காலத்தின் நேர்முக வர்ணனையாளனின் நாட்குறிப்பு
ஆன்மாவின் நிரல்களின்
கடிகாரத்தின் அகஒழுங்குகளை சுயமதிப்பீடுகள் செய்து கொள்வதற்கு கவிதைகள்
எழுதப்படுகிறது. யுகம் யுகமாக இயந்திரங்களுடன் கவிதைகள் ஏன் எழுதப்படுகிறது
என்பதற்கான தேடலில் அலையும் பறவைகள் கூட நாம்தாம். செப்புத் திருமேனி களிலிருந்து மொழியின்
வனப்பான வடிவங்கள் சீர்மையான பிறகு மொழிக்கு இலக்கணம் எழுதிய காலத்தில்
பெருங்கவிகள் எழுதிய காப்பியங்களும் காவியங்களும் சுய மதிப்பீடுகளை வரைவு செய்தது.
தசாப்தங்களின் அகத்தின் சிறகுகள் வளர்ந்து கொண்டேயிருப்பவை. கணத்தில் பொழுது புறம்
போகும். கோடை வரும். உதிர்காலம் வரும். சுழல் காற்று மேலெழும். மழை வருவதாக மண் நறுமணம் சொல்லும். சருகுகள் விரைந்து
நடக்கச் சொல்லும். கல்மாரி பொய்க்கும்.
கவிதை கவிஞனின்
ஆன்மாவுடன் உரையாடுகிற சமயத்தில் திரும்பத்திரும்ப கிறீச்சிட்டுக் கொள்கிற
வயலின்கள் எதாவது ஒரு சங்கதியை குறித்து விடுகிறது. ஓர் பொழுதில் ஓர் காயத்திற்கு ஒரு
குற்றத்திற்கு மருந்தாகிவிடுகிறது. இரவின் கருநீலத்தை அழித்துப் பார்த்துக்
கொண்டிருக்கிற நெடுஞ்சாலை ஓவியன் அவன் பெயரை எழுத மறந்து போய்விடுவதைப் போலவே
கவிஞன் தன் கவிதையின் காலடிகளில் தன்பெயரை எழுதாமல் விடுகிறான்.
அகத்தில் கவிதை
கவிஞனை எழுதிகொண்டிருக்கிறது என்பதுதான் புற ஒங்கின் முதன்மையான தரிசனம். இச்சை
இறையியல் மொழியின் ஓங்காரமாக அறியப்படுகிறது. புதுவெள்ளத்தின் ஓசையை இரவில்
உணர்ந்து பார்த்தால் தெரியும். இந்த மகாசிவராத்திரியை இந்த தேநீர் நிறைந்து
ததும்பும் கோப்பைகளை- அல்லது ஒரு உறக்கத்தில் காணாது போய்விடுகிற இயல்பான
ராத்திரியை தேநீர் அருந்தி முடித்து அதன் நறுமணமும் இனிப்பின் துவரும்
தங்கியிருப்பது போன்றே யாழியின் கவிதைகள் படிகிறது.
இரவு என்பது வேறு.
ராத்திரிகள் என்பதும் வேறு. ராக்காலம் என்பதும் வேறு. கவிஞனின் சொற்களில் பொருள்
அறிவதும் வேறு வேறானவையே. ஏற்றத்தாழ்வுகளெனும் ஒழுங்கீனங்களுடைய ஒசையற்ற சமூக
ஒழுங்கை நாம் அறியமுடியாதது போலவே சொற்களற்ற உரையாடலையும் தவிர்க்க முடியாது.
நேரெதிர் துருவங்களில் நெருக்கத்தில் இடறுகிற பொழுதில் மௌனத்தின் வன்மத்தில்
சொற்கள் புகைந்து நெளியும். தனிமனிதனின் மனஅழுத்தம் உருவாவது என்பது
புறச்சமூகத்தின் ஒழுங்கற்றத் தேய்மானத்தின் வெளிப்பாடு.
கவிதை என்பது
அதிகாலைப் பறவையொன்றின் அறைகூவல்தான். எனக்கு தினமும் விடிகிறது உங்களுக்கு
இன்றாவது விடிந்து விட்டதாவென எழுந்து பாருங்கள் என்பதாக அந்த அறிவிக்கை.
சொற்களை
கவிதைகளுக்குள் அனுமதிக்கப் பழகிய பொருள் வாசகனின் ஆன்மாவிற்குள்
தரிசிக்கப்படுவது. சிரிப்பதற்கும் அழுவதற்கும் பயிற்சி தேவையில்லையென்பது போலவே
கவிதைகளை ரசனைக்குள் அழுத்தித் திணற வைக்கலாம். நம் சமூகத்தில் ரசனைகூட
மூச்சுத்திணறலுக் குட்பட்டது.
தற்சமயம் யாழி எழுதிய
கவிதை வரை வாசித்து வருகிறவன் என்கிற முறையில் அவர் கவிதை மொழி எந்த வாசக மனதிற்கும்
குழப்பத்தைத் தரவில்லை. சூழலின் நெருக்கடியின் தீவிரம் அறியமுடியும். நீருக்குள்
ஈரமும் மருந்தும் இலகும் இருப்பதைப் போன்றும் மழைக்குள் நோயும் நோய்மையின்
நசநசப்பும் இருப்பதைப் போன்றும் கனவுக்குள் ஒழுங்கின்மையின் சித்திரங்களும்
மூர்ச்சையின் விடுதலையும் இருப்பது போன்றும் அவர் கவிதைகளும் சகலத்தின் விசாலம்
குடியிருக்கிறது.
முக நூலினைத்
திறந்தால் யாழியின் கவிதை நண்பர்களை இன்முகத்துடன் வரவேற்கும். சுருங்கக் கூறும்
பெரும் விளைவுகள் பதியும். காட்சியை விவரித்தலும் அனுபவத்தின் நாட்குறிப்பாகவும்
இருக்கும். பகலின் காகிதம் இரவுக்கும் முன்பாக நாம் நம் சட்டைப்பையில் வைத்துக்
கொள்வதில்லை. நேற்றின் கழிந்த நாளின் காகிதங்கள் நம் ஆன்மாவைபோலவே பொருளற்ற
ஒசையில் மனக்குப்பை போலிருக்கும்
கழிந்த நாட்களை
சேகரித்துப் பார்க்கிற வைபவம்தான் கவிதை வாசித்தல் நாமும் சேகரிப்பதில் ஆர்வம்
உள்ளவர்கள். பறவை தன்னையறியாமல் நகரத்தில் ஒரு வனத்தை கைமறதியாய் வைத்துவிட்டதைப்
போன்று கவிதை கழிந்த நாட்களுக்குள் அலைகிறது. பொருளையும் இருப்பையும் ஒரு கவிஞன்
வலிந்து சொல்வதின் காரணம் அதுதான்.
யாழியின் கவிதைகள்
எப்பொழுதும் கதகதப்பு தருகிறவை. சொற்ப கணங்கள் அமர்ந்து விருட்டென எழுந்து பறந்து
விடுகிற சிட்டுகளைப் போன்றவை. சட்டென எழும்பும் தாளத்தில் அறியக் கிடைத்துவிடுகிற
பாடலின் ரசனை. இந்த நூலினை நீங்கள் வாசிக்க யாழி அவருக்கான அர்த்தமிக்க ரசனையை
அறிந்து கொள்வார்.
கவிதைகள்
வாசிக்கப்படுவதும் பேசப்படுவதும் நிகழ்ந்து கொண்டே இருக்கட்டும். ஒழுங்கின்மை
கனவுகளின் நாட்குறிப்புகள் முடிந்து விட்டது என்று அறிய முற்படும் போது புகைமூட்டம்
கவிழ்கிறது. அது அறத்தின் கண்களை மறைக்காமல் இருக்க நாம் கவிதைகளை
பதிப்பித்துத்தான் ஆகவும் வேண்டும்.. இயந்திரங்களில் கவிதைகள் சுற்றிச்சுற்றி
மலையேறுவதும் அதற்காகத்தான்..குறையொன்றுமில்லை.......
யாழிக்கு
வாழ்த்துக்கள்..
இளஞ்சேரல்