செவ்வாய், 2 மே, 2017


யுகங்களின் புளிப்பு நாவுகள் . . . . .

மு.ஆனந்தன் கவிதைகள்

 

“ கொழுவு எருத்து “

இந்த மழைக்குப்

பேரன் ஏர் புடிக்கோணும்னு

அப்பாரு தீர்மானம்

 

நான்

ஏர் புடிக்கிற கூத்தப் பார்க்க

பழங்கஞ்சியும் பருகாமல்

பொழியில் தவங்கெடந்தாள் ஆத்தா

மருமவனுக்கு வெட்கத்தப் பாருன்னு

கேலி பேசினாள் அத்தை

 

காலில் வீழ்ந்து

உத்தரவு வேண்டியபோது

சூரிய பகவானைக் கும்பிட்டு

சோத்தாங்கையில் மேழியப் புடி ராசான்னு,

நிலத்தின் பாடலைக் கிள்ளி

நெற்றியில் திலகமிட்டார் அப்பாரு

 

கலப்பைய சாச்சிறாத கண்ணு

கொழுவு எருத்து பட்டுரும்னு

அவதானித்தார் அய்யா      --  பக்-24

 

           கவிதைகளின் வகைகளில் புதுப் பொலிவுகளும் நவீன தடங்களும் புலர்ந்தும் விரிந்து கொண்டேயிருக்கும். கவிதை முகாம்கள்,  முகாந்திரங்களும் தோன்றிக் கொண்டேயிருக்கும். ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டே இருக்க இருக்க, புதுப் புது படிமங்கள் படிந்து கொண்டே இருக்கும். ஒரு மழைக்கும் இன்னொரு மழைக்கும் வேறுபாடு உள்ளது.  வெளிச்சங்களின் தன்மையில் வேறுபாடு உள்ளது. நிழல்களின் தன்மையில் வேறுபாடு உள்ளது. முதல் தொகுப்புக்குரிய வசீகரமிக்க கவிதைகளைக் கொண்டிருக்கிற தொகுப்புகள் அரிது. இயல்பான வெட்கம், நாணம், குறுகுறுப்பு, குற்றவுணர்ச்சி, பயம், தெளிவின்மை, பதற்றம் இவையனைத்தும் கவிஞரின் முதல் தொகுப்பில் இருக்கும்.  ஒரு வேளை இதுவெல்லாம் இல்லையென்றால் அது கவிதைத் தொகுப்பு இல்லையெனச் சொல்லிவிடலாம். சில தொகுப்புகளில் சாதிய மேதமைச் செருக்கும், உணர்ச்சிகள் கொப்பளிக்கிற கோட்பாடுகள். வாசித்து முடிந்த பின்னர் உடனடியாக வீச்சரிவாளோ, நாட்டு வெடிகுண்டோ, பெட்ரோல் வெடிகுண்டோ எடுத்துக் கொண்டு ஸ்லோமோசனில் பறந்து போய் அநீதியை அக்கிரமத்தை வேறோடு அழித்துவிட்டுத்தான் மறுவேலை என்பதுபோல வாசகனுக்கு ஏற்படுத்துகிற தொகுப்புகளும் உண்டு.

      இந்த அபாக்கியமான உலகத்தில் எளிய மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது. குறிப்பாக தனி ஒரு கவிஞனால் பொதுக் களத்தில் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் கவிஞன் அதிகாரத்தையும் பொது அரசியல், அதிகாரப் பரவல் மூலம் பொதுக்களத்தைச் சுத்தம் செய்ய முடியும். கவிதையின் இயக்கம் மொழியின் சீரிளமையின் காலத்திலிருந்து நடப்பது. கவிதையால் என்ன பொது உலகத்திற்கு என்ன செய்யமுடியும் என அறிந்து கவிதைகளுக்குள் அந்தக் கவனத்தைக் கொண்டு வருவதே கவிஞர்களின் ஆளுமை இருக்கிறது. மு.ஆனந்தன் கவிதைகளின் வழியாக நான் அறிந்த பொது உலகம் இப்படியானதே.

வயதான பெற்றோர்களுக்கு நாம் செய்கிற மருத்துவப் பண்டிதங்கள் தற்காலிகமான ஏற்பாடுகள்தான். தவிர்க்கவும் முடியாது. குணமாகாது என்பதையும் நாம் அறிவோம். ஆனாலும் வயோதிகத்தின் பலன் வயோதிகம்தானே தவிர குணமடைந்த வாழ்வு அல்ல. மருந்துச் சீட்டு என்பதே கடைசி அத்தியாயக் குறிப்புகள்தான். மிஞ்சிவிட்டோமென்றாலும் துயரம்தான். பெற்றோர்களின் மருந்துச் சீட்டுகளைத் தூக்கிக் கொண்டு போவது என்பது அவர்களையே சுமந்து கொண்டு திரிவது போலத்தான்.

 

அம்மாவின் மருந்துச் சீட்டில்

மண்டிக் கிடக்கிறது

நீர்க்கருவைகள்

நீர்மத்திகளையும்

அத்திகளையும் தின்று...

 

நாட்டுக்கோழி- நாட்டு மருத்துவம் போல நாட்டுக் கடவுள் நிறைந்திருக்கிறார்கள். மு.ஆனந்தன் கவிதைகளில். அத்தனை நிலத்தின் கடவுள்களும் கவிதைகளில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள். இது நாட்டுக் கால நடப்பு. தேசிய இனங்களின் எழுச்சி கொள்கிற காலம். தேசிய மதிப்பீடுகளின் வாதங்கள் நீர்த்துப் போய் இனவெழுச்சியும் பூர்வீகக் குடி மனோபாவமும் அதிகரிக்கிற காலம் இது. கவிதைகளில் இலக்கியப் படைப்புகளிலும் சாமானியர்களின் சொற்கள் உரத்து ஒலிக்கிறது.

 

தற்காலத்தில் நேரடிக்கவிதைகளும் இயல்பான சம்பவங்களும் புதிர்களும் சுழலும் காலம். அகப்பாடல்களில் படிமங்கள் கற்பனையை விரிக்கும் வாசகனுக்குள்ள கவிதை மனதின் தரிசனங்கள் புதிய வாசிப்பு உற்சாகத்தைத் தரும்.  தமிழ்க்கவிதையின் செழுமைமிக்க படிமங்கள் மிகச் சிறப்பாக வந்த தொகுப்புகளில் இதுவும் ஒன்று.

ஆய்வுக்கூடத் தேர்வுத்தாளில்

என் பேனாக் கத்தி

வேரறுத்தெழுத

விடையெனச் சிதைந்து கிடக்கும்

சிறு தவளை

 

என் பெருமூச்சின்

உயிர் மொழி படித்துத்

தேர்ச்சியுற்று

பூஜுயத்தின் ஓடுடைத்துத்

துள்ளிக் குதித்தோடியது         --பக்-22

 

           முற்போக்கு எழுத்தாளர்கள் அமைப்பின் வழியாக அறியப்பட்ட கவிதைகளிலிருந்து முற்றிலுமாக வேறுபட்ட கவிதையியலைக் கொண்டதாக மு.ஆனந்தன் கவிதைகள் உள்ளது. அவருக்கான பொதுவெளி அடையாளங்களை முற்றாகத் தவிர்த்துவிட்டு கவிதையிடம் நின்றிருப்பது முக்கியமானது. கவிதைகளில் முற்போக்குக் கவிதை பிற்போக்குக் கவிதையெல்லாம் இருக்கச் சாத்தியமில்ல்லை. கவிதை கவிதைதான். கவிதைகளில் நவீன காலத்தின் அடையாளங்களும் பிரச்சனைகளும் இருந்தால் நவீன கவிதையாகும்.

தொகுப்பில் இடம்பெற்றாக வேண்டிய கட்டாயக் கவிதைகளை மு.ஆனந்தன் தவிர்த்திருக்கிறார். கட்டாயம் சமூக அவலங்களும் அதற்குக் காரணமான அரசியல்வாதிகள் மற்றும் அதற்கான தீர்வுகள் கோரிக்கைகள் முழக்கங்கள் பிரகடணங்கள் என எதுவுமற்ற தொகுப்பாக உள்ளது. மேற்சொன்ன கவிதைகள் மட்டுமே அடங்கி வந்த காலம் ஒருகாலம், அன்று சாப்பாட்டுப்பிரச்சனை மட்டுமே இருந்தது. பசியுடன் இராதே. இருப்பது ஒரே உயிர் போவதும் ஒரே முறை அது சாப்பாட்டுக்காகப் போகட்டும். அச்சம் தவிர் என்றோம். இன்று அப்படியில்லை. கல்யாண மண்டபத்தில் மிச்சமாகும் உணவைத் தூக்கிக் கொண்டு யாராவது வாங்கிக் கொள்ளமாட்டார்களா என அலைகிற காலம் இது. காரணம் வளர்ச்சியல்ல. இங்கு ஹைஜீனிக் முறை மற்றும் இயற்கை உணவு பற்றிய புரிதல்கள். கவிதை மொழியை மேலும் மேலும் ரசவாதம் ஏற்றுவது.

கவிதைகளுக்குள்ளாகவே முங்கி கவிதைக்குரியக் காட்சிகளைத் தன் வாழ்வின் சம்பவங்களிலிருந்து சேகரித்துக் கொண்டிருக்கிறவர்கள்தான் முழுநேரக் கவிஞர்கள். கவிதை எழுதுகிறவர்கள் அல்லது எழுதிவிட்டவர்களுக்கு எல்லாச் சம்பவங்களும் கவிதைக்குரியவையாகவே மாறிவிடுகிறது. அரசு என்னும் ஒரு முடிவுறாத சம்பவம் மட்டும் கவிஞர்களுக்கு பிரச்சனை செய்வதாகவும் அதன் இடர்பாடுகள் மிக்க செயலாக்கங்கள் கோபத்தை அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் கவிஞர்கள் உணர்கிறார்கள். ஒரு சமயம் இந்த அரசு என்பது மட்டும் அமையாமலிருந்து உன் பலத்திற்கு நீ பார்த்துக் கொள் அவன் பலத்திற்கு அவன் பார்த்துக் கொள்ளட்டும் என்பதான அமைப்பியல் வாய்திருக்குமேயானால் அங்கு கவிஞனுக்குரிய இருப்பு என்னவாக இருக்கும் என யோசிக்க வைக்கிறோம். மு.ஆனந்தன் கவிதைகளில் உள்ள சுயகெளரவ மொழி முக்கியமானது. இந்தக் கவிதையை வாசிக்கலாம்.

 

பதவிக்காய்சல் - நெடுங்கவிதையிலிருந்து..

 

நோயின் தீவிரத்தில்

கண்களிலுள்ள நேர்மை நரம்புகளில் சீழ்ப் பிடிக்கும்

பணப்பார்வை மட்டுமே செயல்படும்

மனிதாபிமான குழாய்களில்

கொழுப்புகள் படிந்து அடைப்பு ஏற்படும்.

 

நோய் முற்றும்பொழுது

முதுகுத் தண்டுவடம் முற்றிலும் பாதிக்கப்படும்

தரையைப் பார்த்து வளைந்துவிடும்

நிமிர்த்த இயலாது

 

இந்தக் காய்ச்சலுக்கு

தடுப்பூசியோ மருந்தோ

கண்டுபிடிக்கப்படவில்லை

 

 

ஆகவே பொதுமக்கள்

இந்த அறிகுறிகள் உள்ளவர்களிடம்

எச்சரிக்கையுடன் இருக்கும்படி

கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..-43

 

சுயத்தை இழந்து எப்படியாவது பொருள் சேர்ப்பதற்கும் அதிகாரத்தை கைப்பற்றி தங்கள் நிலவுடமை வர்க்க நலன்கள் இழக்காமல் பாதுகாக்க முனைகிற ஆதிக்கவர்க்க அரசியல்வாதிகளின் தன்மையை கவித்துவமாகச் சொல்கிற கவிதை இது. தமிழக அரசியல் சூழலில் நிலவுகிற அதிகப்படியான அடிமைமுறைக் கலாச்சாரத்தைச் சாடியிருக்கிறார். இதில் ஒரு கூத்து என்னவென்றால் நாங்களெல்லாம் ஆண்ட பரம்பரை, ஆளப்பிறந்தவர்கள்டா என மார்தட்டிக் கொள்கிற நிலவுடைமைச் சாதிகளைச் சார்ந்தவர்கள் கூட இந்த அடிமைமுறை அரசியலுடன் ஒன்றிப் போய்விட்டார்கள் என்பதை கவிஞர் குறிப்பிடுகிறார். ஏறக்குறைய இந்த அடிமை முறையைத் தொடர்ந்து பேணி வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் ஒரு வகையில் முடிவுக்குக் கொண்டுவந்தது என்றாலும் மறுபடியும் அதன் தொடர்ச்சியாக அந்த அடிமை முறை சாசனங்கள் அரசியலில் இருந்தே ஆகவேண்டுமென நிலவுடைமை வர்க்கம் நினைப்பதால் மீண்டும் அதே போல கலாச்சாரம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதால் அவர் வழியில் வந்த சசிகலாவும் பின்பற்றத் துவங்கியிருக்கிறார். ஆகவே கவிஞர் அரசியல் தன்மையில் சுய கெளரவமிக்க அளூமைகள் வரவேண்டுமென்று இக்கவிதையால் குறிப்பிடுகிறார். அதுமட்டுமின்றி பதவியை வைத்துக் கொண்டு பொறுப்பாளர்கள் நடந்து கொள்கிற விதமும் இங்கு விமர்சிக்கப்படுகிறது.

           நம் சமூகத்தில் பதவிக்காக நடக்கிற போட்டிகளும் அதே பதவிகள் கைப்பற்றப் பிறகு நடக்கிற அதிகாரவெறியும் கொடுமையானது. பதவிகளின் வழியாக சமூக மேம்பாடு என்பது போய் சொத்துச் சேர்ப்பு தன் முனைப்பும் பொருளீட்டும் விகாரமுமே அதிகமாகி வருகிறது. அறக் கோட்பாட்டு இலக்கியங்கள் காலங்காலமாக வலியுறுத்தி வருகிற கோட்பாடு இது. நவீன காலத்தின் கவிதைகளும் அந்தந்த காலத்தின் அரசியல் கூறுகளை விமர்சனம் செய்தே வருகிறது.

           மு.ஆனந்தன் கவிதைகளில் சமூகச் செயல்பாடுகளை மிகக் கடுமையான எள்ளல்களில் மூலம் விமர்சிக்கிறார். அதே சமயம் கவிதையின் நுண் அழகு கெடாமல் கவிமனதுடன் அணுகியிருக்கிறார். இயல்பானதுக்கும் அப்பால் வாசக மனதை சற்றே குழப்பத்திற்குள் இறக்கி யோசிக்க வைக்கிற வாக்கியங்களும் சொற்றொடர்களும் உள்ளது. மார்க்சீய படைபாளர்கள் பலர் இறங்கிப் பார்க்காத நுட்பமான துறை இது. மார்க்சீய படைப்பாளர்கள் கருத்தியலுக்கும் யதார்த்தவாதத்திற்கும் முக்கியத்துவம் தருவார்கள்.

தொகுப்பில் மனிதசகலமனைத்துமான உறவுகள் வந்து பேசிக் களித்து உறவு பேசி மகிழ்த்துப் போகிறார். குழந்தைகள், யோகிகள், துறவிகள், கைவிடப்பட்டவர்கள், துர்பாக்கியசாலிகள், அபாக்கியசாலிகள் உள்பட பலரும் தங்கள் நடவடிக்கைகளை நினைவூட்டுகிறார்கள். இந்தத் தொகுப்பில் தோழர் மு.ஆனந்தன் நண்பர் மு.ஆனந்தன் வழக்கறிஞர் மு.ஆனந்தன் சமூகவியலாளர் மு.ஆனந்தன் களப்பணியாளர் மு.ஆனந்தன் இவர்கள் யாருமில்லை. அல்லது இவர்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வண்ணம் கவிதை அணை போட்டிருக்கிறது எனலாம். தொகுப்பில் பல முக்கியமான புதிரான தலைப்புகளுடன் சில கவிதைகள் ஆச்சர்யம் தருகிறது. ன்னுக் குட்டி என்னும் கவிதை   கதாபாத்திரம் பற்பல யோசனைகளைத் தருகிறது. ன்னுக் குட்டி பல கவிதைகளுக்குள் நுழைந்து, பறந்து, அமர்ந்து வாசகனுக்குப் பாடம் எடுக்கிறது. தலைப்புகளும் புனிதமும் புதிரும் நிறைந்த கவிதைகளுக்குப் பொருத்தமாக உள்ளது. சில தலைபுகளே வாசகனை ஆச்சர்யத்துக்குள் மூழ்கடிக்கும் கன்னிமேரியின் தீட்டுத்துணிகள், நீர்ப் போத்தல், சொர்க்கரத ஓட்டுநரின் பிரயத்தனம், பிரபஞ்சி முலையூட்டுகிறாள். அம்மாக்களின் செவிப்பூக்கள், அப்பாவின் முலைகள். ஒரு உடலை வெண் துணியில் பொதிந்தளித்தல் உள்ளிட்ட தலைப்புகளும் கவிதைகளும் முக்கியமானது.

 

வாழ்த்துகள்... ஆசிரியர் மு.ஆனந்தன் - 94430 49987

வெளியீடு

அகநி-3 பாடசாலை வீதி-அம்மையப்பட்டு

வந்தவாசி-604408