும்.அது இப்போது சலாம் போடுகிறது....
    கூர்க்கா தன் விசுவாசத்தை காட்டும் விதமாக எஜமானனுக்கு பணிவோடும் மரியாதையோடும் சலாம் போடுவதைப் போல........பாலமுரளி கிருஷ்ணாவின் ரசிகன், இளஞ்சேரலின் ரசிகனாகவும் இருக்கக் கூடாதா என்ன?

    பதிலளிநீக்கு