திங்கள், 5 செப்டம்பர், 2016

ஜான் சுந்தரின் “ந க லி சை க் க லை ஞ ன் எனும் அ ச ல் க லை ஞ ன்“


ஜான் சுந்தரின்

“ந க லி சை க்  க லை   ஞ ன்    எனும்

அ ச ல் க லை ஞ ன்“

                                                        இளஞ்சேரல்

           

 

    கடைசியாக நான் எப்பொழுது மெல்லிசைக் கச்சேரி கேட்டேன் என்பதை நினைவுபடுத்திக் கொள்கிறேன். சுற்றிலும் காய்கறிக் கடைகள்.பேல் பூரி கடைகள்.கையேந்திபவன் வண்டிகள். வாழைத்தார் மண்டி, நாற்புறமும் பேன்சி ஸ்டோர்கள் மற்றும் சில்லிசிக்கன் கடைகள். நான்கைந்து மருத்துவர்களின் கிளினிக். காணாமல் போன பள்ளமும் இட்டேரியும் இவற்றிற்கு இடையில் கீபோர்டும் கிடார்களின் துவக்கநிலை சரளி வரிசை ஆலாபனைகள் துவங்குகிறது. ஒரே பாடகர் எஸ்பிபி யேசுதாஸ் டிஎம்எஸ்  சீர்காழி எல்லாமும் அவரே. “தென்னகமாம் இன்பத்திரு நாட்டில்..“ அவள் ஒரு நவரச நாடகம். பல்லேலக்கா..காவிரி ஆறும் கைக்குத்தலரிசியும்.இரவு நேரம் சுங்கம் மைதானம் இருகூர். அதிமுகவின் வெற்றிக்காக உள்ளுர் அதிமுக பிரமுகர்கள் ஏற்பாடு செய்திருந்த கச்சேரி அது. இன்னிசைக் கச்சேரி உள்பட நகல் கலைஞர்கள் தோன்றுகிற நடனமாடுகிற நிகழ்ச்சியும் கூட. நல்ல ரசிகர்கள் கூட்டம். எம் ஜி ஆர் நகல் நடிகர் ஒருவர் அசத்தினார். தாயில்லாமல் நானில்லை மற்றும் காஷ்மீர் பியுட்டிபுல் காஷ்மீர் பாடல்கள் உள்பட பல பாடல்களுக்கு வாத்தியாரின் நடிப்பை அப்படியே கொண்டு வந்தார்.   எம்.ஜி.ஆரின் உடல்மொழிகளை அவரின் பிரத்யேகமான பாவனை களை மிக அற்புதமாக வெளிப்படுத்தினார் அந்தக் கலைஞர் குறிப்பாக காஷ்மீர் பியுட்டிபுல் காஷ்மீர் பாடலுக்கு அவரின் அங்க அசைவுகள் உண்மையிலேயே எம் ஜி ஆர் எழுந்து வந்து விட்டாரோ. அதே பிரமை.. நேர்த்தியான நடன அளவுகளுடன் ஆடினார்.

           இப்படி அசலை ஒற்றியெடுத்து செய்யப்படுகிற நகல்கள் நமக்கு அறிவுறுத்துவது என்ன. ஒரு வகையில் நாம் அசல் ஆவணங்களை மிக வெளிப்படையாக எடுத்துச் செல்கிறோமா என்ன. யோசித்துப் பார்க்கிறேன்..அனைத்தையுமே நாம் நகல்களைத்தான் வைத்துக் கொண்டு மிக தைரியமாக போனால் போகட்டும் வேறொன்று எடுத்துக் கொள்ளத்தான் வாய்ப்பு இருக்கிறதே. துணிச்சலான தைரியம். இந்த அசல் தைரியத்தை நகல்கள் தருகிறது. யாவற்றிலும் நாம் முன்னிறுத்துவது அசல்களை அல்ல நகல்களையே முன்னிருத்துகிறோம் மன்னிக்கவும் அசலான நகல்களை..இவ்விடம் நகல்கள் என்பது அசல்நகல்கள் நகல் நகல்கள் இருக்கிறது என்பதை உணர்வதற்கான ஒரு அசலான வாய்ப்பு. அந்த அடிப்ப்படையில் நகல்களை நாம் நகல்கள் என்று விளிக்கிற பொழுது முதன்மைப் படுத்துகிற பொழுது கவனமும் நுட்பமும் கொள்ளவேண்டும் என்பதை இந்த நூல் நமக்கு உணர்த்துகிறது.

மெல்லிசைக்குழுக்கள் நடத்துகிற இசைக்கலைஞர்களின் வாழ்க்கைப் பின்புலங்களைப் பற்றிப் பேசுகிற நூல். மெல்லிசை என்பது அந்தக் காலத்தில் வானொலியில் சில தனிப்பாடல்கள் ஒலிபரப்புவார்கள். நிலைய வித்வான்கள் எனப்படுகிற குரல் கலைஞர்களை வைத்து சில நிகழ்ச்சிகளைச் செய்கிற விதம் ( இந்தக் குரல் கலைஞர்கள் என்பது தனிப்பிரிவு) இவர்களின் வாழ்க்கை பற்றியும் ஒரு நூல் வந்தால் தேவலை.இன்று நாம் மிகச்சிறந்த தமிழைக் கேட்பதே கூட குரல்கலைஞர்கள் என்பவர்களால்தான்..நமக்கு எஸ் என் சுரேந்தரா நினைவுக்கு வருகிறார் மைக் மோகன் தானே நினைவுக்கு வருகிறார்..போகட்டும்...நகலிசைக்கலைஞன் நூல் பற்றி பேசுவோம்

           தொலைக்காட்சிப் பெட்டியில் நூறு சேனல்கள் மற்றும் 24 மணி நேரமும் படங்களும் பாடல்களும் என்றான பிறகு மக்களுக்கு வெளியில் பொழுது போக்குவதற்கு வருவது என்பதே பெரும்பாடாகிவிட்டது. அவர்களுக்கு வீட்டிலேயே ஜிம்..மற்றும் வீட்டுக்குள்ளேயே எல்லா உடற்பயிற்சியும் என்றான பிறகு நடுத்தர வயது உள்பட எல்லா வயதினருக்கும் வெளியே வந்து சில பொதுக்காரியங்கள் உள்பட பல விழாக்களில் கலந்து கொள்கிற தன்மை அறவே போய்விட்டது.

ஜான் குறிப்பிடுகிற நகலிசையை நகலிசை என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை..அது அசலிசை என்றே குறிப்பிடுவதற்கு சான்றுகள் உள்ளது. உதாரணமாக நீங்கள் ஒரு ஆவணத்தை ஜெராக்ஸ் எடுக்கிறீர்கள் அதன் அசல் உங்களிடம் இருக்க அது அப்படியே வேறொரு தாளில் கருப்பு வெள்ளையில் உங்களின் கைகளுக்குக் கிடைக்கிறது. கவனியுங்கள் கருப்புவெள்ளையில். ஆனால் அசல் இசை எனப்படுகிற இசையோ அப்படியே மறுபடியும் கருவிகளால் மீட்டப்பட்டு உங்களுக்குத் தருகிறது.அதாவது மீண்டும் ஒரு இசைக்கப்படுகிறது. அந்த வகையில் நீங்கள் இசைத்தட்டுகளில் கேட்பதுதான் நகலிசை.புரியவில்லையா..இதோ இனொரு உதாரணம் நீங்கள் வானொலியில் டிவியில் கேட்பது நகலிசை நண்பர்களே..அதே நேரம் அந்தப் பாடலை இசைக்கலைஞர்களால் மீட்க கேட்டால் அது அசலிசை. அந்தப் பாடல் ஏற்கெனவே எழுதப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதோடு அதன் வேலை முடிந்துவிட்டது. இனியும் ஒரு உதாரணம் தற்பொழுது எஸ்பிபி யேசுதாஸ் சரண் விஜய்யேசுதாஸ் உன்னிகிருஷ்ணன் ஹரிச்சரண் கார்த்திக். நரேஷ் ஐயர்,ஜானகி .பி.சுசீலா பாடுவது நகலிசை என்பதை உங்கள் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது தானே..ஆகவே மெல்லிசைக் கலைஞர்கள் பாடுகிற பாடல்கள் அசல் பாடல்களே அது நகலிசை என்பதில் அடங்காது.

        அது நகலிசைதான் என்று வாதிட்டாலும் மேற்சொன்ன பின்னணி பாடகர்கள் பாடுவதும நகலிசைதான்.. இனிமேல் நீங்கள் அழைக்கும் போது அவர்களை பின்னணி மற்றும் நகலிசைப் பாடகர்கள் என்று டைட்டில் கார்டு போடுவீர்களா அப்படிப் போட்டால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா.

         மெல்லிசைக் கலைஞர்கள் தங்களின் பெருந்தன்மை காரணமாக தங்களை நகல் செய்கிறவர்கள் என்று சொல்லிக்கொள்ளலாம் நாம் அப்படி ஏற்றுக் கொள்ளமுடியாது. அது போலவே ஒரு பைக் பார்த்து இனி ஒரு பைக் செய்கிறார்கள் அது நகலாகிவிடுமா. இன்றைய தகவல் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான முறைகள் ஏன் ஏவுகணைகள் அனுகுண்டுகள் உள்பட ஒன்றைப் பார்த்து அதன் தொழில்நுட்பம் பார்த்து நகல் செய்யப்படுபவைகள் என்றுதானே பொருள். அப்படியானால் நகல் என்பது தான் என்ன..நகல் என்பது உடனடியாக அப்பொழுதே எளிய பொருட்செலவில் உண்மை மாதிரியே உருவாக்குவதன் பொருளே நகல். மெல்லிசைக் கலைஞர்கள் அந்தப்பாடலை இனியொரு முறை உண்மையாக இசைக்கிறார்கள் என்பதை நீங்கள் மறுக்கமுடியாது.உங்கள் முன்னால் மீண்டும் ஒரு முறை நிகழ்த்துகிறார்கள்..இப்படித்தானே பின்னணிப் பாடகர்கள் இசைக்கிறார்கள் இசையமைப்பாளர்கள் இசைக்கிறார்கள் சில நாட்களுக்கு முன்பு இசைஞானி இளையராஜா தொடர் இசைக்கச்சேரிகள் நடத்தினார்.அப்பொழுது டைட்டில் கார்ட் நகலிசைத் தொடர் என்றா சொன்னது. சரி நூலுக்குள் போவோம்.

       வாத்தியக் கலைஞர்களின் குடும்பப் பின்னணி நமக்கு வெளிச்சமாகிறது. அவர்களால் வேறு தொழிலுக்குப் போகவும் முடியாது. பொதுவாக சீசன் இல்லாத நாட்களில் முகூர்த்தம் கோவில் கொடை திருவிழாக்கள் இல்லாத மாதங்களில் கச்சேரிகள் ஏற்பாடு செய்கிற மற்ற மூத்த கலைஞர்களுடனான உறவுகள். அவர்களால் தரப்படுகிற குறைவான சம்பளங்கள். அவர்களின் தொடர் திரைப்பட முயற்சிகள் அதன் வழியாக ஏற்படுகிற தோல்விகள். அர்ப்பணிப்பு உணர்வுமிக்க இசைவாழ்க்கை. அவர்களின் அபாரமான ஞாபகத்திறன். இசைக்குறிப்புகளுக்கு ஏற்ப சரியான அளவில் மிகச்சரியான தருணத்தில் அசலைவிடவும் அதிகசமயம் நேர்த்தியாகப் பாடி கைத்தட்டல்கள் பெறுகிற அசாத்தியம். ஜான் இந்த நூலில் சிற்ப்பாக பதிவு செய்திருக்கிறார்.

   இசை விமர்சகர் தொகுப்பாளர் ஷாஜியின் கட்டுரைகளில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்கள் பின்னணி பாடகர்கள் அவர்களின் வெற்றி தோல்வி அனுபவங்கள் மட்டுமே பதிவாகியிருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் கட்டுரைகள் நூலாக வெளியானால் அதையொட்டி மாநிலம் முழுமைக்கும் உள்ள பல மெல்லிசைக்கலைஞர்கள் பற்றிய பல பதிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது. ஆகவே உங்கள் நூலை எதிர்பார்க்கிறேன் என்பதை அவரிடம் உரையாடல்களின் வழியாக கேட்டுக் கொண்டதுண்டு. அந்த அபிலாஷையை அவர் நிறைவேற்றியதற்காக நன்றி. ஜான் பல பிரபலமான பாடகர்களின் குரல்களில் பாடுவதில் நுட்பம் கொண்டவர். மலேசியா வாசுதேவன்.புஷ்பவனம் குப்புசாமி,ஜெயச்சந்திரன்.சிதம்பரம் ஜெயராமன், கார்த்திக்,உள்ளிட்ட பலரின் மாடுலேசன்களில் பாடுவது சிறப்பு. உங்களுக்கு எஸ்பிபியின் பாடல்கள் மற்றும் டிஎம்எஸ் பாடல்களை நன்றாக பயிற்சி எடுத்துவிட்டாலே மற்ற பாடகர்களின் பாடல்கள் கைகூடிவிடும். குறிப்பாக தமிழின் மகத்தான குரல்களான மகாதேவன்  சீர்காழிகோவிந்தராஜன், கே.பி.சுந்தராம்பாள் சங்கர்மகாதேவன் குரல்களைப் பயிற்சியின் பொழுதே மேற்கொண்டுவிடுவதும் பல சவாலான பாடல்களைப் பாடுவதற்கு உகந்த தாகவே இருக்கும்.

         பொதுவாக திரைப்பட வாய்ப்புகள் என்பது கோரஸ் பாடி பிறகு டிராக் பாடி பிறகு டம்மி பாடி அதன்பிறகு எப்பொழுதாவது மெயின் பாடகருக்கு நோவோ பெருநோக்காடோ கண்டுவிட்டால் அதிசயமாக டம்மியோ டிராக்கோ பாடுபவருக்கு ஆச்சர்யமாக வாய்ப்பு கிடைக்கும். இந்த இடத்தில் முப்பதாயிரம் நாற்பதாயிரம் பாடல்கள் பாடியவர்கள் எத்தனை இசைக்கலைஞர்கள் மெல்லிசைப் பாடகர்களின் வாயில் மண் போட்டிருப்பார்கள் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்.  வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் வென்றாலும் வெல்லாவிட்டாலும் கலைஞன் கலைஞன்தான். பணமும் புகழும் கிடைக்கும் வாய்ப்புகளைப் பொருத்தது. வாய்ப்புகள் என்பது சாதி மதம் பணம் அந்தஸ்து அடியாள் பலம் சூதுவாது இவையெல்லாம் நிர்ணயிக்கிற சக்திகளாகும். இவைகள் யாவும் ஒரு கலைஞனின் திடத்தையோ கலையம்சத்தையோ குறைத்துவிடுகிற சக்திகள் அல்ல. கலைஞன் என்பவன் வறுமையும் தோல்விகளும் சூழச் சூழ அவன் தன்னையும் தன் கலையையும் மேம்படுத்திக் கொண்டேயிருப்பான். ஒரு கலைஞன் தான் ஒரு கலைஞன்தான் என்பதை உணர்ந்து கொள்ளத் துவங்கியதில்லை அவன் தோல்வி ஆரம்பமாகிறது. தோல்விகளும் நிராகரிப்புகளும் தழுவத் தழுவ அவன் கலை பரிபூரணத்துவம் கொள்கிறது. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் அல்ல. கர்த்தர் பொறாமைப் படுகிற அளவிற்கு கலை வளர்வதே ஞானத்தின் வெற்றி.

              மெல்லிசைக் கலைஞர்கள் அஷ்டாவதானிகள். அவர்கள் பல இசைக்கருவிகள் வாசிப்பார்கள். சமயத்திற்கு உதவும். சக கலைஞர்களுக்கு ஓய்வு கொடுக்க உதவுகிற கலைமனம் அது. கௌரவம் பார்க்காமல் மொராஸ் சுற்றுவார்கள்.தேநீர்வாங்கிவருவார்கள். ஒரு சமயம் ஒரு எஸ்பிபி தேநீர் பார்சலுக்குக் காத்திருந்தபோது சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பதை கிராமத்து மங்கைகள் ஆசையாகப் பார்ப்பதை நாங்கள் வெறித்தோம். பாடகர் பாடகிகளுக்கு இருக்கிற கிராமிய செல்வாக்கு என்பது அற்புதமானது. எல்லா இளைய மனங்களும் சுவற்றில் மைக் பிடித்தவாறு ஒரு போஸ் கொடுத்துப் பார்த்துக் கொள்ளாத மனமும் உண்டோ.

      தற்காலச் சூழல்கள் எத்தனையோ நவீனம் புகுத்தப்பட்டிருந்தாலும் இன்றும் தமிழக கிராமங்களில் திருவிழாக்களில் நிச்சயமாக மெல்லிசைக் கச்சேரிகள் இருக்கவே செய்கிறது. அவர்களால் மெல்லிசையைத் தவிர்த்த ஒரு திருவிழா நிறைவு பெறாது. பாடகனோ பாடகியோ அத்தனை அழகாக இல்லாவிட்டாலும் அவர்களைப் பார்த்து அவர்களின் திறமைதான் உலகின் அதிகபட்ச திறமை என்று வியக்கிற கிராமிய உள்ளங்கள் இருக்கும் வரை மெல்லிசைக் கச்சேரிகளை மெல்லிசைக் கலைஞர்களை அவர்கள் கைவிடமாட்டார்கள்.

    ஜான் சுந்தர் தனது நூலில் பதிவு செய்யப்பட்ட பல தகவல்களில் முக்கியமானது மிகவும் வெற்றிகரமான பாடகர்களாக பின்னணி பாடகர்களாக வந்திருக்க வேண்டிய பலரின் சமகால வாழ்க்கை பற்றியது. வெளியிட்டு விழாவில் பேசிய சுகுமாரன்,கே.என் செந்தில்,ரவீந்திரன்,க.வை பழனிச்சாமி உள்பட பல ஆளுமைகளும் இந்த பெருந்துயரத்தைக் குறிப்பிட்டார்கள். இது எல்லா கலைப் பிரிவுகளில் நடந்து வருவதே.

       இன்றும் தொழில் முறைக் கலைஞர்களுக்கான வாய்ப்பு என்பது இசைக்குழுக்களிடையே இருக்கிற புரிந்துணர்வுகளின் காரணமாகவும் தங்களுக்கு அமையும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்கிறபடியால் ஓரளவு அவர்களின் திறமையும் வாய்ப்புகளும் நிலைநிற்கிறது. அவர்கள் மக்களின் ரசனைக்குரியவர்கள். எளியமக்களின் விருப்பத்திற்குரியவர்கள். அவர்கள் முதல் மூன்று பாடல்கள்தான் கடவுளுக்குப் பாடுகிறார்கள் மீதிப் பாடல்களை மக்களுக்காக பாடுபவர்கள் இசைப்பவர்கள். இந்த தொகுப்பு மெல்லிசைக் கலைஞர்களின் மீது கவியாமல் இருந்த அன்பை பொழிந்து கொள்ள வைத்திருக்கிறது. இலக்கியப் படைப்புகளுக்குரிய மொழியைத் தன் படைப்புக்கு ஜான் பயண்படுத்தி சிறிதும் சுவராசியம் குன்றாதவரை சரளமாக வாசிக்கவைத்திருக்கிறார். பெருஞ்சோகம் பேசுகிற பொழுது கொஞசம் சிலாகிப்பும் குதூகலம் தேவையே என்பதால் காட்சிகளில் சில இடங்களில் தூக்கலாக நமுட்டுச் சிரிப்புகள் வரவழைக்கிறவை.

                     வாழ்க்கை பற்றிய அறிதல்கள் கொண்டவர்களாக அமையப் பெற்றவர்காக இந்த நாற்பது வயதிலிருந்து ஐம்பது வயது கொண்டவர்கள் எனலாம். அது என்ன வாழ்க்கையை அறிவது. மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாதா. என்றால் இருக்கிறது நண்பர்களே இவர்களே வீடியோ கேஸட் மற்றும் 60-90 ஆடியோ கேஸட்டிலிருந்து டெக் எடுத்து கல்யாண வீட்டில் மெல்லிசை முடிந்து இரவுகளில் படம் பார்த்த கோஷ்டி. இவர்கள் கண் முன்னால்தான் இப்பொழுது ஒரே பென் டிரைவில் ஓராயிரம் பாடல்களை வைத்துக் கொண்டு ஒரு பாடலும் ஒழுங்காக கேட்க முடியாத யுகம் இது. இந்த வளர்ச்சியை ஆதிமுதல் இன்று வரை இந்தவயதினரால் அறிய முடிவதால் ஒரு ஒப்பீடு அவ்வளவுதான். எம் ஜி ஆர் ஆட்சியைப் பிடித்த தும். எண்பதுகளில் இலங்கையில் துவங்கிய கலவரங்களும் எண்பத்தி நான்கில் இந்திரா படுகொலையையும் தொண்ணூற்றி ஒன்றில் ராஜீவ் படுகொலையும். எம்ஜி ஆர் என்டி ஆர்,சிவாஜி நாகேஷ்,தங்கவேலு, ஏ கருணாநிதி. தேங்காய் சீனிவாசன் உள்பட பல கலைஞர்களின் எழுச்சி வீழ்ச்சியைக் கண்டவர்கள் இந்த வயதினரே. குறிப்பாக தனது டீன் ஏஜ் வயதுகளை எண்பதுகளில் பெற்ற வயதினரால் மிக எளிதாக தமிழ் நாட்டின் பொற்காலம் என்ன என்பதை உணர்கிற தருவாயாகும். இவர்களுக்கு எல்லாம் மிகவும் ஞாபக அலைகளை உருவாக்குகிற படைப்பாக “நகலிசைக்கலைஞன்அமைந்துள்ளது.

          ஆர்க்கெஸ்ட்ரா கச்சேரிகளுக்காக கோவையின் இருபது கிலோமீட்டர் சுற்றளவு கிராமங்களுக்கு சைக்கிளில் பேருந்தில் நடந்தும் சுற்றி சுற்றி கேட்ட அனுபவங்கள் மறக்கக் கூடியதா. இருகூரிலிந்து சைக்கிளில் வெள்ளிங்கிரி மலைக்குப் போகிறேன் பேர்வழி என்று கிளம்பி ஆங்காங்கு சிவராத்திரி மெல்லிசைக் கச்சேரிகள் கேட்டுவிட்டு மூங்கில் கடையில் சிறு கை மூங்கில் வாங்கிக் கொண்டு ஊர் திரும்பி நான் வெள்ளிங்கிரி மலைதான் போய்வந்தேன் என்று சொல்லி காலில் ரத்தக்கட்டு விழுந்ததைப் போல இளைஞர்கள் நடந்து திரிந்த காலங்கள் மறக்குமா..

      பொதுவாக நமது ரசிகமணிகள் கதாநாயகர்கள் அழும் காட்சிகளில் தம் அடிக்கப் போவதுண்டு. டுயட்பாடுகிற பொழுது செல்வது நம் மரபு என்பதை அறிவீர்கள். ஆனால் குணசித்திரநடிகனோ,நகைச்சுவைக் கலைஞன்  சோகமாக நடிக்கிற பொழுது அப்படியே நம்பிக் கொள்வது நம் மக்களின் ரசனை. இந்த சொல்கதை மொழி கலையை பாசாங்கு அல்லாமல் கொண்டாடுகிற படைப்பாளியால்தான் எழுத முடியும். அது இந்த நூலில் ஜானுக்கு கைவந்திருக்கிறது. வாழ்க்கையை கலையால்தான் பிரதிபலிக்க முடியும். அறிக்கை வேறு. படைப்பு வேறு. ஆனால் கலையும் கலைஞனும் ஒன்றும் ஒருவராவார்கள்.

      ஜான் ஏற்கெனவே புகழ்பெற்ற கலைஞர். எளிய ஏழை மக்களின் கைத்தட்டல்களைக் கேட்டும் ரசித்து அவர்களுக்காக மேலும் பல விருப்பப் பாடல்களைப் பாடி மகிழ்விக்கிறவர். எனினும் இந்த தொகுப்பு வழியாக அவர் அடையப் போவது வேறுமாதிரியான புகழ். புதிய புகழ். மெல்லிசைக் கலைஞர்களுக்காக அவர்களின் கலை ஆர்வத்தை மேன்மையை எழுதியவன் எனும் புகழ்..இது அவருக்கு அதிகமாகப் பிடித்துப் போகிற புகழ்..

இளையநிலா ஜான்சுந்தர் என்னும் அசல் மெல்லிசையை வாழ்த்துகிறேன்.. என்றென்னும் ரசிகமனத்துடன்..

 

“நகலிசைக்கலைஞன்மெல்லிசைக் கட்டுரைத் தொகுப்பு

ஆசிரியர்- ஜான்சுந்தர்

வெளியீடு-காலச்சுவடு-கே.பி சாலை-நாகர்கோவில்

தொடர்புக்கு 98422 13012