ஞாயிறு, 17 மார்ச், 2013


கதிர்பாரதியின் கவிதை நூலான “மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்குறித்து---

 

ரசவாதியின் நாட்குறிப்புகள்….

 

இளஞ்சேரல்

 

 

                  பிரதியாக்கங்களில் தத்துவங்களுள் முதன்முதலாக கான்ட்டியமே விமர்சன தத்துவம் என அங்கீகரிக்கப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டு பிரஞ்சு தத்துவ அறிஞர் மான்டேன் தத்துவங்களை நம்பிக்கையின்மையின் வாதங்கள் மற்றும்(எதிராக) மதநம்பிக்கை வாதங்கள் என்று பகுத்திருந்தார். கான்ட்டின் நூல்களுள் அடிக்கடி குறிப்பிடப்படுவனவாகிய துய அறிவு திரனின் விமர்சனம் அரசியல் அறவியல் அறிதிறனின் விமர்சனம்“ “அழகியலின் மதிப்பீட்டுத்திறனின் விமர்சனம் எனும் மூன்று நூல்களின் வழியாக விமர்சனம் முக்கியத்துவப்படுத்தப்பட்டது. தலைப்பும் பொருளடக்கமும் சிந்தனை இயக்கமுமாய் மையம் வகிக்கிறது. அந்த வகையில் கவிதை நூல்களுக்கான விமர்சனம் அல்லது அறிமுகங்கள் என்பதாக நாம் இங்கு கூடியிருக்கிறோம். ஏற்பாடு செய்திருக்கும் அகநாழிகை.தக்கை.361.டிகிரி இதழ்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி. பங்கு கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கும் கவிஞர்களுக்கும் மதிப்பிற்குரிய விமர்சகர்களுக்கும் முதற்கண் நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

         கதிர்பாரதியின் கவிதை நூலுக்கு இரண்டாவது முறையாக அறிமுக குறிப்புகள் எழுதுவதில் மகிழ்ச்சி.

அவருடைய கவிதையிலிருந்து துவங்குவோம்.

 

வெள்ளையாகச் சலனித்தல்

 

தண்ணீரைத் துளைத்துத் தொங்கும் தூண்டிலில்

துடிக்கும் புழுவை

முள்ளில் மாட்டிக் கொள்ளாமல்

கவ்வி இழுப்பது போன்ற கனவிலிருந்த சினை மீன்

கொத்தித் தூக்கிய கொக்கின் தொண்டையில்

அடிமேல் அடிவைத்து

வெள்ளையாகச் சலனிக்கிறது

உறைந்திருந்த காலம்- பக்-28

 

     தற்கால உலகம் மற்றும் இலக்கிய வகைமைகளில் கவிதையின் வடிவங்கள் தனது இருப்பை தொடர்ந்து தகவமைப்பு ஏற்றவாறு மாற்றிக் கொண்டே வருகிறது. நவீன நுகர்வு உலகின் அனைத்து வருவாய்கள் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுவது மாதிரியே நவீன கவிதையின் ஆக்கங்களும் அமெரிக்காவின் அடிமை நாடுகளாக இருக்கிற தேசங்களிலிருந்து தான் நவீன வடிவங்களைப் பெறுகிறது.

        அடிமை தேசங்களிலிருந்தும் அவர்கள் இழந்ததைப் பற்றிப் பேசுகிறார்கள் நாம் இழக்கப் போவதைப் பற்றிப் பேசுகிறோம். அவ்வளவுதான் வித்தியாசம். அவர்கள் தத்தம் தாய் மொழியை எந்தச் சூழலிலும் திருகித் திருகி  உருப்போடுவது இல்லை. அடிமையின் தேசங்களில் ஆழக் கற்றவர்கள் இருக்க வாய்ப்பில்லை. மிகக் குறைந்த வாசிப்பும் மொழி மீது பற்று கொண்டதின் காரணமாகவும் தனது நாட்டில் நிலவும் தன்மை குறித்தும் உலகின் ஜனநாயக வெளிச்சத்தின் நீரோட்டத்திற்கு அறிவிக்கவுமே எழுதுகிறார்கள்.

        அவர்கள் யாசிப்பது “வேண்டும் கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் உனவு“ உறங்க இடம் காற்றுக்கும்  மழைக்கும் கொஞ்சம் கூரை. இவற்றையே தனது கவிதைகளில் திரும்பத்திரும்பக் கேட்கிறார்கள். அவற்றை இயற்கையிடம் கேட்கிறார்கள். தன்னை அடிமைப்படுத்திய வல்லாதிக்கத்திடம் கேட்கிறார்கள். கானகம் அழிந்து விட்டது. ரசாயன குண்டுகளால் பறவைகள் இல்லை. அதிகாரம் தன்னுடைய அதீதமான இருப்பையும் பேராசையையும் காட்டியதின் விளைவே இந்த அழித்தொழிப்பு

      

       கதிர்பாரதியின் “மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்“தொகுப்பில்  சர்வதேசிய அளவில் இன அழித்தொழிப்பக்கு எதிரான கவிதைகள் சில எழுதியிருக்கிறார். நவீன கவிதை வடிவங்களில் பாசாங்கு அற்ற மொழியில் மனித அறம்  சட்டகமில்லாத எளிய வாழ்வு குறித்து எழுதுபவர்கள் மிகக்குறைவு. மனித அறம் என்பது என்ன எனத் தெரிந்தால் தானே அவர்களுக்கு எழுத வரும். பிரதியின் நோக்கம் பிரதியின் வடிவம் பிரதிகளின் செயலாக்கம் குறித்த கலாபுர்வமான அணுகுமுறையே ஒரு கவிஞனின் ஆக்கத்தையும் சமகாலத்தின் அரசியல் இருப்பையும் தெரிவிக்கிறது.

         உலக கவிதைகளில் மொழிகளில் எண்ணற்ற கவிஞர்கள் என்னதான் எழுதுகிறார்கள் என்று நாம் அறிய பிரியப்படுகிறோம். அறிந்து கொள்ள விழைகிறோம். நீர் நிலைகளின் ஆசீர்வாதத்தில் மனித உயிரினமும் வாழந்து கொள்கிற ஆசீர்வாதம் கிட்டியிருக்கிறது இயற்கையால். நாம் இயற்கையை வைத்துக் கொண்டாடி வாழ்ந்து கொள்ளலாம் என்கிறது ஒரு கூட்டம் இன்னொரு கூட்டம் அரசியலை வைத்து வாழ்ந்து கொள்ளலாம் என்கிறது .

        எனினும் உலக கவிதையியக்கம் நமக்கு முன்பாக மாபெரும் சவாலை முன்னிருத்துகிறது.

            சமகாலத்திலும் இதற்கு முன்பு பதினாராம் நுற்றாண்டுகளில் நிகழ்ந்த பிரஞ்சு புரட்சி,ரஷ்யப் புரட்சி இரண்டு உலகப்போர்கள், பிறகு அடிமைநாடுகள் சுதந்திரம் பெற்றதும் அதன் விளைவாக உள்நாட்டுக் கலவரங்கள் பிறகு எல்லைகள் குறித்தத் தகராறுகளை நம்மை அடிமைப் படுத்திய நாடுகள் தகராறுகளை மறைமுகமாகத் தூண்டிவிடுதல் பிரிவினைவாதிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிவருவதையும் நாம் அறிந்தே பேசாமல் இருக்கிறது என்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

        கதிர்பாரதி சில கவிதைகளை நவீன யதார்த்தவாததில் எழுதியிருக்கிறார். ரியலிசம் பிரான்சில் 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய போது இரு உலகப் போர்களின் பின்னணி இருந்தது. ரியலிசம் என்னும் சொல் ஜெர்மானிய சொல்லான ரியல் பொலிடிக் என்ற பதத்திலிருந்து பெறப்பட்டது. இச்சொல்லை முதல் முதலாக ஜெர்மானியரான பிஸ்மார்க் உபயோகித்தார். பொதுவாக கலைக்கு இரண்டு விதமான தன்மைகள் உண்டு. ஒன்று சூழ்நிலையைப் பரிச்சயப்படுத்திக் கொள்வது( cognitive)

இரண்டு பரிச்சயப் படுத்திக் கொண்டதை பிரதிபலிப்பது. (Reflective) இத்தகையத் தன்மையைத் தனது பண்பாகக் கொண்டதே யதாரத்தவியல் ஆகும். பால்சாக் முன்னோடி ஆளுமை.பிறகு வந்த குஸ்தாவ் ப்ளாவே ரியலிசத்தை அதன் உச்சத்திற்கு கொண்டு சென்றார்.ஜார்ஜ் எலியட்,சார்லஸ் டிக்கன்ஸ், பெர்னார்ட்ஷா,செகாவ் முக்கியமானவர்கள்.

 

கூச்சத்தைப் புசிக் கொள்ளும் பிள்ளையார்-கவிதையில் கதிர்பாரதியின்

யாதார்த்தவாதம் அற்புதமாக சித்தரிக்கப் படுகிறது.

 

படையலின் பின்னந்தியில் கைவிடப்படும் அவர்

தனிமையின் இருக்கையில் தூக்கி நிறுவும்

குழந்தையின் பீதியை நகலெடுத்த தம் முகத்தையும்

சீந்துவாரற்ற கண்களில் துளிர்விடும்

பல்லக்கில் ஏறும் கனவையும் பற்றி

உங்களுக்குத் தெரியாதிருப்பதே நல்லது

ஏனெனில் ஒத்தக் காலைத் தூக்கி

அவர் மீது ஒண்ணுக்குப் பெயும் கெடா நாயை

பற்றியும் தெரியவந்தால்

இன்னும் திடுக்கிட்டுத்தான் போவீர்கள். பக்-8

         இக்கவிதை சர்ரியலிசத்தன்மையுடனும் பேசுவதை நாம் உணரலாம். “உலகை நாம் பார்க்கும் பார்வையை மாற்றிக்கொண்டால்  மட்டுமே உலகை மாற்றுவது சாத்தியம்“ என்று  பேசும் சர்ரியலிசம் என்ற சொற்றொடரை பிரஞ்சு கவிஞர் கில்லாம் அப்போலினர் தனது அபத்தமான நாடகமான“லெஸ் மாமே லியாஸ் டே டைர்சியாஸ்“ எனும் நாடகத்திற்கு துணைத் தலைப்பான டிராமா சர்ரியலிஸ்ட்என்பது. அப்போலினரைப் பொருத்தவரை சர்ரியலிசம் என்பது யதார்த்தத்தை ஒப்பீட்டு அளவில் வெளிப்படுத்துவதாகும். அவருடைய கூற்றின்படி மனிதன் கால்களை நகல் செய்யும் பொருட்டு சக்கரங்களைக் கண்டு பிடித்தான் சக்கரம் என்பது மனிதனின் எந்திரக்கால்கள் ஆகும். அதுபோலவே ஒரு கலைஞன் மனித இருத்தலின் அடிப்படை உண்மைகளை கலைகளில் வெளியிடும்போது அது அப்பட்டமான நேரடி வாழ்க்கையை அப்படியே வெளிப்படுத்துவதாக இல்லாமல் ஒரு கவிஞனின் கற்பனை கலந்த இயல்போடு வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.                 

           தற்கால கவிதைகளில் கியுபிசத்தின் தாக்கமும் அதிகமாக இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. கதிர்பாரதியின் கவிதைகளில் ஒவியங்களின் பாதிப்பும் ஒவியசித்தரிப்புகளின் மீதான லயிப்பும் காணமுடிகிறது. பெரும்பாலான கவிதைகளில் காணப்படும் ஓவியங்களின் தன்மைகள் பிரமிக்க வைப்பவை.

பாரீஸ் நகரத் தெருக்களில் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் திரிந்து கொண்டிருந்த இளைஞன் பாப்லோ பிக்காசோவை பிரஞ்ச் ஓவியர் பால்செஸான் தான் தோன்றியாக வரைந்திருந்த ஓவியங்கள் வசீகரித்தன. பிரஞ்ச் ஓவிய விமர்சகர் லூயி வாக்ஸால் இந்தப் பாணிக்கு சூட்டிய பெயர்தான் கியுபிசம். 1907 முதல் 1914 வரையிலான முதலாம் உலகப் போர் சமயத்தில் தாக்கத்தில் உருவாக்கப்பட்ட காலத்தில் பாப்லோ பிகாசோவும் ஜார்ஜ் பிரெக்கும் இணைந்து இக்கலை மரபு, ஓவியப்பார்வை, தொழி்ல் நுட்பம் மாடல்வைத்து வரைவது, நகலெடுப்பது போன்று எல்லாவற்றையும் முற்றாக நிராகரித்தது.

      புதிய நவீன கலை இலக்கியக் கோட்பாடாக வளர்ந்து கோலோச்சியது பிரான்சில் கில்லாம் அப்போலினேர்,ஜீன் காக்தோ,ரிவர்டி போன்றோர் கியுபிசக் கவிதைகளை எழுதினர்.

 

       நம் வாழ்வில் யாதார்த்த சர்ரியலிச கியுபிச நிகழ்வுகளை எல்லாம் அடிமை தேசங்களில் சிறப்பாக எழுதுகிறார்கள். தாம் எழுதுவது உலகின் மகத்தான கவிதைகளின்  இசம் சார்ந்தவை என்று அறியாமலே கூட சிறப்பாக எழுதி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். சமகாலத்தின் நவீன கவிஞர்கள். சிறு சிறு நகரம் போன்றிருக்கும் தனித்த தேசங்களில் அடிமைப்பட்டு  கவிஞன் தன் கவிதைகள் வாயிலாக வெளிப்படுத்தியபடியே இருக்கிறான். நாடுகடத்தப்படுதலும் விரட்டப்படுதலுக்குள்ளாகவும் அவனுடைய கவிதைகளும் ஆங்காங்கு கடத்தப்பட்டு இணையங்களின் வழியாக உலக பிற தேச மொழி சார்ந்த மக்களின் பார்வைக்கு  வருகிறது.

    உலக கவிதையின் மொழி என்பது “இயற்கையின் மகத்தான ஒழுங்கு“ மீதான பிரமிப்பு மொழிதல், பேரழகின் வடிவமாக பரிணமிக்கிற பிம்பம் பற்றி எழுதுதல், அந்த அழகு தரும் பேராணந்தத்தையும் அதனூடாக தனது தனிப் பட்ட வாழ்வை எழுதுதல், அதே இயற்கையின் குருரமான அம்சங்களையும் அதாவது புயல் சீற்றம் பெருமழை மின்னல் பற்றியும் எழுதுதல்.அதற்குப் பிறகு வரும் மலரும் சோலைவனங்களையும் பறவைகளின் உயிர்ப்பை எழுதுவதின் மூலமாக தாமும் இயற்கையின் ஒரு அங்கமே என்றுணர்ந்து கொண்டாடிக் களித்தலுமாக உலக கவிதையின் இயக்கம் இருக்கிறது பொதுவாக.

         பிரபஞ்சத்தின் இடையறாத ஓசையை அதன் ஒழுங்கின்மையில்லாத ஆனாலும் சீரொழுங்கான ஞானத்தை உலக உயிர்களுடன் அதன் துடிப்புடன் அதன் வண்ணங்களுடன் அதன் பயணங்களுடன் வாழ்தல். அப்பிரபஞ்சத்துடன் பன்மை நிலையை அறிந்து தம்முள்ளாக தன்னைக் கண்டடைதல் என்பது.

         மனிதன் தனது ஆற்றலை மேம்படுத்த மேலும் தன்னைப் போல் ஒருவனுடன் அரசியலாக உறவு கொள்ள விரும்புகிறான். அதன் மீதான வன்மத்தையும்  இடையிடையே எழும்பும் தடைகளை மீறி இணைவை அறிந்து கொண்டு செயல்படுதல் என்கிற பொதுமையில் எழுதுதல் இயங்குதல் என்றாகவும் உலக கவிதை பேசுகிறது.

          இயற்கையும் தானும் தான் இறுதியில் வாழத்தனிமைப் பட்டவர்கள் என்று உணர்ந்து கொள்கிற தனிமையை அவன் விரும்புகிறான். அவன் அறிவான் ஆயுதங்களால் எந்த உபகாரமும் இல்லையென்பதை. ஆயுதங்கள் தம் சுய விருப்பத்திற்கு உருவாக்கப் பட்டதே அன்றி பிறர் மீது செலுத்த அல்ல என்பதை அறிந்தே இருக்கிறான். திரும்பத்திரும்ப தன் மீது கவிந்து கொள்ளும் தனிமையை அறிய அறிய கவிதைகளாக எழுதுகிறான். அவன் அடையும் தீவிர தரிசனத்தின் விளைவாகவே உலகம் அவனுக்கு பல விடுதலை கீதங்களை எழுத வைக்கிறது. அப்படியாகவே அவன் கவிதைகள் பல தேசங்களுக்கு விடுதலை வாங்கியும் தந்திருக்கிறது. ஒரு எல்லையற்ற எல்லையை விடுவிப்பதற்கு கவிஞனும் அவன் வாழும் காலமும் போராடி முனைந்து கொண்டே இருக்கிறது.

          தமிழுக்கும் தமிழ்க்கவிதைக்கும் பொற்காலம் வாய்த்தது என்றால் அது கடைச்சங்க காலம் தான். இந்த சங்ககாலத்திற்குப் பின்னர் மீண்டும் தமிழுக்குப் பொற்காலம் ஏற்பட்டிருக்கிறது. சோழர்களுகளுடைய காலத்தில் முதல் குலோத்துங்க சோழன் முதலாக மூன்றாம் குலோத்துங்கன் வரையிலும் சோழரவையில் புலமையாளர்கள் பலர் வீற்றிருந்து தமிழ் நலத்தைப் பெருக்கியிருக்கிறார்கள் இலக்கியப் பாங்கு மாற்றம் பெற்றபோதும் தமிழ் எழுச்சி ஓங்கிய காலம் இது. பண்டிதரும் மகத்தான சோழ ஆராய்ச்சியாளரும் சதாசிவ பண்டாரத்தார் ஆய்வுகளின் மூலம் அறியலாம்.

இங்கு கம்பன் வழியாக நம் முந்தைய கவிதையின் காலத்தினை அறியலாம்.

       குலோத்துங்கனின் அம்பும் ஏற்கெனவே அவனால் ஏவப்பட்டிருந்தது. உள்ளத்திலேயுள்ள அம்பும் ஊடுருவியிருந்தது கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு. அம்பு தைத்த புண் தான் வெளியேதான் இருந்தது. ஆறாத மனப்புண் அவரை நலிவித்து விட்டதாகச் சோழன் உணரவில்லை. தம்பால் தைத்த அம்பினைப் பற்றியபடியே கம்பர் சோழனை நோக்குகிறார் அவர் உள்ளக் கொதிப்பு வெளிப்பட்டுச் செய்யுளாக கவிதையாக படிகிறது நம் இருதயத்தின் ஆழத்துள்ளாக.

 

வில்லம்புஞ் சொல்லம்பும் மேதகவே யானாலும்

வில்லம்பிற் சொல்லம்பே வீறுடைத்து-வில்லம்பு

பட்டிருவிற் றென்னையென் பாட்டம்பு நின் குலத்தைச்

சுட்டெரிக்கும் என்றே துணி

 

       வில்லம்பும் சொல்லம்பும் ஆகிய இரண்டுமே இவ்வுலகில் சிறந்த தகுதியுடையன என்றாலும் வில்லம்பினும் சொல்லம்பே ஆற்றல் உடையதாகும் சோழனே! வில்லம்பு என் மார்பு உருவிற்று என் பாட்டாகிய இந்தச் சொல்ம்பு நின் குலத்தைச் சுட்டு எரித்துவிடும் என்று  நீயும் துணிவாயாக..என்கிறார். மரணத்தின் தருவாயில் ஒரு கவிச்சக்கரவர்த்தி கம்பரின் சொற்களின் மூலமாக நாம் சொற்களுக்கு எத்தகையை வலிமை உள்ளது என்பதையும் அந்த சொற்களை நாம் மென்மெலும் வலிமையுள்ளதாக ஆக்கவேண்டும் என்பதை இந்த தொகுப்பின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்கிறோம்.

   அது போன்றே மகாகவி கவிதை எழுதுகிறான் எனும் கவிதையில் கதிர்பாரதியின் சொற்கள் உருத்திர தாண்டவமாடுகிறது.

 

கவிதை இயற்றலில் லயித்திருக்கும்

ஒரு வெய்யில் பொழுதில்

நான்காம் அடுக்கின் தலையிலிருக்கும்

மொட்டைமாடியில்

வெளுத்த துணிகளை உலர்த்த

பணிக்கப்படுகிற மகாகவி

இடதுபுறம் ஒருகிளிப்

வலது புறம் ஒரு கிளிப் போட்டு

தன் கவிதையை

சூரியனில் காயவைத்து விட்டு

கிடுகிடுவெனக் கீழிறங்கி வருகிறான்பக்-53

      இக்கவிதையில் யதார்த்தமும் சர்யலிசமும் கியுபிசமும் ரொமாண்டிசசமும் இணைந்திருக்கிறது. கம்பன் இப்படியாக அவன் அநாயசமாகப் பயண்படுத்தியிருக்கும் படிமங்கள் அளவில்லாதவை. மரபின் அழகில் லயித்தும் தற்காலத்தின் இருப்பியல்புகளைப் பேசுவதும் நவீன கவிஞனுக்கு அவசியமாகிறது.

        கவிஞனுக்கும் தான் எழுதும் கவிதைகளுக்குமான உறவைப் பேணுவதில் இருக்கும் வசீகரங்களை படைப்பவன் மட்டுமே அறிவான். அவனுக்குள் இயங்கும் கவிமனமும் மொழியும் கவித்துவமும் கற்பனையைத் தூண்டி சமூக ஆவல் மிக்கவனாக மாற்றி விடுகிறது.

வசீகரத்திற்கும் கவியாழத்திற்கும் போக முனைந்தால் மறுபடியும் நாம் கம்பனிடமே போக வேண்டியிருக்கிறது.

         ஒரு சமயம் புலவர்கள் பலர் கூடியிருந்து காவிரியின் சிறப்பினைப் பற்றிப் பாடி கவிதைகளாக அளவாளாவிக் கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு புலவரும் காவிரியின் ஒவ்வொரு சிறப்பையும் கவிதைகளாக வடித்தனர். கம்பன் அமைதி காத்தே இருந்தான். “கம்பர் பெருமான் தாங்கள் மட்டும் புகழாது இருந்தால் எதனாலோஎன்று கேட்க அவர் திடுமென

“எச்சில் நீரான காவிரியைப் புகழ்வதோஎன்று கவியாக்க பலரும் திகைப்புற்றனர்.

 

மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுவர்

கைகழுவ நீர்போதும் காவிரியே-பொய்கழுவும்

போர்வேற் சடையன் புதுவையான் தன் புகழை

யார்போற்ற வல்லார் அறிந்து..

ஆற்றிலே நீராடி வந்து சடையப்ப வள்ளலின் வீட்டில் கணக்கற்றோர் விருந்துண்டு போகின்றனர். அவர்கள் தம் கைகளைக் கழுவுகின்ற நீரும் காவிரி நீருடன் கலந்து தானே போகின்றது இப்படி மெய்கழுவிய நீரும் கைகழுவிய நீரும் கலந்து போவதால் காவிரி எச்சில் நீராகும் அல்லவோ என்றார் கம்பர். கதிர்பாரதி காவிரி வளநாட்டைச் சார்ந்தவர் என்பதால் இந்தக் கவிதையை அவர்க்கு உணர்த்தி நாமும் மகிழ்கிறோம்.

       எப்படி கம்பன் காவிரி நீரை எச்சில் என்று அதிர்ச்சியளித்தாரோ அதுபோன்று கதிர்பாரதியும் இக்கவிதையி்ல் அதிர்ச்சி தருகிறார்.

கனவிலிருந்து எழுந்து போய் சிறுநீர் கழித்தேன்.

 

தலைப்புக் கவிதையில்

 

அசோகவன சீதையின் பொருட்டு பத்துதலை காமத்தால்

ராவணின் உடல்வெப்பம் தகிக்கத் தொடங்க

அறையில் எரியும் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தேன்

அகலிகை சபலத்தில் இந்திரன் கௌதமமுனியாக உறுமாற

சாபம் வாங்கி கல்லாக உறைந்து கனத்தது இரவு

தந்தையின் மரண கணத்திலும்

மனைவியோடு ஆலிங்கனத்தில் இருக்கிற மோகன்தாஸ்

காந்தியாக இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்க

கோவணத்தை வரிந்து கட்டியபோது

எழுந்து போய் சிறுநீர் கழித்துவிட்டு வந்தேன்

எவ்வளவு சுகமாக இருந்தது தெரியுமா..

        

          கதிர்பாரதி பகடியிலும் வித்தார சிலேடையில், சொல்லாட்சி நடையிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். தற்கால நவீன கவிதையில் விமர்சன அமைப்பும் கருத்தியல் அமைப்பும் மேலோங்கி வருகிற நிலை  நிலவுகிறது.  கேலிச்சித்திர பொம்மைகள் வரைவது போன்று கேளிக்கைக் கவிதைகள் அரசியல் நிகழ்வகளினை பகடியாக்கி அதிகமாக எழுதப்படுகிறது. கற்பனை வறட்சியற்ற பகடியும் வித்தாரமும் இனைந்த சொல்லாட்சியுடன் எழுதப்படும் போதுதான் நவீன பகடி கவிதையும் கவிஞனும் புதுப்பொலிவுடன் மிளிர்கிறார்கள். அந்தக் கவிதைகள் வாசிப்பின் வழியாகவும் கலாச்சார நடவடிக்கைகளின் செயல்பாடுகளின் மூலமாகவும்

சமூக விமர்சனமாகவும் சிலேடையாகவும் அங்கதத்தொனியும் ஒருங்கே அமையுமானால் அக்கவிதை காலத்தால்வெல்ல முடியாத கவிதையாகி விடுகிறது.

        நம் மூத்தமரபின் கவிஞன் காளமேகம் பல விருத்தங்களிலும் வெண்பாக்களிலும் ஆட்சி புரிந்து இருக்கிறார். ஒரு சமயம் காஞ்சிபுரத்திலே விநாயகப் பெருமானுக்கு உற்சவம் நடந்து கொண்டிருக்கிறது பெருமான் பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்து செல்கிறார்.”பாவம் இப்படி இந்தப்பிள்ளையை எலி இழுத்துப் போகிறதே“ “சிவனுடைய மழு எங்கே“ “திருமாலின் சக்கரம் எங்கே“ “பிரமனின் தண்டம் எங்கே“ “இதனைத் தடுக்காமல் இருப்பதனால் அவர்களிடமிருந்து அவையாவும் பறி போய் விட்டனவாஎன்று வினவும் காளமேகம்

 

மூப்பான் மழுவும் முராரித்திருச் சக்கரமும்

பாப்பான் கதையும் பறிபோச்சோ-மாப்பார்

வலமிகுந்த மும்மதத்து வாரணத்தை யையோ

எலியிழுத்துப் போகின்ற தென்

 

         இந்தக் கவிதையை நாம் வாசிக்கும் போது முன்பு குறிப்பிட்ட கதிர்பாரதியின் பிள்ளையார் குறித்த கவிதையை நினைவில் கொள்ளலாம்.

         பிரதி தரும் இன்பம் பற்றி ரோலன் பாத் குறிப்பிட்டதை நினைவு கூரலம். இன்பம் என்பது தொடர்ச்சியாக ஏமாற்றத்திற்குள்ளாக்குவது குறைந்துபோவது தீர்ந்து போவது. இன்பம் என்பது ஆசைக்குப் போட்டியாளன். நாம் ஆசையைப் பற்றி அதிக அளவில் எச்சரிக்கப் பட்டிருக்கிறோம். ஆனால் இன்பம் குறித்து எப்போதும் அறிவுறுத்தப்பட்டதில்லை. ஆசைக்காவது ஒரு விதமான கண்ணியத்தன்மை இருக்கிறது இன்பத்திற்கு இல்லை. வாழ்வில் இன்பம் தரத்தக்க பொருட்களில் பிரதியும் ஒன்று ஒரு உணவுப் பண்டம்,ஒரு தோட்டம்,ஒரு சந்திப்பு,ஒரு குரல்,ஒரு தருணம் ஆகியவற்றைபோலவே ஒரு பிரதியும் இன்பம் தரத்தக்கதே.

         கவிதை நூல்கள் தரும் இன்பம் அளவில்லாதது. எழுதும் இன்பம் வாசிக்கும் இன்பம் அவை பற்றி பேசும் இன்பம் உரையாடும் இன்பம் இப்படியாக. யுகம் யுகமாக நீள்வது. இக்கவிதையை வாசிக்கும் போது வரும் இன்பமும் பிறகு வரும் கலித்தொகையின் பாடலையும் அறிவோம்.

 

ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்- தலைப்பில்

 

மணிப்புறாவின் லாவகத்தோடு எழும்பி மிதக்கிற என் நிலத்திற்கு

ஆனந்தி என்று பெயர் சூட்டியிருக்கிறேன்

அதனால்தான் மேலெழும்பும் பாக்கியம் பெற்றதோ என்னவோ

அதனால்தான் அத்தனை வனப்போ செழிப்போ

தட்டான்கள் தாழப்பறந்தால் மழை வரும் தெரியுமா என்ற

ஆனந்தியின் இமைகளிலிருந்து

முதன் முதலில் தட்டான்கள் பறந்தபோது

எனக்குள் மழைவரும் போலிருந்தது.

        எத்தனை விதமான கற்பனையும் ஆழமும் விசித்திரம் நிறைந்த நிலம் நம்முன் விரிகிறது. இதுபோன்றே சங்க காலத்தின் பாலைக் கலி பாடிய பெருங்கடுங்கோவின் புகழ்பெற்ற பாடல், காதலன் வெளியுர் செல்கிறான்

என்று அறிந்து கண்ணீர் வடித்த காதலி அவனுடன் தானும் வருவேன் என்று அடம்பிடிக்கிறாள். வெளியுர் செல்கிறேன் என்று சொன்னாலே வீரம் செறிந்த மகளிர் அழுது கண்ணீர் விடுவது ஏன் என்று யோசிப்பதும் பிறகு தான் பயணங்களின் போது படும் துயரங்களைச் சொல்லியும் கேளாமல் தன்னுடன் வருவேன் என்று விடாமல் கட்டாயப்படுத்தும் காதலியிடம் கவி பேசுகிறான்

மரையா மரல் கவர,மாரி வறப்ப-

வரை ஓங்கு அருஞ்சுரத்து ஆர் இடைச்செல்வோர்,

சுரை அம்பு,மூழ்கச் சுருங்கி,புரையோர்தம்,

உள்நீர் வறப்ப புலர் வாடு நாவிற்கு-

தண்ணீர் பெறா அத்தடுமாற்று அருந் துயரம்

கண்ணீர் நனைக்கும் கடுமைய,காடு என்றால்,

என்,நீர்,அறியாதீர் போல இவை கூறல்?

நின் நீர் அல்ல சூழாதே,ஆற்றிடை நும்மொடு

துன்பம் துணையாக நாடின்,அது அல்லது

இன்பமும் உண்டோ,எமக்கு?

 “சொல்வதைக் கேள் நான் செல்லும் பாதை மிகவும் துன்பம் ஒரு புறம் மலை ஒரு புறம் காடு இவற்றிற்கு இடையே போகவேண்டும் காலமோ கோடைகாலம் நீர் நிலைகள் வற்றியிருக்கும் நா வறண்டால் குடிப்பதற்கு நீர் கிடைக்காது அத்தகைய வழியிலே செல்லவேண்டும் இந்தத் துன்பம் எல்லாம் உனக்கு எதற்கு?

“அப்படியா துன்பம் உனக்கில்லையோ அதில் பங்கு கொண்டு உன் துயர் துடைப்பது தானே எனக்கு இன்பம் வீட்டிலே சுகமாக இருப்பதா எனக்கு இன்பம் இல்லை இல்லை நானும் வருவேன் அழைத்துச் செல் என்றாள் அவள் அவனுக்கு வேறு வழி?

நன்றி..

 

 

 

 

 

திங்கள், 4 மார்ச், 2013

கல்யாண்ஜியின் கவிதை நூல் ”மீனைப் போல் இருக்கிற மீன்” குறித்து- முதல் பாகம்


மீனைப் போல இருக்கிற மீன்

கல்யாண்ஜியின் கவிதை நூல் பற்றி

 

உயிருடன் வாழும் இளமைப்பருவம்

 

இளஞ்சேரல்

   

 

 புகழ் பெற்ற சினிமா ஸ்டுடியோவான சென்டல் ஸ்டுடியோ பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறாள். கல்பனா. அச்சில் எழுபதுகளின் வாணிஸ்ரீ. ஒன்பது மணி வெளிச்சம். நிழற்குடையில் பணிநிமித்தமாக அவசரம் சுட்டுப் போட தகித்து நிற்கிறார்கள் மக்கள். அவசர மற்றவர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. குழந்தைகள் பெற்றோர்கள் தவிர்க்கும் பேருந்துகளில் ஏறிப்போக ஆசைப்படுகிறது.

        அடைந்து உப்பி வரும் பேருந்துகள். அடுத்தது அடுத்தது என்று விட்டுப்பிடித்ததில் நிழல் நீளமாய் வடிந்திருக்கிறது.அவளை வருகிறாயா என்று சற்று வேகம் குறைந்த  இரு சக்கர வாகனங்களைத் தவிர்த்ததில் காரணமிருக்கிறது. திருமணப் பேச்சைத் தவிர்ப்பதில் காரணம் இருக்கிறது. மூன்று வருடம் மாதாமாத தவனைகள் கட்டிவிட்டால் மனை ஒன்று சொந்தமாகிவிடும். நினைவு தெரிந்த நாளிலிருந்து 26 வருடங்களாக வாடகை தந்து தந்து கை சிவந்து விட்டது. வருமானம் ஆறாயிரம் ருபாயில் பேருந்து பூ வாங்குவது தவிர அவள் வேறெந்த செலவும் இல்லை. சொகுசுப் பேருந்து அவள் பட்ஜெட்டில் இல்லை. ஆனும் இன்று முகூர்த்த நாள் வேறு. சரியான கூட்டமாக இருக்கிறது என்று நிழற்குடை மக்கள் பேசுகிறார்கள். பட்டுச் சேலை அணிந்ததால் பால் அருந்துவதற்கு சிரமப்படும் குழந்தைகளும் சீக்கிரம் வீடு போய்ச் சேர்வதற்கு அவசரம் கொள்கிறார்கள்.

       வெயில் சூடாவதைத் தணிக்கிறது இன்னும் மீதமிருக்கும் பனி. இனி வரும் பேருந்தி்ல் ஏறிக் கொள்ளத்தான் வேண்டும். சொகுசு வண்டி நெடு சேரமான பயணிகள் ஏறுவதற்கு வசதியாக காலியாக இருக்கும் இடங்களை நிரப்பவும் காத்திருக்க ஏறிக்கொள்கிறாள். பிஸ்கட் நிறத்தில் பூப் போட்ட சுரிதார். அளவான உயரம்.மாநிறத்தில் தமிழ்க் குடும்பத்தின் உயரம். அலைபேசியில் வந்து குவியும் கவிதைகளை அவள் இப்பொழுதெல்லாம் அழிப்பதில்லை. வாசிக்கிறாள்.

        அலுவலகம் வந்து சேர்ந்தாள். இன்னும் யாரும் வரவில்லை. விளக்கு மந்தமாக எரிந்து கொண்டிருக்கிறது. பெருக்கிக் கொண்டிருப் பவர்களுக்கு உதவுவதற்காக வெளியிலியே நின்று கொள்கிறாள்.

        தற்சமயம் சூலூர் ஜாதகம் பொருந்தியிருப்பதாகவும் தரகர் நச்சரிப்பும் அம்மா விடாப்பிடியாகக் என்ன சொல்கிறாய் என்று மூன்று மாதமாகக் காத்திருக்கிறார்கள். கல்பனாவிற்குக் கல்யாணம் குறித்த சிந்தனையை யாரும் சொல்ல வேண்டாம். கைக்குழந்தைப் பெண்களைப் பார்த்தால் போதும். உடனே ஜாதகம் கொடுத்த இடமெல்லாம் ஞாபகம் வரும். கைப்பையிலிருக்கும் தனக்குப் பிடித்த பொருந்திய ஜாதகத்தை எடுத்து அந்த தொடர்பு அலைபேசி எண்ணுக்கு முயற்சிக்கிறாள்.                    பையன் சுமார். குடும்பம் பரவாயில்லை.  இருபது கிலோமீட்டர் சுற்று அதிக தொலைவில்லை.

    மணி ஒலிக்கிறது. எடுத்தவர் தரகர். விசாரிக்கிறாள். தன் அம்மா வழி உறவினரும் கூட. விசாரிப்பு முடிந்து  அந்த சூலூர் ஜாதகம் குடுத்தி ருந்தீங்க. நாங்க பார்த்தோம்..நல்லாயிருக்கு..அம்மா அவங்களுக்கு டைம் இருந்தா வந்து பாக்கச் சொன்னாங்க“ என்றாள்.

          மறுமுனையிலிருந்து தரகர். அந்த இடமா அது முடிஞ்சிருச்சே..நான் அவ்வளவு தூரம் உங்கம்மா கிட்ட தலையிலடச்சு சொன்னேன். கேட்கலை. சரிம்மா..வேற ஜாதகம் பொருந்தரது கிடைச்சா போன் பண்றேன்.“

   “அம்மா மேல பழி சொல்லாதீங்க..“சொல்ல நினைத்து அமைதியாகி விட்டாள்..கல்பனா..

 

                                  இப்படித்தான்..

 

ரொம்ப காலமாகவே

இப்படித்தான் இருக்கிறார்கள்

இவர்கள்

ரொம்ப காலமாகவே

இப்படித்தான் இருக்கிறேன்

நான்

ரொம்ப காலமாகவே

இப்படித்தான் இருக்கிறது

இந்த

ரொம்ப காலம்பக் -51

 

     ஸ்டெபியின் கணவன் இறந்த போது குழந்தைக்கு இரண்டரை வயது. ஒரே மகள் என்பதால் தகப்பனுக்கு அவள்தான் இறுதி காரியங்களைச் செய்தாள். சர்ச்சில் யாரும் அழவில்லை. அல்லது அழ யாருக்கும் அழுகை மிச்சம் மீதியில்லை. கர்த்தரே. உன் பாஷையில் சொல்வதானால் “ஊழிக்காலம் முடிந்ததும் அவர் அழைத்துக் கொள்ளப்ட்டார்“ என்பீரே.அப்படியா. சரி ஆண்டவரே அப்படியானால் எம்மை எதற்று விட்டு வைத்தீர்..என்றுதான் இரண்டு நாட்களாக தேவனிடம் கேட்டுக் கொண்டேயிருந்தாள்.தேவாலயத்தில் வைத்து அவருக்கான பிரார்த்தனை முடிந்து நல்லடக்கம் நிகழ்ந்தது. முதலில் அவர் இந்துவாக இருந்ததின் காரணத்தினால் அவருக்கும் இந்து மத வழக்கப்படியும் கணவரின் குடும்பத்தார் விரும்பியதால் அவர்களின் சடங்குகளும் செய்யப்பட்டது. ஸ்டெபி தன் கணவனை தன் தேவனின் கிருபையுடன் நல்லடக்கம் வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்ததால் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் நடந்ததைக் காரணம் காட்டி அப்படியே போய்க்கோ என்று உறவினர்கள் வெளியேறிவிட்டார்கள்.

        கணவன் பார்த்த வேலை கருணையின் அடிப்படையில் அவளுக்குக் கிடைத்தது. பணி உத்தரவின் படி பணியில் இணைந்த போது வாயிலிருந்த கர்த்தர் படம் பார்த்து. ஆண்டவரே எலலாம் உன் பிரியம் என்று பிராத்தித்துக் கொண்டு முதல் நாளின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்ட போது கணவனின் முதலெழுத்துக்கள் அங்கு ஏற்கென இருந்தது சில நாட்களின்  கட்டங்களில்.

அவன் வாழ்ந்த நாட்களும் காலமும் இங்குள்ளதா ஆண்டவரே. அப்படியே ஆனாலும் அவருடன் வாழ்ந்து கொள்கிற வாய்ப்பு அளித்த ஆண்டவருக்கு என் நன்றிகள். குழந்தையை யாரிடம் விட்டு வருவது எனத் தோன்றிய போது அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை வரை கூடவே அழைத்து வாம்மா பிறகு அன்று குழந்தையைப் பள்ளியில் சேர்த்து விடு. இனி யென்ன மூன்று மாதம் தானே என ஆறுதல் அளித்தார்கள்.

        ஸ்டெபியைத் மறுமணமாகத் திருமணம் செய்து கொள்வதற்கு வந்த வாய்ப்புகளைக் கடுமையாக மறுத்தாள். மகளின் எதிர்காலமே என் வாழ்க்கை. உனக்கான உடலாகவோ அன்றி உனக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கான தாயாக இருக்கப் போவது எல்லாம் ஒரு கனவு. நான் வறியவள். ஆண்டவரின் முடிவு. என்றாள்.

        மகள் பூப்பெய்த செய்தி கேட்டு மலர்ச்சியுற்றாள். நெடுங்காலத்திற்குப் பிறகு தன் கணவனின் பிறிவு நினைத்து வருந்தினாள். தன் மகள் குறித்து அவன் பேசிய கதைகளையெல்லாம் நினைத்து நினைத்து பைத்தியகாரிமாதிரி சிரிப்பாள். மகளோ “என்னம்மா வாயமூடறயா என்ன சொல்றே“ என்று வாயைப் பொத்துவாள். அவளுக்கு இப்போது புரிந்து கொண்ட வயசு. அப்பா பற்றிய உரையாடல்களைக் கேட்டுக் கொள்ளும் போது சுவராசியமான தகவல்களையே சொல்வாள் சிலவை புனைவாகவே இருக்கும்.

        பிற்பாடு கர்த்தர் நம்மை அழைத்துக் கொள்ளும் வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும் என்று தைரியம் சொல்லி கவனத்தை திசை திருப்புவாள். பிள்ளை ருதுவானதும் கணவனின் குடும்பத்தார் வந்து சீராட்ட ஆரம்பித்துவிட்டனர். இந்து மத வழக்கப்படியான சீர்கள் செய்ததை தடுக்க முடியவில்லை. மகளுக்கு ஏதோ புது சந்தோசம்.

அவளிடம் நிறைய மாற்றங்கள். ஸ்டெபிக்கு கொஞ்சம் உள்ளுர பயந்தாலும் எப்படி மகிழ்வு கொள்கிறாள். பார்க்கும் போது “இது போதும் ஆண்டவரே அவள் சந்தோசத்தை நான் கண் குளிரக் கண்டு விட்டேன். இனி நீவிர் எப்போது அழைத்தாலும் வருகிறேன்..“எனப் பிரார்த்திக்கிறாள்.

                 மகள்.மலர்கள் சூடி வந்தால் எடுத்து வெளியில் வீசப் பற்றும் போது உடல் கப் என்று பற்றி எரிவதை உணர ஆரம்பித்தாள். கணவன் உறவுக்காரர்கள் ஒட்டி உறவாட ஆரம்பித்த பிறகு ஒரு பக்கம் மகிழ்ச்சியும் அவர்களுடன் மகள் உறவாடத் துவங்கியது கண்டு தன்னிடமிருந்து முற்றாகப் பிரிந்து கொள்வாளோ என்ற பதற்றமும் அதிகரிக்கவே செய்தது.

      இலையுதிர்காலத்திற்குப் பிறகு பொழிந்த மழை உலகைக் குளிர்வித்து சோலைவனமாகிறது. மலர்களும் மலர்களுக்கான உலகத்தையும் உயிர்விக்கத் துவங்கிடுகிறது.. மகள் கல்லூரிப் படிப்பை முடித்தாள். ஏறக்குறைய அவள் அப்பாவின் உறவுக்காரர்களுடன் ஒருத்தியாகவே மாறியிருந்தார்.

ஜாதகம் பார்க்க ஆரம்பித்ததை அரசல் புரசலாகத் தகவல்களைப் பெற்றவளிடம் நேரடியாகவே வீடு வந்து பேசினார்கள்.

ஸ்டெபி மறுக்க முடியவில்லை. இவர்கள் யார் என் மகளுக்கு வரண் பார்க்க. தன்னந்தனியாக சிரமப்பட்ட போது யார் வந்து ஆதரித்தார்கள். தவிக்க விட்டவர்கள் தானே என்று சமயம் பார்த்து பேசத் தோன்றவில்லை.காரணம் மகளுக்கும் அவர்களுடனான பரிச்சயத்தை விரும்புகிறாள். முழுக்கவும் இந்துப் பெண்ணாகவே மாறிவிட்டிருந்தாள். நாம் ஏதாவது சொல்லப் போய் அவள் கோபித்துக் கொண்டால் என்ன செய்வது.

         “நல்ல வேலை நல்ல பையன் நல்ல குடும்பம் விடறதுக்கு மனசில்லையம்மா..நீ என்ன நினைக்கிறாய்.“

“நான் என்ன நினைப்பது பற்றி கவலையில்லை கர்த்தர் என்ன நினைத்திருக்கிறார். தெரிய வில்லை“என்று பேச நினைத்தவள் அமைதியாகி விட்டாள். மகளிடம் விவரத்தைக் கேட்ட போது வெட்கப்பட்டது ஸ்டெபிக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவளுடன் அதிகமான உரையாடல்கள் நின்று வி்ட்டது.

      கணவன் வீட்டாரை மோசம் சொல்ல முடியாது. ஸ்டெபி நினைத்திருந்தாலும் இத்தனை படோபடமாகத் திருமணத்தை நடத்தியிருக்க முடியாது. அவள் ஒரு பார்வையாளராக இருந்து பார்க்க முடியவில்லை.மகள் சங்கடப்படக் கூடாது என்பதற்காக எல்லா சடங்குகளிலும் பங்கு கொண்டாள். அவள் பாதபூசை செய்த போது அவளைக் குழந்தையாக இருந்து குளிப்பாட்டிய சிலிர்ப்பு இருந்தது. கர்த்தரே நீர் எம்மைக் கைவிட வே இல்லை. தாலி கட்டப்படும்போதும் கர்த்தரே நீவிர் என்னைக் கைவிடாதீர் என்று பிராத்தித்தாள்.

       மறு வீடு போகும் போது ஸ்டெபியை அணைத்துக் கொண்டாள். அவள் எல்லா இழப்பையும் மறைத்துக் கல் போன்று நின்று வழியனுப்பி வைத்தாள். ஒரு வாரம் புகுந்த வீடு பிறந்த வீடு என உறவுகளின் அலைக்கழிச்சல் நிகழந்து ஒரு நாள் மகள் அழைத்தாள்..அம்மா நீயும் என் கூட வந்திரும்மா..தனியா என்ன பண்ணப் போற..எனக் கேட்டபோதுதான் தனிமையை உணர்ந்தாள். புதுமணத்தம்பதிகள் நீடுடி வாழ்க..

   “என்னப் பத்திக் கவலைப்படாதே கர்த்தர் என்னைக் கைவிடமாட்டார்“

 

 

தேவன்-ஈசன்- தூதன்

 

என் தேவன் என்னை

புறாவாகப் படைத்திருக்கலாம்

கூட்டாகப் பறந்து

கூட்டமாக இறங்கி

தனித்தனித் தானியம் பொறுக்குவேன்

ஈசன் என்னை

சருகாக உதிர்த்திருக்கலாம்

வேம்பு,புங்கை,குல் மோஹர் எனும்

வேற்றுமையின்றி எரிந்திருப்பேன் கூளமாக

இறைத்தூதன் என்னை

எறும்பாக அனுப்பியிருக்கலாம்

நந்தியாவட்டைக் கிளை மீதும்

மரமல்லிப் பூ மீதும்

நகர்ந்திருப்பேன் அன்றன்றைய

வெயில் உறிஞ்சி

சாப்பாட்டு மேஜையில் பழக்கிண்ணங்கள்

கண்காணிப்புக் கண்களுடன் நெடுஞ்சுவர்கள்

கதவுத் தாழ்கள் நனையாத் தூரத்தில்

கடும் மழை

நெடுந்தொடர் பார்த்தபடி நான்-  பக் -42

 

        ரெஜினாவைத்  தவிர்க்க நினைத்து இரண்டொரு நாட்களாக அவளிடம் பேசுவதில்லை சண்முகம். திடீரென்று உறவைத்துண்டித்தால் சந்தேகம் வரும் என்பதால் கடந்த ஒரு மாதமாகக் கொஞ்சம் கொஞ்சமாக தகவல் தொடர்புகளை எல்லாம் தவிர்த்தான். அதற்குத் தகுந்தது போலவே அவளுடனான தொடர்பு அதிகமானதை அறிந்தான்.

ஒரு வேளை தாம் விலக நினைப்பதைக் கண்டு கொண்டு விட்டாளோ என்னவோ. ஏதாவது ஒரு காரணத்தை தயாராக வைத்து சமாளித்தான்.

        அன்று காலை அலுவலகத்திற்கே வந்து விட்டாள். ஏதுமறியாதவன் போன்று  அனுமதி பெற்று வெளியே வந்து “என்ன பேங்க் வந்தியா

இல்ல உன்னப் பார்க்கதான் வந்தேன்.

“என்ன விசயம்

நீ என்னக் கட் பண்ண நெனைக்கற இல்ல

என்ன பேசற..அப்படியெல்லாம் கிடையாது“

“ஷ்யுர்

ம்..ஷ்யுர்..

பொய்..பரவாயில்லை..பார்க்கலாம்னு சொல்லிட்டுப் போலம்னுதான் வந்தேன். பை..

    இது நடந்து ஒரு வாரம் சண்முகம் விடாமல் தொடர்பு கொண்டபோது அவள் சரியாக அனுசரிக்க வில்லை. நம்மால் ஒரு வாரமே தாங்க முடியவில்லயே ஒரு மாதமாக எப்படி சிரமப்பட்டிருப்பாள் என்பது உரைத்தது.

         மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த நட்பு மணம் வரைக்கும் இறுதியாக வந்து சேர்வது போலிருந்தது. ஒரு விபத்தில் தன் பெற்றோரை இழந்த சண்முகம் படித்து ஒரு கணணி பொறியாளனாக புகழ்பெற்ற மருத்துவமனையில் பணிக்காக வந்தபோதுதான் ரஜினாவைச் சந்தித்தான்.

ரஜினா அவனுடைய தனிமைப் பிரியத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் கிண்டல் செய்யத் துவங்கி பின்பு நேசமாக மலர்ந்தது.

        அவனுடைய ரஜினா நேசத்தை நண்பர்கள் எச்சரித்தார்கள். “பாத்து பழகுடா..மாட்னன்னு வை .முடிச்சிருவாங்க..அதுவும் இந்த விசயத்தில ரொம்ப ஜாக்கிரதை விட்ரு“ எச்சரித்ததின் விளைவாகவே அவளைத் தவிர்க்க நினைத்தது நடக்கவில்லை. அவள் பேச்சு வாக்கில் நான் உன்ன விட குண்டா இருக்கன்னு தானே என்னக் கழட்டிவிடபாக்கற என்ற போதுதான் அவள் மீது நேசம் அதிமானது.

       அவள் அறிவுறுத்திய படியே தைரியமாக அவள் சமயப் பெரியவர்களிடம் சந்தித்துப் பேசினான். அவர்களுடன் இருந்த இளைஞர்கள் திமிறிய போது பெரியவர்கள் சமாதானப் படுத்தினார்கள்.“உன்ன எப்படி நம்பறது என்றார்கள்.

“நீங்க கடவுள நம்பற அளவிற்கு என்ன நம்பலாம் என்றான். பிறகு புனித நூல் மீது ஆனையாக அவள் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தினான். அவர்கள் முன்பு மண்டியிட்டு வணங்கி வெளியே வந்தபோது ரஜினாவின் சந்தோசம் எல்லையில்லாமல் பீறிட்டதை உணர்ந்தான்.

          திருமண ஏற்பாடுகள் மிகவும் எளிமையாக நடந்தது. ரஜினாவின் பெற்றோர்கள் கடுமையாக நடந்து கொண்டாலும் அவளுக்காக விட்டுக்கொடுத்தார்கள்.

     ஒரு நாள் தன் அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த சண்முகம் தன் பெற்றோர்களின் திருமணப் பத்திரிக்கையைக் கண்டெடுத்தவன் ஆனந்தமும் அளப்பரியா மகிழ்வும் கொண்டான். நடந்தவைகள் திரும்பவும் கண் முன் வந்து போனது. தன் அப்பா வகை குடும்பத்து நண்பர்கள் ஆசையாக அப்பா அம்மா திருமணம் நடந்த அதே மலைக்கோயிலில் நீ உன் திருமணம் நடக்க வேண்டும் ஆசைப் படுகிறோம் என்றது நினைவுக்கு வந்து தொலைத்தது.

       ரெஜினா சமய வழக்கப்படி எளிமையாக திருமணம் நடந்தது. எளிய வரவேற்பு விருந்து நடைபெற்றது. அதிகமாக யாரும் அழைக்கப்பட வில்லை.

          சண்முகம் தன் ஆசையை ரெஜினாவிடம் தெரிவித்தான். முதன் முதலில் தம்பதி சமேதரமாக வெளியில் போகிறோம் அவளுக்கு மறுக்கப் பிரியமில்லை. அதிகாலையில் கார் மலைக் கோயிலை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. அவன் தன் அப்பா அம்மா கதைகளைப் பேசியபடியே வந்தான்.ரெஜினா தன் அப்பா அம்மா கதைகளைத் திரும்பச் சொல்லிக்கொண்டே வந்தாள்.

        மலைக் கோவில் வந்து சேர்ந்தது. அங்கு ஏற்கெனவே சில திருமண வைபவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. எங்கினும் கல்யாண மகிழ்ச்சி..குழந்தைகளின் புத்தாடைகளின் மணம். பட்டுப்புடவைகளின் சரசரப்பு..மங்கல இசை. பக்தி பாடல்கள்.. முகூர்த்த நேரங்களின் படி கோயில் பூசாரியால் ஒவ்வொரு மணமக்களாக அழைக்கப்பட்டு கெட்டி மேளம் முழங்க தாலிகட்டும் நிகழ்வுகள் நடந்தேறுகிறது.

         சண்முகம் ரெஜினா தம்பதிகள் அவர்களுடன் தாலி கட்டிக் கொள்ள கெட்டிமேளம் இசைத்தது.

 

 

முதல் பாகம் –முற்றும்- தொடரும்…